வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஆங்கில புத்தாண்டு ..எனது பார்வை !

ஆங்கிலேய ஆதிக்கத்திலும் ,ஆங்கில மொழியின் ஆதிக்கத்திலும் வளர்ந்து,வாழ்கிற நாடுகளில் ஆங்கிலப் புத்தாண்டு அமர்க்களமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. நாமும் கொண்டாடிவிட்டோம்.ஆங்கிலத்துக்கும் நமது கடவுளர்களுக்கும் எத்தகைய உறவும் தொடர்பும் இல்லைஎன்றாலும் ''எங்களை நல்லவிதமாக காப்பாத்துப்பா''என்று நடுநிசியிலும் கோவில்,குளம் தேடிப் போனோம்.
          இது பிழை என்று சொல்லவில்லை
          அவரவர் நம்பிக்கை.
          யாரும் பிறர் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிடுவதில்லை .
        தன்னைப் பற்றி கவலைப் படுகிறவர்களுக்கு உறவு ,இனம் ,நாடு பற்றிய கவலையும்  இருக்கவேண்டும் அல்லவா? இல்லாமல் போனது ஏன்?
       தங்களை அடிமைப்படுத்திய அந்நிய கலாசாரத்துக்கு மெது, மெதுவாக அடிமையாகிக்  கொண்டு இருக்கிறோமே என்கிற அச்சம் வராமல் போனது ஏன்?
            கலாசார சீரழிவு தான் நமது இன ,மான உணர்வை இற்றுப் போகவைத்திருக்கிறது . இற்றுப் போனதால்தான் தமிழ் வியாபாரிகளால் சொந்த இனத்தின் அழிவுக்கு துணை போக முடிகிறது. ஹாப்பி நியு  இயர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டவர்கள் எவராவது  தமிழீழ சொந்தங்களின் அவல நிலை பற்றி நினைத்திருப்பார்களா?
               அடுத்த இலவசம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களும் ,எதைக் கொடுத்தால் இந்த மக்கள் சோரம் போவார்கள் என திட்டமிடுகிற அரசியல்வாதிகளும்  இருக்கிறவரை இன,மான  உணர்வு என்பதெல்லாம் பொய். பொய்.!
              மொழி வியாபாரிகளை அடையாளம் கண்டு கொள்கிற நிலை வரும் வரை இனமான உணர்வு என்பது 'அடகு'வைக்கப் பட்ட பொருள்தான்.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இதுவும் பாலியல் வன்முறைதானே...?

யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை.மனதில் பட்டது.சிந்திக்க வேண்டிய தாகிவிட்டது .எங்கு பார்த்தாலும் ''சுவாமியே சரணம்''கோஷம்.காவியுடை.குறுந்தாடி.பக்தி பரவசமுடன் விரதம் இருக்கிறார்கள்.ஒழுக்கம் தவறாமை.சிலர் புகைக்கிறார்கள் என்பதால் ஒட்டுமொத்த பக்தர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது.ஒரு மண்டலம் பெண் சுகம் கிடையாது.கணவன்  தனிப் படுக்கை. மனைவி தனி படுக்கை.மாலை போட்ட பக்திமான்கள்  கோவில் ,பஜனை என மனதை ஒரு நிலை படுத்திக் கொள்ள முடிகிறது. சிலரால் முடியவில்லை ,மாலையை கழற்றிவிட்டு தாம்பத்திய வாழ்க்கையில் இறங்கிவிடுகிறார்கள்.ஒருநிலை படுத்த முடியாத மனைவிகளின் நிலை என்ன?
குளிர் காலம்.பருவதாகம்.அதுநாள்வரை கணவனின் அருகாமையில்  அணைப்பில் சுகம் கண்டு வாழ்ந்த பெண்களின் நிலை என்ன?
தொலைக்காட்சிகளில் காதல் பாட்டுகள்.விரசம்தூண்டும் காட்சிகள்.ஊடல் ,கூடல் வசனங்கள் என அன்றாடம் வரும் சீரியல்கள்.பெண்களின் மனதை பாதிக்குமா, பாதிக்காதா?அவர்களால் புலன் அடக்கி வாழமுடிகிறது என்றாலும் ஒரு வகையில்  பாலியல் ரீதியான கொடுமைதானே?கணவன் இருந்தும் அவள் விரும்புகிற போது  தாம்பத்திய சுகம் பெற விரதம் தடை என்கிறபோது ஆணாதிக்கத்தின் வன்மைதானே   மேலோங்கி நிற்கிறது.விரகதாபம் மேலிடும் போது விரதமிருக்கும் கணவனுடன் அவளால் சேர முடியவில்லை. ஆனால் விரதமிருக்கும் சாமி மாலையை கழற்றி பாலில் போட்டுவிட்டு விரதத்தை முறித்துக் கொள்ளலாம்,என்னய்யா நியாயம்?
இதுவும் ஒருவகையில் பாலியல் வன்முறைதானே?

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நம்மாலான உதவி....!

தேர்தல் வரப்போவுது.எதோ நம்மாலான சில ஐடியாக்களை அள்ளிவிட்டா சில கட்சிகளுக்கு உதவியா இருக்கும்னு நினச்சு சொல்றோம் .யாரும் தப்பா நினைச்சுக்க வேணாம்.இலவசம்னா நம்ம மக்களுக்கு 'புல்' அடிச்சிட்டு 'பிகர்களோடு'இருக்கிற பீலிங்கு .அதனால எதையெல்லாம் தந்தா அடுத்த அஞ்சு வருஷம் நிம்மதியா அடிமை சாசனத்தில் மக்களை அடக்கி வைக்கலாம் என்கிற ஐடியாக்களை சொல்ற கடமை.
               வீடு வீடா ரேசன் பொருள் கொடுப்போம்என்கிறார்கள். .கரெக்ட்.வேலை இல்லாத் திண்டாட்டம் குறையும்.வீடு வீடா கொண்டுபோய் கொடுக்கிறதுக்கு ஆள் வேணுமே ,இளவட்டங்கலாபார்த்து அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டா போதும். இதில இன்னொரு லாபமும் இருக்கு.புரட்சின்னு கூட சொல்லிக்கலாம்.போற வீடுகளில்  லவ் டெவலப் ஆகலாம்ல.கலப்பு திருமணம் நடக்குமே வரதட்சிணையை ஒழித்த  பெருமையும்  வரும்.
                         சரி காதலுக்கு எதிர்ப்பு வராமப் போகுமா?வரும்..
                          அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு.
                          வெட்டு, குத்து ,அடிதடி.வில்லங்கம் இல்லாம போனா வீரத்துக்கு மரியாதி இல்லாமப் போகும்.அதனால ஏரியாவுக்கு ஒரு கமிட்டி.கட்டப் பஞ்சாயத்தை  ஒழித்த   மாதிரியும் இருக்கும்.நம்ம கட்சி அடியாள்களுக்கு கவுரவம் கொடுத்த மாதிரியும் இருக்கும்.
               அரசாங்க விடுமுறை நாட்களில் ஒரு ரேசன் கார்டுக்கு 'குவார்ட்டர் 'மது இலவசம். ஊறுகா பாக்கெட் ப்ரீ .ஊறுகா காண்ட்ராக்ட் தனி வருமானம்.ஒரு குடும்பத்துக்கு  செல்போன் இலவசம் கொடுக்கலாம். லாலு கொடுக்கப் போறதாக சொல்றாங்க. நாம்ப முந்திக்கலாமே.. உங்க வசம் ஐடியா இருந்தா சொல்லுங்க.நாட்டுமக்களை காப்பாத்தின புண்ணியம் கிடைக்கும்.
         தமிழர்,இனம் ,மானம் வீரம் இந்த அடையாளங்கள் எப்பவோ ஒட்டுமொத்தமாக குழி  தோண்டி புதைக்கப் பட்டுவிட்டதால் இலவசங்களை அள்ளிவிடலாம்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மகன் தந்தைக்காற்றும் உதவி......?

எனது முதல் முயற்சி  இந்த சிறு கதை..
''திருந்தும்னு நெனச்சேன்.நடக்காது போலிருக்கு.தலையிலே ......முளைச்சது!எப்படி உருப்படும்?''
மகனை நினைத்து வருத்தமும் ,கோபமும் கலந்து வடிவேலு தனக்குள் வெடித்த வார்த்தைகள்.
சின்னசாமி அப்படி என்னதான் செய்தான் வடிவேலு சினம் கொள்ளும் அளவுக்கு?
தனியார் நிறுவனம் ஒன்றில் வடிவேலுக்கு குமாஸ்தா வேலை.சின்னசாமி ஒரே மகன் .பிளஸ் டூ .செல்ல வளர்ப்பு.வடிவேலு சின்சியர் வொர்க்கர்.வேலையில் இறங்கிவிட்டால்  முடியும் வரை வேறு எதிலும் போகாது.ஆபீஸ் வேலைகளை வீட்டிற்கு வந்து செய்வது உண்டு. .பொன்னம்மா அக் மார்க் மனைவி.படிப்பு பத்தாம் கிளாஸ்.அடுப்பூதும் பெண்ணுக்கு  படிப்பு எதுக்கு என்கிற பெற்றோர் வளர்ப்பு.சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக  அத்தை மகனுக்கு வாக்கப் பட்டு வந்த மகராசி.இன்னமும் புருசனின் காலைத்  தொட்டுக் கும்பிட்ட பிறகுதான் இவளது தூக்கம் கலைகிறது.
''அம்மா.. ஆயிரம் ரூபா வேணும்...கொடு!''பைக் சாவியை சுழற்றிக் கொண்டே கேட்கிறான்.
''அம்புட்டு ரூபாய்க்கு எங்கே போவேன்?அப்பாகிட்ட கேளு...!''
மகனுக்கு மத்தியான சாப்பாடு கட்டியபடியே சொன்னாள் பொன்னம்மா.
''ஆயிரத்தெட்டுக் கேள்வி கேப்பாரு.பதில் சொல்லிட்டிருக்கிறதுக்கு நேரம் இல்ல.சுருவாட்டு பணம் வச்சிருக்கில்ல.!எடுத்து  கொடு!''
''என்கிட்டே அம்புட்டு பணம் இல்ல!''
''போய் சொல்ற!அரிசி ,பருப்புன்னு வீட்டு சாமான் வாங்கிறதில எவ்வளவு தேத்துறே ... எதெதில மிச்சம் பிடிக்கிறேன்கிறது எனக்குத் தெரியும்.ஒழுங்கா கொடுத்திரு.. இல்லேன்னா  அப்பாகிட்ட போட்டுக் கொடுத்திருவேன்!''மிரட்டுகிறான் சின்னசாமி .
கோபம் வந்தது பொன்னம்மாவுக்கு!
''போ..போயி போட்டுக்கொடு!சுருவாடு செத்து கழுத்திலேயும் ,கையிலேயும் சரப்புளியா செஞ்சு மாட்டியிருக்கேன்  பாரு...போயி  சொல்லு.ராவுன்னு பாக்காம,பகல்னு பாக்காம  அந்த மனுஷன் வம்பாடுபட்டு ,ஓடா தேஞ்சு உழச்சு சம்பாதிக்கிற காசில அஞ்சு,பத்துன்னு  மிச்சம் பிடிச்சு செத்து வச்சாத்தானே நாளைக்கு ஆத்திரம் அவசரம்னா உதவும்!ஆயிரம்  ஓவா கேக்கிறியே எதுக்குடா?''
''உன்கிட்ட சொல்லனும்கிற அவசியம் இல்ல.சொன்னாலும் புரியாது''
''சனியன் விட்டுச்சு!'' டிபன் பாக்சை கையில் கொடுத்தாள்.
சின்னசாமியின் நம்பிக்கை,ஆதாரம் ,ஆதாயம் எல்லாமே அம்மாதான்.அவளை விட்டு விடலாமா ,பதறிப்போனான் பிள்ளை.
''அம்மா...அம்மா .!முக்கியமான பிராக்டிகல் ஒர்க் இருக்கும்மா!'ஆன் த ராக் ','டகிலா'ன்னு  ரெண்டு சப்ஜெக்ட் .நாளைக்கு சண்டேங்கிரதால லாப் மேட்டீரியல்செல்லாம் வாங்கணும் .அப்பாகிட்ட கேட்டா கடுப்படிப்பாரு. அவர் பழைய காலத்து ஆளும்மா !கம்ப்யுட்டரை பத்தி என்ன தெரியும்?என்னோட லைப் அப்பா மாதிரியே  கிளார்க்காதான் இருக்கனுமா?வீடு கார்னு வாழனும்கிற ஆசை எனக்கு இருக்கும்மா!...சரி..இதெல்லாம் நடக்காதுன்கிற விதி என் நெத்தியிலே எழுதியிருந்தா  யாரால மாத்த முடியும் ?விடு!எனக்கு பணம் வேணாம் !''
டிபனுடன் புறப்பட்டான்.
அவனுக்கே ஆச்சரியம்.
இப்படியெல்லாம் நடிக்க முடியுதே!
அம்மா கண்டிப்பா பணம் கொடுத்துவிடுவாள் என்கிற நம்பிக்கை.
 மெதுவாக அடி எடுத்து வைக்க,''நில்லுடா!பணம் எடுத்திட்டு வர்றேன் ''அம்மாவின் குரல்  அவனை ஏமாற்றவில்லை.
 பக்கத்து அறையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த வடிவேலுவின்  மனசுக்குள் வெடித்தது தான் தொடக்கத்தில் படித்தது.
ஆன் த ராக்,டகீலா  இரண்டும் என்ன என்பது அவருக்குத் தெரியும்.
ஒரு காலத்தில் அவர் குடிகாரர்.
அலுவலகம் செல்லவேண்டும் என்கிற நினைப்பு இல்லாமல் ஈசி சேரில் சாய்ந்து விட்டார்.
பெருமூச்சு.
 யார் மீது குற்றம்?
தனக்கும் பங்கு உண்டா?

