Monday, January 15, 2018

நடிகையின் அறச்சீற்றம் .

        எல்லா நடிகைகளும் இப்படி பொங்க மாட்டார்களா என்கிற ஆதங்கம்  வரவே செய்கிறது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் ஆண் ஆதிக்கம் என்பது உச்சத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.

      பாலியல் சீண்டல் பற்றி பகிரங்கமாக சொன்னவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.யாராக இருந்தாலும் கதாநாயக நடிகர்களை அனுசரித்தே செல்ல வேண்டியதிருக்கிறது.அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

    இத்தகைய சூழலில்தான் நடிகை சோனம் கபூரிடம் சில பத்திரிகையாளர்கள் கல்யாண சாப்பாடு எப்போது என்று கேட்க குமுறி இருக்கிறார்.

"முக்கியமான நடிகைகளிடம் மட்டுமே இப்படி கேட்கிறீர்களே ,போய் ரன்வீர் சிங்.ரந்தீர்  கபூர், ஆகியோரிடம் கேட்கவேண்டியதுதானே? என்னுடைய பெர்சனல் மேட்டர்சில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை"என்று விளாசிவிட்டார்.

தங்கர்பச்சானும் எச்.ராசாவும் என்ன சொல்கிறார்கள்?

எப்போதும் குறை சொல்பவர்களை ஆங்கிலத்தில் 'நாட்டரிங் நபாப்ஸ் ஆப் நெகட்டிவ்ஸ்ம்' என அழைப்பார்கள்.தமிழகத்தில் இத்தகையவர்களுக்கு பற்றாக்குறை என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை.

இங்கே அறிவுரை அல்லது ஆலோசனை சொல்வதாக நினைத்து  உளருகிறவனுக்கு 'அரசியல் வித்தகன்' என பெயர் சூட்டிவிடுகிற  ஊடகங்களுக்கும் பஞ்சம் இல்லை.  இத்தகைய பின்னணியில்தான் அரசியல் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

 திராவிடம் என்றால் என்ன என்பதற்கு இரு வரலாற்றாசிரியர்கள் குறு விளக்கம் தந்திருக்கிறார்கள்.ஒருவர் இயக்குநர் தங்கர் பச்சான். மெய்யாகவே இன மான உணர்வாளர். 'திராவிடம் என்பது ஒரு சொல்' என்பதாக சொல்லி இருக்கிறார். உண்மைதான் 'தமிழன் 'என்பதையும் அவர் ஒரு சொல்லாகவே  பார்த்து வருகிறார் என்பதை நமக்குப் புரிய வைத்திருக்கிறார்.

ஆனால் இன்னொருவரான எச்.ராசாவை அப்படி ஒதுக்கி வைத்து விட  இயலாது. இந்தியத் துணைக்கண்டத்தை தனது ஆளுகைக்குள் வைத்திருக்கிற பிஜேபியில் பொறுப்பில் இருக்கிற புண்ணியமூர்த்தி .இவர் சொல்கிறார்  'திராவிடம் என்பது ஒரு இடத்தைக் குறிக்கும்' .

முன்னவரை விட பின்னவர் எந்த அளவுக்கு அறிவாளி என்பதை நீங்களே  முடிவு செய்து கொள்ளுங்கள்.  வசவு மொழியும் இவரது வாய்க்கு அஞ்சும்.


"திராவிட மொழிக் குடும்பத்தைச்சேர்ந்த மொழியொன்றை தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும்"என்பதாக திராவிடத்துக்கு மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்  வல்லுநர்கள்.

திராவிடத்தின் இன்னொரு பெயர் தமிழ்.அதுஎப்படி உருப்பெற்றது என்பதற்கு நெடிய விளக்கம் தரவேண்டியதாக இருக்கும்.

ராசாவுக்கு மற்றொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்.

குஜராத் அகழாய்வில் காணப்பட்ட எழுத்துகள் பிராமி .அது திராவிட மொழிகளின் விரிவுதான் என்கிறது ஆராய்ச்சி.ஆக சிந்து சமவெளி நாகரீகம் கண்ட தமிழ் இனம் உலகின் மூத்த இனம்.ஆரியம் என்பது கணவாய் வழி வந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தெரியாத விஷயங்களில் தலையிட வேண்டாம் இருவரும். 


Sunday, January 14, 2018

கழுத்தளவு அசிங்கத்தில்.....

