கணவனின் உடம்பை பேணுவதில் டாக்டர்களை விட மனைவி கவனிப்பதுதான் அதிகம்,அக்கறை,கவலை எல்லாமே!
டாக்டர்களுக்கு நோயாளியின் நிலைமை தெரியும் அதனால் அவர்கள் எந்த அளவுக்கு கவனிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு....!அது கடமை!
ஆனால்?
மனைவி ?
டாக்டரை விட கடவுளர்களை நம்புவாள் .இன்னின்ன நோய்க்கு இன்னின்ன கடவுள் என ஒவ்வொரு ஊரிலும் ஒரு கடவுளை ஸ்பேஷலிஸ்ட்டாக வைத்திருக்கிறாள்!
தமிழ்ப் பெண்களுக்குமட்டுமல்ல ,பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு பொருந்திப் போகிற ஒரு தனிக் குணம் !

நான் அதிக நாள் படுக்கையில் கிடந்தவன் இல்லை.ஒரு நாள் முற்பகல் முழுவதும் கடுமையான வயிற்றுப் போக்கு,அமீபியா பாதிப்பு உள்ளவர்கள் கடுமையான உணவுபழக்கத்தை பின் பற்றவில்லை என்றால் அனுபவிக்க வேண்டிய அவஸ்தை!வெளியில் சாப்பிடவே கூடாது.பத்திரிகையாளனால் பின் பற்ற முடியாத இம்சை !
மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திரும்புகையில் ஆட்டோவை வடபழனி கோவிலுக்கு திருப்ப சொல்கிறாள் மனைவி.
" அர்ச்சனை பண்ணி விட்டு போகலாம்.எந்த சாமி புண்ணியமோ நல்லபடியா சொகமாப் போச்சு." என்றவள் தொடர்ச்சியாக விட்ட அம்பு"வெள்ளி செவ் வாய்க்கு கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வாங்கன்னா மனுஷன் கேக்கணும். மெனக்கெட்டு ஒருத்தி சொல்றாளே ,கேப்பம்கிற நெனப்பே இல்லீன்னா இப்படிதான்!" என்றாள் .
அவள் சொன்னதை கேட்காததினால் நான் மனுஷன் இல்லை என்பது அவளறியாமல் சொன்ன மேட்டர்.
அர்ச்சனை முடிந்தது.
" சாமிக்கு தச்சனை வையுங்க!"
"தச்சனை வச்சுதான் அர்ச்சனை சீட்டு வாங்கிருக்கேன்டி "
ஐயோ ......!அய்யருக்கு தட்டில அஞ்சு ரூபாயை போடணும்.அவர் துண்ணுரு கொடுக்க வர்ற போது பர்ஸ நோண்டாம இப்பவே எடுத்து வச்சுக்க சொல்றேன்!" தட்சணை மேட்டரை விளக்கினாள் .
வெளியில் வந்ததும் "அய்யருக்கும் சேத்துதான் தேவஸ்தானத்தில பணம் வாங்குறோம்னு அர்சசனை சீட்டிலேயே பிரிண்ட் பண்ணிருக்குடி!நாம ஏன் அனாவசியமா கொடுக்கணும் "என்றேன்.
"அய்யருக்கு கொடுத்தா குறஞ்சா போகப் போறோம் .பேசாம வாங்க!"
"அவங்க கடவுளுக்கு சேவை பண்றதுக்குனே சமஸ்கிருதம் படிச்சிட்டு வந்திருக்காங்க.அதனால கவர்மெண்டே நம்மகிட்ட கலெக்சன் பண்ணி மொத்தமா கொடுத்திருது.இப்ப நாம்ம கொடுத்தது லஞ்சம்!" என்றேன் சற்று கடுப்பாகவே!
"அதெல்லாம் சட்டமா பேசுங்க!டாக்டர் சொல்றத மட்டும்ம் கேக்காம பீஸ் பீஸ்னு னு அழுங்க.!"
அவள் சொவதிலும் ஒரு நியாயம் இருந்தது.
ஆனால் மந்திரம் சொல்கிறாரா ,அதையும் முழுமையாக சொல்கிறாரா என்பது கூட தெரியாமல் தெய்வத்தின் முன்பாக நமது கோரிக்கைய சொல்லாமல் பொத்தாம் பொதுவில் எல்லோருக்கும் சொல்வதையே எனக்கும் சொல்பவருக்கு நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?