புதன், 30 டிசம்பர், 2009

ஆங்கிலப் புத்தாண்டு ... ஆசை நிறைவேறுமா?

"தறுக்கினாற் பிற தேசத்தார்
தமிழன்பால் என் நாட்டான் பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தா
ராதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்த சொல் கேட்டின் பத்திற்
குதிக்கும் நாள் எந்த நாளோ?"
இதுவே எனது ஆங்கிலப் புத்தாண்டின் ஆசை!

பாவேந்தன் எழுச்சியுடன் பாடியுள்ள வரிகளுக்கு உயிரூட்ட மானமிகு தமிழர்களே எழுக என வேண்டிக் கொள்கிறேன்.

இதுவே எனது ஆங்கிலப் புத்தாண்டின் ஆசை!

செவ்வாய், 29 டிசம்பர், 2009

சிறந்த நடிகர் -நடிகை யாருங்கோ?

ச்சும்மா ஒரு புள்ளி விவரம் தானுங்கோ!

1931 முதல் 2009 வரை வெளியான நேரடிப் படங்களில் அதாவது 'டப்பிங்' செய்யப் படாத தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை,4833 .

1931 முதல் 2008 வரை சென்சார் செய்யப் பட்டும் வெள்ளித் திரைக்கு வராமல்
பொட்டிக்குள் முடங்கிக் கிடக்கிற படங்களின் எண்ணிக்கை 204.

2009 -ல் சென்சார் ஆகி 2010 -லாவது வருமா என்று எதிர்பார்ப்பில் கிடப்பவை 36.

ஆக மொத்தத்தில் தமிழில் தயாரிக்கப் பட்ட படங்களின் கணக்கு 5073 என்றாகிறது.

2009 -ல் மட்டும் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் 131 .
இந்தப் படங்களில் 150 நாட்கள் ஓடியதாக ''நாயகன்'' படத்தை சொல்லுகிறார்கள். எத்தனை தியேட்டர்களில் ,எந்தெந்த ஊர்களில் ஓடியது என்றெல்லாம் கேட்கக் கூடாது .நூன் ஷோ ஓடியதா ,அல்லது தினமும் த்ரீ ஷோ ஓடியதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இடம் இல்லை.இப்போதெல்லாம் பகல் காட்சிகள் மட்டுமே ஓடினாலும் அது வெற்றிப் படங்கள்தான்!

2009 -ல் அறிமுக இயக்குனர்கள் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது! 69 -பேர் வந்திருக்கிறார்கள் .ஆரோக்கியமான விஷயம்தான் .45 -புதிய இசை அமைப்பாளர்கள் ,50 புதிய கதாநாயகர்கள் ,45 -புது நாயகிகள் என அமர்க்களப்பட்டிருக்கிறது.

இவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் ? சொல்லுவதற்கு சங்கடமாக இருக்கிறது.

இயக்குனர்களில் 'பசங்க' பாண்டிராஜ்,'சிந்தனை செய்' யுவன் ,'ஞாபகங்கள்' ஜீவன் ,'ஈரம்' அறிவழகன் ,மதுரை டு தேனீ வயா ஆண்டிபட்டி 'ரதிபாலா,'ரேணிகுண்டா' பன்னீர்செல்வம் என சிலர் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள்.

அமீர்,சித்தார்த்,பா.விஜய்,தருண்கோபி, ஆகியோர் பழக்கப்பட்டுவிட்ட முகங்கள்.நினைவில் சுலபமாகி விடுகிறார்கள். ஆனால் நாயகிகளில் எத்தனை பேர் நினைவில் இருக்கிறார்கள்?

இப்போது என் ஆர்வம் எல்லாம் 2009 -ல் சிறந்த சினிமா கலைஞர்கள் யாராக இருக்கமுடியும் என்பதில்தான்!

அயன்,நாடோடிகள்,காஞ்சிவரம், நான் கடவுள், பேராண்மை, பொக்கிஷம், கந்தசாமி,ஆகிய படங்களில் ஒன்றாக சிறந்த படம் இருக்கலாமா? அல்லது வேறு எதாவது இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

சிறந்த நடிகராக சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, விக்ரம் இவர்களில் ஒருவர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்களோ? நடிகைகளில் பத்மப்ரியா, பூஜா , சினேகா ஆகிய மூவர்தான் என் பூனைக் கண்களுக்கு தெரிகிறார்கள்.

உங்கள் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா நண்பர்களே?

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

என்.டி..திவாரியும்,ஷகீலாவும்!


ஒரு ஆண் ஆயிரத்தெட்டு அவிசாரித் தனம் செய்வான் .அவனை இந்த சமுதாயம் மன்னிக்கிறது. மனிதனாக ஏற்கிறது. ஆனால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு பலி ஆனாலும் அவளை இந்த சமுதாயம் ஏற்பதில்லை. மனுஷியாகவும் மதிப்பதில்லை. விலை மாது என்று பட்டம் கட்டிவிடுகிறது. இதுமட்டுமல்ல அவளை மனமுவந்து ஏற்பவனையும் இழிந்தவனாகப் பார்க்கிறது.

எல்லாமே ஆணாதிக்கத்தின் திமிர்!

ஆணை சார்ந்து வாழ வேண்டிய சமுதாய நடைமுறைகளால் இந்த பெண்ணடிமைத்தனம் கற்காலம் தொட்டே இருக்கிறது.

ஆணின் வலிமை-பெண்ணின் பலவீனம் இவ்விரண்டும் பெண் அடிமைத்தனத்தின் அடித்தளமாக இருக்கிறது.

இவை மாறப்போவதில்லை.

ஆனால் இரக்கப்படலாம் அல்லவா?

சக மனுஷியாக பார்க்கலாம் அல்லவா?

இதில் கொடுமை என்னவென்றால் பெண்களை ,பெண்களே இழிந்தவளாகப் பார்ப்பதுதான்.

அண்மையில் ஒரு நிகழ்வு.

நடிகை ஷகீலா ஒரு தொழிலதிபரை காதலிப்பதாகவும் ,அவரை கல்யாணம் செய்யவிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் சொன்னார்.

அவ்வளவுதான் உத்தமர்களுக்கு சுரீர் என்று சுட்டுவிட்டது.

''பிட்டுப் பட நடிகைக்கு காதலா,கல்யாணமா....எந்த கேனையன்யா அவன்''? என சில சினிமாக்காரர்களே கேவலமாக பேசினார்கள். சக நடிகையை பிழை படப்பேசுகிறோம் என்கிற குற்ற உணர்வு கொஞ்சம் கூடஇல்லை .

ஷகீலாவின் திருமணத்தினால் இந்த சமுதாயத்துக்கு என்ன கேடு வந்துவிடும் என அவர்கள் அப்படி கொந்தளித்தார்கள் என்பது தெரியவில்லை.

ஷகீலாவின் திருமணத்தில் எத்தகைய வலி -தியாகம் இருக்கிறது தெரியுமா?

ஒரு சின்ன பிளாஷ் பேக் !

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு படத்தில் நடிப்பதற்கு இந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷகீலாவின் படம் என்றால் பி .அண்ட். சி . சென்டர்களில் நல்ல வியாபாரம் ஆகும் என்பதால் பைனான்சியர் ஒருவரின் உதவி கிடைத்தது.

ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை!

ஷகீலா சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை. இதனால் நொந்து போன தயாரிப்பாளர் படப்பிடிப்பை தள்ளிப் போட்டுவிட்டார்.

பைனான்சியருக்கு பயங்கர டென்சன். பணம் போட்ட மனுசனாயிற்றே!சும்மா இருக்க முடியுமா?

நேராக நடிகையின் வீட்டுக்குப் போய்விட்டார் .

காரசாரமாக திட்டவேண்டும் என்கிற கோபத்துடன் போனவர் அங்கிருந்த நிலைமையைப் பார்த்ததும் ,அவரால் எதுவும் பேசமுடியவில்லை.

ஷகீலாவின் அம்மா படுத்த
படுக்கையில். ஒரு நாளைக்கு இரண்டு முறை டயாலிஸ் பண்ணவேண்டும் . கிட்னி பெயிலியர். கண்ணீர் மல்க ஷகீலா.

ஆத்திரமுடன் சென்ற பைனான்சியர் அனுதாபம் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். அது மட்டுமல்ல, ஷகீலாவின் அம்மாவுக்கான மருத்துவ செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். மனிதாபிமானம். வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்பவர்கள்தான் பைனான்சியர்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் இந்த மனிதர் வித்தியாசமாக இருக்கவே நடிகைக்கு அவரைப் பிடித்துப்போனது. அவருக்கும் நடிகையை பிடித்து விட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர்.

ஆனால் பைனான்சியரின் உறவுகளும் , நட்பு வட்டமும் அவரை எந்த அளவுக்கு மதிக்கும் என்கிற பிரச்னையால் அவர்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியவில்லை.

சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப் படுகிறவர்கள் சிலர் எவ்வளவு கேவலமாக திரை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்களைவிட இந்த பைனான்சியர் மிக ,மிக உயர்ந்தவர்.

நட்டுக் கழன்று நடப்பதற்கே துணை தேவைப் படு ம் 86 வயது காந்தியவாதி (?) முன்னாள் கவர்னர் என். டி. திவாரியை விட உயர்ந்தவர். திவாரிக்கு தினமும் மூன்று பெண்கள் படுக்கைக்கு வேண்டுமாம். வீடியோ ஆதாரங்களுடன் நாறிக் கொண்டிருக்கிறார்.

ஷகீலாவை இழிவுபடுத்துகிறவர்கள் யோசிப்பார்களா?

ஆண் ஆதிக்கவாதிகள் சிந்திக்க நல்ல வாய்ப்பு!

செவ்வாய், 22 டிசம்பர், 2009

எம்ஜிஆரும் ,வேட்டைக்காரனும்!உங்களுக்கு செண்டி மென்டுகளில் நம்பிக்கை உண்டா?

என் நண்பர்கள் சிலரிடம் கேட்டேன்.

பெரும்பான்மையானவர்கள் 'நம்பிக்கை இருக்கிறது' என்றார்கள்.

ஒருவர் சொன்னார்'காலையில் எழுந்ததும் காக்காவைப் பார்த்தால் அன்றைய பொழுது நல்லாவே போகுமாம்'

இன்னொருவருக்கு எதிர் வீட்டு மாமியைப் பார்த்தால் 'போகிற இடங்களில் எல்லாம் ஜெயம்தானாம்'

மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டுப் போனால் வியாபாரம் 'ஓகோ' என்று இருக்கும் என்பது பலசரக்குக் கடை வைத்திருப்பவரது அனுபவம்.

