Saturday, September 23, 2017

நொய்யல் ஆற்றில் வருவது சோப்பு நுரையாம் !

அடடா   அடடா.. நம்மை ஆள்கிற அதிமுக அமைச்சர்களில் செல்லூர் ராசு  ஒருவர்தான் அறிவியல் விஞ்ஞானி  என நினைத்திருந்தோம்..."மகா தப்புப்பா"  என்று  நடு மண்டையில்  நச்சென குட்டி விட்டார்  கருப்பன். இவரும் மாண்புமிகு அமைச்சர்தான்..

நொய்யல் ஆற்றில் நுரைத்து பொங்கி  ஓடுகிற வெள்ளம்சாயப்பட்டறை கழிவு கலந்தது. அது  குடிக்கவும் விவசாயம் செய்யவும் பயன்தராது  என  பகுதி மக்கள் புகார் மனு வாசித்திருக்கிறார்கள்.

அதற்கு மாண்புமிகு கருப்பன் கொடுத்திருக்கும் விளக்கம்தான்  "என்ன தவம்  செய்தோம் இவரை மந்திரியாக அடைந்ததற்கு" என புல்லரிக்க வைத்திருக்கிறது.

"நொய்யல்ஆற்றில்  கடந்த வரட்சிகாலத்தில்  தேங்கிக்கிடந்த சாக்கடைக் கழிவுகள் தற்போதைய மழை  வெள்ளத்தில் அடித்து வருகிறது..கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பு  நுரையும் கலந்து   பொங்குகிறது. சாயப்பட்டறை கழிவுகளால் இல்லை." என்பதாக சொல்லி இருக்கிறார் என்பதாக ஊடகங்கள் சொல்கின்றன.

ஊடகங்கள் பொய் சொல்லுமா?

படத்தைப்பார்த்துவிட்டு தீர்ப்பு சொல்லுங்கள் வலைப்பூ நண்பர்களே!


ஜெயலலிதாவை பார்க்க சசியை அனுமதிக்கவில்லை !!!!

"ஜெ. இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்" என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதற்கு டி.டி.வி.தினகரன் பதில் சொல்லி  இருக்கிறார்.

"ஜெயலலிதாவை பார்ப்பதற்கு  சசியையே அனுமதிக்க வில்லை" என்று  அணுகுண்டு  வீசி இருக்கிறார் சசியின் நெருங்கிய உறவுக்காரர். 

இது  ஒரு வகையில் மிகவும் சாமர்த்தியமான பதில் என்பதாகவே  பார்க்க முடிகிறது.

"பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு  அப்பல்லோ மருத்துவமனைக்கு  இருக்கிறது. ஏன் அனுமதிக்கவில்லை என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் .நாங்களும் உங்களைப்போலத்தான் "என்பதாக பழியை கடத்தி விடுகிறார் தினகரன் என்பதாகவே கருத முடிகிறது..

சசிகலாவின் கண்ட்ரோலில்தான் அன்று அப்பல்லோ மருத்துவமனை  இருந்தது .சி.சி.டி.வி.கேமராக்கள் அகற்றப்பட்டதற்கு சசிதான் காரணம் என  அன்றே குற்றச்சாட்டு எழுந்தன. பலர் பேசினார்கள். தற்போது கூட  "தங்களிடம் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாக" சசியின் நெருங்கிய உறவுகள் சொன்னதாக பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். அப்போதெல்லாம்  தினகரன் ஏதும் சொல்லவில்லை..

தற்போது  தினகரன் சொல்லி இருக்கிற பதிலுக்கு விளக்கம் சொல்லவேண்டிய  கடமை  பன்னீர்செல்வத்துக்கு  இருக்கிறது. அவர்தான் அன்றைய அரசுப்   பொறுப்பில்  இருந்தவர்.

Friday, September 22, 2017

ஜெயலலிதா சாவு மர்மம் அம்பலமாகிறது?

"மானம் சிறிதென்றெண்ணி 
வாழ்வு பெரிதென்றென்னும்
ஈனர்க் குலகந்தனில் --கிளியே 
இருக்க நிலமையுண்டோ?"

பாடியவன் பாரதி..நடிப்புச்சுதேசிகளைப் பற்றி சினம் கொண்டு சீறி உமிழ்ந்த  வார்த்தைகள். அவன் பாடிச்சென்று பல காலம் பறந்து போய்விட்டது. விஞ்ஞானம் மேலோங்கி வளர்ந்து செல்லும் காலத்தில் வாழ்ந்தாலும்  முண்டாசுக்கவி பாரதி சொல்லிச்சென்றது இன்றைக்கும் பொருந்துவது  எப்படி? "அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் " வாழ்வாங்கும் வரம்  பெற்றவையா?

புரியவில்லை சோதரர்களே!

"பொய் சொன்னோம்.ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட  நேரத்தில் எங்களை சசிகலா சந்திக்கவிடவில்லை. இட்லி சாப்பிட்டதாக  பொய் சொன்னோம்.அதற்காக மன்னிப்புக்கேட்கிறோம்."  என்பதாக அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

அப்படியானால் "சிரிக்கிறார்.நர்சுகளிடம் கேட்டார்.டி.வி.பார்த்தார்" என்று  அமைச்சர்களில் இருந்து  கட்சிப் பெரிசுகள் வரை சொன்னதெல்லாம் அத்தனையும் பொய்யா? அதற்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவர்களும்  நிர்வாகமும் துணை போனதற்கு என்ன காரணம்.?

மத்தியில் இருந்து வந்த பிரதமர் முதல் கட்சித்தலைவர்கள் வரை யாரையும்  பார்க்க விடாமல் தடுத்ததற்கு சசிகலாதான் காரணம் என்பதை  அதிமுக  அமைச்சர் சீனிவாசன் பேச்சிலிருந்து அறியமுடிகிறது.,டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை  சேர்ந்தவர்களும் உடந்தையாக இருந்தனர் என்றுதானே  என்னைப்போன்ற பாமரன் நினைப்பான்....நினைக்கிறான்.

பிரதமர் மோடிஜிக்கு தெரியாமல் நடந்திருக்க சத்தியமாக வாய்ப்பு இல்லை. அதிமுக அமைச்சர் சீனிவாசன்தான் இதற்கும் விளக்கம் சொல்லவேண்டும். துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி அறிந்திருந்ததால், தெரிந்திருந்ததால்தான் விசாரணைக்கமிஷன் வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.அதில் அவர் அழுத்தமுடன் இல்லை என்பது தற்போது தெரிகிறது.

ஒரு முதல்வரின் மரணம் சந்தேகத்துக்குரியதாகலாமா? சதி நடக்காமல் மரணத்தை மறைக்க வாய்ப்பு இல்லை.

உண்மை வெளிவந்தாக வேண்டும்.

"நாடு காப்பதற்கே ---உனக்கு 
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப்போடா---அடிமைவேலை செய்யப்போடா!"
பாடியவன்  முண்டாசுக்கவி  வரகவி பாரதி.

Monday, September 18, 2017

குடித்து கும்மாளம், புறம் பேசுவது இது சினிமா பார்ட்டி!

மழை வெளுத்து வாங்கியது .வட பழனி ஏரியாவில் கொட்டினால் வேப்பேரி ஏரியாவில் தூறல் கூட இருக்காது.இது சென்னை வாசிகளின் அனுபவம். மொத்த பெருநகர ஏரியாவிலும் எப்போதாவதுதான் கொட்டித் தீர்க்கும்..

"சுக்குக்காப்பி போடு. குளிருக்கு சொகம்.ஒடம்புக்கும் நல்லது. கருப்பட்டியை  தட்டிப்போடு.சீனி வேணாம்."

கொஞ்ச நேரத்தில்  வந்தது.. சூடு குறையாமல் சப்பி சப்பி குடிப்பதிலும் ஒரு ரசனை. உறைப்பு ,இனிப்பு அனுபவிக்கலாம்.

அப்படியே இங்கிலீஷ் பேப்பரை ஒரு புரட்டு. காலையில் படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. வாக்கிங் போய்விட்டு திரும்பினால் பாத்ரூம். எப்படியும் மூன்று வாட்டி.போகணும். இந்தியன் டாய்லட்டில் .பேப்பர் படிக்க முடியாது.  அவஸ்தை..அப்படியே குளித்து விட்டு சாமி தரிசனம் முடிந்தால் எட்டே முக்கால் மணி. அவசரமுடன் இட்லியை விழுங்கி, மாத்திரைகளையும் துணைக்கு அனுப்பிவிட்டு ஆபீசுக்கு புறப்படணும். இந்த அன்றாட அவதியில்  பேப்பர் படிப்பது ஒரு கேடா?

சாயங்காலம்தான் செய்திகளை வாசிக்க முடிகிறது.

தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல் பொங்கி இருந்தார்.

"பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த போது எனக்கு இண்டஸ்ட்ரியில் ரொம்பவும் நல்ல பேர்.!அரகன்ட்,ஆட்டிடியூட் னு ஆளுக்காள் சொன்னாங்க. சொல்றவன் சொல்லிட்டுப்போகட்டும்னு என் வேலையில் கவனமா இருப்பேன்.

என்னை அப்படி கொடூரமா சொல்றதுக்கு காரணம் இருந்தது. அவங்க கூப்பிடும் சினிமா பார்ட்டிகளுக்கு நான் போக மாட்டேன். இனிப்பா பேசி அவங்களிடம் நல்ல பேர் வாங்கனும்கிற அவசியம் இல்ல. அங்க போனா  குடிக்கணும்.அடுத்தவங்களை பத்தி கிசுகிசு பேசுவாங்க. அதை கேக்கணும். எதுக்கு நமக்கு அந்த வேலை?

இதனால என்னை பத்தி தப்பா பேசுனாங்க.அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? கூப்பிட்டா வரமாட்டேன்கிறான்னு சொல்றானேன்னு சொன்னங்க. அட போங்கய்யான்னு கவலைப்படல. பாலிவுட்ல சினிமா பார்ட்டின்னா இதான்  நடக்கிது" என்று  சொல்லிருந்தார்.

கோலிவுட்டிலும் அதான் நடக்கிது. சன்னி தியோல் மாதிரி தில்லா சொல்றதுக்குத்தான் யாருமில்ல.

Sunday, September 17, 2017

பெரியார் பிறந்த நாளிது.பெருமை கொள்ளும் காலமிது..

நான் மனிதன்.யாருக்கும் அடிமை அல்லன்.என்னை அடக்கி ஆள்கிற உரிமை எவனுக்கும் இல்லை என்பதை எனக்குச்சொல்லிக் கொடுத்த பெருந்தகை தந்தை பெரியார்.

யாருக்கெல்லாம் அடிமைப்பட்டுக்கிடந்தோம் என்கிற சீரழிவுப் படலத்தை ஊருக்கு சொல்லி திருத்தப்பார்த்த பகுத்தறிவுப்பகலவன் .இரவுகளில் நமக்கு சுயமரியாதைப் பாடம் நடத்திய அந்த பெருங்கிழவன் பிறந்த நாள்தான் செப்டம்பர் பதினேழு.

மறக்கலாமா? 

"ஒரு ஜோடி செருப்பு பதினாலு வருஷம் இந்த நாட்டை ஆண்டதாக ஒரு கதை. இதை விசுவாசத்தோடு படிக்கிறவனுக்கு மனிதனே இல்லாமல் நாய்,கழுதை ஆண்டால் கூட அவமானம் இல்லை என்றோ குறை என்றோ சொல்ல வரவில்லை.ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்த கொள்கையோடு, எந்த முறையோடு ஆட்சி செய்கிறது? அதனால் மக்களுக்கு என்ன நன்மை? இதுதான் என் கவலை" என்று நாட்டைப்பற்றி  கவலைப்பட்டவர் தந்தை பெரியார்.

"எந்த ஆட்சியாக இருந்தாலும் நம் நாட்டார்களே ஆள வேண்டும். அந்த ஆட்சியும் மான உணர்வு உள்ளதாக, ஏழைகளை வஞ்சிக்காத முறையில் இருக்க வேண்டும்" என்று சொன்னதில் என்ன பிழை காண முடியும்?

94 வருஷம் 3 மாதம், 7 நாட்கள் அந்த  அறிவுச்சுடர் வாழ்ந்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரத்து ஏழு நூறு நிகழ்ச்சிகள். மொத்தம் எட்டு லட்சத்து இருபது ஆயிரம் மைல்கள் பயணம். கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று முறை உலகைச்சுற்றி வருவதற்கு சமம் என்கிறார்கள்.மூன்று முறை நிலவுக்கு சென்று வருவதற்கு ஒப்பான தொலைவு என்கிறார்கள்.

அவரது நெடும்பயணம் பயணம் நமக்காக!

அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பதற்காக.

சுயமரியாதை வேண்டும்  என்பதற்காக.

அய்யா ..உங்கள் நினைவு  தமிழர்களின் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும்.

மறந்துவிட்டான் என்கிற நிலை ஏற்படுமேயானால்  அவன் அடிமையாகிறான் என்று பொருள்.

Saturday, September 16, 2017

ஜெ. கொலை செய்யப்பட்டாரா?

"ஜெயலலிதாவுக்கு  உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. எங்களை பார்க்கவும் அனுமதிக்கவில்லை.மரணத்தில் சந்தேகம்" என்று தற்போதுதான்  அதிமுக அமைச்சர்கள் வாக்குமூலம் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

செங்கல்பட்டில்  சசிகலா இருக்கிறார் என்றால் தாம்பரத்தில்  பம்மி பதுங்கு குழியில் படுத்துக் கிடந்தவர்கள்தான் இன்றைய முதல்வரும் ஏனைய அமைச்சர்களும்.!  அவர்கள்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

 "சின்னம்மா சின்னம்மா" என்று குனிந்து குழைந்து கும்பிடு போட்ட இவர்கள்   சொந்த அம்மாவிடம் கூட  அத்தகைய மரியாதை காட்டி இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

 ஜெயலலிதாவின்  கவனத்துக்கு எதையுமே கொண்டு செல்லாமல் தடுப்புச்சுவராக இருந்தவர் சசிகலா என்பதை நாடறியும்.இவர்களுக்கும் தெரியும். அன்று இதை அவர்களால்  பகிரங்கமாக சொல்ல முடியவில்லை.