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

ஒரு தந்தையின் தவிப்பு....

 ஒரு தந்தையின் தவிப்பு....

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அனந்தபுரி எக்ஸ்ப்ரெஸ் காலை எட்டு நாற்பத்தியொரு நிமிட அளவில் தாம்பரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.கை பேசியில் செய்தி.
'
'என்னுடன் பேசவும்''என்று மகள் அனுப்பியிருந்தாள் . வங்கிஒன்றில் பணியாற்றுகிற எம்.பி.எ பட்டதாரி.
செய்தி அனுப்புவதற்கு பதிலாக என்னுடன் பேசி இருக்கமுடியும்..எதற்காக இப்படியொரு செய்தி?
ஒரு வகையான குழப்பம் .
தொடர்பு கொண்டு பேசினேன் .
மறுநொடியே நொறுங்கிப் போனேன்.
எனது ஈரக்குலையே அறுந்து விழுந்து விட்டதைப் போன்ற வலி.கண்ணீரைத் தடுக்க இயலவில்லை.
''அப்பா...நான் எங்கே இருக்கேன்றது தெரியலப்பா..கண் சரியா தெரியலப்பா..தலை சுத்துது .பஸ்லேர்ந்து   இறங்கிட்டேன்.வீட்டுக்குப் போகவாப்பா..."
எனக்குப் பேச்சு வரவில்லை.நானோ ஓடுகிற ரயிலில் .மகளின் குரலில் இருந்த பயம் என்னை உறைய வைத்து விட்டது.இனம் புரியாத சூழ்நிலையில் இருக்கிறாள் என்பதை நடுங்கும் குரல் சொல்கிறது.எதற்காக வீட்டுக்குப் போகவா என்று கேட்கிறாள்?
அந்த சின்னப் பெண்ணின் மனதில் எதோ ஒரு வித அச்சம் பதிந்து கிடப்பதால் ''வீட்டுக்குப் போகவா''என்று கேட்கிறாளோ?புரியவில்லை.குற்றம் செய்யாமல்
குற்றவாளியாக நிற்கிற உணர்வு.
என் மகள் அண்ணா நகர் பகுதியில் எங்கேயோ இருக்கிறாள் என்பதை  என்னால் அனுமானிக்க  முடிந்தது. அந்த வழியாக தான் வங்கிக்கு செல்வாள்.
''அம்மா..அங்கேயே இரு ...பயப்படாதே ...அவசரப்பட்டு பஸ்சிலோ ,ஆட்டோவிலோ ஏறிடாதே ''என்று தைரியம் சொன்னேன் .எனக்கு பி பி எகிறியது.டேனோர்மின் ஒன்று போட்டுக்கொண்டேன்.
எனது மூத்த மருமகனுக்கு கை பேசியில் தகவலை சொல்லிவிட்டு காத்திருந்தேன்.
அடுத்த பத்தாவது நிமிடம் மருமகன் எனது மகள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டதாக சொன்னார்.
சரியாக சாப்பிடும் பழக்கம் இல்லாததால் லோ பி பி .
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இப்போது தேறி வருகிறாள்.
அந்தப் பெண் சரியாக உணவு எடுக்காததற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கலியாணம் பற்றிய கவலையாக இருக்கலாமோ?
வாய்ப்பு இல்லை!எனது மகளின் விருப்பம்தான் எங்கள்விருப்பம்  என்பதை முன்பே சொல்லியிருக்கிறோம்.
பின் என்னவாக இருக்கும்?
அன்று மட்டும் கை பேசியை பயன்படுத்தாமல் நாங்கள் இருந்திருந்தால்  என்ன நடந்திருக்கும்?
இப்படியெல்லாம் சிந்தனை ஓடுகிறது .
ரத்த பாசத்தின் வலிமையை நான் ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஆகஸ்டு 23 .ல் தான்.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

காதல் ...காமம் ..மறுபார்வை!

பெண்களில் வீணைகளும் உண்டு.
 மத்தளங்களும் உண்டு.
ஆண்களில் பெரும்பாலோர் சிட்டுக் குருவிகள்.
 நின்று,நிதானமாக ஆட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவர்கள்.
 வெகு சிலரே விளையாட்டு வீரர்கள்.
 நாட்டுப் புற பாடல் ஒன்று உண்டு.
 ''பொட்டலிலே கிணறு வெட்டி,
 போர்க் காளை ரெண்டும் கட்டி ,
 காப்புப் போட்ட கறுத்த மச்சான்
 கமலைக் கட்ட தெரியலியே!''
 எவ்வளவு ஏகடியம் !எகத்தாளம்!!
 காதலனுக்கு தொழில் அனுபவம் இல்லையாம்!
 எப்படி அழுத்தம் கொடுத்து சொல்கிறாள் பாருங்கள்!
 இப்படிப் பாடுகிறவள் நிச்சயம் மத்தளமாக தான் இருப்பாள்.
 இன்னொருத்தி-
 ''கடகெம்பு நொறுங்குது ,
 கண்ணாமுழி பிதுங்குது ,விட்டு,விட்டு புடிச்சாலாகாதா,-ஆ பூனை மாமா,
 விட்டு,விட்டு புடிச்சாலாகாதா?''என்கிறாள்.
 இந்த கொங்கு நாட்டுப்புறப் பாடலில் வல்லவனின் 'தொழில்'திறமை தெரிகிறது.
 அவளது நிறைவும் தெரிகிறது.
 சிற்றின்பம் தான் பேரின்பம் என்பது எனது கருத்து.
 வாழும் காலத்திலேயே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் .
 திருவில்லிபுத்தூர் ஆண்டாளே அந்த சொர்க்கத்திற்காகத்தானே ஏங்கியிருக்கிறாள்
''பருத்து வளர்ந்திருக்கிற எனது மார்பகங்களின் துன்பம் போகவேண்டும்.
அதற்காக அந்த கோவிந்தனுக்கு'அந்தரங்க தொண்டு'செய்ய வேண்டும்.இப்பிறவியில் செய்யாமல் அதன் பின்னர் கிடைக்கும் பரமபதத்தில் என்ன தவம் வேண்டிக்கிடக்குது?'
''கொம்மை முலைகள் இடர் தீரக்
கோவிந்தற்கு .ஓர் குற்றேவல்
 இம்மைப் பிறவி செய்யாதே
 இனி போல் செய்யும் தவம்தான் ஏன்?''என்று கேட்கிறாள்.
ஏக்கமும் இருக்கிறது,கோபமும் கூடவே இருக்கிறது.
 ஆதங்கமும் தெரிகிறது.
 இத்துடன் நின்றாளா?
 இல்லை!
 ''அவனிடம் என்னை இழந்து விட்டேன்.ஆனால் அவனுக்கு என்னைப் பற்றிய கவலை இல்லை.இங்கே ஒருவள் ஏங்கிப் போய் கிடக்கிறாள் என்பது தெரியாதா அவனுக்கு?
 நேரில் வந்தால் அவனுக்குப் பயன்படாத எனதிரு மார்பகங்களை வேருடன் பிடுங்கி  அவனது மார்பில் எறிவேன் ''என்கிறாள்.
 ''கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
 கொங்கை தன்னைக் கிழங்கோடும்
 அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வனே''
 இந்த பாடலில் இருப்பது காதலா, காமமா?
 இரண்டும்தான் என்றாலும் உச்சம் தொடுவது காமம்தான்!
 ''இன்பம் தருபவைகளை இந்திரியங்களால் நுகர்வதால் ,கேட்பதால்,அல்லது எண்ணுவதால்  காமம் தலை எடுக்கிறது ''என்கிறது கீதை!
காதல் என்பது வேறு
 காமம் என்பது வேறு.
 இவை தியரி.
 செக்ஸ் என்பது பிராக்டிகல் .
 மனது ,வயது சார்ந்ததுதான் செக்ஸ் .
 மறுக்கவில்லை
ஆனால் உடம்பு முற்றி தளர்ந்து விட்டால் 'பிராக்டிகல்'பெரும் பிரச்னை!
 என்ன சொல்கிறீர்கள்?

வெள்ளி, 9 ஜூலை, 2010

காதலா..காமமா...!


காதலா..காமமா...! 
எதை தேர்வு செய்வது? 
காதல் உயர்வு. காமம் அரிது.
வாழ்க்கையின் இறுதி வரை காதல் இருக்கும்.
ஆனால் காமம் இருக்குமா?  
இருக்கும் , இருந்தும் இல்லாமலும்!

கல்லுக்கு ஆடை அணிவிப்பதால் என்ன பயன்?
கட்டை சாயும் வரை காதல் இருக்கும் .
ஆனால் கட்டையுடன் காமமும் சாய்ந்து விடும்.
காதலின் உச்சமே காமம்.
காமம் இல்லாத காதல் சவம்.
உச்சம் தொடாத காதலால்  யாருக்கு என்ன பயன்?
காதல் உயர்வு;காமம் அரிது.
உயர்வா,அரிதா,எது தேவை என்றால் 
நான் அரிதையே    விரும்புவேன்.

ஆனால் அரிதுக்கு ஆயுள் குறைவு.
ஆயுள் குறைவு என்கிற போது 
அதை முழுமையாக அனுபவிக்க  முடியவில்லை என்றால் 
ஆண் -பெண் என்று வாழ்வது வீண்!
காதல்  ,காமம்  இரட்டைக் குழந்தைகளே!
இரண்டும் வேண்டாம் ,பிரம்மச்சரியமே புனிதம் என்று 
வாழ்வது மானிடப் பிறவியின் பயனை 
வீணாக்கியதாகவே கருதப் படவேண்டும்.

மயிர் உதிரும் காலத்தில் 
என்னதான் வாசனை தைலங்களைத் தடவினாலும் 
மண்டையில் மயிர் வளரப் போவதில்லை.
வழுக்கைதான் வளரும்.
ஆகவே கட்டை தளர்ந்த பிறகு எவ்வளவு பீமபுஷ்டி அல்வாக்களை  விழுங்கினாலும் கட்டை நிமிரப் போவதில்லை.

காமம் என்பது கொடை
அரிதிலும் அரிது.
கடவுளே காமனுக்கு அடிமை.புராணங்களில் படிக்கலாம்.
வயது உயரும்போது காமமும் வளர்வதில்லை.
வயது ஏற ,ஏற காதல் ஏறுமுகம்.காமம் இறங்கு முகம் .
வாலிபம் இருக்கும்வரைதான் காமத்தை அனுபவிக்க முடியும். 

