செவ்வாய், 31 ஜனவரி, 2012

தவறான போராட்டம்.

எந்த அளவுக்கு போராட்டங்கள் கேவலமாக மாறிக் கொண்டிருக்கின்றன  என்பதற்கு கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்களின் 'செருப்படி' வியுகம் கெட்ட  உதாரணமாக இருக்கிறது.அணுமின் நிலையம் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு இத்தனை வருடங்கள் கழித்து இழிவான வழிகளில் எதிர்ப்பை காட்டுகிறார்கள்.
இந்து முன்னணியினர் ஆதரவாக குரல் கொடுக்க ,போராட்டக் குழுவினர் எதிர்க் குரல் கொடுக்க அவர்களின் ஆவேசத்தை டி வி..யில் பார்த்தபோது ஆபாசமாக வும்  திட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிகிறது.
அதன் எச்சம்தான் இரு தரப்பினரும் மாறி,மாறி செருப்புகளால் அடித்துக் கொண்டது என நினைக்கிறேன்!
செருப்பால் அடிப்பேன் என சொல்வதே குற்றம் என்கிறபோது இவர்கள் அடித்துக் கொண்டது எவ்வளவு பெரிய குற்றம்?
எந்த அளவுக்கு தங்களை மறந்து அந்த இழிவை செய்திருக்கிறார்கள்?
இன்று செருப்பை ஆயுதமாக கையில் எடுத்தவர்கள் நாளைக்கு ஆயுதங்களை  கையில் எடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
இந்த போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் தவறான  சக்திகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்காவிட்டால் தமிழகத்தின் அமைதி கெடுவதற்கு வழி விட்டதாகிவிடும்.
வடநாட்டில் செருப்பை தலைவர்கள் மீது  வீசினார்கள்.
தமிழ்நாட்டில் மக்களே  செருப்பால் அடித்துக் கொள்கிறார்கள். 

நல்ல முன்னேற்றம்!

ஸ்டாலின் கைக்கு தி.மு.க.போகுமா?


தமிழக அரசியலில் மாற்றங்கள் நிகழும் நேரம் வந்திருப்பதாகவே நினைக்கிறார்கள் ஆளும் கட்சியில் நிகழ்ந்திருக்கிற மாற்றங்களின் விளைவாக பிரதான எதிர்கட்சியான திமுகவிலும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்பது இயற்கைதான்!
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக. ,திமுக .இந்த இரு கழகங்களும் தான் மாநில ஆட்சியில் அமருகிற அளவுக்கு வலிமையானதாக இருக்கின்றன.மற்ற  இயக்கங்கள் துணை மாப்பிள்ளைகளாக இவர்களுக்கு இருக்கலாமே தவிர ஆட்சியில் அமருகிற வாய்ப்புகள் அண்மையில் இருப்பதாக தெரியவில்லை.
அதிமுகவில் நிகழ்ந்திருக்கிற மாற்றங்கள் வரவேற்கத் தக்கவை என்றாலும்  பின் விளைவுகளை சந்திக்க வேண்டிய அவசியம் பின்னர் ஏற்படலாம்.தெரிந்தோ,தெரியாமலோ அதிகார மையத்திலும்,தொண்டர்கள்  மத்தியிலும் சசிகலாவின் விசுவாசிகள் வளர்ந்து இருக்கிறார்கள்.நாளை அவர்களின் துணை கொண்டு எதுவும் நிகழலாம்.''அம்மாவுக்கு பின்னர் சின்னம்மா தான் ''என்கிற எண்ணம் அதிமுகவினரிடம் ஆழமாக இருக்கிறது.
பகிரங்கமாக தங்களை அடையாளம் காட்டும் நிலையில் அவர்கள் இல்லை.
காரணம் 'பயம்தான்'
இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொண்டு திமுகவை வளர்க்க வேண்டிய  கட்டாயத்தில் கலைஞர்  கருணாநிதி இருக்கிறார்.
அவரின் அரசியல் ஞானத்தை பயன்படுத்திக் கொண்டு கழகத்தை வளர்க்க வேண்டிய கட்டாயம் அந்த கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.
மறுபடியும் குடும்ப அரசியல் என்றால் அந்த கட்சி மீள முடியாத சரிவை கட்டாயம் சந்திக்க வேண்டியதாகிவிடும்.
திமுக என்றால் கலைஞரின் குடும்பம் தான் என்கிற எண்ணத்தை மாற்றியாக வேண்டும்.அதற்கு ஸ்டாலினை தவிர மற்றவர்கள் விலகி நின்றாக வேண்டும்.
தங்களின் செல்வாக்கை கட்சியை வளர்ப்பதில் பயன்படுத்தவேண்டுமே தவிர  தங்களை வளமாக்கிக் கொள்ள நினைக்கக் கூடாது.அவர்கள் அதிகார மையமாக  
இருக்கக் கூடாது.குமுதம் ரிப்போர்டரின் சர்வே படி ஸ்டாலினுக்குதான் அடுத்த தலைவர் என்பதற்கான அடையாளம் தெரிகிறது.வேறு யாரும் கண்களுக்கு தெரிய வில்லை.
5.12 .09 ல் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் கலைஞர் சூசகமாக பேசியதை நினைவூட்டுவது நமது கடமை.
''''அரசியல்,அமைச்சர் என்பதை தாண்டி,அவற்றை ஒதுக்கிவிட்டு உங்களுடன் நெருக்கமாக வருவேன்'' என்று பேசினார்.
அதற்கான கால கட்டம் வந்திருக்கிறது.
காங்கிரசை பொருத்தவரை தமிழகத்தில் ஒட்டுண்ணிதான்!வளர்வதற்கான 
வாய்ப்பு அற்று போய் விட்ட தேசிய கட்சி!
தேமுதிக தனி மனித வழிபாட்டில் பிறந்த கட்சி.கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் குடுகுடுப்பைக்காரனின் சட்டையை போன்றது!
அடுத்தவரின் வலிமையை சேர்த்துக் கொண்டு வாழக் கூடிய கட்சி!
திமுகவின் எதிர் காலம் ஸ்டாலினிடம் இருக்கிறது என்பது அடியேனின் கருத்து.
உங்களின் கருத்துகளை தைரியமுடன் பதிவு செய்யுங்கள்!
.

திங்கள், 30 ஜனவரி, 2012

ஹேமாமாலினியும்,ஸ்ரீதேவியும்.......!

ஹேமாமாலினி,ஸ்ரீதேவி இருவருமே பாலிவுட்டில் மிகப் பெரிய சாதனை செய்தவர்கள்!
ஸ்ரீதேவியை ''தண்டர் தைஸ்''என்று கொண்டாடியது..கனவுக் கன்னி என வாழ்ந்தார்,ஹேமா!
இருவருடன் நடிப்பதற்கு பாலிவுட் ஹீரோஸ் ஆசைப் பட்டார்கள்.காதலித்தார்கள்.காதல் கை கூடாதது தனிக் கதை.எவ்வளவோ கிசுகிசுக்கள் இவர்களை வட்டமடித்தன!மும்பையை சேர்ந்த நடிகைகள்,பட அதிபர்கள் தென்னிந்திய நடிகையர்களான இவர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு எவ்வளவோ திட்டங்களை செயல் படுத்தினார்கள்.
ஆனால் இவர்களின்வளர்ச்சிக்குஉறுதுணையாகதர்மேந்திராவும்,போனிகபூரும் இருந்தனர். .
இதில் சோகம் என்னவென்றால் அவர்கள் இருவருமே மணமானவர்கள்.
தன்னுடைய வாழ்க்கை துணையாக போனிகபூரை மணந்தார் ஸ்ரீதேவி!
தர்மேந்திராவை கைப் பிடித்தார் ஹேமா!
இருவருக்கும் சொல்லி வைத்ததை போல் பெண் குழந்தைகளே பிறந்தன!ஹேமாவுக்கு இரண்டு!
ஸ்ரீதேவிக்கு இரண்டு.
இந்த நான்கு பெண்களையும் நடிப்பதற்கு அவர்கள் பெற்றோர்களே அனுப்புகிறார்கள்.கலை சேவை!அந்த சேவைக்காக எவைகள் இழக்கப் படுகின்றன என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல!
தெரிந்திருந்தும் அனுப்புகிறார்கள் என்றால் ...!
அது தான் ''வாழ்க்கை''என்றாகிவிட்டது!
இன்று ஹேமா நன்றாக இருக்கிறார்.மேடையில் நடனமாடுகிறார்.
ஆனால் ஸ்ரீதேவி யால் அவரைப் போல் மூச்சுப் பிடித்து ஆட முடியாது.அவரை பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது.கழுத்து எலும்பு தெரிகிற அளவுக்கு உடல் தேய்ந்து போய் இருக்கிறது!~
ஸ்ரீதேவி நொடித்துப் போய் இருப்பதாக சொல்கிறார்கள்.கேட்பதற்கு கஷ்டமாக  இருக்கிறது.நம்ம சிவகாசிப் பொண்ணுக்கு இப்படி ஒரு சோதனையா? ஆனால் கெட்டிக்கார் நடிகை என்றால் ரேகாவைதான் சொல்லவேண்டும் .இரண்டுமுறை திருமணம் .இரண்டும் தோல்வி .ஆனாலும் பணத்தை இழக்காமல் ,மனத்தை இழக்காமல் தனித்து தனது காதலர் கண்முன்பாகவே கவுரவமாக வாழ்கிறாரே!பாராட்ட வேண்டும்.

இவர்களைப் பார்த்து நமது நடிகைகள் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்! 

சனி, 28 ஜனவரி, 2012

தந்தை பெரியாரும்,,,மூட நம்பிக்கைகளும்..!

பழைய நாளேடுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.
நான் சிவப்பு மையினால் குறியிட்டிருந்த ஒரு  செய்தியை மறுபடியும் படித்துப்  பார்த்தேன்!
அது ஓர் கொலை செய்தி!
சினிமாக்காரர்களுக்கு பயன் படலாம்!
''நாங்கள் உண்மை சம்பவத்தைதான் படமாக எடுத்திருக்கிறோம் ''என சொல்வதற்கு பயன் படலாம்!
மகன் பெயர் பாலாஜி!அந்த ஏழுமலையானின் பெயர்!
அவனுடைய அம்மாவின் பெயர் லலிதா! இவளது பெயரில் 'சகஸ்ரநாம'அர்ச்சனையே நடக்கும்.
அதனால்தானோ என்னவோ மகனுக்கு தினமும் அர்ச்சனை!
அப்பா கண்டு கொள்வதில்லை.கண்டித்தால் இரவு நேரம் அவருக்கு கசப்பாகி விடும்.
அம்மா ஒத்துழையாமை இயக்கம் நடத்துவாள்!
அதனால் 'எனக்கென்ன ,அம்மாவும் பிள்ளையும் ஜெயித்தவர் கரை ஏறுங்கள்!' என இருந்து விடுவார்!
உடன் பிறந்தாலும் ஒட்டாமல் வாழ்ந்தாள் அக்கா!
பூஜ்யமாக வீட்டில் இருந்தான்.
தன்னுடன் ஏதாவது எண் இருந்தால் தான் மதிக்கப் படுவோம் என நினைத்தான்!
ஆன்மிகம் நாடினான்!ஹாஸ்டல் வாழ்க்கை!
ஆன்மிகம் அவனுக்கு எதைக் கற்றுக் கொடுத்ததோ,வீட்டுக்கு வந்தவன் ஒரே  போடாக அம்மாவைப் போட்டுத் தள்ளினான்.
அம்மா செத்தாள்! 
''என்னுடைய கனவில் சிவன் வந்தார்! அவர் கட்டளை இட்டதால் அம்மாவைக் கொன்றேன்'' என்று வாக்குமூலம் !
இவைதான் நான் படித்த செய்தியின் சாரம்!
மூட நம்பிக்கையின் அடித்தளங்களாக எவை எல்லாம் காரணமாக இருக்கின்றன! 
தந்தை பெரியார் நினைவுக்கு வந்ததார்.அவர் வாழ்ந்த  காலம் 94  ஆண்டுகள்,மூன்று மாதங்கள்,ஏழு நாட்கள்!
820000 மைல் பயணித்து மூடக் கொளகைகளை எதிர்த்து பேசி இருக்கிறார்.
கிட்டத் தட்ட 33 முறை உலகை சுற்றி வருவதற்கும் ,மூன்று முறை நிலவுக்கு சென்று வருவதற்கும்  ஒப்பான தொலைவு என கணக்கிட்டிருக்கிறார்கள். 
என்ன பயன் ? அவரை பின்பற்றுவதாக சொல்பவர்களே ரகசிய பக்தர்களாக 
கோவில்களில் உருளுகிறார்களே!
! உருப்படுவோமா?

மனைவியிடம் ஒளிவு,மறைவு

''மனைவியிடம் பகிர்ந்து கொள்ளமுடியாதவைகளை நண்பனிடம் சொல்லலாம் 
என்கிறார்கள்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை.காலமெல்லாம் நம்முடன் இருப்பவளிடம்  பகிர முடியாதது எதுவாக இருக்க முடியும்,அவன் உண்மையானவனாக இருக்கும் பட்சத்தில்?
கணவன்,மனைவி இடையே ஒளிவு மறைவு இருந்தால் அது உருப்படாத வாழ்க்கை.
யாரோ ஒருவர் உண்மையாக இல்லை என்பதாகிவிடும்.
படுக்கை அறையில் விரசங்களை நியாயப் படுத்த முடிகிறது.அது அவசியமும் கூட!அங்கு காமம் தெய்வீகம்.இருவரது நிர்வாணமும் பூஜிக்கப் படுகிறது.கணவனும் மனைவியும் முகம் தெரியாத இருட்டில் முனகுவது தெய்வீக ராகம்!
அவளிடம் ''இன்று ஒரு பெண்ணை பார்த்தேன்,அவளது மார்பகம் அளவுக்கு மீறி பெரிதாக இருந்தது.அசிங்கம்.ஆனால் உனக்கு செதுக்கிவைத்த அழகு''என்று சொன்னால் சிணுங்கியபடி ரசிப்பாள்.செல்லக் கோபம் வரும் .இதையும் சொல்வதற்கு நேரம் காலம் இருக்கிறது!
ஆனால் நண்பனிடம் உண்மையை சொல்கிறேன் என தாம்பத்தியத்தை சொல்ல முடியுமா?
கடன் பட்டதை சொல்ல முடியுமா?
கஷ்டத்தை சொல்லலாம்,நட்டத்தை சொல்லக் கூடாது.
நாளை நட்பு முறிந்துவிடுமானால் அவன்  அதை சொல்லிக் காட்டுகிற ஆபத்தும் உண்டு!
நட்பு என்பது ஒரு எல்லைக்குள் இருக்கவேண்டியது.ஆனால் மனைவியிடம் வைக்கும் அன்புக்கு எல்லை இருக்காது.இருக்கக் கூடாது..
ஆணாதிக்க சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.இந்த நிலை மாறுகிற வரை கணவன்-மனைவி இருவருமே கற்புடன் வாழ வேண்டும் என்பதே எனது கருத்து.

டைரக்டரின் '' துப்பாக்கி '' புலம்பல்.

