புதன், 30 நவம்பர், 2011

காதல் பேச்சு என்பது என்ன?

எப்போது பேசுவது காதல்?
எப்படிப்  பேசுவது காதல்?
''கண்ணே,மணியே,கற்கண்டே,கனி முத்தே, கற்பின் சிறப்பே ,''எனப் பேசுவது காதல் மொழியா ?
கடற்கரை,கோவில்,சினிமா,என்று ஓரம் கட்டி உரசிக் கொண்டு பேசுகிறோமே,அதுவா?
 படித்தவளோ ,படிக்காதவளோ,நகரமோ,நாட்டுப் புற மோ ,பேசத  தெரிந்தாலும் ,தெரியாவிட்டாலும்,தன்னை மறந்து பங்கெடுத்துக் கொள்ளவேண்டுமாம்.அதுதான் காதல் பேச்சாம்.பாரதி சொல்கிறான்.
அப்படிதானே எல்லா இடங்களிலும் காதலர்கள் பேசிக் கொள்கிறார்கள்..
அது காதல் பேச்சு அல்ல.என்கிறான் அந்த முண்டாசுக் கவி.
பின் எது தான் காதல் பேச்சு?
''பாதி நடுக கலவியில்'' என்கிறான்.அனுபவம் கவியிடம்!!
எப்படியப்பா அந்த இன்ப நேரத்தில் பேசிக் கொண்டிருக்க முடியும்?
இனிமையான இரவு.இதமான கதகதப்பு .இருவரை தவிர எவருமில்லை.சூடிய முல்லை மலர்  மோகம் மூட்டுகிறது.ஆடைகள் அவிழ்ந்து அரை நிர்வாணம் 
கணவன்-மனைவி இருவரும் தங்களை மறந்தவர்களாக!
யாரைக் காயப் படுத்துகிறோம் என்ன செய்கிறோம் ,நகக்குறிகளும்,பற்குறிகளும் பதிந்தது எப்படி என்பது தெரியாமல் மஞ்சத்தில் உச்சம் தொடும் போது இருவரும் குளறுகிரார்களே ,புதுமையான உளறல்கள் வருகிறதே அதுதான் காதல் பேச்சு என்கிறான் பாரதி.!
''பாதி நடுக கலவியில் காதல் பேசிப் 
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோல 
காதலிலே மாதருடன் களித்துவாழ்ந்தால் 
படைத் தலைவர் போர்த்தொழிலைக் கருதுவரோ''
 பாரதி இப்படி பாடி இருக்கிறான்.
கலிங்கத்துப் பரணியில் செயங் கொண்டான் வேறு விதமாக சொல்லி இருக்கிறான் .பின்னர் பார்க்கலாம்.இலக்கியம் படிப்பது நல்லது.
 

தமிழன் என்று சொல்லவே ..............?

கவிஞர்கள் பாடிவிட்டுப் போய் சேர்ந்து விட்டார்கள்.
 ''தமிழன் என்று இனம் உண்டு,அவர்களுக்கென்று ஒரு குணம் உண்டு.''முறம் கொண்டு புலியை விரட்டியவள் தமிழச்சி ''இப்படி இன்னும் எவ்வளவோ புகழ்ச்சிகள் உண்டு.அவை எல்லாமே  நாடு காக்க உயிர் நீத்த மாவீரர்களை பற்றியவை என்பது  இப்போது தான் தெரிகிறது.
 தாயகத் தமிழனுக்கு இன,மான,உணர்வு என்பதெல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்க  லாம்.இப்போது உள்ள தமிழன் அரசியலுக்கு அடகு போய் விட்டவன். நடிகர்களுக்கு அடிமை ஆகிப் போனவன் .அவனுக்கு முல்லைப் பெரியாறு ஒரு  பிரச்னையே இல்லை.'கொலை வெறிடி 'பாட்டு எத்தனை தடவை,எவ்வளவு பேர் கேட்டனர் என்பதுதான் அவனது கவலை.
 ரஜினியின் அடுத்த படம் எப்போது,யார் அவரது ஜோடி,ரானா வருமா,வராதா  என்கிற ஏக்கம் தான் அவனை வாட்டுகிறது.இவனின் நடிகர்களுக்கு ஏதாவது இன்னல என்றால்  அணையை அவனே உடைப்பதற்கும் தயாராகிவிடுவான். அவனை தூண்டி விட்டால் போதும் ,வேறு வினையே வேண்டாம்.அந்த அளவுக்கு கலாசாரம் மறந்து ,பற்று இழந்து,மொழி ஒழிந்து வாழ்ந்து கொண்டு வருகிறான்.
 இத்தகைய தமிழர்களை திராவிட ,தேசிய ,ஜாதிய கட்சிகள் தங்களின் பிடிக்குள்  வைத்துக் கொண்டு தங்களின் வளர்ச்சிக்காக அடி மாடுகளாக வளர்த்து வருகின்றன.
 அணையை உடைக்க வேண்டும் ,புதிய அணை கட்ட வேண்டும் என்பதில் கேரளத்தவர்களுக்கு இருக்கிற வீரியம் ,முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற வேண்டும் என்பதில் தமிழர்களுக்கு இல்லை.நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று சொல்லி காலம் கடத்துவது காவேரி கற்று கொடுத்திருக்கிற பாடம்.
 திமுகவுக்கு பெயர் வந்து விடக்கூடாது என்று அதிமுக தனி கடை போடும்.அதிமுகவுக்கு எதிராக திமுக தனிக் கடை போடும்.வைகோ,நெடுமாறன் போன்ற இன,மான உணர்வு உள்ளவர்கள் போராட்டம் நடத்தினால் ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை 'உள்ளே' தூக்கிப் போட்டுவிடுவார்கள்.இப்படி ஒருவரை ஒருவர் அழிப்பதிலேயே  தமிழர்களின் சிந்தனையை  அரசியல்வாதிகள் சிறை பிடித்து வைத்திருக்கிறார்கள்.
 இந்த சிறையிலிருந்து எப்போது தமிழர்கள் வெளியில் வருவார்கள்?