ஆகவே கொண்ட மனையாளுடன் காமத்தின் உச்சம் தொடுவது தவறில்லை.
இந்த கருத்துக்கு ஆதரவு -எதிர்ப்பு  எதாக இருந்தாலும்  பதிவு செய்யுங்கள்.

ஞாயிறு, 20 ஜூன், 2010

வைகோவும்,விஜயகாந்தும்....

                               எலும்பில்லாத நாக்கு ...
                               மனிதன் பொய் பேசுவதற்காகவே..
                               நேற்று பேசியதை இன்று மறப்பதற்காக ...
                               இன்று கொடுக்கும் வாக்குறுதிகளை நாளை மறப்பதற்காக..
                               அரசியல்வாதிகளின் வசதிக்காகவே வாய்க்குள் வைத்துவிட்டான் படைத்தவன்.     
                             அரசியல்வாதிகளில் யாருமே பொய் சொல்லா மெய்யர்கள் இல்லை.
                             சத்தியங்கள் அடிக்கடி சட்டையை உரித்துக் கொண்டு நிர்வாணமாகி பொய்களை புணர்ந்து கொள்ளும் காலம் இது.
                            வசதிக்காக ,சுய நலத்திற்காக ,வளம் பெறுவதற்காக பொய் சொல்லலாம்.
  1.                           2004 ஆண்டு ,நவம்பர் ஒன்பதாம் தேதி.
                              சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம்....
                              விஜயகாந்த் பேசுகிறார்.
                             ''அண்ணா திமுகவை கட்டிக் காத்து மிகப் பெரிய சரித்திரம் படைத்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனையும் ,அலெக்சாண்டரையும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சொல்வார்கள்.இனிமேல் தன்னம்பிக்கைக்கு   உதாரணமாக    ஜெயலலிதாவை சொல்லவேண்டும்''என்கிறார்.
                              தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சொல்லப்பட்டஜெயலலிதா பின்னர் விஜயகாந்தைப் பார்த்து ''குடித்து விட்டு வருகிறார்''என்று சொன்னதும்,இதற்கு விஜயகாந்த் மறுதளித்து ''இவர்தான் ஊத்திக் கொடுத்தாரா'' என்று நக்கல்  அடித்ததும்  மறக்கக் கூடியதுதானா?
                           மறக்கத்தான்  வேண்டும்.
                          ஏனென்றால் இது அரசியல்.
                          உச்சநடிகர் ரஜினிகாந்த் அதே இடத்தில் என்ன பேசினார் தெரியுமா?
                         ''வீரப்பனை சுட்டுக் கொன்றதுசாதனை  அல்ல.சரித்திரம்.வனதேவதைக்கு  விடுதலை வாங்கி தந்திருக்கிறீர்கள் .இந்தியாவில் தமிழர்களின் மானத்தை காப்பாற்றிவிட்டீர்கள்''என்று சத்தியம் பேசினார்!!
                      இதே ரஜினிகாந்த் தன் வாயாலேயே ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது'' என்று  சொன்னார்.
                     இதையும் நாம் மறக்கத்தான் வேண்டும்.
                     ஏனென்றால் இது அரசியல்.
                   தேர்தல் உடன்பாடு ஏற்பட்டு ஒரே மேடையில் ஜெயலலிதா,விஜயகாந்த் ,வைகோ, ராமதாஸ் ஆகிய தலைவர்கள் தரிசனம் தந்தாலும் அது ஆச்சரியம் அல்ல.
                    அரசியலில் எதுவும் நடக்கலாம்.
                   நாளை அதிமுக-தேமுதிக கூட்டணி அமையுமேயானால் விஜயகாந்திற்கு அடுத்த இடம் தான் வைகோ அவர்களுக்கு.
                  விஜயகாந்திற்கு  கொடுத்தது போக எஞ்சிய தொகுதிகளை ,குறைந்த தொகுதிகளை கொடுத்தாலும் வாங்கவேண்டிய நிலையில்தான் மதிமுக இருக்கிறது.
                        அரசியல் எங்கே போய் கொண்டிருக்கிறது?
                     வரவிருக்கிற தேர்தலில் வித்தியாசமான கூட்டணிகளை பார்க்கலாம்.
                     வைகோ -விஜயகாந்த்-இடது வலது கம்யு கட்சிகள் கூட்டணி சேரும் வாய்ப்பு இருக்கிறதா?

ஞாயிறு, 13 ஜூன், 2010

காமராஜரைத் தெரியுமா?

                                    ''காமராஜரைத் தெரியுமா?''

                                    ''அவர் எந்தப் படத்தில் நடிச்சிருக்கார்!''

                                    ''அடப்  பாவி!அவர் கர்ம வீரர்டா! ''

                                   ''அந்தப் படத்தை நான் பார்க்கலீங்க!அவரோடு நடிச்ச ஹீரோயின் யார்னு  சொன்னிங்கன்னா ஒருவேளை நினைவுக்கு வந்தாலும் வரும்.''

                                   ''உருப்படுமாடா தமிழ்நாடு?காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவர்டா. கல்விக் கண்ணைத் திறந்த புண்ணியவான்.''

                                   ''காங்கிரஸ் கட்சியா?எந்த காங்கிரஸ்?தங்கபாலு காங்கிரசா?ஜி.கே.வாசன்  காங்கிரசா?இளங்கோவன் காங்கிரசா?இவர் எந்த காங்கிரஸ்?''

                                 ''கிழிஞ்சது.தமிழ்நாட்டில் லஞ்ச ஊழல் இல்லாம வாழ்ந்த ஒரு மகானைப் பத்தி தெரியலேன்கிறது உன் தப்பு இல்லடா!சொந்த கட்சிக் காரங்களே அவரை மறந்திட்டாங்க! பொதுவா பெரிய தலைவர்களை எந்தக் கட்சியா இருந்தாலும் நினைவில வச்சுக்கிறதில்ல. சரக்கடிக்கிறபோது தொட்டுக்கிற சைடு டிஷ் மாதிரி ஆகிட்டாங்க .காரியமாகனும்கிறபோது நினைக்கிறாங்க.சரி.விடு.வரப் போற தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடப் போறே?''

                               ''கேனத்தனமா கேட்கிறியே ,எந்தக் கட்சிக்காரன் நோட்டு அதிகமா வெட்டுறானோ ,அந்த கட்சிக்காரனுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்.''

                              ''அப்படினா கெட்டது செய்றவன் அதிகமா நோட்டு வெட்டினா அவனுக்குதான்  போடுவே!நல்லவனுக்கு போட  மாட்டே?''

                            ''அதிலென்ன உனக்கு சந்தேகம்?''

                         இதுவரை படிச்சது கற்பனையாக இருந்தாலும் அதில உண்மை இருக்கா, இல்லையா?

                             சொல்லுங்க..கருத்துகளைப் பதிவு பண்ணுங்க..!

      
             
    

ஞாயிறு, 6 ஜூன், 2010

கோடீஸ்வரனாக வேண்டுமா?

'' அரசியலுக்கு போ ,கோடி , கோடியாக அள்ளலாம்.எதற்காக மெடிக்கல் ,அதுஇதுன்னு அலையணும்,ஆட்சிக்கு வரக் கூடிய கட்சியா பார்த்து தலைவருக்கு பெரிய அன்பளிப்பா கொடுத்து ஒரு பொறுப்பை வாங்கிட்டினா நாளைக்கு பெருசா அறுவடை பண்ணீறலாம் ,இந்த காலத்தில படிக்க வைக்கிறது வேஸ்டுப்பா ''என்று சொல்கிற நிலை இருக்கிறதா,இல்லையா?

முதல் போட்டு வியாபாரம் பண்றதை விட ,முதல் இல்லாம பெரிய கட்சியா பார்த்து அதில் பொறுப்பு வாங்கிறதுக்கு செலவு பண்ணினால் போதும் ,பின்னாடி பல,பல மடங்கு சம்பாதிச்சிடலாம் என்கிற நிலை உண்மையா,பொய்யா?

பொறுப்பு கிடைக்கவில்லையா ,பரவாஇல்லை .பொறுப்பில் இருக்கிற ஆளுக்கு நம்பிக்கையான கைத்தடியாக ஆவதற்கு ஆவன செய். அந்த ஆளின் பலம் ,பலவீனம் தெரிந்து அதற்கு தகுந்த ''ஏற்பாடுகளை''செய்து கொடு. அடுத்த பொறுப்பு நீ தான்.கைத்தடியாக இருப்பது கேவலம் என நினைக்க கூடாது . இதிலும் ஆயிரம் ,ஆயிரமாய் சம்பாதிக்கலாம்.இதுதான் இன்றைய அரசியலுக்கு பால பாடம் .நிஜமா,பொய்யா?

கைத்தடியாக இருந்தும் பொறுப்பு கிடைக்க தாமதமாகிறதா,கவலைப் படக் கூடாது .ஆயுதம் தாங்கிகளின் தலைமை பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது. இதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்.ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டுவிட்டால் பொறுப்பே தேடிவந்துவிடும்.இப்படிப்பட்டவர்கள் பங்களாவும் காருமாக வாழ்கிறார்கள் என்பது நிசமா,இல்லையா?

திறமையாக பேசக் கற்றுக்கொண்டுவிட்டால் ,திறமையான பேச்சினால் ,தலைமையின் அன்பை பெற்றுவிடலாம்.திறமையான பேச்சு நல்ல முதலீடு.இந்த திறமையினால் நாளைக்கு தலைமையை மிரட்ட முடியும்.அவசியம் வந்தால் புதிய கட்சியை ஆரம்பிக்கலாம். இது சாத்தியமா, இல்லையா?

எதுவுமே இல்லையா,கவலைப்படக் கூடாது.வட்டமோ ,மாவட்டமோ இவர்களின் கைத்தடியாக இருக்கிறபோதே சின்ன சின்ன காண்ட்ராக்டு கள் கிடைக்கிறமாதிரி ஏற்பாடுகளை செய்து கொண்டுவிடவேண்டும் .இது பிற்கால அரசியல் விளையாடலுக்கு உதவியாக இருக்கும் என்பது உண்மையா,இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பதும் ,எழுதுவதும் மிகப் பெரிய தப்பு என்றாலும் நாட்டு நடப்பு அப்படியெல்லாம் நினைக்கவைக்கிறதா,இல்லையா?

கோடீஸ்வரனாக வேண்டும் என்றால் அரசியல்தான் சரியான இடம் என்கிற எண்ணம் அப்பாவி மக்கள் மனதில் இருக்கிறதா இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வியாழன், 13 மே, 2010

யாருக்கும் வெட்கமில்லை....!

சின்னப் பசங்க சண்டை போட்டுக் கொண்டால் பெரிய மனிதர்கள் ''அட, விடுங்கப்பா,பொடிப் பசங்க!அவனுகளுக்கு என்ன தெரியும்?இன்னைக்கு அடிச்சுக்குவானுங்க ,நாளைக்கு சேர்ந்துக்குவானுங்க ''என்று சொல்லி அந்த பசங்களின் பெற்றோர்களை சமாதானப் படுத்தி அனுப்பிவைப்பது வழக்கம் .

அது மாதிரி ஆகிப் போச்சு,அரசியலும்!

திமுக.மீது பாமகவினர் அள்ளிக் கொட்டிய கடுமையான குற்றசாட்டுகளும் ,இவைகளுக்கு திமுகவினர் அளித்த பதில் குற்றசாட்டுகளும் சுலபமாக மறக்கக் கூடியதல்ல .

'' ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக செய்த துரோகம் , வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காதது ,தமிழர்களை குடிகாரர்களாக மாற்றி கெடுத்தது ,என பாமகவினர் சொன்னதுடன் நில்லாமல் பென்னாகரம் இடைத் தேர்தலில் மிகவும் கடுமையாக திமுகவை சாடினார்கள்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களுக்கு இத்தனை தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாகவும் அந்த தொகுதிகளில் தங்களின் வெற்றி உறுதி எனவும் ஒரு கணக்குக் காட்டினார்கள்.

அதெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன .

''கலைஞரை மறுபடியும் முதல்வர் ஆக்குவோம்''என்கிற குரல் பாமக. வட்டாரத்திலிருந்து வரத் தொடங்கி இருக்கிறது.

இதற்கு என்ன பொருள்?