 எவரையுமே ஜெயலலிதாவின் அருகில் செல்ல முடியாத அளவுக்கு  தீர்மானிக்கிற சக்தியாக இருந்தார்  சசிகலா.

அதற்கு காரணம்ஜெ .யின் தவறுகளே! .அதுவே   சசிக்கு சாதகமாக இருந்தது என்று  கூட சொன்னார்கள்.

சசியின் மீது  நடவடிக்கை எடுத்து வெளியில் விரட்டிய ஜெயலலிதாவினால்  அந்த கோபத்தை ஏன்   தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை?. திரும்பவும் கார்டனுக்குள் ஏன்அ னுமதித்தார். அதுதானே  சசிக்கு மிகவும் சாதகமாகி இருக்கிறது.

 ஜெயலலிதாவுக்கு  தெரியாமலேயே கட்சிக்குள் இஷ்டப்படி விளையாட முடிந்திருக்கிறது. அதனால்  பாதிக்கப்பட்டவர்கள் வெளியில்  சொல்ல இயலாது போயிருக்கலாம்..

 இதனால்தான் ஜெ.க்கு தோட்டத்தில் எத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது இன்று வரை தெரியவில்லை.

மர்மம் இருக்கிறது அம்மாவின் மரணத்தில் என்று  முதலில்கு ண்டு வீசிய ஓ.பி.எஸ்.தான் 'உண்மையைச்சொல்வதற்கு ' கடமைப்பட்டவர். ஆனால்  துணை முதல்வர் பதவியுடன் அவர்  அமைதியாகிவிட்டாரோ என்னவோ?

இப்படியும் நினைக்கவேண்டும் !

இதே நேரத்தில் ....

"ஆட்சி கலைக்கப்படும்" என்று தினகரன்  திகில் கிளப்பிய பின்னர்தான்   'அம்மா கொலை' செய்யப்பட்டிருக்கலாம் என்கிற அஸ்திரத்தை அமைச்சர்கள்  கையில் எடுத்திருக்கிறார்கள். பகிரங்கமாக  மேடைகளிலும் பேசுகிறார்கள்
.என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இதை நீதித்துறை  புகாராக எடுத்துக்கொள்ள முடியாதா?

கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறவர் யாரோ ஒருவர் அல்லர். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.

 குற்றம் சொல்கிறவர்களும்  அரசியல் சாசனப்படி  உறுதி மொழி எடுத்துக்கொண்ட அமைச்சர்கள்.

அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே  சக அமைச்சர்களே குற்றம் சாட்டுவதால் நடவடிக்கை எடுக்கவேண்டிய  கடமை முதல்வர் எடப்பாடியாருக்கும்  இருக்கிறது.

என்ன நடக்கப்போகிறதோ?

Friday, September 15, 2017

தளவாயின் கடிதத்தை கிழித்து எறிந்த எடப்பாடியார்.!

தமிழக அரசியலில் எப்போது என்ன  நடக்கும் என்பது தெரியவில்லை,ஒரே  குழப்பம்தான்! தீர்மானிக்கும் சக்தி கட்சிக்குள்ளேயே இருந்தபோது அதிமுகவினர் பயந்து கிடந்தார்கள். 'தலைமை' டெல்லிக்கு 'ட்ரான்ஸ்பர்' ஆகியதும் நிலைமை படு கேவலமாகிவிட்டது.

பொந்துக்குள் பதுங்கி இருந்த எலிகளுக்கெல்லாம் மீசை துடிக்கிது.

பெருச்சாளியா .எலியா என்கிற பலப் பரீட்சை!

"என்னிடமா மோதுகிறாய். ஸ்லிப்பர் செல்களை அனுப்பியிருக்கிறேன்" என்று  திகில் கிளப்பிய தினகரனுக்கு தன் பக்கத்திலும் ஸ்லீப்பர் செல் இருப்பது  தளவாய் சுந்தரம் வெடித்துக்கிளம்பிய பிறகுதான் உறைத்திருக்கிறது.. ''அடடா  வடை போச்சே!"

இன்னும் எத்தனை வடைகளோ!

"நான் கொடுத்த பதவிதானே, சிறப்புப் பிரதிநிதி பதவி? காலி பண்ணு " என்று  தினகரன் ஆர்டர் போட  தளவாய்க்கு  உச்சியில் ஆணி அடித்த வேதனை.

"இந்தாங்க எனது ராஜினாமா" என்று முறைப்படி முதல்வர் எடப்பாடியாரிடம்  ராஜினாமா கடிதத்தை கடாசி இருக்கிறார்.

தினகரனுக்கு ராஜகுருவாக இருந்தவர் தன்னிடம் கடுதாசியை கடாசுகிறார்  என்றால் யூகிக்க முடியாத பரமார்த்த குரு அல்லர் எடப்பாடியார்.

"என்ன இப்படி பண்றீங்க ?"என்று அவர் கண்ணெதிரிலேயே கடிதம் சுக்கு நூறாக கிழிபட்டது என்றால் விசுவாசம் எடை போடப்படாமல் இருந்திருக்குமா?  ஐந்து மணி நேரம் எடப்பாடியாருடன்  தளவாய்  ஆலோசனை கலந்திருக்கிறார்.

அடடா ..ஒரு வெள்ளாடுதானே என்று சும்மா இருந்து விட்டால் எல்லா ஆடுகளும் இடம் மாறி விடும்.அப்புறம் கிடை போட முடியாது என்கிற பயம்  இடையனுக்கு வருமா வராதா? ஐந்து மணி நேர ஆலோசனையில் எந்தெந்த  ரகசியங்கள் எடப்பாடிக்கு போனதோ? கவலைப்படாமல் இருக்க முடியுமா?

"இன்னும் ஒரே வாரத்தில் எடப்பாடி அண்ட் ஓபிஎஸ் கம்பெனி கலைக்கப்படும். என்கிற பைனல் வார்னிங் (  ? ) விடவேண்டிய அவசியம் தினகரனுக்கு  வந்து விட்டது.. .விட்டவர் தினகரன் என்பதால் அலட்சியமாக இருந்து விட முடியாது என்பதால் எடப்பாடி அணியினர்  டில்லி தலைமைக்கழகத்தில் ஆலோசனை கலந்து இருக்கிறார்கள்.

தினகரனை பலவீனப்படுத்த தளவாய் கொடுத்திருக்கிற ஆலோசனைகள் பலன் அளிக்குமா என்கிற சந்தேகம் அவர்களுக்கு வந்திருக்கலாம். உளறுவாயனுக்கு ஊமையனே மேல் என்று சும்மா இருப்பதற்கும் பயம். சபாநாயகர்  எச்சரித்தும் எதுவும் நடக்கவில்லையே என்கிற கலக்கமும்  எடப்பாடியாருக்கு இருக்கிறது.

எப்படியும் வரப்போவது  குடியரசுத் தலைவர் ஆட்சிதான் என சில கட்சித் தலைகள் நம்புகின்றன.

Wednesday, September 13, 2017

இதுதானா காதல் பேச்சு?


காதலைப் பற்றி பாடாதவர்கள் யாருமில்லை. 

தமிழனுக்கு வேதம் தந்த வள்ளுவரும் பாடி இருக்கிறார்.  

வடக்கின் வால்மீகியை புரட்டிப் போட்ட கம்பனும் பாடி இருக்கிறார்.

இவருக்கு இணையாக எவருமில்லை என்று சொல்லப்படும் பாரதியும் பாடியிருக்கிறார். அவரது தாசனும் பாடியிருக்கிறார்.


வழித்தோன்றலான வைரமுத்துவும் பாடியிருக்கிறார்.


ஆனால் ''காதல் பேச்சு'' என்பது என்ன?


எப்போது பேசுவது ,எப்படிப் பேசுவது 'காதல் பேச்சு '?

'கண்ணே மணியே ,கற்கண்டே ,கனியமுதே' என்று பேசுவதுதான் காதல் பேச்சா?

கடற்கரை, கோவில் ,சினிமா கொட்டைகள் என்று ஓரம் கட்டிப்
பேசுகிறோமே அதுவா 'காதல் பேச்சு '?


''இல்லை '' என்று அழுத்தம் கொடுத்து சொல்கிறான் பாரதி!


படித்தவரோ ,படிக்காதவரோ , பட்டிக்காடோ ,பட்டணமோ ,
பேசத் தெரிந்தவரோ ,தெரியாதவரோ ,எவராக இருந்தாலும் தன்னை மறந்து
''காதல் பேச்சில்' கலந்து விடவேண்டும்.


அதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான் எக்ஸ்பெர்ட் பாரதி!


அது எப்போது எங்கே என்பதில் தான் வில்லங்கமே !
'
'பாதி நடுக்கலவியிலே காதல் பேசி'' என்கிறானய்யா! 


என்ன கொடுமைங்க இது? முடியுமா?


முடியும் அதுதான் காதல் பேச்சு !


மஞ்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்து
துன்பம் மறந்து ,அக்கம் பக்கம் மறந்து ,யாரைக் காயப் படுத்துகிறோம் ,என்ன 
செய்கிறோம் என்பது அறியாமல் ,எப்படி சொல்வது , எதை சொல்வது என்பது 
புரியாமல் ,இன்பத்தின் எல்லையில் ,சுகத்தின் உச்சம் தொட்டு , தங்களை மறந்த 
நிலையில்'புதுப்புது வார்த்தைகளை' சொல்வதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான்
பாரதி!
'
'பாதி நடுக்கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போல 
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த் தொழிலை கருதுவரோ''


இதுதான் பாரதியின் கருத்து!


வள்ளுவன் ,கம்பனை விட பாரதி அனுபவித்து சொல்லி இருக்கிறான்.

இது சரியானதுதானா ,இல்லையா?


முரண்படுகிறீர்களா?

( இது மறு பதிப்பு.)

Tuesday, September 12, 2017

சசிகலா--தினகரனை சூழ்ந்திருக்கும் பயங்கரம்..

எதிர்பார்த்தது இன்று நடந்து விட்டது.

சசிகலாவும் தினகரனும் சுனாமி பேரிடர் அலையில் சிக்கி தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் மீட்பர் யாரென தெரியாத  காரிருளுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்.என்ற மாமனிதரால் வளர்க்கப்பட்ட பேரியக்கம் இன்று  தொலை நோக்குப்பார்வையை இழந்து  பிஜேபி என்கிற மதவாத கட்சியின் வழிநடத்துதலுக்கு இரையாகி இருப்பது பரிதாபம்.

எடப்பாடியாரும் ஓபிஎஸ்.சும் இணைந்து சொன்னதை சாதித்துக்காட்டிவிட்டனர்.

தந்தை பெரியாருக்காக தலைமைப் பதவியை நிரப்பாமல் திமுக.பிரிந்து வந்து எப்படி  பொதுச்செயலாளர் பதவியை செயல்படுத்தியதோ  அதே பாணியில் இன்று வானகரம் அதிமுக ( இணைந்த) பொதுக்குழுவில் தீர்மானித்திருக்கிறது.

"ஜெ.தான் நிரந்தரப் பொதுச்செயலாளர்.அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.ஆகவே அவரின்றி வேறு யாரும் அந்த பதவிக்கு வர இயலாது. அதனால் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது." என்று சொல்லி  சசியை  தூக்கி வீசி விட்டனர்.

"கட்சியில்  உறுப்பினரே இல்லை.நீ யார் ?"எனக் கேட்டு டி.டி.வி.தினகரனுக்கும்  அத்தி மரத்து ஆப்பு அடித்து விட்டார்கள்.

"எங்களிடம் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் " என்று இருபத்திஒன்று  எம்.எல்.ஏ.க்களுடன் உல்லாசப்பயணம் நடத்திய தினகரன் என்ன செய்யப்போகிறார்? அவரது கட்டுக்குள் கிடப்பவர்கள் தளை அறுத்து  வெளி வருவார்களா அல்லது அவரது கட்டளைப்படி ஆட்சியை  கவிழ்ப்பார்களா? ஆட்சி கவிழ்க்கப்படுவதை பிஜேபி விரும்புமா? சட்டமும் ஒழுங்கும் கேலிக்கிடமாகி இருக்கும் தமிழகம் இன்னும் என்னென்ன அவலங்களை சந்திக்கப்போகிறதோ  தெரியவில்லை.

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை  அடைத்து வைக்கப்பட்ட காலத்தில் மவுனராகம் வாசித்த காவல்துறை  தற்போது கன்னட மாநிலம் சென்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை  நடத்துவது எவரது வழிகாட்டலால்?

"நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம்" என்று முருகன் என்கிற எம்.எல்.ஏ. கூறி இருக்கிறார்.  

சசிகலா தினகரன் நீக்கத்துக்கு பல இடங்களில் வெடி வெடித்து வரவேற்பு  தெரிவித்திருக்கிறார்கள்.சில இடங்களில் எடப்பாடியின் உருவ பொம்மையை எரித்திருக்கிறார்கள்.