ஆபாவாணன் ,அருண் பாண்டியன் ஆகியோரிடமும் 'விருமாண்டி'படத்துக்கு கமலிடமும் பணியாற்றியவர் டைரக்டர் ரவிதேவன்.வில்லு,ஏகன் அங்காடி தெரு பேராண்மை  ஆகிய படங்களுக்கு தயாரிப்பு சைடிலும் வேலை பார்த்திருக்கிறார்.இப்போது ''கள்ளத் துப்பாக்கி''என்கிற பெயரில் ஒரு படம் எடுத்து வருகிறார்.எல்லோரும் புது முகங்கள்தான்.
இப்போது இவரது பிரச்னை 'துப்பாக்கி''என்கிற பெயரில் விஜய் நடிக்க ஏஆர்.முருகதாஸ் இயக்கிவருகிற படம்தான்.

''எனது படத்தின் பெயரும் அவர்களது படத்தின் பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் எனது படத்தின் வியாபாரம் பாதிக்கப் படும்.எனது படம் சின்ன பட்ஜெட்  என்பதால் ரசிகர்களும் துப்பாக்கியை தான் கன்சிடர் பண்ணுவார்கள் ஆதலால் கருணை  கூர்ந்து அவர்களது பெயரில் மாற்றம் செய்தால் நல்லது''என்கிறார் ரவிதேவன். 

இது நடக்கிற காரியம் இல்லை! இவர்தான் பெயரை மாற்றிக் கொள்ளவேண்டும்..ஆனால் என்ன சொல்கிறார்?

''நான்தான் கள்ளத்துப்பாக்கி என்கிற பெயரை முதலில் பதிவு செய்திருக்கிறேன்.
அவர்கள் இப்போதுதான் துப்பாக்கி என பதிவு செய்திருக்கிறார்கள்.ஆகவே எனக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.முருகதாஸ் பெரிய டைரக்டர்.
ஆந்திராவில் அவரிடம்துப்பாக்கி என்கிற பெயரில் படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிஇருக்கிறார்கள்.ஏற்கனவே இந்த பெயரை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.எனது படப் பெயரில் 'கள்ள' என்கிற பெயர் இருப்பதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.எனது படத்தில் இடம் பெறுகிற துப்பாக்கி சாதாரணமானதல்ல..மிகப் பெரிய விடுதலை போராட்ட தலைவர் பயன் படுத்திய துப்பாக்கி என்பதாக சொல்லி இருக்கிறேன்.அந்த  துப்பாக்கி எப்படியோ 
தமிழக சிறுவர்களின் கைகளில் சிக்கிக் கொள்வதாக கதை.''என்கிறார் ரவிதேவன்.
''யாருடைய துப்பாக்கி அது?''
''அதை சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும்.ஏற்கனவே படப் பெயரில் போட்டி வந்திருப்பதால் நொந்து போயிருக்கிறேன்.இந்த மர்மத்தையும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.என்னையும்,என் படத்தையும் இனி காப்பாற்ற வேண்டியவர் அந்த மாபெரும் தலைவர்தான்.ஆகவே அந்த சஸ்பென்சை சொல்ல மாட்டேன்'' என்று மறுத்து விட்டார்.
அந்த தலைவர் யாராக இருக்கமுடியும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.
உங்களால்?

வெள்ளி, 27 ஜனவரி, 2012

அய்யா ராமதாசின் மீது அடாவடி வழக்கா?

''அடி,உதை''என்பதை வீரம் செறிந்த சொல்லாகவே அய்யா ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது வேதனையான விஷயம் .
வீரம் என்பது மனைவியை அடிப்பதுவோ,எளியவனை மிரட்டுவதோ அல்ல. அவரது பேச்சில் எப்போதும் ஒருவிதமான மிரட்டல் இருக்கும்.அல்லது தொனி  இருக்கும்.கண்களில் அனல் கக்குவதைப் போல வார்த்தைகளில் நெருப்பைக்  விளைவிப்பார்.
அண்மையில் தேர்தல் செலவுகள் பற்றி பேசிய அவர் ''பளார்''அடி கொடுக்கசொல்லி பொளேர் பேச்சு பேசியது  .நாளிதழில் வந்திருக்கிறது.
நாளை அவர் மறுக்கவும் செய்யலாம்.
அவர் பேசியதாக வந்துள்ளதை தருகிறேன்.
''தேர்தல் செலவு என்பது ஊழல் புரிவதற்கான முதலீடு .அதனால் ஓட்டுப் போடவும்,தேர்தல் செலவுக்குபணமும்  கேட்டால் கன்னத்தில் 'பளார்' அடி கொடு!''என்பதாக பேசி இருக்கிறார்.
அதாவது ஓட்டுப் போடுவதற்கு வாக்காளர் பணம் கேட்டால் அவர்களை அடி !
தேர்தல் செலவுக்கு கட்சிக் காரன் பணம் கேட்டால் அவனையும் அடி!
இதுதானே அர்த்தம்?
கட்சிக்காரனை அடியுங்கள்.அது கட்சிப் பிரச்னை ஆனால் .அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே கட்சியில் கொடுத்து விடுவீர்கள்.உங்களை அடிக்க முடியாது.தேர்தல் கமிஷனே இவ்வளவு செலவு செய்யலாம் என அனுமதிக்கிறது!இப்படி இருக்கிறபோது உங்கள் பேச்சு அர்த்தமற்ற ஆத்திரமூட்டுகிற ,கேலிக்குரிய தாக இல்லையா?
ஓட்டுக்கு காசு கேட்பவனை தண்டிப்பதற்கு சட்டமே இருக்கிறது.காவல் துறையிடம் சொல்லலாம்.ஆனால் உங்கள் கட்சிக்காரர்களே சொல்வார்களா? வாக்காளனை காட்டிக் கொடுப்பார்களா? 
உங்கள் பேச்சு வன்முறையை தூண்டுவதை உணரவில்லையா?
மகன் அன்புமணி  போட்டியிடுகிற தொகுதியில் நீங்கள் சொல்வதை முழுமையாக கடைப் பிடிப்பீர்களா?
அடுத்து அவர் பேசியவைதான் 'கொல வெறி' காமடி!
''திராவிட கட்சிகளை அகற்றுவதே பா.ம.க.வின் முதல் வேலை!பா.ம.க.வை விட உயர்ந்த கொள்கை,கோட்பாடு உள்ள கட்சிகள் வேறு எதுவும் இல்லை.
இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக்கி  விட்டன திராவிட கட்சிகள்''என்று பேசி இருக்கிறார்.
இலவசங்களை அவரது கட்சியினர் அனுபவிக்கவில்லையா?
அந்த கழகங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தபோது அந்த கழகங்களின் கொள்கைகள் மகா மட்டம் என்பது தெரியாது போயிற்றா? மத்திய அமைச்சராக அன்புமணி பணி ஆற்றிய காலங்களில் கழகக் கொள்கைகள் உயர்வானவையாக இருந்ததா?
அய்யா சொல்லவேண்டும்.

பாவம் தமிழ்சினிமா!

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா!
ஒரு பக்கம் தயாரிப்பாளர்கள்,இன்னொரு பக்கம் தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் தமிழ் சினிமாவின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
''மூணு வருசத்துக்கு ஒரு தடவை சம்பள் உயர்வு தருவார்கள் ,நாலு வருசமாச்சு. கொடுக்கிற பாடா இல்ல''என்கிறது  தொழிலாளர்கள் அமைப்பினரான பெப்சி.
''பேச்சு வார்த்தைக்கு வராமல் இழுத்தடிக்கிறார்கள்.மேலும் அவர்கள் முறைப் படி தேர்வு செய்யப் பட்ட நிர்வாகிகள் இல்லை''என்கிறது தயாரிப்பு.
''எஸ்.ஏ.சந்திர சேகரன்,டைரக்டர் அமீர்,டைரக்டர் ஜனநாதன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் உயர்த்திக் கொடுப்பதாக சொல்லிவிட்டு இப்போது இல்லை என சொல்வது எந்த ஊரு நியாயம்''என கொக்கி போடுகிறது பெப்சி.
''அப்படி ஒரு ஒப்பந்தமே ஏற்படவில்லை ''என பிடரியில் அடிக்கிறது தயாரிப்பு!
ஊதியக் குழு தலைவரான அமீர் பெப்சியின் பக்கம்.
''நான் எட்டு மாதமா தயாரிப்பாளர்களுடன் பேசி வருகிறேன்.எஸ்.ஏ.சி. ஊரில் இல்லை என சொல்லி ஜவ்வாக  இழுத்து விட்டார்கள்''என்பது அமீரின் வாதம்.
சினிமாவை கார்ப்பரேஷனாக மாற்றினால்தான் சிக்கல் வராமல் வண்டி ஓடும் என்கிறார் அமீர். ஆனால் சேரனோ''கிரியேட்டரின் உரிமை போய் விடும் .அமீர்  போகாத ஊருக்கு வழி காட்டுகிறார்''என சாடுகிறார்.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் படப் பிடிப்புகள் நிறுத்தப் பட்டு அறிவிக்கப் படாத வேலை நிறுத்தத்தால் மூச்சுத் திணறுகிறது!

யானைப் பசிக்கு சோளப் பொரியா,ரஜினி?

அன்புள்ள சூப்பர் ஸ்டாருக்கு,
வணக்கம் பல!
உங்களின் உச்சம் தொட முடியாமல் தமிழ் நடிகர்களே திணறி கொண்டிருக்கிறார்கள்.
உண்மைதானே!
நீங்கள் தமிழர் பிரச்னைகளுக்கு ஆதரவா,எதிர்ப்பா எத்தகைய நிலை எடுப்பீர்கள்  என்பது இன்னமும் புரியாமல்  மக்கள் மண்டை காய்ந்து போயிருக்கிறார்கள். ஒகேனக்கல் பிரச்னையில் கன்னட சகோதரர்கள் கண்டித்ததுமே நீங்கள் நிபந்தனை இல்லாமல் அவர்களிடம்  மன்னிப்பு கேட்டவர் என்பது தமிழர்களுக்கு தெரியும்.அதைத் தான் சொன்னேன்!
எமது மக்கள் சினிமாவுக்கு அடிமையாகிப் போனவர்கள்.தர்மர்  வேஷம் போட்டவர்களை உண்மையான தர்மராகவே  நினைத்து வணங்கிவிடுவார்கள்.எவ்வளவு நல்லவராக நிஜ வாழ்க்கையில் வாழ்ந்தாலும் வில்லன் வேஷம் போட்டால் அவன் காலி!அவனை வில்லனாகவே நினைத்து வெறுப்பினால் ஒதுக்கிவிடுவார்கள்.
எவ்வளவோ உதாரணம் உண்டு.
எதற்கு இவ்வளவு வியாக்கியானம் என்கிறீர்களா?
தானே புயல் நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பத்து லட்சம் கொடுத்திருக்கிறீர்களே,அந்த தர்ம சிந்தனைக்குத்தான் இவ்வளவும்!
இவ்வளவு மிகப் பெரிய தொகையை இத்தனை நாட்கள் கழித்துக் கொடுத்திருக்கிறீர்களே,கர்ணன் தோற்றான் போங்கள்!
நீங்கள் எத்தனை கோடி வாங்குகிறீர்கள்,அதில் இந்த தொகை எவ்வளவு சிறியது என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல!
இந்த பத்து லட்சம் உங்களுக்கு ஜுஜூபி!
வாழ்வாதாரங்களை அடியோடு இழந்து நிற்கும் எம்மவரை தமிழக அரசு கை விடாது.
என்றாலும் நிதி மிகுந்தவர் பொற்குவை கொடுப்பது அரசினரின் நிவாரண  வேலைகளுக்குஉதவியாக இருக்க வேண்டுமல்லவா?தமிழ்ப் பால் குடித்து  வளர்ந்ததாக பெருமையுடன் சொல்லும் நீங்கள் கிள்ளியா கொடுப்பது?அள்ளிக் கொடுத்திருக்க வேண்டாமா?
'ரஜினியே அவ்வளவுதான் கொடுத்திருக்கிறார்,அவருக்குமேல் நாம் கொடுத்தால்  மரியாதையாக இருக்காது என்று  மற்றவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு  வழி காட்டி இருக்கிறீர்கள்!
நீங்கள் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டை வாழ வைப்பீர்கள்  என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிற அப்பாவி ரசிகர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.என்ன செய்வது ?
லட்சக் கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப் பட்டபோது என்ன செய்தீர்கள் என்று  உங்களை அதட்டி கேட்கும் மனம் இல்லாமல் ஊமையாய் வாழ்ந்த  ஜடங்கள் நாங்கள்!

அன்புடன்,
தேவிமணி.

வியாழன், 26 ஜனவரி, 2012

குடியரசும்.....மக்களும்!

ஜனவரி 26 ....
இந்திய மக்கள் நெஞ்சு நிமிர்த்தி கொண்டாடவேண்டிய நன்னாள் ...
''பாரத மணித்திருநாடு என பாடி,ஆட வேண்டிய திருநாள்.
ஆடலும்,பாடலும் பள்ளி சிறாருடன் நின்று விடுகிறது! அதுவும் ஒரு கட்டாயத்தினால் மட்டுமே நிகழ்கிறது.
எவர் வீட்டிலாவது தேசியக் கொடி பறக்கிறதா?
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ,அதிலும் சிலர் வீட்டில் பறக்கலாம்.அவர்கள்  முக்கியமான பதவிகளில் இருப்பவர்களாக இருக்கும்.திமுக,அதிமுக,பாமக, மதிமுக,தேமுதிக என எம்.பி.கள்,எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்களே ,அவர்களின் வீடுகளிலாவது தேசியக் கொடி பறக்கிறதா?
தலைவர்கள் வீட்டில் பறந்தால் அல்லவாஇவர்களின் வீடுகளில் ஏறப் போகிறது!
ஆக குடியரசுநாளும்,சுதந்திர நாளும் ஒப்புக்காக கொண்டாடப் படுகிற நாட்களாகவே இருக்கின்றன.முட்டாயி திங்கிற நாளாகவே சிறார்களுக்கு இருக்கிறது.மக்களால் கொண்டாடப்படுவதில்லை. எந்த ஊரிலாவது மக்கள்  அவர்களாகவே திரண்டு கொடிஏற்றி கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?
எம்.எல்.ஏ;எம்.பி.களுக்கு அதாவது நம்ம தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கு அவர்களுடைய தொகுதிகளில் எத்தனை பேரூர்,சிற்றூர் இருக்கிறது என்பது தெரியுமா?
அவர்களுக்கு காண்டிராக்ட் நிலவரம் தெரியும்,டாஸ்மாக் கடை விவரம் தெரியும் ,மணல்,கல் குவாரிகள் தெரியும்,காலி நிலம் ,புறம்போக்கு நிலம் பற்றிய கணக்கு தெரியும்>
நமது பிரதிநிதிகள் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் பக்ரா நங்கல் பற்றி கேளுங்கள்.சொல்கிறார்களா என்று பார்க்கலாம்!
அவ்வளவு ஏன்,தேசியக் கொடியில் இருக்கிற சக்கரம் பற்றி கேட்டுப் பாருங்கள் அதில் எத்தனை ஆரங்கள் இருக்கின்றன என கேளுங்கள்.முழிப்பார்கள்.எத்தனை ரிசர்வ் தொகுதிகள் தமிழ் நாட்டில் என்று  ஒரு தேமுதிக எம்.எல்.ஏ,விடம் பேச்சு வாக்கில் கேட்டேன்.''பத்து, பதினைந்து  இருக்குமா?''என்னிடமே கேட்கிறார்..என்னத்தை சொல்ல?
இத்தகையவர்களை நமது பிரநிதிநிதிகளாக தேர்வு செய்கிற மக்கள் மீதுதான்  குற்றம் சொல்வேன்!