கடுமையான குற்றசாட்டுகளை சொல்லி தங்களை நீதிமான்களாக கா ட்டிக் கொண்டவர்கள் ,இப்போது ஒன்றாக சேருவதற்கு ஆதரவு தேடுவதேன்?

அந்தரங்கத்தில் ஏதோ நிகழ்ந்திருக்கலாம் என்று நாம் நினைக்கலாம் அல்லவா?

அவர்கள் சொல்லிக் கொண்ட குற்றசாட்டுகள் பொய்யானவையா?

புனைந்துரைக்கப் பட்டவையா?

சொந்த ஆதாயம் ,சுயநலம் தேடிகள் என்று சொன்னால் என்ன தவறு?

தரக்குறைவாகப் பேசிக் கொண்டவர்கள் ,கை குலுக்க தயாராகியதின் மர்மம் என்ன? இது என்ன சனநாயகம்?

ராஜ்யசபை சீட்டுக்காக பாமக சமரசம் செய்து கொண்டுவிட்டதா?

இதுதான் நேர்மையான அரசியலா?

இவர்கள் கூட்டணி சேர்வதால் ஈழத் தமிழருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போவதில்லை.

மது ஒழிக்கப் பட போவதில்லை.

இன,மான ,மொழி உணர்வு என்பதின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப் படுவோம் .

யாருக்கும் வெட்கமில்லை!

கையறுநிலையில் இருக்கிறோம்!

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

யாழினியும் நாமும்....!


நெருஞ்சி முட்களாய் கண்ணிமைகள் மாறினால்...

அமிலப் புகையை நுரையீரல் சுவாசிக்குமேயானால்...

சம்மட்டிகளின் வீச்சு இதயத்தில் இறங்குமேயானால்....

அந்த மனிதன் என்னாவான்?

யாழினி குறும் படம் பார்த்தபோது அப்படியொரு அனுபவம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் ஒட்டு மொத்த தமிழ் ஈழ சகோதரிகளின் துயரத்தை,துன்பத்தை,பாழ்பட்டுப் போனதை எடுத்துகாட்டிவிட்டாள் ,யாழினி.

புழுக்களாய், புன்மைத் தேரைகளாய்,கோழைகளாய், மூடர்களாய்,வாழ்கிறோமே என்கிற குற்ற உணர்வு குத்திக் கிழித்தது.

தத்தும் தவளைக்கிடமாகிவிட்டதே முல்லைக் காடு..

'தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை 'என்று கேட்ட பாவேந்தனின் கூற்றுப் பொய்யாகிப் போனதே என்கிற வேதனை...

இருக்க வழிதான் இல்லை ,ஆனால் இறக்க எத்தனையோ வழிகள் !

முத்துக்குமார்கள் நினைவுக்கு வந்தனர்,யாழினியை தரிசித்து விட்டு வெளியே வந்த பிறகு...

தமிழகத்தமிழன் தன்னுடைய அடையாளங்களை ,பாரம்பரிய குணத்தை இழந்து ,பணத்துக்காக மந்தைகளாக மாறி எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன.

தமிழால் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

வீரம்,ஈரம் ,என்பதெல்லாம் இங்கே வணிகமாகிவிட்டன.

ஈழத் தமிழர்களது வீர மரணம் இங்கே உள்ள கட்சிகளுக்கு வாக்கு சீட்டுகளாக மாற வழிஏதும் இருக்கிறதா?

சொல்லுங்கள் யாழினிகளே!

உங்களது படங்களை சுவரொட்டிகளில் காட்டுகிறோம்.

உங்களது தியாகத்தை எங்களது அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்சி பீடம் ஏறுவோம்.

இதுதான் நாங்கள் செய்யும் கைமாறு....!

புதன், 28 ஏப்ரல், 2010

கற்பு காவலர்களே ...


அப்பாடா!
ஒரு வழியாக கற்பு பிரச்னையில் இந்தியாவின் உச்ச நீதி மன்றம் குஷ்புவைக் காப்பாற்றிவிட்டது.கற்பின் காவலர்கள் வெகுண்டெழுந்து குஷ்புவுக்கு எதிராக தொடுத்த எல்லா குப்பைகளையும் ,அவை எங்கே கிடக்கவேண்டுமோ ,அங்கே கொட்டியாகிவிட்டது.
கலாசாரம்,பண்பாடு பற்றி வாய் கிழிகிறவர்கள் சுய சோதனை செய்து பார்ப்பதில்லை.ஆணாதிக்க வெறியோடு அவர்கள் நசுக்கி ,நாசமாக்கிய பெண்களின் எபிசோடுகளை நினைப்பதில்லை.ஆனால் கொடி பிடிப்பதற்கு மதங்களுடன் வந்துவிடுவார்கள்.
ஆண் ஊர் மேய்வான்.கோயிலுக்கு போவதே 'சைட்' அடிப்பதற்கு தான். இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கும் போது பக்கத்தில் நிற்கிற பெண்களை உரசியபடி 'கோவிந்தா'சொல்வான்.சேட்டைகள் செய்வான்.
ஆனால் யதார்த்தமுடன் ஒரு ஆணைப் பார்த்துவிட்டால் ''வச்சிருக்கா!கள்ளத்தனமா பார்க்கிறா''என்று கதை எழுதிவிடுவான்.ஆணாதிக்க திமிர்!
பெண்களை குற்றம் சாட்டுகிற ஆண்கள் அதன் காரணங்களை பார்ப்பதில்லை. வறுமை,சூழ்நிலை,நிர்பந்தம் என எத்தனையோ காரணங்கள் .
பெண்களை கேவலமாக நடத்துகிற அரசியல்வாதிகள் மீது மீடியாக்கள் மென்மையான போக்கை கையாளுவதேன்?
திரைஉலகிலும் பெண்கள் மீதான பார்வை மட்டமாகத்தானே இருக்கிறது.மனைவி இருக்கும்போது மற்றொரு பெண்ணுடன் வாழ்கிற ஆண்களை பற்றி 'கற்பின் காவலர்கள்'என்றைக்காவது கொடி பிடித்ததுண்டா ?
தவறுக்கு பெண் மட்டும்தான் காரணமா?
ஆண்களின் பங்கு இல்லையா?
பெண் தவறு செய்கிறாள் என்றால் அதற்கு ஆணும் உடந்தை தானே?
ஆணுறை விளம்பரத்தில் பெண்ணின் படம் ஏன்?
கற்பு, புனிதம் பற்றி பேசும் தகுதி மத குருக்களுக்கே இல்லை!
பிறகேன் துண்டு துக்கடாக்கள் துள்ளுகின்றன ?
குஷ்பு மீதான வழக்குகளை உச்ச நீதி மன்றம் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்தது வரவேற்கத் தகுந்தது.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

இயக்குனர் சிகரத்திற்கு ......

மரியாதைக்குரிய 'சிகரம்' அவர்களுக்கு,

அண்மையில் நிகழ்ந்த திரைப் பட நிகழ்ச்சி ஒன்றில் தாங்கள் பேசிய பேச்சை கேட்டேன்.
தமிழ் சினிமாவுக்கு 'இரண்டு திருடர்கள்,திருட்டு விசிடியுடன் ஐ பி எல் லும் சேர்ந்து இருக் கிறது'என்று பேசியிருக்கிறீர்கள்.
திரைப் படங்களின் வசூல் குறைவதற்கு காரணமாக இருப்பவர்கள் எல்லாம் திருடர்கள் என்று சொல்வதாக இருந்தால் அந்த பட்டியலில் சினிமா துறையினருக்கும் பங்கு உண்டு.
ஐ.பி.எல்.லை புறக்கணிக்கும் வகையில் படம் இருந்தால் ரசிகர்கள் ஏன் கிரிக்கெட்டை நோக்கி ஓடப் போகிறார்கள்?
முதலில் கிரிக்கெட் ரசிகர்கள் வேறு,சினிமா ரசிகர்கள் வேறு.
நீங்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி திருடர்கள் பட்டியலில் ஐ.பி.எல்.லையும் சேர்த்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
ஐ.பி.எல்.போட்டி நடக்கிறபோது சினிமாக் கொட்டகைகளில் வசூல் குறைகிறது என்பதால் திருடர் ஆகி விடுமா ஐ.பி.எல்?
அப்படியானால் ஐ.பி.எல். பார்க்கிறவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?திருடர்களுக்கு துணை போகிறவர்களா?
மன்னிக்கவேண்டும் அய்யா!
அன்றைய மேட்சை பார்க்காவிட்டால் ரசிகனுக்கு திரில் இருக்காது.அவன் நேரடியாக பலவிதமான உணர்வுகளை அனுபவிக்கிறான்.
ஒவ்வொரு பாலிலும் சிக்சர் இருக்கிறது.பவுண்டரி இருக்கிறது.ரன் அவுட் இருக்கிறது.கேட்ச் இருக்கிறது.வொயிட் இருக்கிறது.
நோ பால் இருக்கிறது.ஆக ஒவ்வொரு பாலும் எதிர்பார்ப்புகள் தான் .
அவன் நேரடியாக போலித்தனம் இல்லாத விளையாட்டை பார்க்கிறான்.ஆரம்பத் திலிருந்து முடிவு வரை பரபரப்புக்குள் தன்னை ஆட் படுத்திக் கொள்கிறான்.
ஆனால் படங்களில் அவனால் அத்தகைய உணர்வுகளைப் பெறமுடிவதில்லை.அடுத்து வரும் காட்சிகளை ஊகிக்கமுடிகிறது.ஒரே அடியில் பத்து பேரை கதாநாயகன் 'ரோப்' கட்டி சாய்ப்பதை ,டூப் போட்டு சண்டை போடுவதை பார்த்து ,பார்த்து சலித்துப் போனவன்.
ஆனால் ஐ.பி.எல்.லில் சினிமா ,சிகினா வேலைகள் இருப்பதில்லை.
கதாநாயகனின் இமேஜ் உயர்த்துவதற்கான 'பஞ்ச'வசனங்கள் , காட்சிகள் ஐ.பி.எல்.லில் இல்லாததால் கிரிக்கெட் மேட்சை பார்க்க ஓடுகிறான்.
அவனை சினிமா பக்கமாக இழுப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள்.
கதாசிரியர்களுக்குப் பஞ்சம் .
வெளிநாட்டு டி.வி.டி.கள் தான் இப்போது தமிழ்சினிமாவின் பஞ்சம் போக்கும் அட்சய பாத்திரம்.
பழைய படங்களின் பெயர் வைத்தால் படம் ஓடும் என்கிற முட்டாள்த் தனமான நம்பிக்கை'
ஆக,மற்றவர்கள் மீது குற்றம் சாட்டும் போக்கு தவிர்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன்.

உங்களின் ரசிகன்,
தேவிமணி.

புதன், 21 ஏப்ரல், 2010

பீர் பந்தல் வைங்கோ!!

