சனி, 29 ஜனவரி, 2011

விஜய் தைரியமாக வர வேண்டும்.

'' எனக்கு 1999 -இல் என்ன நடந்ததோ அது இன்னிக்கு விஜய்க்கு நடந்திருக்கு.'உதவிக்கு வரலாமா'என்கிற படம் சரியாக ஓடலேன்னு  சொல்லி  பணத்தை கேட்டாங்க. அதுக்கு இன்னிக்கு வரை விட்டுக் கொடுத்திட்டு வரேன் .எனக்கேற்பட்ட நிலைமை ரஜினி,பாக்யராஜ்,சத்யராஜ் ஆகியோருக்கும் நடந்திருக்கு .இது ஒன்னும் புதிசு இல்லை'' என்ற நண்பர் கார்த்திக்கிடம் ''விஜய் மேட்டரில் அரசியலும்  இருப்பதாக சொல்கிறார்களே''என்று கேட்டேன்.
              '' வேறு காரணங்கள் இருக்கலாம். அவர் அதை தைரியமாக சொல்லவேண்டும்.அதுதான் விஜய்க்கு நல்லது.உண்மை தெரியட்டுமே.!பிரச்னை தீர அதான் வழி .ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலைமைதான் இருக்கிறது''என்றார்.எனக்கு தெரிந்தவரை எஸ் ஏ சந்திர சேகருக்கு இருக்கிற தைரியம் மகன் விஜயிடம் இல்லை என்றுதான் சொல்வேன். அவர் மிரட்டப் பட்டுள்ளார் என்பதாக  ஒரு பேச்சு கோலிவுட்டில் பரவி இருக்கிறது.''திருச்சியில் மக்கள் இயக்க மாநாடு நடக்கப்போகிறது. சீமான்,அமீர்,சத்யராஜ்,விஜயகாந்த்  ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்''  என்று எஸ்.ஏ.சி. என்னிடம் சொன்னார்.இதை வேறு சில பத்திரிகை நண்பர்களிடமும்  சொல்லி இருக்கிறார்.ஆனால்  அந்த செய்தியை மகன்

மறுக்கிறார் என்றால்  காரணம் இல்லாமல் போகுமா?

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கோவிலில் நான் பார்த்தது....

                                 ''   செவ்வாய்க் கிழமை... கோவிலுக்கு போய் முருகனுக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க.உங்கள் ஜாதகப்படி இந்த வருஷம் முருகனை கும்பிட்டு வரணும்'' என்று சொல்லி அனுப்பி வைத்தாள் .
                                    மனைவி சொல்லை தட்டாத புருஷ பய நான்.
                                   வட பழனி முருகன் துணை என்று போனேன். ஸ்பெஷல் தரிசனம் .டிக்கெட் வாங்கி இடிபாடுகளில்  கசங்கி ஓரமாக உட்கார்ந்தேன். அர்ச்சனை தட்டுகளை வாங்கி அடுக்கிக்கொண்டு உள்ளே போன அர்ச்சகர் அவர் வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவந்து ஒரு தட்டை கொடுத்து விட்டு திரும்பிவிட்டார். யாரோ கொடுத்த தட்டு என் கையில். இதையெல்லாம் கூட்டத்தில் பார்க்க முடியாது.
                                       அப்போதுதான் கவனித்தேன் .பட்டு சேலை .கழுத்து நிறைய நகைகள்  ,வைர வளையல்கள் ,இத்தியாதி என ஒரு பெண் பாதுகாப்போடு வந்து நின்றார்.  அவர் என்னை பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு. எனக்கு அவரை நன்றாக தெரியும்  ,என்றாலும் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.அங்கு அதற்கான அவசியமும்  இல்லை.அந்த பெண்ணுக்கு சகலவிதமான மரியாதைகள்.முருகன் கழுத்தில் கிடந்த மாலை.பிரசாதம் என தனி கவனிப்பு. இவையெல்லாம் அந்தப் பெண் செல்வ சீமாட்டி  என்பதாலா? இருக்கலாம். இந்த மாலை மரியாதை எல்லாம் இவரைப் போன்ற '' தகுதி'' உள்ள இன்னொரு ''சின்ன வீட்டுக்கு ''கிடைக்குமா? அரசியல்வாதியின் ''சின்னவீடு'' என்றால் ஆண்டவனின் ஆசிர்வாதம் வரிசையில் வந்து நிற்கும்.
 

நடிகர் கார்த்திக் சொல்வது சரியா?

'' தமிழக மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும்  போதெல்லாம் தமிழக  முதல்வர் டெல்லிக்கு கடிதம் எழுதிவிடுவார்.இதனாலேயே காகிதம் விலை ஏறிப் போச்சு.ஆனால் அவரது கட்சியின் மந்திரிக்கு ஆபத்து வரும் என்பது தெரிந்தாலே போதும் உடனடியாக கட்சியின் முக்கிய புள்ளியை அனுப்பி வைத்துவிடுவார்.முடிவு தெரியும் வரை  அவரது பேச்சில் மறைமுக எச்சரிக்கை புதைந்து கிடக்கும். இந்த உணர்வு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது இருப்பதில்லையே,ஏன் ''என்று நடிகர் கார்த்திக்  என்னிடம் கேட்டபோது எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.சொல்லவும் முடியாது. நான் ஒரு பத்திரிகையாளன் என்பதால் எனது கருத்தை பதிவு செய்ய இயலாது.
                        ஆனால் கார்த்திக்கின் கருத்தை மக்களுக்கு சொல்லமுடியும்.
                         சொல்லிவிட்டேன்.
                          மக்கள் என்ன சொல்வார்கள்?
                      தேர்தலில் தெரியுமா?
                         அதுவும் சந்தேகம்தான்.இலவசங்கள் ,சலுகைகள் அணிவகுத்து வரும்போது  இன மொழி மானம் வீரம் விவேகம் என்பதெல்லாம் உணர்விழந்து போய்விடும்.  இதை ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்  பட்டபோதே பார்த்தாகிவிட்டது.
                     ஆக இந்த வீரம் ,மானம் என்பதெல்லாம் தந்தை பெரியார் சொன்ன ''வெங்காயம்'' என்பதுதானா?