புதன், 25 ஜனவரி, 2012

நெஞ்சு பொறுக்குதில்லையே!

அவன் பெயர் துஷ்யந்தன்.வயது 45 .
இவனுக்கு ஒரு மகள்.வயது ஒன்பது.அழகாக இருப்பாள்.யாரிடமும் அன்பாக  பழகுவாள்.இப்படி ஒரு பிள்ளை நமக்கு இல்லையே என அக்கம் பக்கமுள்ளோர் ஏங்கினர் 
அவள் கலகலப்பானவள். சிறியவளாக இருந்தாலும் பெரியவர்களிடம் மிகவும்  மரியாதை காட்டுவாள்.பெண் என்பதால் வளர்ச்சி அதிகமாகவே இருந்தது.அம்மாவின் தனிக் கவனிப்பு அவளை அப்படி வளர்த்திருந்தது. பெற்றவளுக்குத் தானே பிள்ளையின் அருமை தெரியும்.நாளை இன்னொருவனின் வீட்டில் வாழ வேண்டிய பெண் என்பதால் அவளை கைக்குள்ளேயே வைத்து இருந்தாள்
ஒரு நாள்,
என்றைக்கும் அந்த சிறுமி அப்படி இருந்ததில்லை.
விலகி வாழ விரும்பினாள் .
முன்னர் இருந்த மகிழ்ச்சி, கலகலப்பு காணாமல் போயிருந்தது.
யாரைப் பார்த்தாலும் பயம்!
ஏனிந்த மாற்றம்?
எதையாவது பார்த்து பயந்திருக்கலாம் என நினைத்து அம்மா அவளை மந்திரவாதியிடம் அழைத்து சென்றாள்.
அவனும் அவனது தொழில் தர்மப்படி வேப்பிலையால் நாலு அடி அடித்துவிட்டு  அவளின் கையில் கறுப்புக் கயிறு கட்டிவிட்டான்.''பிள்ளை முனியைப் பார்த்து பயந்திருக்கிறது''
எதையாவது அவன் சொல்ல வேண்டுமல்லவா?
இல்லாத பேய்,பிசாசுக்குதானே பயப்படுவோம்.
சிறுமியும் பழைய மாதிரி மகிழ்ச்சிக்கு திரும்பினாள்!
மந்திரவாதியின் அருமை,பெருமைகளை ஊர் மெச்சியது. ,பாராட்டும் மெச்சுதலும் ஒரு வாரம் தாங்கியது.
முன்பை விட மோசமான சோகத்துக்கு ஆளாகி இருந்தாள் அந்த சிறுமி.
கண்ணீர் விட்டபடியே இருந்தாள்.
ஆளாளுக்கு காரணம் கேட்கவே தாயிடம் சொல்லி விட்டாள் ,உண்மையை!
''அம்மா! என்னை அப்பா ரெண்டுவாட்டி கெடுத்து விட்டார்மா!''
இது கதை அல்ல.உண்மையில் நிகழ்ந்த வல்லுறவு பாவம். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்திருக்கிறது.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

கொல வெறி டி ...பாட்டு ..!.கவிஞர் கருத்து.

ஊரெல்லாம் கொல வெறி தல விரிச்சு ஆடுது!நண்டு,சிண்டெல்லாம் அந்த பாட்டுதான்!
கவிஞர் களில் இருபிரிவாக நின்று  ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.
''என் பிரண்ட போல யாரு மச்சான்''பாட்டு எழுதிய கவிஞர் விவேகா என்ன சொல்கிறார்?
'' இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை!'' சட்டென்று பேச்சை முடிக்க பார்த்தார். விடுவமா?
''அப்படி சொன்னா எப்படி,அது தமிழ் பாட்டா,இல்ல இங்கிலிஸ் பாட்டா?''
''ஆள விடுங்க சார். நான் கவிஞன்.இன்னொரு வரின் பாட்டை பற்றி கருத்து நான் சொல்வதற்கில்லை!''
''சரி.ஹீரோக்களும்,டைரக்டர்களும் பாட்டு எழுதுறாங்களே?அதை பற்றியாவது கருத்தை சொல்லுங்க?''
''அதைப் பற்றியும் கருத்து இல்லை.''
'' நீங்க பா.விஜய் மாதிரி நடிப்பிங்களா?''
''நான் பாட்டு எழுத வந்தவன்.நடிக்க வரல!'' 
''எந்த இசை அமைப்பாளருடன் நீங்க 'செட்' ஆகிறிங்க?''
''கலைஞன் திரவம் மாதிரி!எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் அந்த பாத்திரத்தின் வடிவமாக மாறிவிடுவான்!''
''பாடல் எழுதுவதற்கு எது அவசியம்?''
''கவித்துவம்! கவித்துவம் இல்லாவிட்டால் பாடல் வராது.கவித்துவம் உள்ளவர்களை கவிஞர் கள் என அழைப்பதுதான் அழகு.''
''வெளிநாடு  சென்று சினிமாவுக்கு பாட்டு எழுதுவதில் என்ன வசதி?''
''சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம்.ஆனால் நான் எங்கு இருந்தாலும் எழுதுவேன் ,தயாரிப்பாளர்கள்,டைரக்டர்கள் தனிப்பட்ட நண்பர்களாக  இருப்பதும் காரணமாக இருக்கலாம்.''
''நீங்கள் பத்திரிகையாளர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு என்ன காரணம்?''
''நானும் பத்திரிகையாளன்தான்..எனதுஆயுதம் பேனா.உங்கள் ஆயுதம் பேனா.தொப்புழ்க் கொடி உறவு,நெருக்கமாக  இருப்பது ஆச்சரியமில்லை!''
உண்மைதான் கவிஞரே!


திங்கள், 23 ஜனவரி, 2012

ரஜினியின் மனம் திறந்த பேட்டி...!

உண்மையை சொல்வதற்கும் தைரியம் வேண்டும் !
அது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் நிறையவே இருந்தது!
இப்போது இருக்கிறதா என்றால் ...?
என்னால் சொல்லமுடியாது.
2003 -ல் அவர் எதற்கும் தயங்கியதில்லை !
பத்திரிகையாளர்களை பயமின்றி சந்தித்தார்.அவர்களும் பழகினார்கள்!
கால மாற்றம், அரசியல் சூழல், கலையுலகின் நம்பர் ஒன் தகுதி இவையெல்லாம் அவரை விலகி நிற்க வைத்துவிட்டதாகவே கருதுவேன்!
யூகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதன் பிறகு இடைவெளி அதிகமாகி விட்டது.
2003 -ல் அவர் பேட்டியில் சொன்னது இன்றும் எனக்கு பசுமையாக இருக்கிறது.
இன்று வரை அவரளவுக்கு வேறு எந்த ஹீரோவும் மனம் திறந்ததில்லை!
மது அருந்துவதை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
மாலை மயங்கியதுமே மஞ்சள் நிற திரவத்தை ரத்தத்துடன் கலக்க செய்யும் பலரை தெரியும்.ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை.
இமேஜ் போய் விடும் என்கிறார்கள்.
ஆனால் ரஜினியின் இமேஜ் மட்டும் இறங்காமல் உச்சத்திலேயே இருக்கிறதே? 
அது எப்படி?
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தன்னை எப்படி கண்டித்தார் என்பதை அந்த காலத்தில் சொன்னதைத்தான் இப்போது நினைவு படுத்துகிறேன்.
ரஜினி சொன்னது;
''நாகேஷ் தெரியுமா?எப்பேர்ப்பட்ட ஆர்ட்டிஸ்ட் தெரியுமா? அவருக்கு முன்னால்  நீ சிறு துரும்பு !தண்ணி அடிச்சிட்டு அவர் முன்னால நடிக்க வந்திருக்கே!இனிமே சொட்டுத் தண்ணி அடிச்சு வந்தின்னா .........அதால அடிப்பேன்னார்.அன்னிக்கி விட்டேன் .மேக்கப் போட்டாச்சுன்னா தண்ணிய தொடறதில்ல'' என்று சொல்லி இருக்கிறார். .

நடிகரின் சொதப்பிய காதல் !

நீண்ட காலத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்,நடிகர் சித்தார்த்.
''காதலில் சொதப்புவது எப்படி'' என்பது படத்தின் பெயர்.!இந்த பிரஸ் மீட்டுக்கு 
ஹீரோயின் அமலா பால் வரவில்லை !
''சாட்டிலைட் மீடியாவுக்கும் அமலாபாலுக்கும் லடாய்!அதனால்தான் இந்த பிரஸ் மீட்டுக்கு ஹீரோயின் வரலியா?''என்று ஆரம்பத்திலேயே வெடியை கொளுத்திப்  போட்டதும் 
பதறிப் போனார்கள் மொத்த யூனிட்டும்.''அப்படியெல்லாம் இல்லை.அவருக்கு இன்னிக்கு எக்ஸாம்.அதான் வரமுடியாதுன்னு சொன்னார் ''என்றார் டைரக்டர் பாலாஜிமோகன்.
நிருபர்கள் விடுவதாக இல்லை.
''இரண்டே ,டி  .வி.க்கு மட்டும்தான் பேட்டி தருவேன் .மத்தவங்களை வெளியேத்துங்க..என்று சொன்னது உங்களுக்கு தெரியாதா?''
''நாங்க அப்படி கேள்விப்படல ''
குறிக்கிட்ட சித்தார்த் ''எதுக்கு பிரச்னை?இன்னொரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்றோம் .அவங்களும் வருவாங்க""என்று சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அடுத்து ஆரம்பமானது சித்தார்த்தின் காதல் சொதப்பல் பற்றிய கேள்விகள்!
''காதலில் சொதப்பிய அனுபவம் நிறைய இருக்குன்னு சொன்னீங்களே,அது டீனேஜ் பருவத்திலா,இல்ல சினிமாவுக்கு வந்த பிறகா?''என்று ஒரு கேள்வி!
''சின்ன வயசிலேயே சொதப்பியாச்சுங்க!''
''அப்ப பிஞ்சிலேயே பழுத்த கேஸ்!''
''நிறைய அனுபவங்கள் உண்டு.அதான் இந்த கதையைப் பற்றிய குறும்படம் யு.டியூப்பில் பார்த்ததும் அதில் நான் நடிக்கணும் என்கிற ஆசை வந்து விட்டது.இந்த காதல் எப்படி வருது,எப்படி போகுதுன்கிறது இன்னும் தெரியலிங்க ''என்றார் சித்தார்த்.
''தமிழ் படங்களில் உங்களை அதிகமா பார்க்க முடியலியே?''
''வருத்தம்தான் யாரும் கூப்பிடலியே!இந்த வருஷம் உலகம் அழியப் போகுதுன்னு சொல்றாங்க ,எனக்கு ஆறுபடம் வரப்போகுது'' என்றவர் வெற்றிமாறனின் படத்தில் அடுத்து நடிக்க இருப்பதாக சொன்னார்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

மடாதிபதிகள் கடவுளின் ஏஜண்டுகளா?

நீண்ட காலமாக எனது மனதில் ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது !
மடாதிபதிகள் என்பது மதம்,பணம் சார்ந்த ஒரு தொழிலதிபரின் இன்னொரு பெயர் ,அவர்கள் வணங்கத்தக்கவர்களா,மதிக்கத் தகுந்தவர்களா என்பது  கேள்விக்குரியது.அவர்களை கடவுளர்களின் ஏஜன்டுகளாக நினைப்பது முட்டாள்த்தனம் என நினைக்கிறேன்!
இது சரியா என்பதுதான் எனது மனத்தை பிராண்டிக் கொண்டிருக்கிற கேள்வி!
 மடாதிபதி அரசியல் பேசுகிறார்.தன்னை கடவுள் அனுப்பியதாக சொல்கிறார்.இன்றைய அரசியல் எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது ,அரசியல்வாதிகள் எத்தகைய ஊழல் வாதைகளாக இருக்கிறார்கள்  என்பதை  நாளேடுகள் நாள்தோறும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றன.அத்தகைய  அரசியலில் இருக்கிற, பேசுகிற மடாதிபதி வணங்க தக்கவராக இருக்க முடியுமா?


எல்லா மதங்களிலும் இத்தகைய ஏஜண்டுகள் இருக்கவே செய்கிறார்கள்.
அவர்களை ஒரு மேடைப் பேச்சாளர்களாக மதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
அவர்களை கடவுளர்களின் ஏஜன்டுகளாக மதிப்பது அறிவு சார்ந்ததாக இருக்க முடியாது  என நினைக்கிறேன்.நமது மனத்தை நல்வழி படுத்துகிறவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் .அதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களா?
நாம் தான் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

நம்மை சக மனிதனாக நினைக்காமல் ஒதுங்கி நின்று ஆசிர்வாதம் செய்வது ஏற்புடையதுதானா அவர்கள் கை நம் மீது பட்டுவிடக்கூடாதாம்.தீட்டு என்கிறார்கள்.நமக்கு சமமாக அமரமாட்டார்கள். .உயரமாக ஆசனம் போட்டுக் கொள்வார்கள் . எவனொருவன்பிறரை  சக மனிதனாக நினைக்கவில்லையோ,அவன் வணங்கத் தக்கவன் அல்லன்!.மதிக்கத் தகுநதவனும் அல்லன்.!! 

வேதம் என்பது மனிதனால் எழுதப் பட்டது.அதை கற்று தேர்ந்தவன் கடவுளுக்கு  நிகரானவன் என சொல்வது ஏற்புக்குரியதல்ல.அவன் மனிதம்  கற்றவனாக இருக்கவேண்டும். மடாதிபதிகள் ஏதாவது ஒரு குற்றத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நமக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க முடியும்?

யாரையும் புண் படுத்தவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல.அப்படி நினைப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்..திருக்குறள் வழிப்படி எவருமே  நடக்கமுடிவதில்லை.ஏன்?எக்காலத்திற்கும் பொருந்துகிற அற நூல். .குறைந்த பட்சமாவது அந்த நூல் வழி நடப்பவரே நல்லவர் என்பது எனது கருத்து.  

சனி, 21 ஜனவரி, 2012

பெரிய இடத்து சமாச்சாரம்.....!

