திங்கள், 29 அக்டோபர், 2012

மலிவான எண்ணங்கள்!

மிகவும் வேதனையாக இருந்தது அந்த வதந்தியை கேட்டபோது!
நமக்கு நெருங்கியவர்களைப் பற்றிய வதந்தி என்கிறபோது அந்த வேதனைக்கு நெருப்பின் வடிவம் கிடைக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.
ஈகோ  திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் 'எப்படா முடிப்பார் இயக்குனர்?'என்கிற சலிப்பு உச்சம் தொடுகிறபோது அந்த வதந்தி என் செவிகளை அடைத்தது.
"சிவகுமார் உடல்நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.விசாரித்தீர்களா?"என சக பத்திரிகையாளர் சித்ராமணி கேட்டதும் ஆடிப் போனேன்.
சற்று நேரத்தில் 'மிகவும் சீரியசாம்' என ரெக்கை முளைத்து விட்டது.
சற்று அழுத்தம் எனது  குருதியின் ஓ ட்டத்தில் !
நமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரிக்கத் தொடங்கினால் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டிய பலரிடம் சொல்ல....டெங்குவாக பரவி விடும்.
எனவே சூர்யா,கார்த்தி இருவரின் கால்ஷீட் பார்க்கும் தங்கதுரை ,மக்கள் தொடர்பாளர் ஜான்சன் இருவரிடம் கேட்டேன்.
சிவகுமாருக்கு போன் போட்டேன்.சுவிட்ஸ் ஆப் !
தொடர்ந்து முயற்சித்தேன்.பலன் கிடைத்தது.
"அட பாவிகளா !நல்லாதான்பா இருக்கேன்"என்றார்.
குடும்பத்துடன் கோவைக்கு சென்ற அவர் நண்பரின் மருத்துவ மனைக்கு சென்று வழக்கமான சோதனைகளை செய்திருக்கிறார்.
இதற்காகவே காத்திருந்தவர்கள் வாய்வரிசையை காட்டி விட்டனர் 
அதை சிலர் கைவரிசையாக மாற்றிவிட்டனர்.
என்ன உலகமடா!

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மாற்றான்--புதிய யோசனை!

மாற்றான் படம் பார்த்து விட்டு சில நாள் தூக்கம் இல்லை.!
பலவிதமான சிந்தனைகள்.
இருவருக்கும் மணவிழா நிகழ்ந்திருக்குமானால் இல்லற வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்கும்?
அடுத்தவருக்கு தெரியக் கூடாத அந்தரங்க வாழ்க்கை அர்த்தமற்றதாக போயிருக்காதா?
மனைவிகளாக  வாழ வந்த இருவரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
ஒட்டிப் பிறந்த இருவர்க்கு வாழ்க்கை படப் போகிறோம் என்பதை அறிந்து உணர்ந்துதான் அவர்கள் மணந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றாலும் நடைமுறையில் நாளடைவில் மன முறிவுக்கு வழி வகுக்கும்.
அந்த இரட்டையரும் துரோகிகளாக மாறக்கூடும்.
இவ்வித கற்பனை இழையோடியபோதுதான் .......
ஒரு புகைப்படம் பார்த்தேன் ,செய்தியுடன்!
அவள் ஒரு பெண்.
அடர்த்தியான தாடி ,மீசை.
ஒட்டு இல்லை.உண்மையானது!
பெண்மையில் மாற்றம் இல்லை,ஆனால் முடி வளர்ச்சியில் பயங்கர மாற்றம்!
அவள் அறையை விட்டு வெளியில் வருவதில்லை.வெட்கம்.வேதனை.
16 வயதான அந்த பருவப் பெண்ணின் பெயர் நானா!
bone morrow -ல் போதிய ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகவில்லை என்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றாள் !
பலன் கிடைத்தது.aplastic anemia என்கிற நோய் குணமாகியது.
அதே நேரத்தில் உடலில் மாற்றம்.மென்மையான முகம் வன்மை ஆகியது.ஆண்களுக்கு எங்கெல்லாம் முடி வளருமோ அதை போல நானாவுக்கும் அடர்த்தியாக முடி வளர்கிறது.இந்த நோய்க்கு hirsutism எனப் பெயர்,
அதை சகித்துக் கொண்டு வாழ்வது,அல்லது மயிரை மழித்துக் கொண்டு வாழ்வது  இதுதான் தீர்வு?
உணவு முறையில் மாற்றம் மருந்துகள் என நீண்ட கால மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

