வியாழன், 13 மே, 2010

யாருக்கும் வெட்கமில்லை....!

சின்னப் பசங்க சண்டை போட்டுக் கொண்டால் பெரிய மனிதர்கள் ''அட, விடுங்கப்பா,பொடிப் பசங்க!அவனுகளுக்கு என்ன தெரியும்?இன்னைக்கு அடிச்சுக்குவானுங்க ,நாளைக்கு சேர்ந்துக்குவானுங்க ''என்று சொல்லி அந்த பசங்களின் பெற்றோர்களை சமாதானப் படுத்தி அனுப்பிவைப்பது வழக்கம் .

அது மாதிரி ஆகிப் போச்சு,அரசியலும்!

திமுக.மீது பாமகவினர் அள்ளிக் கொட்டிய கடுமையான குற்றசாட்டுகளும் ,இவைகளுக்கு திமுகவினர் அளித்த பதில் குற்றசாட்டுகளும் சுலபமாக மறக்கக் கூடியதல்ல .

'' ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக செய்த துரோகம் , வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காதது ,தமிழர்களை குடிகாரர்களாக மாற்றி கெடுத்தது ,என பாமகவினர் சொன்னதுடன் நில்லாமல் பென்னாகரம் இடைத் தேர்தலில் மிகவும் கடுமையாக திமுகவை சாடினார்கள்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களுக்கு இத்தனை தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாகவும் அந்த தொகுதிகளில் தங்களின் வெற்றி உறுதி எனவும் ஒரு கணக்குக் காட்டினார்கள்.

அதெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன .

''கலைஞரை மறுபடியும் முதல்வர் ஆக்குவோம்''என்கிற குரல் பாமக. வட்டாரத்திலிருந்து வரத் தொடங்கி இருக்கிறது.

இதற்கு என்ன பொருள்?

கடுமையான குற்றசாட்டுகளை சொல்லி தங்களை நீதிமான்களாக கா ட்டிக் கொண்டவர்கள் ,இப்போது ஒன்றாக சேருவதற்கு ஆதரவு தேடுவதேன்?

அந்தரங்கத்தில் ஏதோ நிகழ்ந்திருக்கலாம் என்று நாம் நினைக்கலாம் அல்லவா?

அவர்கள் சொல்லிக் கொண்ட குற்றசாட்டுகள் பொய்யானவையா?

புனைந்துரைக்கப் பட்டவையா?

சொந்த ஆதாயம் ,சுயநலம் தேடிகள் என்று சொன்னால் என்ன தவறு?

தரக்குறைவாகப் பேசிக் கொண்டவர்கள் ,கை குலுக்க தயாராகியதின் மர்மம் என்ன? இது என்ன சனநாயகம்?

ராஜ்யசபை சீட்டுக்காக பாமக சமரசம் செய்து கொண்டுவிட்டதா?

இதுதான் நேர்மையான அரசியலா?

இவர்கள் கூட்டணி சேர்வதால் ஈழத் தமிழருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப் போவதில்லை.

மது ஒழிக்கப் பட போவதில்லை.

இன,மான ,மொழி உணர்வு என்பதின் பெயரால் நாம் தொடர்ந்து ஏமாற்றப் படுவோம் .

யாருக்கும் வெட்கமில்லை!

கையறுநிலையில் இருக்கிறோம்!