சனி, 3 மார்ச், 2012

பத்திரிகையாளனின் வாழ்க்கை .பகுதி ஒன்று.

நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல.சுயசரிதம் எழுதும் அளவுக்கு படைப்புகள் படைத்தவனும் இல்லை.
பத்திரிகைத் துறையில் நாற்பது ஆண்டுகள் குப்பை கொட்டி இருக்கிறேன் .இது  எவ்வளவு பெருமைக்குரியது என்பது எனக்குத் தெரியாது.
முதல்வர்கள்பக்தவச்சலம்,காமராஜர்,அண்ணாஎம்.ஜி.ஆர்..கருணாநிதி,ஜெய
லலிதா ஆகியோரை பேட்டி எடுத்திருக்கிறேன் ,திரைவுலகில் சிவாஜி,கமல்.ரஜினி.சிவகுமார்,முத்துராமன் என தொடக்கி இன்றைய கதாநாயகர்கள் வரை பார்த்துப் பழகி இருக்கிறேன்.விவாதங்கள் செய்திருக்கிறேன் .தனுஷ்கோடி அழிவைப் பார்த்தவன் ,கொடகனாறு அணைக்கட்டு உடைந்த கொடுமையை பார்த்தவன்,என பல இயற்கை சீற்றம்  கண்டிருக்கிறேன்.

இதனால் நான் சுய சரிதம் எழுதும் தகுதியை பெற்றதாக நினைக்க வில்லை.


எனக்குள் இருக்கும் வலிகள் ,மகிழ்ச்சி இவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் பட்டேன்.கவிப் பேரரசு வைரமுத்து ஒருமுறை நான் அதிக   அளவில் பாதிக்கப் பட்டபோது ''துயரங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை.அதுவும் நம்முடைய உறுப்புகளில் ஒன்று  என நினைத்துக் கொண்டு சிகிச்சை செய்து கொள்ளுங்கள் .வலி தெரியாது ''என்றார்.

அதை எப்போதும் நினைவில் வைத்து கொண்டு இதுநாள் வரை வண்டியை  ஓட்டி வருகிறேன்.

தினமலர்  தமிழ்நாடு ,மதுரை மாலைமுரசு,தேவி,எனத் தொடங்கி குமுதம் டாட் காம்,குமுதம் ரிப்போர்ட்டர்,என வளர்ந்து இன்று ''குமுதம்'' வார இதழில் நிலை கொண்டிருக்கிறேன்.

நான் எப்படிப் பட்டவன் நல்லவனா ,கெட்டவனா என்பதை  தொடரைப் படிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

இத்தனை வருடங்கள் பத்திரிகையாளனாக வாழ்ந்தும்,தமிழக அரசின் 'கலை மாமணி' விருது பெற்றிருந்தும் சொந்தமாக வீடு இல்லை!வங்கியில் ஆயிரம் வரை இருப்பு.நானும் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள வேண்டாமா?சமூகத்தில் எனக்கு இருக்கும் உயர்ந்த பட்ச  தகுதி இதுதான்!

இன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தபோது 'தேவி'வார இதழில் தொடர்ந்து கேள்வி பதில் எழுத வேண்டும் எனக் கேட்டேன்.மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார்.அப்போது அந்த வார இதழ் திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தது. இருந்தும் எழுத ஒப்புக் கொண்டார்.

வாரம் தோறும் கேள்விகளுடன் போயஸ் கார்டன் சென்று அதற்கான பதிலை எழுதிக் கொண்டு வருவேன்.மிகவும் மென்மையாகப் பேசுவார்.

அவர் 'தேவி'யில் எழுதிவருவது கட்சியில் இருந்த வலம்புரி ஜானுக்கு பிடிக்கவில்லை.

பிடிக்கவில்லையா அல்லது கட்சியின் உயர்மட்டத் தலைவர் யாரேனும் நிர்ப்பந்தம் செய்தனரா என்பது தெரியாது.எட்டுவாரங்கள் கேள்வி பதில்  வெகு சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த நிலையில் திடீர் என ஜெயலலிதா தொலை பேசியில் என்னை அழைத்தார்.

இல்லம் சென்றேன்

என்ன நடந்தது?


வருகிற சனிக்கிழமை சொல்வேன்!


கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...