மூச்சு விட்டால் அனல் காற்று. மீசை கருகிவிடும் போல் இருக்கிறது. கோடை வெயில் சுட்டெரிக்கிறது.மின்சாரம் எந்த நேரம் உயிரை விடும் என்பது தெரியாது.கச,கசன்னு வியர்வை.சட்டையெல்லாம் நனைந்து 'கப்'படிக்கிறது.
மக்களின் கஷ்டங்களைப் பார்த்து மனம் பொறுக்காத நம்ம கட்சித் தலைவர்கள் ''தண்ணீர்ப் பந்தல் வச்சு ,மக்களின் தாகத்தைத் தணியுங்க '' என்று தொண்டர்களுக்கு கோரிக்கை விட்டிருக்கிறார்கள்.
கோடை வெயிலுக்கு இதைவிட வேறு எப்படி உதவி செய்ய முடியும்?
நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்...
அதாவது ஒரு ஆலோசனைதான்.
எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்று சொல்லமுடியாது.
ஓட்டுப் போடுவதற்கு காசு பணம் கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. என்னாச்சு ?
சட்டி,பானை ,சேலை ,வேட்டி என்று கொடுத்தவர்கள் இப்போது ஆயிரம் ,இரண்டாயிரம் ரொக்கம் என்று கொடுத்து முன்னேறிவிட்டார்களா, இல்லையா?
மக்களும் மனம் இரங்கி ''இவ்வளவு பணம் கொடுத்தவங்களை ஏமாத்தினா போய் சேரும் இடத்தில புண்ணியம் கிடைக்காது''என்று நினைத்து குத்து ,குத்துன்னு குத்தி வெற்றி பெறவைக்கலியா? இனிமேல் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணயம் செய்கிற காலம் வரத்தான் போகிறது.
இது ஒரு வித முன்னேற்றம் என்றுதான் சொல்லவேண்டும்.
மக்கள் என்கிற இனம் தமிழ்நாட்டில் அதன் பண்புகளை இழந்து அரசியல் கட்சிகளுக்கு அடிமை ஆகிப் போய்விட்டது.
பண்புகளைத் திரும்பவும் பெறுமா என்பது ஆயிரம் பொற்காசு கேள்வி!
அதனால்தான் சொல்கிறேன் தண்ணீர்ப் பந்தல் வைப்பதற்கு பதிலாக ''பீர் பந்தல்'' வைக்கலாம் என்று!
ஏரியா வாரியாக பிரித்துக் கொண்டு ரேஷன் கார்டு கொடுப்பது போல் பீர் கார்டு கொடுக்கலாம். அந்தந்த கட்சித் தலைவர்களின் படங்களுடன் தேர்தல் சின்னத்தையும் மறக்காமல் அந்த கார்டில் பதிவு செய்து விட்டால் மக்களால் மறக்க முடியாது.
சம்மருக்கு பீர் அடிப்பது 'குளிர்ச்சி' என்று எந்த நாதாரியோ சொன்னதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. பார்லி வாட்டர் என்று தான் அதை சொல்கிறார்கள். டாஸ்மாக் போவதை அன்றாட கடமையென கருதும் குடிமகன்களை சுலபமாக கவர் பண்ணிவிடலாம்.
ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறவர்களுக்கு நூறு ரூபாய் செலவில் பீர் கொடுக்க முடியாதா என்ன? அரசியல் கட்சித் தலைவர்களிடம் பீர் பாக்டரி இருப்பதாக சொல்வதால் பீர் பந்தல் வைப்பது அவர்களுக்கு சப்பை மேட்டர்.
அதனால்தான் சொல்கிறேன் ,பீர் பந்தல் மேட்டரை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கோ .கட்சிக் காகத்தான் மக்கள் என்று எப்பவோ மாறிப் போயாச்சு. அதனால் மக்களைப் பற்றி கவலைப்படவேண்டாம் . தமிழ் வாழ்க ,தமிழன் வாழ்க .....

சனி, 17 ஏப்ரல், 2010

துருப் பிடித்துப் போன மூளைகள்!!

இதயம் இருக்கிறதா இல்லையா ?

துருபிடித்துப்போன மூளைகளின் ஆதிக்கத்தினால் 72 வயது மூதாட்டியின் உயிர் கேள்விக்குறி ஆகி இருக்கிறது .

குடியரசு தலைவர் என்கிற உயர் பதவியில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறார் . ஆட்டிப்படிக்கும் ஆட்சிக்கட்டிலின் விசைக் கயிறும் ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி வாய்கிழியப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள் .

உள்கட்சி ஜனநாயகம் - வெளிக் கட்சி ஜனநாயகம் என்று பேசுகிற ஜனநாயகத்தின் தத்துப் பிள்ளைகளும் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள் .

இருந்தும் என்ன செய்ய?

பக்க வாதத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிற 72 வயது மூதாட்டி சிகிச்சை பெற தமிழ் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது . சென்னை வந்த அவரை தரை இறங்க விடாமல் மறித்து நள்ளிரவில் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் .

இருந்தும் என்ன செய்ய?

காரணம் அவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் .

அவர் இங்கே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டால் எரிமலை வெடித்துவிடுமா ? பூமி பிளந்து போகுமா? கடல் பொங்கிவிடுமா?

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது இங்கே என்ன நடந்தது ?

அனுதாப தீர்மானம் போடக் கூட கட்சி இல்லையே அய்யா !

இந்த மூதாட்டியை அனுமதித்தால் என்ன நடந்து விடும் என்று ஆட்சியாளர்கள் அஞ்சி இருக்கிறார்கள் . பயங்கரவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படுகிறவர்களை ஒடுக்குவதற்கு திராணியற்றவர்கள் 72 வயது மூதாட்டியிடம் எதற்காக அஞ்சுகிறார்கள் ?

பாவிகளா! அவருக்கு சரியான நினைவு கிடையாது நடக்கவும் இயலாது . முதுமை கொஞ்சம் கொஞ்சமாக தின்று கொண்டிருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது மனிதாபிமானமற்ற செயல் !

டெல்லி எஜமானர்களை எதிர்க்கிற சக்தி ஆளும் கட்சிகளுக்கும் இல்லை எதிர் கட்சிகளுக்கும் இல்லை!

அடுத்த தேர்தலில் எத்தனை சீட்டுகள் , யாருடன் கூட்டணி பேரம் பேசலாம் என்பதில் கவனமாக இருக்கிற அரசியல் கட்சியினர் வெறும் காகிதப் புலிகளே ! அவர்களது கண்டனம் காகிதத்துடன் நின்று விடும் . உண்ணா விரதம் , மனித சங்கிலி என்கிற நாடகங்களுடன் களைந்து போவார்கள்!

என்ன செய்வது?

தமிழும் , இனமும் எதிர்வரும் காலத்தில் அனாதையாக , ஒடுக்கப்பட்ட இனமாக வாழ வேண்டும் என்பது விதிக்கப் பட்ட சதி!

சதியை எதிர்போம் என்று சொல்லி போராட்ட அரசியல் நடத்தி கட்சி வளர்ப்பதற்கு சில கட்சிகளும் வரும்!

வாழ்க ! வாழ்க! வாழ்க!

புதன், 14 ஏப்ரல், 2010

எங்கே இருக்கிறான் தமிழன்?

'மெல்லத் தமிழ் இனி சாகும்'
உண்மைதான்!
''தமிழன் தனது இன,மான, மொழி உணர்வினை தானே அழித்துக் கொண்டான் !ஆண்ட இனம் அடிமையாக மாறியதற்கு அவனே காரணமாகினான் '' என்று எதிர்வரும் காலத்தில் வரலாறு சொல்லுமானால்.....?
சொல்லுமானால் என்ன ,சொல்லும்!செவிட்டில் அறைந்து சொல்லும்.
தமிழனது பாரம்பரிய அடையாளங்களை பதவிக்காக ,பணத்துக்காக ,அதிகார மையத்துக்காக மாற்றிக்கொண்டான்!இன விடுதலைக்காக போராடிய தமிழர்களை ஒழிப்பதற்கு 'தமிழனே' துணை போனான் என்று வரலாறு பதிவு செய்திருக்கும்.
தமிழனது புத்தாண்டு 'திருவள்ளுவர் ஆண்டு'என்றே அழைக்கப்படும் ,தைத் திங்கள் தான் ஆண்டின் தொடக்கம் என்று அதிகாரப் பூர்வமாக அரசு அறிவித்திருந்தாலும் 'விக்ருதி'தான் தமிழர் ஆண்டு என்று சில
சக்திகள் சித்திரையை கொண்டாடிவிட்டன!
இதில் எனக்கு வருத்தமோ ,கவலையோ இல்லை.இனத்தின்
அடையாளங்கள் அழிவதற்கு நம்மவர்களும் துணை போகிறார்களே என்கிற கோபம் தான் அதிகமாகிறது.
'விக்ருதி' கதை என்ன? பொருள் என்ன?
கேவலமானது !
அந்த கேவலத்தை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்!
கிருஷ்ணனிடம் நாரதர் வந்தார்.
பொறாமையும் ஏக்கமும் கண்களில்!
''ஏம்பா,கிருஷ்ணா!அறுபதாயிரம் கோபிகைகளுடன் நீ குஷாலாக கும்மியடிக்கிறாய்.கூடிக்கலக்கிறாய்.குதுகலமாக இருக்கிறாய். நானோ ஒன்றும் கிடைக்காமல் காய்ந்துபோய் இருக்கிறேன். அந்த அறுபதாயிரத்தில் ஒன்றை எனக்குத் தள்ளி விடக்கூடாதா?''என்று ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.
கிருஷ்ணனுக்கு பெரிய மனசு.
'' நாரதா! திரிலோக சஞ்சாரியான நீ இவ்வளவு ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் நன்றாக இருக்காது. நான் இல்லாத வீடாகப் பார்த்து அந்த வீட்டுப் பெண்ணைத் தள்ளிக்கொண்டு போய்விடு! ''என்று யோசனை சொல்கிறார்.
நாரதரும் ஒவ்வொரு வீடாகப்போகிறார்.
அத்தனை வீடுகளிலும் கிருஷ்ணன்!
யாரைத் தள்ளிக் கொண்டு போகமுடியும்?
திரும்பவும் வருகிறார் கிருஷ்ணனிடம் !
''அய்யா,பரமாத்மா,கிருஷ்ணா!தேடி அலைந்ததில் கால்களும் ,கண்களும் தேய்ந்ததுதான் மிச்சம். ஒரு பிகர் கூட மாட்டலே! அடியேனுக்கு இப்போது உன் மீது ஆசை!நான் பெண்ணாக மாறி உன்னுடன் கலவி செய்யவேண்டும் .என் ஆசையை தணிப்பாயா?''என்று நாரதர் கேட்கிறார்.
''கவலைப்படாதே!நீ யமுனைக்குப் போ.நீராடு!! பெண்ணாக மாறிவிடுவாய். அதன் பிறகு என்னிடம் வா!கலக்கலாம்''என்று கிருஷ்ணன் வழியைக் காட்ட,
எல்லாம் கிருஷ்ணன் சொன்னபடியே நடக்கிறது.
கிருஷ்ணனும் ,பெண்ணாகிய நாரதனும் அறுபது வருடங்கள் கூடி கலவி செய்ய ,வருடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. இப்படி வரிசையாக
பிறந்த குழந்தைகளின் பெயர்தான் 'பிரபவ 'முதல் 'அட்சய' வரை.
இந்தப் பெயர்களில் தமிழ் அடையாளம் ஏதாவது தெரிகிறதா ?
பண்பாடு ,கலாச்சாரம் இருக்கிறதா?
தமிழுடன் ஒட்டவும் முடியாது.உறவு கொள்ளவும் முடியாது.
யாரோ ,எவனோ இட்டுக்கட்டி எழுதிய முட்டாள்த் தனமான கதையை இன்றைய நவீன காலத்தியவர்களும் நம்புகிறார்கள் என்றால் தமிழுக்கு ஏது எதிர்காலம்?
முட்டாள்த் தனத்தை எதிர்க்க கடமைப் பட்டவர்கள் அதிகார மையத்தின் அரவணைப்பில் சுகம் கண்டுவிட்டனர்.அவர்களுக்கு எப்போது தோல்விப் பயம் வருமோ ,அப்போது சற்று குரல் விடுவார்கள்.
ஆக ,மொத்தத்தில் தமிழ் 'மெல்ல சாகும்' என்பது உண்மையாகி வருகிறது.

kon
8கொண்டான்!ஆண்ட இனம் அடிமையாக மாறுவதற்கு அவனே காரணமாகினான்''

திங்கள், 12 ஏப்ரல், 2010

திருப்பதி எழுமலை வெங்கடேசா!!