திரைப்பட கதாசிரியர்கள் கற்பனை குதிரையை தட்டி விடலாமே!
மருந்துகளும் மாத்திரைக்களுமாக வாழ்கிற அவளை என்ன பாடு படுத்தலாம் என் யோசியுங்க மக்கா!

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நடிகையை அடிப்பது நாகரீகமா?

நடிகையை அடிப்பது நாகரீகமா?
'என்னை பாரதிராஜா அடிச்சார்,பாலசந்தர் சார் அடிச்சார்'என நடிகைகள் சொல்வது சினிமாவில் காலம் காலமாக இருந்து வருகிற அவலம் தான்.சில நடிகர்களும் விலக்கள்ள !
ஆனால் எல்லா நடிகர்களும் அடி வாங்குவது இல்லை.
'நடிப்பு வரவில்லை'என சொல்லி முன்னணி நடிகர்களை திட்டுவது கூட இல்லை.வேண்டுமானால் மறைவில் திட்டிக் கொள்வார்கள்.அல்லது தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் சொல்லி கிசு கிசு எழுத சொல்வார்கள்.
அண்மையில் 'சென்னையில் ஒரு நாள்' என்கிற பட விழாவில் நடிகை மல்லிகா கலந்து கொண்டிருந்தார்.இந்த விழாவுக்கு சேரன் வர வில்லை.
அதனால்தானோ என்னவோ மல்லிகா தைர்யமுடன் அடி வாங்கியதை சொல்ல முடிந்தது என நினைக்கிறேன்.
ஆட்டோகிராப் படத்தின் ஷூட்டிங் நடந்த போது வாங்கிய அடியை நினைவு படுத்தினார்.
"இந்த படத்தின் [சென்னையில் ஒரு நாள்] ஷூட்டிங் நேரத்தில் அவருடன் பைக்கில் செல்வது மாதிரி ஒரு காட்சி.பயந்து கொண்டே போனேன்.'பயப்படாதே.அடிக்க மாட்டேன்" என்று சொன்ன பிறகுதான் உட்கார்ந்தேன்'"என்றார் மல்லிகா!
தமன்னா,ஆன்டிரியா,ஹன்சிகா ,அனுஷ்கா ஆகிய நடிகைகளை செட்டில் தமிழிலாவது திட்டி கண்டிக்க முடியுமா?
முடியாது.
ரீ  டேக் வாங்குவார்கள்
அவர்களால் அதுதான் முடியும் !

திங்கள், 1 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தியும் கறிக் கோழியும்...

"இன்னிக்கி ஆபீஸ் லீவு.என்ன சமைக்கிறே?"

"என்ன செய்யணும்?' என கேட்டாள் வீட்டரசி!

"நாட்டுக் கோழியா?இல்ல கறிக் கோழியா?"

"இன்னிக்கி காந்தி ஜெயந்திங்க.கடை திறக்கமாட்டான்!"

"நான் வாக்கிங் போகும்போதே பார்த்திட்டேன்.கடை திறந்திருக்கு.என்ன வேணுங்கிறத மட்டும் சொல்லு!"

"அடப் பாவிகளா.!"

"என்னையவாடி சொல்றே? "

"உங்களை ஏன் சொல்லப் போறேன்!உங்கள  பத்திதான் நல்லா தெரியுமே..நான் அந்த பாயை சொன்னேன்!"

"அந்த பாய்கிட்ட நானும்தான் கேட்டேன். கார்ப்பரேஷன்காரன் சீல்  வச்சுற மாட்டானான்னு...!"