தினகரன், சசி இருவரது அரசியல் எதிர்காலம் இருள் சூழ்ந்து  இருக்கிறது. மன்னார்குடியின் ஆதிக்கம் உடைக்கப்பட்டுவிட்டது என்றே அரசியல்  ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

"நடப்பது சசிகலா அமைத்து தந்த ஆட்சிதான். ( ஜெ.அமைக்கவில்லை.) ஆகவே  ஆட்சியை விட்டு வெளியேறுங்கள் "என்கிறார் தினகரன். இதை  எந்த அளவுக்கு மக்கள் ஏற்பார்கள் என்பது தெரியவில்லை.பிஜேபி.யின் துணையுடன் நடந்து கொண்டிருக்கிற எடப்பாடி அரசை  தினகரன் உறுதியுடன் எதிர்கொள்வாரா என்பது கேள்விக்குறிதான்? அவர் எதிர்கொள்ளவிருக்கிற வழக்குகளின் முடிவுகள் எப்படி இருக்கும் ,விடுவிக்குமா, உள்ளே தள்ளுமா என்பதையும் அவர் சிந்திக்க  வேண்டியிருக்கிறது.

ஆனால் மக்களுக்கு இன்னமும் தெரியாமல்  இருப்பது ஜெ.யின் மர்ம மரணம் தான்! 

எனக்கென்னமோ அதற்கான விடை யை  எப்பவோ புதை குழியில் தள்ளிவிட்டதாகவே தோன்றுகிறது. 


  

Sunday, September 10, 2017

சினிமா நடிகர்களின் விசித்திரமான பழக்கம்.

"அண்ணே...என் புள்ள எப்பவுமே விரல் சூப்பிட்டே  இருக்கான். என்ன பண்றதுன்னு  தெரியல.? வேப்பெண்ண தடவியாச்சு..சாணியையும்  வெச்சுப் பார்த்திட்டேன்.எதுவும் பலிக்கல.என்னண்ணே பண்றது?"

                     என் தங்கச்சி ரொம்பவும் வருத்தப்பட்டா. என்ன பண்ண முடியும்.எதுக்குமே மசியலேங்கிறபோது  அவனா எப்ப அசிங்கம்னு  நினைக்கிறானோ அப்ப விட்டுறட்டும்னு விட்றவேண்டியதுதான். தங்கச்சிக்கு ஆறுதலா சில உதாரணங்களை சொன்னேன்.

                  "நடிகர் ஷாருக்கான் இருக்காரே...அவருக்கு ஒரு பழக்கம். காலில்  போடுற ஷூவை கழட்டுறதே இல்ல. ஒருவாட்டி கழட்டுனாவே ஆச்சரியம். தூங்கிறபோது காலில் ஷூ கிடக்கும். ஒய்ப் கழட்டும்.இல்லேன்னா செர்வன்ட் கழட்டி விடும்."
                 
                       "நெசமாவா?"

                      "படிச்சத சொன்னேன். ஆமிர்கானுக்கு ஷவர் பாத்ல குளிக்கப்
 பிடிக்காது. ஷாகித் கபூருக்கு ஒரு நாளைக்கு பத்து கப் காப்பியாவது குடிக்கணும்.இல்லேன்னா ஆளு டல். சாப்பிட்டு முடிச்சதும் குனால்கபூர் தட்டில கொஞ்சமாவது மிச்சம் வைப்பார். ஜான் ஆப்ரஹாம்  உட்கார்ந்திட்டா எப்பப்பார்த்தாலும் கால்களை ஆட்டிக்கிட்டே இருப்பார்.இது அவரது பழக்கம் .கிரிக்கெட் வீரர் சேவாக்,கரீனா கபூர் ,இவங்க ரெண்டு பேருக்கும் நகம் கடிக்கிற பழக்கம் இருக்கு.மாத்திக்க முடியல. சன்னி லியோன்னு ஒரு பேமஸ் நடிகை .அவ பத்து பதினஞ்சு தடவையாவது பாதத்தை கழுவனும்..இத விட கொடுமை  என்னன்னா ஆஸ்கார் பரிசு வாங்கியவ சான்ட்ரா.முக சுருக்கத்த  போக்க என்ன கிரீம் யூஸ் பண்ணுவா தெரியுமா? பைல்ஸ் கம்ப்ளெயிண்டுக்கு  யூஸ் பண்ற கிரீமை தடவுறான்னு எழுதி இருக்காங்க.. "

                             "என்னை  கன்வின்ஸ் பண்றதுக்காக இப்படி கதை விடுறீங்களா ?"

                             "கதை விட்டு என்ன ஆகப்போகுது ?யுனிவர்சல் அழகின்னு  சுஷ்மிதா சென்கிற நடிகையை செலக்ட் பண்ணினது உனக்கு ஞாபகம் இருக்கா?"

                              " இருக்கு.கல்யாணமே பண்ணிக்கல?"

                             "அந்த அழகிக்கு ஒப்பன் டெரஸ்ல குளிக்கிறதுன்னா ரொம்பவும்  பிடிக்கும்.கரீனாவின் புருசன் சயிப் அலிகானுக்கு புத்தகம் படிக்கிறது,போன் பண்றது எல்லாமே பாத்ரூமில்தான்.அங்க தனியா ஒரு குட்டி லைப்ரரி இருக்கு. போன் எக்ஸ்டென்சன் இருக்கு. இவ்வளவு ஏன் பிரபல அமெரிக்கப்பாடகி க்கு மிகப்பெரிய கெட்ட பழக்கம் இருக்கு. உன் மகனாவது  தேவலை.இவளுக்கு பல் தேய்க்க பிடிக்காது. மவுத் பிரஷ்னர்தான் யூஸ் பண்ணுவா!"

                     "அண்ணே ..என் பையனை நான் எப்படியும் கஷ்டப்பட்டு  திருத்திடுவேன் .இனி உங்கிட்ட யோசனை மட்டும் கேட்கப்போறதில்ல. ஆளை விடு!"

                 "அட என்னம்மா நீ...நெட்ல படிச்சததான் உங்கிட்ட சொன்னேன். சத்தியமா கத விடல."Saturday, September 9, 2017

12 .கணவன்...ஆனாலும் அவள் பத்தினிதான்!

சனிக்கிழமை .சாயந்திரம். மாலை மலரில் வந்த செய்தியை  மறுபடி மறுபடி  வாசிச்சேன்.

 நான் தமிழ்நாட்டில்  பிறந்த தவப்பயன் எங்க அய்யா அம்மாவுக்கு கஷ்டமில்லாமல் போச்சு. ஆனால் நான் பிறந்து அவங்களுக்குக் கொடுத்த கஷ்டம் இருக்கே!

 "ஆடி மாசத்தில பிறந்து ஆட்டிப்படச்சிட்டீயடா மவனே"என்பது என்னோட அய்யா அடிக்கடி பாடுற பாட்டு.  

நான் தாய்லாந்தில்  பிறந்திருந்தால் என்னுடைய  அய்யா-அம்மா வரதட்சணை கொடுத்துத்தான்  வீட்டுக்கு விளக்கேத்த  ஒருத்தியை கூட்டிட்டு வந்திருக்கணும். தாய்லாந்தில்  பிள்ளை வீட்டுக்காரன்தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்கணும்.

அது சரி மாலைமலரில் வந்த செய்திக்கும் என்னோட புலம்பலுக்கும்  என்ன தொடர்பு?

ஜிர்யா பர்ன் புயாயப். மறுபடி ஒருதடவை  வாய்விட்டு சொல்லிப்பார்த்துங்க. இது  பெண்ணோட பெயர். வயசு முப்பத்தி இரண்டு. அழகா இருப்பா. பொதுவா தாய்லாந்து பெண்கள் அழகாகவும் மென்மையாகவும் இருப்பாங்க. முரட்டுத்தனமான தோல் இல்லை. பஞ்சை தொடுற மாதிரி இருக்கும். காதலுடன் இருப்பாங்க. ஆனால் பெரும்பாலான  ஆளுங்க சொல்ற மாதிரி 'அந்த மாதிரியான ' தொழில் செய்றவங்க இல்ல. கெட்டவங்களும் இல்லேன்னு சொல்ல முடியாது. ஏன் நம்ம நாட்டில அந்த மாதிரியான பெண்கள் இல்லவே  இல்லேன்னு எவனாவது சத்தியம் பண்ணுவானா? துண்டு போடுறேன்.தாண்டச்சொல்லு.!

சரி விஷயத்துக்கு வருவேனாக.!

ஜிர்யா  பர்ன் புயாயப்  என்கிற அந்த பெண்  12 தடவை கல்யாணம் பண்ணி  வரதட்சணை  வாங்கி மோசடி பண்ணிருக்கா..பேஸ்புக் வழியாகத்தான்  இந்த வேலையை  அவ பார்த்திருக்கா.

பெண்ணைப் பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அவளை படிக்க வச்சு வளர்த்து ஆளாக்கி இருப்பாங்க. அதுக்காக  அந்த பெண்ணை பெத்தவங்களுக்கு மாப்பிள்ளையாக வருகிறவன்  கொடுக்கிறதுதான் வரதட்சணை. இந்த சிஸ்டத்தை பயன்படுத்தி லாரி, கார்,வாங்கி  பணம்  சேர்த்திருக்கா.பனிரெண்டு புருசன்களுடன் வாழ்ந்து  கன்னித்தன்மையை  இழந்து போனாலும்  ஒரு வகையில் பத்தினிதானே. அத்தனை பேருடனும்  சேர்ந்து குடும்பம் நடத்தி குத்து விளக்கு ஏத்தலியே!

இந்த பெண்ணுக்கும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்க்கிற  அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?

Friday, September 8, 2017

கட்டிலுக்கு அடியில் ஸ்லீப்பர் செல் ..

அடியே .என் செல்லப் பெண்டாட்டி...!
------------------------------------

"எதுக்கு பதட்டப்படுறிங்க. ரிஜிஸ்டர் மேரேஜ்தான்  முடிஞ்சிருச்சே. நாம்ப  இப்ப ரெண்டு  பேரும் புருசன் பொண்டாட்டி.எங்க அப்பாவால  நம்மள ஒன்னும் பண்ண   முடியாது!"

"உங்கப்பன் ஏடாகூட அரசியல்வாதிடி . கட்சிக்குள்ளேயே  ஸ்லீப்பர் செல் வெச்சிருக்கிற ஆளு நம்ம கட்டிலுக்கு அடியில ஸ்லீப்பர் செல் வெச்சிருந்தா  என்ன செய்றது?"

*****************************************************************************

பத்து மிளகு எண்ணி பத்திரமா எடுத்திட்டுப் போ!
---------------------------------------

" போற போது  பத்து மிளகு  எண்ணி  எடுத்தின்டு    போடா  ராகவா ?! "

"எதுக்கும்மா  ?"

" பர்ஸ்ட் நைட்ல  உன் ஒய்ப்  மருந்து கிருந்து வச்சிட்டா என்னடா   பண்றது.? பத்து மிளகு தின்னா பரம விரோதி  வீட்லேயும் விருந்து சாப்பிடலாம்னு பெரியவா  சொல்லிருக்காளே. !"

***************************************************************************

பதுங்கு  குழியில் சி.சி.டி.வி. மாட்டுனது யாரு?
-------------------------------------------

" என்ன  அமைச்சரே ..பதுங்கு  குழியில்  சி.சி.டி.வி.? யார்  போட்ட  உத்தரவு?"

"ஆட்ட நாயகி  அனுபமா  நைட் வந்து போகிற விவரம் மகாராணிக்கு  தெரிஞ்சிருச்சு. போர் அறிவிப்பு  இல்லாத காலத்தில் பதுங்கு குழியில்  மன்னருக்கு என்ன வேலைன்னு  ராணியம்மா உத்தரவு  போட்டுட்டாங்க,!"

***************************************************

எம்.எல்.ஏ. ஏன்  தப்பி ஓடினார்?
-----------------------------

தலைவர் :  " கடுமையான  காவல்  போட்டிருந்தும்  அந்த எம்.எல்.ஏ. எப்படிய்யா  தப்பிச்சி ஓடுனார்?"

மா.செயலாளர்.:  " ரிசப்ஷன்ல  வீட்டம்மா  வெயிட்  பண்றாங்கன்னு  சொன்னதும்  கால்வாய்க்குள்  குதிச்சு  தப்பிச்சிட்டார்  தலைவா!"

தலைவர் :  " அப்ப இத்தனை  நாளும்  ரூமில்  இருந்தது  யாருய்யா?"


**********************************************************
பிக் பாஸ் ஸ்டைலில் பாட்டு போடு !
---------------------------------------

அதிகாரி : " எதுக்குயா  கைதிகள்லாம்  ஆர்ப்பாட்டம்  பண்றாங்க.?"

வார்டன்:  " விடியிற   போது டெய்லி  பிக் பாஸ்  ஸ்டைலில்  சினிமாப்   பட  பாட்டு  போடணுமாம். பிரீஸ்  விளையாட அனுமதிக்கனுமாம்.

*****************************************************************  


Wednesday, September 6, 2017

எனக்கு வேண்டியது செக்ஸ் தான்டி...!

"சுத்தி எத்தனை பேர்  இருந்தா எனக்கென்ன , எனக்கு வேண்டியது  உடம்பு சுகம்.! அத  இன்பம்.காமம், வெறி  இன்னும் என்னென்ன வேணும்னாலும் சொல்லிக்கோ...டோன்ட்  கேர்....! என்னை   காம வெறியன்னு சொல்றியா..சொல்லிட்டுபோ ! செக்ஸ் என்பதை நானா உருவேத்திக்கல.என்  உடம்போடு இருக்கு. எல்லாருடைய உடம்பிலும் இருக்கு. மத்தவன் நைட்டில் பயன்படுத்துறான்.இன்னும் சிலர் யாரும் இல்லேன்னா கதவ அடிச்சிக்கிட்டு பகலிலும்   முடிக்கிறான்.நான் அப்படி ஆள் இல்ல.நினைச்ச இடத்தில நினச்ச நேரத்தில  அது  எந்த இடமாக இருந்தாலும் அனுபவிப்பேன்."

                 இப்படியும்  ஒருவன் சொல்வானா?

                 சொல்லவில்லை.! செய்தான்!