          இயக்குநர் கோபி நைனாரின் 'அறம்'படத்தை இன்று மறுமுறையும் பார்க்கும் வாய்ப்பு. அகன்ற திரையில் பார்க்கும் அனுபவம் வேறு.குறும் பெட்டியில் பார்த்த அனுபவம் வேறு.
         ஆனால் அதே உணர்வு.
        அச்சம்,அழுகை ,இரக்கம், ஆட்சியாளர் மீதான ஆத்திரம்  சற்றும் குறைய வில்லை.அரசியல்வாதிகளின் மீதான கோபம் புரட்சியாக மாறி விடுமோ,அது   தடை உடைக்கும் படையாகிவிடுமோ என்கிற எண்ணம் இரத்தமுடன் கலக்கிறது." ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் எப்படி சார்  சேவை செய்ய முடியும் ?" என்கிற கோபியின் எழுத்து  மனதை கீறுகிறது.
        எப்படிப்பட்ட அரசியல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது?
"வரும் காலத்தில் ஜனநாயகம் இருக்குமா?" என்கிற அச்சம் உச்ச நீதிமன்ற  நீதிபதிகளுக்கு வந்திருக்கிறது என்றால்.....?
       சர்வாதிகாரத்தின் நிழல் நம் மீது படிகிறது என்றுதானே அர்த்தம்.
       கருத்துச் சொல்ல முடியவில்லை.உண்மைகளைச் சொல்ல முடிய வில்லை.  சொன்னால் அச்சுறுத்தல். இதற்கு அதிகார வர்க்கமும் துணை .
        இதுதான் நவீன இந்தியாவா?
        கமல்ஹாசன் சொன்னதைப் போல "கழுத்தளவு அசிங்கம் சூழ்ந்து  இருக்கிறது"
         "கணுக்கால் கூட நனையக்கூடாது என்று நினைத்தவர்கள்தான் நாங்கள். எங்களை சமூக அவலங்கள் அரசியலுக்கு  கொண்டு வந்து விட்டது.அசிங்கங்களை  அகற்ற தமிழர்கள்  ஒன்று  சேர்ந்து செயல்பட வேண்டும்" என்று கமல் சொன்னதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை.


Saturday, January 13, 2018

அதிமுக அறக்கட்டளை சொத்து சசியின் கையில்!

          அன்பு நிறை வலைப்பூ சகோதர,சகோதரிகளுக்கு இந்த  எளியவனின்   இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு இணைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..
         இனி ,
        மூணு அங்குல உயர காதுக்கு நாலு முழப் பூவை சுற்றி இருக்கிறார்கள் என்கிற உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சக்களத்தி  சண்டை கூட தோற்றுப் போகும்,!அந்த அளவுக்கு ஓபிஎஸ்--இபிஎஸ் அணியினர் தினகரன் மீதும் சசிகலா மீதும் குற்றச்சாட்டுகளை வீசினார்கள். பதிலுக்கு தினகரனும் அள்ளி வீசினார். ஜெயலலிதாவின் சாவில்  மர்மம் இருப்பதாகச் சொல்லி  விசாரணைக் கமிஷன் கேட்டார்கள்.அதுவும் வந்தாச்சு.
        "மூன்றே மாதத்தில் எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவேன்" என வீர வசனம் பேசி தினகரனும் சட்டசபைக்குள் போய் விட்டார்.
          ஆனால் இரண்டு பேரும் பாஜகவை ஏமாற்றுவதற்காக போட்ட நாடகமாக இருக்குமோ என்கிற சந்தேகம் நமக்கு வந்திருக்கிறது. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக அறக்கட்டளை  தற்போது யாரிடம் இருக்கிறது?
          சசிகலா குடும்பத்தினர் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
          இது எப்படி நிகழ்ந்தது?
          நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த காலத்தில்  சசிகலா பரோலில் அவரை சந்திக்க வந்திருந்தார்.அந்த இடைப்பட்ட நாட்களில் மாற்றப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
       அமைச்சர்கள்,ஐஏஎஸ் அதிகாரிகள்,துணையின்றி இது நடந்திருக்க  வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
           இத்தகைய செய்தியை ஒரு தமிழ் இணையம் வெளியிட்டிருக்கிறது.
பகிரங்கமாக மோதிக் கொள்கிறவர்கள் அதிமுக அறக்கட்டளை மாற்றம் பற்றி  வாயைத் திறக்கவில்லையே ,ஏன்?
        "எடப்பாடியை  வீட்டுக்கு அனுப்புவேன்" என்று சொன்ன தினகரன் தற்போது அத்தகைய கேள்வியைக் கேட்டாலே கடந்து சென்று விடுகிறார்.ஏன்?
        ஏமாற்றுகிறார்கள் .ஏமாற்றுகிறார்கள்.!  