நட்சத்திர ஹோட்டல்.சென்னையின் மைய்யப் பகுதியில் கம்பீரமாக நிற்கிறது.
இரவு பத்துமணி இருக்கலாம்.
காரிலிருந்து இறங்கினான் .!
பெரியதாக சல்யூட் அடித்த ஹோட்டல் ஊழியர் கார் சாவியை வாங்கி கொண்டார்.வாலட் சர்வீஸ்!
நேராக பாருக்குள் நுழைந்தான்.வழக்கமாக வருகிற பெரிய இடத்து விருந்தாளி  என்பதால் வரவேற்பு அதிகம்!
''இன்னிக்கி என்ன சார்?விஸ்கி ஆர் பிராண்டி?''
''நோ.   ஜின் வித் லெமன்...தென்? விமன்! '' பெரிதாக சிரித்தான்.
பாரில்  இருந்த மற்ற குடிமக்கள் ஆளுக்காள் ''பைன்,டாப் மச்சான்...''இப்படி பல கமண்ட்ஸ் !
''ராமு வரல?'' பெரிய இடத்து பிள்ளை கேட்டது.
''இன்னும் ஆளைக் காணோம் ,பார்ட்டிகளை பிக்கப் பண்ண போயிருக்கலாம்,சார்"
ராமு யார் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நம்ம ஆள் லார்ஜ் ,லார்ஜாக இரைப்பைக்குள் இறக்கிக் கொண்டிருக்கிறான்.
நேரம் போனது.
''ர ...மு வான் .....த்தானா ?''குளறுகிறது நாக்கு பெரிய இடத்து பிள்ளைக்கு!
''இன்னும் வரல,சார்''
''நோ.....இன்னி....க்கி ..லாரா ....வேணும்''
''சான்ஸ் இல்ல சார் ,இப்பவே டூ லேட்...பாரை குளோஸ் பண்ணனும் '' பார்மேனின் கவலை!பெரிய இடத்துப் பிள்ளை அடாவடி பண்ணாமல் போகவேண்டுமே !!
''இவனோ லாரா இல்லாமல் போகமாட்டான் போலிருக்கிறது.பாழாய்ப் போன  ராமுக்கு இன்னிக்கி என்ன கேடோ..ஆளைக்  காணவில்லை! 
பாரை மூடியாக வேண்டும்.அதற்கு மேல் திறந்து வைத்தால் எவனாவது போட்டுக் கொடுத்து போலீஸ் ரெய்டு வர நேரிடலாம்!
கெஞ்சி கூத்தாடி அவனை வெளியில் அனுப்பி பத்திரமாக காரில் உட்கார வைத்தார்கள்.
அந்த போதையிலும் காரை பார்த்து ஓட்டுகிறான்,எங்காவது ராமு நிற்க மாட்டானா?
சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை!
ஏமாற்றம்,அவனை வெறியனாக்கியது .
வீடு சேர்ந்து காலிங் பெல் அழுத்தியவனுக்கு .வழக்கமான வரவேற்பு!'' இவன்  இனி திருந்த மாட்டான்!காரில் அடிபட்டு சாகத்தான் போறான்.தூக்கிப் போட்டுட்டு  நிம்மதியா இருக்கலாம்" அப்பாவின் சாபமும்,கவலையும்!
அவனால் தூங்க முடியவில்லை.''இப்படி குடிகாரனா இருந்தா எவன்டா பொண்ணு கொடுப்பான்?''என்று தினமும் அர்ச்சனை செய்கிற அப்பாவின் குரல்  வேற அவனை இம்சிக்கிறது.
படுக்கையில் புரண்டபடி கிடந்த அவனுக்கு இரவு மணி ஒன்று என்பதை சுவர்க் கடியாரம் சொன்னது.
எழுந்தான்! 
பூனை போல் கிச்சனுக்கு சென்றான்.
அங்குதான் வேலைக்காரி படுத்திருப்பாள் .
பணத்தைக் காட்டியோ,மிரட்டியோ காரியத்தை சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை. 
போர்வையை உடல் முழுக்கப் போர்த்தி நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கிறாள். 
மெதுவாக பக்கத்தில் படுத்தவன் அப்படியே கைகளை போட்டான்.
கடும் உழைப்பின் அசதி அவளுக்கு !எதுவும் தெரியவில்லை.
நம்ம ஆளுக்கு நம்பிக்கை!படிந்து விடுவாள். என்கிற ஆசையுடன் அவளை இறுக அணைத்தபடி வாயைப்  பொத்த அவள் திமிறி எழுகிறாள். 
இவ்வளவு நெருங்கி விட்டவனுக்கு காமம் உச்சத்தில் நிற்கிறது.
மேலும் மேலும் அவளின் உடலை இறுக்க வலிமை முழுவதையும் திரட்டி கொண்டு கூச்சல் போட்டபடியே அங்கிருந்த அரிவாமனையை எடுத்து வெட்ட அலறியபடியே சாய்கிறான் .
கூச்சலை  கேட்டு மாடியிலிருந்து இறங்கிய பெற்றோர் விளக்குகளை எரிய விட்டனர்.
வேலைக்காரியின் கால்களைப் பற்றியபடி செல்வந்தர் வீட்டுப் பிள்ளை  அலறுகிறான்.
அவனின் அப்பா சொன்ன வார்த்தை''இனியும் நீ திருந்தலேன்னா நானே உன்னை கொல்வேண்டா''
கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாமே!!

ஏன்னா மறக்கலியே ...?

மணக்க மணக்க வந்தாள் பங்கஜம்.

''சாண்டல்  போட்டு  ஸ்நானம் பண்ணுனியா?வாசம் நாசிக்குள் ஏறி என்னென்னமோ பண்றதடி...ஆமா நைட் பத்துமணிக்கா ஸ்நானம் பண்ணுவா? இன்னிக்கு ஏதும் ஸ்பெஷல் உண்டா?'' ஆர்வம் பொங்கி வழிய கேட்டான் கிச்சா!

''கிச்சன்ல வேலை இடுப்பை ஒடிச்சிடுச்சு.கச கச ன்னு வேற!.அதான் ஒரு முழுக்குப் போட்டேன்'' 

''சொல்லிருந்தா நானும் வந்திருப்பேனே!நோக்கு முதுகு தேச்சு விட்டு ரொம்ப  நாளாச்சுடி!சாட்டின் மாதிரிஉன்னோட முதுகுவழ வழன்னு  இருக்கும்.சோப்பு நழுவாம கெட்டிமா புடிச்சிண்டு தேக்கிறதிலும் ஒரு இருக்குடி ! என்ன கூப்பிட்டிருக்க கூடாதோ?'' கிச்சாவுக்கு ஜொள்தான் வடியவில்லை!பய கிறங்கி போய் விட்டான்.

''நல்ல பிள்ளையா இருந்தா கூப்பிட்டிருப்பேன்.ஆசைப்பட்டேள்னு கூப்பிட்டு அவதிப்பட்டவள் நானாச்சே!முதுகை தேக்கிறேன்னு ..எங்கே கையை வச்சேள்?நன்னா நகம் வளர்த்து வச்சிருக்கேள்! நேக்கு பிரா போடமுடியல!''

''புருஷன் பொண்டாட்டின்னா இதெல்லாம் சகஷமடி! உங்கம்மா இதல்லாம் சொல்லி கொடுக்கலியா?''

''வெக்கம் கெட்ட மனுஷா! இதெல்லாமா சொல்லி கொடுப்பா?உங்கப்பா இப்படியெல்லாம் பண்ணுடா புத்திர சிகாமணின்னு சொன்னாரா ?போறது பார் புத்தி!''

''சரி ...சரி ரொம்பவும் படுத்தாதே!இப்பவே மணி பத்தரை ஆச்சு! வா போகலாம்'' இடுப்பை கோர்த்துக் கொண்டு பெட்ரூமுக்குள் போனான்.

நைட்டியை சரி செய்தபடி பங்கஜம் கேட்டாள்.''வாங்கியாந்திருக்கேளா?''

பயலுக்கு சுள்ளென்று இருந்தது.அவசரத்தில் மறந்து விட்டான். 

கண நேரத்தில் அத்தனை சந்தோசமும் காலி 

''மறந்துட்டேண்டி'' கிச்சாவின் குரலில் மொத்த சோகமும் நிரம்பி வழிகிறது.

''அப்ப இன்னிக்கி தனிப் படுக்கைதான்"" என்று பாய் ,தலையணை யை தூக்கிப் போட்டாள்!அரசாங்கத்தின் குடும்ப கட்டுப்பாடு அன்றைய சந்தோஷத்திற்கு  வேட்டு வைத்து விட்டது. அவர்களுக்குள் அப்படி ஒரு ஒப்பந்தம்!

''கிராதகி''!முணுமுணுத்தபடியே படுத்தான்.தூக்கம்தான்  வரமறுத்தது. தலையணையை காலிடுக்கில் போட்டுக்கொண்டு தூங்க முயற்சிக்கிறான் கிச்சா!






   

மறந்துட்டியா மச்சான்....!

வீட்டுக்குள் நுழைந்ததும் என்னை ஏற ,இறங்க பார்த்தாள் எனது சகதர்மிணி !

நடையனை கதவோரம் கழற்றிவிட்டு கைப்பையை கொடுத்தேன்.

வாங்கிகொண்டாள் !

''ஆபிசில் ரொம்ப வேலையோ?'' குரலில் மாற்றம் தெரிந்தது.

எதற்காக இப்படி கேட்கிறாள் என்பது புரியவில்லை.என்றைக்கும் வருவதுபோல்தான் அன்றைக்கும் சரியான நேரத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு வேலை விருந்தாளிகள் யாரும் வந்திருப்பார்களோ?

அறையை எட்டிப் பார்த்தேன்.
''அங்கென்ன பார்வை ?யாரும் வரல !''

''ம்ம்'' என மெதுவாக முனகினேன்.எனக்கு எதுவும் பிடிபடவில்லை.எங்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கை  போய் கொண்டிருக்கிறது.

ஒரு வேளை இவளை சினிமாவுக்கு அழைத்துப் போவதாக சொல்லி இருப்பேனோ?நான் ஒரு ஞாபக மறதி ஆசாமி! 

''பொன்னு..இன்னிக்கு ஈவ்னிங் ஒரு ப்ரோக்ராம் சொல்லி இருந்தேன்ல?''சமாளிக்கப் பார்த்தேன்.என் பொன்னுத்தாய் தலையை வெடுக்கென வெட்டிவிட்டு கிச்சனுக்குள் போய் விட்டாள் முணுமுணுத்தபடியே!

''என்ன ஞாபக சக்தியோ ?இதுல கூடவா மறதியா இருப்பாங்க...இவரோட  எப்படி குப்பை கொட்டப் போறேனோ?''என்கிற முணுமுணுப்பு எனக்கும்  கேட்டது. 

நானும் மண்டையைப் போட்டு உருட்டிவிட்டேன்.ஒன்னும் புரியல்!கை,கால் முகம் கழுவி விட்டு காபிக்காக சோபாவில் சாய்ந்தேன்.

சர்க்கரை போடாத காபி என்பது குடித்த பிறகு தான் தெரிந்தது.

''என்ன பொன்னு, சீனி போட மறந்திட்டியா?''

''மறக்கல! வேணும்னுதான் போடல!''

''ஏண்டி?''

''நோண்டி!இன்னிக்கி என்ன கிழமை?''கண்களை உருட்டியபடி கேட்டாள்!

ஆகா ,இன்னிக்கி சனிக்கிழமை.! வழக்கமா மல்லிகைப்பூவும்,அவளுக்கு பிடித்த  மைசூர் பாக்கும் வாங்கி வருவேன் .அன்றைய இரவு எங்களுக்கு தூங்கா இரவாக் இருக்கும்! இதை க் கூட மறந்திட்டியேடா மக்கா சோள கிருஷணசாமி என்று என்னையே நொந்தபடி சட்டையை மாட்டிக்கொண்டு லாலா மிட்டாய் கடைக்கு விட்டேன் சவாரி!

கிசு..கிசு எழுதாதே!

அது ஒரு வசந்த காலம்!
நடிகர் திலகம் வாழ்ந்த காலம்.
அவரது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் தவறாமல் அன்னை இல்லத்தில் ஆஜராகிவிடுவேன்!
அன்றும் ஆஜரானேன்.
நடிகர்கள்,நடிகைகள்,இயக்குனர்கள்,பட அதிபர்கள், அரசியல்வாதிகள் என பெரும் கூட்டம்.மாலைகளும்,பூங்கொத்துகளும் சால்வைகளும் குவிந்து விட்டன.
அவர் கம்பீரமாக சோபாவில் அமர்ந்திருந்தார்,அவரை சுற்றிலும் திரை உலக பிரமுகர்கள்,பத்திரிகையாளர்கள் !
எப்பவும் போல் ஒவ்வொருவரைப்  பற்றியும் வேடிக்கையாக கமென்ட் அடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென மூத்தமகன் ராமுவை பார்த்து ஜாடை செய்ய அவரும் சிரித்தபடி அவரது அறைக்கு சென்றார்.
திரும்பி வரும்போது கையில் சிறிய பெட்டி.
அப்பாவிடம் கொடுத்தார். 
நடிகர் திலகம் அந்த பெட்டியை திறந்தார்.அதில் தங்க சங்கிலி இருந்தது.அதை 
கையில் எடுத்தவர் என்னைப் பார்த்து'' டேய்..கிட்ட வாடா!'' என்றார்.அருகில் சென்று அமர்ந்தேன்.
சுற்றி நின்றவர்களைப் பார்த்து '' இவன் கலைமாமணியாம்!அரசாங்கம் கொடுத்திருக்குய்யா ..இவனுக்கெல்லாம்......'' என்று சிரித்தபடியே ''நானும்  இவனுக்கு இந்த சங்கிலியை போடுறேன்யா!'' என்று தங்க சங்கிலியை எனக்கு அணிவித்தார்.இளைய திலகம் பிரபு தனியாக ஒரு தங்க டாலரை கொடுத்தார்.அதில் நடிகர் திலகத்தின் படம் இருந்தது. நவரச நாயகன் கார்த்திக் தங்க பிரேஸ்லெட் அணிவித்தார்.
நான் பெருமையுடன் அவைகளை பாது காத்து வருகிறேன் .
கூட்டம் கலைந்த பிறகு ''ஏண்டா .கிசு கிசு எழுதுறே!அடுத்தவன் வயிறு எரிஞ்சு சாபம் இடுவான் ,அதெல்லாம் உனக்கு தேவையா?'' என்று என்னைக் கண்டித்த பாங்கு தந்தையை நினைவு படுத்தியது.
அவரது 'பார்த்தால் பசி தீரும்' படத்தின் ஐம்பதாம் ஆண்டு விழா நிகழும் இந்த ஆண்டில் அவரைப் பற்றி பதிவு செய்வது பெருமையாக இருக்கிறது.

அரசியல் வாதியானால் ?