இப்படி சொன்னவர்கள் '' உண்மையை சொன்னார்களா, இல்லையா ''என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு உள் நோக்கம் நிச்சயம் இருக்கும்.

மாமியை பார்த்தால் நல்லது என்பவரும் ,மனைவிக்கு முத்தம் கொடுப்பதாக சொல்பவரும், தங்களின் குணங்களை பிரதிபலிக்கிறார்கள்.

இவர்களை விட இன்னொரு நண்பர் சொன்ன தகவல் வேடிக்கையாகவும் இருந்தது, உதறித் தள்ளிவிட முடியாமலும் இருந்தது.

''எம்ஜிஆர் .நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பெயர்களை வைத்து எடுக்கப் படும் படங்கள் இப்போது வெற்றி பெறுவதில்லை'' என்பதே அந்த நண்பர் சொன்ன தகவல்.

''எந்த ஆதாரத்துடன் இப்படி சொல்கிறீர்கள்?'' என்று அவரிடம் கேட்க, ஒரு சிறு பட்டியலை கொடுத்தார்.

''ரகசிய போலிஸ் ','நாடோடி மன்னன்','மதுரை வீரன்' ன்றவர் சின்னதாக இடைவெளி விட்டு 'வேட்டைக்காரன்' வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,ஒப்பனிங் பிரமாதமாக இருப்பதாக சொல்லப் படுகிறது. இனிமேல்தான் அதன் கதை தெரியும்'' என்றார்.

''கமல்ஹாசன் நடித்த 'சதி லீலாவதி' எம்ஜிஆர் .நடித்த படம்தானே, அது வெற்றி பெற்றிருக்கிறதே'' என மடக்கினால் ,அதற்கும் பதில் வைத்திருந்தார்.

''எம்ஜிஆருக்கே அதுதான் முதல் படம். அதனால் அதை கணக்கில்
எடுக்கக்கூடாது, அப்படி எடுத்துக் கொள்வதாக இருந்தால் 'மர்மயோகி' என்கிற பெயருடன் கமல் அறிவித்த படத்தின் நிலைமை என்ன ஆயிற்று என்பதை
எனக்கு சொல்லுங்கள்'' என்றார்.

மாபெரும் மக்கள் சக்தியாக திகழ்ந்த ஒரு மாமனிதன் ,புரட்சித் தலைவர் எனப் போற்றப் படுகிறவர் , இன்றைக்கும் தெய்வமாக வழி படப் படுகிறவர் எம்ஜிஆர். அவர் நடித்த படங்களின் பெயர்கள் இன்றைய நடிகர்களுக்கு கை கொடுப்பதில்லை, என்கிறார்களே ? எங்கே இருக்கிறது தவறு?

கதைகளில் கவனம் செலுத்தாமல் ,கவர்ச்சிக்கும் ,ஆக்சன் ,அதிரடிகளுக்கும் ,முக்கியம் கொடுப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் சென்டிமென்டுகளின் ஆதிக்கம் சினிமாக்காரர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.

ஒரு தயாரிப்பாளர் சொன்ன இன்னொரு தகவலும் உண்டு.

''காளி என்கிற பெயரில் படம் எடுக்கமாட்டோம் . பத்ரகாளி என்கிற பெயரில் படம் எடுத்த போது அந்த படத்தின் கதாநாயகி விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். காளி என்கிற பெயரில் படம் எடுத்த போது பெருந் தீ விபத்து நடந்து ரஜினி உயிர் தப்பினார். எங்களின் தொழிலில் ராசி ,சென்டிமென்ட்கள் ,பார்ப்பது தவிர்க்கமுடியாதது''என்றார்.

பெயர் ராசி ,எண்கணிதம் ,எழுத்துகளில் மாற்றம் , இவை எல்லாம் செய்தால் ,வெற்றி பெறமுடியும் என்பதை கணினி யுகத்திலும் நம்புகிறார்கள் என்கிறபோது நாம் இன்னமும் மூட நம்பிக்கைகளில் இருந்து மீள வில்லை என்பதைத் தானே காட்டுகிறது?

யாரை நோவது?

''வேட்டைக்காரனின்' வெற்றியில்தான் பதில் இருக்கிறது.

திங்கள், 21 டிசம்பர், 2009

நாங்க தமிழருங்க....!

எச்சரிக்கை!
இது சுத்தமான கற்பனை!
பொழுது போகாதவர்கள் படிச்சா போதும்.
''உனக்கு ஓட்டுப் போடத் தெரியுமா?''
''தெரியும்,ரெண்டாயிரம் கொடுத்தா!''
''யாருக்குப் போடுவே?''
''அதிகமா யாரு கொடுப்பாங்களோ ,அவங்களுக்கு போடுவேன்''
''ஓட்டின் மதிப்பு என்னங்கிறது உனக்குத் தெரியாதா?''
''தெரிஞ்சு என்னாகப் போகுது?முன்னெல்லாம் பேப்பரில் படம் இருக்கும்,பார்த்துக் குத்துவோம். இப்ப மிசினில் படம் பார்த்து பட்டனை அமுக்கி ஓட்டுப் போடுறோம். எவன் செயிச்சு வந்தாலும் நம்ம நிலைமை மாறப் போறதில்ல!செயிக்கிரவன் மட்டும் காரு, பங்களா ,பொண்டாட்டி, வப்பாட்டினு வசதியாகிப் போவான் .''
''இப்படி சலிச்சுக்கிறியே ,நீ எந்த கட்சி?''
''ஆட்சிக்கு எந்த கட்சி வருதோ அதான் என் கட்சி''
''கொள்கை, கோட்பாடு, இதெல்லாம் பார்க்கமாட்டியா?''
''எலக்சன்ல நிக்கிற எத்தன பேருக்கு அந்த வெங்காயம் தெரியும்னு நினைக்கிறீங்க? அவங்களுக்கே தெரியலேன்கிறபோது எனக்கு மட்டும் தெரிஞ்சு என்னாகப் போகுது?''
''இந்தியக் குடிமகன் இப்படி சொல்லலாமா?''
''யோவ், முட்டாள்த் தனமா பேசாதே,குடிச்சாத் தான் குடிமகனாக முடியும்னுதான் இந்தியா முழுக்க ஒயின் சாப் இருக்கு . வசதியானவங்க பெரிய ஹோட்டலுக்கு போயி குடிமகனாகிறாங்க. வசதி இல்லாத எங்கள மாதிரியான ஆளுங்கதான் தெரு ஓரக் கடைகளில் குடிமகனாகிறோம்!''
''உங்களைத் திருத்தவே முடியாதுப்பா!ஒரு தமிழன் இப்படிக்
கெட்டு போறானேன்னு கவலையா இருக்கு!''
''அடடே, நீங்க அந்த மாதிரியான ஆளா? அதான் ரொம்பவே
கவலைப் படுறீங்க! கடலுக்கு மீன் பிடிக்கப் போனா தமிழனை சிங்கள இராணுவத்தான் சுடுறான்.அடிக்கிறான்.உதைக்கிறான். பிடிச்சிட்டுப் போயி சித்ரவதை பண்றான். அதப் பத்திக் கவலைப் படக் காணோம்.கடலோரக் காவல்
படை,கத்தரிக்காய் படைன்னு போட்டிருக்கிறோம்னு இந்திய அரசாங்கம்
சொன்னதை நம்பி கடலுக்குப் போனா மறுபடியும் சிங்களத்தான் அடிக்கிறான்யா! நாதியில்லாம இருக்கிற தமிழ் மீனவர்களை காக்கிற வழியைப்
பாருங்க சாமிகளா!உங்களை நம்பி நாங்க இழந்தது நிறைய. ரத்தக் கண்ணீர்
விட்டாச்சு. விட்ருங்க எங்கள. சூடு ,சொரணை எல்லாம் கப்பலில் போயாச்சு.
கற்பைக் கொடுத்தால்தான் நிவாரணப் பொருட்களை சிங்கள இராணுவத்தான்
முள்வேலி தமிழ் பெண்களுக்கு கொடுக்கிறானாம். அதை கண்டிக்கிற வழியைப்
பாருங்க.ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னையாம். அங்க போங்க ,எங்களை
விட்ருங்க!''
இப்படி ஒரு கனவு வராம இருக்க மருந்து இருக்கா? இல்ல,
சாமியார் யாரிடமாவது தாயத்து வாங்கனுமா?

தெரிஞ்சவங்க சொல்லுங்க!

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

சிறந்த நடிகர் நீங்க தான் தலைவா!

வருஷம் முடியப் போகுது, சிறந்த சினிமா நடிகர் -நடிகை மற்ற கலைஞர்களையும் செலக்ட் பண்ணியாகணும். என்ன பண்ணப் போறிங்க, நீங்க யாரை மனசில நினைச்சு இருக்கீங்க ,சொல்ல முடியுமா?
அட ,உங்களைத் தாங்க கேட்கிறேன். ஏன்னா நம்ம மக்கள் ரொம்பவும் புத்திசாலிங்க! அதான் கேட்கிறேன்.
ஆடித் தள்ளுபடி முடிந்து இப்ப ஆங்கிலப் புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு தள்ளுபடிகள் ,என்று வரிசையாக வரப் போகுதுல்ல.ஏமாறுவதில் , ஏமாற்றுவதில் நம்ம ஆளுங்களை விஞ்ச இனிமேல் தான் பிறந்து வரணும். தள்ளுபடி விலை என்றால் சாணத்தையும் வாங்கத் தயார்.வாங்கிய சாணத்தை எப்படி அடுத்தவன் தலையில் கட்டுவது என்பதிலும் நம்மளவர்கள் கடுமையான புத்திசாலிகள்.
எந்த மாதிரி சொன்னால் நோகாமல் ஏமாறுவார்கள் என்பதற்காகவே கமிட்டி போட்டு யோசிப்பார்கள். பச்சை,சிவப்புப் புடவை ,ரவிக்கை,அட்சய திருதி ,ரம்பா திருதி ,என விதம் விதமாக யோசித்து மக்களை மடக்கியவர்கள் ஆயிற்றே!
இவர்களுக்கு நாம்ப எந்த வகையில் குறைஞ்சவர்கள்?
நாம்ப யார் என்பதைக் காட்டவேணாமா?
இனிமேல் சென்னையில் அரங்கங்கள் கிடைப்பது கஷ்டம்தான். சிறந்த சினிமா கலைஞர்கள் யார் என்பதை போட்டி போட்டுக் கொண்டு சொல்லி விழா எ டுப்பதற்காக எல்லா அரங்குகளுமே ஹவுஸ்புல் . ஆளுக்காள் பட்டியலுடன் திரிகிறார்கள். அந்த பட்டியல்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது ஸ்பான்சர்களைப் பொருத்தது. யாரைப் போட்டால் அரங்கம் நிறையும் என்கிற அடிப்படையில் பெஸ்ட் இருக்கும்.
அப்பத்தானே டிவி ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
இதற்கு பெயர்தான் சிறந்த சினிமா கலைஞர்கள் விருது வழங்கும் விழாவா? அப்படித்தானுங்க இத்தனை வருசமா கொண்டாடிட்டு வருகிறோம். திறமையின் அடிப்படையில் தேர்வுகள் என்பது அத்திப் பூத்தது மாதிரிங்க. மெஜாரிட்டி மெம்பர்கள் சொன்ன அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
அறிமுக நடிகன் திறமையாக நடித்திருந்தாலும் அவரை சிறந்த நடிகர் என்று சொல்லாமல் சிறந்த புதுமுகம் என்று சொல்லி சீனியர்களை திருப்திப் படுத்திவிடுவார்கள்.
எதை சொன்னாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை நேர்மையான தேர்வுகள் என்பது வெறும் வேசம்தான்.
எல்லாமே வியாபாரமாகிவிட்டது.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

