'' என் வீட்டுக்காரர் உயிரோடு இருக்கும்போது என்னை கைது பண்ணி கேஸ் போட்டிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன். அவரை வஞ்சகமா கொன்னுட்டு என்னை விதவையாக்கினதோடு நிக்காம ,என் மேல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளப் பாத்தாங்களே ,பாவிக!அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க.!பதவியிலே இருக்கிறதால தப்பிச்சிட்டிருக்காங்க .ஆனா... கடவுளின் கோர்ட்டில் கண்டிப்பா தண்டனை உண்டு!தப்பிக்கவே முடியாது.'' என வயிறெரிந்து சாபமிட்டார் ,வனராஜா என அழைக்கப்பட்ட சந்தனக் காடு வீரப்பனின் மனைவி .
வீரப்பன் இருந்தவரை மலைவளம் காப்பாற்றப் பட்டது. கிட்டத் தட்ட அவர் 'எல்லை சாமி' மாதிரி இருந்தார் என்று சொல்லலாம். அவரை கொன்ற பிறகு தான் சந்தனக்காடு கொஞ்சம் ,கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். இப்போது அரசியல்வாதிகள் அரசுக் காட்டில் பட்டா போடுகிறார்கள் என்று சொல்லப் படுகிறது. அதிலும் பி.ஜே.பி. புள்ளிகளின் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள் நம்ம ஆட்களும் உண்டு!.
''அடுத்து என்ன பண்ணப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.
பெருமூச்சு.
''அடுத்து என்ன பண்ணப் போகிறீர்கள்?'' என்று கேட்டேன்.
பெருமூச்சு.
''என்ன பண்ணப் போறேன்?என்னோட ரெண்டு பிள்ளைகளையும் நல்லபடியா வளர்த்து கரை சேர்க்கணும். அதான் என் வேலை. ஆனா நய வஞ்சகமா என் வீட்டுக்காரரை கொன்னவங்களையும், கொன்ன பிறகும் என்னை கேசு,ஜெயில்னு அலைக்களிச்சு சித்ரவதை பண்ணுனவங்களையும் அடையாளம் காட்டனும்.பெரிய , பெரிய தப்பு பண்ணுனவங்கல்லாம் வெளியே இருக்காங்க. தப்பே பண்ணாத என்னை மைசூரு பெங்களூருன்னு அலைக்களிச்சு கொடுமை படுத்தினாங்க எதுக்கு என்னை பழி வாங்குறீங்க ? நான் என்ன தப்பு பண்ணினேன்னு கேட்டா ,''உன் புருஷன் குற்றவாளி .அவனுக்கு நீ சப்போர்ட்டா இருந்தே ,அதான் 'கேஸ்' என்று சொன்னாங்க.
ஒரு சின்ன விசயம்னா கூட ஜனங்களை கொண்டு போய் சித்ரவதை பண்றாங்க. இந்த சமூகமே சுயநலமாதான் இருக்கு.பதினஞ்சு வருசமா என் மேல் கேஸ். என் புருஷனை கொன்னுட்டு என் மீது எதுக்கு பொய் கேஸ்?அவர் இருந்தபோதும்,அவர் செத்த பிறகும் நரக வேதனைகளை அனுபவிச்சிட்டேன். நெசமான நரகத்தில கூட அப்படிப் பட்ட கொடூரம் இருக்காதுங்க.ஒரு பொம்பளைன்னு கூட பார்க்கலே.அக்கா,தங்கச்சியோடு பிறந்திருக்கிறோம்,தனக்கும் பொண்டாட்டி,பிள்ளைக இருக்கு என்கிற நினைப்பே இல்லாம சிலர் இருக்காங்க. என்ன பண்றது?''
''உங்க புருஷன் கொல்லப் பட்டது 'என்கவுண்டர்'ல என்று சொல்றாங்களே, வேறு மாதிரியாகவும் சொல்றாங்க? வீரப்பன் கொல்லப் பட்டது எப்படி?''
'' மனம் திருந்தி வாழணும்னு நெனச்சார். முயற்சி பண்ணினார்.நானும் சமூக சேவகியா வாழ்ந்திடலாம்னு இருந்தேன்.என் வீட்டுக்காரர் குற்றவாளி இல்ல.வஞ்சகம் ,சதி பண்ணாமே அவரை கோர்ட்ல நிறுத்தி குற்றவாளின்னு நிரூபிச்சிருக்கணும்.ஏன் அப்படி பண்ணல? தூக்கு தண்டனை கிடைச்சவர்களை கூட தூக்குல போடாம வச்சிருக்காங்க.என் வீட்டுக்காரர் என்ன குற்றம் பண்ணினார்?கோர்ட்டில் சொல்லி இருக்கலாம்ல? ஏன் சொல்லல?எல்லா உண்மைகளும் வரத்தான் போகுது. புத்தகமா எழுதப் போறேன்.''
''அதனால ஆபத்துகள் வரலாமே?''
'' என்னங்க பெரிய ஆபத்து?நான் அதுக்கெல்லாம் பயப் படப் போறது இல்ல . நான் நிரபராதின்னு தீர்ப்பு வந்தாச்சு.மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேணாம்.மக்கள் ஆதரவு இருக்கு'' என்றார் தைரிய லட்சுமியாக .
'' ராம்கோபால் வர்மா சினிமா எடுக்கப் போகிறாராமே ?''
'' அவர் ஒருதடவை என்னை மீட் பண்ணி பேசினார். அவ்வளவுதான். தமிழ் தயாரிப்பாளர்கள் யாராவது கேட்டால் உதவி பண்ண தயார்.ஆனால் ஒரு கண்டிசன்! யார் தப்பு செய்திருந்தாலும் சரி,அது போலீஸ் சைட்ல செய்த தப்பாக இருந்தாலும் உண்மையை சொல்லணும்.அந்த சீன் வரணும்.புருஷனை பறி கொடுத்திட்டு தவிக்கிற பொண்ணுக்கு உதவி செய்யனும்னு வரணும். வீரப்பனை வச்சு கோடிகள் சம்பாதிக்கலாம்னு வரக் கூடது .இதுதான் என் கண்டிசன்'' என்றார் முத்துலட்சுமி.
இவர் சொல்வதும் சரிதானே!