திருப்பதிக்குப் போய்வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் !
இப்படியும் ஒரு நம்பிக்கை!
சுட்டெரிக்கும் வெயில்.தாகம் எடுத்த நாக்கு தண்ணீருக்காக தவிக்கிறது.
வெந்நீர் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லமுடியுமா?ஆற வைத்து நாக்கை நனைப்பதில்லையா?
அதைப் போலவே திருப்பதி போனால் திருப்பம் வரும் என்கிற நம்பிக்கையும்!
ஆனால் அங்கு போன பிறகுதான் அந்த தெரியாத திருப்பத்துக்காக நாம் எவ்வளவுகொடுமையை தெரிந்தே அனுபவிக்கிறோம் என்பது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிவைத்த மனிதன் அதில் சில சலுகைகளையும் ,சமரசங்களையும் செய்து கொண்டான்.சமம் என்று சொன்னது பொய்.மாய்மாலம் என்பதைப் போலவே கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பதும் பொய்,கயமை என்பதை திருப்பதியில் தெரிந்துகொண்டேன்
சர்வதரிசனம் என்பது காசில்லாதவர்களுக்கு!
குய்க் தரிசனம் 300 என்பது சற்று வசதியானவர்களுக்கு.
இன்னும் பலவிதமாக பக்தர்களை பிரித்து வைத்திருக்கிறார்கள்.பதவி,அதிகாரம் உள்ளவர்கள் என்றால் எந்த பிரச்னையும் இல்லை.தனிவழி,தனிச்சலுகை ,சுலப தரிசனம்.
ஆனால் நம்மைப்போன்றவர்கள் கால் கடுக்க வரிசையில் நின்று ,நகர்ந்து நகர்ந்து போனால் ,வசதியான,காற்றோட்டமான கொட்டடியில் நம்மை நாமே சிறை வைத்துக்கொள்ளவேண்டும்.நிறைய கொட்டடிகள் இருக்கின்றன.அடை பட்டபிறகு வெளியே வர முடியாது.கொட்டடி எப்போது திறக்கப்படும் என்பது "வெங்கி"மட்டுமே தெரிந்திருக்கும் உண்மை.குறைந்தது ஐந்து மணி நேரம் கொட்டட்டியில் இருக்கவேண்டும். திறக்கப்பட்டதும் மக்கள் ?ஆடு,மாடுகளைப்போல் நெருக்கியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.போகிற வழியில் "லட்டு"கவுண்டர்.20 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினால்தரிசனம் முடிந்து இரண்டு லட்டு வாங்கலாம்.கோவிலுக்கு வெளியே.
லட்டு வாங்குவதற்கு நாம் பயில்வானாக இருப்பது நல்லது.
தரிசனம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல.
ஆண்,பெண் ,குழந்தைகள்,முதியவர்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் "சமமாக" நடத்தப்படுவது இங்குதான். லட்டு டோக்கன் வாங்கிய பிறகு ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டும் ,படாத இடங்களில் பல கைகள் பட்டும் "சந்நிதானம்" நோக்கி நடக்கிறோம்.நமக்கே வெறுப்பு வருகிறது.இவ்வளவு கேவலமானவர்களா நாம்?பெண்ணின் அங்கங்கள் மீது பக்தி செலுத்தும் "பக்தர்களை"அங்கு பார்க்க நேர்ந்தது.
சன்னிதானத்தின் சுவர்களில் தமிழ் வட்டெழுத்துகள்.கர்ப்பகிரகத்தின் சுவர்களிலும் தமிழ் வட்டெழுத்துகள்.அப்படியானால் திருப்பதி தமிழனுடையதா?
இந்த எழுத்துகளைப் பார்த்துக் கொண்டே "வெங்கியை" நெருங்கினால் சில வினாடிகள் கூட நின்று கும்பிட முடியவில்லை."கோவிந்தா"என்றுசொல்லி முடிப்பதற்குள் "போ,போ"என்று தள்ளிவிடுகிறார்கள்.
எல்லாம் முடிந்து வெளியே வந்து லட்டு வாங்கவேண்டும்.கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் ஒருவருக்கு நாலு கிடைக்கும்.நூறு ரூபாய். பத்து ரூபாய் லட்டு 25 ரூபாய்.பகல் கொள்ளை.
பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று திருப்பதி முழுவதும் போர்டு வைத்திருப்பவர்கள் லட்டுகள் வாங்க பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்கிறார்கள்.
இலவச மொட்டை .ஆனால் மூன்று மணி நேரம் ஆகிறது.சனி ,ஞாயிறு கிழமைகளில் வந்தால் இவ்வளவு கொடுமைகளை தாங்கத்தான் வேண்டும் என்கிறார்கள்.
திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது மெய்யா,பொய்யா என்பது இனிமேல்தான் தெரியும்.

சனி, 27 மார்ச், 2010

சேரன் சொன்னதில் என்ன தப்பு?கோரிப்பாளையம் டிரைலர் வெளியீட்டு விழாவை அரசியல் கட்சிக்கு உரிய பந்தாவுடன்நடத்தி இருந்தார் ,தயாரிப்பாளர் மிக்கேல் ராயப்பன். அவர் தே.மு. தி.க. என்பதால் அவருடைய தலைவர் கேப்டன் விஜயகாந்த் வந்திருந்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணனும் வந்திருந்தார்.இவர் தி.மு.க. என்றாலும் மேடையில் அரசியல் கலக்கவில்லை . ஆரோக்கியமான விஷயம்.
''நானும் விஜயகாந்த் சாரும் முப்பதாண்டு கால நண்பர்கள்.எங்கள் நட்பு அரசியலைக் கடந்த நட்பு .''என்று ராம.நாராயணன் சொன்னதை முக மலர்ச்சியுடன் கேப்டன் ஒப்புக் கொண்டார். இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். அடிக்கடி சிரித்துக் கொண்டனர்.அரசியல் பேசினார்களா,சினிமாவைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
பேசிய அனைவரும் கேப்டனைப் புகழ்ந்தது மேடை நாகரிகம். தவிர்க்க இயலாதது.மேடையில் வேறு எந்த கட்சி தலைவர் உட்கார்ந்திருந்தாலும் அவரைப் பாராட்டிப் பேசுவதுதான் பண்பு. ஆனால் 'துறை ' சார்ந்த பிரச்னைகளை சொல்வது என்பது தவிர்க்க இயலாதது. அந்த கருத்தை இந்த இடத்தில் சொல்வது சரியானதாக இருக்கும் .சம்பந்தப்பட்டவர்கள் அங்கே இருப்பதால் பிரச்னைகளை சொல்லலாம் என்கிற மனநிலையில் இயக்குனர் சேரன் இந்த மேடையில் சில கருத்துகளை முன் வைத்தார். அது நியாயமானதும் கூட.
சேரன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.'
'' சி னிமா சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.சேனல்களின் போட்டியை மீறி எத்தனை தயாரிப்பாளர்களால் வெற்றி பெறமுடியும்?1. 5 ,கோடி செலவு செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படம் ஓட முடியும் என்கிற 'நிலை' உருவாக்கப்பட்டிருக்கிறது.தயாரிப்பாளர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறி வாழ்க்கை பறிபோகும் நிலை இருக்கிறது.எல்லாப் படங்களையும் சேனல்கள் வாங்குவதில்லை.மலை மாதிரி உயர்ந்து இருக்கிற சினிமா சரிந்து விழுந்து மண் மேடாகும் நிலை வந்திருக்கிறது ''என்று சேரன் பேசினார்.
மனசாட்சி உள்ள சினிமாக்காரர்களால் சத்தியமாக இதை மறுக்க முடியாது.
பாரம்பரியமுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் சேனல்களின் ஆதிக்கப் போட்டியினால் 'இனிமேல் தமிழ்ப் படமே எடுப்பதில்லை ' என்று தெலுங்கு தேசம் பக்கமாக ஒதுங்கிவிட்டது. தனது ஸ்டுடியோவின் ஒரு பகுதியை சேனல் ஒன்றுக்கு விற்றிருக்கிறார் இன்னொருவர். இதெல்லாம் எதனால்?
அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஒருபடத்தை ஒரு சேனலுக்கு விற்றுவிட்டார் என்பதால் அந்த தயாரிப்பாளரின் பட விளம்பரங்களை இன்னொரு சேனல் ஒளிபரப்பமுடியாது என்று சொல்லிவிட்டது.
இது ஆதிக்க போட்டிதானே?
பணம் கொடுத்தாலும் விளம்பரத்தை ஒளிபரப்பமாட்டேன் .நீ ஏன் அந்த சேனலுக்கு படத்தை விற்றாய் என்று சொல்வது தொழில் தர்மமா ?
இந்த கொடுமையைத் தானே சேரன் சொன்னார்.
இதைத் தவறு என்று நடிகர் லாரன்ஸ் அந்த மேடையில் மறுத்து பேசியது எதை எதிர்பார்த்து என்பதுதான் தெரியவில்லை. சேனல்களின் ஆதிக்கம் 'ஆக்டோபஸ்' மாதிரி பல துறைகள் மீது பதிந்து இருக்கிறது .மேலும் பரவிக் கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

வெள்ளி, 19 மார்ச், 2010

ஆண்டாளும் ,ரஞ்சிதாவும்....!தலைப்பைப் படிப்பவர்களில் பலர் என் மீது காய்வார்கள் என்பது நன்கு தெரியும். அதற்காக நான் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளப்போவதில்லை.
நித்தியானந்த சாமியார் மீது போலீஸ் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.அதில் ''இயற்கைக்கு முரணான செக்ஸ் ''என ஒரு பிரிவு.
செக்ஸ் என்பது தனி மனித உரிமை.
இப்படிதான் செக்ஸ் வைத்துக் கொள்ளவேண்டும்என்று எவனும் கட்டாயப் படுத்த முடியாது. சட்டம் போட்டு விட்டு ஒவ்வொருவனுடைய படுக்கை அறையிலும் மூன்றாவது மனிதன் கண் பதிக்கமுடியாது.
அவனும் ,அவளும் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ ,அதன்படி மனம் இணைந்து கலவி செய்வதை 'இயற்கைக்கு முரணானது' என்று எப்படி சொல்ல முடியும்?
சரி,இயற்கையான செக்ஸ் என்பதாக எதை சொல்கிறார்கள்?
கணவன் -மனைவி இருவரும் கலப்பதுதான் இயற்கையான செக்ஸ் என்றால் 'லிவிங்டுகெதர்'என்று வாழ்கிறார்களே ,அவர்களை சட்டம் என்ன செய்திருக்கிறது?
ஆணும் ,ஆணும்-பெண்ணும்,பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொள்வதை சர்வதேச நாடுகள் பல அங்கீகரித்திருக்கின்றன .ஆக இயற்கைக்கு முரணான செக்ஸ் என 'வகை'ப்படுத்துவது தனி மனித உரிமையில் கை வைப்பதாகும்.
இனி சாமியார் மேட்டருக்கு வரலாம்.
நித்தியானந்தாவுக்கு 'பணிவிடை' செய்ததாக ரஞ்சிதா சொன்னதாக செய்திகள்.அது உண்மையா இல்லையா என்பதை அவர் நேரில் வந்து சொன்னால்தான் வெளிச்சம் தெரியும்.
பணிவிடை என்பது கடவுளுக்கு,கணவனுக்கு ,முதலாளிக்கு செய்யப்படுகிற ஒருவித அடிமைத்தனம். அது 'பணிவிடை'செய்பவனின் மனநிலையைப் பொருத்தது.
ஆண்டாளை எல்லோருக்கும் தெரியும்.
அவள் திருவரங்கனை காதலித்தவள் .
'கடவுளைக்' காதலித்த மனுசி. சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் என்று ஆத்திகர்கள் வணங்கி வருகிறார்கள்.
அரங்கனை ,அவளது காதலனை எப்படியெல்லாம் நேசித்தாள் என்பதை அவளே பாடியிருக்கிறாள்.
தொண்டு செய்வது எப்படி என்பதை ஆண்டாள் சொல்லியிருப்பதை சாமியாரை பழிப்பவர்கள் ஒருமுறை படிப்பது நல்லது. சாமியாரை நியாயப் படுத்துவதாக தயவு செய்து யாரும் நினைத்து விட வேண்டாம்.
நாச்சியார் திருமொழியில் அவள் பாடியிருப்பதை படித்துப் பாருங்கள். ''என்ன இவன்,எங்கே போனான்? நான் இருக்கிறேனா இல்லையா என்கிற கவலை கூட இல்லையே அவனுக்கு?
ஆனால் அவனைப் பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை .
நினைவெல்லாம் அவனே நிறைந்திருக்கிறான் .
எப்படி மறக்கமுடியும்,மறக்கமுடியுமா அவனை ?
உருகிப் போனேன்.உடைந்து போனேன்.
நைந்து நாராகிப் போனேன்.
தன்னை விரும்புகிற பாவையை வெறுத்து ஒதுக்குகிறானா?
கொள்ளை கொள்ளிக் குறும்பனே !கோவர்த்தனனே !எனை அலட்சியப் படுத்துகிறாயே,அடுக்குமா உனக்கு?
நேரில் நீ வருவாயானால் எனது மார்பகங்களை வேருடன் பிய்த்து உன் மார்பில்வெறிகொண்டு வீசுவேன். அப்படிதான் என் துன்பம் தீர்ப்பேன் . ஆலிலைக் கண்ணா,வந்து விடு.
உனக்கு நான் 'தொண்டு'செய்யவேண்டும். செழித்து வளர்ந்திருக்கிற எனது பருத்த மார்பகங்களின் ஏக்கமும் துன்பமும் நீங்க வேண்டுமானால் அந்த
கோவிந்தனுக்கு ஊழியம் செய்தாக வேண்டும். இந்தப் பிறவியில் அவனுக்கு 'அந்தரங்கத் தொண்டு'செய்யாவிட்டால் பிறப்பின் பயன்தான் என்ன? பரமபதம் கிடைத்தாலும் போய் செய்யும் தவம்தான் என்ன ?
பேரழகா, பெருமாளே!என்னை சேர்த்துக் கொள் .செம்மை உடைய உனது திருமார்பில் நான் செம்மாந்து அணைந்திருக்க அருள் புரிய மாட்டாயா? அருளாளனே ,என்னைப் பிடிக்கவில்லை என்றால் அதையாவது எனது முகம் பார்த்து சொல்லிவிடு''என்று கெஞ்சுகிறாள், ஆண்டாள்.

