

கோரிப்பாளையம் டிரைலர் வெளியீட்டு விழாவை அரசியல் கட்சிக்கு உரிய பந்தாவுடன்நடத்தி இருந்தார் ,தயாரிப்பாளர் மிக்கேல் ராயப்பன். அவர் தே.மு. தி.க. என்பதால் அவருடைய தலைவர் கேப்டன் விஜயகாந்த் வந்திருந்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணனும் வந்திருந்தார்.இவர் தி.மு.க. என்றாலும் மேடையில் அரசியல் கலக்கவில்லை . ஆரோக்கியமான விஷயம்.
''நானும் விஜயகாந்த் சாரும் முப்பதாண்டு கால நண்பர்கள்.எங்கள் நட்பு அரசியலைக் கடந்த நட்பு .''என்று ராம.நாராயணன் சொன்னதை முக மலர்ச்சியுடன் கேப்டன் ஒப்புக் கொண்டார். இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். அடிக்கடி சிரித்துக் கொண்டனர்.அரசியல் பேசினார்களா,சினிமாவைப் பற்றிப் பேசி சிரித்துக் கொண்டார்களா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
பேசிய அனைவரும் கேப்டனைப் புகழ்ந்தது மேடை நாகரிகம். தவிர்க்க இயலாதது.மேடையில் வேறு எந்த கட்சி தலைவர் உட்கார்ந்திருந்தாலும் அவரைப் பாராட்டிப் பேசுவதுதான் பண்பு. ஆனால் 'துறை ' சார்ந்த பிரச்னைகளை சொல்வது என்பது தவிர்க்க இயலாதது. அந்த கருத்தை இந்த இடத்தில் சொல்வது சரியானதாக இருக்கும் .சம்பந்தப்பட்டவர்கள் அங்கே இருப்பதால் பிரச்னைகளை சொல்லலாம் என்கிற மனநிலையில் இயக்குனர் சேரன் இந்த மேடையில் சில கருத்துகளை முன் வைத்தார். அது நியாயமானதும் கூட.
சேரன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை.'
'' சி னிமா சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.சேனல்களின் போட்டியை மீறி எத்தனை தயாரிப்பாளர்களால் வெற்றி பெறமுடியும்?1. 5 ,கோடி செலவு செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படம் ஓட முடியும் என்கிற 'நிலை' உருவாக்கப்பட்டிருக்கிறது.தயாரிப்பாளர்கள் கூலித் தொழிலாளர்களாக மாறி வாழ்க்கை பறிபோகும் நிலை இருக்கிறது.எல்லாப் படங்களையும் சேனல்கள் வாங்குவதில்லை.மலை மாதிரி உயர்ந்து இருக்கிற சினிமா சரிந்து விழுந்து மண் மேடாகும் நிலை வந்திருக்கிறது ''என்று சேரன் பேசினார்.
மனசாட்சி உள்ள சினிமாக்காரர்களால் சத்தியமாக இதை மறுக்க முடியாது.
பாரம்பரியமுள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் சேனல்களின் ஆதிக்கப் போட்டியினால் 'இனிமேல் தமிழ்ப் படமே எடுப்பதில்லை ' என்று தெலுங்கு தேசம் பக்கமாக ஒதுங்கிவிட்டது. தனது ஸ்டுடியோவின் ஒரு பகுதியை சேனல் ஒன்றுக்கு விற்றிருக்கிறார் இன்னொருவர். இதெல்லாம் எதனால்?
அண்மையில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஒருபடத்தை ஒரு சேனலுக்கு விற்றுவிட்டார் என்பதால் அந்த தயாரிப்பாளரின் பட விளம்பரங்களை இன்னொரு சேனல் ஒளிபரப்பமுடியாது என்று சொல்லிவிட்டது.
இது ஆதிக்க போட்டிதானே?
பணம் கொடுத்தாலும் விளம்பரத்தை ஒளிபரப்பமாட்டேன் .நீ ஏன் அந்த சேனலுக்கு படத்தை விற்றாய் என்று சொல்வது தொழில் தர்மமா ?
இந்த கொடுமையைத் தானே சேரன் சொன்னார்.
இதைத் தவறு என்று நடிகர் லாரன்ஸ் அந்த மேடையில் மறுத்து பேசியது எதை எதிர்பார்த்து என்பதுதான் தெரியவில்லை. சேனல்களின் ஆதிக்கம் 'ஆக்டோபஸ்' மாதிரி பல துறைகள் மீது பதிந்து இருக்கிறது .மேலும் பரவிக் கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.