 

செவ்வாய், 29 நவம்பர், 2011

நீதியின் மறுபக்கம்....?

நீதியின் மறுபக்கம் என சொல்ல லாமா?
 நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறீர்களோஎனக்கு தெரியாது.
மக்கள் திலகம் ,நடிகர் திலகம் , ரஜினி,கமல், சிவகுமார்  என ,இவர்களுக்கு மட்டும் இல்லாமல் என்.டி.ஆர். ,வைஜெயந்திமாலா  பத்மினி எனஅன்றைய காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த நட்சத்திரங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் சலீம். இவர் அண்மையில் தான் இறந்து போனார்.
கோடீஸ்வரனாக வாழ்ந்தார் .
சாகும்  போது அனாதையாகி,அடைக்கலம் கொடுத்த ஸ்டன்ட் மாஸ்டர் வீட்டில்
மரணித்தார்.மனைவி,மக்கள் இருந்தும் இறுதி சடங்குக்கு அவர்கள் யாரும் வர வில்லை.டான்ஸ் மாஸ்டர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்தனர்.இறுதி அஞ்சலி செலுத்திய ஒரே நடிகர் சிவகுமார் மட்டுமே.இறுதி  செலவுக்கு பணமும் கொடுத்தார் .வந்திருந்த இன்னொரு அரசியல் பிரமுகர்  சுப.வீரபாண்டியன்.இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் இளவல்.
 பண மழையில் நனைந்த இந்த மாஸ்டர் வறுமையில் வாடி,வதங்கி அன்றாட  உணவுக்கும் பிறர் உதவியில் வாழ்ந்ததற்கு என்ன காரணம்.?
 குடி!
 மது!!
 இவர் மீது நடந்த கொலை வழக்கு!!!
 கடந்த பதினெட்டு ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கில் நவ.29.தேதி தீர்ப்பு வழங்கப் பட்டது.பதினோரு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ஐந்து பேர் உயிருடன் இல்லை.இவரும் இல்லை.இருந்திருந்தால் என்ன தண்டனை கிடைத்திருக்கும் என்பது நமக்கு தெரியாது.
 எனது கேள்வியெல்லாம் ஒரு கொலை வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு பதினெட்டு ஆண்டுகளா?இரட்டை ஆயுள் என்பதை குற்றம் சாட்டப் பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அனுபவிக்க வேண்டும் என நினைக்கும்போது என்ன நினைப்பார்கள்?

யாருக்கு போறாத காலம்?


