Thursday, December 29, 2011

இவர்கள் அசல் அல்லர்...!


திடீர் பிள்ளையார்கள் மாதிரி திடீர் மகாத்மாகள் !
 இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் இவர்கள் தான் என்பதைப் போல்வந்து நிற்கிறார்கள்.
காந்தி குல்லாய் போட்டவர்கள் எல்லோரும் காந்தி ஆகிவிட முடியாது.
அன்னா ஹசாரே யார் ? இந்தியர்களின் பிரதிநிதியா? இவரை முன் நிறுத்துவது எந்த சக்தி?
 ஆர்.எஸ்.எஸ். என்ற மதம் சார்ந்த அமைப்பு இவரை முன் நிறுத்துகிறது.
லோக்பால் குழுவில் பின் தங்கியவர்க்கு இடமில்லை என அன்னா குழு  சொல்வதின் அர்த்தம் என்ன?சிந்திக்கவேண்டாமா?
 ஊழலை  ஒழிப்போம் என சொல்லி பாராளுமன்ற சனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்ற பார்க்கிறார்கள்.
 இங்கே ஊழலுக்கு ஒத்து ஊதுகிறவர்களாக மக்கள் இல்லை.ஊழல் என்பது வேரும்,வேரடி மண்ணுமாக  அழிக்கப் படவேண்டும் என்பது தான் மக்களின் தாகம்.ஆனால் அன்னாவுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் ஊழல்,கருப்புப்பணம் என வாழ்ந்து வருகிறவர்கள்.இப்படிப்பட்டவர்களுடன்  ஊழலை ஒழிப்பேன் என அன்னா  சொல்லி வருவது நாடகமே!
 உண்ணாவிரதம் என்பதை இவர் கேலிக்கூத்தாக்கிவிட்டார்
உடல் நலமில்லை என டாக்டர்கள் எச்சரித்ததால் அவரது உண்ணா நோன்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு என பெயரிடக்கோரிஅமரர் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு இருந்தபோது எவரது எச்சரிக்கையையும் கேளாது நோன்பிருந்து உயிர் நீத்தார்.
 பொட்டி ஸ்ரீராமுலுவின்  உண்ணாநோன்பின் ஜனனம்தான் ஆந்திரம்.
 காந்தியடிகளின் வழியில் போராடிய உத்தமர்கள் இவர்கள்.
ஆனால் அன்னா?
 பஜகோவிந்தம் என்பது சங்கரர் இயற்றியது.அதில் '' ஜடாமுடியுடன் வருகிற  சன்யாசிகளிலும்,மொட்டை அடித்து காவி கட்டி வருகிறவர்களிலும் மூடர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வாயிற்று பசிக்காக வேடம் போடுகிறவர்கள்''என சொல்லப் பட்டிருக்கிறது.'' மரத்தடியில் கோவிலில் வாழ்ந்து,மண் தரையில்  தூங்கி சொத்து பற்றி நினைக்காமல்,காமுணர்வு,இச்சை துறந்து வாழ வேண்டும் என்பதும் பஜகோவிந்தம் தான்.ஆனால் யாராவது அப்படி வாழ்கிறார்களா?இல்லை.
 தமிழர்களின் உயிர் பிரச்னைக்காக வாய் திறக்காத ரஜினி ஊழலை ஒழிப்பேன் என்கிற அன்னாவுக்காக இலவசமாக இடம் கொடுத்தது எதனால்? பஜகோவிந்தம் சொன்னது இவர்களைப் போன்றவர்களுக்காகதானா ?

Wednesday, December 28, 2011

கருப்பு பணத்தில் ரஜினியின் மண்டபம்?

''கருப்பு பணத்தில் கட்டப் பட்ட மண்டபத்தில் தான் அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதம் இருக்கிறார்கள்'' என்பதாக  காங்.கட்சி தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் சொல்லி இருக்கிறார். இவர் மத்திய அரசில் மந்திரியாகவும் இருந்தவர்.தந்தை பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர்.
சென்னையில் ஹசாரேயின் ஆதரவாளர்கள் உண்ணா விரதம் இருப்பதற்கு   தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ரஜினி இலவசமாக கொடுத்திருந்தார். இதைப் பற்றி இளங்கோவனிடம் பத்திரிகையாளர்கள்  கேட்டதற்கு சொன்ன பதில்தான் தொடக்கத்தில் இருப்பது.
 ரஜினி எப்படிபட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவசரப்பட்டு, அல்லது  தூண்டப்பட்டு எதையாவது  சொல்லி மாட்டிக் கொண்டு விடுவார்.பின்னர் மன்னிப்பு கேட்பார்.ஓஹேநக்கல் பிரச்னையில் வீரமாக பேசி விட்டு அதே வேகத்தில் மன்னிப்பு கேட்டவர்தான் ரஜினி.அவரது ரசிகர்களின் பெரும் பலம்தான் அவரை கவனிக்க வைக்கிறது.
இவரை காங்.கட்சி தனது பக்கம் இழுக்க முயன்ற போது அவர்எப்படிப்பட்டவர் என்பது தெரியாது போய்விட்டதா,இளங்கோவனுக்கு?
 இப்போது குற்றம் சாட்டுகிற இளங்கோவன்கருப்பு பணத்தில் கட்டப்பட்டதாக் சொல்லப் படுகிற மண்டபம் பற்றி  மந்திரியாக இருந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்?
இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
 உண்மையான இந்தியர்கள் என்கிற முறையில் ரஜினியும்,இளங்கோவனும்  மக்களுக்கு விளக்கம் தர கடமைப் பட்டு  இருக்கிறார்கள்.

Tuesday, December 27, 2011

தமிழின் சிறப்புகள்..

பொதுவாக் தமிழ் மொழியைப் பற்றிய பதிவுகளுக்கு அவ்வளவாக வரவேற்பு இருக்கவில்லை.நடிகையர்,பெண்கள் பற்றிஎழுதினால் அதற்கு பரிவட்டம் கட்டி  வரவேற்கிறார்கள்.நான் எழுதிய பதிவுக்கு குறளை சொல்லி விளக்கி இருந்தார் ஒருபெருந்தகையாளர்.பெருமையாக இருந்தது. குற்றம் காண்பதாக இருந்தாலும்,பாராட்டுவதாக இருந்தாலும் அவர் பெரும் பாலும் குறளைப் பயன்
படுத்துகிறார்.என்னுடைய பதிவுகளுக்கு லைக்,கமெண்ட்ஸ் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு தெரிந்தவைகளை பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான்.
 தமிழின் பெருமையை  மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் சொன்னதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
 செம்மொழியாம் தமிழுக்கு 16 சிறப்புகள் உள்ளன.

 தொன்மை.{பழமை சிறப்பு  }
முன்மை.{முன் தோன்றிய சிறப்பு}
எண்மை {எளிமை சிறப்பு}
ஒண்மை {ஒளியார்ந்த சிறப்பு }
இளமை {மூவா சிறப்பு}
வளமை{ சொல் வளசிறப்பு}
தாய்மை{சில மொழிகளை ஈன்ற சிறப்பு}
தூய்மை {கலப்புறா சிறப்பு}
செம்மை{செழுமை சிறப்பு}
மும்மை {முப்பிரிவாம் சிறப்பு}
இனிமை {இனிய சொற்களின் சிறப்பு}
 தனிமை {தனித்தியங்கும் சிறப்பு}
பெருமை{பெருமித சிறப்பு}
திருமை{செழிப்பார்ந்த  சிறப்பு}
இயன்மை{இயற்கை சிறப்பு}
வியன்மை{வியப்பு சிறப்பு}
இத்தனை சிறப்புகளும் கொண்ட தமிழ் மொழிக்கு உயிர் கொடுத்தவர்கள் நாம் அல்லர்.நமது சகோதரர்களான தமிழீழ ஈழத்தவர்தான் என்கிற போது பெருமையாக இருக்கிறது.
 நாம் வெறும் தமிழர்தான்!வெட்க கேடு.டாடி மம்மி என்பதில் கர்வம் கொள்கிறோம்  நமக்கு நாணமும் இல்லை.சொரணையும் இல்லை.          

எட்டுமனைவிகள் என்ன கொடுமை இது ?

ருக்மிணி,இலக்குமனை,பாமா ,சாம்பவி ,நீளா தேவி காளிந்தி,மித்திரவிந்தை,பத்திரை. என கண்ணனுக்கு எட்டுமனைவிகளாமே?புராணங்கள் இப்படி நமக்கு வழிகாட்டிகளாக இருக்கும்போது நாம் ஏன் ஒருத்தி மட்டும் என்று வாழ வேண்டும்?
 நண்பர் ஒருவர் கேட்டார்.
 ''அவர் அவதாரம்.எட்டு மனைவிகள் ஏன் என்பதற்கு காரணங்கள் இருக்கும். அவதாரங்களைப் பற்றி நாம் ஆராயக் கூடாது ''என்று பதில் சொன்னேன்.
 '' அரசியல்வாதிகள் மாவட்டத்துக்கு ஒருத்தி என வைத்திருக்கிறார்களே ,அது
 மட்டும் ஏன்?''என்றார் நண்பர்.
 ''ஏன் நீயும் வேணும் என்றால் வைத்துக் கொள் !உன்னால் கட்டி தீனி போடமுடியும் என்றால் தாராளமாக வைத்துக் கொள்!''
 ''சட்டம் இடம் கொடுக்குமா?''
 ''இடம் கொடுக்காது.ஆனால் நீ ஏமாற்றி வாழமுடியும் .ஒருவனை அடித்து ,உதைத்து ,மிரட்டி சொத்துகளை  எழுதி வாங்கினால் அது சட்டப்படி செல்லும் , விற்றவன் கோர்ட்டுக்கு போகாதவரை!ஆனால் நீயே அடியாட்களை வைத்து புறம்போக்கு நிலங்களை வளைத்து வேலி போட்டுக் கொண்டால் அரசு ஆதரவாளனாக நீ இருக்கும் வரை அந்த சொத்து உன்னுடையது தான்.இப்படி சொத்துக்களை வளைக்கும்போது பெண்களை மட்டும் வளைக்க முடியாதா என்ன?மனைவி என்கிற அந்தஸ்து ஒருத்திக்கு மட்டும்தான் கொடுக்க முடியும் .ஆனால் சின்னவீடு என்கிற அந்தஸ்து உனது ,பணவசதி யை வைத்து பரவலாக்க முடியும்.''என்றேன்.
 ''பிரமனுக்கு நான்கு முகம் ஏன்?''
 ''அவசியமான கேள்வி!திலோத்தமையின் அழகில் மயங்கிய பிரமன் அவளை நான்கு திசைகளிலும் முகம் கொண்டு பார்த்தானாம்.அதனால் நான்கு முகம்'' என்றேன்.
 ''பிரமனை விட நமது அரசியல் வாதிகள் ஒரே முகத்தைவைத்துக் கொண்டு திரும்பும் திசை எல்லாம் திலோத்தமைகளை பிடித்து இருக்கிறார்கள்.பிரமனை விட நாம் பெரியவர்கள்''என்றார் நண்பர்.
 ''