ஆறாயிரம் கோடி சசி பினாமிகள் சொத்து?

                   மேழம் முடிந்து சுறவம் பிறக்கும் முதல் நாளில்...! தமிழரின் புத்தாண்டு புன்னகையுடன் மலரும் நாளுக்காகக் காத்திருந்த  இனிமையான  நேரத்தில் ஓர் ஆங்கில இணையத்தில்படிக்கிறவாய்ப்பு.....!
                அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளும் வலிமையை தரும்படி  தமிழ் வேதத்தின்  ஆசான் திருவள்ளுவரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
              அப்படி என்ன அதிர்ச்சி...'அம்மா என அன்பொழுக அழைக்கப்பட்ட  ஜெயலலிதாவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டு சிறைப் பறவையாகி ' தண்டனை பெற்ற சம்பவத்தை விடவா அதிர்ச்சி ஏற்படப்போகிறது?அவ்வளவு நல்லவங்களையே யாரோ  போட்டுத் தள்ளி இருக்கிறார்கள் என்று சொந்த கட்சிக்காரர்களே குற்றம் சாட்டி குற்றவாளிகளை கமிஷன் வைத்து தேடி வருகிறார்களே அதை விட வேறு  அதிர்ச்சி என்ன இருக்க முடியும்?
                கடந்த மாதங்களில்  சசிகலா தொடர்பான  நிறுவனங்கள் என கருதப்பட்ட இடங்களில் வருமான வரித் துறை கை வைத்து நடத்திய சோதனைகளில் ஆறாயிரம் கோடிக்கு பினாமி சொத்துக்களை அடையாளம்  கண்டு இருக்கிறார்கள்.ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாங்கப்பட்ட சொத்துகளுக்கு டாக்குமென்ட்ஸ் இல்லையாம்.
             என்னடா கொடுமை ?
             எந்த பதவியிலும் இல்லை. உயிர்த் தோழி என்கிற ஒற்றை உறவு மட்டுமே முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன்.! இதை வைத்துக்கொண்டு  ஆயிரக்கணக்கில் கோடிகளை சுருட்டமுடிகிறது என்றால் ....
           பதவியில் இருந்தவர்கள் எவ்வளவு சுருட்டி இருப்பார்கள்?
          சந்தேகம் வருகிறதா இல்லையா?
          சட்ட மீறல்களையும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களையும்  கண்காணிக்கவேண்டிய அதிகாரம் வைத்திருக்கிற மத்திய அரசும், உளவுத்துறையும் செய்தது என்ன?
          கண்டுபிடித்து வைத்துக்கொண்டு கார்னர் செய்வதற்கு நேரத்தை எதிர்பார்க்கிறாங்களா ?
           எல்லாம் சரி கையில் இருக்கும் ஆதாரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?
            அதற்கு பேரம் நடக்குமோ என்னவோ? குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிக்கு  தனிச்சலுகைகள் திருட்டுத் தனமாக வழங்கப்படுவதற்கு பேரங்கள் தானே!

Friday, January 12, 2018

எச்.ராசாவுக்கு .....

சிலர் அறிவினால் பதவி பெறுவர். சிலர் பரிந்துரையால் பெறுவர். திறமை  இருப்பின் தேடி வருவதும் உண்டு. ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள பதவி  எதனால் வந்தது என்பது உங்களுக்குத்தான் தெரியும்.அதை நீங்கள் சொன்னால் மக்களுக்குப் புரியும்.
நிற்க,
ஒருவர் கருத்துச் சொல்கிற போது அடுத்தவர் இப்படி சொல்லி இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவது வழக்கம். அது பிழை எனக் கருதினால் அதை  சுட்டிக்காட்டுவது கண்ணியம்.அதை விடுத்து தரம் தாழ்ந்து விமர்சிப்பின்  சுட்டிக்காட்டுபவர்களே பிழையானவர்கள் என்றாகி விடும்.  குக்கலிடம் இருந்து குயிலின் குரலை எதிர்பார்க்க முடியாது என்று மக்கள் நினைத்து விடுவார்கள்.
உங்களுக்கு வரலாறு தெரியுமா?
"தெரியும்.சொல்லு?" என்பதாக சொன்னால், சற்றுப் பின்நோக்கிப் பாருங்கள்.
தேவதாசி , பரத்தையர் என்பது சுமேரியாவில் இருந்து இங்கு வந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.கி.மு.3500-க்கு முன்னர் சுமேரியர்களிடம் இந்த வழக்கம் இருந்ததாம்.ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருபெண்ணை கடவுளுக்கு அர்ப்பணிப்பார்களாம்.
இப்பெண்களுக்குத் தலைவி யார் தெரியுமா?
மன்னரின் மகளே! இவளை 'பதேசி' என அழைப்பார்கள்.
இப்பழக்கம் கி.மு.1900-ல் இந்திய வேதப் பண்பாட்டில் கலந்திருக்கவேண்டும்  என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
எகிப்திய நாகரீகத்திலும் பெண்கள் அர்ச்சனை செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்திய வேதப் பண்பாட்டின் கீழே பெண்களின் பங்கு கட்டுப்பட்டிருந்ததால் அவர்களால் அர்ச்சகர்கள் ஆக முடியவில்லை. சதுர்வர்ணம் என்கிற கொடுவாள்  அவர்களை தெய்வ சேவை செய்வதற்கு என ஒதுக்கிவிட்டது.
சதுர்வர்ணத்தின் மறுபெயரே  'இந்துத்வா '.
அதன் பெயரால்தான் கவிப்பேரரசு வைரமுத்துவை இழித்துப் பேச உம்மால் முடிந்திருக்கிறது.
 இது தமிழ்நாடு.கண்ணியமாக நடப்பவர்களை மதிக்கும்,மறுப்பவர்களை உமிழும்.மீறுபவர்களை மிதிக்கும்.