பாரதிராஜாவும்,விஜய்ஆண்டனியும்...!

ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் திரைப் பட இயக்குனர்கள் இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்று கிழமை எங்காவது ஒரு இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் விவாதித்து தமிழ்சினிமாவை முன்னெடுத்து செல்லுவது பற்றி திட்டங்களை வகுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான விஷயம். டிச. 13 ந் தேதி சென்னை ஈஸியார் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் படைப்பாளிகளும் ,உதவியாளர்களும் ஒன்று கூடியிருந்தனர்.
ஆச்சரியம் என்னவென்றால் அன்றைய கூட்டத்துக்கு பாரதிராஜா,மணிரத்னம், ரவிகுமார் ,ஷங்கர் என பிரபலங்களும் வந்திருந்தனர்.
கூட்டம் கல கலப்பாக நடந்தது. விருந்து வேடிக்கை என ஒரே அமர்க்களம்.
திடீர் என உதவியாளர் ஒருவர் எழுந்தார். அவர் பாரதிராஜாவின் உதவியாளர்.
பாரதிராஜாவின் காலில் விழுந்தார்.
''என்னை ஆசிவாதம் பண்ணுங்க சார்''என்றார்.
''என்னய்யா கல்யாணமா?'' என்றார் பாரதி.
''இல்லிங்க சார், எனக்கு ஒரு படம் கமிட் ஆயிருக்கு .டைரக்ட் பண்ணப்போறேன்''
''வெரி குட் ,நான் என்ன உதவி பண்ணனும்''?
''வாழ்த்துங்க சார்''
'' ஒகே. உன்ன மாதிரி அசிஸ்டென்ட் வச்சுக்காதேய்யா,என்னை மாதிரி நீயும் கஷ்டப் படக்கூடாதுல்ல' என்றதும் ஒரே கைதட்டல். உதவியாளருக்கு செம குஷி.

தன்னுடைய குரு காமடியாக பேசியதால் ரொம்பவே நெகிழ்ந்து விட்டார்.
இந்த மாதகூட்ட மொத்த செலவும் இயக்குனர் லிங்குசாமியினுடையது..அடுத்த மாத கூட்டச்செலவு இயக்குனர் பி .வாசு.

சரி, இனி இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மீதான குற்றச்சாட்டைப் பார்க்கலாம்.

தமிழ் ஈழ போராட்டம் நடந்தபோது சிங்கள ராணுவத்துக்காக பாட்டு எழுதிய ஒருவரை ''வேட்டைக்காரன்'' படத்திலும் பயன் படுத்தியிருக்கிறார் . ஆகவே அவரை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ராணுவத்துக்காக போட்ட மெட்டையே பயன்படுத்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

சிங்கள ராணுவத்திற்காக இந்திய அரசு உதவி செய்ததே, அப்போது எங்கே போயிருந்தது இந்த வீர உணர்வு?
சிசுக்களும் முதியவர்களும் மாற்று உடைகள் இல்லாமல் வெட்ட வெளியில் வெயிலிலும் ,மழையிலும் ,கடும் குளிரிலும் தமிழ் ஈழத்தில் செத்துக் கொண்டிருந்த போது தமிழ் நாட்டில் புத்தாடை ,இனிப்புகள் என்று தீபாவளி கொண்டாடி மகிழவில்லையா? எங்கே போயிருந்தது தமிழ் இன மான உணர்வு?
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆவி உங்களை மன்னிக்கவே மன்னிக்காது..

சனி, 12 டிசம்பர், 2009

அரசியலுக்கு வருவாரா ரஜினி?


''2010-ல் கட்சி;2011-ல் ஆட்சி'' என்கிற எதுகை ,மோனை சொல்லடுக்கு.மெகா சைஸ் போஸ்டர்கள் .அந்த போஸ்டரில் 'சட்டசபையில் முதல் அமைச்சராக ரஜினி' அமர்ந்திருப்பதைப் போல் படம்.டிசம்பர் 12 ம் தேதி பிறந்த நாள் போஸ்டர்களிலேயே ''ச் சும்மா அதிருதுல்ல'' என்று சொல்ல வைத்த போஸ்டர் இதுதான்.
இந்த போஸ்டரின் வாசகங்களுக்கு 'சூப்பர் ஸ்டார்' காரணமில்லை.அவரது தலைமை மன்ற நிர்வாகிகளும் காரணமில்லை என்கிறார்கள்.
அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் நன்றாகவே உணர்ந்திருக்கிற நிலையில் இப்படி ஒரு போஸ்டர்! சிட்டியை ரொம்பவே கலக்கி விட்டது.ரஜினியின் மனம் மாறி இருக்கலாமோ என்கிற சந்தேகம்வரவே அவரை தொடர்பு கொள்ள'முயன்றபோது எந்திரன் ' படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் சந்தோசத்தில் இருப்பது தெரிந்தது.
தமிழ்சினிமா நடிகர்களில் புரட்சித் தலைவர் எம் .ஜி. ஆருக்குப் பிறகு கட்டுக் கோப்பான விதிகளுடன் காக்கப்பட்ட மன்றம் ரஜினியின் மன்றங்கள்தான்.
அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையுடன் பட்டி, தொட்டிகளில் ரசிகர் மன்றங்கள் வேர் விட்டிருந்தன. ஆனால் ஆன்மீகத்தின் பக்கமாக அவரது பார்வை தீவிரமாக பதியத் தொடங்கியதும் ரசிகர் மன்றங்களின் வேகமும் சற்று குறையத் தொடங்கிவிட்டது. வேருக்குத் தண்ணீர் விடும் அக்கறையும் குறைந்து போனது.
''தான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் தன்னுடைய கருத்துகள் அல்ல. எழுதிக் கொடுத்ததைப் பேசினேன்'' என 'சூப்பர் ஸ்டார் ' மனம் திறந்ததும் ரசிகர்கள் சோர்வடைந்து போனார்கள்.ஆனால் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள். அவர் சொடக்குப் போட்டால் போதும் உடனடியாக கிளர்ந்து எழுந்து விடுவார்கள். அந்த உணர்வு சாம்பல் பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
அந்த உணர்வை 'எந்திரன்' படத்துக்காக 'சிலர்' பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போஸ்டர் உருவெடுத்திருக்கிறது .60- ம் வயது 'சஷ்டியப்த பூர்த்தி' விழாவை அவர் எந்த அளவுக்கு கொண்டாடியிருக்க வேண்டுமோ ,அந்த அளவுக்கு அவர் கொண்டாடவில்லை என்கிற வருத்தம் சினிமா வட்டாரத்திலும் இருந்தது. அந்த வருத்தத்தினால் சோர்வடைந்து போயிருந்த ரசிகர்களுக்கு ஊக்கம் ,உற்சாகம் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டர் இருந்தது. அதே நேரத்தில் 'எந்திரன்' படத்துக்கான பூஸ்டர் என்பதையும் மறந்து விடக் கூடாது. அன்று ஒளி பரப்பாகிய 'படையப்பா' படத்தின் நோக்கமும் அதுதான் என்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? சினிமாவைத் தொடர்வாரா? கலைஞர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சொல்லியிருப்பதால் ரஜினியின் கருத்தில் மாறுதல் ஏற்படுமா?
இந்த 'மில்லியன் டாலர்' கேள்விக்கு என்ன பதில்?
ரஜினியே பதில் சொல்லும் வரை இந்த கேள்விக்கு உயிர் உண்டு.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டை விட்டு அம்பாசடர் காரில் புறப்பட்டுவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்துக்குப் போய்விட முடியும். அவருக்காகவே காத்திருப்பவர்கள் தியான மண்டபத்தை திறந்துவிட ,உள்ளே சென்றதும் ரஜினி தியானத்தில் ஆழ்ந்து விடுவார். குறைந்தது நான்கு மணி நேரம் தியானம் நீடிப்பது உண்டு.
இப்படித் தன்னை மறந்து துறவு நிலைக்குப் போய் விடுகிறவருக்கு அரசியல் சரிப்படுமா?
அரசியல் மீது அவருக்கு பற்று ,பாசம் இல்லை என்றாலும் நாட்டின் நலத்திலும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை உண்டு. அது இந்தியனின் கடமை என்கிறார். அதனால் அரசியலைத் தெரிந்து கொள்ள சில நண்பர்களிடம் பேசுவது உண்டு. ஆனால் அதையே சிலர் தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முற்பட்டதால் அந்த நட்பையும் துண்டித்துக் கொள்ளவேண்டியதாகி விட்டது.

நாட்டில் நிகழும் நல்லது கெட்டதை அவர் இப்பொதும் சிலரிடம் பகிர்ந்து கொள்வது உண்டு. ஆனால் அவர்கள் அரசியல் சாராதவர்கள்.
ரஜினிக்கு பதவிகள் மீது ஆசைகள் இருந்தது இல்லை.
விரும்பியிருந்தால் என்றைக்கோ ராஜ்ய சபா வில் அமர்ந்திருக்கலாம். அவர் கேட்டால் எந்த கட்சி ,மறுக்கும்? ஆகவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே அவரது நண்பர்கள் சொல்கிறார்கள் .
சரி, சினிமாவில் தொடர்ந்து இருப்பாரா?
''எந்திரன்'' வரட்டும். அவரே சொல்வார் என்கிறார்கள்.