மனிதனாக வாழ் என்கிறார்கள்.
ஆனால் வாழ விடுவதில்லை!
கருணை ,இரக்கம்,கொடை,என மனிதனுக்கு என்னென்ன இருக்க வேண்டுமோ  அவை எல்லாம் இன்றைய மனிதனுக்கு இருக்கிறதா?
நேற்று வரை சைக்கிளில் சென்றவன் அரசியல்வாதியாகி பதவியில்  அமர்ந்ததும் உடனே இன்னோவா கார் வாங்கி விடுகிறான்.எப்படி?
ஒரு மனைவி என வாழ்ந்தவன் மாவட்டத்துக்கு ஒருத்தி என வாழ முடிகிறது.அவர்களுக்கு வசதியான வாழ்க்கை கொடுக்க முடிகிறது.எப்படி?
அடியாட்கள் அவனை சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்பு கொடுக்கிறார்கள். ஒரு குட்டி ராஜாவாக வாழமுடிகிறது,
போலீசுக்கு பயந்து வாழ்ந்தவனுக்கு போலீஸ் சல்யூட் அடிக்கிறது எதற்காக?
பதவியை பயன்படுத்தி தன்னையும்,தனது வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்கிறான்.
அடுத்தவனை அழுத்தி,அல்லது கெடுத்து,அல்லது மிரட்டி,அல்லது ஏமாற்றி  வாழ கற்றுக் கொண்டுவிடுகிறான்.
இதுதான் அரசியல் அவனுக்கு கற்று கொடுத்துள்ள பாடம் !
இந்த பாடத்தில் தேர்வு பெற்றவன் தான் தலைவன்.அவன்தான் மனிதன்!!
நான் பார்த்த ஒரு எம்.பி.வீட்டிலிருந்து வாசல் கடந்து காரில் ஏறியதும் ,பிளாட்பாரத்தில் காத்திருக்கிற போலீஸ்காரர் அடிக்கிறார் சல்யூட்!
சர்வ சாதாரணமாக ஐநூறு ரூபாய் நோட்டை எம்.பி. கொடுக்கிறார்.இப்படி தன்னை மதித்து மரியாதை செய்கிறவர்களுக்கெல்லாம் ஐநூறு ரூபாய் தாள் !
இவ்வளவு பணம் அவருக்கு எப்படி கிடைத்தது?
அவருடைய பிறந்த நாள் அன்று ஜானிவாக்கர் விஸ்கி ,ஆயிரம் ரூபாய் கவர்  என நெருங்கியவர்களுக்கு கொடுத்தார் .இந்த பணம் உழைத்து சம்பாதித்ததா?
இல்லை!
பதவியை பயன் படுத்தி சம்பாதித்தது!
இன்று அந்த எம்.பி. மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது!அவர் எதிர் கட்சி ஆள் என்பதற்காக !ஒரு சாதாரணமானவன் சிறு குற்றம் செய்தாலும் நய்யப் புடைக்கிற போலீஸ் அதே குற்றம் செய்கிற அரசியல்வாதியை கவுரவமாக  விசாரிக்கிறது.இது என்ன நியாயம்?
மனிதனாக வாழ் என்பதை விட அரசியல்வாதியாக ,அதிலும் பதவியாளனாக வாழ் என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை!!
மதுவை ஒழிப்போம் என்கிற பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் டாஸ்மாக்  
கடை வைப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறார் என்பதை உதாரணமாக சொல்ல முடியும்!இவரைப் போல் பலர் இருக்கிறார்கள்.!

வெள்ளி, 20 ஜனவரி, 2012

முத்தம் கொடுத்தது எப்படி விஜய் ?

''எங்க அப்பா ஆசைப் பட்டார் நான் டாக்டர் ஆகணும்னு!ஆனா எனக்கு நடிகனாகனும்னு ஆசை!இப்ப நெனச்சுப் பாக்கிறேன்.நான் டாக்டராகி இருந்தா ..''
என்று சிரித்தபடியே ''எத்தனை பேரு....?''என்று வார்த்தைகளை முடிக்கவில்லை நடிகர் விஜய்!
''இந்திப் படங்களில் நடிக்கனும்னு ஆசை இல்லியா விஜய்?''
''ஏங்க்னா ,இங்க இருக்கிறது பிடிக்கலியா?''மறுபடியும் சிரிப்பு!
''மூக்கோடு மூக்கு உரசாம முத்தம் கொடுக்கிறது எப்படி?''
'நண்பன் ' பட லிப் லாக் பற்றி கேட்டதும் வெட்கம் வந்து விட்டது விஜய்க்கு!
இருந்தாலும் சிரித்தபடியே பதில் சொன்னார்.''கொஞ்சம் முகத்தை சாச்சு கொடுத்தா உரசாது!!''
''இதுவரை வந்த படங்களின் வசூலை நண்பன் படம் பிரேக் பண்ணிட்டதாக சொல்றாங்களே?''
''ஆமா ,சொல்லிக்கிறாங்க!''என்றதும் அவருடைய மானேஜர் பி.டி.செல்வகுமார் வசூல் புள்ளி விவரங்களை சொன்னார்.எந்திரனையும் தாண்டி இருந்தது.பல  இடங்களில் ஏழாம் அறிவையும் தாண்டி வசூல் இருந்தது.
''பஞ் டயலாக் பற்றி என்ன நெனைக்கிறீங்க?''
''சில படங்களில் அதிகமாவே இருந்ததா பீல் பண்றேன்..தேவைக்கு ஏற்ப இருந்தா போதும் ''!
''நண்பன் படம் பற்றி உங்க மகன் என்ன சொன்னான் ?''
''வீட்டுக்குள் நான் நுழைந்ததும் 'தலைவா'' என்று சொல்லி பாண்ட்டை கழற்றிவிட்டு தரையில் விழுந்து வணங்குகிறார்.என்ன பண்ண சொல்றீங்க?''என சிரிக்கிறார். 
   
முத்தம் கொடுத்தது எப்படி விஜய் ?

முதுமலையில் .....பயங்கரம்!

மாப்பிள்ளையின் விலை நூறு பவுன!
எப்படியெல்லாம் விலை பேசுகிறார்கள்?கசப்புடன் கோவையிலிருந்து ஊட்டி சென்றேன்!எலும்பை துளைத்தது குளிர்!
முதுமலை சென்று வனவிலங்குகளை பார்க்கலாம் .ஜாதி,மதம் பார்க்காத வரதட்சிணை கேட்காத உயர்ந்த குணமுள்ள அவைகளைப் பார்த்தால் மனிதன்  எவ்வளவு கொடிய மிருகம் என்பது தெரியும் என்பதற்காக ஒரு ரவுண்டு அடித்தேன்.
என்ன கொடுமை!
வனவிலங்குகள் நடமாடும் இடங்களில் வனத்துறையை சேர்ந்தவர்களே சருகுகளுக்கு நெருப்பிட்டிருக்கிறார்கள்.'சபாரி' சென்றபோது கண் கூடாக  பார்க்க நேர்ந்தது.அருகில் மான்களும் ,குரங்குகளும் !புலி காப்பகம் மிக மிக மோசமாக பராமரிக்கப் படுகிறது.ஏற்கனவே நீர் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கும் காட்டில் நெருப்பு மிக சுலபமாக் பற்றிக் கொள்கிற ஆபத்து இருக்கும் போது வனத்துறையை சேர்ந்தவர்களே நெருப்பு வைப்பது எதற்காக?
புரியவில்லை.!
நான் சென்றது ஜனவரி பதினெட்டு.
சபாரி செல்கிற வேனுக்காக காத்திருந்தபோது மலைசாதியை சேர்ந்த ஒருவரை   வனத்துறையை சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கிய பாவத்தையும் காண நேர்ந்தது.!அடிபட்டவருக்கும் ,அடித்த அதிகாரிக்கும் இடையே பலத்த வாக்குவாதம்.அந்த ஆள் குடித்துவிட்டு கலாட்டா செய்தார் அதனால் அடித்தேன் என்றார் அதிகாரி!
'பார்வையாளர்களில்' ஒருவர் ''அரசாங்கம் விற்பதை வாங்கி குடிக்கிறார்.கள்ள சாராயத்தை குடிக்கவில்லை .குடிப்பது குற்றம் என அரசு சொல்லவில்லை '' என்றதும் அந்த அதிகாரி உடனே பிளேட்டை மாற்றி போட்டுவிட்டார்!
'' வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தம்பதியை கிண்டல் செய்தார்.என்னையும் நக்கல் பண்ணினார்,அதனால் அடித்தேன்'' என எதிர்வாதம் செய்ய நாம் என்ன சொல்லமுடியும்?.அவர் குறிப்பிட்ட வெளிநாட்டு தம்பதியருக்கு தங்களை பற்றிதான் விவாதம் நடக்கிறது என்பது தெரியாமல் வேடிக்கை பார்த்ததுதான் மிகப்பெரிய வேடிக்கை!

உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார்?

எனது குடும்பத்தினருடன் ஒரு மங்களகரமான நிகழ்வுக்காக கோவை சென்றிருந்தேன்.கோவையின் குளிர் வரவேற்றது.மகிழ்ச்சியாக இருந்தது ''.ஈஷா மையம் போய் வாருங்கள் '' என சொல்ல நாங்களும் போனோம்.
வித்தியாசமான அனுபவம்!
தமிழர்களின் அடையாளமான காளை கம்பீரமுடன் படுத்திருந்தது.ஆத்தீகர்கள்  அதை சிவனாரது வாகனம் என்பார்கள்.அந்த காளை முகம் தியான லிங்கத்தின்  ஆலயம் நோக்கி பார்க்கிறது.ஆலயத்தின் நுழை வாயிலில் ஒரே கல்லினால்  ஆன உயரமான ஸ்துபி  இருக்கிறது .அதில் மும்மதங்களை குறிக்கும் வகையில் சின்னங்கள்.வியப்புடன் பார்த்தேன்.ஒரு சின்ன நெருடல் !
ஓம் என்பதை தமிழில் செதுக்காது வடமொழியில் செதுக்கி இருக்கிறாரே ஜக்கி குரு!  உலகத்தின் பலபகுதிகளில் இருந்து வருகிறவர்கள் தமிழின் மந்திர சொல்லை,தந்தைக்கு மகன் சொன்ன அந்த பிரணவ மந்திரத்தைத் தெரிந்து கொள்கிற  வாய்ப்பு இல்லாது போயிற்றே என்கிற வருத்தம் இருந்தது!
அரை உருண்டை வடிவிலான அந்த தியான ஆலயத்திற்குள் அமைதி தவழ்ந்தது. உள்ளே சென்றதும் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி என்னை ஆட்கொள்ளும்  உணர்வு.ஏற்பட்டது.தியான லிங்க ஆலயம் என சொல்கிறார்கள்.
மைய்யப் பகுதியில் உயரமான லிங்கம்.பிரகாரம் போன்ற 
சுற்று பகுதியில் செவ்வக வடிவில் அமையப் பட்ட சிறிய  குகை போன்ற அறைகள் இருக்கின்றனஅந்த .இடத்தில்   அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அந்த ஆலயம் கற்களால் ஆனது என்பதை குறிப்பிட வேண்டும்.ஒளி வெள்ளம் கிடையாது.அதே நேரத்தில் கும்மிருட்டு என சொல்லவும் முடியாது. ஒவ்வொரு அறையிலும் ஒருவர் அமரலாம்.வெளியிலும் அமரலாம்.லிங்கத்தை நோக்கி கண்களை மூடிக்கொண்டு தியானம் பண்ண வேண்டும்.எப்படி என்பதை நமக்கு முன்னதாகவே சொல்லிவிடுகிறார்கள். சப்தம் இல்லாமல் சிறு செருமல் ஒலி  கூட கேட்கவில்லை.அந்த அளவுக்கு அமைதி.அமைதி.அமைதி.பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு மெலிதான மணி ஓசை கேட்க,.ஓசையின்றி எழுந்து லிங்கத்தை வணங்கி வெளியேறுகிறோம்.அந்த பதினைந்து நிமிடத்தில் என்ன கிடைக்கிறது என்பதல்ல.இறைவனை உரக்க சொல்லி வணங்குவதால்  என்ன கிடைக்கப் போகிறது,அதைவிட இந்த தியானமுறை மனதிற்கு எத்தகைய  நம்பிக்கையை தருகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
சக்தியின் ஆலயமும் இருக்கிறது.எப்படி வணங்க வேண்டும் என்பதிலும் ஒரு யோக முறை இருக்கிறது.
அருவியென சுனை நீர் கொட்ட அந்த சிறிய நீர் தேக்கத்தில் ஒரு பெரிய லிங்கம் இருக்கிறது.அந்த சுனையில் இறங்கி லிங்கத்தை அணைத்தபடி  வணங்கி வருவதற்கு கட்டணம் உண்டு.ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாக அனுமதிக்கிறார்கள்.
ஜக்கி குரு அமைத்திருக்கிற இந்த ஆலயத்தில் வெளிநாட்டை சேர்ந்த சீடர்கள்  நமக்கு வழிபாடும் சொல்லித்தருகிறார்கள்.எப்படி வணங்க வேண்டும் என்பதையும் சொல்லித்தருகிறார்கள்.
அடுத்து நான் சென்றது மருதமலை முருகனின் ஆலயம்.
கூட்ட நெரிசல்.ஆண்களும்,பெண்களும் கலந்து நெருக்கியபடி வரிசையில் சென்று முருகனை வணங்கினார்கள்.இரைச்சல் இருந்தது.கணவன்-மனைவி ,காதலன்-காதலி, அரசியல்வாதிகள் என கலந்திருந்த அந்த கூட்டத்தில் போலியான பக்தி இருப்பதாகவே தெரிந்தது.உள்ளம் உருக வணங்க வேண்டிய ஆலயத்தில் கிண்டல்,கேலி,குடும்ப விவகாரங்கள் என கலந்திருந்தது வேதனையாக இருந்தது.
மருதமலையில் மட்டுமல்ல.எல்லா ஆலயங்களிலும் இதே நிலைதான்
ஆனால் ஈஷா மையம் விதிவிலக்கு.அமைதியை வழிபடுகிறார்கள் என்றே  சொல்வேன்!


சனி, 14 ஜனவரி, 2012

மிரட்டிய இயக்குனர்...!

எச்சில் இரவுகள் என் ஒரு படம்.பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கி இருந்தார்.படத்தில் வறுமையை பதிவு செய்திருந்தார்.பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கிய திறமைசாலிதான்.நடிகர் திலகமும் இவரின் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.எச்சில் இரவுகள் படத்திற்கு 'தேவி'வார இதழில் விமர்சனம் எழுதி இருந்தேன்.அப்போது அந்த வார இதழ் உச்சத்தில் இருந்தது.சரியாக விமர்சனம் எழுதுகிற பத்திரிகைகளில் தேவியும் ஒன்று
நான் விமர்சனத்தின் ஒரு பகுதியாக ஒரு புகைப் படம் வைத்திருந்தேன்.அந்த படத்தில் வாகை சந்திர சேகர் நடித்திருந்தார் இன்றும் எனது நெருங்கிய நண்பர்.

ஒருவன் மொட்டை அடித்து அவன் கைகளில் மழிக்கப் பட்ட முடி இருந்தது.இதுதான் அந்த படத்தின் லட்சணம் என்பதை சுட்டிக் காட்டுகிற படம்.

இதழ் வெளியாகிய மறுநாள்.

இயக்குனர் பிரகாசம் கோபத்துடன் 'மாலை முரசு 'அலுவலகத்துக்குள் நுழைகிறார்.அந்த அலுவலகத்திற்கு எதிரில்தான் எங்கள் அலுவலகம் இருந்தது. மாலைமுரசில் அவருக்கு வேண்டிய உதவி ஆசிரியர் இருந்ததால் அவரிடம் போய் அந்த விமர்சனத்தை எழுதியவன் யார்?என்று கேட்க,அவரோ ''உங்கள் ஊர் காரர் தான் ''என்று சொல்ல ,எதுவும் சொல்லாமல் எங்கள் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் போடி பக்கம் என நினைக்கிறேன்.

