திங்கள், 13 ஆகஸ்ட், 2012

சூப்பர் ஸ்டாரின் கனவு.

சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி கடந்த சில நாட்களாக ''ஆஸ்பத்திரி வதந்தி''வழக்கம் போல பத்திரிகையாளர்கள் மத்தியில் !
எப்படித்தான் இட்டுக் கட்டி அவரை இழுப்பார்களோ தெரியாது.
அவரைப் பற்றிய செய்திகள் என்றால் கூடுதல் விற்பனை.
இதுதான் காரணமா?
இல்லை ,யாரேனும் அந்த செய்திக்கு பின்னால் இருக்கிறார்களா?
இன்றும் அப்படிதான்!
ஆச்சரியங்கள் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியில் [13.ஆக.] ரஜினியை பற்றிய வதந்தி.
உண்மையிலேயே நடந்தது என்ன வென்றால் படம் முடிந்த பின்னர் சிவாஜி திரி டி பட முன்னோட்டத்தை பார்க்க ரஜினியே அங்கு வந்து விட்டார் நல்ல ஆரோக்கியமாக!
ஏவிஎம் சரவணன் -பிரசாத் லேப்  இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
படத்தின் முன்னோட்டமும் ,ஆம்பல் பாட்டும் முப்பரிமான முறையில்  .பிரசாத் லேப்பினால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
படமே செப்டம்பரில் ரிலீஸ்.
செம திரில்.தமிழ் தெலுங்கு இந்தி ரசிகர்களுக்கு தஞ்சாவூர் இலையில் படா கானா பரிமாற்றப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக பார்த்த சிவாஜியை முப்பரிமாண படமாக பார்க்கிறபோது வியப்பின் உச்சம் தொடுகிறோம்.நமது முன்னாடியே ரஜினி வந்து நிற்கிற உணர்வு.
நிச்சயம் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழும்.
முப்பரிமாண கண்ணாடியை போட்டுக் கொண்டு ரசினி  பார்த்த பிறகு...
''இந்த புதுமையான சிவாஜியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''இது ரஜினியை பார்த்து கேட்ட முதல் கேள்வி!
சிகிச்சை பெற்று வந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிற முதல் நிகழ்வு என்கிற பரபரப்போ ,பதட்டமோ இல்லாமல் பதில் சொல்கிறார்.
முன்னர் கேட்ட அதே குரல்!

''ஆண்டவன் இப்பவும் என பக்கம் இருக்கிறான்.என ரசிகர்களுக்கு இனி எதை கொடுக்கப் போகிறேன்னு நினச்சிட்டிருந்தப்ப இப்படி ஒரு வியப்ப கொடுத்திருக்கிறான்.எனக்கே பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் தெரியும்.சரவணன் சார் கூப்பிட்டார்.வந்தேன் திரி டி படம் பற்றி சொன்னார். பார்த்தேன் ,என படம்கிரத மறந்து நானே கிளாப் பண்ணினேன்.ஆம்பல் பாட்டை மூணு வாட்டி பார்த்தேன்.''

''இதே மாதிரியான திரி டி எபெக்டில் உங்களின் வேற எந்த படங்களை படமாக்கலாம்?''

''ரோபோ ,படையப்பா பண்ணலாம்.பிரமாண்டமான படங்களா இருந்தாதான் இப்படி ஒரு எபெக்ட் கிடைக்கும்.கோச்சடையான் இந்த மாதிரியான திரி டி படம்தான்.அந்த படத்தின் வெளியீடு சமயத்தில பேசலாம்னு இருந்ததை இங்க பேச வேண்டியதாகிடுச்சு.இனி இமாதிரியான படங்களுக்குத்தான் எதிர்காலம்''

'' கறுப்பு வெள்ளை படம்,கலர்படம்,திரீ டி படம் இப்படி மூன்று வளர்ச்சிகளிலும் இருக்கிற சினிமாவில் நீங்கதான் அந்த மூன்று வளர்ச்சிகளிலும் இடம் பெற்று இருக்கிறீர்கள்' எப்படி பீல் பண்ணுகிறீர்கள்?''

''அதான் சொன்னேனே  எல்லாம் அந்த ஆண்டவனின் கையில் இருக்கு!''

''அடுத்து வரும் படங்கள் இதே மாதிரியாக இருக்குமா?''

''அது சப்ஜெக்டை பொறுத்து இருக்கிறது.அடுத்து வருவது கோச்சடையான்.மாநில அளவை பொறுத்து இம்மாதிரியான படங்கள் எடுப்பது எல்லோராலும் இயலாது.சப்ஜெக்டும் கிடைக்காது.ஆனா எதிர்காலம் திரீ டி தான் ''

''ஏவிஎம்.தயாரிப்பில் அடுத்து இப்படி ஒரு திரீ டி படத்தில் நடிப்பீர்களா?''

''அது ஆண்டவன் கையில் இருக்கு!''[சிரிக்கிறார்]

இப்படியாக கலக்கலான கலந்தாய்வில் சரவணன்,குகன், தோட்டாதரணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


சனி, 4 ஆகஸ்ட், 2012

வக்கிரம் போலீசின் ஆயுதமா?கேவலம்!