''உள்ளே உருகி நைவேனை
ஊனோ இலனோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வனே !''

இது அந்தக் கால தொண்டு முறையோ ,என்னவோ? ஆண்டாளை வணங்குகிறவர்கள் ,அவளது தெய்வீகத் தொண்டினை பாராட்டுகிறவர்கள் ரஞ்சிதாவின் 'பணிவிடையை' பழிப்பது ஏன் என்பதுதான் எனது சந்தேகம்?
நித்தியானந்தர்கள் அரசியலில் இல்லையா?
சொல்லுங்கள்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

தமிழீழ போராட்டம் படமாகிறதா?

நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்குகிற படம் ''ஆயுத போராட்டம்''

''டைட்டில் வித்தியாசமாக இருக்கிறது. கதை என்ன?''என்றேன்.

''தமிழீழ தமிழன்-தமிழக தமிழன் பற்றிய கதை.இந்த இரண்டு கேரக்டரையும் நானே செய்கிறேன்.''என்றார் ஜெய் ஆகாஷ்.

''விடுதலைப் புலிகளை பற்றிய படமா?'' பட்டென கேட்டுவிட்டேன்.தமிழீழம் என்றால் புலிகளின் விடுதலை முழக்கம் இல்லாமல் படம் எடுப்பது இயலாத ஒன்று.

''அதை இப்போது சொல்ல இயலாது. உலகத் தமிழர்களின் உணர்வுகளை கண்டிப்பாக இந்த படம் எதிரொலிக்கும்.இந்த படத்திற்காக நாங்கள் தாய்லாந்து போகிறோம்.போர்க்கள காட்சிகளை அங்குதான் படமாக்கப் போகிறோம்.''

''கமர்சியல் என்கிற பெயரில் குத்தாட்டம் ,காமடி என்கிற பெயரில் ஆபாச வசனங்கள் என்று நிரப்பப் போகிறீர்களா? கதையின் உணர்வு கெட்டுவிடுமே"என்கிற கவலையை பதிவு செய்ய,

மனிதர் சற்று ஆடித்தான் போனார்.''உயர்வான நோக்குடன் கதை, திரைக் கதை,வசனம் என பொறுப்பு ஏற்றுள்ள நான் அத்தகைய தவறுகளை செய்ய மாட்டேன்.நீங்களெல்லாம் பாராட்டும் வகையில் இந்த படம் இருக்கும்''
என்றார்.

. தொடர்ந்து ''எனக்கு இந்த படப் பிடிப்பை தமிழீழத்தில்தான் எடுக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் அனுமதி கிடைக்காது என்பதால் தாய்லாந்தை தேர்ந்தெடுத்தேன்.தயாரிப்பாளரும் செலவு பற்றி கவலைப் படவில்லை.பிப்ரவரி 27 எங்கள் பயணம் தொடங்குகிறது.''என்றார் ஜெய் ஆகாஷ்.

''பாடல்களின் வரிகளில் வீரியம் இருக்கவேண்டுமே ,யார் எழுதுகிறார்கள்?''

''செந்தமிழ்தாசனும் ,ஆண்டாள் பிரியதரிசினியும் எழுதுகிறார்கள்.''

''உச்சகட்டகாட்சியாக என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?''

''தமிழர்களின் கருத்தாக கிளைமாக்ஸ் இருக்கும்''என்றார்.

வாழ்த்துகளை சொல்லி விடை பெற்றேன்.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக....!

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பார்த்து விட்டு வந்ததும் எதிர்பட்டவர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
'' எப்ப ஹீரோவாக களம் இறங்கப் போறீங்க''என்று கேட்டேன்.
''அவசரப் படணுமா? ''
''எதுக்காக தயக்கம்?''
''நல்ல கதை வேணும்.எனக்கேத்த கேரக்டரா அமையனும் .வெயிட் பண்றது தப்பில்லேன்னு நினைக்கிறேன்''
''அதுவும் சரிதான்.சிலர் உசுப்பேத்தி விட்ருவாங்க. எச்சரிக்கையாக இருப்பது தப்பில்லே''என்று சொல்லி கை கொடுத்துவிட்டு திரும்பிவிட்டேன்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வராதா?

'' 1967 -க்குப் பிறகு தமிழகத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களின் ஆட்சியே நடந்து கொண்டு வருகிறது.அண்ணா வந்தார்,அவருக்குப்பின் கலைஞர் வந்தார் ,பிறகு எம்.ஜி. ஆர் . வந்தார்,தொடர்ந்து ஜெயலலிதா வும் ,வி.என்.ஜானகியும். இப்படியாக திரைத்துறையை சேர்ந்தவர்களிடமே ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.இனிமேலும் ஆட்சி அவர்களிடமே இருக்கும்.இதை யாராலும் மாற்ற முடியாது''

இப்படி ஆணி அடித்திருக்கிறார் வி.சி.குகநாதன்.பெப்சி தலைவர்.25 ஆயிரம் தொழிலாளர்களின் தலைவர்.

அவர் அத்துடன் நின்றுவிடாமல் எச்சரிக்கை ஒன்றும் விட்டிருக்கிறார்.அவர் யாரை நினைத்து இப்படி குண்டு வீசினார் என்பது ஏழுகடல் ஏழு மலை தாண்டி கண்டுபிடிக்க வேண்டிய ரகசியம் இல்லை.சாட்சாத் ரஜினிகாந்துதான் என்பது அவரது பேச்சிலேயே மறைந்து இருக்கிறது.

''வெளியே இருந்து வந்தவர்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ,வற்புறுத்தலை கூட மிரட்டல் என்று சொல்கிறார்கள்''என்கிறார் ,வி.சி.கு. நானும் நீங்களும் அவர் சொன்ன ஆள் அஜித் என்பதாக புரிந்துகொள்வோமாம்.

அஜித் எந்த காலத்தில் ஆட்சியை பிடிப்பதாக சொன்னார். ரஜினியை அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டது திமுகவும் ,தேசிய கட்சிகளும்தானே !அவரது 'வாய்ஸ் 'கிடைக்காதா என்று காத்திருப்போர் பட்டியலில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது குகநாதனுக்கு தெரியாததல்ல .

சங்கத்தில் உறுப்பினர் என்பது 'அடிமை சாசனம்'அல்ல! உறுப்பினர் ஆகி விடுவதால் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டதாக நினைத்து விடக்கூடாது . நான் சாமி கும்பிடமாட்டேன் ,கோவில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறபோது 'நீ வந்துதான் ஆக வேண்டும் 'என்று கட்டாயப்படுத்தினால் அதன் பெயர் என்ன? இன்று கலைஞருக்கு விழா எடுப்பவர்கள் நாளைக்கு' ஜெ 'ஆட்சிக்கு வந்தால் அவருக்கும் விழா எடுப்பார்கள் .அது தவிர்க்க முடியாதது. இன்று இவருக்கு புகழ் மாலைகள் போடுவதைப்போல் அவருக்கும் போடவேண்டும். தமிழுணர்வு தடுக்காது. 'ஜெ'யும் சினிமாவை சேர்ந்தவர்தான் என்று சொல்லிவிடுவார் வி.சி.கு.

விஜயகாந்த் வந்தாலும் இதே பதிலை சொல்லிவிடுவார் .

சினிமாவை சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியும் என்று ஆணி அடிப்பவர் கண்களுக்கு 'ரஜினியும்,அஜித்தும் ''வெளி ஆட்களாக''தெரிவது எதனால்?

சினிமாவை சேர்ந்தவர்கள்தான் ஆட்சியை பிடிப்பார்கள் என்றால் என்றால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்கவே முடியாதா?அந்த கட்சியைசேர்ந்தவர்கள் சினிமாவில் யாரும் இல்லை என்பதால் இப்படியா நக்கல் பண்ணுவது?


செவ்வாய், 26 ஜனவரி, 2010

தமிழ் படமும் ,தமிழ்ப்படமும்...!

''என்னங்க இது, 'ப்'இல்லாம தமிழ் படம்னு தலைப்பு இருக்கே,தப்பாச்சே '' என்று கேட்டபோது மொத்த யூனிட்டும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொண்டது.
இயக்குனர் கேட்டார்,''தப்பான தலைப்புன்னு எதை வச்சு சொல்றிங்க ''
''தமிழ்ப்படம்னு இருக்கணும் .'ப்' இல்லாம தலைப்பு இருக்கு''
''தமிழ் படத்தை பத்தி சொல்ற கதை. அதனால 'ப்' வேணாம்னு ......''
இடை மறித்தேன். ''தயாரிப்பாளரின் தாத்தா கலைஞர் சிறந்த தமிழ் அறிஞர் .வாழ்த்துக்கள்னு வச்ச பெயரை தப்புன்னு சொல்லி வாழ்த்துகள்னு சரியாக திருத்தம் சொன்னவர். செம்மொழி மாநாடு நடக்க இருக்கிற இந்த நேரத்தில அவரின் குடும்பத்திலிருந்து வரக்கூடிய ஒரு தயாரிப்பு பிழையான தலைப்புடன் வரலாமா?''என்றேன்.
அவர்களோ 'தமிழ்படம்' தலைப்பே சரி எனச்சொல்லி சபையை கலைத்தனர்.
தொடர்ந்து வந்த விளம்பரங்களில் 'ப்' இல்லாமலேயே பெயர் இருந்தது. ஒருநாள் கலைஞர் தன்னைப்போல் தனது வாரிசுகளும் தமிழ்ப்பற்றுடன் இருக்கவேண்டும் எனப்பகிரங்கமாகப் பேசிவிட்டார்.
அவரது ஆதங்கம் நியாயமானது. அவருக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலுக்கு வரக் கூடியவர்கள் கலைஞரைப் போல் தமிழில் வல்லவராக இருப்பார்களா ......?தெரியவில்லை.
வெற்றிடம்தான் தெரிகிறது.
அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ்ப்புலமையில் கலைஞருக்கு இணையாக ஒரு தலைவரோ,தலைவியோ தெரியவில்லை.
சரி ,அது கிடக்கட்டும் .நாம் படத்தின் தலைப்பு மாறியது எப்படி என்பதைப் பார்ப்போம்.
கலைஞரின் பேச்சுக்குப் பிறகு படத்தின் தலைப்பு பிழையாக இருப்பதை சிலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.. அதன்பின்னரே 'தமிழ்ப்படம்' என்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள்.

திங்கள், 25 ஜனவரி, 2010

பாலாவும் பொன்னாடைகளும்....!