நாடே எதிர்த்தாலும் நான் சொல்வதுதான்  வேதம். நான்  செய்வதுதான்  நீதி, நேர்மை என  உலகில் எத்தனையோ சர்வாதிகாரிகள் ..நாசகாரர்கள்.!

நமக்கு சட்டென நினைவில் வருவது சண்டாளன்  அடால்ப் ஹிட்லர்தான்!

நாஜி காலத்திய  நடிகை மரியன்னே ஹோப்பே. எத்தனை சிலுக்குகள் வந்தாலும் ஒற்றைப் பக்கத்து பிராவுக்குள் அள்ளிப்போட்டு அடக்கிவிடுவாள். ஹிட்லரின்  பிரத்யேக ஹாட்பேக்  இவள்தான்.!

 சர்வாதிகாரியின் பச்சையான இச்சைகளை! வெளிச்சம் போட்டுகாட்டி இருப்பவர் மன நல மருத்துவர்  வால்கர் எலிஸ்  பில்கிரிம். நான்கு வால்யூம்கள்.

"நெப்போலியனுக்கு எதிராக  ஆஸ்திரிய மக்கள் எழுச்சியுற்று போராடிய  திரைப்படத்தை  ஹிட்லர்  பார்த்துக் கொண்டிருக்கிறார். பக்கத்தில்  நடிகை. பிரெஞ்சு ராணுவத்தினர் மலை ஏறிச்செல்கிறார்கள்.அவர்களை  தடுக்கும் வகையில் பாறைகளை  ஆஸ்திரிய மக்கள் உருட்டி விடுகிறார்கள்.

அதைப் பார்த்ததும் ஹிட்லர் தனது முழங்கால்களை  பரபரவென கைகளால்  தேய்க்கிறார். உணர்ச்சி வயப்பட்டார். அவரது கிளர்தலுக்கும் வன்முறைக் காட்சிகளுக்கும் ஒருவகை தொடர்பு இருக்கிறது. என்கிறார் மருத்துவர்.

"பெண்களை அடக்கி ஆள்வதில் எனக்கு வேகம் அதிகம்." என்பது  அந்த சர்வாதிகாரி சொன்னதுதான்!

பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின் ( 1938.) ஒரு முறை  ஹிட்லரின்  சோபாவை பற்றி   " இந்த சோபாவுக்கு தனிக்கதை உண்டு. அது அந்த 'நண்பருக்கு' மட்டுமே தெரியும்."என்று கிண்டலாக  சொல்லி இருக்கிறார்.

ஆக  ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்யலாம் .அது  இருட்டு வேலைகளுக்கும் பயன்படும்.எவனும் கேட்கமுடியாது. கேட்டால்  கொலையும் செய்யலாம் என்பதுதான் இதிலிருந்து நாம் அறியும் நீதி. 

Saturday, September 2, 2017

மனிதனுக்கு வேட்டியும் சட்டையும் அழகு.!

"திறமையும் தகுதியும் இருந்தும்  கை அருகில் வந்த கல்வியை  நீட்  என்கிற  வல்லரக்கன் எடுத்துக்கொண்டானே ! நீட்  முறையினால் எத்தனை ஏழை, எளியவர்கள் பாதிக்கப்படுவார்கள். தன்னுடைய மரணமாவது  அந்த வல்லரக்கனுக்கு முடிவு கட்டாதா?"

இப்படி  எண்ணித்தான் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாளோ எனது  சோதரி அனிதா?

நினைத்துக்கொண்டே  கண்ணயர்ந்து விட்டேன். கடவுள் வந்தார்.

"என்னடா  உறக்கம்? உங்களுக்கெல்லாம்  எதுக்குடா மீசை?" என்று  கேட்டார்.

"அதுதானே ஆண்டவா ஆண் மகனுக்கு அழகு?" என்றேன்.

"பேச்சிலேயே  தேன் வார்க்கும் மனிதன்தானே நீ! இப்படித்தான்  சொல்வாய். "அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும்  உச்சத்திற் கொண்டாரடி---கிளியே ஊமைச்சனங்களடி" என்று  மீசையை  முறுக்கிவிட்ட  பாரதி  உன்னைப் போன்றவர்களை  நினைத்துத்தான் பாடினானோ என்னவோ? மனிதன் வேட்டியும் சட்டையும் அணிவது அழகுக்காகவா?"

"என்ன கடவுளே! அவைதானே  எங்களின்  மானம் காக்கிறது?"

"ஓ.....அங்கங்களை  மறைப்பதில்தான்  உனது மானம் காக்கப்படுகிறது  என்கிற  நம்பிக்கை. நீ ஒரு பேடி ."

"கடவுளே! எல்லை மீறுகிறாய். உடைத்து நொறுக்கிவிடுவேன்!" ---எனது கண்களில் தெரிந்த உக்கிரம் பார்த்த இறைவன் ஏளனமாக சிரிக்கிறான்.

என்னை கோழையாக பார்க்கிறவனுக்கு எதுக்கு "ர் "? 'ன்" னே போதும்!

"வாள் எடுக்கத் துணிவற்றவன்   பேடிதான். அவனுக்கு மீசை இருப்பதால் வீரனாகி விட முடியுமா?  . கரப்பான் பூச்சியே.!" --மறுபடியும் ஏளனச்சிரிப்பு.எகத்தாளம். இறைவன் ஏகடியம் பேசுகிறான்.என்னடா  காலக்கொடுமை.?

"இப்போது உனக்கு என்னதான் வேண்டும்? எதுக்கு என் உறக்கத்தை  கெடுத்து  வார்த்தையாடுகிறாய்?"

"உறக்கம் கெடுகிறது என கவலைப் படுகிறாய்.  உனக்கு ஒன்று  சொல்கிறேன். பாரத யுத்தத்தில் பீஷ்மர்    சாரதியாக  இருக்கிற  கிருஷ்ணனைப்  பார்த்து  கை கூப்பியபடி ' கிருஷ்ணா ! யாரோ ஒரு நபும்சகன் கையால்  சாவதை விட  உன் கையால் கொன்று விடு!' என கெஞ்சுவார்..பீஷ்மருக்கு  இனம் காண முடிந்தது. உனக்கு யாரையும் இனம் காண முடியவில்லை. விடிந்தால் நீ ஓர் அடிமை. .அதனால் கதவைத் திறக்காதே என  எச்சரிக்கவே கனவில் வந்தேன்." என்றார்.

கனவு கலைந்தது. ஆனால்  பொருள் புரியவில்லை.

Friday, September 1, 2017

அனிதாவின் தற்கொலையும் ,தமிழக அரசும் தலைவர்களும்!

நல்ல வேலை இன்னும் எவனும் டெங்குவால் அனிதா செத்துவிட்டதாக சொல்லவில்லை. ஒரு வேளை நாளைக்கு  வயிற்று வலி தாங்காமல்  மந்திரியோ தந்திரியோ யாராவது ஒரு ஆள்  சொல்லலாம்.

'நீட் தேர்வு தொடர்பாக அனிதா தற்கொலை செய்யவில்லை. வறுமை காரணமாக செத்து விட்டதாக " யாராவது ஒரு மாதரசி வாய் திறந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஒரு தலித் மாணவிக்கு இருந்த நெஞ்சுரம் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? இழவிலாவது  ஒன்று சேர்ந்து  களை எடுக்க மாட்டிங்களா? அடப் பாவிகளா?

"அவனா, இவனா ,எவன் பின்னால் போவது என்று திசை தெரியாது தவிக்கிற அரசியல்வாதிகளை நம்பி நாசமாகிவிட்டது தமிழ்நாடு. அரசாங்கம் எங்கே இருக்கிறது என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடினால் அங்கு ஒரு புழு நெளிகிறது. அந்த புழுவை குச்சியை வைத்து விளையாடி க்கொண்டு ஒரு  சாமியார்  நோண்டிக் கொண்டிருக்கிறார். அந்த புழு அவரது தூண்டிலுக்கு  தேவை.

அதனால் தமிழகத்தில் விவசாயம் செத்தாலும் கவலை இல்லை. நச்சு பரவி நிலம் அழிந்தாலும் கவலை இல்லை..

நாங்களே  ஒட்டு வேலைக்காக  கோடிகளில் வியாபாரம் பேசி வருகிறோம். இந்த பிச்சாத்து நீட் தேர்வினால் யார் செத்தால் எங்களுக்கு என்ன? நாடு  கெட்டாலும் நாங்கள்  ராஜாக்களாகவே  இருப்போம். மக்கள் என்றைக்கு  காசு வாங்கி எங்களுக்கு ஓட்டுப்போட்டாங்களோ அன்றே அவர்கள் எங்களுக்கு  அடிமைகள். எங்களது விசுவாசிகளுடைய  ஏவல் நாய்கள் என்கிற அளவுக்கு  தமிழக அரசியல் கெட்டுப் போய்க்கிடக்கிறது.

அரசுக்கும் கவலை இல்லை. அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை. எதிர்க்கட்சிகளுக்கும் அறிக்கை விடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

Tuesday, August 29, 2017

'பெரிய ' சாமியாரால் ஆசிர்வதிக்கப்பட்ட 'சின்ன' சாமியார்..

எண்ணூறு  ஏக்கர் பரப்பில் ராஜமாளிகை.இந்தியாவில் மிகப்பெரிய வன்முறை தலை விரித்து ஆடியதற்கு  காரணமாக இருந்த  சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் இன்சான்  வாழ்வதற்காகவே  கட்டப்பட்டது. இன்சான் என்பதற்கு  'மனிதன்' என அருத்தம். பெயருக்குப் பின்னால்  சாதிப்பெயர்  இடம் பெற்று விடக் கூடாது என்பதற்காக  இன்சான்.

பாராட்டலாம்.

ஆன்மீகம் , அரசியல் இரண்டிலும் இப்படி  பாராட்டுகளை  வாங்கி பட்டயம் போட்டுக்கொண்டவர்கள்தானே குபேரர்களாக  வாழ்கிறார்கள்..பகலில் ஒரு  முகம். இரவில் இன்னொரு முகம்  என இரட்டை வாழ்க்கை.

  மார்பில்   உருத்திராட்ச  மாலைகள் பகலில்  உருண்டால்  இரவில் பெண்களின் மார்புகள்  உறுத்தும்.அவர்கள்தான்   மனிதர்களில் புனிதர்களாம் !.

இரண்டு  பெண்கள் எழுதிய மொட்டைக்கடுதாசிகளை  காவல்துறை, நீதித்துறை இரண்டுமே  புறக்கணித்த நிலையில்  அன்றைய  இந்தியப்  பிரதமர்  வாஜ்பாய் என்ற மாமனிதர் எடுத்த நடவடிக்கையினால்தான்  குர்மீத் ராம் ரகீம் இன்சானுக்கு இன்று  இருபது ஆண்டு சிறைவாசம் கிடைத்திருக்கிறது.  பாலியல் பலாத்காரம்.வன்புணர்வு.எத்தனை ஆண்டுகள்  இழுபறி?

பாலியல் வன்முறை மட்டுமின்றி ஆண்களை  காயடித்த குற்றமும்  உண்டு.

தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  பாதுகாப்பாக  இருந்தவர்தான்  இந்த இன்சான்.இதனால் ஹரியானாவில் மிகப்பெரிய சக்தி பெரிய சாமியாருக்கு.. இவரின் ஆதரவு  முதலில் காங்கிரசுக்கும் பின்னர் பாஜகவுக்கும் பயன்பட்டது.

கவிஞர் , பாடகர், நடிகர், என பன்முகம். சமூகப் பணிகளுக்கான  விருதுகள். உலக அளவிலும் ! இப்படியெல்லாம் வாழ்ந்தவர்தான்  இன்று காராக்கிரகத்தில்.!

அவரது  இடத்தில் அடுத்து அமரப்போவது  அவரது  ஹனிபிரீத் இன்சான். பிரியங்கா தனேஜா என்கிற பெண்ணுக்கு  ஹனி பிரீத் இன்சான் என பெயர் மாற்றி தனது நிர்வாகத்தைக் கொடுத்தவரே   பெரிய சாமியார் குர்மீத் சிங்தான்! பெரியசாமியாரின்  திட்டங்களுக்கு பின்னால் இருந்தது இந்த சின்ன சாமியார்தான். மணமாகியும்  கணவனுடன் வாழாமல் சின்ன சாமியார்  தனித்தே வாழ்ந்து  சாமியாருக்கு  செல்லமாக  இருந்து வருகிறார். பெரிய சாமியாரின்  சமுதாய சேவை அமைப்பை  நிர்வகிப்பதே  சின்ன சாமியார்தான்.பெரிய சாமியாருக்கு எல்லாமுமாகவே  இருப்பவர்தான் ஹனி.  சாமியாருக்கு மனைவி வழியாக  வந்த இரண்டு பெண்ணும் ஆணும் ஹனியின் உறவுகளாகவே  பார்க்கப்படுகிறார்கள்.

தயை செய்து தமிழக அரசியலுடன் ஒப்பிடாமல் படியுங்கள்.  


Sunday, August 27, 2017

அடடா ..பெண்களில்தான் எத்தனை விதம்?

"கண்ணுக்குள்  பெண்ணை வைத்துப் போற்று..." என்கிறான் ஒரு கவிஞன்.

"பெண்ணை நம்பாதே, கண்களே பெண்ணை நம்பாதே" என்பதும் ஒரு கவிஞன்தான்.

எழுபது வருடங்களுக்கு முன்னர் சமைஞ்ச பெண்கள் பிற ஆண்கள் முன்னாடி  வர மாட்டார்கள். முறைப்பையன் என்றால் கதவுகளுக்குப் பின்னாடி நின்று  பதில் சொல்வார்கள். உறவுகளின் வீட்டுக்கு சேதி சொல்லப்போகும் எனக்கு  இப்படி அனுபவம் அதிகம்.!