ஒரு புகார் வருகிறது.
போலீஸ் புறப்பட்டு செல்கிறது 
புகார் கொடுத்தவன் ஆயுதமுடன் நிற்கிறான்,
இரண்டு பெண்கள் ஒரு ஆண் ஆக மூவரை போலீஸ் கைது செய்கிறது!
அவர்களில் ஒரு பெண் ஒரு ஆண் இருவரை மட்டும் முழுமையாக நிர்வாணபடுத்தி நகரின் முக்கிய வீதியாக நடத்தி செல்கிறார்கள்.
பார்க்கிறவர்கள் பதறிப் போய் கண்டிக்கிறார்கள்.
சட்டை செய்ய வில்லை போலீஸ்!
இரண்டு பெண்களில் ஒருவரை மட்டும் ஏன் நிர்வாணப் படுத்தவில்லை என்பது போலீசுக்கு மட்டுமே தெரியும்,
அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தி சென்று போலீஸ் வானில் ஏற்றுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்?
பெண்கள் இருவரையும் ஆண் தவறான உறவுக்கு அழைத்தானாம்!
குற்றம்தான்!
மூவரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரிக்க வேண்டியதுதானே? அதில் இருவரை நிர்வாணப் படுத்திவிட்டு ஒருவரை மட்டும் அழகாக அழைத்து சென்றது ஏன்?
எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் சரி  மனிதனை ,மனுஷியை  நிர்வாணப் படுத்துவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது?
மதம் சொல்கிறதா?
மனிதர்களால் எழுதப்பட்ட சட்டம் சொல்கிறதா?
இந்த காட்டுமிராண்டித்தனம் பாகிஸ்தானில் உள்ள சிந்து நகரத்தில் நடந்திருக்கிறது.
எங்கு நடந்தால் என்ன?
 காட்டுமிராண்டிகளால் மனிதம் குதறப் படும் போது  அதை வேடிக்கை பார்ப்பது மனித ஒழுக்கம் அல்ல.
மரண தண்டனையே கொடுக்கலாம்!

'' நமக்கு கிடைத்த அடிமைகள் நல்லவர்கள்!''

'' நமக்கு கிடைத்த அடிமைகள் நல்லவர்கள்!' என நக்கலாக வசனம் உண்டு.வடிவேலு படத்தில்!
ஆனால் நிஜமாகவே மிக மிக நல்ல அடிமைகள் தங்களிடம் இருக்கிறார்கள் என்பதை அதிமுக அறிக்கையாகவே சொல்லிருக்கிறது,மறைமுகமாக!
பெரியார்,அண்ணா ,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோரின் படங்களை தவிர  அமைச்சர்கள் ,மாவட்டங்கள்,வட்டங்கள் ,இதர தொண்டர்களின் படங்களை போடக்கூடாது,பெயர்களை மட்டும் போட்டுக் கொள்ளலாம் என அறிக்கையில் சொல்லப் பட்டிருக்கிறது.
பெரியார் ,அண்ணா,எம்.ஜி.ஆர் படங்கள் பெரும்பாலும் கருணையின் அடிப்படையில்தான் சிறிய அளவில் இடம் பெறுகின்றன.எந்த விளம்பரங்கள் என்றாலும் ஜெயலலிதாவின் படம் மட்டும்தான் மிகப் பெரிய அளவில் காணப்படும்.
திமுகவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இங்கும் பெரியார் அண்ணா ஆகியோர் அனுதாப தலைவர்கள்தான்!
மாவீரன் படமா,தளபதி படமா என்கிற தகராறு இன்றும் இருக்கிறது.என்ன வார்டு தலைவர்களின் படங்களைக்கூட போட்டுக்கொள்ளமுடியும்,
இங்கு கலைஞர் என்கிற பெயர் மட்டுமே மந்திரம்.அங்கு அம்மா என்பது மந்திரம் !
திமுகவில் தைரியமாக மோதிக் கொள்ளலாம்.
அதிமுகவில் ஆள வைத்து மோதிக் கொள்ளலாம்.
தலைமை என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்வாங்கிக்கொள் .சிந்திக்காதே! சிந்தித்தால் வெளியில் சொல்லாதே என்கிற ''சித்தாந்தம்'' இந்த திராவிட கட்சிகளிடம் இருக்கிறது,
காங்கிரஸ் கட்சியில் எல்லோருமே தலைவர்கள்.அங்கு தொண்டர்கள் என்பவர்கள் அடுத்தவர்களின் வேட்டி சட்டையை கிழிப்பதற்கு மட்டுமே!
பா.ம.க .வில் அய்யா,சின்ன அய்யா இருவரைத்தவிர வேறு யாரையும் அய்யா என சொல்லவே முடியாது,
தேமுதிக அது கேப்டனுக்குமட்டுமே ! குடும்ப சொத்து
ஆக இந்த கட்சிகளை மட்டுமே நம்பி வாழ்கிற தொண்டன் மிக சிறந்த சகிப்பாள ன்!