''யோவ், உமக்குப் போறாத காலம் யா! இப்ப என்கிட்டேரெண்டு  நியூஸ் இருக்கு?''
''யாரைப் பத்தி?''
''எல்லாம் உம்மைப் பத்திதான்!''
''என்னைப் பத்தியா?என்னங்காணும் மிரட்டுறீரா?''
''நான்ஏன்யா மிரட்டனும்?முதல்ல நல்ல சேதியை சொல்லவா,இல்ல கேட்ட சேதியை சொல்லவா?''
''இவரு பெரியஆல் இந்திய ரேடியோ.முதல்ல கெட்ட சேதியை சொல்லும்.உம்ம மூளையில மசாலா தடவலாமான்னு தெரிஞ்சுக்கிறேன் !''
'தெரிஞ்சுக்க!இப்ப உம்ம சம்சாரம் கையில லட்ச ரூபா போட்டோ இருக்கு!''
''அட,கேண !இதா கெட்ட சேதி.லட்டு நியூஸ்யா!லட்டு! ''
''சொச்சத்தையும் கேட்டுட்டு லட்டா, வேட்டான்னு அப்புறம் சொல்லு!ஆத்தங்கரை ஓரமா நாணல் புதர் பக்கமா நீயும் ,ஆட்டக்காரி அங்கம்மாவும் இங்கிலீஸ் கிஸ் அடிச்சத உம்ம பையன் போட்டோ  பிடிச்சு கொடுத்திருக்கான்.எப்படி லட்டு நியூஸ்தானா?''
''யோவ்! பேய்க்கு பேனு பார்த்த பேமானி.இதப் போயி சாவகாசமா பில்டப்  பண்ணி சொல்லிட்டிருக்கே !ஒதுங்குயா!''



கதைத் திருடர்கள் திருந்துவார்களா?

படைப்புத் திருட்டுகள் என்பது ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்தே நடந்து வருகின்றனவோ   என்னவோ ? எவர் எழுதி இருந்தாலும் அதை தனதாக்கி கொள்ளும் இழிவான செயல் இங்கு பொருளாதாரத்தை  உயர்த்துவதற்கான உயர்வானதாகி இருக்கிறது.
திரைத்  துறையில் கதை திருட்டு என்பதற்கு '' இன்ஸிபிரேசன் ''என கவுரவமாக சொல்லப் படுகிறது.அண்மையில் வந்த பல படங்கள் வெளிநாட்டுப் படங்களின் கரு தான்.அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு தனது இனிஷியலை போட்டுக் கொள்ளும் கேவலம் பற்றி எவரும் கவலைப் பட்டதில்லை.பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதி இருந்தது எனது நினைவில் இருக்கிறது.பிறர் சொன்ன கருத்துகளை மற்றவர் கையாண்டபோது அது இன்னார் எழுதியது என்பதை சுட்டிக் காட்டி இருந்தனராம்.
''பாரதி தனது பாஞ்சாலி சபதம் வியாசரைத் தழுவியது ,தமிழ் நடை மட்டுமே தன்னுடையது என்றார்.
' சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று எனக் கூறி நிறுத்தி வழி சென்றவரே ' எனும் வரிகளை பல்லவியாக அமைத்தபோது ''இதனை நாட்டுப் புற பாடலில் இருந்து எடுத்தேன் '' என கவிஞர் கண்ணதாசன் கம்பீரமாக ஒப்புக் கொண்டார்.
ஒரே  பாடு பொருளை மையமாக வைத்துக் கம்பர் பாடி விட்டார் என  அறிந்த ஒட்டக்கூத்தர் அவர்  பாடிய ராமாயணத்தில் உத்திரகாண்டத்தைத் தவிர மற்றவற்றை எரித்து விட்டார்.
கண்ணகி  காதையை சீத்தலை சாத்தனார் பாடத திட்டமிட்டிருந்தார் .ஆனால் அந்த துயரக் கதையை கேட்ட இளங்கோ அடிகள் எழுத தொடக்கி விட்டதால் மாதவி மகள் ''மணிமேகலை'' காப்பியத்திற்கு சீத்தனார் மாறிவிட்டார்''என்பதாக ராஜ கோபாலன் சொல்லி இருந்தார்.
ஆனால்  நமது முன்னோர்கள் கட்டிக் காத்த கண்ணியம் இன்று காப்பாற்றப் படவில்லை.
ஆயிரம்  தாமரை மொட்டுகளே என்கிற பாடலின் மெட்டு ''காளையார் கோவில் ''எனத்  தொடங்குகிற கிராமியப் பாடலின் மெட்டுதான்.இன்றைய திரைப் பட இசை அமைப் பாளர்கள்  அந்நிய மெட்டுகளையும்,அண்டை மாநில மெட்டுகளையும் கூசாமல் கையாளுகிறார்கள். ஆனால் அவைகளை சொந்தமென சொல்லிக் கொள்கிறார்கள்.
சிந்திக்க  வேண்டும்!