ஊழலும் அன்னா ஹசாரேயும்..!

லஞ்ச ஊழலில் இந்தியா 95 -வது இடத்தில் இருக்கிறது என்கிறார்கள்.அது எந்த  இடத்தில் இருந்தால் என்ன லஞ்ச ஊழல் என்பது பாவம் என இந்தியாவில் உள்ள அற நூல்கள் கூறுகின்றன. ஆத்திகம் நிறைவாக இருப்பது இந்தியாவில் தான். தர்ம வழிப்படி நடப்பதாக சொல்லிக் கொள்கிறவர்கள்நிறைந்த நாடு! திருப்பதி  வெங்கடாசலபதி உண்டியலில் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது நம்ம நாட்டு தர்மவான்கள்தான்.அங்கு கொட்டப் படும் பணம் எந்த வழியில் வந்தது என்பது அந்த கடவுளுக்கும் தெரியாது.உண்டியலில் போடுபவர்கள் அந்த பணம் எந்த வழியில் வந்தது என்பதை சொல்வதில்லை !ஆனால் அது நியாயமான வழியில்  வந்த பணம் அல்ல,ஊழலில் கிடைத்த பணம் !.பாவப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை ஆண்டவனுக்கு கொடுத்துவிட்டால் தனக்கு தண்டனை கிடையாது  என நம்பி உண்டியலில் போடுகிறார்கள்.இத்தகைய பக்திமான்களைப் பற்றி அன்னா ஹசாரே கவலைப் பட்டதில்லை.கோடிக் கணக்கில் பணம் சேர்க்கும்  கோவில்களைப் பற்றியும் அவர் கவலைப் பட்டதில்லை.
 அவரின் இலக்கு அரசியல்வாதிகள் மட்டுமே!
கருப்பு பணம் வாங்கும் நடிகர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
வருமானவரி ஏய்ப்பு செய்கிறவர்கள் அவருக்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.
உண்மை பேசாதவர்கள் ஆதரவு  தருகிறார்கள்
நாளைய அரசியலில் ஆதாயம் பெறுவதற்காக இன்று அஸ்திவாரம் போடும் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள்..
எல்லாமே பதவி பெறுகிற நோக்கில்தான்!
 இவர்களுக்கு அன்னா ஒரு கருவி! அவரும் தன்னை இரண்டாவது மகாத்மாவாக நினைத்துக் கொண்டு களம் இறங்கி இருக்கிறார்.
 அரசியல் கட்சிகளுக்கு அவற்றின்எம்.பி.களின் எண்ணிக்கையை வைத்து மலிவு விலையில் மனை ஒதுக்கும் திட்டத்தின்படி 60 கோடி மதிப்புள்ள மனை  வெறும் 60 லட்சத்துக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.இதை பற்றி எந்த தலைவராவது  வாய் திறந்திருக்கிறார்களா?அவர்கள் அன்னாவை ஆதரிக்கிறார்கள்.இதனால் தான் அன்னா மீது ,அதாவது அவரது உண்ணா  நோன்பின் மீது நம்பிக்கை வரவில்லை.

Friday, December 23, 2011

இசைஞானியும் மெட்டும் ராகமும்.....

இரவில் தூக்கம் வரவில்லையா?
 சற்று நேரம் இளையராஜாவின் மெல்லிசைப் பாடல்களை உங்களுக்கு மட்டுமே கேட்கிற அளவுக்குஒலிஅளவு வைத்து கேளுங்கள்.மயக்கம் வந்துவிடும்.அந்த அளவுக்கு மந்திர சக்தி ஞானியின் பாடல்களுக்கு மட்டுமே உண்டு.
 ஜெயா டி.வி. அந்த இசை சக்கரவர்த்தியின் இசை நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்த இருக்கிறது.
 ''எந்தவித இடையூறும் இல்லாமல்,இடையில் புகுந்து எவரும் பேசாமல் இருந்தால் கச்சேரி அருமையாக அமையும்'' என்கிற முன்னுரையுடன் செய்தியாளர்களிடம் பேசினார் ராஜா.
 ஆளும் கட்சி சார்பான தொலைக் காட்சி என்கிற பயம் இல்லாமல் பேசினார்.இந்த தில் அவரிடம் மட்டுமே உண்டு.
 ''நமக்கு தொழில் பாட்டு'' என்றவர் அடுத்த நொடியே ''தொழில் இல்லை,பாட்டு இல்லேன்னா இளையராஜா இல்ல.பாட்டு வேறு நான் வேறு அல்ல ''என்றார்.
 ''ஒரு பாட்டின் வெற்றிக்கு மெட்டு முக்கியமா,ராகம் முக்கியமா ?''என்று ஒருவர் கேட்டார்.
 அவரை அருகில் அழைத்த ராஜா ''மெட்டுக்கும் ,ராகத்துக்கும் என்ன சம்பந்தம்?'' என்று கேட்டார்.
 ''எனக்கு இசையை பற்றி தெரியாது ,அதனால் கேட்டேன் ''என்றார் அந்த செய்தியாளர்.
 ''எனக்கும் தெரியாது''என்ற ராஜா''  சுதி தவறாமல் தாளம் தப்பாமல் ''சுருதி''போடாமல் ( குடிப்பது போன்று ஜாடை) நிகழ்ச்சி நடக்கும் ''என்ற போது சிரிப்பலை மோதியது அந்த நட்சத்திர ஹோட்டலில்!
 மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஒரு நிகழ்வையும் இங்கு நினைவு கூர்ந்தார்.
 ''நான் கோவிலுக்கு சென்றால் மக்களோடு மக்களாக சேர்ந்து வணங்குவதுதான்  வழக்கம்.அன்று ஒருவர் என்னை தனியாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார். அம்மனை வணங்கி விட்டு திரும்புகையில்  வரிசையில் நின்றிருந்த ஒருவர்' உங்களுக்கு இது நியாயமா ? நான் ஐந்து மணி நேரமா வரிசையில் காத்திட்டு இருக்கிறேன். நீங்க இப்படி செய்யலாமா?''என வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டார்.அதற்கு '' நான் எத்தனை காலம் காத்திருந்தேன் என்பது உங்களுக்கு தெரியுமா ''என்று கேட்டேன்.ஆகவே நிகழ்ச்சிக்கு  வருகிறவர்கள் நேரத்துடன் வந்து விடுங்கள்''
 என்றார்.
 கோவிலில் நிகழ்ந்ததை ராஜா நியாயப் படுத்தியது எனக்கு உடன்பாடு இல்லை!ஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமமே என்பதை மறுப்பது சரியானதாக தெரியவில்லை.அரசியல் தலைவர்கள்,ஆட்சியாளர்கள் செய்துவருகிற தவறினால் அவர்களுக்கென தனி வழி,சலுகை என்பது வழக்கமாகி விட்டது.மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்களின் மனம் நோகும்படி சலுகை பெற்று தரிசனம் செய்வது கடவுளை ஏமாற்றுவதாகும்.
 இதற்காக வெட்கப் படவேண்டும்.

Wednesday, December 21, 2011

மனைவியின் கையை கணவன் உடைத்தது சரியா?