இவனின் சகிப்புத்தன்மை என்று உடைபடிகிறதோ அன்று புதிய ஜனநாயகம் தோன்றுவதற்கான வித்து விதைக்கப் படுகிறது!

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

புதிய மகாத்மாவின் முகமூடி கிழிந்தது!

தெரியும் கடைசியில் எங்கு வருவார்கள் என்பது!
ஊழலை ஒழிக்கப் போகிறோம் ,புதிய லோக்பால் வரும்வரை விடமாட்டோம் என வீர வசனம் பேசியபோதே இவர் வெறும் காகிதப் புலி ,பதவி ஆசை இல்லாதவர் போல் நடிக்கிறார்.சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்து அனுதாபம் தேட பார்க்கிறார்.என்றெல்லாம் நினைத்தேன் ,அது சரியாகவே இருக்கிறது.
இதனால் நான் பெரிய புடுங்கி என சொல்லிக் கொள்ளவில்லை.நாடகமாடிகளின்  அருகில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நடிப்புதான் என்பதை உணரமுடிகிறது.
பதவிக்கு வந்துதான் கழற்ற முடியும் என்பது தெரியாமலா பாராளுமன்றத்தை மிரட்டி வந்தார்?
மத்தியில் மானாவாரியாக ஊழல்கள் இருப்பதால் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்த்தார் .நடக்கவில்லை.
இவரே ஊழல் பேர்வழிகளின் மத்தியில்தான் இருக்கிறார்.
இவரது அரசியல் பிரவேசம் அன்னக் காவடிகளின் ஆரவாரம் மாதிரிதான் இருக்கும்.
இவர் உண்ணாவிரதம் பாதியிலேயே கழண்டு போனது அவர்களில் பாதி பேருக்கு தெரியவில்லை.
அன்னா ஹசாரே அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர் மாநிலங்களின் நிலைமை புரியாதவர் ,இந்தித்துவா என மொழி வழி அரசியல் வாதி. இவரை நம்பி யாரும் போக மாட்டார்கள்.


கிழிபடும் நாள் என்று வரும்?

கதை என எதுவும் இல்லாமல் டாஸ்மாக் பாரில் என்ன  நடக்கிறது .அங்கு எப்படிப்பட்ட கேரக்டர்கள் வருகிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.பெண் வாசனை இல்லாமல் சினிமா வந்தால் ரசிக பெருமக்கள் ஏற்கமாட்டார்கள் என்கிற பயம் வந்திருக்கும் போல.அதனால் டாஸ்மாக்கில் பாரில் எடுபிடி வேலை பார்க்கும் வாலிபனுக்கும் பார் அதிபரின் மகளுக்கும் காதல் என்பதை சொல்லி மதங்களை ஓசை இல்லாமல் கடந்திருக்கிறார்கள்.லிப்-லாக்கும் இருக்கிறது.
கதையை சொன்னவிதம், பாடலில் சமூக அவலங்களை சாடி இருக்கும் சாமர்த்தியம்,படம் எடுத்திருக்கும் இளைஞர்களிடம் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.
பெட்டிஷன் மணி என்கிற கேரக்டரில் டைனமைட் வைத்திருக்கிறார்கள்.
துப்புரவுத் தொழிலாளியின் ஆவேசத்தில் புதைந்திருக்கும் நிஜங்கள் நிச்சயம் ஒரு நாள் வெடிக்கும்!
''நாம்ம தள்ளாடினாதான் கவர்மெண்ட் ஸ்டெடியா இருக்கும்.நாம்ம ஸ்டெடியா இருந்தா கவர்மென்ட் தள்ளாடிடும்''என்கிற வரிகளில் இருக்கிற உண்மை யை மக்கள் புரிந்து கொண்டால் வருகிற தலைமுறை பாதுகாக்கப் படும்.
செருப்பால் அடித்து சொல்லப் படவேண்டிய கருத்துகளை போதையால் அடித்து சொல்லி இருக்கிறார்கள்.
நிஜம் சுடும் என்பது உண்மை.படம் பார்க்கிற பலர் சூடு வாங்காமல் இருக்க முடியாது.
எத்தனை வகையான குடிகாரர்கள் ! அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சேதியை சொல்கிறார்கள்.
இந்த படத்தை அரசு அனுமதித்தும் கூட மல்டிபிளக்ஸ் கொட்டகைக்காரர்கள் திரையிட மறுப்பது ஒரு வகையான தீண்டாமைதான்.
பணக்கார காதலின் பசப்புகளை சொல்லிவருகிற திரையில் கூலிகளின் பார்களை காட்டமுடியுமா?
நட்சத்திர ஹோட்டல்களில் பளபளக்கும் கிண்ணங்களில் மஞ்சள் திரவம் பருகும் கோமான்களைக் காட்டத்தான் அவர்களின் திரை இருக்கிறது.
இதுவும் ஜனநாயகம்தான்!
பொய்யர்களின் முகத்திரை கிழிபடும் நாள் என்று வருமோ?