வியாழன், 10 டிசம்பர், 2009

ஒரு போராளியின் கதை...!

மிகவும் பெருமையாக இருந்தது. நாம் கர்வம் கொள்ளலாம். உலக அளவில் எவரும் செய்திராத அரிய- பெரிய சாதனையை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் .முழுக்க,முழுக்க உடல் ஊனமுற்றவர்கள் சேர்ந்து ஐம்பது நாட்களில் ஒரு தமிழ் திரைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் . அந்த படத்தின் பெயர் ''மா''.
கதை,திரைக் கதை,வசனம் பேராசிரியர் மதன் கேப்ரியல்.அரசு திரைப் படக் கல்லூரி.
இயக்கியவர் இஸ்லாமியப் பெண்மணி பாத்திமாபீவி.
இசை அமைத்தவர் கிடியோன் கார்த்திக் .
நடனம் அமைத்தவர் அமுத ரஜினி.
பாடல்கள் சிதம்பர நாதன் .
துணை இயக்குனர் அருணா தேவி.
இப்படி படைப்பாளிகள் எல்லோருமே உடல் ஊனமுற்றவர்கள்தான்.
இசை அமைப்பாளருக்கு பார்வை இல்லை.டான்ஸ் மாஸ்டருக்கு போலியோ .கால் ஊனம்.ஆனால் அன்று மேடையில் சந்திரமுகி பாடலுக்கு ''ரா..ராரா''என்று சுழன்று ஆடியதைப் பார்த்த போது ஊனம் அவரிடம் இல்லை ,நம் பார்வையில்தான் என்பதை தெரிந்து கொண்டேன் .
படத்தை உருவாக்கியவர்கள் அனைவருமே ஊனமுற்றவர்கள்தான்.அவர்கள் தங்களை'' மாற்றுத் திறனாளிகள் ''enbathaakave அழைக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அது நியாயமும் ஆகும்.
''துணிந்தபின் என்ன தோழா !அந்த இமயமும் என்ன போடா''என்பது ''மா''படத்தில் இடம் பெற்றுள்ள பாடல். பாடலைக் கேட்டபோது உடல் சிலிர்த்தது நண்பர்களே.எத்தகைய வீரமிகு வரிகள்!
துடிப்பான மெட்டு. எழுச்சிமிகு குரல்.
''மா'' ஒரு போராளியின் காதல் கதை.
நடிகர்களில் சிலர் மட்டுமே ஊனமற்றவர்கள் ,கதையின் தேவை அப்படி.
தத்தி நடந்தும்,தவழ்ந்து நடந்தும் ,கம்புகளால் தட்டித் தட்டி நடந்தும் ,வழித்துணையுடன் தமிழ் இன உணர்வோடும் வந்திருந்த ''மாற்றுத் திறனாளிகளைப்பார்க்கபார்க்க பரவசமாக இருந்தது. அவர்களுக்கு இருக்கும் உணர்வு நம்மிடம் இல்லாமல் போனதேன் என்கிற கேள்வியும் எனக்குள் அரித்தது.
பிறவியின் பிழையால் பலவிதமாக பாதிக்கப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திரைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது ''கின்னசையும்'' விஞ்சியது.
இவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அடியேன் கலந்து கொண்டது,நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் !
சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடப்பது பற்றிய சந்திப்பு.
என்னை எதிர் கொண்டவர் நடிகர்-அரசியல்வாதி எஸ்.வி.சேகர்.
வழக்கம் போல காமடி தூக்கல்!
''முன்னெல்லாம் உலக திரைப் பட விழா என்றால் தணிக்கை செய்யப் படாத படங்கள் இருக்கும் ,பார்க்கலாம் என்று வருவார்கள் ,இப்போது நம்ம ஆட்களே அந்த மாதிரிப் படங்களில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இப்போது சென்னையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் படத்துக்குத்தான் பெரிய 'டிமாண்ட்'' என்று சிரித்தார் ,சேகர்.
அவர் சொன்னது உண்மைதான்.
இந்த இடுகையைப் படிப்பவர்கள் நிச்சயம் ஏதோ ஒருவகையான உணர்வுக்கு ஆளாகக் கூடும். அதை என்னிடம் பகிர்ந்து கொண்டால் எனது அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு உதவக் கூடும்.
எதிர்பார்க்கிறேன்!

செவ்வாய், 8 டிசம்பர், 2009

'செக்ஸ்'அர்ச்சகருக்கு வக்காலத்து.

''கோவில் அர்ச்சகரும் மனிதன்தானே ,அவருக்கு காம உணர்வுகள் இருப்பது தப்பு இல்லை !விபசாரிகளை காசு கொடுத்துத் தானே அனுபவித்திருக்கிறார்.அதில் என்ன தவறு இருக்கிறது '' என்று ஒரு பெண் எழுதியிருக்கிறார்[!].
பெண்ணின் பெயரில் ஒரு ஆண் எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.
எழுதியது ஆணா, பெண்ணா என்பதல்ல நம் கவலை.
பொதுவான ஒரு இடத்தில் ,மதம் சார்ந்த இடத்தில் ,வழிபாட்டுத் தளத்தில் ,பல பெண்களுடன் முறை கேடாக ,ஒழுக்கக் கேடாக அர்ச்சகன் காம வேட்டை ஆடியதை தவறில்லை என்று சொல்லுவதுதான் கவலை அளிக்கிறது.
கடவுள் இருக்கிறாரா,இல்லையா?
அது ஆத்திக-நாத்திக விவாதத்திற்குரியது.
நாம் கவலைப் படுவது ஒழுக்கத்தைப் பற்றி!
கடற்கரை,திரை அரங்குகள் ,காப்பி ஷாப் இவைகளுக்கு அடுத்து காதலர்கள் சந்திக்கும் இடமாக கோவில்கள் இருக்கின்றன என்பது கவலைக்குரிய உண்மை! இதை யாரும் மறுக்க முடியாது.
இப்படி ஒரு சூழல் இருந்து வருகிறபோது ,கோவில் கருவறையை காமக் கூடமாக அர்ச்சகர் மாற்றிக் கொண்டது தப்பில்லை என வாதிடுவது சமூக நலனுக்கு நல்லதில்லை.
செக்ஸ் அர்ச்சகருக்கு ஆதரவான கருத்து நிச்சயமாக ஒரு பெண்ணின் கருத்தாக இருக்க முடியாது.
பெண்ணின் பெயருக்குப் பின் இருக்கிற ஒரு ஆணின் ஆதிக்க வெளிப்பாடுதான் அது.
ஐவருக்கு ஒரு மனைவி சாத்தியமாகிறது மகாபாரதக் கதையில்!
அதுவே நிஜத்தில் நடக்குமேயானால் அந்த பெண்ணைக் கைது செய்து விபச்சார வழக்குப் பதிவு செய்துவிடுவார்கள்.
நீதி போதனைக் கதையாக இருந்தாலும் ,நிஜக் கதையாக இருந்தாலும் ஆணாதிக்கம்தான் தலை தூக்கிநிற்கும்.
ஆண்களுக்குத் திமிர் எடுத்தால் எங்கேயும் ,யாருடனும் போகலாம் என்பது செக்ஸ் அர்ச்சகருக்கு வக்காலத்து வாங்கும் செயல்தான் .
இந்தக் கருத்து உங்களுக்கு உடன்பாடா ஐயா?
அப்படியென்றால் எனக்குபோடுங்கய்யா வோட்டு!

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கவிஞர் சிநேகனின் நமீதா ஆசை!

நில் கவனி என்னை காதலி படத்தின் இசை,முன்னோட்டம் வெளியீட்டு விழாவுக்கு செம கூட்டம்.சிறப்பு விருந்தினர் நமீதா .
எல்லா மீடியாக்களும் சென்ட் ப்ரெசென்ட் ஆஜர்!
கதாநாயகனின் படத்தை தம்மாத்துண்டு சைசில் வைத்துவிட்டு ,நமீதாவின் படத்தை பெரிசு பெரிசாக வைத்திருந்தனர். பெப்சி தலைவர் குகநாதனே வருத்தப் பட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
''கவர்ச்சி தப்பில்லை.தமிழ் ரசிகனுக்கு 'தள..தள 'என்று இருக்கவேண்டும் .நமீதா அப்படித் தான் இருக்கிறார். தமிழ் படங்களுக்கு கலைஞர் விலக்கு கொடுத்திருப்பதே அந்த படத்தில் தமிழ் பண்பாடு ,கலாச்சாரம் இதெல்லாம் இருக்கவேண்டும் என்பதுதான். பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு ''கதாநாயகனின் படத்தை காணலியே'' என்று பின் பக்கமாக பார்க்க '' கீழே பாருங்க'' என்று பானரை காட்டினார்கள்.
சிரித்துக் கொண்டே உட்கார்ந்து விட்டார்,வி சி .கு.
பாடலாசிரியர் சிநேகன் பேச வந்தார்.
'' எங்க கிராமங்களில் இப்பல்லாம் பாவாடை,தாவணி போட்ட பொண்ணுகளைப் பார்க்க முடியலே .நான் நமீதாவைபாவாடை 'தாவணியில் பார்க்கணும்னு ஆசைப் படுகிறேன்.''என்றார்.

'' என்னை பாவாடை,தாவணியில் யாருங்க நடிக்க வைக்கப் போறாங்க .அதெல்லாம் நடக்கப் போறதில்ல'' என்று சிநேகனைப் பார்த்து சிரிக்க ,கவிஞர் விடுவதாக இல்லை.
''நான் டைரக்ட் பண்றேன்'' என்று ஆசையை சொல்லிவிட்டார். முன்னோட்டக் காட்சியில் நடிகர் பாலாவும் நமீதாவும் காதல் காட்சியில் காட்டியிருந்த நெருக்கம் சினேகனை அப்படி பேச வைத்து விட்டது.

சனி, 5 டிசம்பர், 2009

இளையராஜா பிரதர்ஸ் தேர்தல் பாட்டு.

