வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கடவுளின் கள்ளக் காதலிகள் !

"எதிரியின் வாய்க்குச் சோறு ஊட்டாத ஒரு ஆண்டவனை அல்லது சமயத்தை , கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காத ஒரு கடவுளை அல்லது சமயத்தை நான் நம்ப முடியாது !"
இப்படி சொன்னவர் யாராக இருக்க முடியும் ?
கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்த்த யாரோ ஒரு தலைவராக இருக்கலாம் என்று நினைக்கலாம் .
சுவாமி விவேகானந்தர் கடவுள் மறுப்பு இயக்கத்தவரா என்ன?
ஆண்டவன் எவனும் , சமயம் எதுவும் எதிரிக்கு உணவு கொடுக்காதே , கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காதே என்று சொல்லவில்லை ! அப்படிச் சொல்கிறவர்கள் , அல்லது அப்படி செயல் படுகிறவர்கள் ஆத்திகம் நாத்திகம் பேசுகிறவர்களாகவும் அரசியல்வாதிகளாகவுமே இருக்கிறார்கள் .இதுதான் உண்மை.
நாத்திகம் என்பது இங்கே சிலருக்கு முகமூடியாக இருக்கிறது . அவர்கள் கடவுளர்களின் கள்ளக் காதலிகள் ! இரகசியமாக வணங்குகிறார்கள் .
ஆத்திகம் என்பதும் இங்கே வணிகப் பொருளாகவே பார்க்கப்படுகிறது . கடவுளர்களின் பெயரால் காசு பார்கிறார்கள் .
ஆக நாத்திகமோ ஆத்திகமோ எதுவுமே இங்கே நேர்மையாக அணுகப் படவில்லை என்பதே உண்மை . புனிதமாக மதிக்கப்படுகிற ஆலயங்கள் இன்று வணிகப் பொருட்கள் விலை போவதற்கு , விளம்பரச் சாதனங்களாக பயன்படுகின்றன . இது உண்மையா இல்லையா?

வியாழன், 24 செப்டம்பர், 2009

சொந்தக் காசில் சூன்யம் !

சும்மா கிடக்கிற சிட்டுக் குருவிக்கு சோத்தைப் போடுவானேன் , கொண்டைய கொண்டைய ஆட்டிக்கிட்டு கொத்தவருவானேன் என்று கிராமத்து பெரிசுகள் சில மன்மத குஞ்சுகளைப் பற்றி சலித்துக் கொள்வது உண்டு .
நமது கிரிக்கெட் வீரர்கள் கிரவுண்டில் கோட்டை விட்டாலும் மன்மத கிரவுண்டில் மன்மத ராசாக்கள்தான் ! நடிகைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் . இதனால் இந்திய அணி தோல்வி அடைகிறது , என்கிற குற்றச்சாட்டு இருந்துவருகிற நேரத்தில் செக்சில் கலக்கினால் பீல்டில் வெளுத்து வாங்க முடியும் என்பதாக இந்திய அணி கோச் கேரி கிர்ஸ்டன் திருவாய் மலர்ந்திருக்கிறார் .
விளங்குமாய்யா ! விடிய விடிய பெட்டில் விளையாடியவன் பீல்டில் ஓட முடியுமா? மூச்சு வாங்கி , முட்டி தேஞ்சு மட்டையை போட்டுவிட்டுப் போய் விடுவான் . இந்திய அணி ஜெயிப்பதற்கு வழி இதுதானா ? சொந்த காசில் இந்திய அணி சூன்யம் வைத்துக் கொள்ளப் போகிறது ?

புதன், 23 செப்டம்பர், 2009

கவிராயர்களும் கருநாக இந்திரியமும் !

உட்கார்ந்து எழமுடியாத போதிலும் மதன விளையாட்டுகளில் மனதளவில் கிறங்கி போகிற கிழட்டு பிராணிகள் எண்பதிலும் உண்டு
நாளேடுகளில் நாள்தோறும் படிக்க முடிகிறது நாற்றமெடுத்த செய்தியை . சுடுகாடு அழைக்கின்ற நேரத்திலும் வாலிப வயோதிகர்கள் வலுவேற்றுகிற லேகியத்தை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள் . இத்தகைய விளம்பரத்தை தேடி தேடி படிப்பதால் தான் மான்கறி வைத்தியர்கள் சந்து பொந்துகளில் எல்லாம் கிளைகள் திறக்கிறார்கள் .
இக்காலத்திய கவிகளை விட ஆதி காலத்து கவிராயர்கள் மதனாபிசேகம் வியாபித்து நிற்பதற்கு மருந்துகள் கண்டுபிடித்து பாடிஇருக்கிறார்கள்
'மின்னிக்காய் , மாங்காய் , விளங்காய் , புல் ஆமணக்கு ,கண்ணிகிழங்கு வெருகங்கிழங்கு , பொரிகாரம் போரத்தை ,பூலாங்கிழங்கு ,கரியபவளம் காசுக்கட்டி , கெருடபச்சை ,புள்ளிமான்மூளை , புலிநகம் ,செம்போத்திறகு , கள்ளியடிசெஞ்சூகைக் ,கண் பீழை ,முள்ளெலிப்பல் ,காக்கை கடைக்கண் ,கருநாக இந்திரியம் ' இவையெல்லாம் சேர்த்து மருந்து செய்தால் பெண்ணே கதியென படுத்து விடுவானாம் . சரவண பெருமாள் கவிராயர் தனது விரலி விடு தூதுவில் இப்படி பட்டியலிட்டிருக்கிறார் .
இந்த கவிராயர் சொல்கிறபடி எந்த கிறுக்கனாவது மருந்து செய்ய முடியுமா ? கருநாக இந்திரியம் எடுக்க முடியுமா? எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள் !