ஆனால் காதல் மாற மாற எல்லாவகையிலும் மாற்றங்கள்.

நான் பள்ளி செல்லும்போதுதான் என் மனைவியை  அடையாளம் கண்டேன்.

காதல் என்பது  மதுரை  ராமநாதபுரம் (  காமராஜர்.) சாலையில் மலர்ந்தது. அவள் முனிசிபல் உயர்  நிலைப்பள்ளி. ராமநாதபுரம் சாலை. என் அத்தான் வீடு அதே சாலையில்.
!
அங்கிருந்து மதுரைக்கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்கு நடந்து செல்வேன். எதிர்சாரியில்   பள்ளிக்கு அவள் வரும்போது இருவருக்கும்  கண்கள் மலர்ந்து  அகத்தில் காதல்... அடைகாத்து திருமணத்தில் முடிந்தது.

ஆனால் இந்த காலத்தில் மனங்களின் மாற்றம் மணவாழ்வில் மாற்றமும் ஏமாற்றமுமாக!

லிவ் இன் ரிலேஷன்ஷிப்.

தாலி கட்டாமல் இருவரும் இணைந்தே வாழ்வது...

தாலி கட்டி வாழ்ந்து குழந்தை பெற்ற பின்னரும் பிடிக்காது போனால் டைவர்ஸ். இன்னொரு ஆணை அல்லது பெண்ணை விரும்பினால் அவர்கள்  கல்யாணம் செய்து கொள்ளலாம்.

இது முன்னேற்றமா, கலாச்சார சீரழிவா? காலத்தின் கட்டாயமா?

பிரேசில் நாட்டவர் டேனியல்லி  கட்ஸ்யூ. காதலன்   காலே..! இருவருக்கும் அன்றுதான் கல்யாணம்.

மண ஆடையில்  அழகுத் தேவதையாக  டேனியல்லி. பக்கத்தில்  காதலன் காலே.

திடீரென  ஆடை தளர்த்தி உள்ளாடை விலக்கி மூன்று மாதக் குழந்தைக்கு  பால் புகட்டுகிறாள்.

"இந்த மகவு பிறந்து மூன்று மாதம் ஆகிறது. ஆண் குழந்தை. எங்கள் இருவருக்கும் பிறந்தது. குழந்தை பசித்து பாலுக்கு அழுதால் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பால் புகட்டலாம்.அதில் இருக்கிற சுகம் வேறெதிலும் இல்லை" என்று போட்டோவுக்கும் போஸ் கொடுக்கிறாள் டேனியல்லி. மணமகனாக பக்கத்தில் நிற்பவனுக்கு மகிழ்ச்சி. தாய்ப்பால் கொடுத்தால்  அழகு கெட்டுவிடும் என்று புட்டிப்பாலால் பிள்ளை வளர்க்கும்  தாய்கள்  உள்ள காலத்தில் இப்படியும் ஒருவள்.!

இவளும் பெண்தான்.

இன்னொரு பெண்ணை பற்றியும் சொல்வேன்.

மேக்கா குக்கொவா. ரஷ்ய பெண். நீச்சலாடை மாடல் .வயது  28.

இங்கிலாந்தின் மகா கோடீஸ்வரன்  ஆண்ட்ரு புஷ். வயது  நாற்பத்திஎட்டு. பிரிஸ்டல் நகரத்தில் இருக்கும் புஷ்சினுக்கு சொந்தமான நகைக்கடையில்  பணியாற்றிய குக்கோவாவை  பிடித்துப் போனதால்  தனது காதலியாக  ஏற்றுக் கொண்டார். அவளும் இணங்கி இரண்டரை ஆண்டு காலம் வாழ்ந்து விட்டாள்.

கோடீஸ்வரனுக்கு குக்கோவாவின் உடல் சுகம் சுவையற்றுப் போனதோ என்னவோ புதியவளை  தேடிக்கொண்டு  அதை அவரின் இன்ஸ்டாகிராமிலும்  வெளியிட்டுவிட்டார்.

ஆண்ட்ருஸ் இல்லாத நேரத்தில் அவரின் வீட்டுக்குள் கள்ளத்தனமாக  புகுந்த குக்கோவா தனது  உடமைகளை எடுத்துக்கொண்டு திரும்புகிறபோது  எதிர்பாராதவிதமாக  புஷ் தனது புதிய காதலியுடன்  வந்துவிட்டார்.

"அவர் இன்னொருத்தியுடன் வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை. தலையில் இரண்டு தடவையும் தோளில் ஒரு முறையும் சுட்டுவிட்டேன். செத்துப்  போனார்." என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறாள்.

இவளும் பெண்தான்!


Saturday, August 26, 2017

மனைவியை மிரட்ட வைப்பாட்டி வீட்டில் தங்கினானாம்..!

"எடப்பாடியை நீக்கும்வரை புதுச்சேரியை விட்டு அகல மாட்டோம்.!" என்கிறார்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்..

பொண்டாட்டியை  மிரட்டுவதற்காக வப்பாட்டி வீட்டில் படுத்துக் கிடந்தானாம்.தைரியமில்லாத புருசன்.

அதைப்போல இல்லையா?

நம்மிடம் ஓட்டு வாங்கி நமக்காக சேவை செய்வதாக சட்டசபைக்கு  சென்றவர்கள் அண்டை மாநிலத்தில் ஸ்டார் ஹோட்டலில்  'அடைபட்டு' கிடப்பது நமக்கு அசிங்கமாக இருக்கிறது. அங்கே உல்லாசம் அனுபவிக்கிறார்கள்.ஆனால்...

உள்ளூரில் ஓராயிரம் பிரச்னைகள். மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.
பன்றி, டெங்கு என்று விதம் விதமான நோய்கள். மாணவர்களுடன் விளையாடும் நீட் தேர்வு.விவசாயிகள் பிரச்னை என எத்தனையோ!

அவர்களின் சொந்தக் கதைக்காக ,அவர்களது நன்மைக்காக கோடிக்கணக்கில் விலை போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. ஆனால் எதைப்பற்றியும் கவலை  இல்லாமல் சுப்பிரமணியர் மயில் வாகனத்தில்  உட்கார்ந்திருப்பதைப்போல மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சி செய்தபோது "மைனாரிட்டி அரசு " என்று மூச்சுக்கு மூச்சுக்கு  அன்றைய முதல்வர் ஜெயலலிதா சொல்லி வந்தார். இன்று உண்மையில்  மைனாரிட்டியாக இருப்பது எடப்பாடி அரசுதான்.

சட்டமன்றத்தில்  பெரும்பான்மையை  காட்டுவதற்காக  குட்கா பிரச்னையில் கிடக்கும் உரிமைப் பிரச்னையை பயன்படுத்தி அவர்களை சட்டமன்றத்துக்கு  வராமல் செய்ய முனைகிறது.

குட்கா பிரச்னையில் திமுக யார் மீதெல்லாம் குற்றம் சாட்டியதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என குற்றம்  சாட்டப்பட்டவர்கள் இன்னும் அவரவர் பதவியில் இருக்கிறார்கள்.

ஆனால் குற்றத்தை சொன்னதால் அதற்கான ஆதாரமும் காட்டியதால்  திமுக மீது நடவடிக்கை என்றால்....

இதுதான் ஜனநாயகமா?

சென்னை உயர் நீதிமன்றம் எத்தனை தடவை  கண்டனம் தெரிவித்திருந்தாலும் அதைப்பற்றி இந்த அரசு கவலைப்பட்டதில்லை. நீதியை மதிக்காத இந்த அரசு என்பது மக்களுக்கும் தெரிந்திருக்கிறது.

களிமண் பிள்ளையார்தான் வைக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம்  சொன்னதை காவல்துறை கண்காணித்ததா? மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனை செய்ததா?

வழக்கம் போல பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மாவில்தான் பிள்ளையார்  ஜனித்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் என்றால் தினகரனின் காமடி  கவுண்டமணியும் வீழ்த்தி விடும் போலிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர்  பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகவும் சின்னம்மா ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதாகவும் அறிக்கை வாசித்திருக்கிறார்,

"உனக்கு எந்த அதிகாரமும் இல்லை .வெட்டியாய் எதுக்குப்பா மண்வெட்டியால்  பாறையை வெட்டுறே ?"என்கிறது எடப்பாடி அணி.இப்படி காமடி நாடகம் நடக்கும் தமிழகத்தில் ஒரு நல்லரசு அமைவதற்கு ஆளுநர்  நடவடிக்கை எடுத்தால் நல்லது.

Friday, August 25, 2017

இது என்ன அதிசயம்?

யாராவது ஒருவனுக்கு ஆறாவது விரல். ஆச்சரியம்!

அண்ணன் உயரம். தம்பி குள்ளன். ஜீவ அணுக்களின்  சித்து விளையாட்டு.!

நான்.கருப்பு. நீ சிவப்பு. அதனால் என்ன  குறை? நமது  பிள்ளை  அழகு!

அவர் முற்றும் துறந்த துறவி. ஆனாலும் அர்த்த சாம பூஜை  நடக்கும்!

இவையெல்லாம் நாம் அன்றாடம் கேள்விப்படும் செய்திகள். சராசரி மனிதன்  கவலைப்படுவதில்லை.ஆனால் சில செய்திகள் நம்மை சுரண்டியபடியே  இருக்கும்..காரணம் தேடும். என்னை சுரண்டிய சில...

கேரளத்தில் கொதினி என்பது சிற்றூர். இரண்டாயிரம் வரை  ஜனத்தொகை. இங்கு 400
செட்   டிவின்ஸ் . இரட்டையர்கள்.

டாக்டர்களே  மூச்சடைத்து  போயிருக்கிறார்களாம். 

குஜராத் மாநிலத்தில் பிரகலாத ஜானி என்றொருவர். தற்போது  உயிர் வாழ்கிறாரா என்பது தெரியவில்லை. இவர் 1940-லிருந்து சோறு , தண்ணீர்  இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்.

இது எப்படி சாத்தியம்? எல்லோரும் சந்தேகம் கொள்வது நியாயம் தானே?
ஆய்வாளர்களும் டாக்டர்களும் 24க்கு ஏழு  அறையில் அடைத்து  ஆய்வு செய்திருக்கிறார்கள்.சி.சி.டி .வி. கேமராக்கள் வழியாக  கண்காணித்திருக்கிறார்கள். பத்து நாட்கள் .பட்டினியின் வலி, நீர்சத்து எதுவும்  பாதிக்கவில்லை.

அவர் அம்பாளின் பக்தர்.அதனால் சிகப்பு சேலையை அணிந்து கொண்டிருக்கிறார். அவரை அந்த மாநிலமே கொண்டாடி இருக்கிறது. அவரால் பட்டினி கிடக்க முடிந்தது எதனால்?

டாக்டர்களின் கருத்துக்கள் மாறுபட்டிருக்கின்றன.

இவை போன்று மேலும் பல ஆச்சரியங்கள். 

Thursday, August 24, 2017

அதிமுக பற்றி நாஸ்டர்டாம்ஸ் என்னய்யா சொல்லிருக்கிறார்?

நமது ஊர் கோடாங்கிகள்  சம்மணமிட்டு சட்டை அணியாமல் கோடாங்கி  அடித்து குறி சொல்வார்கள்..

வியர்க்கும். விழிகள் சிவக்கும் மிரட்டல் உருட்டல் எல்லாமே இருக்கும். நாக்கை மடித்து கடித்தபடி உறுமுவார்கள். அப்படி என்றால் குறியில்  கோளாறு இருக்கப்போகிறது என்பது  அனுபவசாலிகளுக்கு மட்டுமே  தெரிந்த ரகசியம்..

"சரி கோடாங்கி ..கோழி ,சாராயத்துக்கு  அடி போட்டுவிட்டான் " என்று  சுதாரித்து கொள்வார்கள்.

ஆனால்  நான் அறிந்தவரை எந்த கோடாங்கியும் அரசியல் பற்றி அலசியதில்லை. சர்வதேச அளவில் பிரெஞ்சு  கோடாங்கியான நாஸ்டர்டாம்ஸ் என்பவர் மட்டுமே அரசியல் , மற்றும் பேரிடர்  தொடர்பாக  ஆருடம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

அவர் தமிழக அரசியல் மாற்றங்கள் குறித்து எதுவும் அவிழ்த்து  விட்டு  இருக்கிறாரா என்று எனக்கு  தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்த்து விட்டேன்.

"தெரியலே" என்று  ஒற்றை வார்த்தையில்  பதில்.

"அதிமுக .பொதுக்குழு கூட்டுவோம் என்கிறார்களே? நடக்குமா?"

"எப்படிவே  நடக்கும்? பொதுச்செயலாளர் சசிகலா தானே  கூட்ட முடியும். அவரை  நீக்கனும்னுதானே  தீர்மானம் போடப்பார்க்கிறாங்க.   அந்தம்மா  எப்படி பொதுக்குழுவ கூட்டும்?"என்று என்னிடமே கேட்கிறார்.

"அது செல்லாதுன்னுதானே  ஓபிஎஸ்-எடப்பாடி வகையறா  சொல்றாங்க? அதுவும் குளோஸ்டு டோர் மீட்டிங் தான் நடக்கனுமாமே." இப்படியாக எங்கள் பேச்சு தொடர்ந்தது.

"அதான்வே எனக்கு புடிபடல. சசியையும் குனிஞ்சி பாதம் தொட்டு கும்பிடு போட்டுதானே இந்த ரெண்டு பேரும் கவசம் பாடினாங்க..சின்னம்மா சின்னம்மான்னு  ஏத்தி விட்டாங்களே!  அந்தம்மா இப்ப ஜெயிலம்மா .அதான்  இவங்களுக்கு குளிர் விட்டுப்போச்சு..