"என்ன சொன்னான்?"

"காலம்பறவே கவுன்சிலரின் ஆளுங்க வந்திட்டுப் போயிட்டாங்க.அதனால் 12 மணி வரை கடை இருக்கும்னு சொல்லிட்டான்.சிட்டிக்குள்ள எல்லா கடைகளும்  திறந்துதான் கிடக்கு.நான் மட்டும் மூடி என்னாவாகப் போவுதுங்கிறான் பாய்."

"அதுவும் சரிதான்..எல்லா தி.வி களிலும் பேருக்கு காந்திய பத்தி சொல்லிட்டு சிறப்பு சினிமாக்கள்னு தானே ஒட்டுறானுங்க.நாம்ப பாயை மட்டும் குறை சொல்லி  என்னவாகப் போவுது.நீங்க நாட்டுக் கோழிய வாங்கிட்டு வாங்க.நல்லா வாட்டி மஞ்ச தடவி மண்டய தூக்கி எறிஞ்சிடாம எடுத்துட்டு வாங்க. வெடக் கோழியா இருக்கட்டும்!"

"சரி.சீக்கிரமா வந்துடறேன்.கிளாஸ எடுத்து வச்சிடு!"

வாழ்க நீ எம்மான்! நான் நாட்டு  நடப்பு பற்றிதான் சொன்னேன்.

காந்தி ஜெயந்தியும் கறிக் கோழியும்...

தங்கர்பச்சானின் கோபம் நியாயமானதா?

தமிழ்சினிமாவில் தங்கர் பச்சான் மீது பலருக்கு கோபம் இருக்கிறது.
எதையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறவர் என்கிற ஆத்திரம் அவர் மீது இருக்கிறது.
இயல்பான சினிமா யாரும் எடுப்பதில்லை என்பது தங்கரின் ஆதங்கம்!
அவருடைய 'அம்மாவின் கைப் பேசி'படத்தின் முன்னோட்ட காட்சிகளை திரையிட்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது ஆதங்கம் மறுமுறையும் வெளியானது.
"இங்கே மாற்று சினிமாவுக்கு இடம் இல்லை.நடிப்பதற்கு நடிகர்கள் இல்லை.
அழகி படம் எடுத்துவிட்டு அதை வெளியிட எத்தனை மாதங்கள் காத்திருந்தேன் தெரியுமா?
அம்மாவாக மனோரமா இருப்பார் .மகன் சரத் திருநெல்வேலி வழக்கு மொழியில் பேசுவார்.இன்னொரு மகன் மதுரை வழக்கு மொழியில் பேசுவார்.எப்படிங்க இது?
இப்படிதாங்க இருக்கு சினிமா!
நான் நிறைய படங்களை பார்க்கவில்லை.நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்கிற போது எதற்காக பார்க்கணும்?
பாரதி படத்தில் நடித்தவர் தமிழன் இல்லை.எதற்காக அவரை அழைத்தீர்கள் என கேட்டார்கள்.
அந்த மனிதன் பாரதி மாதிரி வாழ்ந்தான்.கட்டிலில் படுக்கவில்லை.பாயை விரித்து தரையில் படுத்தான்.
நெஞ்சு நிமிர்த்தி பாரதி மாதிரியே நடந்தான்.அம்மாதிரி நடிக்க தமிழர்கள் இல்லை!
இப்போது ஆம்பிளை பாடுகிறானா பொம்பளை பாடுகிறாளா என்பதே தெரியவில்லை.அந்த அளவுக்கு இருக்கிறது இசை!
அம்மாவின் கைப் பேசி படம் முடிந்ததும் தியேட்டரில் 2 நிமிடம் விளக்கு போடவேண்டாம் என கேட்டுக் கொள்ள இருக்கிறேன்.தங்களை உணர்ந்து கொள்வதற்கு அது பயன் படும் "என்று பேசினார் தங்கர்.

இப்படி பேசினால் கோபம் வராதா?நீங்களே சொல்லுங்கள்