சனி, 28 நவம்பர், 2009

புலம்பலைக் கேளுங்கள் ...!

நீ அருகில் வந்ததும் வெட்கம் விளக்கு அணைக்கிறது.
இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது.
ரத்த நாளங்களில் உணர்வுகள் அலை அடிக்கின்றன.
நீ அணைப்பாய் என எனது தேகம் ஏங்குகிறது.
ஏன் காலம் தாழ்த்துகிறாய் ?
என்னை வாரி எடுத்துக் கொள்.
அணைத்துப் பார்.
அடங்கிக் கிடப்பேன்.
உனது கர்வம் தலை நிமிர்ந்து பார்க்கும்.
எவ்வளவு அழகு நான் என்பது உனக்குப் புரியும்!
நமது தழுவல் உனக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
அடுத்தவர்கள் உன்னைப் பொறாமையுடன் பார்ப்பார்கள்.
அத்தனை பேர் நெஞ்சிலும் பொறாமைத் தீ பற்றிக் கொள்ளும்.
உன்னை அணைத்து இருப்பதால் எனக்கும் பெருமை.
என்னைப் பற்றி உனது தோழிகள் கேட்பார்கள் .
எனது பெயர் என்ன என விசாரணை செய்வார்கள்.
எனக்குப் பெருமை சேர்க்க மாட்டாயா?
எழிலார்ந்த கரங்களால் எடுத்துத் தொட்டுத் தடவிப் பார்.
உனக்கும் எனக்கும் எவ்வளவு பொருத்தம் என்பது தெரியும்.
கன ,கச்சிதம் கண்ணே!
காலம் தாழ்த்தாதே !
எடுத்துக் கொள் .
எவளாவது கிழவி கையில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்.
காலம் கேட்டுக் கிடக்கிறது.
என்னை உன் வீட்டுக்கு கொண்டு போய் அந்தரங்க அறையில் அணைத்துப் பார்!
நம்மைப் பற்றி கவிப் பேரரசு வைரமுத்து கவிதை எழுதி இருக்கிறார்.
''கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே'' என்று பாடி இருப்பது உன்னையும் என்னையும் நினைத்து தான்.

இதுவரை புலம்பியது ''ப் ரா'வின் புலம்பல்!!

செவ்வாய், 24 நவம்பர், 2009

எங்கே தமிழன்?

'' காணவில்லை '' என்று விளம்பரம் வந்திருக்கே ,யாரை காணாமாம்?''
'' தமிழனைக் காணாமாம் !''
''என்ன விளையாடுறியா''?
''நான் ஏன் விளையாடுறேன் ''?
''பின்னே என்ன,இப்பத் தானே சினிமா கொட்டாயில் வீரத் தமிழர்களை பார்த்திட்டு வரேன் .அடி,தடி,உதை ,ரத்தம்னு வீரம் கொப்பளிக்கிற அந்த கண் கொள்ளாக் காச்சியை ,பார்த்திட்டு பிரமிச்சுப் போயிட்டன்ல''
''கொஞ்சம் புரியும்படியா சொல்லப்பா''?
''அந்த படத்திலே ரெண்டு ஹீரோக்கள் .தோரணம் கட்டுறதிலே
விவகாரம். கத்தியை எடுத்து சொருகிட்டங்க.''
''யாரு அந்த ஹீரோக்களா ,என்னடா அநியாயமா இருக்கு?''
''அவங்க ரெண்டு பேரும் சந்தோசமாத் தான் இருப்பாங்க!அவங்களோட ரசிக தமிழர்கள்தான் வெட்டுக் குத்துன்னு இறங்கி
வீரத்தை காட்டிக் கிட்டாங்க ''
''நடிகர்கள் நடிகைகள் னு வீரத்தைக் காட்றவங்க தங்களோட தொப்புள் கொடி உறவுகள் பக்கத்து நாட்டிலே படுகொலைகள் செய்யப்பட்டதையோ ,முள்வேலிக்குள்ளே அடக்கப் பட்டுக் கிடக்கிறதயோ
நினச்சு வருத்தப் பட்டது உண்டா?''