"அதுவும் சரிதான் .பொதுக்குழுன்னா  கைகலப்பு  சட்டை கிழிப்பு  வேட்டி உருவல் இதுக்கெல்லாம்  வாய்ப்பு இருக்கலாம்ல?.!"

"ஸ்லீப்பர் செல் யாருங்கிறது தெரியவும்  வாய்ப்பு  இருக்கு.ஆனா  தினகரன்  மூவ் எப்படி இருக்கும்கிறது தெரியல. தினகரன் ஆதரவு எம்.எல்,ஏ.க்கள்  மீது  நடவடிக்கை எடுக்கனும்னு  அதிமுக கட்சி கொறடா நோட்டிஸ் கொடுத்திருக்கார் சபாநாயகர்.அப்படின்னா எதையும் சந்திக்க நாங்க தயாராகத்தான் இருக்கிறோம்னு தானே அர்த்தம்?"

"ஒன்னும் தெரியாத அப்பாவிகள்னு வெற்றிவேல் எம்.எல்.ஏ .தங்களை பத்தி சொல்லி இருக்கிறதையும் கவனிக்கணும். இப்படியா  பச்சபுள்ளைகளா இருப்பாங்க.   செக்ரடேரியட்டுக்குள்  ஜெயா டி.வி .வரக்கூடாதுன்னு  சொன்னதாக ஒரு பரபரப்பு இருக்கு. என்னதான்  நடந்தாலும்  இந்த அரசாங்கத்தை பிஜேபி காப்பாத்திடும். தினகரனை மிரட்டி காரியத்தை  சாதிக்கும்னு சொல்றாங்க."

Wednesday, August 23, 2017

கவர்ச்சியின் உச்சமே ஆமி ஜாக்சன்!

பெண்ணின்  முகம் பார்த்து பேசுகிறவர்களும்  கள்ளத்தனமாக  ரசிப்பது  கண்களை இல்லை.!

மேடு பள்ளங்களை மேய்வதும்  ஒரு வகையில் ரசனைதான். படைப்பின்  அழகு  ஆராதிக்கப்படவேண்டியது.

"மதர்த்த மார்பகங்கள்"என்பான் கவிஞன். 'அவளுக்கு  ஏராளமான  மார்பகங்கள்" என்று சுஜாதா எழுதியதையும் ரசித்தார்களே! 'பசுமையின்  மணம் ' சாரு நிவேதிதாவின் 'ஜீரோ  டிகிரி'யில் பக்கத்துக்கு பக்கம் மணத்தது.  இன்றைய சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கம் மார்பகம் தானே! 'கிளிவேஜ்' காட்டாத நடிகைகள் இருக்கிறார்களா?

ரஜினிகாந்த் நடிக்கும் ஷங்கரின் படத்தில் ஆங்கிலேய நடிகை ஆமிக்கும்  முக்கிய பங்கு உண்டு. அவர் தற்போது ஆங்கில இதழ்   எப் எச் எம் என்கிற  இதழுக்கு  கொடுத்திருக்கிற  'போஸ்' பலரின் விழிகளை உயர்த்தி விட்டது. இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த நடிகைக்கு அது ஒன்றும் அசிங்கம் அல்ல.பிகினி தேசம்  தந்த கட்டுடல் தேகம்.

அது ரசிப்பதற்கே!

தற்போது  தங்களின் உதடுகளை  அறுவை சிகிச்சை வழியாக அழகு படுத்திக் கொள்கிறார்கள்.அனுஷா ஷெட்டி, இலியானா, டாப்சி  ஆகியோர்  உதடுகளை அழகு படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை அது லிப்-லாக் காட்சிகளுக்கு பயன்படலாம்.

குப்பைக்குள் போன ஜெயாவின் கொள்கைகள்!

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பிஜேபியின்  ஆட்டம் எதுவும் அரங்கேற  முடியவில்லை. சாண் இடம் கொடுத்தாலும் சமுத்திரமே கொள்ளை போய்விடும் என்பதைஅறிந்து அவர்கள் ஒரு இடத்தில் கூட ஜெயித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். இதனால்  அவர் ஊழல்  குற்றம்  புரியாதவர் என்றாகிவிடாது.அது  நீதியின் தீர்ப்பு.!

இரும்பு மனிதர் என சொல்லப்படுகிற மோடியுடன் தைரியமுடன் மோதிய வலிமையான பெண் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

 அவரின் மறைவுக்குப் பின்னர்தான்  நிலைமை தலை கீழாக  மாறி இருக்கிறது. அவரது  மர்ம மரணம் குறித்து மக்களுக்கு இருக்கிற சந்தேகத்தின் பலனை அறுவடை செய்ய தயாராகியது  பி.ஜே.பி.! .அதற்கு  கதிர் அருவாளை  கொடுத்து  உதவுவதுதான்  எடப்பாடி ஓபிஎஸ் .அணி. அதுதான் சோகம்.

கமண்டலமும்  காவி உடையும் சீருடை என்றாலும் ஏற்கத் தயாராகி இருப்பவர்கள்தான்  ஆட்சியில் இருப்பவர்களும்!.

பஞ்சணையில்  மனைவி எத்தகைய நிபந்தனை விதித்தாலும்  'ஏன், எதற்கு " என்று கேட்காமல்  தேக சுகம்  தேடுகிற கணவனின் நிலையில்தான்   இன்றைய  அதிமுக அரசு இருக்கிறது.

 அவர்களுக்கு  தங்களின்அ ரசு காப்பாற்றப்பட வேண்டும்.!

தினகரனும் திவாகரனும் இணைந்து எத்தகைய முடிவுகளை  எடுத்தாலும்  அதை முறியடிப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தியின்  உதவி எடப்பாடிக்கு  கிடைக்கும்.இவருக்கு மத்திய அரசு கை கொடுக்கிறது .

தலைமையோ  சிறைக்குள்.! ஆலோசனை சொல்வதற்கு ராஜகுருவும் இல்லை.! அதனால் ஆளுக்காள் அறிக்கை விடுகிறார்கள்.

" தமிழக அரசுக்கு எதிராக  எதிர்க்கட்சிகள் நடத்துகிற  போராட்டத்தில்  நாங்களும்  பங்கேற்போம்" என்று சொல்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். எந்த குழுவை கூட்டி இத்தகைய முடிவை எடுத்தார்?அந்த போராட்டத்தை நடத்துவது திமுக என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

ஜெயலலிதாவின்  ஜென்ம விரோதி திமுக!. ஜெ.வை போல  கடுமையாக  யாரும் திமுகவை விமர்சித்தது இல்லை. அத்தகைய கட்சியுடன் கை கோர்க்கத்தயார் என்றால் ஜெயலலிதாவின்  மொத்தக் கொள்கைகளும்  குழிக்குள் போய்விட்டன என்றுதானே அர்த்தம்.

அபாயத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு ஜென்ம விரோதியும்  சிநேகிதர்கள்தான். அவர்களுடன் பால் பாயாசத்துடன்  பந்தியில்  சாப்பிடுவது  என்ன பஞ்சமா பாதகமா?

சசிகலா போட்ட கணக்கும் தினகரன் போட்ட கணக்கும்...!

"கெட்டவர்கள் தங்களுக்கே பொருந்தக்கூடிய சட்டத்தை  உருவாக்கிக்   கொள்கிறார்கள் "

சொன்னவன் பிளாட்டோ..தத்துவ ஞானி .

இந்தியாவின் இன்றைய நிலைமைக்கும்  பிளாட்டோ சொன்னதற்கும்   எந்த சம்பந்தமும் இல்லை என்று  இந்திய இறையாண்மை  மீது  சத்தியம்  பண்ணி விட்டு  சொல்ல விரும்புகிறேன்.

எடப்பாடியின் ஆட்சியின் மீது  கழுவிக் கழுவிக் குற்றப்பத்திரிகை  வாசித்த  அண்ணன் ஓபிஎஸ் அணியினர் இணைந்து பதவிகள் பெற்றதும், அதற்காக  ஓபிஎஸ்.க்கு பிரதமர் மோடி ஆசிர்வாதம் செய்ததும்  அடடே காட்சிகள்.

எடப்பாடியார் மீதும் அவரை சார்ந்த  கட்சி வி.ஐ.பி.கள் மீதும்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காள பெருமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக  குற்றம் சாட்டப்பட்டதாக  ஒரு நினைவு. தமிழக அரசு தலைமை செயலராக  பணியாற்றிய ராம் மோகனராவ் வீடு, மற்றும் அவரது மகன் இதர உறவுகள்  வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதாகவும் ஒரு  நினைவு. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு  நடந்ததாக பத்திரிகையில் படித்த ஞாபகம். நத்தம் விசுவநாதன் பெயரும்  இதில் இருந்ததாக சொன்னார்கள். இப்படி எத்தனையோ நினைவுகள்.

எல்லாமே நீத்தார் நினைவுகள்.  

குழிகளை தோண்டினால் வெறும் எலும்புகளே!

"தனி மனித சிந்தனை இல்லாமல் சமூக சிந்தனையோடு மனிதன் வாழவேண்டும்" என்றான் அரிஸ்டாட்டில்.

மக்களின் நினைவாற்றல் நீர்க்குமிழியின் ஆயுளை விட குறைவே.!

அதனால் அவர்களுக்கு அவ்வப்போது  நினைவூட்டுகிறார் கமல்ஹாசன். அது அவரின் சமூக சிந்தனையின் வெளிப்பாடு..

பாவம் சுமக்காதீர்கள் என்று சொல்வது  என்ன  தேச விரோதமா?

ஊடக நண்பர் மைக்கை நீட்டி "கமல்ஹாசன் சொல்லும் குற்றச்சாட்டுகளை  மறுக்கிறீர்களா " என்று கேட்டால் அத்தனை அமைச்சர்களும் கேளாக் காதினராக காரின் கண்ணாடிகளை ஏற்றி விட்டுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருத்தர்  "அவனுக்கென்ன பதில் சொல்ல?" என்று  மரியாதையை மென்று துப்புகிறார்.அவர்களைத்தான் 'மாண்புமிகு' என்கிறோம்.

உண்மையைச்சொல்வதென்றால் "இந்த பீரியடு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை  பேரதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். அவர்களின் மதிப்பு  பிளாட்டினத்தின் பண மதிப்பை விட பன்மடங்கு உயர்வு. மன்னர்களை விட சக்கரவர்த்தி வாழ்க்கை. அத்தனை பேரும் சக்கரவர்த்தி திருமகன்கள்.!

"எடப்பாடியாரை  மாற்ற வேண்டும்'" என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருப்பவர்கள்  கட்சி தலைமையிடம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். அவர்களது சட்ட மன்ற பார்லிமெண்டரி குழுவின் தலைவரிடம்  கொடுக்காமல் ஆளுநரிடம் கொடுத்தது ஏன்?

பத்தினித்தன்மை காப்பவர்கள் என்கிற நம்பிக்கை இருந்திருக்குமேயானால்  அவர்களை புதுவையில் காவலில் வைத்திருக்க வேண்டாமே? அந்த உயர்தர  விடுதியில் அறையின் ஒரு நாள் வாடகை எட்டாயிரமாம். தனியார்  அலுவலக  தொழிலாளியின் ஒரு மாத சம்பளம்.!

ஆக அவர்களைத் தனியாக விட  முடியவில்லை. அவர்களை நம்ப முடியாது  என்று தினகரன் நம்புகிறாரா தினகரன்?

"தனியாக விட்டுப்பாரேன்.அவர்களை ஈரத்துணியால் கோழியை அமுக்குவதுபோல அமுக்குகிறோம்" எடப்பாடி அணி  என தயாராக இருக்கிறது.

இந்த நிலையில்தான் சசிகலாவின் சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து நான்காண்டு ஜெயில் தண்டனையை  உறுதி செய்திருக்கிறது. அப்படியானால் ஒரு குற்றவாளியை  பொதுச்செயலாளர் என்று ஒப்புக்கொள்ள  தொண்டர்கள் தயாரா என்பது இனிதான் தெரிய வரும்.தினகரன் மீதான வழக்குகளின் நிலை எப்படி இருக்கும் என்பது  அவரது அணுகுமுறையை  பொருத்து அமையலாம்.

"சட்டரீதியான  எல்லா கதவுகளும்அவர்களுக்கு  அடைபட்டு விட்டன." என்கிறார்கள்.

ஆக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் 'மனநிலை 'யில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எஞ்சிய நான்காண்டு  கால பதவியை இழக்க மாட்டார்கள்.

இதனால் எடப்பாடி-ஓபிஎஸ் பதவிகளுக்கு ஆபத்து இல்லை என்றே  சொல்லலாம். சசிகலாவை  பொதுச்செயலாளராக  தொண்டர்கள் ஏற்பார்களா என்பதும் சந்தேகமே.!

வால் அறுந்த நரியினால் வளைக்குள் இருக்கும் நண்டை பிடிக்க முடியாது.

''இவன் போட்ட கணக்கு அவள் போட்ட கணக்கு இரண்டுமே தவறாகியது"
என்று  கே.பி.எஸ்..பாடியது  நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

Sunday, August 20, 2017

பிஜேபி---அதிமுக கூட்டணியில் ரஜினி,ஜி.கே.வாசன்,ராமதாஸ் ?

எத்தகையவர்கள்  நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை  இப்பவும்  தெரிந்து கொள்ளவில்லை என்றால் மக்கள் சிலுவை சுமப்பதில் தப்பு இல்லை  இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு ஜெ.வை ஆட்சியில் அமர்த்தினார்கள்.

