மனிதன் பொய் பேசுவதற்காகவே..
நேற்று பேசியதை இன்று மறப்பதற்காக ...
இன்று கொடுக்கும் வாக்குறுதிகளை நாளை மறப்பதற்காக..
அரசியல்வாதிகளின் வசதிக்காகவே வாய்க்குள் வைத்துவிட்டான் படைத்தவன்.
அரசியல்வாதிகளில் யாருமே பொய் சொல்லா மெய்யர்கள் இல்லை.
சத்தியங்கள் அடிக்கடி சட்டையை உரித்துக் கொண்டு நிர்வாணமாகி பொய்களை புணர்ந்து கொள்ளும் காலம் இது.
வசதிக்காக ,சுய நலத்திற்காக ,வளம் பெறுவதற்காக பொய் சொல்லலாம்.
- 2004 ஆண்டு ,நவம்பர் ஒன்பதாம் தேதி.
விஜயகாந்த் பேசுகிறார்.
''அண்ணா திமுகவை கட்டிக் காத்து மிகப் பெரிய சரித்திரம் படைத்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மனையும் ,அலெக்சாண்டரையும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சொல்வார்கள்.இனிமேல் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக ஜெயலலிதாவை சொல்லவேண்டும்''என்கிறார்.
தன்னம்பிக்கைக்கு உதாரணமாக சொல்லப்பட்டஜெயலலிதா பின்னர் விஜயகாந்தைப் பார்த்து ''குடித்து விட்டு வருகிறார்''என்று சொன்னதும்,இதற்கு விஜயகாந்த் மறுதளித்து ''இவர்தான் ஊத்திக் கொடுத்தாரா'' என்று நக்கல் அடித்ததும் மறக்கக் கூடியதுதானா?
மறக்கத்தான் வேண்டும்.
ஏனென்றால் இது அரசியல்.
உச்சநடிகர் ரஜினிகாந்த் அதே இடத்தில் என்ன பேசினார் தெரியுமா?
''வீரப்பனை சுட்டுக் கொன்றதுசாதனை அல்ல.சரித்திரம்.வனதேவதைக்கு விடுதலை வாங்கி தந்திருக்கிறீர்கள் .இந்தியாவில் தமிழர்களின் மானத்தை காப்பாற்றிவிட்டீர்கள்''என்று சத்தியம் பேசினார்!!
இதே ரஜினிகாந்த் தன் வாயாலேயே ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது'' என்று சொன்னார்.
இதையும் நாம் மறக்கத்தான் வேண்டும்.
ஏனென்றால் இது அரசியல்.
தேர்தல் உடன்பாடு ஏற்பட்டு ஒரே மேடையில் ஜெயலலிதா,விஜயகாந்த் ,வைகோ, ராமதாஸ் ஆகிய தலைவர்கள் தரிசனம் தந்தாலும் அது ஆச்சரியம் அல்ல.
அரசியலில் எதுவும் நடக்கலாம்.
நாளை அதிமுக-தேமுதிக கூட்டணி அமையுமேயானால் விஜயகாந்திற்கு அடுத்த இடம் தான் வைகோ அவர்களுக்கு.
விஜயகாந்திற்கு கொடுத்தது போக எஞ்சிய தொகுதிகளை ,குறைந்த தொகுதிகளை கொடுத்தாலும் வாங்கவேண்டிய நிலையில்தான் மதிமுக இருக்கிறது.
அரசியல் எங்கே போய் கொண்டிருக்கிறது?
வரவிருக்கிற தேர்தலில் வித்தியாசமான கூட்டணிகளை பார்க்கலாம்.
வைகோ -விஜயகாந்த்-இடது வலது கம்யு கட்சிகள் கூட்டணி சேரும் வாய்ப்பு இருக்கிறதா?