கணவன்-மனைவிக்குள் ஆயிரம் இருக்கும் யா!!பகலில் அடித்துக்கொள்வார்கள்.  இரவில் கூடிக்கொள்வார்கள் .அவர்களின் சண்டையை பெருசா எடுத்துக்காதீங்கய்யா என பொதுவாக சொல்வது உண்டு. அது உண்மையும் கூட!  அதுமாதிரியானசண்டைகளைஊடலஎன்பதாகவும்வைத்துக்கொள்ளலாம். சண்டை போட்டுவிட்டு காலையில் கிளம்புகிறவன் மாலையில் வீடு திரும்பும் போது மறக்காமல் பூவும் இனிப்புமாக வந்து சேருவான்.
 அவளும் வாங்கி தலையில் அவனையே சூட சொல்வாள்.இதெல்லாம் ஒரு பிள்ளை பெறும் வரைதான்.
''உங்களுக்கு பிடிக்குமேன்னு செஞ்சு வச்சேன்''என்று வத்தல் குழம்பு ஊற்றினாலும் அவனுக்கு தேவாம்ருதம் தான்.
 ''உன் கை பக்குவம் என் அம்மாவுக்குக் கூட இல்லை''என்று அந்த இடத்தில்  பெற்றவளையும் மட்டம் தட்ட தயங்குவதில்லை.
 எல்லாம் அந்த இரவு நேர மயக்கம்..
 அவனுக்கு இடையூறு இல்லாமல் சுகம் கிடைக்கவேண்டும்.
 உண்மையை சொல்கிறேன் கால் பிடித்துவிடும் கனவான்களும் உண்டு. தப்பு இல்லை.மனைவி செய்யும்போது கணவன் செய்தால் குற்றமாஎன்ன?
 இங்கு நான் சொல்ல வந்தது என்னவெனில்ஒரு கணவன் அவனது மனைவியை அடித்து கையை உடைத்து விட்டதாக ஒரு வழக்கு உயர்நீதி மன்றம் வந்திருக்கிறது.
 அது எந்த ஆண்டு என்பது நினைவில்லை போலும்.துணுக்கு எழுதியவர் குறிப்பிடவில்லை. ஆனால் நீதிபதியின் பெயர் மட்டும் எழுதி இருக்கிறார்.
 வழக்கை விசாரித்த நீதிபதி முத்துசாமி '' மனு தர்மப் படி மனைவியை அடிப்பது குற்றமில்லை '' என்பதாக தீர்ப்பு சொன்னாராம்.
 இந்த வழக்கு முடிவு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 மனு தர்மத்தில் அப்படி சொல்லப் பட்டிருக்கிறதா?
 தெரிந்தவர்கள் சொல்லலாமே?

''எனக்கு ப்ளு பிலிம் பிடிக்கும்''

ப்ளு பிலிம் என்பது சாபக்கேடா?
அதை பார்க்கக்கூடாது என்பது நியாயம் இல்லை.வயது வரம்பு வைத்து திரை இடலாம் என்பது அடியேனுடைய கருத்து.ப்ளு பிலிம் பார்ப்பதால் கலாச்சார சீர்கேடு,பண்பாடு கெடும் என்பதெல்லாம் சொத்தை வாதம்.
இப்போது கலாசாரமும் ,பண்பாடும் எந்த அளவுக்கு இருக்கிறது?அதன் அளவீடு எது?
அடுத்தவன் மனைவியுடன் சினிமாவுக்கு போகவில்லையா?காதலித்து மணந்தவளே மணவாளன் சரி இல்லை என்று மற்றவனுடன் வாழ்வதில்லையா?
வள்ளுவனின் அறவுரைப்படி வாழ்க்கை நடத்துகிறவர்கள் எத்தனை பேர்?சொல்லுங்கள் பார்ப்போம்.எந்த அளவுக்கு மனித சமுதாயம் கெட்டு,சீரழிந்து போய்க் கிடைக்கறது என்பதை அன்றாடம் நாளேடுகளில் படிக்கிறோம்.நாம் மட்டும் இல்லாமல் நமது பிள்ளைகளு ம் படிப்பதற்கு அனுமதிக்கிறோம். ஏன்?
பொதுஅறிவு வளரும் என்கிறோம்.நாட்டில் நிகழும் அத்தனை வன்முறையும்  வீட்டு முற்றத்துக்கு வந்துவிடுகிறது டி.வி.வழியாக! ரிமோட் அத்தனை அசிங்க அந்தரங்களை காட்டுகிறது.கள்ள உறவுகளை காட்டாத சீரியல்கள் உண்டா?
குடும்பத்துடன் அமர்ந்து அதைப் பார்த்து கும்மி அடிக்கவில்லையா?
 உடலுறவு நிலைகளை கோவில் சிலைகள் காட்டவில்லையா?தேர்களில் இல்லாத காமரசமா ப்ளு பிலிமில் இருக்கப் போகிறது?
குஞ்சு குளுவான்கள் பார்க்கிற வகையில் இவைகள் இருக்கிறபோது வயது வரம்பு வைத்து நீலப படங்களை பார்க்க அனுமதித்தால் என்ன?
தனக்கு ப்ளு பிலிம் தான் பிடிக்கும் என்கிறார்,பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா..அழகான பெண்களைப் பார்ப்பதால் ஆயுள் கூடும் என்பது இவரது கருத்து.
அவரது கருத்தைப் படித்தபின்னர்தான் எனக்குள் உறங்கிக் கிடந்த மிருகம் விழித்துக் கொண்டு அரிய,பெரிய ,உயரிய கருத்துகளை பதிவு செய்ய வைத்திருக்கிறது.யாராவது ஆத்திரப்பட்டால் முதலில் ராம் கோபால் வர்மாவிடம் சென்று விட்டு அதன் பிறகு எனக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

Tuesday, December 20, 2011

ஜனநாயகம் ..எங்கே தொலைந்தது?

ஜனநாயகம் என்பது நம்மைப் பொருத்தவரை தேர்தல் அன்று வோட்டு போடுவதுதான்.நம்மை எவன் ஆண்டாலும் கவலைப் படுவதில்லை.கவலைப்  படும் பொறுப்பும் அரசியல் கட்சிகளுடையது என ஒதுங்கி நின்று விடுவோம்.
 நமது வயிறு வலிக்கும்போது,அல்லது நம் மீது அடி விழும்போது சற்று சொரணை வரும்.அதுவும் சொரிந்து விட்டால் சுகம் என மறந்துபோகும்.
 நம்மால் தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் எப்படி குபேரன்கள் ஆனார்கள் என்பது எதிராளி சொல்லித்தான் தெரிய வரும்.அந்த அளவுக்கு நாம் ஜனநாயகத்தை  தெரிந்து வைத்திருக்கிறோம்.நமக்கு இருக்கிற உரிமைகள் பற்றி நமக்கு தெரியாது.இன்றளவும் நாம்ஏமாளிகள்தான்.
 ராமநாதபுரம் மன்னரின் சொத்து கச்சத்தீவு.இந்த தீவின் பதிவேட்டு எண்1250.
மீனவர்கள்  தங்களின் வலைகளை காயப்போடுவதற்கும் ,பிடித்த மீன்களை  வகை பிரிப்பதற்கும் ,ஓய்வு எடுப்பதற்கும் இந்த தீவை பயன்படுத்திக் கொண்டார்கள்.இலங்கை மீனவர்களும் தீவுக்கு வருவார்கள்.அதை மன்னரும் அனுமதித்தார்.விடுதலை பெற்ற பின்னர் மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்கும்  அரசுகளும் அனுமதித்தன.
 இன்று அந்த தீவுக்கு தமிழக மீனவர்கள் செல்ல முடியுமா?
 முடியாது!
 நாம் தாரை வார்த்துவிட்டோம் சிங்கள அரசுக்கு!
 பொதுவாக இருந்த நமது சொத்து இன்று இன்னொருவனுக்கு சொந்தம்.
 ஜனநாயகம் என்கிற பெயரில் இந்திய அரசும்,மாநில அரசும் இணைந்து நடத்தியநாடகத்தில் நமது உரிமை பறி போனது.
அதைப்போல முல்லைப் பெரியாறு விஷயத்திலும் நாம் இழந்து விடக் கூடாது, ஏமாந்து விடக் கூடாது .உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத கேரள அரசு,இந்திய  ஜனநாயகம் என்பது எடுப்பார் கைப் பிள்ளை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது .அந்த மாநிலத்தின் நலம் விரும்பிகள் மத்திய அரசிலும்,ஆட்சியிலும் இருக்கிறார்கள்.
 இந்திய ஜன நாயகம் பற்றி கவியரசு கண்ணதாசன் சொன்னதை நினைவு படுத்துகிறேன்
 ''இந்திய ஜனநாயகத்தைப் பற்றி எவ்வளவோ பேர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.நானோ அதைப் பார்த்து ஆச்சரியப் படுகிறேன்.அடடா ,ஒரு சடலம் எவ்வளவு நாளாக அழுகாமல் இருக்கிறது''
 கண்ணதாசன் தீர்க்கதரிசி!

தமிழ்நாட்டுக்கு பிள்ளையார் வந்தது எப்போது?

பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் நல்ல காரியங்கள் எதுவானாலும் தொடங்குகிற பழக்கம்  நம்மிடம் இருக்கிறது.சிலர் எழுதும் போதுகூட 'உ' என எழுதிய பின்னரே மற்றவைகளை எழுதுவார்கள். மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவிட்டு பூஜைகள் செய்கிற பழக்கமும் உண்டு.இந்த  பிள்ளையாரைப் பற்றி பல கதைகள் உண்டு.
அதைப் பற்றி இங்கு அலசப் போவதில்லை.
அண்மையில் மாத இதழான 'தமிழ் இலெமுரியா 'வை வாசிக்க நேர்ந்தது.பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன.அதில் இருந்த ஒரு குறுந்தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
புராண,இதிகாசம் காலம் தொட்டு பிள்ளையார் சிலை  தமிழ்நாட்டில் இருந்து வருகிறது  என்கிற நம்பிக்கை  சரியானதுதானா என்கிற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது.ஆன்மீக வாதிகள் என்ன 
 சொல்வார்களோ நமக்கு தெரியாது.
ஆனால் நான் இங்கு வைக்கிற தகவல் தவறானது என்பார்களேயானால் அதற்கான ஆதாரங்களை 
அவர்கள் சொல்ல வேண்டும்.
அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
''பல்லவ மன்னன் நரசிம்மன் காலத்தில் தளபதி பரஞ்சோதிதான்  தமிழ்நாட்டுக்கு  முதன் முதலாக பிள்ளையார் சிலையை கொண்டுவந்தான்.சாளுக்கிய மன்னன் புலிகேசியை போரில் வென்று அரண்மனையில் இருந்து எடுத்து வரப்பட்ட பொருள்களை ஒன்றுதான் விநாயகர் சிலை.''
மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.தமிழ்நாட்டுக்கு எப்போது விநாயகர் சிலை வந்தது என்பதைப் பற்றிதான் கேட்கிறேன்.விநாயகர் மீதான நம்பிக்கையை பற்றி அல்ல!

