Saturday, December 12, 2009

அரசியலுக்கு வருவாரா ரஜினி?


''2010-ல் கட்சி;2011-ல் ஆட்சி'' என்கிற எதுகை ,மோனை சொல்லடுக்கு.மெகா சைஸ் போஸ்டர்கள் .அந்த போஸ்டரில் 'சட்டசபையில் முதல் அமைச்சராக ரஜினி' அமர்ந்திருப்பதைப் போல் படம்.டிசம்பர் 12 ம் தேதி பிறந்த நாள் போஸ்டர்களிலேயே ''ச் சும்மா அதிருதுல்ல'' என்று சொல்ல வைத்த போஸ்டர் இதுதான்.
இந்த போஸ்டரின் வாசகங்களுக்கு 'சூப்பர் ஸ்டார்' காரணமில்லை.அவரது தலைமை மன்ற நிர்வாகிகளும் காரணமில்லை என்கிறார்கள்.
அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் நன்றாகவே உணர்ந்திருக்கிற நிலையில் இப்படி ஒரு போஸ்டர்! சிட்டியை ரொம்பவே கலக்கி விட்டது.ரஜினியின் மனம் மாறி இருக்கலாமோ என்கிற சந்தேகம்வரவே அவரை தொடர்பு கொள்ள'முயன்றபோது எந்திரன் ' படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் சந்தோசத்தில் இருப்பது தெரிந்தது.
தமிழ்சினிமா நடிகர்களில் புரட்சித் தலைவர் எம் .ஜி. ஆருக்குப் பிறகு கட்டுக் கோப்பான விதிகளுடன் காக்கப்பட்ட மன்றம் ரஜினியின் மன்றங்கள்தான்.
அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையுடன் பட்டி, தொட்டிகளில் ரசிகர் மன்றங்கள் வேர் விட்டிருந்தன. ஆனால் ஆன்மீகத்தின் பக்கமாக அவரது பார்வை தீவிரமாக பதியத் தொடங்கியதும் ரசிகர் மன்றங்களின் வேகமும் சற்று குறையத் தொடங்கிவிட்டது. வேருக்குத் தண்ணீர் விடும் அக்கறையும் குறைந்து போனது.
''தான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் தன்னுடைய கருத்துகள் அல்ல. எழுதிக் கொடுத்ததைப் பேசினேன்'' என 'சூப்பர் ஸ்டார் ' மனம் திறந்ததும் ரசிகர்கள் சோர்வடைந்து போனார்கள்.ஆனால் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள். அவர் சொடக்குப் போட்டால் போதும் உடனடியாக கிளர்ந்து எழுந்து விடுவார்கள். அந்த உணர்வு சாம்பல் பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
அந்த உணர்வை 'எந்திரன்' படத்துக்காக 'சிலர்' பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போஸ்டர் உருவெடுத்திருக்கிறது .60- ம் வயது 'சஷ்டியப்த பூர்த்தி' விழாவை அவர் எந்த அளவுக்கு கொண்டாடியிருக்க வேண்டுமோ ,அந்த அளவுக்கு அவர் கொண்டாடவில்லை என்கிற வருத்தம் சினிமா வட்டாரத்திலும் இருந்தது. அந்த வருத்தத்தினால் சோர்வடைந்து போயிருந்த ரசிகர்களுக்கு ஊக்கம் ,உற்சாகம் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டர் இருந்தது. அதே நேரத்தில் 'எந்திரன்' படத்துக்கான பூஸ்டர் என்பதையும் மறந்து விடக் கூடாது. அன்று ஒளி பரப்பாகிய 'படையப்பா' படத்தின் நோக்கமும் அதுதான் என்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? சினிமாவைத் தொடர்வாரா? கலைஞர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சொல்லியிருப்பதால் ரஜினியின் கருத்தில் மாறுதல் ஏற்படுமா?
இந்த 'மில்லியன் டாலர்' கேள்விக்கு என்ன பதில்?
ரஜினியே பதில் சொல்லும் வரை இந்த கேள்விக்கு உயிர் உண்டு.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டை விட்டு அம்பாசடர் காரில் புறப்பட்டுவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்துக்குப் போய்விட முடியும். அவருக்காகவே காத்திருப்பவர்கள் தியான மண்டபத்தை திறந்துவிட ,உள்ளே சென்றதும் ரஜினி தியானத்தில் ஆழ்ந்து விடுவார். குறைந்தது நான்கு மணி நேரம் தியானம் நீடிப்பது உண்டு.
இப்படித் தன்னை மறந்து துறவு நிலைக்குப் போய் விடுகிறவருக்கு அரசியல் சரிப்படுமா?
அரசியல் மீது அவருக்கு பற்று ,பாசம் இல்லை என்றாலும் நாட்டின் நலத்திலும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை உண்டு. அது இந்தியனின் கடமை என்கிறார். அதனால் அரசியலைத் தெரிந்து கொள்ள சில நண்பர்களிடம் பேசுவது உண்டு. ஆனால் அதையே சிலர் தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முற்பட்டதால் அந்த நட்பையும் துண்டித்துக் கொள்ளவேண்டியதாகி விட்டது.

நாட்டில் நிகழும் நல்லது கெட்டதை அவர் இப்பொதும் சிலரிடம் பகிர்ந்து கொள்வது உண்டு. ஆனால் அவர்கள் அரசியல் சாராதவர்கள்.
ரஜினிக்கு பதவிகள் மீது ஆசைகள் இருந்தது இல்லை.
விரும்பியிருந்தால் என்றைக்கோ ராஜ்ய சபா வில் அமர்ந்திருக்கலாம். அவர் கேட்டால் எந்த கட்சி ,மறுக்கும்? ஆகவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே அவரது நண்பர்கள் சொல்கிறார்கள் .
சரி, சினிமாவில் தொடர்ந்து இருப்பாரா?
''எந்திரன்'' வரட்டும். அவரே சொல்வார் என்கிறார்கள்.

No comments:

காமக் கொடூரங்களுக்கு இரையாவதே பெண்களின் விதி!

மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான  பாலியல்  வன்முறைகள் அதிகமாகியதே தவிர கட்டுக்குள்  அடங்கியதாக  இல்லை. வன்முறைகளி...