திங்கள், 28 நவம்பர், 2011

கமல்ஹாசன் சினிமாவை விட்டு விலகுவாரா?

விசுவரூபம் படத்திற்கான லோகேசன்களை பார்த்துவிட்டு இன்றுதான் சென்னை திரும்பினார்.அன்று மாலையே ''பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.விசுவரூபம் படம் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் ,அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு பின்னர் நிகழ இருக்கிறது என்று சொன்னதால் அந்த படத்தில்எந்தவிதமான வேடம் பண்ணுகிறீர்கள் என்பதை கேட்கவில்லை.
 பயங்கரவாதிகள் மத்தியில்இவரும் சக பயங்கரவாதியாக நடித்து அந்த குழுவை அழிக்கிற ஒரு சி.பி.ஐ .அதிகாரி வேடம் என்கிறார்கள்.சரி அதை அவர் சொல்வாரா,அல்லது மழுப்புவாரா என்பதை பின்னர் பார்க்கலாம்.படத்திற்கான  லொகேஷன் ஜோர்டான் .இப்போது நாம் ஓரளவுக்கு யூகிக்கலாம்.அது சரியானதுதானா என்பதை கமல் தான் சொல்லவேண்டும்.
 பொதுவாக கமலின் கவலை எல்லாம் சினிமாவை பற்றியதாகவே இருக்கும்..வளரும் விஞ்ஞான யுகத்தில் தமிழ் சினிமா பட்டுப் போய் விடக் கூடாது ,விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப சினிமாவும் மாற வேண்டும் என்பது அவரது கருத்து.திருட்டு வி.சி .டி .யை ஒழிப்பதற்கு ஒரே வழி வி.சி.டி.உரிமையை விற்று விட வேண்டும் என்பதுதான்.ஆனால் யாரும் அதை கேட்பதில்லை.இவர் சொல்லி நாம் கேட்பதா என்கிற மனப்பான்மை சினிமா  புள்ளிகளிடம் இருக்கிறது.
 சரி விசயத்திற்கு வருவோம்.
 மேலும் மேலும் சாதனைகளை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்க்கிற அவரை   சினிமாவை விட்டு விலக  வேண்டும் என்று சொன்னால்?
 கேட்டார் ஒருவர்.
 ''நீங்கள்,ரஜினி,அமிதாப் மூவரும் சினிமாவை விட்டு விலக வேண்டும்'' என்றவரை இடை மறுத்து சிரித்தபடியே '' நீங்களும் இந்த கேள்வி கேட்கிற வேலையை விட்டுவிட்டு வந்துவிடுங்கள்.நாம்ப ரெண்டு ஒரு மூலக் கடையில் நின்று டீ குடிக்கலாம்''என்றார்.
 தமிழ்நாட்டில் சினிமாவுக்கு விதிக்கப் பட்டிருக்கும் வரியை குறைக்க வேண்டும் என்பது இவரது கோரிக்கை.
 கடந்த திமுக .ஆட்சியின் போது கமல் தலைவராக இருக்கிற பெடறேசனுக்கு  ஐம்பது லட்சம் கிடைத்தது.இந்த ஆட்சியில் கிடைக்குமா என்பது தெரியவில்லை.பெடரேசன் நடத்தும் மாநாட்டில் கே.பாலசந்தர் எழுதும் நாடகம் நடக்கப் போகிறது.அந்த நாடகத்தில் கமல்,கிரேசி மோகன் ,ரமேஷ்  ஆகியோர் நடிக்கிறார்கள்.


ஞாயிறு, 27 நவம்பர், 2011

வித்தகன் படத் தயாரிப்பாளரின் கவலை.