Monday, December 19, 2011

இப்படியும் அரசியல் நடந்தது...!

''அரசன் பகலில் தூங்குவது இல்லை !காரணம் உயிர் பயம்''என்று குப்தர் கால அரசியல் நிலவரம் சொல்கிறான் மெகஸ்தனிஸ் .
இவன் கிரேக்கர் செலுகஸ் நிகேடரால் அனுப்பி வைக்கப் பட்ட தூதன்.
இவனது இந்திய பயணம் பற்றிய குறிப்புகளை படிக்கும் போது அந்த காலத்திலும் துரோக அரசியல்  பற்றிய பயம் மன்னர்களுக்கு இருந்தது பற்றி அறிய முடிகிறது.
அவன்  எழுதுகிறான்;
''அரசனுடைய மெய்க்காப்பு மீது தனிக் கவனம் செலுத்தப் பட்டது.ஏனெனில் அரண்மனையில் அடிக்கடி சதிகளும்,சூழ்ச்சிகளும் நடந்தன.அரசன் பகலில் தூங்குவதில்லை.உயிர்ப்பயம் இருந்தது. இரவிலும் மஞ்சத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டான்.
அரசன் வேட்டைக்கு செல்லும்போது அவனை சுற்றி பெண்கள் செல்கிறார்கள்.பெண்களின் வட்டத்துக்கு வெளியில் ஈட்டிகள் ஏந்திய காவலர்கள் செல்கிறார்கள்'' என அவனது குறிப்பு சொல்கிறது.இப்படி வேட்டை ஆடுவது  மன்னனுக்கு இழுக்கில்லையா என நமக்கு தோணலாம்..ஆனால் அவனது நிலையில் இருந்து பார்த்தால் அவனது உயிர் பயம் மேலோங்கி  இருப்பது தெரிய வரும்.இப்படியாவது அவனால் ஊர் சுற்ற முடிந்திருக்கிறதே !
இன்னும் சொல்கிறான் ;
''சாலைகளின் இரு மருங்கும் கயிறுகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.கயிற்று தடுப்பை கடந்து பெண்கள் பக்கம் செல்பவன் கொல்லப்படுவான்.''என்கிறான்.
 அர்த்த சாஸ்திரம் என்கிற நூலிலும் சில தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
அரச புரோகிதனுக்கு மவுரிய அரசாங்கத்தில் முக்கியஇடம் இருந்திருக்கிறது.அரசனின்  நம்பகமானதுணைவர்களை இந்த புரோகிதன் தான் தேர்வு செய்திருக்கிறான். இது வேடிக்கையாக  இல்லையா? ஆனால் அந்த துணைவர்களை மன்னன் மறைமுகமாக கண்காணித்தி ருக்கிறான் .தனது பரிவாரத்தினருக்கு தனிப்பட்ட சோதனைகளும் வைத்திருக்கிறான்.நேர்மை அற்றவர்களை பாதாள சிறையில் தள்ளி இருக்கிறான்.இப்படி எல்லாம் இருந்தும் புரோகிதனுக்குதான் முக்கியத்துவம்.என்ன கொடுமை இது!
தனது  மகன்களை நம்பாமல் கண்காணித்த அரசனுக்கு  புரோகிதனிடம்  பயம் இருந்திருக்கிறது.''பிள்ளைகள் நண்டுகளைப் போல தங்கள் தகப்பனைக் கொன்று விடுவார்கள் ''என்கிறது அர்த்த சாஸ்திரம்.
அந்தக்  கால அரசியலை விட இந்த காலத்து அரசியல் பெட்டர் என்றே தோன்றுகிறது.

சசிகலா வை நீக்க முடியுமா?

டிசம்பர் முடியும் நேரத்தில் இப்படி ஒரு பரபரப்பு செய்தி! அதிமுகவின் அடிப்படை  உறுப்பினர் பதவியில் இருந்து உடன்பிறவா சகோதரி சசிகலா,அவரின் கணவர் எம்.நடராசன் உள்பட பனிரெண்டு பேர் நீக்கம் செய்யப் பட்டிருப்பதாக.!இந்த பரபரப்பு செய்தியை வைத்து பத்திரிகைகள் பலவிதமாக எழுதலாம்.சோ .ராமசாமியில் இருந்து சோத்துப்பாக்கம் சொக்கன் வரை அலசி ஆராயலாம்.கட்சியில் சிலருக்கு அடிவயிறு கலங்கும்.சிலருக்கு மகிழ்ச்சி பெருகும்.ஆனால்  இந்த நீக்கல் நிரந்தரம் அல்ல என்பதே எனது கருத்து.
 நடராசனை நீக்குவது இது எத்தனாவது தடவை?
 இவருடன் யாரும் தொடர்பு வைக்கக் கூடாது என பலமுறை ஜெயலலிதா அறிவித்திருந்தும் அவரின் ஆதரவாளர்கள் பலர் எம்.எல்.ஏ., எம்.பி.,மாவட்ட செயலாளர்கள் என பல பதவிகளில் இருந்ததை முன்னரே பார்த்திருக்கிறோம்.இது எப்படி நிகழ்ந்தது?
செல்வியாருடன் கட்சிக்காரர்கள் எவரும் தொடர்பு கொள்ளக் கூடாது என அமரர் எம்.ஜி.ஆர்.எச்சரித்து அறிக்கை விட்ட காலமும் இருந்தது அல்லவா?
 சசிகலா கோபித்துக் கொண்டு செல்வியாரை விட்டு விலகி நின்ற வாரங்களும் உண்டு.
ஆனால் அவர்களின் கோபம,பிரிவு எல்லாமே பனிக்கட்டி போன்றதுதான்.
 உருகி விடும்.
இப்போதைய  நீக்கல் சிலரை எச்சரிப்பதற்காகஇருக்கலாம்.பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்காக இருக்கலாம்.தனக்கு வேண்டாதவர்களின் நட்பினை சசிகலா வளர்த்துக் கொண்டதற்கான தண்டனையாக இருக்கலாம்.
அவர்கள் பிரிவு என்பது அவர்களுக்கே நல்லது இல்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
 அதிகாரிகள் மாற்றல் ,அதில் தோழியின் தலையீடு என்பதெல்லாம் புதியவை இல்லை. அவை எல்லாம் வழக்கமான ,பழகிப் போன நடைமுறைதான்.நேற்றைக்கு அமைச்சராக கவர்னர் முன் பிரமாணம்  எடுப்பவர் மறுநாள் பதவி இழப்பது ஜெயலலிதாவின் அரசியலில் அதிசயம் அல்ல! 
இருந்தாலும் இப்போதைய நீக்கல் நாடகம் ''நீதி மன்ற தீர்ப்பு ''வரும்வரை நீடிக்கலாம் என சிலர் நம்புகிறார்கள்.கடந்த பத்து நாட்களாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த சசிகலாவை மீண்டும் நட்பு எல்லைக்குள் கொண்டு வருகிற வேலையை சிலர் செய்யாமல் விடுவார்களா?

Saturday, December 17, 2011

வக்கிரப் பார்வை..!

நானும் ,எனது பெண் சிநேகிதியும் மனம் விட்டுப் பேசுவது உண்டு.இது அவளது கணவருக்கும் தெரியும்.எங்களின் வாக்கு வாதத்தில் அவரும் சில நாட்கள் இடை சொருகிவிடுவார்.அவித்த வேர்க்கடலையுடன் அன்று எங்களின் பட்டிமன்றம் ஆரம்பமாகியது.
 எடுத்ததுமே ''ஒருபொண்ணுடன் ஒரு ஆண் பேசுற போது  அவளின் முகம் பார்த்து பேசுறது அவ்வளவு கஷ்டமா?''என்று கேட்டாள்.
 எனக்கு ஒருமாதிரியாகி விட்டது.''என்ன இப்படி கேட்கிறே?அது கஷ்டம்தான். புருசன் பேசும்போது கூட பொண்டாட்டியின் முகத்தை மட்டுமே பார்த்து பேசுறது கஷ்டம்தான்''என்று ''முகத்தை ''என்பதை  மட்டும் அழுத்தம் கொடுத்து சொன்னேன்.
''அப்படினா மனசுல சுத்தம் இல்லேன்னுதானே அர்த்தம்''என்றாள்.
 ''ஏன் அப்படி சொல்லணும்?ரசனைன்னு சொல்லலாமே?''என்றேன்.
 ''அது எப்படி ரசனை ஆகும்? அநாகரீகம்னு சொல்வேன் !'' .
 ''அழகை ரசிப்பது எப்படி அநாகரீகம் ஆகும்?ஆண்களின் உடம்பை பெண்கள்  ரசிப்பது இல்லையா?எப்படி எல்லாம் கமெண்ட் அடிக்கிறார்கள்?'இவனை கட்டிக்கப் போறவ ரொம்பவும் கொடுத்து வச்சவளா இருப்பா !உடம்ப எப்படி வச்சிருக்கான் பாரு'என்று சொல்றதில்லையா?உடம்பே சதை தான் என்றாலும்  சில இடங்களை தொட்டால் தானே உணர்வு சூடாகுது.''என்றேன்.
 ''அது இயற்கை.உடல் தேடல் என்பது வாலிபத்தின் அவசியம்.இப்ப நம்ம 'டாபிக்' வேற பக்கம் போகுது.ஒரு பொண்ணை கழுத்துக்கு கீழே அவளுக்கு தெரியாம பார்க்கிறது வக்கிரம் னு தான் சொல்லனும்!உடல் தேடல் பற்றி நாம்ப பேசல!பார்வை பற்றிதான் பேசுறோம்''என்று கடைசி வரிகளை அழுத்தி சொன்னாள்.
''இல்ல.பெண்களுக்கு அழகு முகத்தில் மட்டும் இல்ல.'அது'வும் தான்.அதை ஆண் கண்டும் காணாமல் ரசிப்பதுதான் ரசனை!அதுபெண்களுக்கும் பெருமை . ..கண்கொத்தியாக 'அதை'மட்டுமே பார்த்தால்தான் வக்கிரம்.''என்றேன்.
''நீங்க வக்கிரத்தை நியாயப் படுத்தப் பார்க்கிறீங்க. அது சரி!உங்க பார்வையில் வக்கிரம் இல்லையே?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
 ''கடுகு அளவு கூட இல்லை.ஆனால் ரசனை இல்லாதவன் அல்ல''என்று நானும் சிரித்தபடியே சொன்னேன்.''இப்படி எல்லாம் பேசிக் கொள்கிறோமே,என்றாவது எல்லை மீறல் உண்டா நம் பேச்சில்!அதுதான் கண்ணியம் ,நல்ல நட்பு'' என்று எழுந்தேன்.
நண்பர்களே  !கருத்துகள் இருப்பின் பதிவு செய்யுங்கள்.


