திருப்பதிக்குப் போய்வந்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் !
இப்படியும் ஒரு நம்பிக்கை!
சுட்டெரிக்கும் வெயில்.தாகம் எடுத்த நாக்கு தண்ணீருக்காக தவிக்கிறது.
வெந்நீர் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லமுடியுமா?ஆற வைத்து நாக்கை நனைப்பதில்லையா?
அதைப் போலவே திருப்பதி போனால் திருப்பம் வரும் என்கிற நம்பிக்கையும்!
ஆனால் அங்கு போன பிறகுதான் அந்த தெரியாத திருப்பத்துக்காக நாம் எவ்வளவுகொடுமையை தெரிந்தே அனுபவிக்கிறோம் என்பது.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று சொல்லிவைத்த மனிதன் அதில் சில சலுகைகளையும் ,சமரசங்களையும் செய்து கொண்டான்.சமம் என்று சொன்னது பொய்.மாய்மாலம் என்பதைப் போலவே கடவுளுக்கு முன் அனைவரும் சமம் என்பதும் பொய்,கயமை என்பதை திருப்பதியில் தெரிந்துகொண்டேன்
சர்வதரிசனம் என்பது காசில்லாதவர்களுக்கு!
குய்க் தரிசனம் 300 என்பது சற்று வசதியானவர்களுக்கு.
இன்னும் பலவிதமாக பக்தர்களை பிரித்து வைத்திருக்கிறார்கள்.பதவி,அதிகாரம் உள்ளவர்கள் என்றால் எந்த பிரச்னையும் இல்லை.தனிவழி,தனிச்சலுகை ,சுலப தரிசனம்.
ஆனால் நம்மைப்போன்றவர்கள் கால் கடுக்க வரிசையில் நின்று ,நகர்ந்து நகர்ந்து போனால் ,வசதியான,காற்றோட்டமான கொட்டடியில் நம்மை நாமே சிறை வைத்துக்கொள்ளவேண்டும்.நிறைய கொட்டடிகள் இருக்கின்றன.அடை பட்டபிறகு வெளியே வர முடியாது.கொட்டடி எப்போது திறக்கப்படும் என்பது "வெங்கி"மட்டுமே தெரிந்திருக்கும் உண்மை.குறைந்தது ஐந்து மணி நேரம் கொட்டட்டியில் இருக்கவேண்டும். திறக்கப்பட்டதும் மக்கள் ?ஆடு,மாடுகளைப்போல் நெருக்கியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.போகிற வழியில் "லட்டு"கவுண்டர்.20 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினால்தரிசனம் முடிந்து இரண்டு லட்டு வாங்கலாம்.கோவிலுக்கு வெளியே.
லட்டு வாங்குவதற்கு நாம் பயில்வானாக இருப்பது நல்லது.
தரிசனம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல.
ஆண்,பெண் ,குழந்தைகள்,முதியவர்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் "சமமாக" நடத்தப்படுவது இங்குதான். லட்டு டோக்கன் வாங்கிய பிறகு ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டும் ,படாத இடங்களில் பல கைகள் பட்டும் "சந்நிதானம்" நோக்கி நடக்கிறோம்.நமக்கே வெறுப்பு வருகிறது.இவ்வளவு கேவலமானவர்களா நாம்?பெண்ணின் அங்கங்கள் மீது பக்தி செலுத்தும் "பக்தர்களை"அங்கு பார்க்க நேர்ந்தது.
சன்னிதானத்தின் சுவர்களில் தமிழ் வட்டெழுத்துகள்.கர்ப்பகிரகத்தின் சுவர்களிலும் தமிழ் வட்டெழுத்துகள்.அப்படியானால் திருப்பதி தமிழனுடையதா?
இந்த எழுத்துகளைப் பார்த்துக் கொண்டே "வெங்கியை" நெருங்கினால் சில வினாடிகள் கூட நின்று கும்பிட முடியவில்லை."கோவிந்தா"என்றுசொல்லி முடிப்பதற்குள் "போ,போ"என்று தள்ளிவிடுகிறார்கள்.
எல்லாம் முடிந்து வெளியே வந்து லட்டு வாங்கவேண்டும்.கூடுதலாக லட்டு வேண்டும் என்றால் ஒருவருக்கு நாலு கிடைக்கும்.நூறு ரூபாய். பத்து ரூபாய் லட்டு 25 ரூபாய்.பகல் கொள்ளை.
பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று திருப்பதி முழுவதும் போர்டு வைத்திருப்பவர்கள் லட்டுகள் வாங்க பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்கிறார்கள்.
இலவச மொட்டை .ஆனால் மூன்று மணி நேரம் ஆகிறது.சனி ,ஞாயிறு கிழமைகளில் வந்தால் இவ்வளவு கொடுமைகளை தாங்கத்தான் வேண்டும் என்கிறார்கள்.
திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது மெய்யா,பொய்யா என்பது இனிமேல்தான் தெரியும்.