ஒரு படத்தை விமர்சிப்பது சுலபம் .குறைகளையும் ,நிறைகளையும் பட்டியல் போட்டுவிடலாம். ஆனால் அந்த படத்திற்காக தயாரிப்பாளர்,அல்லது நடிகர்கள் பட்டிருக்கும் கஷ்டங்களை யாரும்  கண்டு கொள்வதில்லை.அது ஒரு விமர்சகனுக்கோ,அல்லது ரசிகனுக்கோ அவசியமும் இல்லை. பண்டம சுவையாக இருக்கிறதா,இல்லையா?அதுதான் அவனது கவலை.
அது  நியாயமும் கூட! ஆனால் முதல் போட்டவனின் நிலை?
அண்மையில்  வெளியிடப் பட்ட ''வித்தகன் ''திரைப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் ''இத்தனை வருடங்கள் கழித்து படத்தை வெளியிட்டு இருக்கிறீர்களே ,காரணம் என்ன ?''என்று கேட்கப்பட்டது.
மனிதர்  பொங்கி விட்டார்.
'' வெறும் இருநூறு ரூபாய் பிரச்னையில் கூட படப்பிடிப்பு நிறுத்தப் பட்டிருக்கிறது'' என்கிற அதிர்ச்சியை முதலில் இறக்கி வைத்தார்.
அவரையறியாமல் அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே போனார்.
'' படப் பிடிப்பை ஒரு லைட்மேன் கூட நிறுத்தி விடலாம்.யார் வேண்டுமானாலும் ஷூட்டிங்கை  நிறுத்தமுடியும் என்கிற அவலம் இருக்கிறது.இதை பெப்சி தொழிலாளர்கள் எப்போது உணர்வார்களோ ,தெரியவில்லை.முதலில் சினிமாக்காரர்களுக்கு இருக்கிற ஈகோ ஒழியவேண்டும்.''என்றார்.
அடுத்து அவர் பொதுவாக சொன்ன பல விஷயங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளவேண்டியவை. 
இயக்குனர் கவுதம் மேனன்  ,உலக நாயகன் கமல் ஆகியோர் மீது  மாணிக்கம் நாராயணனுக்கு அதிருப்தி இருக்கிறது.  

சனி, 26 நவம்பர், 2011

டாம் 999 படமும் தடைகளும் ...அலசல்.

தமிழ்நாட்டில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று டேம் 999 படத்திற்கு  தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.இந்த தடைக்கு தமிழ்த் திரைப்பட சங்கங்கள் எதுவும் பகிரங்கமாக தங்களின் கருத்துகளை வெளியிடவில்லை.அவர்கள் அண்டை மாநிலங்களையும் சார்ந்து இருப்பதால் அவர்களுக்கு வணிகம்தான் முக்கியம்.இன மான உணர்வு என்பதெல்லாம் தேவை இல்லை.அதனால் எதிர்க்கவும் இயலாமல்,ஆதரிக்கவும் இயலாமல் மனதுக்குள் குமுறலுடன் வாழ வேண்டியது காலத்தின் கட்டாயம்.இது கேரளாவுக்கும் பொருந்தும்.அவர்களும் வணிக ரீதியாக தமிழ்நாட்டுடன் தொடர்பு வைத்துள்ளனர்.
இத்தகைய நெருக்கல்கள் இல்லாதவர்கள் சில இயக்குனர்கள்.அந்த சிலர்தான் முல்லைப் பெரியாறுஅணை பற்றிய டேம்999 திரைப்படத்திற்கு எதிர்ப்புதெரிவித்து இருக்கிறார்கள்.கேரளத்தை சேர்ந்த சிலர் இந்த படத்தை எடுத்ததற்கு உள் நோக்கம் இல்லை என சொல்லிவிடமுடியாது.இரு மாநில அரசுகளும் பேசி ,இணக்கமான முடிவுக்கு வரவேண்டிய பிரச்சினையில் இடையில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஆத்திரங்களை ,வன்முறைகளை அறுவடை செய்யக் கூடாது.
இனி அரசின் தடை பற்றி பார்க்கலாம்.
 கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய படமான '' பராசக்தி''க்கு நெருக்கடி ஏற்பட்டது.''அந்த படம் இந்து மத உணர்வுகளை இழிவு படுத்துகிறது,கடவுள் இல்லை என சொல்கிறது ,ஆகவே அந்த படத்திற்கு மத்திய தணிக்கைக் குழு  கொடுத்துள்ள சான்றிதல் பற்றி முடிவு செய்ய வேண்டும் என அன்றைய மாநில காங்கிரஸ் அரசு சொன்னது.சொன்னவர் ராஜாஜி.அன்றைய காலகட்டத்தில் படத்தின் திரையிடும் உரிமையை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.மத்திய தணிக்கை குழுதான் அத்தகைய அதிகாரம்  உள்ளதாக இருந்தது. ராஜாஜியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.ஆனால் பராசக்தி  படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிகரமாக நூறு நாட்களை கடந்தும் ஓடியது.
ஆனால் 1967 .-க்கு பின்னர்தான் மறுபடியும் அந்த படம் திரையிடப்பட்டது. காங்.  கட்சி ஆட்சி இருக்கும் வரை அந்த படம் திரைக்கு வராமல் ஆட்சியில்  இருந்தவர்களால் பார்த்துக் கொள்ளப் பட்டது.திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சில காட்சிகளை இணைத்துக் கொண்டார்கள்.
 1971-ல் சோ நடித்த முகமது பின் துக்ளக் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இசுலாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
 1981 -ல் கோமல் சுவாமிநாதனின் '' தண்ணீர்..தண்ணீர் ''படத்தை திரையிடுவது  பற்றி பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடந்தது.
 வறுமையின் நிறம் சிவப்பு,சிவப்பு மல்லி ஆகிய திரைப் படங்கள் 'நக்சல் ' ஆதரவு படங்கள் என சொல்லி திரையிடக் கூடாது என பிரச்னைவந்தது.
''மா பூமி ''என்கிற தெலுங்கு படத்தின் கருத்துகள் தெலங்கானா விவசாய பிரச்னையை சொன்னதால் அந்த படத்தின் பட பெட்டியை தஞ்சையில் போலீசார் கைப்பற்றினார்கள்.
 படத்தை திரையிட எதிர்ப்புகள் எழுந்த போதெல்லாம் மாநில அரசால் அந்த படங்களை தடை செய்ய இயலாது போன அந்த நிலை 1987 -ல் அதிமுக ஆட்சியில்தான் மாறியது.