அந்த அம்மாவின் மரணம் மர்மமாகியது. கட்சியின் இன்றைய நிலவரம்  மூன்று அணிகள். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை  ஜெ.தன்னுடைய  சர்வாதிகாரத்தினால்  கைப்பிடிக்குள்  வைத்திருந்தார். அவர் மறைந்தார். தற்போது  ஊரான் வீட்டு ஆட்டுக்குட்டியில் ஆளுக்காள் பிரியாணி வைக்கப்  பார்க்கிறார்கள். ஒன்றாக இருந்தவர்கள்  ஒருவர் மீது மற்றவர்கள்  குற்றம்  சாட்டுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெ.யின் வாரிசு  சசிகலாவும் ,இளவரசியும்தானாம்அடுத்தவன் வீட்டு கோழிக்கு எவனெவன்  வீட்டிலேயோ மசாலா  அரைக்கிற கதை மாதிரி இல்லியா? . காமடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்  மந்திரியானால்  கூட  ஆச்சரியப்படக்கூடாது.

அணிக்கு ஆள் பிடிப்பதற்கே எத்தனையோ கோடிகள்  செலவு  என்கிறார்கள்.. இவ்வளவு பணமும் மக்கள் பணம்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம்  இல்லை.    இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கிற மத்திய அரசு கவலைப்படவில்லை. அவர்களின் கணக்குப்படி சசிகலா குரூப் தனிமைப் படவேண்டும். ஓபிஎஸ்-எடப்பாடி அணிகள் ஒன்றுபடவேண்டும். அந்த ஒன்று பட்ட அணிக்கு சட்டாம்பிள்ளையாக பிஜேபி இருக்க வேண்டும் என்பதுதான்.!

இப்படி சட்டாம்பிள்ளையாக பிஜேபி  அமைக்கும் கூட்டணியில்  பா.ம.க., த.மா.க. ஆகிய கட்சிகள் சேர்ந்து கொள்ளவேண்டும். அடே..பாவிகளா ! இப்படியெல்லாம் நடக்குமா? மதவாத கட்சிஎன்று சொல்லப்படுகிற கட்சியின்   தலைமை  டாக்டர் ராமதாஸ்க்கு பிடிக்குதா? ஜி.கே.வாசனும்  சேம் பிளட் தானா? என்ன பண்ணுவது ? எத்தனை காலம்தான் பதவி இல்லாமல் இருப்பது என்கிற 'தனிமை' அவ்வாறு முடிவு எடுக்க வைத்து விட்டதா?? தனித்துப் போட்டிதான் என்று சூடம் அடித்த மருத்துவர் அய்யாவை எப்படி பிஜேபி  வசியம்  செய்தது? பெரிய வித்தைக்காரர்கள்தான்.!

அப்படியானால்  ரஜினிகாந்த் தொடங்கும் புது கட்சியும் இந்த கூட்டணியில்  சேரலாம் அல்லவா? எப்படி 'சிஸ்டம்" ஒர்க் பண்ணுது பாருங்க! தமிழக அரசியலில் எத்தகைய அபூர்வ ராகங்கள்! கச்சேரி களை கட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சும்மா சொல்லக்கூடாது  மோடி, அமித்ஷா இருவரும் பலே சாணக்கியர்கள் தான் !

ஆட்சி அதிகாரம் பணம் எல்லாம் இந்த அணியில். இவர்களால் எதையும் சாதிக்க முடியும்.? எதிரி எவன்எ ன்பதை முடிவு செய்துவிட்டால் அவனை எப்படியும் சாய்க்கவேண்டும்.நியாயம் நேர்மை,தர்மம் எதையும் பார்க்கத்தேவையில்லை.

  திமுக கூட்டணி எப்படி இதை எதிர்கொள்ளப்போகுதோ?

Saturday, August 19, 2017

திரிஷா வகையறாக்களை என்ன செய்ய ?

அடி வயிற்றில் அக்கினி...அதை பார்க்க பார்க்க வெறிதான் ஏறியது.

சவுத் டில்லியில் ஒரு கொடியவன் வீதியில் படுத்துக் கிடந்த நாயை  செங்கலால்  அடித்துக் கொல்லுகிறான் . அதை  பக்கத்தில் நிற்கிற படுபாவி  பார்த்து ரசிக்கிறான்.

எதுக்குடா இந்த கொலை வெறி? பசிக்கு உணவாம்.! அட கழிசடைகளே!

நாய் அது வெறும் மிருகம் அல்ல.அது எங்கள் பைரவரின் வாகனம். காவிகளுக்கு பசு எப்படி கடவுளோ அதைப்போல எங்களுக்கு  நாயும்  கடவுள்தான்.!

 நாய் நன்றி உள்ளது. அது எஜமான விசுவாசம் உள்ளது. மனிதர்களுக்கு  காவல் தெய்வம். லஞ்சம் வாங்காது. உண்மையுடன்  உழைக்கும் .அதைப் போய் உணவாக தின்னலாமா..?

திரிஷா  வகையறாக்கள் மீது  எனக்கு கோபம். தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? பொங்கி எழுந்திருக்க வேண்டாமா? அது டில்லி நாய் என்பதால்  அவருக்கு கோபம் வரவில்லையா? சென்னையில்  மாடியில் இருந்து  நாயை தூக்கி எறிந்தவனை கண்டித்தவர்களுக்கு டில்லி நாய்  மீது பாசம் இல்லாமல்  போச்சே? வன்மையாக கண்டிக்கிறேன்.

மற்றொரு வயிற்றெரிச்சல்.படிக்கும்போதும்  படங்களைப் பார்க்கும் போதும் எங்கெல்லாமோ எரிந்தது. இங்கிலாந்தை சேர்ந்த டி.வி.பிரபலம். பெயர் புரூசி. வயது  89.. நல்லபடியாக  போய் சேர்ந்துவிட்டார். நிஜமாகவே  நம்ம ஊர்  டி.வி. ஆளுங்கல்லாம் பொறாமைப் படனும்யா! எப்பேர்ப்பட்ட  சாதனைகள் செய்திருக்கிறார் தெரியுமா?

புரூசிக்கு அதிகாரப்பூர்வமான  மனைவிகள் மூன்று . இதில் 1964-ம் ஆண்டு உலக அழகி ஆன் சிட்னியும் ஒருத்தி.! இதல்லாம்  பத்தலைன்னு  எக்கச்சக்கமான வைப்புகள்.தொடுப்புகள். அடப்பாவி ! இத்தோடு நிறுத்தாமல் ஆண்களையும் ஆண்டிருக்கிறார். இதெல்லாம் சாதனைதானே!

 

Friday, August 18, 2017

இ..பி.எஸ். அணியில் ஸ்லீப்பர் செல்ஸ்! அடேங்கப்பா தினகரன்..

செத்த பாம்புக்கே  உயிர் கொடுக்கிறவர்கள்  மத்தியில்  எத்தனை மகுடி  ஊதி என்னங்க பிரயோசனம் என்கிற நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்  அதிமுக  தொண்டர்கள். " என்னய்யா  புருடா விடுறே?" என்று நீங்கள்  கேட்டாலும்  அதற்கும் பதில் இருக்கிறது. இங்கு யான் தொண்டர்கள் என நவின்றது  அமைச்சர் பெருமக்களையும் அவர் சார்ந்த  அடி ,பொடிகளையும்தான்! இதில்  வட்டம் ,கோணம், மாவட்டம் என்பதெல்லாம்  அடக்கம்.!

ஓபிஎஸ் அண்ட்  இ.பி.எஸ். இரு  கூத்தாடிகளும்   இன்று  மெர்ஜ் ஆவார்கள்  என்கிற நம்பிக்கை  எழுபது சதவிகித அரசியல்வாதிகளுக்கு  வந்து  இருக்கிறது. பிஜேபி .கொடுத்து வருகிற  அழுத்தம்தான் காரணம் என்பது அரசியல் கைப்பிள்ளைகளுக்கு தெரியாதிருக்க  வழி இல்லை.  இவர்கள்  சேர்ந்தால்தான்  உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அப்படி நடந்தால்தான் பிஜேபி  கூட்டணி அமையும். அதிமுக தலைமையில் அமையும் அந்த கூட்டில்  சேர முடியும் என உதிரிப்பூக்கள் காத்திருக்கின்றன.ஜெ.சமாதியில் இன்று  மிகப்பெரிய நாடகம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்  மக்களே!
தினகரனின் பூச்சாண்டி!
-------------------------
"அப்படியா  நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்திடுவிங்களா ...சேர விட்ருவனா? ஸ்லீப்பர் செல் வச்சிரிக்கேன். சின்னம்மா  சிக்னல் கிடைச்சிருச்சி. ஆபரேசன் ரெடி" என்று அனஸ்திஸ்யா வை  கையில் வைத்துக்கொண்டு  கத்தியை ஆட்டிக்காட்டுகிறார். சமாதியில்  ஓங்கி  அடித்து  ஒன்னரை டன் வெயிட்டுக்கு  சபதம் செய்த  சசி யால் அமைதியாகவும்   இருக்க முடியாது.  இவர்களின்தொ டர் நாடகங்களால் பிக்பாஸ் ரியால்டி ஷோ மொக்கையானாலும் ஆச்சரியம் இல்ல.

நமக்கென்ன டவுட்னா  இத்தனை மாதமா   தடயங்களை அழிக்காமல் வெச்சிருப்பாங்களா? ஜெ.சிகிச்சைக்கு  எங்கேய்யா வீடியோ ஆதாரம்னு கேட்டப்பவே  சுதாரிச்சிருக்கமாட்டாங்களா ? சகுனி மட்டும் உயிருடன்  இருந்திருந்தால் இவர்களிடம்தான் குருகுல வாசம். சி.பி.ஐ. வந்தால் கூட  திக்கு முக்காடி கிறுக்கு பிடித்துப் போய்விடுவார்கள். தடயம் எதுவும்  கிடைக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் காவடி எடுக்கவேண்டியது வரும்..
மதுசூதனன் தலைவர்?
-----------
இணைப்புக்கு பிறகு  மது சூதனன்தான் அவைத்தலைவர் .ஓபிஎஸ் அணிக்கு  இரண்டு மந்திரி பதவி என்று முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இது  உண்மையா, உதாரா என்பது விடிந்தால் தெரிந்துவிடும். போயஸ்கார்டன் ஜெ.வீடு  சட்டப்படி  ஜெ.யின் அண்ணன் பிள்ளைகளுக்குத்தான் போய்சேரவேண்டும். அதை பறித்து  நினைவிடம் என்று  அறிவிப்பது  நியாயமா, தர்மமா? ஜெயலலிதா  எப்படிப்பட்ட  ஆள். எம்.ஜி.ஆரை பற்றி  ராஜீவ்காந்திக்கே  புகார் எழுதியவர் ஆச்சே. அவர்  உயில் எழுதாமல்  இருப்பாரா? அப்படியே  எழுதியிருந்தாலும்  அது  மன்னார்குடி பெருங்குடி  மக்களுக்கு தெரியாது  போகுமா  ..அதை எந்த நேரத்தில் வெளியிடவேண்டும்  என்பதற்கு டைம் டேபிள் போட்டிருப்பார்களே ? அவர்கள் பிக் பாஸ் களுக்கும் பெரிய  எக்ஸ்ட்ரா லார்ஜ்  பிக்பாஸ்கள் சுவாமிகளே!!

ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் என்ன கூத்து நடக்குமோ என்பது தெரியவில்லை.

நாளை தினகரன் தவுசண்ட்வாலா வை வெடிக்காமல் விடமாட்டார். 

Wednesday, August 16, 2017

எடப்பாடியுடன் இறுதிப் போருக்கு தயாராகிறார் தினகரன் !

தமிழக அரசியலில் நாள்தோறும் மாற்றங்கள். அதிலும்  ஆளும் கட்சியான  அதிமுக அம்மா அணியில் அதிரடியான நகர்வுகள்.

"என்ன செஞ்சிருவாய்ங்க..பார்த்திருவோம் .நாங்களும்  ஆதாரங்களை  வெச்சிருக்கம்ல!" என்று  எடப்பாடி அணியினர்  தெம்பாகவே  இருக்கிறார்கள். ஆனாலும் உள்ளுக்குள்  உதறல் .தங்களிடம்  ஆமாம்  சாமி  எம்.எல்.ஏ.க்கள் 115 பேர்கள்தான் இருக்கிறார்கள். தற்போதைய  நிலையில்  மைனாரிட்டி அரசு.!அவர்களையும் எவ்வளவு  நாளைக்குத்தான்  பத்திரப்படுத்தி வைக்க முடியும்? மைனாரிட்டி  அரசு ஆகிவிட்டது  என்பது  தினகரனுக்கு  தேன் குடித்த மாதிரி இருக்கிறது. அவரிடம் இருபது எம்.எல்.ஏ.க்கள்  இருக்கிறார்களே. இவர்களை வைத்து  பெரிய ஆட்டம் காட்டலாமே என்று அவரும் பல திட்டங்களை  வைத்திருப்பார் அல்லவா?  !

வாயிலேயே  ஏழரையை வைத்திருக்கிற  மந்திரி சீனிவாசனும்  அவர்கள் அரசு மைனாரிட்டி அரசுதான் என்பதை பார்த்தசாரதி கோவிலில் வைத்து  அந்த பகவான் முன்னிலையிலேயே சொல்லி விட்டார். ஆண்டவனின் சாட் சியை நீதிமன்றம் ஏற்காது. இதனால்  எடப்பாடியின்  ஒரே  நம்பிக்கை ஓபிஎஸ்.தான்! அவரின் ஆதரவு கிடைத்தால்தான்  பதவி  தப்பும்.! அதற்காக  அந்த அணி வைக்கும் கண்டிசன்களையும் ஏற்பதற்கு  தயாராகத்தான் இருக்கிறார்கள்..ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி சி.பி.ஐ  விசாரணை என்பதில் தீர்மானமாக  ஓபிஎஸ். இருக்கிறார். இதற்கு  எடப்பாடி  சம்மதம் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்கிற  அச்சம் தினகரன்  அணிக்கு  இருப்பதால்தான்  தங்களிடம்  ஜெயலலிதா சிகிச்சை வீடியோ  இருப்பதாக  தினகரன் அணியை விட்டு சொல்ல வைத்திருக்கிறார்கள்.