இதைப் படிப்பவர்கள் கோபப் பட்டாலும் சரி,''சரியாத் தான்யா சொல்லியிருக்கிறான் '' என்று சந்தோசப் பட்டாலும் சரி 'நச்'னு உங்கள் கருத்துகளை கமெண்ட்ஸ்ல அடிச்சிருங்க!
இடைத் தேர்தல்கள் வரப் போகுது. தொடர்ந்து பொதுத் தேர்தல் வந்தாலும் வரலாம்.
வாக்காளனை நினைச்சு பெருமைப் படணும் சார்! ஒரு காலத்தில் நிமிர்ந்து நின்னவன் ''எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன்'னு இப்ப விவேக் ஸ்டைலில் வளைஞ்சு நின்னாலும் ''ரேட்டில்'' நிமிர்ந்திட்டானே !
மஞ்சப் பெட்டி,சிவப்புப் பெட்டின்னு கலர்களில் ஓட்டுப் பெட்டி இருந்த போது வாக்காளன் வீரனாகவே இருந்தான். கலர் மாறி வாக்கு சீட்டில் சின்னங்கள் வந்தபிறகு படிப்படியா கீழிறங்க ஆரம்பிச்சிட்டான். ஒரு ஓட்டுக்கு குறைஞ்சது அஞ்சு ரூபா கொடுக்க ஆரம்பித்த 'அபேட்சகர்கள்' போகப் போக' வேட்பாளர்கள்' என்று மாறியதும் நூறு,இருநூறு என்று ரேட்டை .ஏத்தி விட்டார்கள். அந்த காலத்தில் ,கம்யு. கட்சிக்காக மேடைகளில் கச்சேரி செய்த அன்றைய இளையராஜா சகோதரர்கள் ''ஒத்த ரூபாயும் தாரேன் உப்புமா காப்பியும் தரேன், ரெட்டைக் காளை மேல பாத்து ஓட்டைக் குத்து'' என்று பாடி அன்றைய பட்டுவாடா நிலைமையை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.
வாக்காளனுக்கு ருசியைக் காட்டிவிட்டார்கள் அந்தக் காலத்திலேயே!
வேட்டி,சேலை ,எவர்சில்வர் குடம் ,என்று மொய் வைக்கிறமாதிரி பணம்,காசு வைத்து ருசியை அதிகப்படுத்தி விட்டார்கள்.
மூக்குத்தி கொடுத்து ஓட்டுக் கேட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதன்பிறகு கோழிப் பிரியாணி ,குவாட்டர் ,கூடவே நாலு இலக்கத்தில் கவனிப்பு என்று வாக்காளன் தன்னுடைய ''ரேட்டை'' உயர்த்திவிட்டான்.

''வாக்காளா ,உன் கையில் இருக்கிற வாக்கு சீட்டில்தான் நாட்டின் தலை விதியே இருக்கு''என்று சொல்லி சொல்லி அரசியல்வாதிகள் மக்களைக் 'கரப்ட்' பண்ணிவிட்டார்கள். பணம் காசுக்குப் பழக்கப் படுத்திவிட்டார்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் ''தலைவிதியை'' மாற்றிக் கொள்வதற்காக மக்களின் மனநிலையை மாற்றிவிட்டார்கள்.இப்படியெல்லாம் குற்ற சாட்டுகள் உண்டு.

வோட்டு வாங்கி செயித்தவர்கள் மாட மாளிகைகளிலும் ,அவர்களை செயிக்கவிட்டவர்கள் குடிசைகளிலும் வாழ்கிறார்கள்.
வாக்காளன் இன்னமும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறான்.
யாரும் ஓட்டுப் போடாமல் இருக்கக் கூடாது.அது குற்றம் என்று வாய் கிழிந்தவர்கள் இப்போது 'ஓட்டுப் போட விரும்பவில்லை 'என்பதை ஓட்டு சீட்டில் 'ஓ' குத்தி போட சொல்கிறார்கள். அவனே விருப்பமில்லாமல் தானே வீட்டில் படுத்துக் கிடக்கிறான். அவனை ஏன் வம்பாக இழுத்து வந்து வரிசையில் நிற்க வைக்கிறீர்கள்? அவன் வந்தாலும் வராவிட்டாலும் அவனது வோட்டு எந்த கட்சிக்காவது போய் விடும். செத்தவர்கள் உயிர் பிழைப்பது தேர்தல் காலத்தில்தான் .
சரி, தீர்வுதான் என்ன?
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களை தண்டிக்க அரசியல் கட்சிகள் விரும்புமா? எந்த அரசு வந்தாலும் இதே கதைதான். அதனால் தேர்தல் கமிசனே ஒரு ரேட்டை நிர்ணயம் பண்ணினால் என்ன? இது யோசனைதான் !

செவ்வாய், 1 டிசம்பர், 2009

முன்னணி நடிகருக்கு வலை வீசும் அதிமுக

அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத ஒரு அழைப்பு ,தொலைபேசியில் !
பேசியவர் எனது நண்பர் .
அவர் அரசியல் களம் .
நானோ திரைப் படம் சார்ந்த செய்தியாளன் .
அத்திப் பூத்தது மாதிரி தான் எங்கள் சந்திப்பு.
''நான் கேள்விப் பட்டதை சொல்லுகிறேன் .விசாரித்து சொல்கிறீர்களா?''என்று என்னிடம் கேட்டார்.
''செய்தி என்ன?'' என்று கேட்டேன்.
''அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒரு முன்னணி நடிகரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .சின்னம்மா சசிகலாவின் ஆலோசனைப் படி இந்தப் பேச்சு நடக்கிறது. எதற்காக என்பது தெரியவில்லை .ஏன் என்பதும் புரியவில்லை! அதிமுக தரப்பில் விசாரித்தபோது மறுப்பு ஏதும் சொல்லாமல் சிரிக்கிறார்கள். நீங்கள் நடிகர் தரப்பில் விசாரியுங்களேன்'' என்று நட்புடன் கேட்டார் .

அவர் குறிப்பிட்ட நடிகர் யார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
அரசியலிலும் ,சினிமாவிலும் எதுவும் ,எப்போதும் ,நடக்கலாம்.
திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்த 'நடிகர்திலகம்' கருத்து வேறுபாடு காரணமாக தேசிய இயக்கத்திற்கு வந்ததும் ,தேசிய இயக்கத்தில் இருந்த 'புரட்சித் தலைவர்' திராவிட இயக்கத்திற்கு வந்ததும் தமிழக அரசியலில் முன்னுதாரணமாக இருக்கின்றன .
இரண்டு பெரிய நடிகர்கள் ஒரே இயக்கத்தில் இருப்பது சாத்தியமில்லை. யாருக்கு முதலிடம் என்று தொழில் ரீதியாக போட்டியிடக் கூடியவர்கள் எவரும் இரண்டாம் இடத்திற்கு வர விரும்ப மாட்டார்கள் !
ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது என்பது அனுபவப் பூர்வமான வாய் மொழியாகும்.
இந்த அடிப்படையில் எனது நண்பரின் தகவலை விசாரித்தேன்.
நடிகர் தரப்பில் கசப்பு இருக்கிறது என்கிற உண்மை தொடக்கத்திலேயே முகம் காட்டிவிட்டது.
நடிகர் நடித்திருக்கும் படத்தின் உரிமையை வாங்கி இருக்கிற ஒரு தொலைக் காட்சி தந்த நெருக்கடிகளே காரணம் என்பதாக ஒரு பிரிவினர் சொன்னார்கள்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு அதிமுக காய்களை நகர்த்தி வருகிறது .
வளர்ந்து கொண்டிருக்கிற 'சூப்பர் ஸ்டார்''களில் ஒருவரை தங்களது
ஆதரவாளராக மாற்றுவதற்கு பலே வியூகங்களை வகுத்துக் கொண்டுள்ளது.

இதை என் நண்பனிடம் சொன்னேன்.

இது உண்மையா, இல்லையா என்பதை அவனே கண்டுபிடிக்கட்டும்.

சனி, 28 நவம்பர், 2009

புலம்பலைக் கேளுங்கள் ...!

நீ அருகில் வந்ததும் வெட்கம் விளக்கு அணைக்கிறது.
இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது.
ரத்த நாளங்களில் உணர்வுகள் அலை அடிக்கின்றன.
நீ அணைப்பாய் என எனது தேகம் ஏங்குகிறது.
ஏன் காலம் தாழ்த்துகிறாய் ?
என்னை வாரி எடுத்துக் கொள்.
அணைத்துப் பார்.
அடங்கிக் கிடப்பேன்.
உனது கர்வம் தலை நிமிர்ந்து பார்க்கும்.
எவ்வளவு அழகு நான் என்பது உனக்குப் புரியும்!
நமது தழுவல் உனக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
அடுத்தவர்கள் உன்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.
அத்தனை பேர் நெஞ்சிலும் பொறாமைத் தீ பற்றிக் கொள்ளும்.
உன்னை அணைத்து இருப்பதால் எனக்கும் பெருமை.
என்னைப் பற்றி உனது தோழிகள் கேட்பார்கள் .
எனது பெயர் என்ன என விசாரணை செய்வார்கள்.
எனக்குப் பெருமை சேர்க்க மாட்டாயா?
எழிலார்ந்த கரங்களால் எடுத்துத் தொட்டுத் தடவிப் பார்.
உனக்கும் எனக்கும் எவ்வளவு பொருத்தம் என்பது தெரியும்.
கன ,கச்சிதம் கண்ணே!
காலம் தாழ்த்தாதே !
எடுத்துக் கொள் .
எவளாவது கிழவி கையில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்.
காலம் கேட்டுக் கிடக்கிறது.
என்னை உன் வீட்டுக்கு கொண்டு போய் அந்தரங்க அறையில் அணைத்துப் பார்!
நம்மைப் பற்றி கவிப் பேரரசு வைரமுத்து கவிதை எழுதி இருக்கிறார்.
''கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே'' என்று பாடி இருப்பது உன்னையும் என்னையும் நினைத்து தான்.

இதுவரை புலம்பியது ''ப் ரா'வின் புலம்பல்!!

செவ்வாய், 24 நவம்பர், 2009

எங்கே தமிழன்?