''நீ விவரம் கெட்டவனா இருக்கே!நடிகையின் தொப்புளை நல்லா காட்டலியே ங்கிற கவலையிலே கிடக்கிறான் .அவனிடம் போயி உறவு பாசம் னு கேட்கலாமா?''
''சரிதான். தமிழரின் வீரம் சினிமாவினால் சிறுமைப் பட்டுப் போச்சு .அவன் அடிமை யாகிட்டான் .என்னதான் பேசினாலும் அவனை திருத்தமுடியாது .கவர்ச்சி ,மது ,இலவசம்னு பழகிட்டான். எனக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைத் துணை வேந்தர் அறவாணன் சொன்னதுதான் நினைவுக்கு வருது.''சங்க காலத்தில் போர்க் குண மக்களாக இருந்த தமிழர்கள் நாளடைவில் சீன,புத்த மதங்களின் விடாத போதனைகளால் போர்க் குணம் இழந்து ,வலிய வரும் எதிரியைக் கூட எதிர்க்கும் ஆற்றல் அற்றவராய் ,இசைந்து செல்லும் சாதுக்களாக மாறிவிட்டனர்'' என்று
சொல்லியிருக்கிறார்''

'' கரெக்ட் ,சரியாத்தான் சொல்லிருக்கிறார்''

''நம்ம வீரம் வீட்டுக்குள்ளதான் ராஜா''

சனி, 21 நவம்பர், 2009

கடவுள் தண்டிப்பாரா ?

கோவில் கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே பெண்களைக் கட்டிப்பிடிச்சு கர்மம் புடிச்ச வேலையெல்லாம் பண்ணிருக்கான் ஒரு அர்ச்சகர் . தன் கண் முன்னாடியே அந்த காமாந்தகாரன் கெட்ட வேலையெல்லாம் பண்ணிருக்கானே ,அந்த கடவுள் சும்மா விடுவாரா ''

இப்படி ரொம்பவும் கவலைப் பட்டு கேட்கிறாள் மனைவி.புனிதம் கெட்டுவிட்டதாகவும் புலம்பல் !

''ஏன்டி இப்படி புலம்புறே,தினமும் குளிப்பாட்டி ,சேலை கட்டி,சிங்காரம் செய்றவன்தானே .பாவம் விட்ருவோம்னு அந்த கடவுள் நினச்சிருக்கலாம் !ஏழை அர்ச்சகன் ,லாட்சுக்கு தள்ளிட்டுப் போகமுடியாது,அதனாலே கர்ப்ப கிரகத்திலேயே ஒதுக்குப் புறமா ஒதுங்கி அவன் வேலையை முடிச்சுக்கட்டுமேன்னு கடவுள் நினைச்சிருக்கலாம் !கருவறைன்னு சொல்றதால அந்த அர்ச்சகன் கரு தரிக்கிற அறைன்னு நினச்சு பொண்ணுகளுக்கு விளையாட்டு காட்டி இருக்கிறான் .பொண்ணுகளும் இஷ்டப்பட்டு தானே இணங்கி போயிருக்காங்க ! நீ ஏன் புலம்பித் தவிக்கிறே? ''
என்று சொல்லி அவளை சரிக்கட்டப் பார்க்கிறான் , கணவன்.

அவளோ விடுவதாக இல்லை!

''மனுசங்களில் ஒரு பிரிவினரை கோவிலுக்குள் விடுறதில்ல. அவங்க கால் வச்சாலே தீட்டுன்னு சொல்லி ஸ்பெஷல் பூஜை பண்றாங்க .எதேதோ முன்னணி கின்னணின்னு சொல்லி எதிர்ப்பெல்லாம் காட்றாங்க,இந்த அர்ச்சகனின் கர்ப்ப கிரக காம விளையாட்டுல மட்டும் கப்சிப்னு வாயை மூடிக்கிட்டாங்களே ,அது ஏன்?''

'' இது சின்ன கோவில்தானே ,விடேன் ''

''அது எப்படி ?சின்ன கோவிலிலும் தலித்துகளை விடுறதில்லை .அவர்களும் கடவுளின் பிள்ளைகள்னு காந்திஜி சொல்லிருக்கிறார் .அது பொய்யா?''
'' நீ வர வர நாத்திகம் பேச ஆரம்பிச்சிட்டே .என்னை மாதிரி பக்கா பக்தனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா ?'' என்று பேச்சை திசை திருப்ப முயன்றான் .