வெளியிடும் தகுதி உள்ளதா ,இல்லையா என்பதை மட்டுமே மத்திய தணிக்கை  குழு முடிவு செய்யலாம் சான்றிதல் மறுக்கலாம் ஆனால் சான்றிதல் கொடுத்த படத்தையும் .படத்தை திரையிடுவதை தடை செய்ய மாநில அரசால்  முடியும் என்கிற சட்டத திருத்தம் வந்தது. இந்த அதிகாரம் இருந்ததால்தான் 2006 -ல் ''டா வின்சி கோடு'' படம் கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண் படுத்துகிறது என சொல்லி தடை செய்ய முடிந்தது. குற்றப் பத்திரிகை படம் ராஜீவ் காந்தி கொலை பற்றியது என்பதால்  தடை செய்யப்பட்டு ,பின்னர் பலத்த போராட்டத்திற்கு பிறகு ரிலீஸ் ஆனது.
டேம் படமும் நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு திரையிடப் படலாம் என்கிறார்கள்.
 பொறுத்திருந்து பார்க்கலாம்.முடிவினை!

சனி, 19 நவம்பர், 2011

கடவுளே ,ஆச்சியை காப்பாத்து..

தமிழ் சினிமாவில்  கொடி கட்டிப் பறந்தவர் ஆச்சி மனோரமா.உயர்தர மருத்துவ மனையில் கிழிந்த நாராக கிடக்கிறார்.பார்க்கிற போதே நெஞ்சு அளவுக்கும் அதிகமாக துடிக்கிறது.ராணி மாதிரி வாழ வேண்டியவர் ,தொண்டையில், துளை  இட்டு ...சொல்லவே நாக்கு தடுமாறுகிறது..நமக்கு நா வரள்கிறது.பணக் கஷ்டம வரலாம்,ஆனால் மனக்கவலை மட்டும் வரவே கூடாது.கவலைப் படவேண்டாம் என டாக்டர்கள் சொல்கிறார்கள்.ஆச்சி இப்போது தேறி வருகிறார்..அந்த நல்ல  மனுஷி துயரின்றி வாழ வேண்டும் என நம்பிக்கையுடன் நம்மிளும் மேலான சக்தியிடம் வேண்டுவோம்..நலம் பெறட்டும்.

ஏத்திபிட்டாக..என்ன பண்றது?