Friday, December 16, 2011

ரஜினியும் ,பொய்யும்.......!

எந்த படப்பிடிப்பு என்பது நினைவில்லை.இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் ரஜினிகாந்த்,நிழல்கள் ரவி மற்றும் பலர் கலந்து கொண்ட படப் பிடிப்பு அது!
 அவ்வப்போது கிடைத்த இடைவேளையில் கல கல வென ரஜினியும்,ரவியும்  பேசிக்கொண்டிருந்தனர்.இடையில் நானும்.
 திடீரென ரஜினி''ரவி,கொடி பறக்குது பார்த்தீங்களா?''என்று கேட்டார்.
 இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த படம்தான் கொடி பறக்குது .
 உற்சாகத்துக்கு மாறிவிட்டார் ரவி.
 ''சூப்பரு. சூ...ப் ...ப் ..பரூ!தியேட்டரில் கிளாப்ஸ் தூக்குது.வெரி நைஸ் பிக்ஸர் சார்'' என்றார்.
 ''கிரவுட் எப்படி?''என்று  அடுத்து கேட்டார் ரஜினி !
 ''செம கிரவுட் சார்.கொடி  பறக்குது ரொம்ப உயரத்தில் பறக்குது''என்று ரவி சொன்னதும் ,மறு நொடியே '' கிழிஞ் சிது''என்று சற்று சத்தமாகவே ரஜினி கமெண்ட் அடிக்க ,உதவி இயக்குநர் வந்து நின்றார்,''சார் ஷாட் ரெடி!''
 ''வந்திறேன் ''என்று சொல்லி விட்டு ஷாட்டுக்கு போனார் ரஜினி.
 ரவியோ இனியும் அந்த இடத்தில் உட்கார்வது சரிப படாது என்று நினைத்தாரோ  என்னவோ வேறு இடம் தேடி போய்விட்டார்.
 ஷாட் முடிந்ததும் வந்த ரஜினி அவரை அழைத்து வர சொல்லி அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
 ''ரவி!ஒரு நாளைக்கு எத்தனை பொய் சொல்வே?''என்று கேட்டதும் ஆடிப் போய் விட்டார் .
 ''சார் உங்க முன்னாடி எப்படி சார் சொல்றது.நான் நிஜமாவே அந்த படத்தை இன்னும் பார்க்கல''என்று வழிய ,ரஜினி அவருக்கே உரிய சிரிப்புடன் ''பொய்  மட்டும் சொல்லவே கூடாது ரவி,ஓகே?''என்றதும் மறுமுறையும் வழிந்தார் நிழல்கள் ரவி.
 அரசியலுக்கு வந்தால் அரை நொடிக்கு ஐம்பது பொய் சொல்லவேண்டியது வரும் என்பதால்தான் அவர் அரசியலுக்கு வரவில்லை போலும்!

Wednesday, December 14, 2011

சென்னை திரைப்படவிழாவில் குமுறல்!

சென்னையில் ஒரு வாரம் நடக்கவிருக்கிற இண்டர்நேஷனல் திரைப்பட விழா முக்கிய நட்சத்திரங்கள் இல்லாமல் தொடங்கியது.நடிகர் சங்கத தலைவர் சரத்குமார் ,பார்த்திபன் இவர்களை தவிர வேறு நடிகர்களை காண முடியவில்லை.நடிகையரில் கார்த்திகா ,தன்ஷிகா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற வந்திருந்தனர்.
 சினிமா அரசியல் புகுந்துவிட்டது,பாரதிராஜா ,அமீர் போன்றவர்களின் பெயர்களை  விழா நடத்துகிறவர்கள் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள் ,மேலும் இந்தியன்பனோரமாவுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள 'செங்கடல்'படத்தையும்,மத்திய அரசின் மூன்று விருதுகளை பெற்றுள்ள 'தென் மேற்கு பருவக்காற்று'படத்தையும் திரையிட தேர்வு செய்யவில்லை ,இதனால் இயக்குனர்கள் சங்கம் இந்த  விழாவை புறக்கணிப்பதாக அமீர் அறிவித்துவிட்டார்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடிதம் எழுதிவிட்டார்.
 அதிமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முதலாக  ஒரு அமைச்சர்கலந்துகொண்ட விழா இதுதான்.செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர  பிரசாத் கலந்து கொண்டு ''அம்மாவை நம்புங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் படும்  ,சினிமாவுக்குஅம்மா ஏழு லட்சம் மானியமாக கொடுக்கிறார்''என்று சிறப்புரை ஆற்றி விட்டார்.
 ஆனால் செங்கடல் படம் புறக்கணிக்கப் பட்டதை கண்டித்து இயக்குனர்கள் லெனின் ,அருண்மொழி ,அம்ஷன்குமார்,மாமல்லன் கார்த்திக் ,லீனா மணிமேகலை ,வெளி ரங்கராஜன் மற்றும் முப்பது இணை இயக்குனர்கள், ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.வட இந்திய இயக்குனர் சேகர் கபூர்சிறப்புரை நிகழ்த்த  எழுந்தபோது இவர்கள் பதாகைகளை பிடித்துக்கொண்டு கண்டனக்குரல் எழுப்பினார்கள்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள்  கொல்லப் படுவது பற்றியும்,தமிழ்நாட்டில் வாழ்கிற ஈழ அகதிகள் பற்றியும்  பேசுகிற படத்தை விழாவில் திரையிட மறுப்பது நியாயமா எனக் கேட்டனர்.
 ''அரசோ,அல்லது வேறு நிறுவனங்களோ மாற்று சினிமாக்களையும்,அரசியல் சினிமாக்களையும் விலக்கியே வைத்திருக்கிறார்கள்,முடக்கியே வைத்திருக்கிறார்கள் ''என்பது இவர்களது குற்றச்சாட்டு .சரத் குமார் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து  அனுப்பி வைத்தார்.விழாவில் இரண்டு படங்களும் இடம் பெறாமல் செய்ததில்  சுகாசினி மணிரத்தினத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் நினைக்கிறார்கள்.

Tuesday, December 13, 2011

அம்மாவா அவள் ?

அவன் அழகன்.பேரழகன் .
 வீரன்.மாவீரன்
 அகன்ற மார்பு.ஆண்மையின் கம்பீரம் .
 முறுக்கிய மீசை.மறிக்கையனின்  மாண்பு.
 நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
 பெருமூச்சு விட்டாள் பாண்டிய நாட்டின் பொன்மகள் ஒருத்தி.
  தோழியை அழைத்தாள், துயர்களை சொன்னாள்.தனது அன்னையைப் பற்றிய  ஆற்றாமை.
 ''என்னடி தோழி! என் அன்னை இப்படி இருக்கிறாள்? வேல் மாறன் பாண்டியனைப் பார்க்காதே என்கிறாள். அவன் வாளெடுத்து வீசினால் வானத்தில் இடியும்,மின்னலும் தோன்றும்.  ஆணழகன் அவனைப் பார்க்காதே என்று எனைத் தடுப்பதற்கு இவளுக்கு எப்படிமனம் வந்தது? காதலுக்கு தடை சொல்கிறாளே?
 இவளும் என்னைப் போல் இளமையாய் இருந்துதானே இப்போது முதுமை அடைந்திருக்கிறாள்?இவளுக்கு இளமையின் துடிப்பு தெரியாதா?காதலில் விழுந்திருக்க மாட்டாளா?ஒரு வேளை,இளமை இல்லாமல்ஒரே பாய்ச்சலில் முதுமை அடைந்துவிட்டாளோ?முதியவளாக வாழ்க்கையை தொடங்கியதால் அவளுக்கு காதல் இன்பம் தெரியவில்லை ''என்று தனது வேதனையை சொன்னாள் என்கிறது முத்தொள்ளாயிரம் .
 ''வளைய வாய் நீண்ட தோள்
 வாட்கணாய் அன்னை
 இளையளாய் மூத்திளல்
கொல்லோ  -தளைய வீழ் தார்
 மண் கொண்ட தானை
 மறங் கனல் வேல் மாறனைக்
 கண் கொண்டு நோக்க லென்பாள்''
 அழகான பாடல்.