எதிரில் உட்கார்ந்தவர் ''நீங்க எந்த ஊர்?''என்றார்.

''மதுரை '' என்றேன்.என் நெற்றியை பார்த்தவர் எதுவும் பேசாமல் கோபத்தைமட்டும் விறைப்பில் காட்டிவிட்டு மறுபடியும் மாலைமுரசுக்கு போய் துணை ஆசிரியரைப் பார்த்து ''அவன் பாப்பானா,நெத்தியில் பட்டையெல்லாம் போட்டிருக்கான் .சொல்லிவைங்க என்னைப் பத்தி''என்று  வேகத்தை காட்டி இருக்கிறார்.

''அவர் பிராமின் இல்லிங்க"என்று எனது சாதியை சொல்லி இருக்கிறார்.

''நிறமா இருக்கானே?''இது இயக்குனரின் சந்தேகம்.''நம்ம ஆளா இருந்தும் இப்படி எழுதிப் பிட்டானே ''என குமுறலுடன் வெளி ஏறி இருக்கிறார். கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் என்னுடன் பேசாமல் இருந்தார். ஒரு பத்திரிகையாளனுடன் பகை பாராட்டுவது நல்லதல்ல.அவனின் கருத்து சுதந்திரத்தின்மீது கோபம் இருக்கலாம் .ஆனால் பகை இருக்கக்கூடாது.

என்ன நினைத்தாரோ அவரது ''சாதனை '' படத்தில் நடிகர் திலகத்துடன் பேசுகிற  பத்திரிகையாளர்களில் என்னையும் ஒருவனாக இணைத்து அவரது பி.ஆர்.ஒ. மூலமாக நட்பினை புதிப்பித்து கொண்டார். 

விஜய்க்கு எதிர்ப்பு!

''கொஞ்சம் வந்துட்டு போயேன்!''-நண்பன் கை பேசியில் அழைத்தான்.
''எதுவும் விசேசமா?'' என்றேன்.
''நேர்ல வா ,பேசலாம்''
''உடனே வரணுமா?கொஞ்சம் வேலை இருக்கு,நடிகர் விஜய் வீட்டுக்கு போலீஸ்  காவல் போட்டிருக்கு.விசாரிச்சிட்டு இருக்கேன்.நண்பன் படத்தில அவருக்கு 'பஞ்சவன் பாரிவேந்தன் 'என்கிற பேர்.அது எஸ்.ஆர்.எம்.காலேஜ் பச்சமுத்துவை கிண்டல் பண்ற மாதிரி இருக்குன்னு அவருடைய ஜனநாயக கட்சிக்காரங்க பீல்  பண்றாங்களாம்.அதை பத்திதான் விசாரிச்சிட்டு இருக்கேன்.முடிச்சிட்டு வந்திறேன் .நீ எங்கே இருக்கே?''
இடம் சொன்னான்.
ஒரு மணி நேரம் கழித்து அவன் இருந்த இடம் போய் சேர்ந்தேன்.
மகிழ்ச்சியாக இருந்தான்.
''என்னடா பொங்கல்ன்றதால நீயும் பொங்கிட்டியா? ஏகப்பட்ட சந்தோசமா இருக்கியே,அரசு அதிகாரியா ஆகிட்டியா?''என்றேன்.
''இல்லப்பா ......'' சொல்ல தயங்கினான்.
'என்னடா ..வரச்சொல்லிட்டு இப்படி ஊமைச்சாமியா சிரிச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?''
''அதுக்கு இல்ல மணி.அடுத்த வீட்டுப் பொண்ணு என்ன பார்த்து சிரிக்குது.லவ்னு நினைக்கிறேன்.எப்படி மூவ் பண்றதுன்னு தெரியல.அதான் உன்கிட்ட பேசலாம்னு வரச்சொன்னேன்!''
எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ..ஒரு பொண்ணு சிரிச்சிட்டா உடனே காதல்னு நினைச்சு மனசுக்குள்ள கோட்டையை கட்டிடறதா ?' 'எதுக்காக சிரிச்சாங்கிறது உனக்கு தெரியுமா நீ எதுவும் சிக்னல் கொடுத்தியா?''என்றேன்.
பதறிப்போனான்.''அப்படி எல்லாம் இல்லப்பா?''
காரணம் இல்லாமல் ஒரு பெண் சிரிக்கிறாள் என்றால் அது காதலாகவும் இருக்கலாம்,அல்லது வேறு தேவை அவளுக்கு இருக்கலாம்.அது எது என்பதை அவள் சொன்னால் தான் தெரியும்..
''சரி..அவசரப் படாதே..மறுபடியும் அவ சிரிச்சா பேசிப்பாரு.நீயா சிக்னல் கொடுத்திறாதே''என்றேன்.
''அப்ப மாடிக்கு போறேன்.அங்கதான் என்ன பார்த்து சிரிச்சா ..நீ இங்கேயே இரு. ''என்று சொல்லி விட்டு மாடிக்கு போய்விட்டான்..அம்மாவும் அப்பாவும் வெளியே  போயிருக்கிறார்கள்.அவனுக்கு வசதியாகிவிட்டது.
அந்த பெண் அவனுக்காக காத்திருந்தாள்.இவனும் சந்தோசமாக ஹாய் சொல்ல அவளும் பதிலுக்கு ஹாய் சொலிவிட்டு இவனிடம் பேச பய நொறுங்கிப் போய் வந்தான்.அவனுடைய சந்தோசம் காணாமல் போய் விட்டது.  
உச்சு கொட்டியபடியே வந்தவன்''  விஜய் படத்துக்கு அஞ்சு டிக்கெட் வேணுமாம். என்கிட்டே சொன்னா வாங்கித் தந்திரும்னு அவங்க அம்மா சொன்னாங்களாம்.அதான் சிரிச்சிருக்கு.அது பேசுறதுக்குள்ள நான் கீழே வந்திட்டேன்கிறதால அந்த பிள்ளையினால சொல்ல மாட்டாம அவங்க வீட்டு மாடியிலேயே காத்திட்டிருக்கு'' என்று கசப்புடன் பேசினான்.
ஆறுதல் சொன்னேன்.அது நாளைக்கு உண்மையாகவும் மாறலாம்.
''கவலைப் படாதே!டிக்கெட் வாங்கி கொடுத்திட்டின்னா  அதுவே நாளைக்கு காதலாவும் மாறலாம்''என்று சொல்லி விட்டு நடையை கட்டினேன்.


அண்ணன் பொண்டாட்டியும் ,தம்பி பொண்டாட்டியும்....

எனது நண்பர் என்னிடம் பிதகோரஸ் தேற்றம் பற்றி கேட்டபோது தெரியாது  என்று சொன்னேன்.தெரியாததை தெரியாது என்று சொல்வதுதான் மரியாதை .சிலர் கவுரவத்திற்காக பொய் சொல்வது உண்டு.ஏற்றக் கோணம் பற்றி ஒருவர் கேட்டதுக்கு என் நண்பர் தெரியும் என சொல்ல ,அதில் சந்தேகம் ஒன்றை கேட்டுவிட்டார்! .நண்பர் சாமர்த்தியமாக ''எப்பவோ படித்தது அல்ஜீப்ராவின் விதிகள் நினைவில் இல்லை'' என்றார்.!அல்ஜீப்ராவுக்கும்
,பிதகோரசுக்கும் என்ன தொடர்பு என்பது கூட தெரியாமல் சொல்லிவிட்டார் .
நல்ல வேளை,கோணம் கேட்டவர் அவரை மேலும் கிண்டாமல் அமைதியாக இருந்துவிட்டார்.அது நாகரீகம்.என்னிடம்

பிதகோரஸ் தேற்றம் கேட்ட நண்பரோ கிண்டலாக ''கழுதைக்கு தெரியுமா ,கற்பூர வாசனை?''என என்னைப் பார்த்து சிரித்தார்.
எனக்கு கோபம் வருமா வராதா? வந்தது சண்டை!.என்னதான் நட்பு என்றாலும்  அதற்கு ஒரு எல்லை உண்டு.அல்லவா!
அவர் சொன்ன பழமொழி அல்லது சொலவடை என்னை ரொம்பவே பாதித்தது.  எதற்காக இப்படி சொல்கிறார்கள்?
கழுதைக்கு கற்பூர வாசனை தெரிந்து என்ன ஆகப் போகிறது?அது கற்பூரம்  காட்டப் போகிறதா என்ன?கற்பூர வாசனையை அது நுகர முடியாதா?கழுதைக்கு நிகராக மனிதனை சொல்லவேண்டும் என்கிற வக்கிரம்தான் இதற்கெல்லாம்  காரணம்.ஆனால் கழுதையின் பொறுமை,மனிதனுக்கு இல்லை!
இன்னொரு மோசமான பழ மொழி ''அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி,தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி ''என்பது.
பெண்ணை எவ்வளவு கேவலமாக நினைக்கிறது ஆண் சமூகம் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு.இதற்கு என்னதான் விளக்கம் சொன்னாலும் படித்தவர்களால் அந்த விளக்கத்தை ஏற்று கொள்ள இயலாது.பெண்களை கொச்சைப் படுத்துவதை ஆதி காலம் இருந்தே செய்துவருகிறார்கள். ஆணுக்கு கீழேதான் பெண்கள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி' என சிலர் வேறுவகையில் நியாயப் படுத்துகிறார்கள்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

குடிக்க சொல்லி சினிமா?

குடியின்றி அமையாது உலகு ....சரக்கு போட்டுட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்தபோது மூளைக்குள் முளைத்ததுதாங்க இது.!
சினிமா படம் ரெடி!''நாம்ப சரக்கு அடிக்கிறது விரும்பிதான்.அடுத்தவன் சொல்லி யாரும் குடிக்கல.இன்னிக்கி சினிமாவை விட மிகப் பெரிய பொழுது போக்கு அரங்கு டாஸ்மாக் கடைதான்.சூப்பர் நடிகர்களுக்கு இல்லாத ரசிகர் பட்டாளம்  டாஸ்மாக் கடைக்குத்தான் இருக்கு.அதனாலதான் ''மதுபானக் கடை ''என்கிற பெயரில் சினிமா ரெடியா இருக்கு!''என்கிறார்கள் இந்த படத்தை எடுத்திருக்கிறவர்கள்.
''விரும்பி கொண்டாடி குடிக்கிறோம்,ஆனா குடிக்காதேன்னு மது ஒழிப்பு போராட்டம் நடத்துறாங்க .ஏன்யா இந்த முரண்பாடு?''என்று கேட்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள்.மூன்று மாதம் டாஸ்மாக் கடையில் தவமிருந்து சம்பவங்களை சேகரித்திருக்கிறார்கள்.நடிகர்களும் அசல் குடிகாரர்கள்தானாம்.மாண்டேஜ் மீடியா என்கிற நிறுவனம் எடுத்துள்ள இந்த படத்தில்  காதலும் இருக்கிறது..காமடி படம் என்கிறார்கள்
குடிப்பது கெடுதல்னு சொல்லி வைன் ஷாப் திறக்க அரசே அனுமதி தரும்போது  குடி அதனால் காதல் வரும்னு நாங்க சொல்றது தப்பான்னு காட்டுவாங்க போலிருக்கு.
2010 - 2011 ல் டாஸ்மாக் வருமானம் 22 ஆயிரம் கோடி இருக்கும் என்கிற தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலை விட அதிக ஆதாயம் குடியில தான் கிடைக்கிறது என்று சத்தியம் பண்ணுகிறார்கள்.சத்தியம் எதுக்கு?அரசாங்கமே  அந்த வருமானத்தில தானே 'ரன்' ஆகிட்டிருக்கு.
இந்த படத்துக்கு அரசு வரி விளக்கு கொடுத்தாலும் ஆச்சரிய படுறதுக்கில்ல. 

வெள்ளி, 13 ஜனவரி, 2012

ஆரியன் ---யார்?

இந்தியாவின் வரலாறு என்கிற புத்தத்தை அண்மையில் வாசித்தேன்.சோவியத்தை சேர்ந்த அன்தொரினவா,போன்காரட்லேவின் என்பவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
அதில் அவர்கள் இப்படி சொல்கிறார்கள்;
''ஆரியர்கள் என்று கருதப்படக் கூடியவர்கள் பண்டைய ஈரானியர்களும் ,இந்தோ-ஆரியர்களும்தான் அவர்களே தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்..வாழ்ந்த இடங்களை ஆரிய வர்த்தம்,ஆரிய பூமி என்று சொல்லிக் கொண்டார்கள்.ஆரிய என்கிற சொல் ''அரி'' .என்ற சொல்லுடன் தொடர்புடையது.வேத காலத்தில் இந்த சொல்லுக்கு 'வெளிநாட்டான்,வேற்றான்,என்று பொருள்.ஆரியன் என்ற சொல் ''வெற்றாருடன் இணைந்தவன்,அவர்களுக்கு இணக்கமானவன் என்று பொருள் பட்டது.பிற்காலத்தில் 'நல்குடிப் பிறந்தவன்'என்ற பொருள் இந்த சொல்லுக்கு ஏற்பட்டது என அந்த புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

பொங்கல் திரைப்படங்கள்...!

முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி,திருவிழா நாட்களில் குறைந்தது ஏழு படங்களாவது திரையிடப்படும்.ஆனால் இப்போது இரண்டு ,அல்லது மூன்று படங்கள் என எண்ணிக்கை குறைந்துவிட்டது.காரணம் பயம்.பெரிய படங்களுக்கு முன்னாள் நமது படங்கள் ஓடாமல் போய் விடுமோ என்கிற அச்சம்.ஆனால் பெரிய படங்களின் தலைவிதி பல நேரங்களில் சோகத்தில்  முடிந்துவிடுகிறது.இந்த சோகத்தை மறைத்து வெற்றி வெற்றி என பொய்யாக சொல்லி நடிகர்களின் மானத்தை காப்பாற்ற வேண்டியதாக இருக்கிறது.
இளைய தளபதியின் அப்பாவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலைவருமான எஸ்.ஏ.சந்திர சேகர் மனம் திறந்து போய் சொல்வதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
''நாங்கள் அத்தனை கோடி வசூல்,மெகாகிட்,என சொல்வதெல்லாம் படத்தை ஓட்டுவதற்கான வேலையே தவிர உண்மை இல்லை ''என பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அவரது கூற்றுப் படி பார்த்தால் மங்காத்தா ,வேலாயுதம் ஆகிய படங்களும் நட்ட பட்டியலுக்கு போகின்றன.
தயாரிப்பாளர்களும் ''எல்லாம் நிஜமே.நட்டப்பட்டிருக்கிறோம் ''என்கிறார்கள்.
சரி இனி கதைக்கு வருவோம்.
இந்த பொங்கலுக்கு மூன்று படங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
ஷங்கரின் ''நண்பன்'' இந்தி படத்தின் ரீமேக் .விஜய்,ஸ்ரீகாந்த்,ஜீவா ,சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்ஹீரோயின் இலியானா மைனஸ் .  .காமடி கலந்த மூன்று மணி நேரப் படம்.சிலருக்கு சங்கடமாக இருக்கலாம்.பிற்பாதியில் தேவையில்லாத காட்சிகள் இருப்பதாக ஒரு 'பீல்' இருக்கிறது.ஆனால் 'போர்' அடிக்காமல் போகிறது.எனக்கு முழு திருப்தி என்றே சொல்வேன்.அடுத்து லிங்குசாமியின் 'வேட்டை''.பக்கா கமர்சியல்
.மாதவன்,ஆர்யா,சமீரா,அமலாபால்  என கல கல பார்ட்டி. நண்பன் ,வேட்டை இரண்டு படங்களும் பொங்கல் விடுமுறைக் கால வசூலை அள்ளிக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த படங்களுடன் ''கொள்ளைக் காரன்''என்கிற படமும் வெளியாகிறது .விதார்த்,சஞ்சிதா என்கிறனடிகர் நடிகையுடன் தைரியமாக குதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தமிழ்செல்வன்.குறைகள் இருந்தாலும் கதை சொல்லி இருக்கிறார்.வரவேற்கப் படவேண்டியவர்.முத்தை இரண்டு படங்களின் லாப நட்ட கணக்கு நான்கு வாரங்களில் தெரிந்துவிடும்.