'' காணவில்லை '' என்று விளம்பரம் வந்திருக்கே ,யாரை காணாமாம்?''
'' தமிழனைக் காணாமாம் !''
''என்ன விளையாடுறியா''?
''நான் ஏன் விளையாடுறேன் ''?
''பின்னே என்ன,இப்பத் தானே சினிமா கொட்டாயில் வீரத் தமிழர்களை பார்த்திட்டு வரேன் .அடி,தடி,உதை ,ரத்தம்னு வீரம் கொப்பளிக்கிற அந்த கண் கொள்ளாக் காச்சியை ,பார்த்திட்டு பிரமிச்சுப் போயிட்டன்ல''
''கொஞ்சம் புரியும்படியா சொல்லப்பா''?
''அந்த படத்திலே ரெண்டு ஹீரோக்கள் .தோரணம் கட்டுறதிலே
விவகாரம். கத்தியை எடுத்து சொருகிட்டங்க.''
''யாரு அந்த ஹீரோக்களா ,என்னடா அநியாயமா இருக்கு?''
''அவங்க ரெண்டு பேரும் சந்தோசமாத் தான் இருப்பாங்க!அவங்களோட ரசிக தமிழர்கள்தான் வெட்டுக் குத்துன்னு இறங்கி
வீரத்தை காட்டிக் கிட்டாங்க ''
''நடிகர்கள் நடிகைகள் னு வீரத்தைக் காட்றவங்க தங்களோட தொப்புள் கொடி உறவுகள் பக்கத்து நாட்டிலே படுகொலைகள் செய்யப்பட்டதையோ ,முள்வேலிக்குள்ளே அடக்கப் பட்டுக் கிடக்கிறதயோ
நினச்சு வருத்தப் பட்டது உண்டா?''

''நீ விவரம் கெட்டவனா இருக்கே!நடிகையின் தொப்புளை நல்லா காட்டலியே ங்கிற கவலையிலே கிடக்கிறான் .அவனிடம் போயி உறவு பாசம் னு கேட்கலாமா?''
''சரிதான். தமிழரின் வீரம் சினிமாவினால் சிறுமைப் பட்டுப் போச்சு .அவன் அடிமை யாகிட்டான் .என்னதான் பேசினாலும் அவனை திருத்தமுடியாது .கவர்ச்சி ,மது ,இலவசம்னு பழகிட்டான். எனக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைத் துணை வேந்தர் அறவாணன் சொன்னதுதான் நினைவுக்கு வருது.''சங்க காலத்தில் போர்க் குண மக்களாக இருந்த தமிழர்கள் நாளடைவில் சீன,புத்த மதங்களின் விடாத போதனைகளால் போர்க் குணம் இழந்து ,வலிய வரும் எதிரியைக் கூட எதிர்க்கும் ஆற்றல் அற்றவராய் ,இசைந்து செல்லும் சாதுக்களாக மாறிவிட்டனர்'' என்று
சொல்லியிருக்கிறார்''

'' கரெக்ட் ,சரியாத்தான் சொல்லிருக்கிறார்''

''நம்ம வீரம் வீட்டுக்குள்ளதான் ராஜா''

சனி, 21 நவம்பர், 2009

கடவுள் தண்டிப்பாரா ?

கோவில் கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே பெண்களைக் கட்டிப்பிடிச்சு கர்மம் புடிச்ச வேலையெல்லாம் பண்ணிருக்கான் ஒரு அர்ச்சகர் . தன் கண் முன்னாடியே அந்த காமாந்தகாரன் கெட்ட வேலையெல்லாம் பண்ணிருக்கானே ,அந்த கடவுள் சும்மா விடுவாரா ''

இப்படி ரொம்பவும் கவலைப் பட்டு கேட்கிறாள் மனைவி.புனிதம் கெட்டுவிட்டதாகவும் புலம்பல் !

''ஏன்டி இப்படி புலம்புறே,தினமும் குளிப்பாட்டி ,சேலை கட்டி,சிங்காரம் செய்றவன்தானே .பாவம் விட்ருவோம்னு அந்த கடவுள் நினச்சிருக்கலாம் !ஏழை அர்ச்சகன் ,லாட்சுக்கு தள்ளிட்டுப் போகமுடியாது,அதனாலே கர்ப்ப கிரகத்திலேயே ஒதுக்குப் புறமா ஒதுங்கி அவன் வேலையை முடிச்சுக்கட்டுமேன்னு கடவுள் நினைச்சிருக்கலாம் !கருவறைன்னு சொல்றதால அந்த அர்ச்சகன் கரு தரிக்கிற அறைன்னு நினச்சு பொண்ணுகளுக்கு விளையாட்டு காட்டி இருக்கிறான் .பொண்ணுகளும் இஷ்டப்பட்டு தானே இணங்கி போயிருக்காங்க ! நீ ஏன் புலம்பித் தவிக்கிறே? ''
என்று சொல்லி அவளை சரிக்கட்டப் பார்க்கிறான் , கணவன்.

அவளோ விடுவதாக இல்லை!

''மனுசங்களில் ஒரு பிரிவினரை கோவிலுக்குள் விடுறதில்ல. அவங்க கால் வச்சாலே தீட்டுன்னு சொல்லி ஸ்பெஷல் பூஜை பண்றாங்க .எதேதோ முன்னணி கின்னணின்னு சொல்லி எதிர்ப்பெல்லாம் காட்றாங்க,இந்த அர்ச்சகனின் கர்ப்ப கிரக காம விளையாட்டுல மட்டும் கப்சிப்னு வாயை மூடிக்கிட்டாங்களே ,அது ஏன்?''

'' இது சின்ன கோவில்தானே ,விடேன் ''

''அது எப்படி ?சின்ன கோவிலிலும் தலித்துகளை விடுறதில்லை .அவர்களும் கடவுளின் பிள்ளைகள்னு காந்திஜி சொல்லிருக்கிறார் .அது பொய்யா?''
'' நீ வர வர நாத்திகம் பேச ஆரம்பிச்சிட்டே .என்னை மாதிரி பக்கா பக்தனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா ?'' என்று பேச்சை திசை திருப்ப முயன்றான் .

இதைக் கேட்டதும் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

''அடடா, எப்படிப் பட்ட பக்தர் நீங்க ! பக்தர் திலகம் என்று பட்டமே கொடுக்கலாம். அய்யப்பனுக்கு மாலை போட்டு ஒரு வாரம் கூட ஆகலே.'பருவ மழை பாடாப் படுத்துது .குளிர் தாங்க முடியலியேன்னு சொல்லி பாதி ராத்திரியில் மாலையை கழட்டிட்டு வந்து என் பக்கத்தில் வந்து படுத்த ஆசாமி தானே நீங்க! நாட்டுல ரொம்ப பேரு இப்படிப் பட்ட பக்தர்கள்தாங்க! பாவமுங்க கடவுள்கள் '' என்று நக்கலாக சிரிக்க கணவன் எஸ்கேப் !

எப்படியெல்லாம் கடவுளுக்கு கெட்ட பெயர் இப்படிப் பட்ட மனிதர்களால்!

திங்கள், 16 நவம்பர், 2009

சரணம் ஐயப்பா!

இனி ஒரு மண்டலம் எங்கெங்கும் ''சுவாமியே சரணம் ஐயப்பா ''
கோசங்கள் தான் .
''அப்பாடா ,நிம்மதி!தண்ணி அடிச்சிட்டு வந்து மிருகம் மாதிரி விழுந்து இம்சை பண்ணுவான் ,நான் மட்டும் அவனுக்கு பொண்டாட்டியா நடந்துக்கணும். பக்கத்திலே போகலேன்னா அடி,உதை தான் .இந்த இம்சைக்கு தற்காலிக விடுதலை'' என்று சில மனைவிகள் உடம்புக்கு ஓய்வு கொடுத்துக் கொள்ளும் வசந்த காலம்.

''என்ன பொம்பளைடா இவ!வயசுக்கு வந்த பிள்ளைக இருக்கே என்கிற விவஸ்தை கொஞ்சம் கூட இல்லாம சரச மாட கூப்பிடுராளே !இவளிடமிருந்து தப்பிக்கிறதுக்கு இது தான்டா வழி''என்று சிலர் உண்மையாகவே மாலை போட்டுக் கொள்வார்கள் .சிலரது இயலாமை யை மறைப்பதற்கும் இந்த விரதம் உதவும் என்பதை மறந்து விடக்கூடாது .

இறைச்சிக் கடைக்காரர்களுக்கு சற்றே வருமானம் குறையலாம் .டாஸ்மாக்கில் விற்பனை குறைவதால் நாட்டுக்கு நட்டமேதுமில்லை.கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களில் சிலர் மாலை போட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

மனதையும் உடலையும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக ஆத்திகர்கள் கையாண்ட சில வழிகளில் விரத வழிபாடும் உண்டு.

அது ஐயப்பன் வழியாக பெரும் அளவில் விரிவாகி இருப்பது .
மகிழ்ச்சிதான் !

ஆனால் இந்த விரதத்தின் மூலம் குடிகாரர்களுக்கு திருந்துகிற எண்ணம் ,வாய்ப்பு ஏற்பட வேண்டாமா ?

ஒரு மண்டலம் விரதம் இருந்து ஈரலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்பவர்களை ,ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க குடியைமறப்பதற்கு ஐயப்பன் அருள் பாலிக்க வேண்டாமா?

இது எனது கேள்வி ...இல்லையில்லை எனது கவலை!!

வெள்ளி, 13 நவம்பர், 2009

காதல் மன்னன் கம்பனா,பாரதியா?

காதலைப் பற்றி பாடாதவர்கள் யாருமில்லை.
தமிழனுக்கு வேதம் தந்த வள்ளுவரும் பாடி இருக்கிறார்.
வடக்கின் வால்மீகியை புரட்டிப் போட்ட கம்பனும் பாடி இருக்கிறார்.
இவருக்கு இணையாக எவருமில்லை என்று சொல்லப்படும் பாரதியும் பாடியிருக்கிறார். அவரது தாசனும் பாடியிருக்கிறார்.
வழித்தோன்றலான வைரமுத்துவும் பாடியிருக்கிறார்.
ஆனால் ''காதல் பேச்சு'' என்பது என்ன?
எப்போது பேசுவது ,எப்படிப் பேசுவது 'காதல் பேச்சு '?

'கண்ணே மணியே ,கற்கண்டே ,கனியமுதே' என்று பேசுவதுதான் காதல் பேச்சா?