முல்லைப் பெரியாறும் ரஜினியும்!,

ஒட்டு மொத்த தமிழ்நாடும் கடுமையான கொந்தளிப்பில் இருக்கிறது.
 எல்லைப் பகுதியில் போலீஸ் தடியடி.
 தேனீ,கம்பம் ,போடி,உசிலம்பட்டி என நகரங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் கூடி இருக்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்ட பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை.மாற்று வழியில் போன பக்தர்களையும் கேரளத்தினர் அடித்து ,புரட்டி அனுப்பி இருக்கிறார்கள்.எதிர்வினை உண்டு என்பதைப் போல தமிழ் நாட்டில் இருக்கிற கேரளத்தவரின் கடைகளை அடித்து நொறுக்கி எங்களாலும் முடியும் என்கிறார்கள் தமிழர்கள்.
 ''ஓகோ ,அப்படியா நாங்களும் பண்ணிக் காட்டுவோம்ல''என்கிற ரீதியில் எல்லைப் பகுதியில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு வருகிற பெண்களை பாலியல் வன்முறை செய்து அனுப்புகிறார்கள் கேரளத்தவர்.
 இப்படி அணைக்கட்டு பிரச்னையில் தமிழர்-மலையாளி என்கிற இன மோதல்  வலுப் பெற்று நல்லுறவு நாசமாகி விடலாம் என்கிற அச்சம் நாடெல்லாம் பரவிக் கிடக்கிற நேரத்தில்.......
 சூப்பர் ஸ்டார் ரஜினியின்  62 -வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தப்பே இல்லை.மொட்டை அடித்து,அலகு குத்தி,தங்க, வெள்ளி தேர் இழுத்தார்கள்.கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்.திமுக தலைவர் கருணாநிதி,காங்கிரஸ் மந்திரி வாசன் இன்னும் பலர் வாழ்த்து செய்திகள் வாசித்தார்கள்.தப்பே இல்லை.அவர்கள் ரசிகர்கள்.
 ரஜினிக்கு எல்லா உயரங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.ரசிகர்களுக்கு  பிடித்தமானவர்களை கொண்டாட ,கோவில் கட்ட அவர்களுக்கு உரிமை உண்டு.
 ஆனால் அவர்களுக்கும் வாழ்வு கொடுப்பது முல்லைப் பெரியாறுதான் .
 தமிழகம் பாலையாகிப் போனால் நடிகர்களும் நட்டப் படுவார்கள். வாழ்வாதாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு நடிகனை முன்னிறுத்தி செயல்படுவது யாருக்கும் நல்லதில்லை.
 முல்லைப் பெரியாறு பற்றி ரசிகர்களே கவலைப் படுங்கள்.ரஜினியும் கவலைப் படவேண்டும்.இரண்டு மாநில மக்களும் மோதல் மனப் பான்மை விட்டொழித்து வாழ்வதற்கு வழி காண வேண்டும்.
 வீடு பற்றி எரிகிற போது விழாக்கள் தேவைதானா?

Sunday, December 11, 2011

மன்னர்களின் காதல்?

எனக்குள்ளே இருக்கிற ''ஆண் ''என்கிற உணர்வு' நானே சர்வமும்' என திமிர் கொள்கிற போது எனக்கு எனது மனைவி அடிமை !
அவள் எனது ஆளுமைக்குள் அடங்கி கிடக்க வேண்டும்.
நான் தவறே செய்தாலும் அதை அவள் சுட்டிக் காட்டுவது பிழை என்றே சொல்வேன்.
எல்லாவற்றுக்கும் என்னை எதிர்பார்க்கிற ஒரு பிறவிக்கு சுட்டிக் காட்டுகிற உரிமை இல்லை என நினைப்பேன்.அவள் ஒரு பெண்தான்.சமைப்பது ,பணிவிடை செய்வது,படுப்பது இவை மட்டுமே ஒரு மனைவியின் கடமை.
இப்படியாக நான் நினைப்பேனாகில் நான் உண்மையான ''ஆண்'' அல்ல! எனக்குள் எதோ ஒருவித பலவீனம் படுத்திருக்கிறது.அது தட்டப் படும் போதெல்லாம் எனது திமிர் தலை தூக்கி பார்க்கிறது.அதனால் நான் செய்வதுதான் சரி என்கிற மன நிலைக்கு வந்துவிடுகிறேன்.சாதாரண மனிதனே இத்தகைய திமிர் கொள்கிறபோது நாடாள்பவர்களின் திமிர் எந்த அளவுக்கு இருக்கும்?
பெண்கள் விசயத்தில் அவர்கள் படு மோசமானவர்களாக இருப்பதற்கு ''திமிரும்''ஓர் காரணமாக இருக்கலாம்?
அதனால்தான் அவர்களுக்கு அந்தப்புரத்தில் அத்தனை பெண்கள் தேவைப் படுகிறார்கள்?
செல்லும் இடமெல்லாம் படுக்கைக்கு ஓர் பெண் தேவை.
விரும்பிய பெண்ணை கொண்டு வந்துவிடுகிறார்கள்.அதிகாரம் இருப்பதால்!
அவுரங்கசீப் புர்கான்பூர் செல்லும்போதெல்லாம்  பெண்ணை வரவழைத்து ஆட சொல்லி  பார்த்து படுத்து மகிழ்வாராம்.  
அந்த பெண் அவரது மதம் சார்ந்தவள் அல்ல.அவளது பெயர் ஹீராபாய். நடனம் ஆடுவது தொழில். 
புர்கானில் அமைந்துள்ள மாபெரும் மாளிகையின் தோட்டத்தில் மாலை நேரங்களில்  அவளின் கை பற்றி சுற்றிவருவார்.
இச்சையை தனித்துக் கொள்வதற்கான பெண்களில் அவளும் ஒருவள் .
இவளுக்கும் மனைவி என்கிற பெயரைக் கொடுத்தால் என்ன?
உடனே பெயரை மாற்றி மதம் மாற்றப் பட்டாள் .கைனா பேகம் என அழைக்கப்  பட்டாள்.
ஆனால் அவளது அதிர்ஷ்டம் இளம் வயதிலேயே மாண்டு விட்டாள்
இதனால் பட்டமஹிஷி என்கிற அந்தஸ்து இல்லாமல் போனது.
பெரும்பாலான அரசர்கள் பல மனைவிகளுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் எத்தனை பெண்களுடன் வாழ்கிறார்கள் .அவர்களுக்கு பெண்களும் ஓர் பொழுது போக்குதான்.
நாம் போற்றி புகழ்கிற மாமன்னன் அசோகனுக்கும் பல மனைவிகள்.நான்காவது மனைவி தேவி 'இவளுக்கு இரட்டை குழந்தைகள்.
இத்தகைய உதாரணங்களை சொல்வதால் ஆண்களின் திமிரை நான் நியாயப் படுத்துவதாக நினைக்க வேண்டாம். 
காலம் காலமாக பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமமாக நினைப்பதில்லை. சமமாக நினைப்பவர்களும் ஆண்களைப் போலவே பல துணைகளை தேடிக் கொள்கிறார்கள்.இதற்கு இரு பாலரும் சொல்வது ''காதல்'' என்பதுதான்!
ஒ ..காதலுக்கு கற்பு தேவை இல்லை! 

பாரதியார் மன்னிப்பாரா?

''செந்தமிழ் நாடெனும் போதினிலே -இன்பத்
 தேன் வந்து பாயுது காதினிலே-'' எனப் பாடி மகிழ்ந்த பாரதிக்கு பிறந்த நாள்.சிலைகளுக்கு  மாலை ,மரியாதை,பள்ளிக் குழந்தைகளை வைத்து நிகழ்வுகள்,பரிசு வழங்கல் என கொண்டாடி  பத்திரிகைகளுக்கும் செய்திகள் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றால்,உண்மையாகவே தேன்  பாய்கிறது செவிகளில்!
''கொல வெறி  டி ''பாடலை சத்தமாக ஒலிக்க செய்து ''நாளைய மன்னர்கள்''ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
''என்ன கொடுமைடா இது..ஒரு எழவும் புரியல ..நாளைக்கு 'எக்ஸாம்  '. இப்படி  கூத்தடிச்சா வெளங்குமா?'' இது அப்பனின் கோபம.
''போங்க டாட் ,எக்ஸாம்ல என்ன கேப்பாங்க ,எப்படி எழுதனும்கிறது எங்களுக்கு தெரியும்.என்ஜாய்  பண்ண விடுங்க ...எவண்டி உன்னைப் பெத்தான்கிற பாட்டை விட இதான் சூப்பர் பாட்டு ''இது மகனின் பதில்.
அறையிலிருந்து அம்மா வருகிறாள்,சற்றே கோபமுடன்!  '' பசங்கள இப்படி கண்டிச்சா அவனுங்க  டிஸ்கரேஸ் ஆயிடமாட்டானுகளா ,வந்ததும் வராதுமா ஏன் இப்படி கத்துறீங்க?எவ்வளவு நல்லா பாடுறானுங்க!என்கறேஸ் பண்ணலேன்னாலும் பரவாயில்ல .நீங்க இப்படி பிகேவ் பண்ணாதிங்க'' என்கிறாள்.
''ஓ..நீ என்னை கிரிட்டிசைஸ் பண்றியா?மூதேவி.உன்னாலதாண்டி பசங்க கெட்ட பாட்ட போட்டு இப்படி கன்னா,பின்னான்னு குதிக்கிறானுங்க.இவனுங்க எங்க பாஸ் பண்ணப் போறானுங்க .வேஸ்ட்!''என்கிறார் பாரதி விழாவில் ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்  இனிதாவ  தெங்கும் காணோம்'' என்று பாடி விட்டு வந்த அப்பன்காரன்!
இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் உண்மையான நிலை!

Saturday, December 10, 2011

மூட நம்பிக்கையா?