''பால் விலையை கன்னா பின்னான்னு ஏத்திபிட்டாகலாமே ,என்ன பண்றது?''
''நல்லதுதானே  பண்ணீருக்காங்க ,அதில என்ன தப்பு?''
''என்னங்க சொல்றீங்க?''
''பசுவின் ரத்தத்திலேர்ந்து  உறிஞ்சி பால் எடுக்கிறது ஜீவ ஹிம்சை தானே,பசு நமக்கு கோ மாதாம்மா !மகா பாவத்திலேர்ந்து நம்மள  காப்பாத்தியிருக்கா!இஞ்சி காப்பி குடி.இல்லேன்னா சுக்கு,மல்லி காப்பி குடி !உடம்புக்கு நல்லது!''
''பஸ் டிக்கெட்டெல்லாம் மானா வாரியா உசத்தி இருக்காளே,இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?''
''நீ எமலோக டிக்கெட் வாங்கிடக் கூடாதுங்கிறதுக்காக உசத்தி இருக்காங்க .எவ்ளோ  ஆக்சிடென்ட் நடக்கிறது ,டெய்லி பேப்பர் படிக்கிறியா இல்லியா? ஆக்சிடேன்ட்ல மாட்டி மல்லாக்க விழுந்துடக்கூடாதுன்னுதான்  செங்குத்தா  பஸ் டிக்கெட் கட்டணத்தை உசத்தி இருக்காங்க.பாத யாத்திரை போ.கொழுப்பு கரையும்.சுகர் குறையும்.பி.பி. கட்டுப் படும்.''
''கரண்டு கட்டணத்தையும் ஏத்திப் பிட்டாகளே ?''
''கிறுக்கு சிறுக்கி ,அதுவும் நல்லதுக்குதான்.சீமத்தண்ணி விளக்குல படிச்சவகதான் பெரிய ஆளாக வந்திருக்காக.கரண்டு வந்த பிறகு நம்மாளுக படிப்புல மக்கா போயிட்டாங்க. கரண்டு கட்டு வராம  இருக்கிறதுக்கு நம்ம கேப்டனுக்கு வழி தெரியுமாம்.இருந்தாலும் ஏன் சொல்ல மாட்டேங்கிறார்? அங்கதான் இருக்கு ரகசியம்.''
 

வியாழன், 17 நவம்பர், 2011

என்னத்தை சொல்ல.....?

இன்னும் பத்தே நாட்கள்..அதாவது வருகிற நவ.27 .சென்னையில் மகளுக்கு கல்யாணம் ,வரவேற்பு. 
பத்திரிகை அடித்து எல்லோருக்கும் கொடுத்தாகிவிட்டது.
ஆனால் கல்யாணம் நிறுத்தப் பட்டுவிட்டது.
மகளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை நல்லவர் இல்லை என்கிறார் நடிகை நளினி.
பையன் கருப்பா சிவப்பா உயரமா குட்டையா என்பது கூட தெரியாது என்கிறார்.
என்னத்தை சொல்ல?
**********************************************************************
இயக்குனர் இமயம் பாரதிராஜா-கவிப் பேரரசு வைரமுத்து பெயரில் அறக்கட்டளை  தேனீ அல்லிநகரத்தில் நடந்த படப்பிடிப்பு விழாவில் தொடங்கப் பட்டிருக்கிறது.அன்னக் கொடியும் ,கொடிவீரனும் என்கிற படத்தின் தொடக்கவிழாவுக்கு  திரையுலக பிரபலங்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.அறக்கட்டளையில் பாரதிராஜாவின் பங்கு பத்து லட்சம். வைரமுத்துவின் பங்கு அந்த படத்திற்கு எழுதிய பாடல்களுக்கான சம்பளம்.
எவ்வளவு?
ஐந்து லட்சம்!
''எனது பாடல்களின் விலை ஐந்து லட்சம்தானா?''என கவிப்பேரரசு வினவ,
''நீ விலை மதிப்பற்றவன்.''என இமயம் விடை சொல்ல,ஒளிப்பதிவு பேரரசு பாலு மகேந்திரா தனது பங்காக ''பத்தாயிரம்'' என சொல்ல அரங்கு பேரொலி எழுப்பியது.
''நான் பாரதிராஜாவைப் போல் ,வைரமுத்துவைப் போல் பணம் படைத்தவன் அல்லன்.ஆகவே எனது சக்திக்கு ஏற்ப கொடுக்கிறேன்''என்றார் பாலு.
இந்த விழாவுக்கு இமயத்தின் முக்கிய சீடர்களில் ஒருவரான மணி
வண்ணனை  பார்க்க இயலவில்லை.அழைக்கவில்லையாம்.
என்னத்தை சொல்ல!
*******************************************************************************