அதிலும் வில்லங்கம் இல்லாமல் இல்லை.

எதற்காக வீடியோ எடுக்கப்பட்டது. அதை இத்தனை நாட்களாக  சொல்லாமல் மறைத்து வைத்திருந்தது எதனால் என்கிற கேள்வி எழும்.ஒரு முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை  ஆட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் எடுப்பதற்கு அனுமதி அளித்தது யார் ? அரசா? அமைச்சரா? எந்த கட்டத்தில் எடுக்கப்பட்டது என்று கேட்க மாட்டார்களா? அதை  மோடிஜி அரசு  பார்த்துக்கொள்ளும் என்று விட்டு விடுவோம்.

ஆனால்ஓ பிஎஸ் அணியில் இருந்து சிலரை உருவும் வேலையிலும் தினகரன் இறங்கியிருக்கிறார். என்பதால்  எடப்பாடியிடம் சமரசம் பேசுகிற அவசரமும் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சமரசம் ஏற்படாவிட்டால்  எடப்பாடியை  கண்டிப்பாக தினகரன்  கவிழ்த்து விடுவார், கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று தினகரன் வெடியை சொருகி வைத்திருப்பதே அதற்குத்தான்.
.  

Tuesday, August 15, 2017

பணம் கொடுத்தால் எம்.எல்.ஏக்களை வாங்கலாம்.!

பகிரங்கமாக சொன்னால் என்ன , உள்ளர்த்தம் வைத்துச்சொன்னால்  என்ன?

விடை ஒன்றுதானே!

தமிழகத்தில் நடந்து வரும் அதிமுக அம்மா அணி ( ? ) ஆட்சியில்  ஊழலும்   அதிகார அத்து மீறலும் சாதாரணமாகி விட்டது என்று  கமல்ஹாசன்  சொல்லி  வருவதற்கு ஆள்வோரே  ஆதாரங்களாகி வருகிறார்கள். இதை என்னவென  சொல்வது? ஒட்டிக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி  என்பது சரியாக  இருக்குமோ?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அன்னதானம். சுதந்திர நாள் அல்லவா...தானம் பெறும் நிலையில்தானே இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறார்கள் போலும்.! திண்டுக்கல் சீனிவாசன்  வந்தார். யாராவது அமைச்சர் வந்துதான்  தானம் செய்வதை தொடங்க வேண்டும்  என்பது அரசின் சட்டமோ என்னவோ? முடிவு பெற்ற பாலத்தை அடைத்து வைத்துவிட்டு போக்குவரத்து நெரிசலுக்கு   போலீஸ் காரணமாக இருக்கிறது. மந்திரி வந்து கையை வைக்கவேண்டுமாம்.

மந்திரி சீனிவாசனிடம் வழக்கம் போல வாயைப் பிடுங்கினார்கள் பத்திரிக்கை  நிருபர்கள்.

"தினகரனின் மேலூர் கூட்டத்துக்கு எம்.எல்.ஏக்கள்  போயிருக்கிறார்களே?"
இது ஒருவரது கேள்வி. இதற்கு மதியூகி மந்திரி சீனிவாசன் சொன்ன பதில்.

" நீங்கள்லாம்  சின்ன பிள்ளைங்க.உங்களுக்கு தெரியாது. எங்களுக்கு  இன்னும் ரெண்டு எம்.எல்.ஏ.க்கள்தான் தேவை. எதுவோ  பாதாளம் வரை பாயும்னு  சொல்வாங்களே! அது உங்களுக்குத் தெரியாதா? எங்கிருந்தாலும்  அவங்க  வரமாட்டாங்களா என்ன?"

இந்த பதிலில் மறைந்திருக்கிற நீதி என்ன மக்களே! பாதாளம் வரை பாயும் என்பது எது? இது கூடவா சின்னப்பிள்ளைகளான மக்களுக்கு தெரியாது போகும். படிக்கிற மக்களுக்கும் தெரியாமல் போகுமா?

இப்படி பகிரங்கமாக பேரம் பற்றி ஜாடையாக சொல்கிற மந்திரியைப்  போற்ற  வேண்டும். இன்னும் பல உண்மைகளை இப்படி ஜாடையாக சொன்னாலும்  நீதியும் கண்டு கொள்ளாது.மத்திய அரசும் கண்டு கொள்ளாது.
    

Monday, August 14, 2017

சுதந்திரம் கிடைச்சிருச்சா ....எங்கே இருக்கு?

இப்படி ஒரு தலைப்பில்தான் பட்டி மன்றம் ( சரிதானா சிலர் பட்டி மண்டபம்னு சொல்றாங்களே?) கடந்த எழுபது வருசமா நடந்துகிட்டு இருக்கு. முடிவுதான்  ஒவ்வொருத்தரும் வேற வேறயா சொல்லிட்டிருக்காங்க.

ஒருநாள் லீவு . பசங்களுக்கு மிட்டாய்.அன்னிக்கி டாஸ்மாக் மூடி இருக்கும், குடிக்க கார்ப்பரேசன் வாட்டர் இல்ல. அப்படியே  கிடைச்சாலும் அதை காய்ச்சித்தான் குடிக்கணும்.மந்திரிகள் சொன்ன உறுதி மொழியெல்லாம் எதுவுமே நடக்கல .மனுஷன் வேக்காடுல கிடக்கிறான்.கரண்டு அது இஷ்டப்பட்டால்தான் வரும். ஓட்டலுக்கு போனாலும் வரி. நமக்கு  சேவை  செய்யப்போறதா சொல்லி சட்டசபைக்கு போனவன் கோடீஸ்வரன். ஆயுசு முழுக்க பென்சன் ஆனா .உயிர் போறவரை உழைக்கிறவனுக்கு பென்சன் கிடைக்கிறதில்ல. இங்க ஆள்கிறவன்தான் எல்லா வசதிகளையும்  அனுபவிக்கிறான்.அவனுக்குத்தான் நாம்ப அடிமைகளா வாழ்ந்திட்டிருக்கிறோம். தட்டி கேட்டால் ,எழுதினால் போலீசை விட்டு  அடிக்கிறான்.கைது பண்றான்.

நமக்காக ஒரு ஆள் தட்டிக் கேட்டால் உனக்கு அரசியல் தெரியுமான்னு  அதட்டுறான்.மத்த நாடுகளின் சுதந்திரதின கொண்டாட்டங்களை  டி.வி.யில்  பார்க்கிறபோது பொறாமையா இருக்கும். அவங்க எவ்வளவு மகிழ்ச்சியா  கொண்டாடுறாங்க.முகத்துல எவ்வளவு மகிழ்ச்சி. ஆனா அந்த மாதிரி  சந்தோசம் கொண்டாட்டம் ஏன் நம்ம நாட்டில இல்ல. செத்தவனுக்கு வெடி வெடிச்சு ஆட்டம் போட்டு கொண்டுபோகிற அளவுக்குகூட இல்லாமல்    சுதந்திரம் பெருமை இழந்து போச்சா? மனசை யாரோ  சம்மட்டியால்  அடிக்கிற மாதிரி இருக்கு!

தப்பு நடந்திருக்குன்னு சீப் செக்ரட்டரி மேல கேஸ் போட்டாங்க. குவாரி கொள்ளைகளை கண்டுபிடிக்க சகாயம்னு ஒருத்தரை நியமிச்சாங்க, சி.எம். சாவில் மர்மம் இருக்கு .சி.பி.ஐ .விசாரணை வேணும்னு  முதலில் ஓபிஎஸ் கேட்டார். அதை கடுமையா கண்டிச்ச டி.டி.வி.தினகரன் இப்ப  நீதி விசாரணை  வேணும்கிறார். ஜெயலலிதா சாகும்வரை கூடவே இருந்த சசியின் உறவுக்காரர்தான் இவர். இத்தனை மாதம் ஜெயலலிதா சாவு  பற்றி இம்மாதிரி  எதுவும் சொல்லாத ஆள் ஏதோ ஆதாயம் இல்லாமல் இப்படி சொல்வாரா? அரசாங்கம் போட்ட அத்தனை கமிசன்களும் ஏதோ ஒரு கமிஷன் கருதி  போடப்பட்டு இருக்கிறதா நினைச்சா அது என்ன தப்பா? இம்மாதிரியான  அரசியல்வாதிகள் வளர்ந்து இருக்கிற மாதிரி நேர்மையான அரசியல்வாதிகள் ஏன் வளரல?

"கூவத்தூர் விடுதியில் அப்படியே நாங்க விட்டுப்போயிருந்தால் இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பியா? " என்று எடப்பாடியை பார்த்து அதே கட்சிக்காரர்  தினகரன் கேட்கிறார்னா  கூவத்தூரில் அப்படி என்னதான் நடந்துச்சு. ?ஒரு சுதந்திர நாட்டில் ஊழல்களுக்குத்தான் சுதந்திரமா, சுரண்டலுக்குத்தான்  சுதந்திரமா? கொள்ளையர்களுக்குத்தான் சுதந்திரமா? புரியலைங்க.

சுக்கான் பிடிக்கத்தெரியாதவனிடம்  கப்பலை ஒப்படச்சிட்டோமோன்னு மக்கள் கவலைப்படுறாங்க.அதனால்தான்  சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடு  ஜனங்க கொண்டாடல.வெடி வெடிகள். ஒவ்வொரு வீட்டிலும்  கொடி பறக்கல.

Sunday, August 13, 2017

மூக்குப் பொடி சித்தர் ஆசியால் ஆட்சி கவிழுமா?

"புலனைந்தும்  பொறி கலங்கி நெறி மயங்கி ,அறிவழிந்திட்டு  ஐம்மேலுந்தி அமைந்த போதாக  அஞ்சேல்"  என்று தோன்றிய  ஐயாறப்பர் போன்று  மூக்குப்பொடி சித்தர் அபயம் அளித்திருக்கிறாரா  டி.டி.வி.தினகரனுக்கு!

திருவண்ணாமலை சென்று அந்த சித்தருக்கு முன் பயமும் பக்தியும் கலந்து  சம்மணமிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

சொடக்குப் போட்டு மந்திரிகளை ஆட்டுவித்த அந்த பத்து விரல்களும் ஒன்றையொன்று கோர்த்தபடி அவரிடம் யாசித்தது  என்ன?

யார் அந்த மூக்குப்பொடி சாமியார்?

அவருக்கு வயது எண்பத்து ஐந்து என்கிறார்கள்.விழுப்புரம் மாவட்டம் ,சின்ன சேலம் பக்கமாக ராஜபாளையம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவராம். இயற்பெயர்  மொட்டையாடி கவுண்டர். நாற்பது  வருடங்களுக்கு முன்னர்  மனைவி இறந்துவிட்டார் .

 மனையாளை இழந்தவனின் வாழ்க்கையானது  வாழ்கிற போதே அனுபவிக்கும் சித்ரவதையாகும். என்னதான் செல்வமும் சிறப்பும் இருந்தாலும்  மனைவி இல்லையேல் நீ  உயிர் உள்ள சவம்தான்! இது எனது  அனுபவம்.

துணையை இழந்த கவுண்டர் அப்படியே பொடி நடையாக திருவண்ணாமலை  சென்று விட்டார். யாரிடமும் பேசுவதில்லை.எவரிடமும் யாசிப்பதில்லை. பசித்தால் ஏதாவது ஒரு உணவு விடுதிக்குள் சென்று புசித்துவிட்டு காசு கொடுக்காமல் வந்து விடுவார். எங்கேயாவது கட்டையை சாத்தி உறங்கி விடுவார்.திருவண்ணாமலையில் இது சாத்தியமே.

தானே புயல் வருவதற்கு முன்னர் கடலூர் சென்று கடற்கரையில்  நின்று  "எதற்கு சினம்? சீற்றம் கொள்ளாதே!" என சொல்லிவிட்டு வந்தாராம்.ஆனால் புயல் அடித்தது.

1000.500, ருபாய் தாள்களை திருவண்ணாமலை சாலையில் நின்று  கிழித்து  எறிந்தாராம். செல்லாது என அரசு அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான்  அறிவித்தது என்கிறார்கள்.

அதனால்தான்  சித்தரை சந்தித்துஆசி பெற்றார் தினகரன் என்கிறார்கள்  அவரைச்சார்ந்தோர்.

எதற்காக ஆசி?

ஆளுனரை சந்தித்து தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்கக்கோரும் கடிதம் கொடுக்கப்போகிறார் என்கிறார்கள்.

இதற்கான அனுமதியை பொதுச்செயலாளர் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.செங்கோட்டையன் புதிய முதல்வர் என்பது தூண்டில்!

பொதுச்செயலாளர் நியமனமே செல்லாது என தொங்கலில் கிடக்கிறபோது  ஆளுநர் தினகரனின் கடிதத்தை ஏற்பாரா?

ஏற்காவிட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு  கொடுத்துக்கொண்டிருக்கிற ஆதரவை விலக்கிக்கொள்வர். ஆட்சிக்கு ஆபத்து.

இதை பிஜேபி எப்படி அனுமதிக்கும்? தனது பினாமி கவிழ்வதை வேடிக்கை பார்க்குமா?

பார்க்காது. யாரையாவது மிரட்டி பணிய வைக்கலாம்.

மேலூர் தினகரன் பொதுக்கூட்டம் நடப்பதற்கு முன்னதாக ஏதாவது நிகழும். பார்க்கலாம்.
நொய்யல் ஆற்றில் வருவது சோப்பு நுரையாம் !

அடடா   அடடா.. நம்மை ஆள்கிற அதிமுக அமைச்சர்களில் செல்லூர் ராசு  ஒருவர்தான் அறிவியல் விஞ்ஞானி  என நினைத்திருந்தோம்..."மகா தப்புப்பா"...