சந்திர கிரகணம்!
அந்த  நேரத்தில் சாப்பிடக் கூடாது என்கிறார்கள் வீட்டுப் பெரியவர்கள்.
கிரகணம்  முடிந்த பின்னர்  குளித்து விட்டுதான் உண்ண வேண்டும் .
புதிதாக  கல்யாணம் பண்ணியவர்கள் கிரகண காலத்தில் உறவு கொள்ளக் கூடாது என அவர்களையும் பிரித்து வைத்து விடுவார்கள்.இந்த கால கட்டத்தில் கூடினால் நல்ல பிள்ளைகள்  பிறக்க மாட்டார்களாம்.இதே போல் கிரகண காலத்தில் சாப்பிடுகிறவர்களுக்கு பேதி ஆகுமாம் .
இவைகள்  எல்லாம் மனிதர்களுக்கு!
நம்மை  காக்கும் கடமை உள்ள தெய்வங்களையும் கோவிலுக்குள்ளேயே வைத்து சிறை வைத்து விடுகிறார்கள். சந்திர கிரகணத்தின் போது திருப்பதி வேங்கடாசலபதியும் தலை காட்டமாட்டார். 
கோடீஸ்வர சாமிக்கே அந்த கதி என்றால் மற்ற சாமிகளின் கதி என்னவாகும்?அவர்களும் பூட்டப் பட்ட கோவில் சிறையில்!
கிரகணத்தை  எதிர் கொள்ள முடியாத சக்தி இல்லாதவர்களா நமது கடவுள்கள்?
இதுமூட நம்பிக்கையா,அல்லவா?
இதே போல இன்னும் பலவிதமான மூட நம்பிக்கைகளை வளர்த்து பெண்களை இழிவு படுத்திக்  கொண்டிருக்கிறார்கள்.
விடியும் போது பெண் ருதுவானால் அவள் மாங்கல்ய பாக்கியம் பெற்றவளாம்.பிற்பகலில் சடங்கானால் அவள் சோரம் போகக் கூடியவளாம்.மாலை நேரத்தில் ருது ஆகிறவள் புத்திர விருத்தி உள்ளவளாம்.சூரியன் மறையும் நேரத்தில் சடங்கு நிகழ்ந்தால் அவள் வேசி என்கிறது ருது கால பலன்.  இப்படி காலம் காலமாக மூட நம்பிக்கைகளை வளர்த்து வருகிறவர்களிடம் இருந்து மனிதன் எப்போது மீள்வான்?

Thursday, December 8, 2011

மறக்க முடியவில்லை.....

இது எனது சொந்தக் கதை. இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை.உறவுகள் என்னை,மன்னிக்க எங்களை காயப் படுத்திய காலம்.எனது தந்தை நிலப் பிரபு அல்ல.ஆனால் அவரது தாய்வழி அம்மான் ஒரு லட்சாதிபதி.அரிசி மில் ,வசதியான வீடுகள் என நூற்றுக் கணக்கான ஏக்கருக்கு சொந்தம் .எனது தந்தை சின்ன அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடை வைத்திருந்தார்.குடும்ப விருந்து நிகழ்வுகளுக்கு அழைப்பார்கள்.நாங்களும் போவோம். ஆனால் எங்களை மட்டும் வேறுமாதிரியாக நடத்துவார்கள்.வசதி படைத்தவர்களுக்கு பந்தியில் பலத்த உபசாரம் நடக்கும்.வடை அப்பளம் பாயாசம் என கேட்டுக்கேட்டு கொடுப்பார்கள்.நானும் என் வயது பையன்களும் அருகருகே அமர்ந்திருந்தும் எனக்கு மட்டும் கரண்டியை காட்டிவிட்டுப் போவார்கள்.அப்போது எனக்கு பனிரெண்டு வயசு இருக்கும்.என் அம்மாவிடமும் அய்யாவிடமும் அழுதபடியே சொல்வேன்.அவர்கள் என்னைத்தான் கண்டிப்பார்கள்.பந்தியில் அப்படியும் இப்படியும்தான் இருக்கும் ,தப்பா நினைக்கக் கூடாது என்பார்கள். எங்கள் குடும்பம் இப்படி ஒதுக்கபடுவது பற்றி அம்மானுக்கு தெரியாது.யாரும் சொல்வதில்லை .அந்த காலத்தில் லாம்பறேட்ட ஸ்கூட்டர் வாங்கி எல்லோரும் பழகிக் கொள்ளுங்கள் என அம்மான் வீட்டில் சொன்ன போது என்னை மட்டும் ஒதுக்கி விட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் கற்று கொடுத்தனர் சக சொந்தங்கள். அவர்கள் எனது பங்காளி உறவு என்பது தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ''நீ என்ன கவர்மெண்டு ஆபிசரா போகப் போறியா,உனக்கெதுக்கு ஸ்கூட்டர் ஆசை?'' என்று அன்று கேட்ட கேள்வியை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் அரிசி ஆலை சிக்கலில் மாட்டிய போது அவர்களுக்கு உதவி செய்தவன் நான்தான்.பத்திரிகையாளன் என்கிற முறையில் மதுரையின் முதல் மேயர் முத்துவிடம் சொல்லி சிக்கலை தீர்த்து ஆலையை மீட்டுக் கொடுத்தேன். ஆனால் அந்த நன்றி விசுவாசம் அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. இப்போது அந்த ஆலை நெருக்கடியில் இருக்கிறது.வாரிசுகளுக்குள் பிரச்னை. இதை விதி என்று சொல்லலாமா?ஸ்கூட்டர் ஓட்ட கற்று கொண்டவர்கள் ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருப்பதும் பூர்வீக சொத்துகளை வாழ்வாதாரமாக கொண்டு காலத்தை ஓட்டுவதும் பணம் படைத்தவர்கள் என்கிற திமிரால்தானே?

இலவசங்கள் ரத்து..எதிர்பார்க்கலாம் ?

சில நாட்களுக்கு முன்னர் அதிமுக நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். திமுக அரசு செய்த தவறையே அதிமுக அரசும் செய்கிறது.இலவசங்கள் என்பது பொருளாதார சீரழிவு.மக்கள் நிறைய எதிர்பார்க்க தொடங்கிவிடுவார்கள்,சிந்தனை வேறுவகையில் திரும்பி விடும் என்பதை நானும் அவரும் கடுமையுடன் விவாதித்தோம். ''மக்களுக்கு கிரைண்டர் ,மிக்சி கொடுப்பது நல்லதுதானே,ஏழை ,எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தானே அரசின் நோக்கம்!'என்றார். ''அப்படியானால் பால் விலை உயர்வு,பஸ் கட்டண உயர்வு ஏழை,எளியவர்களுக்கு செய்கிற நன்மையா?'' ''அரசு துறையின் நட்டங்களை ஈடு கட்ட வேண்டும் என்பதற்காக அந்த விலை உயர்வை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்''என்றார் நண்பர். ''அரசு துறையின் நட்டங்களுக்கு இலவச திட்டங்களும் ஒரு காரணம்.மக்களின் வோட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக திமுக டி.வி.கொடுத்தது.நீங்களும் அதே தவறை செய்திருக்கிறீர்கள். ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கு சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.அது உண்மையா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்''என்று எனக்கு கிடைத்த தகவல்களை சொன்னேன். அதாவது குளிர் கால சட்டமன்ற கூட்டத்தில் ,அல்லது அதற்கு பிறகு அரசின் இலவசதிட்டங்கள் ரத்து ஆகலாம்.ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால்தான் மாணவர்களுக்கு இலவச பாஸ் கொடுக்கபடும் ,உதவித் தொகை வழங்கப் படும் திட்டங்களில் மாறுதல்கள் வரலாம் என்கிற தகவல்களை சொன்னேன். அந்த மாறுதல்கள் வரவேற்கத்தக்கதாக இருக்குமா?

Tuesday, December 6, 2011

காதலும்...கலவரமும்...!

''என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே''என்றெல்லாம் பாடுகிறார்கள்.''கல்யாணம் என்றால் அது உன்னோடுதான் ..நீ இல்லாமல் ஒரு வாழ்க்கையா?''என்றெல்லாம் பேசுகிறார்கள்.பெற்றோர் எதிர்த்தால் செத்தும் போகிறார்கள்.இது சிலர் வாழ்க்கையில்தான் நடக்கிறது.ஆனால் பெரும்பாலோர் காதல் திருமணம் செய்தவர்கள் சில வருடங்கள் கழிந்த பின்னர் கசந்து போகிறார்கள். ''நிம்மதி போச்சு எங்க வீட்ல அப்பவே சொன்னாங்க,செவத்த தோலுக்காரியை நம்பாதே ,குடும்பத்துக்கு சரிப பட்டு வர மாட்டாடான்னாங்க .நாந்தான் கேக்கல''என்று ஆண்கள் புலம்புவதைப் போல் பெண்களும் ''ஏமாந்து போவேடி முளிகண்ணுப் பய,அவன் உன்னோட மட்டும் நிக்க மாட்டான் ,ஸ்டெப்னி வச்சுக்குவான்னு எங்க வீட்லேயும் சொன்னாங்க.பாவி மக கேட்டேனா?இப்ப சீரழிஞ்சு நிக்கிறேன் ''என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.இந்த அவலம் எதனால்? உணர்வு சார்ந்த காதலில் வெற்றியும்,உடல் சார்ந்த காமத்தில் தோல்வியும் அடைவதாலா? பெரிய நடிகர்கள் கூட காதல் திருமணத்தில் தோற்று இருக்கிறார்கள்.அதற்கு காமம் மட்டுமே காரணமாக இருக்காது.வேறு சில இடையூறுகள் உண்டு. ஆனால் படித்தவர்கள்,பரஸ்பரம் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்கள் கூட கசந்து பிரிவது ஏன்? அவர்கள் பார்வையில் காதல் என்பது என்னவாக இருந்திருக்கும்? கல்யாணம் நடக்கவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்கிற காதலர்களையும் பார்க்கிறோம்.கல்யாணம் நடந்த பின்னர் கசந்து பிரிகிற காதலர்களையும் பார்க்கிறோம். பொருளாதாரம் ,எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ,அவர்களைப் போல் வசதியாக வாழ முடியவில்லையே என்கிற ஏக்கம் இவைகள் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஜாதகம் பார்க்காமல் ,குலம் கோத்திரம் பார்க்காமல் நடக்கிற திருமணங்களின் முடிவுகள் தோல்வியில் தான் முடியும் என்கிற நம்பிக்கை உண்டா?