திங்கள், 7 நவம்பர், 2011

போதிதர்மனும் ,சூர்யாவும்,

 மதிய நேரம் ...உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு நடிகர் சூரியாவின் வருகைக் காக காத்திருக்க ,வழக்கம் போல அதாவது மற்ற நடிகர்களைப் போலவே தாமதமாகவே வந்தார்.ஏழாம் அறிவு பற்றிய உரையாடல் ..
''ஏழாம் அறிவு நல்லாவே போயிட்டிருக்கு'' 
இப்படி சுழி போட்டுவிட்டுதானே தொடங்க வேண்டும் .
''முதல் பாதி சுலோவா தெரியலியா சூரியா?''
''முருகதாஸ் நம்ம மொழிகளில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் ஜெயித்தவர்.எது முன்பாதி யில் இருக்க வேண்டும் எது பின் பாதியில் இருக்கவேண்டும் என்பது அவருக்கு தெரியாமல் இருக்குமா?அவர் தீர்மானம் பண்ணியதுதான்.நிலாவை அழகாக இருக்கிறது என்கிறோம்.சிலர் கறை,கறையாக தெரிகிறதே என்பார்கள் .அதைப் போன்றதுதான் இதுவும்.இது ரெகுலரான சினிமா கிடையாது.புதிய ஆடியன்ஸ் நிறைய வருகிறார்களே''
''போதிதர்மன் தமிழரா?''
இந்த கேள்வியை சூரியா தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து.இருந்தாலும் அவர் முகம் சிறுக்காமல் பதில் சொன்னார்.'' அவர் காஞ்சியில் வாழ்ந்த தமிழர்.''
அவருடைய இந்த பதில் அடுத்த கேள்வியை கேட்டேயாக வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது.
''மூன்றாம் நூற்றாண்டுடன் தமிழர் ஆட்சி முடிந்து விட்டது.அடுத்து பல்லவர் ,விஜயநகரத்தார்,பின்னர் பிற்கால சோழர்கள் காலத்தில்தான் மீண்டும் தமிழராட்சி.பல்லவ இளவரசனான போதிவர்மன் எப்படி தமிழராவான்?''
சிரித்தபடியே ''இதற்கு முருகதாசும் அவரது டீமும்தான் பதில் சொல்ல வேண்டும்.''என்றார் சூரியா .இந்த பதில் எனக்கு உடன்பாடானதுதான்.எந்த நடிகரும் வரலாறு முழுமையாக தெரிந்து நடிக்க வருவதில்லை .கட்டபொம்மன் தமிழனா ,தெலுங்கனா என்கிற விவாதம் சிவாஜி கணேசனுக்கே வந்ததுண்டு.இருந்தாலும் கட்டபொம்மனை தெலுங்கன் என்று வாதாடிய வர்களையும் தாண்டி வசூலில் அந்த படம் வெற்றி பெற்றது.
''ஈழத் தமிழர்கள் இந்த படத்தை எப்படி பார்க்கிறார்கள்?''
செவிட்டில் அறையாத பதில் என்றே சொல்வேன்.''எல்லாத் தமிழரும் ஒன்றுதான்.பிரித்துப் பார்க்காதீர்கள் என்பதுதான் என் பதில்.''
''தமிழில் காஞ்சித் தமிழன் என்கிற நீங்கள் தெலுங்கில் அப்படி சொல்லவில்லை என்கிறார்களே?''
சிரிக்கிறார் சூர்யா.
''தெலுங்கிலும் அவன் காஞ்சி தமிழன் தான். குண்டூர் போதிதர்மன்  என யாரோ கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்..இது பரவாயில்லை.இன்னும் இந்திக்கே போகாத இந்த போதிதர்மனை தாராவிக்காரனாக காட்டியதாக கதை விட்டிருக்கிறார்கள்..என்னத்தை சொல்ல!''
''உங்கள் படமும் விஜய் படமும் சேர்ந்தே  வந்திருக்கிறது. அவர் படம் பார்த்தாரா, பாராட்டினாரா?''
''ஜோ தான் அவங்களை அழைத்தார்கள். விஜய்யின் மனைவி பாராட்டினாங்க.''
''நீங்க வேலாயுதம் பார்த்தீங்களா?''
''இன்னும் பார்க்கல''
''விஜய் கொடி போட்டு அரசியல் பேசுகிறார். நீங்களும் கொடி போட்டு மன்றம் நடத்தவேண்டியதுதானே?''
''வேணாங்க.எனக்கு  அந்த ஆசை எல்லாம் கிடையாது.'' 
''படம் பார்த்த அப்பா சிவகுமார்,ரஜினிகாந்த்,கமல் மூவரின் கருத்து என்னவாக இருந்தது.?''
ரஜினி ,கமல் இருவரது கருத்து என்ன என்பதைவிட ஒரு தந்தையின் கருத்துதான் உயர்வாக இருக்கும் என்பது எனது எண்ணம் .''பென்டாஸ்டிக் ''என்றாராம்,ரஜினி.
''பையன் புல் பார்ம்ல இருக்கான்'' என்பது கமலின் கருத்து.
பெசன்ட் நகரில் இருக்கிற பையன் சூரியாவை தேடிப் போய் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தாராம்.அப்பா சிவகுமார் .