கடற்கரை, கோவில் ,சினிமா கொட்டைகள் என்று ஓரம் கட்டிப்
பேசுகிறோமே அதுவா 'காதல் பேச்சு '?
''இல்லை '' என்று அழுத்தம் கொடுத்து சொல்கிறான் பாரதி!
படித்தவரோ ,படிக்காதவரோ , பட்டிக்காடோ ,பட்டணமோ ,
பேசத் தெரிந்தவரோ ,தெரியாதவரோ ,எவராக இருந்தாலும் தன்னை மறந்து
''காதல் பேச்சில்' கலந்து விடவேண்டும்.
அதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான் எக்ஸ்பெர்ட் பாரதி!
அது எப்போது எங்கே என்பதில் தான் வில்லங்கமே !
''பாதி நடுக்கலவியிலே காதல் பேசி'' என்கிறானய்யா!
என்ன கொடுமைங்க இது? முடியுமா?
முடியும் அதுதான் காதல் பேச்சு !
மஞ்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்து
துன்பம் மறந்து ,அக்கம் பக்கம் மறந்து ,யாரைக் காயப் படுத்துகிறோம் ,என்ன
செய்கிறோம் என்பது அறியாமல் ,எப்படி சொல்வது , எதை சொல்வது என்பது
புரியாமல் ,இன்பத்தின் எல்லையில் ,சுகத்தின் உச்சம் தொட்டு , தங்களை மறந்த
நிலையில்'புதுப்புது வார்த்தைகளை' சொல்வதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான்
பாரதி!
''பாதி நடுக்கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போல
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த் தொழிலை கருதுவரோ''
இதுதான் பாரதியின் கருத்து!
வள்ளுவன் ,கம்பனை விட பாரதி அனுபவித்து சொல்லி இருக்கிறான்.

இது சரியானதுதானா ,இல்லையா?
முரண்படுகிறீர்களா/

திங்கள், 2 நவம்பர், 2009

வெட்கப்படுகிறேன் ..!

ரசிகனின் ரசனை கதாநாயகியின் இடுப்பிலா, அதற்கும் மேல் பகுதியிலா ?

கவலைப்படுகிறார் தயாரிப்பாளர் .

ஆக்சன் படமா ,காதல் படமா,காமடி படமா ,எதை தேர்வு செய்யலாம்?
கவலைப்படுகிறார் கதைநாயகன்.
எந்த ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தால் மார்க்கெட் தொடர்ந்து கிடைக்கும்?

இது கதாநாயகியின் கவலை!

எந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் அதிக சீட்டு கேட்கலாம் என்கிற கவலை கட்சி தலைவர்களுக்கு !
ஆளும் கட்சி மீது எப்படியெல்லாம் குற்றம் சாட்டலாம் என்கிற கவலை எதிர்கட்சிகளுக்கு !
இன்று விஸ்கியா ,பிராந்தியா , பீரா ,எதை அடிக்கலாம் என்கிற கவலை குடிமகன்களுக்கு !
அட ,பாவிகளா!
கொழும்பு அருகில் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழனை சிங்கள போலீசாரும் ,ராணுவத்தினரும் அடித்தே கொலை செய்து இருக்கிரார்களே , யாராவது கவலைபட்டீர்களா ?

படங்களை பார்த்தும் ரத்தம் சூடேற வில்லையா ?

வாழ்க தமிழ்!வாழ்க தமிழன்!

சனி, 31 அக்டோபர், 2009

காட்டுமிராண்டிகள் ...

நம்மில் இன்றும் சிலர் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்.
உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுமே..! கையில் கிடைப்பதை எடுத்து என்னை சாத்த வேண்டும் என்கிற உணர்வு மேலிட என் முகவரி தேடத்தொடங்கி இருப்பீர்களே !

பொறுமை..பொறுமை!
இங்கிலீஷ் நாளேட்டில் ஒரு செய்தி.
வட இந்தியாவில் ராஜ்கோட்டில் ஒரு இளம்பெண் போலீசில் புகார் செய்திருக்கிறாள் அவளை மாமனார் கற்பழித்து விட்டாராம். இதற்கு உதவியாக இருந்து சகலமும் கவனித்து கொண்டவன் ''புரட்சிகரமான '' மானஸ்தன் அவளுடைய புருசன்தான்.

எதற்காக இந்த கற்பழிப்பு?

கணவன் மூலமாக அவள் கரு தரிக்க முடியாது. அவன் ஆண்மையற்றவன் என்பதால் தனது அப்பனை அனுப்பி தன்னை அப்பனாக மாற்றி கொள்ள அவன் போட்ட திட்டமே கற்பழிப்பு என்கிறாள் அந்த பெண் .

இப்போது சொல்லுங்கள் நம்மில் சிலர் காட்டிமிரண்டிகளா இருக்கிறார்களா இல்லையா?

இந்த பாலுணர்வு வரையறை மீறல் நம்முடைய நாட்டுப்புற பாடல்களிலும் காணப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

''மனித சமூகம் எவ்வித வரையறையுமின்றி -தாய் ,சகோதரி ,என்ற வேறுபாடுகள் இல்லாமல் தந்தை ,சகோதரன் என்ற வேறுபாடுகள் இல்லாமல் - புணர தகுந்த ஆண்-பெண் என்ற நிலையில் மட்டும் பாலுணர்வு இருந்த காலமும் உண்டு'' என்கிறார் ஆய்வாளர் டாக்டர் நா. இளங்கோ .

நாட்டுப்புற கதையொன்றில் துலசிலம்மா என்கிற தனது மனைவியை புணர துடிக்கிற தன் அப்பனை பார்த்து 'ஏ ,தாயை புணர்ந்தவனே'' என்று மகன்
கடுமையாக திட்டுகிறானாம்,மகன்.

இன்னொரு நாட்டுப்புற பாடலில் மாமி- மருமகன் தகாத உறவு பற்றி
ஒரு பாடல் உண்டு.
''வண்டி ஏறினால்
குலுங்கி கொட்டும்
நான் வரலே மாமி அத்தே '' என்று மருமகன் மாட்டு வண்டியில் ஏற மறுக்கிறான்.
அதற்கு மாமியார் ,
''குலுங்கி கொட்டினால்
அணைத்து பிடிக்கிறேன்
வாடா மருமகனே '' என்று பதில் பாட்டு பாடுகிறாள் .

இன்னொருபாடலும் உண்டு.

''சின்னப்பொண்ணு வேணுமா ,
பெரிய பொண்ணு வேணுமா,
வாடா மருமகனே?'' என்று அத்தை கேட்க மருமகனோ

''சின்னப்பொண்ணும் வேணாம் அத்தே ,
பெரிய பொண்ணும் வேணாம் ,
அத்தே ,
நீ இருந்தா போதும் அத்தே'' என்று பாடுகிறானாம்.

எப்பூடி ?

வியாழன், 29 அக்டோபர், 2009

எங்கே சொல்வது?

அண்மையில் பாரதிராஜாவின் தெக்கித்திப்பொண்ணு சீரியல் படப்பிடிப்பின் போது ஒரு சுவையான நிகழ்வு!

உணவுக்கான இடை வேளை .
நடிக-நடிகையர் அரட்டையில் அந்த வட்டாரம் அதகளமாகி இருந்தது .

ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதும் கிள்ளி விளையாடுவதுமாக பொழுது போனது.

அப்போது அம்சமணியாக நடிக்கும் நடிகை ஒரு கல்லை எடுத்து விளையாட்டுபோக்கில் வீசி எறிய அது வக்கிலின் டிரைவராக நடிக்கும் நடிகர் மீது ''படாத இடத்தில்'' விழுந்துவிட்டது.

மனிதர் அலறி விட்டார். ''ஐயோ செத்தகிளி மீது கல்லு விழுந்திருச்சே ''என்று கதறியவரை சுற்றி சூழ்ந்து கொண்டு கலாட்டா பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் .

இந்த விளையாட்டு கொடுமையை எங்கே சொல்வது ராசா !

பாரதிராஜா காது வரை நியூஸ் போய்விட்டது.

அன்றிலிருந்து அந்த நடிகரை ''செத்தகிளி' என்று கூப்பிட தொடங்கி விட்டார்கள்.
.

புதன், 28 அக்டோபர், 2009

இருளுக்கு நிழல் தேடும் மனிதர்கள்.

கற்பனை அல்ல.
உண்மை நிகழ்வு.
இருவரும் ஒருவரை ஒருவர் உண்மையுடன் நேசித்தனர்.
நீயின்றி நான் இல்லை ',நானின்றி நீயில்லைஎன்று காதலை கற்புடன் வளர்த்தனர் .
ஆனால் அவளுக்கு கட்டாய கல்யாணம் வேறு ஒருவருடன்!
எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லை .பெற்றோர் அவளை பயமுறுத்தி மண மேடையில் உட்காரவைத்துவிட்டனர் .
காலையில் கல்யாணம்; அன்று இரவு முதலிரவு!
ஆனால் மாலையிலேயே காதலனுடன் ஓடிவிட்டாள் .
காதலில் வெற்றிபெற்ற அவளை இப்போது ஓடிப்போனவள் என்பதாக இந்த சமுதாயம் சொல்கிறது.
நியாயமா ? நேர்மையா?
தாலி கட்டிவிட்டால் அவளுடைய காதல் உணர்வுகளை காவு கொடுத்துவிட வேண்டுமா?

நீ எவனை காதலித்திருந்தாலும் சரி தாலி கட்டியவனுடந்தான் கட்டிலை பகிர்ந்து கொள்ள வேண்டும் ,அதுதான் பத்தினித்தனம் என்று இந்த சமுதாயம் சொல்கிறது!

நெஞ்சு நிறைய நேசித்தவனுடன் காமம் சாராத காதலுடன் வாழ்ந்த அவளை ''ஓடிப்போனவள்'' என்கிறார்களே ,அவர்களுக்கு ஒரு கேள்வி?
காதலுடன் காமத்தை பகிர்ந்துகொண்ட ஒருவளுக்கு கட்டாய கல்யாணம் செய்து வைத்து தாலி சென்டிமென்ட் ,குடும்ப செண்டிமெண்ட் இவைகளை சொல்லி "கணவனாக்க பட்டவனுடன் கட்டிலை பகிர்ந்து கொள்ள வைப்பதற்கு என்ன பெயர் ?

இவர்கள் எல்லோரும் இருட்டுக்கு நிழல்கள் தேடுகிறவர்கள்!

கோமாளிகள் !

சனி, 24 அக்டோபர், 2009

கடவுளர்களா ,மனிதர்களா?

சிவசேனா -பாஜக கூட்டணி மகாராஷ்ட்ராவில் தோற்று விட்டதால் கடவுள் தங்களை கை விட்டு விட்டதாக சொல்கிறார் பால்தாக்கரே !