Monday, December 5, 2011

பிரபாகரன் ஆட்சியில் பசுமையான ஈழம் ..

'உச்சிதனை முகர்ந்தால்'தமிழ்த் திரைப்படம் படம் தொடர்பாக செய்தியாளர்களுடன் நேர்காணல் நிகழ்ந்தது.நிலம்,நீர்,காற்று ஆகியவற்றின் முதல் எழுத்துகளை பெயராக கொண்ட சிறுமி நீநிகா ,சத்யராஜ்,இயக்குனர் புகழேந்தி ,கவிஞர் காசிஆனந்தன்,இசை அமைப்பாளர் இமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழீழ சிறுமியை மையமாக கொண்ட கதை என்பதால் தமிழ் உணர்வு மிகுந்த செய்தியாளர்கள் அதிகமாக இருந்தனர்.பரபரப்பு மட்டுமே செய்தி என கருதுகிற சிலரும் வந்திருந்தனர்.அவர்கள் எதிர்பார்ப்புக்கு எதுவும் இல்லை.ஒற்றைக் கால செய்தி தேறி இருக்கலாம்.அந்த செய்தியும் பிரசுரம் ஆகுமா என்பது ஆசிரியர் கையில் என்கிறபோது பாவம் அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒய்.புனிதவதி என்கிற சிறுமியின் கேரக்டரில் நடித்திருக்கிற நீநிகாவின் நடிப்பை எல்லோருமே உச்சி முகர்ந்தனர். புனிதவதியைப் பற்றி சொல்கிறபோது இயக்குனர் கண் கலங்கி விட்டார். ''புனிதவதி உயிர் வாழ்கிறார்.எங்கு என்பதெல்லாம் தெரியாது.அவர் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து இறங்கும்போது யாரெல்லாம் அவரைப் பற்றி தவறாகப் பேசினார்களோ , அவர்களை அழைத்து செவுளில் அறைவேன்''என்றார். ''இந்த படத்தில் தமிழீழத்தை சிவப்பு வண்ணத்தில் காட்டி இருந்தேன்.அதற்கு தணிக்கைக் குழு எதிர்ப்பு சொன்னது.ஆகவே பச்சை வண்ணமாக காட்டி இருக்கிறேன்.நாளை பிரபாகரன் ஆட்சியில் பசுமையாக மாறும் என்பதைக் கோடிட்டு காட்டிய நிறைவு''என்பதாகவும் சொன்னார். தணிக்கைக்குழு கை வைத்த சில இங்கே.....!' ''ஒருலட்சம் தமிழர்களை ஓட,ஓட,விரட்டி கொன்ற நாடு நமக்கு நட்பு நாடா?''என்ற வசனம் நீக்கப் படவேண்டும் . ''புனிதா,நீ புலிதானே?'' ''புலி மாதிரி'' இந்த வரிகள் ஓசை ஒழிக்கப் பட்டன. ''தமிழ்,தமிழ்ச்செல்வன் ''ஆகிய வரிகளும் ஓசை ஒடுங்கின. இப்படி தமிழ் உணர்வு உள்ள வரிகள் பலி கொடுக்கப் பட்டுள்ளது. '

Saturday, December 3, 2011

கேவலமாகிவிட்ட அரசியல்...!

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்து இருக்கும் கனிமொழிக்கு சென்னையில் மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டிருப்பது சர்ச்சையை  கிளப்பி இருக்கிறது.
 சரியா,தவறா என்கிற பட்டிமன்ற விவாதத்தில் அரசியல் கட்சிகள் இறங்கி இருக்கின்றன.திமுக தலைவர் விமான நிலையம் சென்றதையும் கடுமையுடன் விமர்சனம் செய்கிறார்கள்.
 கனிமொழி என்ன தியாகியா,அறப் போராளியா ,கோடிக்கணக்கில் சுருட்டப் பட்டதாக தொடரப் பட்ட வழக்கில் அவரும் ஒரு குற்றவாளி.அவருக்கேன் வீர  வரவேற்பு இது தவறான முன்னுதாரணம் என அதிமுகவை சேர்ந்த மலைச்சாமி  குற்றம் சுமத்தி இருக்கிறார்.இவருடைய கேள்வியில் நியாயம்  இருக்கிறது.
 ஆனால்  இந்த கேள்வியை கேட்பதற்கு அதிமுகவை சேர்ந்த எவருக்குமே தகுதி இல்லை என்பதே எனது கருத்து.
 லட்சக் கணக்கில் மக்கள்  கூடிய கும்பகோணம் மகாமக விழாவில் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வர்  செல்வி.ஜெயலலிதா,அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா இருவரும் நீராடுவதற்காக தனி ஏற்பாடுகள் செய்து ,அதன் விளைவாக நிகழ்ந்த நெருக்கடியில் மக்கள் மாண்டதையும் எந்த வகையில் நியாயப் படுத்த முடியும்?
 ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனைக்காக பேருந்தை தீயிட்டு  மாணவிகளை உயிருடன் கொளுத்தியவர்கள் அதிமுகவினர்தானே!
 திமுக,அதிமுக இந்த இரண்டு கட்சியினருமே தவறுகளை செய்து விட்டு அவைகளை நியாயப் படுத்தபார்க்கிறவர்கள்தான்.
 இவர்களை தவிர எஞ்சியுள்ள கட்சியினர் அந்த திராவிட கட்சிகளின் ஆதரவு நிழலில் களைப்பாறி கொள்கிறவர்கள்.ஈழத் தமிழர் பிரச்னையில் லட்சக் கணக்கில் மக்கள் கொல்லப் பட்டதற்கு இந்த இரண்டு கட்சிகளும் தான் காரணம்.நிகழ கால அரசியலை நினைத்து திமுக நாடகம் ஆடியது.எதிர் கால அரசியலை மனதில் கொண்டு அதிமுக நாடகம் ஆடியது.அன்று நடந்தது இதுதானே!
தமிழ்  இன மான உணர்வு என்பது திராவிட கட்சிகளின் வணிகப் பொருள்.!
 தமிழகத்தில் அரசியல் கேவலமாகிவிட்டது.மக்களுக்கும் அதைப் பற்றிய கவலை இல்லை.
கனிமொழிக்கு வரவேற்பு கொடுத்திருப்பதால் யாருடைய குடியும் முழுக்ப் போவதில்லை.
 முல்லைப் பெரியாறு என்கிற உயிர்நிலையில் கத்தி வைக்கப் பட்ட து பற்றிய கவலை இல்லாமல் ஆரவார வரவேற்பு கொடுப்பதும் ,அதற்கு எதிர்ப்பும் காட்டுவது அவசியம் தானா? 

Thursday, December 1, 2011

இரவெல்லாம் என்ன பேசினார்கள்?

கணவனும் மனைவியும் படுக்கையில் என்ன பேசுவர் ?
அவர்கள்  புதிதாக மணமானவர்கள் என்றால் எதைப் பற்றி பேச முடியும்?உப்பு,புளி,மிளகாய் பற்றியா பேச முடியும்?
அவன் அங்கம் ரசிப்பான்.அவள் முகம் புதைப்பாள்.
அவன்  அந்தரங்கம் பேசுவான்.இன்னும் சொல்ல மாட்டானா என ஏங்குவாள்.
தொடாத  இடம் தொட்டுப் பார்ப்பான்.இன்னும் கொஞ்சம் நீடிக்கட்டும் என விரும்புவாள் .
முத்தங்களால்  தேகம் படருவான்.இதற்கும் மேல் போகமாட்டானா என உருகுவாள்.
கலவி  மயக்கம் அவர்களின் கட்டுப்பாடுகளை கலைந்துவிடும் ,ஆடைகளையும் சேர்த்து!
அன்றும்  அப்படிதான் அவனும் அவளும் பேசிக் கலந்தனர்.
என்ன  பேசினோம் என்பது தெரியாமல் பேசிக் களித்தனர்.
அவர்களைத்  தவிர அங்கு ஒரு பச்சைக் கிளியும் இருந்தது .
விடிந்தது.
கலவி நேரத்தில் அவர்கள் என்னென்ன பேசினார்களோ ,மயங்கி உளறினார்களோ  அதை எல்லாம்  அப்படியே மனப்பாடமாக் அந்த பச்சைக் கிளி ஒப்புவிக்க ,தலைவிக்கு வெட்கம்.
கிளியின் வாயைப் பொத்தினாள்.
கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் எவ்வளவு அழகாக சொல்கிறார் தெரியுமா?
''நேயக் கலவி மயக்கத்தே 
நிகழ்ந்த  மொழியை 
கிளியுரைப்ப  
வாயைப்  புதைக்கும் மட நல்லீர்!''  (கடைத்திறப்புப் பகுதி.)

நடிகையின் அறச்சீற்றம் .

        எல்லா நடிகைகளும் இப்படி பொங்க மாட்டார்களா என்கிற ஆதங்கம்  வரவே செய்கிறது. எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் ஆண் ஆதிக்கம் என்பது உச்சத்த...