இதைக் கேட்டதும் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

''அடடா, எப்படிப் பட்ட பக்தர் நீங்க ! பக்தர் திலகம் என்று பட்டமே கொடுக்கலாம். அய்யப்பனுக்கு மாலை போட்டு ஒரு வாரம் கூட ஆகலே.'பருவ மழை பாடாப் படுத்துது .குளிர் தாங்க முடியலியேன்னு சொல்லி பாதி ராத்திரியில் மாலையை கழட்டிட்டு வந்து என் பக்கத்தில் வந்து படுத்த ஆசாமி தானே நீங்க! நாட்டுல ரொம்ப பேரு இப்படிப் பட்ட பக்தர்கள்தாங்க! பாவமுங்க கடவுள்கள் '' என்று நக்கலாக சிரிக்க கணவன் எஸ்கேப் !

எப்படியெல்லாம் கடவுளுக்கு கெட்ட பெயர் இப்படிப் பட்ட மனிதர்களால்!

திங்கள், 16 நவம்பர், 2009

சரணம் ஐயப்பா!

இனி ஒரு மண்டலம் எங்கெங்கும் ''சுவாமியே சரணம் ஐயப்பா ''
கோசங்கள் தான் .
''அப்பாடா ,நிம்மதி!தண்ணி அடிச்சிட்டு வந்து மிருகம் மாதிரி விழுந்து இம்சை பண்ணுவான் ,நான் மட்டும் அவனுக்கு பொண்டாட்டியா நடந்துக்கணும். பக்கத்திலே போகலேன்னா அடி,உதை தான் .இந்த இம்சைக்கு தற்காலிக விடுதலை'' என்று சில மனைவிகள் உடம்புக்கு ஓய்வு கொடுத்துக் கொள்ளும் வசந்த காலம்.

''என்ன பொம்பளைடா இவ!வயசுக்கு வந்த பிள்ளைக இருக்கே என்கிற விவஸ்தை கொஞ்சம் கூட இல்லாம சரச மாட கூப்பிடுராளே !இவளிடமிருந்து தப்பிக்கிறதுக்கு இது தான்டா வழி''என்று சிலர் உண்மையாகவே மாலை போட்டுக் கொள்வார்கள் .சிலரது இயலாமை யை மறைப்பதற்கும் இந்த விரதம் உதவும் என்பதை மறந்து விடக்கூடாது .

இறைச்சிக் கடைக்காரர்களுக்கு சற்றே வருமானம் குறையலாம் .டாஸ்மாக்கில் விற்பனை குறைவதால் நாட்டுக்கு நட்டமேதுமில்லை.கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களில் சிலர் மாலை போட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

மனதையும் உடலையும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக ஆத்திகர்கள் கையாண்ட சில வழிகளில் விரத வழிபாடும் உண்டு.

அது ஐயப்பன் வழியாக பெரும் அளவில் விரிவாகி இருப்பது .
மகிழ்ச்சிதான் !

ஆனால் இந்த விரதத்தின் மூலம் குடிகாரர்களுக்கு திருந்துகிற எண்ணம் ,வாய்ப்பு ஏற்பட வேண்டாமா ?

ஒரு மண்டலம் விரதம் இருந்து ஈரலை ஆரோக்கியமாக வைத்துக்
கொள்பவர்களை ,ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க குடியைமறப்பதற்கு ஐயப்பன் அருள் பாலிக்க வேண்டாமா?

இது எனது கேள்வி ...இல்லையில்லை எனது கவலை!!

வெள்ளி, 13 நவம்பர், 2009

காதல் மன்னன் கம்பனா,பாரதியா?