வடக்கு நோக்கி நகரும் தமிழ்சினிமா..!

பெருமையாக இருந்தது,இயக்குனர் லிங்குசாமி சொன்னதை கேட்கும்போது...
''வேட்டையை  இந்தியில் எடுப்பதற்கு வடநாட்டவர் ஆர்வமாக இருக்கிறார்கள்.விரைவில்முழுவிவரம்தெரியும்.அமிர்கான்,ரன்பீர்கபூர்  நடிக்கலாம்.வேட்டையைப்  பார்த்த வடநாட்டவர் இந்திப் படம் பார்க்கிறமாதிரியே இருக்கிறது என பாராட்டினார்கள்''என்றார் லிங்கு.
தொடர்ந்து ''நம்மூர் பிரகாஸ்ராஜ் தான் இப்போது இந்தியில் பெரிய வில்லன் .வேட்டையை தொடர்ந்து வரிசையாக எனது படங்களை இந்தியில் ரீமேக் பண்ணப் போகிறேன்'' என்றார்.
இந்தியில் இருந்து ஒரு காலத்தில் மெட்டுகளை நாம் இறக்குமதி செய்தோம்.அதை மாற்றி தமிழ் மெட்டுகளை இந்திக்காரர்கள் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அதற்கு காரணம் இசைஞானி இளையராஜா.
அடுத்து இந்தியில் ஆதிக்கம் செலுத்திவருபவர் நம்மவர் இசைப் புயல் ஏ.ஆர்,ரகுமான்.ஒளிப்பதிவாளர்களில் நம்மவர்கள் கொடிதான் அங்கு பறக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் என்றால் கொண்டாடுகிறார்கள் வடஇந்திய நடிகர்கள்.இப்படி  மெது,மெதுவாக வடக்கு நோக்கி நகரத் தொடக்கி இருக்கிறது தமிழ் சினிமா!
தொழில் நுட்பரீதியில் நம்மவர்களை அவர்கள் சுவீகரிக்கிறார்கள்.
அதே நேரத்தில் நமது நாயக நடிகர்களின் வடஇந்திய நுழைவை அவர்கள் அனுமதிப்பதில்லை.கமல்,ரஜினி இருவரையும் கொண்டாடும் அவர்கள் அவ்விருவரையும் ஒரு எல்லைவரைதான் அனுமதிக்கிறார்கள்.
இப்போது கூட பிரகாஷ்ராஜின் பிரவேசத்திற்கு அவரது புதிய மனைவி போனிவர்மா தான் காரணமாக இருக்கிறார்.போனிவர்மா அங்கு சிறந்த டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக இருப்பதால் அது சாத்தியமாகி இருக்கிறது.
ஆக நமது வடநாட்டுப் பயணம் அவர்களுக்கு நாம் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தின் வலிமையை பொருத்து இருக்கிறது என்பதுமட்டும் உண்மை.
லிங்குசாமி சொல்வது நமக்கு பெருமையாக இருப்பதற்கு காரணம் நமது தமிழ்ப் படங்களும் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பதுதான்.டபான்கை ஒசத்தியாக நினைத்து ஒஸ்தி என கொண்டாடிய கேவலம் தொடரவேண்டாம் என்பது எனது ஆசை!

வியாழன், 12 ஜனவரி, 2012

கலைஞரும் தேவிகுளம் பீர்மேடும்....!

''அண்ணே வணக்கம்னே?''
''வணக்கம்பா!நல்லாருக்கியா?''
''இருக்கேன்னே!தேவிகுளம் பீர்மேடு நமக்கு சொந்தம்,அத மீட்கணும்னு கலைஞர் பேசி இருக்காரே,என்ன திடீர்னு?''
''அதாம்பா எனக்கும் புரியல!எத்தன தடவை முத மந்திரியா இருந்தாரு.அப்பலாம் ஒன்னும் சொல்லாம இப்ப வந்து கிளப்பிட்டிருக்காரே , அந்த அளவுக்கு ஞாபக சக்தி இல்லாமையா போச்சு?''
''அண்ணே,அந்த குளமும் மேடும்   நமக்கு சொந்தம்கிறது அவரு பதவியில  இல்லாம இறங்கினதுக்கு  பிறகுதான் ஞாபகத்துக்கு வந்திருக்கு.இன்னும்  என்னென்ன ஞாபகத்துக்கு வரப்போகுதோ,தெரியல!''
''கச்சத்தீவ பத்தி எதுவும் சொல்லலியே?''
''அத அவரு மந்திரியா இருந்தப்ப இந்திரா காந்தி சொல்லி தாரை வார்த்ததாச்சே! இப்ப சென்ட்ரலில் அவரு கட்சி பதவியில் இருக்கிறதால ஒன்னும் சொல்ல மாட்டாரு.அங்கேயும் டவுசரு கழ ண்டுச்சுன்னா ஞாபகத்துக்கு வந்திரும்னு நெனக்கிறன் ஞாபகத்துக்கு வர்றதுக்கு எதெது காலியாக வேண்டியிருக்கு!அரசியல்னா இவ்வளவு கஷ்டம் இருக்குதான்னே ?''
''இருக்கும்ல!எவ்வளவு பெரிய வரவு செலவ பார்க்கணும்!நாட்ட பார்க்கணும்.வீட்ட பார்க்கணும்.மக்களை பார்க்கணும்.சொந்த மக்களையும்  பார்க்கணும்.தொறட்டு புடிச்ச வேலைடா!''
''ஏண்ணே,குளமும் மேடும் நம்மதுன்கிறதால போராட்டம்,கீறாட்டம் நடத்துவாரா ,எப்படியாவது மீட்டிரணும்னே!''
''ஐடியா வச்சிருப்பாருப்ப!உண்ணாவிரதம்,மனுஷ சங்கிலின்னு போராட்டம் நடத்துனா நாடு கலங்கிடாது? ''
''கரெக்ட் !ஈழத் தமிழர் பிரச்னையில அப்படித்தானே நடத்தினாரு.முள்ளிவாய்க்கால் அழிவுல எவ்வளவு பெரிய போராட்டம்  நடத்தி  நம்ம தமிழ் சனங்கள காப்பாத்தினாரு.அத மாதிரி போராட்டம் நடத்தி குலத்தையும்,மேட்டையும் மீட்டிருவாரு!''
''தம்பி!நீ பேசுறத பார்த்தா நக்கல் பண்ற மாதிரி தோணுதே!''
''பின்ன என்னண்ணே,இத்தன வருசமா சும்மா இருந்திட்டு திடீர்னு கிளம்புறார்ணா  ....நம்மள மாங்கான்னுதானே நெனக்கிறாரு .நீங்களே  யோசிச்சு  பாருங்க நான் சொல்றது சரின்னு தோணும்!''   

புதன், 11 ஜனவரி, 2012

முந்தானைக்குள் முகிழ்த்த....!

''எங்கே நான் எய்த கணைகள்'' என கவிஞன் கேட்கிறான்.
''எங்கேயும் போய்விடவில்லை.இங்கே தான் இருக்கிறேன்''என அவளது இரு புருவங்களுக்கு கீழ் நின்று கொண்டு அவனையே பார்க்கின்றன.பார்த்ததும் மட்டும் இல்லாமல் அவனையே திருப்பி தாக்கினவாம்.
காதலன் -காதலி பார்வை பரிமாற்றத்தை இப்படியும் சொல்லலாம் அல்லவா!
''பாடம் படித்து நிமிர்ந்த விழி ,தனிற் பட்டுத் தெறித்தது மானின் விழி ''-இது பாவேந்தன் பாரதிதாசன்.
''கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசியம்''-இது பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி.
''பவள இதழ்களுக்குள் நிலவு விரிந்தது''-சொன்னவன் அம்பிகாபதி.
அடடே..நீ இப்படியா சொல்கிறாய் நான் சொல்கிறேன்,''பவள  இதழ்களுக்குள்  நிலவு பாய்ந்தது'' என்று சொல்லிவிட்டு  அம்பிகாபதியை இளக்காரமாக பார்க்கிறான் பாரதி.''இப்ப என்ன சொல்வாய்?
பொதுவாக காம ரசனையில் பாரதி அனுபவித்தவன்.
காதல் பேச்சு என்றால் என்ன என்பதற்கு கவியரசு கண்ணதாசனிடம் விளக்கம் கேட்டுக் கொள் என்று சொல்லி விட்டு போய் இருக்கிறானே! 
''பாதி நடுக் கலவியில் காதல் பேச்சு''என்று பாரதி சொல்ல ,அதற்கு மற்றவர்கள் மண்டையைப் போட்டுக் குழப்ப தலை வழுக்கை ஆகியதுதான் மிச்சம்.
''கலவியின் நடுவில் எவனுக்குய்யா பேச்சு வரும்,அந்த உச்சக் கட்டத்தில் என்னத்தையா பேச முடியும்'' என்றுதான் கேட்டார்கள் கண்ணதாசன்தான் சொன்னான்.''அடே மனிதர்களே,அந்த நேரத்தில் உச்சத்தின் எச்சமாக ஒலிக் குறிப்புகள் உன்னையும் அறியாமல் உனக்கும் அவளுக்கும்  வருமே அதுதாண்டா காதல் பேச்சு!முனகலும் பேச்சுதான்.கண்ணே மணியே என்பதெல்லாம் மயக்கு மொழியடா ''என்று புதிய விளக்கம் சொன்னான்.
விளக்கத்தைக் கேட்டு வியந்து போனவர்கள் ஏராளம்.
அர்த்த ராத்திரியை அர்த்தமுள்ள ராத்திரியாக மாற்றுபவள் மனைவிதானே!
அவளிடம் பெறுகிற இன்பம் விலை மதிப்பற்றது.மனைவியை தவிர்த்து பிற பெண்ணிடம் சுகிப்பது உன் உடல் சூட்டை தணிக்க.அது ஆபத்தும் கூட!அதனால்தான் விலை மாது என்கிறார்கள்.
எனக்கு ஒரு கவிதை எழுத ஆசை.
''முந்தானைக்குள் முகிழ்த்த பொற்கலசம் என பூந்தனங்கள்'' என அடி எடுத்திருக்கிறேன்.இது பிழையா ? 

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

சக மனிதனுக்கு,

சிந்திக்க,சிரிக்க தெரிந்தவன் மனிதன் என்கிறோம்
மனம் விட்டு சிரிப்பவர்கள் எத்தனை பேர்?
பிறர் நிலை கண்டு நகைப்பவர்கள் எத்தனை பேர்?
ஒப்புக்காக சிரிப்பவர்கள் எத்தனை பேர்?
சிரிக்கவேண்டுமே என்பதற்காக சிரிப்பவர்கள் எத்தனை பேர்?
இப்படி .....நிறைய சொல்லலாம்?
மனிதனாக சிரிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் எனது கேள்வி?
கலைவாணர் சிரிப்புகளை வகைப் படுத்தி பாடி இருக்கிறார்.
அவரது பாடலின் பொருள் முழுமையாக  உணரமுடியாத பருவம் தாண்டி வந்துவிட்டதால் ,அந்த பாடலுக்குரிய ஆட்களை என்னால் இப்போது பார்க்க முடிகிறது.
வஞ்சக சிரிப்பு அரசியல் வாதிகளிடம் நிறைய!சிரித்துக் கொண்டே பள்ளம் தோண்டுவதில் கில்லாடிகள்.
சினிமாக் காரர்களிடம் எல்லாமே பொய்யானவைதான்.சிரிப்பதிலும் காசு பார்த்து விடுகிறார்கள்.
மதவாதிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஆன்மிகம் என்கிற பெயரில்  நமது படுக்கை அறை வரை வந்து நம்மை ஊர் சிரிக்க வைத்துவிடுவார்கள்.
பிள்ளையைப் பார்த்து பெற்றவன் உள்ளுக்குள் அழுதபடி வெளியில் சிரிக்கிறான்.இந்த சமுதாயத்தில் மகனை உயரத்தில் வைக்க முடியவில்லை என்கிற கவலை அதிகம் இருக்கிறது.காரணம் பண பலம் உள்ளவனால்தான் உயரம் போக முடிகிறது.அரசியல் பலம்,ஆள் பலம்,பணபலம் உள்ளவன்தான் இன்று மனிதன்.பெரிய மனிதன்.
நானும் நீங்களும் கூட பொய்யான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம்.
மனம் விட்டு சிரித்திருப்போமா?
பிறர் நடவடிக்கை நம்மை சிரிக்க வைத்திருக்கும். நாமாக சிரித்திருப்போமா?
''அவனா சிரிச்சுக்கிறான் பாரு,பைத்தியம்''என்பார்கள். மனிதனாக சிரிப்பது எப்போது?
எனது கிறுக்குத்தனமான கேள்விக்கு பதில் சொல்வீர்களா?


பத்திரிகையாளன் படும் பாடு!

