Sunday, January 8, 2012

பத்திரிகையாளன் படும் பாடு!

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்பர் பத்திரிகைகளை!
தவறுகளை சுட்டிக் காட்டுவதும்,நல்வழிகள் காட்டுவதும் அதன் கடமை என சொல்லலாம்.ஆட்சிகள் அமைப்பதும் ,மாற்றிக் காட்டுவதும் எழுத்துகளின் வலிமை!மக்களை எழுச்சியுற செய்வதும் ,அவர்களின் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதும் பத்திரிகைகளினால் இயலும்.
ஆக ''நான் ஒரு பத்திரிகையாளன்''என்பது எனது பெருமை!
அவன் சில நேரங்களில் பந்தாடப் படுவதுதான் கொடுமை.
நானும் பந்தாடப்பட்டவர்களில் ஒருவன்!
மதுரையில் மாலைமுரசு நாளிதழில் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்த சம்பவம்.
மதுரை வந்த இந்திராகாந்திக்கு திமுகவினர் கறுப்புக் கொடி காட்டினார்கள்.
அந்நாளில் அவர் பிரதமராக இல்லை.விமான நிலையத்திலிருந்து தல்லாகுளத்தில் இருக்கிற விருந்தினர் மாளிகைக்கு சென்று   கொண்டிருந்தார்.
திறந்த காரில் வந்த அவருடன் பழ.நெடுமாறன் ,என்.எஸ்.வி.சித்தன் ,அப்துல்காதர் ஆகியோரும் இருந்தனர்.மேனாள் பிரதமரின் 'கான்வாயில்''பத்திரிகையாளர்கள் இருந்த காரும் வந்தது.
தெற்கு வாசல் காவல் நிலையம் தாண்டி தெற்கு வெளி வீதியில் திரும்பியதும்  நூற்றுக் கணக்கில் திரண்டிருந்த திமுகவினர் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.திடீர் என இந்திரா காந்தி பயணித்த கார் நோக்கி சரமாரியாக கற்கள் வீசப் பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியவர் பழக்கடை பாண்டிஎன்பவர் .
கல் வீச்சில் இந்திரா காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தலையணைகளால்  அவரை மறைத்து நெடுமாறனும் மற்றவர்களும் கவிழ்ந்து அரண் அமைத்துக் கொண்டனர் .நெடுமாறனின் யுக்தி!இதனால் இந்திரா காயமின்றி தப்பித்தார்..ஆனால் அப்துல்  காதருக்கு ஒரு கண் போய் விட்டது.நாங்கள் பயணித்த கார் சேதப் பட்டு நின்று விட்டது.எனக்கு வலது முழங்காலுக்கு கீழே ரத்தக் காயம்..அந்த நேரத்தில் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை.உயிர் பயம் என்பார்களே அன்று அனுபவித்தேன்.
உயிர் பிழைக்க ஓடவேண்டியதாகிவிட்டது..நீண்ட கம்புடன் பழக்கடை பாண்டி  கமான்ட் பண்ணிக் கொண்டிருந்தார்.அந்த அவசரத்திலும் ''எங்களையுமா அடிக்க சொன்னிங்க பாண்டி?''என்று கேட்டபடியே சந்துக்குள் ஓடினேன்.
பஸ்கள்  இல்லை கலவரம் காரணமாக் நிறுத்தப் பட்டுவிட்டன..நடந்தே விருந்தினர் மாளிகை சென்றேன்.
அங்கு காங் .வழக்கறிஞர் லக்ஷ்மி   நரசிம்மனிடம் நிகழ்ந்தவைகளை  சொன்னேன்.மற்ற காங்.பிரமுகர்களும் கதறியபடி வந்தார்கள்.
 மறுநாள்  எந்த நாளிதழிலும் வந்திராத அரிய புகைப் படத்தை நண்பர் ஒருவரிடம் வாங்கி  மாலைமுரசில் பதிவு செய்தேன்.
அதுதான் எனக்கு வினையாகியது.
எஸ்.பி.சி.ஐ.டி/யில் இருந்து அழுத்தம்!''அந்த படத்தின் நெகட்டிவ் கேட்டார்கள். கொடுக்க இயலாது என ஆபிசில் சொல்லி விட்டார்கள்.இன்ஸ்பெக்டர் விடுவதாக இல்லை நானும் கொடுப்பதாக இல்லை.
விளைவு?
இந்திராகாந்தி கொலை முயற்சி வழக்கில் நானும் ஓர் சாட்சி.ஆனால்
என்னிடம் எதுவும் விசாரிக்காமல்,கேட்காமல் நான் சொன்னதைப் போல் வாக்குமூலம் தயாரித்து அதை சேர்த்தும் விட்டார்கள்.
''என்ன சார் அக்கிரமமா இருக்கு!நான்அப்படி எதுவும் சொல்லவில்லை என்று  கோர்ட்டில்  சொன்னால் என்ன செய்வீர்கள்?'' என்றேன்.
 மிகவும் அலட்டிக் கொள்ளாமல்'' நாங்கள் உங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டால்தானே?''என்றார் இன்ஸ்பெக்டர்.
அப்படியானால் ???
இப்படிதான்  இருக்குமா போலிஸ் அறிக்கை?

1 comment:

மாணிக்கம் said...

நண்பரே இந்த அனுபவம் எனக்கும் கிட்டியது… பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அறிந்து அதனை செய்தியாக்க சென்றேன் சில மாதங்கள் கழித்து எனக்கு செஷன்ஸ் கோர்ட்டில் இருந்து சம்மன் வந்தது.
கொலை வழக்கில் நான் போலிஸ் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதும்..அந்த வழக்கில் சாட்சி சொல்ல வரவேண்டும் என்பதும்..அந்த சம்மன் மூலம் தெரிந்து கொண்டேன்… இந்த சம்மனை ஒட்டி நடந்த நிகழ்வுகள் தனி புத்தகமே போடலாம் அந்த அளவுக்கு சுவாரசியமானவை.

காமக் கொடூரங்களுக்கு இரையாவதே பெண்களின் விதி!

மதவாத பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிரான  பாலியல்  வன்முறைகள் அதிகமாகியதே தவிர கட்டுக்குள்  அடங்கியதாக  இல்லை. வன்முறைகளி...