காதலைப் பற்றி பாடாதவர்கள் யாருமில்லை.
தமிழனுக்கு வேதம் தந்த வள்ளுவரும் பாடி இருக்கிறார்.
வடக்கின் வால்மீகியை புரட்டிப் போட்ட கம்பனும் பாடி இருக்கிறார்.
இவருக்கு இணையாக எவருமில்லை என்று சொல்லப்படும் பாரதியும் பாடியிருக்கிறார். அவரது தாசனும் பாடியிருக்கிறார்.
வழித்தோன்றலான வைரமுத்துவும் பாடியிருக்கிறார்.
ஆனால் ''காதல் பேச்சு'' என்பது என்ன?
எப்போது பேசுவது ,எப்படிப் பேசுவது 'காதல் பேச்சு '?

'கண்ணே மணியே ,கற்கண்டே ,கனியமுதே' என்று பேசுவதுதான் காதல் பேச்சா?

கடற்கரை, கோவில் ,சினிமா கொட்டைகள் என்று ஓரம் கட்டிப்
பேசுகிறோமே அதுவா 'காதல் பேச்சு '?
''இல்லை '' என்று அழுத்தம் கொடுத்து சொல்கிறான் பாரதி!
படித்தவரோ ,படிக்காதவரோ , பட்டிக்காடோ ,பட்டணமோ ,
பேசத் தெரிந்தவரோ ,தெரியாதவரோ ,எவராக இருந்தாலும் தன்னை மறந்து
''காதல் பேச்சில்' கலந்து விடவேண்டும்.
அதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான் எக்ஸ்பெர்ட் பாரதி!
அது எப்போது எங்கே என்பதில் தான் வில்லங்கமே !
''பாதி நடுக்கலவியிலே காதல் பேசி'' என்கிறானய்யா!
என்ன கொடுமைங்க இது? முடியுமா?
முடியும் அதுதான் காதல் பேச்சு !
மஞ்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்து
துன்பம் மறந்து ,அக்கம் பக்கம் மறந்து ,யாரைக் காயப் படுத்துகிறோம் ,என்ன
செய்கிறோம் என்பது அறியாமல் ,எப்படி சொல்வது , எதை சொல்வது என்பது
புரியாமல் ,இன்பத்தின் எல்லையில் ,சுகத்தின் உச்சம் தொட்டு , தங்களை மறந்த
நிலையில்'புதுப்புது வார்த்தைகளை' சொல்வதுதான் ''காதல் பேச்சு'' என்கிறான்
பாரதி!
''பாதி நடுக்கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போல
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத் தலைவர் போர்த் தொழிலை கருதுவரோ''
இதுதான் பாரதியின் கருத்து!
வள்ளுவன் ,கம்பனை விட பாரதி அனுபவித்து சொல்லி இருக்கிறான்.

இது சரியானதுதானா ,இல்லையா?
முரண்படுகிறீர்களா/

திங்கள், 2 நவம்பர், 2009

வெட்கப்படுகிறேன் ..!

ரசிகனின் ரசனை கதாநாயகியின் இடுப்பிலா, அதற்கும் மேல் பகுதியிலா ?

கவலைப்படுகிறார் தயாரிப்பாளர் .

ஆக்சன் படமா ,காதல் படமா,காமடி படமா ,எதை தேர்வு செய்யலாம்?
கவலைப்படுகிறார் கதைநாயகன்.
எந்த ஹீரோவுடன் ஜோடி சேர்ந்தால் மார்க்கெட் தொடர்ந்து கிடைக்கும்?

இது கதாநாயகியின் கவலை!

எந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் அதிக சீட்டு கேட்கலாம் என்கிற கவலை கட்சி தலைவர்களுக்கு !
ஆளும் கட்சி மீது எப்படியெல்லாம் குற்றம் சாட்டலாம் என்கிற கவலை எதிர்கட்சிகளுக்கு !
இன்று விஸ்கியா ,பிராந்தியா , பீரா ,எதை அடிக்கலாம் என்கிற கவலை குடிமகன்களுக்கு !
அட ,பாவிகளா!
கொழும்பு அருகில் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழனை சிங்கள போலீசாரும் ,ராணுவத்தினரும் அடித்தே கொலை செய்து இருக்கிரார்களே , யாராவது கவலைபட்டீர்களா ?

படங்களை பார்த்தும் ரத்தம் சூடேற வில்லையா ?

வாழ்க தமிழ்!வாழ்க தமிழன்!