விழாக்களில் பொன்னாடைகள் போர்த்துவது என்பது எழுதப்படாத சட்டமாகி இருக்கிறது. பூ மாலைகள் போட்டால் உதிர்ந்து விடும் ,அல்லது வாடி விடும்.ஆகவே பொன்னாடைகள் போடுவது வழக்கமாகி விட்டது என்று சொல்கிறார்கள். எனக்கு தெரிந்தவரையில் காங்கிரஸ் தலைவர் படிக்காத மேதை காமராஜர் மலர் மாலை மரியாதைகளை ஏற்பதில்லை.கதர் நூல்சிட்டம் ,கதர் துண்டுகள் இப்படி கதர் வகையறாக்களையே ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார். அவைகளை பாலமந்திருக்கு கொடுத்துவிடுவார் என்று சொல்வார்கள். கதர் துண்டு
மரியாதை என்பது 'அவுட் ஆப் பேஷன்' ஆகிவிட்டது.இப்போதெல்லாம் அரசு விழாக்களானாலும் சரி ,தனியார் விழாக்களானாலும் சரி பொன்னாடைகள் என்று சரிகை ஜிகினாக்கள் பளபளக்க சால்வைகளை போர்த்தி மரியாதை செய்வது கவுரவம் என்று கருதப்படுகிறது . அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் என்றால் விலையுயர்வான பட்டு துண்டுகள் போர்த்துவது அவசியமாகிறது.இந்த விலையுயர்வான அயிட்டங்கள் திரும்பவும் விற்கப்பட்டு விடுகின்றன என்பதும் ஒரு செய்திதான்.
அதுவல்ல இங்கு சேதி.
தேசிய அளவில் சிறந்த திரைப்பட இயக்குனர் என்று ''நான் கடவுள் '' இயக்குனரான நமது பாலாவை இந்திய அரசு தேர்வு செய்திருக்கிறது. பாலா தந்தை பெரியாரை பின்பற்றுகிறவர் .உண்மையான புரட்சியாளர் . கருப்பு சட்டைக்காரர்.இவரது அடுத்த படம் 'அவன்-இவன்' என்பதாகும். விஷால்,ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் .இந்த படத்திற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டன.
எதையுமே வெளிப்படையாக பேசிவிடும் பாலா அன்றும் அப்படியே பேசிவிட்டார். ''பொன்னாடைகளை பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு போர்த்தியிருந்தால் குளிருக்கு உதவியாக இருந்திருக்கும்'' என்று சொல்லிவிட்டார். போர்த்தியவர்களின் மனது பற்றி அவர் நினைத்துப் பார்க்காது உணர்ச்சி வயப்பட்டுவிட்டார் .
ஆனால் எனக்கு ஒரு கருத்து உண்டு. இந்த பொன்னாடைகளால் எந்தப் பயனும் இல்லை .இவைகளுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்கலாம். வாசிக்கும் பழக்கம் வளரும்.பாரதி ,பாரதிதாசன்,போன்ற எத்தனையோ புரட்சியாளர்களின் படைப்புகள் இருக்கின்றன. தமிழின,மான ,மொழி உணர்வுகள் வரலாறுகள் தொடர்பான நூல்களை வழங்கலாம். கலை ஞானி கமல் ஹாசன் ஒரு சமயம் என்னிடம் சொன்னதையே நானும் இங்கு பதிவு செய்கிறேன்.

வெள்ளி, 22 ஜனவரி, 2010

கள்ளுக்கு ...ஜே!

நம்ப முடியலிங்க சொன்னது காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுதானா ....அவரா இப்படிச்சொன்னார் என்று எல்லா நிருபர்களிடமும் கேட்டுட்டேன். ''சத்தியமா அவர் சொன்னதுதாங்க''என்று மண்டை மேல கையை வச்சு சத்தியம் பண்ணிட்டாங்க.
''வெளிநாட்டு மது பானங்கள் விற்க அனுமதிக்கப்படும்போது உள்நாட்டு பானங்களுக்கு தடை விதிப்பது சரியல்ல.எனவே கள்ளு இறக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இதைப்பற்றி முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் பேசுவேன்'' என்று அவர் பேசியதையே நாங்க எழுதிக்கொடுக்க,அது பத்திரிக்கையிலும் வந்தாச்சு 'என்றார்கள் பத்திரிகை சகோதரர்கள்.
கள்ளுக்கடை மறியல் என்பது காங்கிரஸ் கட்சி எப்பவோ நடத்திய அறப்போராட்டம். மது குடிக்கக் கூடாது என்பது இப்பவும் காங்கிரஸ் கட்சியில் இருக்கிற சட்டம். ,கள்ளு இறக்கலாம் என்று மாநிலத்தலைமை சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்சிக் கொள்கை தவறானது என்று சொல்லுவதற்கும் ஒரு தில் வேண்டும்.

தங்கபாலு சொன்ன ''உள்நாட்டுப்பானங்கள்''பட்டியலில் பரம்பரை கைத்தொழிலாக'' இருந்து வருகிற கள்ளச்சாராயமும் அடக்கமா என்பதை அவர் சொல்லிவிட்டால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில். எல்லா கட்சிகளும் தங்க பாலு வீட்டுக்கு முன்னாடி வரிசை கட்டி நிப்பாங்க. அழுகின வாழைப்பழங்கள்,பாட்டரி,நவச்சாரம் ,பேரிச்சம்பழம் ,இன்னும் என்னென்ன மூலப்பொருள்கள் உண்டோ அத்தனையும் விலைவாசியில் ரெக்கை கட்டிப்பறக்கும்.நாடு எங்கேயோ போய்விடும். குடிமகன் என்றால் என்ன என்பதின் அருத்தம் அப்பத்தான்யா நம்ம இந்திய தாய்க் குலத்துக்குத் தெரியும். ஒருவகையில் கள்ளச்சாராயத்துக்கு முடிவு கட்டி அதற்கு அரசு மரியாதை கொடுத்த பெருமை நம்ம தங்க பாலு தலைவருக்கு வந்து சேரும்.
என்னங்க ,நான் சொன்னது சரிதானுங்களே?

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

திரிஷாவுக்கு காதல் கல்யாணம்தான்...

திருமதிஉமா கிருஷ்ணன் நடிகை த்ரிஷாவின் அம்மா.
மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்,ஜாதகங்கள் தேடுகிறார் என்று யாரோ பரபரப்பு வெடியைக் கொளுத்திப் போட்டுவிட,
அவசரமுடன் போனைப் போட்டேன்.
'' நிஜம்தானாம்மா?''
''யார் சொன்னது ?''
''கோடம்பாக்கமே சேர்ந்து கும்மியடிக்கிறது உங்களுக்கு கேட்கலயா?''
''வேற வேலை என்ன அவங்களுக்கு?கை நிறைய படங்கள் இருக்கு.அத முடிக்கணும்.இந்தி படங்கள் தெலுங்கு படங்கள் தமிழ் படங்கள்னு பிசியா இருக்கோம். அது பிடிக்காம யாரோ கிளப்பி விட்டிருக்காங்க. ஹைதராபாத்ல ஹோட்டல் கட்டிட்டு இருக்கிறதாகவும் சொல்றாங்க.இப்ப த்ரிஷாவுக்கு நாங்க மாப்பிளை பார்க்கல.ஜாதகங்களும் வாங்கல. ஜாதகம் ,ஜோசியமெல்லாம் பார்த்து கல்யாணம் பண்றது எங்களுக்கு பிடிக்காது. த்ரிஷா இந்த காலத்துப் பொண்ணு. அவளுக்கு யாரைப் பிடிக்கிதோ , அவளே சூஸ் பண்ணிப்பா. காதல் கல்யாணம்னாலும் எங்களுக்கு சரிதான். இதான் எங்க முடிவு .கல்யாணத்துக்கு இப்ப என்னங்க அவசரம்?''என்கிறார்,திரிஷாவின் அம்மா.
இப்படி மனம் திறந்து பேசுகிற திருமதி உமா கிருஷ்ணனை பாராட்ட வேண்டும்.

வியாழன், 14 ஜனவரி, 2010

எம்.ஜி. ஆரும், கர்ணனும்.......!

தமிழ்ப்புத்தாண்டு-தமிழர் திருநாள்-பொங்கல் விழா என்பதற்காக நடைப்பயிற்சியை விட முடியுமா?

வழக்கம் போல் அன்றும் அதிகாலை 5 மணிக்கு காது கவசங்களுடன் தெருவில் இறங்கி நடந்தேன்.

அடடா..அடடா..!மங்கல விளக்குகள் ,மாக்கோலங்கள், வண்ணப்பொடிகளால் வரையப்பட்ட வாழ்த்துக் கோலங்கள்,என இல்லங்களின் முன்பாக வாசலில் கை வண்ணம் காட்டியிருந்தனர்.

''விஷ் யு ஹாப்பி பொங்கல்'',என்று கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தில் இல்லத்தரசிகள் தங்கள் திறமையை காட்டியிருந்தனர் .

எனக்கு ஒரு நப்பாசை!நடந்தபடியே 120 வீடுகளை கவனித்தேன். எத்தனை வீடுகளின் வாசல்களில் தமிழில் பொங்கல் வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார்கள் என கணக்கு எடுத்ததில் இரண்டே இரண்டு வீடுகள் மட்டுமே தமிழில் வாழ்த்துகள் சொல்லியிருந்தன! 12 வீடுகள் நடுநிலை,ஆங்கிலமும் வேண்டாம்,தமிழும் வேண்டாம் என்று வெறும் கோலங்களுடன் ! மற்ற வீடுகளின் வாசல்கள் ஆங்கிலத்தில் வாழ்த்துகள் சொல்லியிருந்தன!

தமிழரின் புத்தாண்டுக்கு தமிழர்கள் காட்டிய மரியாதை,கவுரவம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். தமிழர்கள் தங்கள் வீட்டரசிகளுக்கு கற்று கொடுத்துள்ள தமிழுணர்வு வீட்டு வாசலில் விளையாடி இருப்பது ....இதை எப்படிச்சொல்வது என்பது தெரியவில்லை.

வெடி வெடித்து ,ஆரவார ஆட்டம் போட்டு ''வாழ்க தமிழ்''என முழக்கம் இடுவதெல்லாம் வெறும் நாடகம் இல்லாமல் வேறென்ன? இன, மான,மொழி, உணர்வு வீட்டிலிருந்து வராத வரை தமிழுக்கு ,தமிழனுக்கு வளமான எதிர்காலம் இல்லவே இல்லை. தமிழ் ஈழத் தமிழ் சொந்தங்களை நினைத்தபடியே வீடு சேர்ந்தேன். தமிழ்நாடு மகிழ்ச்சியில் .சொந்தங்களோ கால் வயிற்று கஞ்சியாவது கிடைக்காதா என்கிற வேதனையில்... கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைத்தோமா?

அன்று நான் உண்ணவில்லை .மூட நம்பிக்கைகள் என்று வீசி எறிந்திருந்த அமாவாசை விரதம் இருந்தேன்,கொடூரமாக கொல்லப்பட்ட எனது ஈழ உறவுகளுக்காக.

அமைதி பெறட்டும் ஆத்மாக்கள்.

விமர்சகன் என்கிற கடமை உணர்வுடன் மறு தினம் ''ஆயிரத்தில் ஒருவன்'' படம் பார்த்தேன்.

நான் முன்னரே எனது வலைப்பதிவில் எழுதியது நினைவுக்கு வந்தது.

எம்.ஜி. ஆரின் படங்களின் பெயரில் வெளி யாகிய படங்கள் எதுவும் வெற்றி பெற்றதில்லைஎன்று சில படங்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
புதுமைப் பித்தன்.
ரகசியப் போலிஸ் .
அன்பே வா.
நேற்று,இன்று,நாளை.
மதுரை வீரன்.
நாடோடி மன்னன்.
வேட்டைக்காரன்.
என் தங்கை ,ராமன் தேடிய சீதை,நம்நாடு ,சதி லீலாவதி.
இந்தப் படங்களில் சதி லீலாவதி மட்டும் விதி விலக்கு. காரணம் இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கு முதல் படம். ஆகவே இதை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எம்.ஜி .ஆரின் ரசிகர்களின் கொள்கை ,அல்லது நம்பிக்கை.

''எங்களின் தலைவர் எம்.ஜி. ஆர்., கர்ணனுக்கு ஒப்பானவர். கர்ணன் எப்படி ''கவசக் குண்டலங்களுடன் பிறந்தானோ ,அதைப் போல் எங்கள் தலைவரும் வள்ளலாக வாழ்ந்தவர். கர்ணனின் கவசக் குண்டலங்கள் வேறு யாருக்குமே பொருந்தாது. அதைப் போலவே அவரது படங்களின் பெயர்கள் எந்த நடிகருக்கும் பொருந்தாது.'' என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.

உண்மைதான்!