Wednesday, January 4, 2012

சினிமாக்காரர்களின் வெற்று முழக்கம்!

தமிழனின் சாபக்கேடோ என்னவோ ,எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில்
திரை உலகத்தினரின் பங்களிப்பு என்ன, அவர்கள் என்ன சொல்கிறார்கள்  என  அறியத் துடிப்பதுதான்!
இதன் விளைவு ?
அவரவர்கள் கனவில் சிம்மாசனம் வந்து விடுகிறது!
அரசியல் கட்சிகள் படுத்தும் பாடே பெரும்பாடாக இருக்கும் நிலையில் நடிகர்களின் தலையில் நாமே கிரீடம் வைக்கப் பார்க்கிறோம்.நெய்வேலி பிரச்னையில் அவர்கள் தலையிட்டுதான் சிக்கல் தீர்ந்ததா?ஓஹேனக்கல்லில்  ரஜினி அறிக்கை விட்டதால்தான் விமோசனம் கிடைத்ததா?தமிழர்க்கு ஆதரவாக அறிக்கை விட்டு அதன் பின்னர் பதறி அடித்து அந்த அறிக்கையை  வாபஸ் பெற்றதுதான் அவரின் சாதனை!
தமிழகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நடிகர்களின் உதவி 'இராமாயண  அணில் 'அளவு கூட இருப்பதில்லை! அவர்களிடம் நிதி உதவி பெறுவதுடன்  நின்று விடுவதுதான் நல்லது!முல்லைப் பெரியாறு பிரச்னையில் பல நடிகர்கள் தங்களின் கேரளா வியாபாரம் பாதிக்கப் பட்டுவிடுமோ என்கிற பயத்தில் இருக்கிறார்கள்.
தமிழகம் சார்ந்த பிரச்னைகளில் திரை உலகத்தினருக்கு சம்பந்தம் இல்லையா என சிலர் கேட்கலாம். இல்லை என்று சொன்னால் அது முட்டாள்த்தனம்! அவர்களை முன்னிறுத்தி அவர்கள் தலையில் முண்டாசு கட்டுவதையே நான்  எதிர்க்கிறேன்.
அவர்களை வலுக்கட்டாயமாக ,நிர்பந்தம் செய்து இழுக்க வேண்டுமா?
அவர்கள் ஒரு நாள் பணி நிறுத்தம் செய்துவிட்டு போகட்டுமே!இல்லாவிட்டால்  மனித சங்கிலி என்கிற உப்புக்கல்லுக்கு பயன்படாத வெட்டி வேலையுடன் நிற்கட்டுமே?ஏன் கட்டாயப் படுத்துகிறீர்கள்?
முல்லைப் பெரியாறுக்காக  ரஜினி அறிக்கை விட்டாரா என்று சிலர் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது.அன்னா ஆதரவாளர்களுக்கு இலவசமாக  அவரது மண்டபத்தை பயன் படுத்தக் கொடுத்திருந்தவர் அறிக்கை விட்டிருக்கலாமே? இந்த கேள்வி எழ காரணம் அவரை அடுத்த முதல்வர் என்று  நம்மவர்கள் கொம்பு சீவி விட்டிருந்ததுதான்!
இதே போல்தான் விஜயையும் உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறோம்!டெல்லிக்கு போய் அன்னா வுக்கு கொடி ஆட்டியவர் நமது அணை பிரச்னையில் ஏன் அமைதி காத்தார் என கேட்கிறோம்? யாருடைய உதவியும் இல்லாமல் மக்களே கிளர்ந்து எழுந்தது இந்த முல்லைப் பெரியாறு பிரச்னையில்தான்!வெற்று முழக்கமிடுகிறவர்கள் சினிமாக்காரர்கள்.அவர்களுக்குள்  ஒற்றுமை இல்லாமல் தேனியிலும்,சென்னையிலும் என இரு கூறாக பிரிந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள் .ஆக இனிமேலாவது மக்கள் பிரச்னைகளில் அவர்களை முன் நிறுத்தாதீர்கள்! அவர்களை நிழல் மனிதர்களாகவே எண்ணுங்கள்!

No comments:

"ஜெ. சீரியஸ் உண்மை மறைக்கப்பட்டது."---அப்பல்லோ பிரதாப் !

                   மாட்டின் எலும்புகளை இறுக்கி நொறுக்கியதும் முழு மாட்டையும்  விழுங்கத் தொடங்கி விடும் மலைப்பாம்பைப் போல-----             ...