பாவிகளை எப்படியா கடவுள் நம்புவார் அதனால் உங்களை கை விட்டுவிட்டார் என்று மகிழ்கிறது காங்கிரஸ் கட்சி !

சரி,தமிழ்நாட்டில் நாப்பத்திரெண்டு வருடங்களாக காங்கிரசை தொங்கலிலே விட்டுவைத்திருக்கிறாரே கடவுள். அதற்கு கட்சி மாபாவி என்பது பொருளா ?

ஈழ தமிழ் இனத்தின் கோர அழிவுக்கு முழு காரணமாக இருந்த -இருக்கிற காங்' கட்சிக்கு இனிவரும் காலங்களில் என்ன தண்டனை கொடுப்பான் ? அரசியல்வாதிகள் இப்படி கடவுள் அருள் பற்றி சொல்லும்போது நம் கண்களில் ஒரு செய்தி பட்டது.கடவுளின் பிரதிநிதியான ஒரு சாமியாரை கைது செய்திருக்கிறார்கள் .லேகியம் கொடுத்து பிறன்மனை வேட்டை ஆடிய அவர் கஞ்சா சாமியார். இப்படி கடவுள் அருள் பற்றி நிறைய சொல்லலாம் .

இதோ தீபாவளி ஸ்பெஷல் செய்தி!

தீபாவளிக்கு இந்த வருஷ மது விற்பனை ௨00 கோடி .
''கள் குடிக்காதே ''-வள்ளுவர் சொல்கிறார் .
''அளவுடன் குடி ஆயுள் நீடிக்கும்''-சொல்கிறார் சுக்கிராச்சாரி
வள்ளுவர் மானுடனின் பிரதிநிதி .
சுக்கிராச்சாரி கடவுளரின் பிரதிநிதி .
இந்த டாஸ்மாக் குடிமகன் யார் சொல்வதை கேட்பான் ?
தேவலோக வாசிகள் சோமபானம் குடிக்கலாம் 'பூலோகவாசிகள் மது குடிக்க கூடாதா ?அடுத்தவனின் மனைவியை ஆக்கிரமிக்கலாம் என்பதை கண்டுபிடித்தவர்களே நமது தேவலோகவாசிகள்தான் .அவர்களை கடவுளாக கும்பிடுகிறோம் .பிறன்மனை நோக்கிய து தப்பு என்றால் கடவுள்களும் தப்பானவர்கள்.
கள்ள காதலுக்கும் அடித்தளம் போட்டவர்கள் கடவுள்கள்.தவமுனிவரின் மனைவியை கெடுத்தவன் இந்திரன் .

பிரமனுக்கு ஏன் நான்கு முகம்?
திலோத்தமையின் அழகில் மயங்கிய பிரமன் நான்குதிசைகளிலும் முகம் கொண்டு பார்த்ததால் வந்தது என்கிறது புராணம் .
இப்படி மனிதனுடைய எல்லா தவறுகளுக்கும் காரணம் நாம் வணங்குகிற கடவுள்களே .
ஆக ,தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கடவுள்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தானே ?

நீங்கள் என்னசொல்கிறீர்கள் ?

வியாழன், 22 அக்டோபர், 2009

கம்பனும் தாசி வீடும் ...

என்னுடைய பெரும்கவலை ''கம்பன் தாசி வீட்டுக்கு போனானா இல்லையா ''என்பதுதான் .

திருவொற்றியூரில் இருந்த சதுரானந்தபண்டிதன் மடத்தில் இருந்த வல்லி என்கிற தாசியுடன் பல நாட்கள் ஆனந்தமாக இருந்திருக்கிறானாம்' அவளுக்கு எருமை மாடுகளை பரிசாக வழங்கியிருக்காராம்.
இவள் மட்டுமல்ல மயிலையில் இருந்த திருவாலி என்கிற தாசியுடனும் தொடர்பு வைத்திருந்தானாம் .
''அண்ணல் திருவாலினி அணி மயிலை அத்தனையும் வெண்ணிலவின் சோதி விரித்தே -நண்ணும் தடந்து பூவிற் பாணந்தான் முகத்தே கொண்டு
'நடந்து புவிற்ப்பானகை'' எனப்பாடி நகைகள் மற்றும் பல பரிசுகளை கொடுத்து சோழ நாட்டுக்கு கூட்டிக்கொண்டு போனானாம்.
இவர்கள் ...போதாதென்று குரும்பை என்பவளுடனும் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது . கம்பனே தாசி வீட்டுக்கு போயிருக்கிறபோது நாங்கள் போனால் தப்பா என்று சிலர் நியாயம் கேட்டுக்கிளம்பி விடக்கூடாதல்லவா ?
அந்த கவலையால் இதை எழுதி இருக்கிறேன்
ராமாயணம் எழுதிய கம்பனும் தாசி வீடு போன கம்பனும் வேறு வேறு கம்பன்கள் என்பதற்கு சான்றுகள் இருந்தால் எனக்கு எழுதுக.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கடவுளின் கள்ளக் காதலிகள் !

"எதிரியின் வாய்க்குச் சோறு ஊட்டாத ஒரு ஆண்டவனை அல்லது சமயத்தை , கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காத ஒரு கடவுளை அல்லது சமயத்தை நான் நம்ப முடியாது !"
இப்படி சொன்னவர் யாராக இருக்க முடியும் ?
கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்த்த யாரோ ஒரு தலைவராக இருக்கலாம் என்று நினைக்கலாம் .
சுவாமி விவேகானந்தர் கடவுள் மறுப்பு இயக்கத்தவரா என்ன?
ஆண்டவன் எவனும் , சமயம் எதுவும் எதிரிக்கு உணவு கொடுக்காதே , கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காதே என்று சொல்லவில்லை ! அப்படிச் சொல்கிறவர்கள் , அல்லது அப்படி செயல் படுகிறவர்கள் ஆத்திகம் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் அரசியல்வாதிகளாகவுமே இருக்கிறார்கள் .இதுதான் உண்மை.
நாத்திகம் என்பது இங்கே சிலருக்கு முகமூடியாக இருக்கிறது . அவர்கள் கடவுளர்களின் கள்ளக் காதலிகள் ! இரகசியமாக வணங்குகிறார்கள் .
ஆத்திகம் என்பதும் இங்கே வணிகப் பொருளாகவே பார்க்கப்படுகிறது . கடவுளர்களின் பெயரால் காசு பார்கிறார்கள் .
ஆக நாத்திகமோ ஆத்திகமோ எதுவுமே இங்கே நேர்மையாக அணுகப் படவில்லை என்பதே உண்மை . புனிதமாக மதிக்கப்படுகிற ஆலயங்கள் இன்று வணிகப் பொருட்கள் விலை போவதற்கு , விளம்பரச் சாதனங்களாக பயன்படுகின்றன . இது உண்மையா இல்லையா?

வியாழன், 24 செப்டம்பர், 2009

சொந்தக் காசில் சூன்யம் !

சும்மா கிடக்கிற சிட்டுக் குருவிக்கு சோத்தைப் போடுவானேன் , கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்தவருவானேன் என்று கிராமத்து பெரிசுகள் சில மன்மத குஞ்சுகளைப் பற்றி சலித்துக் கொள்வது உண்டு .
நமது கிரிக்கெட் வீரர்கள் கிரவுண்டில் கோட்டை விட்டாலும் மன்மத கிரவுண்டில் மன்மத ராசாக்கள்தான் ! நடிகைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் . இதனால் இந்திய அணி தோல்வி அடைகிறது , என்கிற குற்றச்சாட்டு இருந்துவருகிற நேரத்தில் செக்சில் கலக்கினால் பீல்டில் வெளுத்து வாங்க முடியும் என்பதாக இந்திய அணி கோச் கேரி கிர்ஸ்டன் திருவாய் மலர்ந்திருக்கிறார் .
விளங்குமாய்யா ! விடிய விடிய பெட்டில் விளையாடியவன் பீல்டில் ஓட முடியுமா? மூச்சு வாங்கி , முட்டி தேஞ்சு மட்டையை போட்டுவிட்டுப் போய் விடுவான் . இந்திய அணி ஜெயிப்பதற்கு வழி இதுதானா ? சொந்த காசில் இந்திய அணி சூன்யம் வைத்துக் கொள்ளப் போகிறது ?

புதன், 23 செப்டம்பர், 2009

கவிராயர்களும் கருநாக இந்திரியமும் !

உட்கார்ந்து எழமுடியாத போதிலும் மதன விளையாட்டுகளில் மனதளவில் கிறங்கி போகிற கிழட்டு பிராணிகள் எண்பதிலும் உண்டு
நாளேடுகளில் நாள்தோறும் படிக்க முடிகிறது நாற்றமெடுத்த செய்தியை . சுடுகாடு அழைக்கின்ற நேரத்திலும் வாலிப வயோதிகர்கள் வலுவேற்றுகிற லேகியத்தை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள் . இத்தகைய விளம்பரத்தை தேடி தேடி படிப்பதால் தான் மான்கறி வைத்தியர்கள் சந்து பொந்துகளில் எல்லாம் கிளைகள் திறக்கிறார்கள் .
இக்காலத்திய கவிகளை விட ஆதி காலத்து கவிராயர்கள் மதனாபிசேகம் வியாபித்து நிற்பதற்கு மருந்துகள் கண்டுபிடித்து பாடிஇருக்கிறார்கள்
'மின்னிக்காய் , மாங்காய் , விளங்காய் , புல் ஆமணக்கு ,கண்ணிகிழங்கு வெருகங்கிழங்கு , பொரிகாரம் போரத்தை ,பூலாங்கிழங்கு ,கரியபவளம் காசுக்கட்டி , கெருடபச்சை ,புள்ளிமான்மூளை , புலிநகம் ,செம்போத்திறகு , கள்ளியடிசெஞ்சூகைக் ,கண் பீழை ,முள்ளெலிப்பல் ,காக்கை கடைக்கண் ,கருநாக இந்திரியம் ' இவையெல்லாம் சேர்த்து மருந்து செய்தால் பெண்ணே கதியென படுத்து விடுவானாம் . சரவண பெருமாள் கவிராயர் தனது விரலி விடு தூதுவில் இப்படி பட்டியலிட்டிருக்கிறார் .
இந்த கவிராயர் சொல்கிறபடி எந்த கிறுக்கனாவது மருந்து செய்ய முடியுமா ? கருநாக இந்திரியம் எடுக்க முடியுமா? எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள் !