புதன், 20 ஏப்ரல், 2011

123.....150....164...?

ஊரே  ஒன்னு போல சொல்லுது.இந்த வாட்டி அம்மாதான்னு. ஆனா சில பேரு ''இல்ல அய்யா' தான்னு உறுதியா நம்புறாங்க. அது மட்டும் இல்ல ,நாங்க 123 சீட்டு கண்டிப்பா வருவோம்னு சொல்றாங்க.அவங்க நம்பிக்கையை பாராட்டுவோம்.
பிரபல நாளிதழ் ஒன்று தனது செல்வாக்கு உள்ள விற்பனையாளர்கள்,நிருபர்கள்  வழியாக நடத்திய கணிப்பில் அதிமுக அணி 150 இடங்கள்  வரும் என்று கணக்கு போட்டிருக்கிறார்களாம். அந்த நாளிதழ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிற  நாளிதழ். ஒரு ஆங்கில  நாளிதழ் 164 இடங்கள் என்பதாக கணக்கு போட்டிருக்கிறது .ஆளும் கட்சி தொலைக் காட்சியை சேர்ந்தவர்  ஒருவர் சொன்னார் ''விழுப்புரமே அடி வாங்கும்..அமைச்சர்களில் பாதிப் பேர் கூட தேற மாட்டார்கள். இந்த வாட்டி நாங்க வருவது கஷ்டம்தான்'' என்றார்.
  நீங்கள் கணக்கு போட்டிருக்கிறீர்களா?
என்ன நினைக்கிறீர்கள்?புதன், 13 ஏப்ரல், 2011

ரஜினி இரட்டை இலையில் ஓட்டு போட்டாரா?

அமைதியாக நடந்திருக்கிறது தமிழக சட்ட மன்ற தேர்தல், வாக்குப் பதிவு முடிந்ததுமே 'பொன்னர் சங்கர்  திரைப் படத்தை இரண்டாவது முறையாக  கலைஞர் பார்த்திருக்கிறார். அவருடன் ரஜினி,,வைரமுத்து ,ஷங்கர்,சத்யராஜ்   பாக்யராஜ் ,நெப்போலியன் என இன்னும் பிற திரை உலக பிரமுகர்களும்  அந்த படத்தைப் பார்த்திருக்கின்றனர். '' ரஜினி வருவாரா?'' என்கிற கேள்வி .சந்தேகம் பலருக்கு! காரணம் இருக்கிறது.அன்று காலையில் நடந்த ஓட்டுப் பதிவின் போது மீடியாக்களுக்கு    ஓட்டுப் போடுவதுபோல் ' போஸ்' கொடுப்பதற்காக அவர் விரல் தொட்டது 'இரட்டைஇலை  ' சின்னத்தை  என்பதை சில போட்டோ கிராபர்கள்  வெளியில் சொல்லிவிட்டனர்.அது மட்டுமில்லாமல் அவர் தனியார் டி  .வி.க்கு அளித்த பேட்டியிலும் '' தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னையே லஞ்சம்தான் ,மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசு அமைய வேண்டும்'' என்பதாகவும் சொல்லி இருந்ததால்  வர மாட்டார் என்பதாகவே நினைத்தனர். ஆனால் முன்பொரு விழாவில் கலைஞர் முன்னிலையில் பேசும்போது  திரையுலக பிரமுகர்கள் மிரட்டப் படுவதை பற்றி நடிகர் அஜித்   சொன்னபோது எழுந்து நின்று கை தட்டியவர் ரஜினி.அதுவும் போக தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்பதாக எல்லோரும்  நம்பிக் கொண்டிருக்கிற நிலையில் ரஜினி பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நம்முடைய கேள்வி எல்லாம் ஓட்டுப் பதிவு முடிந்த பிறகு இப்படி சொல்வானேன்? உள்ளுக்குள் பயம் இருந்திருக்கிறது ,அதன் வெளிப்பாடு தான் அந்த பேட்டியா? ரிசல்டுக்கு பின்னர் இன்னும் நிறைய சொல்வாரா ரஜினி?

புதன், 6 ஏப்ரல், 2011

மாண்புமிகு....வணக்கத்திற்குரிய...!

அமைச்சர் பெருமக்களையும்,மாநகராட்சி 'மேயர்'களையும் அவர்கள் வகிக்கும் பதவிகள் காரணமாக 'மாண்புமிகு,வணக்கத்திற்குரிய ' என்கிற அடைமொழிகளுடன் அழைக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் ,சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்றாலும் வகிக்கக் கூடிய பதவிகள் காரணமாக அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது கடமை. மறுக்கவில்லை. ஆனால்  தனி மனிதனின்சுயமரியாதையை  இழந்து அத்தகைய  பெருமையை கொடுக்க வேண்டுமா? உயர்வான வார்த்தைகளுக்கு அந்த பதவியில் இருப்பவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டாமா?
கிரிமினல் குற்றவாளிகள் ,கொலைக் குற்றவாளிகள், பாலியல் வன்முறை குற்றவாளிகள் என பலரும் உயர்வான பதவிகளில் அமர முடிகிறது. இத்தகயைவர்கள்  மக்களால் தேர்ந்து எடுக்கப் படுகிற அவலம் அரசியல் கட்சிகளின் உதவியுடன் நிகழ்வதால்  அவர்கள் 'மாண்புமிகு'வாகவும்,'வணக்கத்திற்குரியவர்களாகவும்   'மாறிவிடுகிறார்கள். இதற்கு சட்டமும் உதவுகிறது.  அந்த பதவி காலம் முடியும் வரை தான் அவர்களால் மஞ்சள் குளிக்க முடியும்.இப்படி ஒரு வரையறைக்குள் இருக்கக் கூடியவர்களை 'உயர்வுமிகு'அடை  மொழிகளால் அழைக்கவேண்டுமா?
                    மை  லார்ட் என்று அழைக்கவேண்டாம் என்று   நீதி அரசர்களே சொல்கிறபோது சட்டத்தின் முன் நிற்கவேண்டியவர்களை உயர்வான அடைமொழிகளுடன் அழைக்கவேண்டுமா?பதவி போன பின்னர்கூட 'முன்னாள்' என்று அடைமொழி சேர்த்துக் கொண்டு வரக்கூடிய அவர்கள்  இந்த சமுதாயத்தின் சாபக் கேடு.
                 என்ன சொல்கிறீர்கள்?