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்பர் பத்திரிகைகளை!
தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,நல்வழிகள் காட்டுவதும் அதன் கடமை என சொல்லலாம்.ஆட்சிகள் அமைப்பதும் ,மாற்றிக் காட்டுவதும் எழுத்துகளின் வலிமை!மக்களை எழுச்சியுற செய்வதும் ,அவர்களின் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதும் பத்திரிகைகளினால் இயலும்.
ஆக ''நான் ஒரு பத்திரிகையாளன்''என்பது எனது பெருமை!
அவன் சில நேரங்களில் பந்தாடப் படுவதுதான் கொடுமை.
நானும் பந்தாடப்பட்டவர்களில் ஒருவன்!
மதுரையில் மாலைமுரசு நாளிதழில் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்த சம்பவம்.
மதுரை வந்த இந்திராகாந்திக்கு திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினார்கள்.
அந்நாளில் அவர் பிரதமராக இல்லை.விமான நிலையத்திலிருந்து தல்லாகுளத்தில் இருக்கிற விருந்தினர் மாளிகைக்கு சென்று   கொண்டிருந்தார்.
திறந்த காரில் வந்த அவருடன் பழ.நெடுமாறன் ,என்.எஸ்.வி.சித்தன் ,அப்துல்காதர் ஆகியோரும் இருந்தனர்.மேனாள் பிரதமரின் 'கான்வாயில்''பத்திரிகையாளர்கள் இருந்த காரும் வந்தது.
தெற்கு வாசல் காவல் நிலையம் தாண்டி தெற்கு வெளி வீதியில் திரும்பியதும்  நூற்றுக் கணக்கில் திரண்டிருந்த திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.திடீர் என இந்திரா காந்தி பயணித்த கார் நோக்கி சரமாரியாக கற்கள் வீசப் பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர் பழக்கடை பாண்டிஎன்பவர் .
கல் வீச்சில் இந்திரா காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலையணைகளால்  அவரை மறைத்து நெடுமாறனும் மற்றவர்களும் கவிழ்ந்து அரண் அமைத்துக் கொண்டனர் .நெடுமாறனின் யுக்தி!இதனால் இந்திரா காயமின்றி தப்பித்தார்..ஆனால் அப்துல்  காதருக்கு ஒரு கண் போய் விட்டது.நாங்கள் பயணித்த கார் சேதப் பட்டு நின்று விட்டது.எனக்கு வலது முழங்காலுக்கு கீழே ரத்தக் காயம்..அந்த நேரத்தில் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை.உயிர் பயம் என்பார்களே அன்று அனுபவித்தேன்.
உயிர் பிழைக்க ஓடவேண்டியதாகிவிட்டது..நீண்ட கம்புடன் பழக்கடை பாண்டி  கமான்ட் பண்ணிக் கொண்டிருந்தார்.அந்த அவசரத்திலும் ''எங்களையுமா அடிக்க சொன்னிங்க பாண்டி?''என்று கேட்டபடியே சந்துக்குள் ஓடினேன்.
பஸ்கள்  இல்லை கலவரம் காரணமாக் நிறுத்தப் பட்டுவிட்டன..நடந்தே விருந்தினர் மாளிகை சென்றேன்.
அங்கு காங் .வழக்கறிஞர் லக்ஷ்மி   நரசிம்மனிடம் நிகழ்ந்தவைகளை  சொன்னேன்.மற்ற காங்.பிரமுகர்களும் கதறியபடி வந்தார்கள்.
 மறுநாள்  எந்த நாளிதழிலும் வந்திராத அரிய புகைப் படத்தை நண்பர் ஒருவரிடம் வாங்கி  மாலைமுரசில் பதிவு செய்தேன்.
அதுதான் எனக்கு வினையாகியது.
எஸ்.பி.சி.ஐ.டி/யில் இருந்து அழுத்தம்!''அந்த படத்தின் நெகட்டிவ் கேட்டார்கள். கொடுக்க இயலாது என ஆபிசில் சொல்லி விட்டார்கள்.இன்ஸ்பெக்டர் விடுவதாக இல்லை நானும் கொடுப்பதாக இல்லை.
விளைவு?
இந்திராகாந்தி கொலை முயற்சி வழக்கில் நானும் ஓர் சாட்சி.ஆனால்
என்னிடம் எதுவும் விசாரிக்காமல்,கேட்காமல் நான் சொன்னதைப் போல் வாக்குமூலம் தயாரித்து அதை சேர்த்தும் விட்டார்கள்.
''என்ன சார் அக்கிரமமா இருக்கு!நான்அப்படி எதுவும் சொல்லவில்லை என்று  கோர்ட்டில்  சொன்னால் என்ன செய்வீர்கள்?'' என்றேன்.
 மிகவும் அலட்டிக் கொள்ளாமல்'' நாங்கள் உங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டால்தானே?''என்றார் இன்ஸ்பெக்டர்.
அப்படியானால் ???
இப்படிதான்  இருக்குமா போலிஸ் அறிக்கை?

சனி, 7 ஜனவரி, 2012

'தானே'புயலும் ,தமிழ் நடிகர்களும்....!

நானும் யோசித்து ,யோசித்து சோர்ந்து போனேன்.உங்களில் யாருக்காவது விடை தெரிகிறதா என்று பார்க்கலாம்!
விடுகதை இல்லை.விளக்கம் எதிர்பார்க்கிறேன்.
ஏறத் தாழ சுனாமிக்கு இணையான பேரழிவு என எல்லோருமே சொல்கிறார்கள்.மின் இணைப்பு இன்றி இருளில் வாழ்க்கை.
பாம்பு வருமோ ,பூரான் வருமோ,நாய் வருமோ நரி வருமோ என்கிற அச்சம்.
தூக்கம் தொலைந்து துக்கம் வட்டமிடும் கண்கள்.
பசி பட்டினி.பச்சிளம் குலக் கொழுந்துகளுக்கு பாலுக்கும் வழி இல்லை.
பாதைகளும் சீரில்லை.பயணிப்பதற்கு கால்களில் வலு இல்லை.
இப்படி கதை கதையாய் சொல்கிறார்கள்.அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் முற்றுகை இடப் படுகிறார்கள்.நிவாரண வேலைகள் துரித கதியில் நடக்கவில்லை என்கிற குற்றசாட்டு உரத்து கேட்கிறது.
ஆனால்......................?
இந்த அவலக்குரல் ரஜினியை எட்டவில்லையா?
கமலுக்கு கேட்க வில்லையா?
விஜய்க்கு கேட்கவில்லையா?
எல்லாவற்றுக்கும் மேலாக  நடிகர் சங்கத் தலைமைக்கு  கேட்க வில்லையா? 
கடந்த ஆட்சியின் போது முதல்வர் நிவாரண நிதி என தேடி போய் கொடுத்தவர்கள் புதிய ஆட்சியில் புரியாதவர்களாக நிற்பது ஏன்?
என்ன காரணம்?
நடிகர்களுக்கு கொடுக்கும் மனம் இல்லை என சொல்ல முடியாது.சொன்னால்  நான் ஓர் முட்டாள்!
பின் ஏன் நடிகர்களின் பங்களிப்பு இல்லை.
முதல்வருக்கு வேண்டியவர்கள் பொறுப்பில் இருக்கிற தயாரிப்பாளர்கள் சங்கம் கூட வாய் திறக்கவில்லையே?
நிதி உதவுவதற்கு குறுக்குக் கட்டையை போட்டிருக்கிறார்களா?
யார் அவர்கள்?
அல்லது இவர்கள் என்ன உதவுவது,நான் என்ன கேட்பது என்கிற மனநிலையில்  அரசு இருக்கிறதா?
எதிர்க் கட்சி தலைவர் விஜயகாந்த் கூட வாய் திறக்கவில்லையே?மத்திய ,மாநில அரசுகளின் பொறுப்புகள் பற்றி அறிக்கை வாசிக்கும் இவர் நடிகர்களின் பொறுப்பு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?
என்ன மர்மம் இருக்கிறது?அரசின் அணுகு முறை தவறா?

விழிகளின் புணர்வு...!

எனக்கு கவிதை வராது.ஆனால் ரசிப்பேன் .எனது நண்பர் பின் வரும் கவிதையை சொன்னார்.புதுக் கவிதையாம்.
 ''விழிகளின் புணர்வு
இதய வாசலின் 
திறவுகோல்.!
உள்ளே இருப்பது,
நட்பா,காதலா?
கண்களைக் கேள்!''
இதன் பொருள் புரிநதாலும் கவிதையா ,இல்லையா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை!
நான் கண்ணதாசனிடம் மயங்கினேன்.வைரமுத்துவிடம் வசம இழந்தேன்! நான் ஓர் ரசிகன் அவ்வளவே!எழுதுவது கூட எனக்குத் தெரிந்ததை அப்படியே கொட்டிவிடுவதுதான்.எனது மனதில் அழியாத வரிகளாய் எத்தனையோ இருந்தாலும் அவை நிறம் மங்கிவிடலாம்.
ஆனால் வரிகளே இதயமாய் உருப்பெற்று உள்ளே இருப்பதை எப்படி அழிக்க முடியும்?
அவை நிறம் மாறா பூக்கள். 
வைரமுத்துவின் வைர எழுத்தாணியில் ஜனித்த வரிகள்! 
இதோ .....
'' மாண்புமிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா?
அயோத்திராமன் 
அவதாரமா?மனிதனா?
அயோத்தி ராமன் 
அவதாரமெனில் 
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன். 
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?

அயோத்திராமன் 
மனிதன்தான் எனில் 
கர்ப்பத்தில் வந்தவன் 
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா 
மசூதி இடித்தீர்?

போதும்
இந்தியாவில் 
யுகம் யுகமாய் 
ரத்தம் சிந்தியாயிற்று 
இனிமேல் சிந்த வேண்டியது 
வேர்வைதான்.

நம் வானத்தைக்
 காலம் காலமாய்க் 
கழுகுகள் மறைத்தன 
போகட்டும் 
இனிமேலேனும் 
புறாக்கள் பறக்கட்டும் ''
புறாக்கள் பறக்கின்றனவா? ஒவ்வொருவரும் தம்மைக்  கேட்டுக் கொள்ளவேண்டிய  கேள்வி!

நடிகர்கள் ஒற்றுமையாக இல்லை!

பாவ்லா காட்டுவது அல்லது இல்லாததை இருப்பது போல் காட்டுவது -___ நம்  நடிகர்களை விஞ்சுவதற்கு ஆளே கிடையாது.''நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் ,'' என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள்.ஆனால் உண்மையில் ஜென்ம வைரிகளாக் மனதிற்குள் உறுமியபடி  இருப்பார்கள்.
ஒரு முறை நடிகர் சூரியாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது சாதாரணமாக கேட்டேன்''நடிகர்களிடம் ஒற்றுமை இருக்கிறதா?''என்று!
வருத்தமுடன் சொன்னார்.''ஏனோ தெரியவில்லை,எப்போதாவது எல்லோரும் சந்திக்கிற போதுதான் பேச முடிகிறது..மற்ற மாநிலங்களை போல் இங்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டியதாக இருக்கிறது''என்றார்.
நடிகர் சங்கமும் இதைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை.என்பதுதான் வேதனைக் குரியதாக இருக்கிறது.பெரிய நடிகர்கள் என அழைக்கப் படுகிற கமல்,ரஜினி,விஜய்,விக்ரம்,அஜித்,சிம்பு மற்றும் முன்னணி நடிகர்கள்,நடிகைகள் யாரும் சங்க கூட்டங்களுக்கும் வருவதில்லை.
நளினி,பசி சத்யா,குயிலி, ஸ்ரீப்ரியா மஞ்சுளா இவர்களைத்தான் ரெகுலராக  பார்க்க முடியும்.இவர்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான்!
நடிகர் சங்க கட்டிடம் எங்கே இருக்கிறது என்பதைக் கூட பெரிய நடிகர்கள்  மறந்திருப்பார்கள் .இப்போது அந்த இடம் இடிக்கப் பட்டு தரை மட்டமாக இருக்கிறது என்பதுகூட தெரியுமா என்பது தெரியவில்லை.அடுக்குமாடி கட்டிடம் வரப்போகிறதாம் .''மிகப் பெரிய திட்டம் வைத்திருக்கிறோம்''என்கிறார்கள் தலைவர் சரத்குமாரும்,செயலாளர் ராதாரவியும்!.தனியார் வசம் தற்போது இருக்கிறது..நடிகர்களிடம் ஒற்றுமை இருந்திருந்தால் அவர்கள் சார்ந்த  திரை உலகத்தின் சம்பள பிரச்னைகளிலும்  கவனம் செலுத்தி இருப்பார்கள்.
வளரும் நடிகர்களான வாரிசு நடிகர்களும் ஒற்றுமையாக இல்லை.ஒருவரை ஒருவர் மறைமுகமாக திட்டிக் கொள்வதிலும் அவர்களுக்கு சுகம்!
நடிகைகள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்கள் என்பதால் அவர்கள் இங்கு யாரையாவது சார்ந்துதான் இருக்க வேண்டியதாக இருக்கிறது.இதனால் கிசு கிசுகளுக்குபஞ்சம் இல்லை! .பத்திரிகைகளுக்கு கொழுத்த தீனி!
சிம்புவுக்கும் தனுசுக்கும் ஆகாது! ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் ஆகாது.விஜய்க்கும் விக்ரமுக்கும் ஆகாது.இப்படி எத்தனையோ ஆகாதுகளை அடுக்கலாம்.


நடிகர்களிடம் மட்டும் இந்த குறை இருப்பதாக சொல்லமுடியாது.இயக்குனர்கள்,இசை அமைப்பாளர்கள் ,ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரும் விலக்கில்லை!!!.

வெள்ளி, 6 ஜனவரி, 2012

கசப்பு------ஐயப்பா!!!

''தம்பி..கொஞ்சம் நகந்துக்கப்பா,வயசானவன் என்னால முண்டி அடிச்சுக்கிட்டு ஏற முடியாது''
பஸ் நிறுத்தத்தில் ஒரு வாலிபனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் முதியவர்.
அவன் ஒரு மாதிரியாக ஏறிட்டுப் பார்த்தான்.
''நான் ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கேன்ல!சாமின்னுதான் சொல்லணும்.பெரியவங்களா இருக்கீங்க!இதுகூட தெரியலியே!உங்களுக்கு  பாவம் வந்து சேரும்ங்க.'' மிரட்டுகிற தொனி இருந்தது. 
''தம்பின்னு சொன்னா பாவம் வரும்னு யாருப்பா சொன்னது?நீ மாலை போட்டிருக்கிறதால அந்த ஐயப்பனா மாறிடுவியா? '' என்று அமைதியாகவே கேட்டார்.அங்கிருந்தவர்களும் அவரை ஒரு மாதிரியாகவே பார்த்தார்கள்.'இந்த பெரியவர் ஏன் ஏடாசியாக பேசுகிறார். எல்லோரும் சாமின்னுதானே சொல்லுவாங்க!இவரும் அப்படி சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே' என்கிற நினைப்பு போலும்!
பெரியவர் பிடிவாதக்காரர் என்பது அதன் பிறகுதான் தெரிந்தது.
''  சாமியா இருந்தா சகிப்புத்தன்மை வேணும்.மரியாதையை சாமி கேட்டு வாங்காது.இன்னிக்கு எத்தனை பேரு மாலையை போட்டுக்கிட்டு சிகிரெட் குடிக்கிறாங்க,தண்ணி அடிக்கிறாங்க ,செருப்பு போட்டுக்கிட்டு நடக்கிறாங்க.இவங்கல்லாம் சாமியா?மாலை போட்டா கோபப் படக்கூடாதுன்னு சொல்வாங்க,பெரியவங்களுக்கு மரியாதை கொடுப்பாங்க .வயசானவங்களுக்கு உதவி பண்ணுவாங்க. இது இல்லாதவங்களை நான் ஏன் சாமின்னு கூப்பிடனும்.இந்த தம்பி எனக்கு உதவி செய்ய கடமைப் பட்டிருக்கு.உண்மையாகவே பக்தியுடன் மாலை போட்டிருந்தா!ஆனா அது டூர் போகிற ஆளு .அத நான் சாமின்னு கூப்பிடமாட்டேன்''என்று கடுமையாக சொல்லிவிட்டு அந்த வாலிபனை ஒதுக்கிவிட்டு பஸ்ஸில் ஏறினார்.
அவர் சொன்னது நூத்துக்கு நூறு சரி என நான் நினைக்கிறேன்.நீங்க?