Thursday, January 11, 2018

தமிழுக்கு இந்து மதம் என்ன கொடுத்தது?

           மிருகங்களுக்கு மதம் பிடிக்கும்.ஆனால் எந்த சமயமும் சார்ந்து  இருப்பதில்லை. அவைகளுக்கு ஐந்தறிவுதான் என்கிறார்கள்.ஆனால்  ஆறறிவு  இருப்பதாக சொல்லப்படும் மனிதர்களுக்கு மதம் பிடிக்கும். 'மதமும்' பிடிக்கும்.
         சங்க காலத்தில் சைவமும் சமணமும் மோதின.சமணர்கள்  மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள்.சில நேரங்களில் மன்னர்களும் சமணம் சார்ந்தும் சைவம் சார்ந்தும் செயல்பட்டார்கள். சமயம் சார்ந்துதான் வாதப் பிரதிவாதம்   நிகழ்ந்தன.
       'நான் இந்து," என எவரும் வாதிட்டதில்லை.
      மோதல்கள் நிகழ்ந்தாலும் தமிழ் மொழிக்கு சிறப்பும் பெருமையும்தான்  சேர்ந்தன. ஐம்பெரும் காப்பியங்களை  சமணமும் புத்தமும்தான் தமிழுக்குத் தந்தன.
        சமயம் என்பதை இந்து என்கிற மதம் ஆட்கொண்டபின்னர் தமிழுக்கு  இலக்கியம் என்பது அன்னியமாகி வருகிறது.
       இந்து என்கிற மதம் இருந்ததா?
      "இந்து என்கிற சொல் சிந்து என்கிற சம்ஸ்கிருத சொல்லிலிருந்து  பாரசீக மொழி  வழியாக உருவான சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன் முதலாக  பாரசீகத்தினரால் ஒரு புவி இயல் சொல்லாக, சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிக்கும் அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன் படுத்தப் பட்டது.ஒரு மதத்தைக் குறிக்காமல் ஓர் இடத்தைக் குறிப்பதாகவே  இருந்தது.
      இதற்கு இன்றைய இந்து தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
      சங்கராச்சாரியார்கள் ,சாயிபாபாக்கள்,ஜக்கி போன்ற புதிய கடவுள்களும் சாமியார்களும் வந்த பிறகு தமிழுக்கு கிடைத்த இலக்கியப் பெருமைகள் என்னென்ன?
    பிஜேபியின் நாவுக்கரசர் எச்.ராஜாவின் பேச்சு,ஏச்சுகளை இலக்கியம் என சொல்ல முடியுமா? தமிழிசை என பெயர் வைக்கப்பட்டதைத் தவிர  அந்த அம்மையார் தனது சொத்துகளை விரிவாக்கிய அளவுக்கு பெயருக்குப் பெருமை சேர்க்கும்வகையில் தமிழுக்குஎன்ன தந்திருக்கிறார்?
   சிந்திக்க,

நடிகையின் அறச்சீற்றம் .

        எல்லா நடிகைகளும் இப்படி பொங்க மாட்டார்களா என்கிற ஆதங்கம்  வரவே செய்கிறது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் ஆண் ஆதிக்கம் என்பது உச்சத்த...