வியாழன், 15 மார்ச், 2012

எம்.ஜி.ஆரும் நானும்...! [பத்திரிகையாளன் வாழ்க்கை .3 ]

மதுரை மாலை முரசு செய்தியாளனாக பணியாற்றிய காலம்.
பசுமையான நினைவுகள்!
பதிந்து கிடக்கின்றன ஆழமாய்!

சசிவர்ண தேவர்,மூக்கையா தேவர்,ஏ.ஆர்.பெருமாள் ,வேலாயுதன் நாயர்,கரியமாணிக்கம் அம்பலம்,கோச்சடை பெரியசாமி,கரு.சீமைச்சாமி ,சிங்கராயர்,ஆ.ரத்தினம்,மதுரை முத்து,காவேரி மணியன் ,கு.திருப்பதி என இன்னும் பல அரசியல் பிரபலங்களுடன் உரையாடி செய்திகளை சூடாக்கி பதிவு செய்த அந்த காலத்தை என்னால் மறக்க இயலாது.

மதுரை முத்து அதிமுகவில் இணைந்து அந்த கட்சிக்கு வலு கூட்டிய நேரத்தில் அமரர் எம்.ஜி.ஆர்.மதுரை வந்தார்.

அவர் அதிமுக தலைவராக முதல் முறையாக மதுரை வருகிறார்.

பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

ஒவ்வொரு பத்திரிகையாளரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.

என் முறையும் வந்தது.

''நான் மணி !.மாலை முரசு'' என்றதும் அவர் முகம் சுருங்கி விட்டது..அந்தகாலக்
கட்டத்தில் தினத்தந்தி,மாலைமுரசு பத்திரிகைகள் அவருக்கு எதிராக செய்திகளை பிரசுரித்து வந்தன.ஆளும் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக இருந்தன.பொதுவாக இந்த குழும பத்திரிகைகள் ஆளும் கட்சியாக எந்த கட்சி வந்தாலும் ஆதரவு தரும்.

''நான் உங்களை கூப்பிடவில்லையே?''என்றார் எம்.ஜி.ஆர்.

''எங்கு செய்தி கிடைக்குமோ அங்கு  பத்திரிகையாளன் போவதற்கு  தடை இல்லை.இங்கு நான் இருந்தால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது பத்திரிகையில் வரும்.வெளியில் அனுப்பிவிட்டால் நான் என்ன கேள்விப் படுகிறேனோ அதை செய்தியாக்கி விடுவேன்.'' என்றேன்.

எம்.ஜி.ஆர்.மதுரை முத்துவைப் பார்த்தார்.

''மணி,செய்திகளை தப்பா போட மாட்டார் நம்ம பையன்தான்''என்றார்.

எம்.ஜி.ஆர்.சிரித்தபடி ''நான் என்ன சொன்னாலும் திரிச்சுதான் உங்க ஆபிசில் போடுவாங்க''என்றார்.

''இல்லை.யாரோ உங்களுக்கு தப்பான அட்வைஸ் பண்ணி இருக்காங்க. இன்னிக்கி உங்க பேட்டியை சாயங்கால மாலைமுரசில் பாருங்க''என்றேன்.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரைக்கு வந்தால் கூப்பிடுங்க மணியை என்று சொல்கிற அளவுக்கு அக்கட்சியில் பிரபலமாகி விட்டேன். அன்று அந்த இயக்கத்தில் இருந்த பலர் இன்று ஒதுங்கிக் கிடக்கிறார்கள் .

அமைச்சராக இருந்த கா ளிமுத்துவை அவரது கல்லூரி வாழ்க்கையின் போதே தெரியும்.கல்வித் தந்தை கருமுத்து.தியாக ராசரின் கல்லூரியில்  தீவிர  திமுக வாக இருந்தார்.

அவரும் ந.காமராசனும்.மாணவ பட்டாளத்துடன் ஆவேசமாக முழங்கியபடி முனிச்சாலை ரோடு வழியாக அன்றைக்கு இருந்த ராஜாஜி திடலுக்கு போனார்கள். இன்று அந்த திடல் மார்க்கெட்டாக மாறி விட்டது.அங்கு தான் கட்டாய இந்தி திணிப்பை கண்டிக்கும் வகையில் அரசியல் சட்டப் பிரிவு தாளை எரித்தனர்.

டைப் செய்யப்பட தாள் அது! அது ஓரளவு எரியும் வரை காத்திருந்து பின்னர் அதை கைப்பற்றினார்கள் போலீசார்.காளிமுத்து,நா.காமராசன் இருவரும் கைது செய்யப் பட்டனர்.

அதன் பின்னர்தான் மாணவர் போராட்டம் வலுப் பெற்றது!

அடுத்தும் சொல்வேன்,அடுத்த வாரத்தில்!

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...