வெள்ளி, 15 நவம்பர், 2013

வீரப்பன் கதை .8,மோகனய்யா காலி.!

                         டிரான்சிஸ்டரை வலது காது பக்கமாக வைத்துக் கொண்டு மானிலச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான் வீரப்பன்.எவ்வளவு கடுமையான வேலைகள்  இருந்தாலும் செய்திகள்  மட்டும் கேட்கத் தவறுவதில்ல.அன்றாட நாட்டு நடப்புகளை கேட்டுவிட்டு அதை தன்னுடைய  தோழர்களுடன் பகிர்ந்து கொள்வான்.சில நேரங்களில்     கடுமையான  விவாதங்கள் நடப்பதும் உண்டு,

                    பக்கமாக வந்து நின்ற சேத்துக்குளி கோவிந்தன் செய்தி முடியும் வரை எதுவும் பேசவில்லை. வீரப்பனுக்குப் புரிந்தது.!

                       " பய ஏதோ முக்கியமான சங்கதி கொண்டாந்திருக்கான்.!"

                    செய்திகள் முடிந்ததும் டிரான்சிஸ்டரை 'ஆப்' செய்த வீரப்பனின் காது வரை குனிந்த சேத்துக்குளி திரட்டிக் கொண்டு வந்திருந்த சங்கதிகளை சொல்லிவிட்டு நிமிர்ந்தான்.

                        வீரப்பனின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.!

                       பழுப்பான பச்சை நிற 'புஷ் கோட்டு' முழுக்கால் டவுசர் .'புஷ் கோட்டில்'பெரிய பெரிய பைகள்.வகை வகையான வெடி குண்டுகள்.குறுக்கு வாரில் வரிசையாக ' .புல்லட்டுகள்' 'அல்ட்ரா மாடர்ன் பிரஞ்சு துப்பாக்கி.!

                   மூன்று பேரை மட்டும் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் மறைந்தான்.!

                  பாலாறு,!கழிவுகள் எதுவும் கலக்காததால் தெளிவான நீரோட்டம். கூட்டம் கூட்டமாக கெண்டை மீன்கள்.நீரோட்டத்தை எதிர்த்தபடி அலைவதை  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.ரம்மியமாக இருக்கும்.பாறைகள் தட்டுப்படும்  இடங்களில் துள்ளிக் குதித்து முன்னேறும் போது மாலை நேர வெயிலில் மீன்கள் தகதகக்கும்.

                 இந்த அழகை  ரசிப்பதற்காக  அவ்வப்போது  பாலாறு பாலத்துக்கு பொரியுடன் வந்து  விடுவார்,கார்டு மோகனய்யா.பொரியை தூவி விடுவார்.வாய்களை திறந்து 'மளக்  ...மளக்கென்று பொரியை விழுங்கும் மீன்களை பார்க்கும்போது அன்றாட  கவலைகள் மறந்துவிடும் அவருக்கு.!

                  கொண்டு சென்றிருந்த பொரி தீரவே மன நிறைவுடன் வீடு நோக்கி  நடக்கத் தொடங்கினார்.

               நீரைத் தழுவி வரும் குளிர்ந்த காற்று.   வனப்பகுதிகளுக்கு உரிய தனித்   . தன்மை .

            கன்னட சினிமாப் பாடலை 'ஹம்' செய்தபடி அனுபவித்து நடந்தவரை  'டப்' என்று குண்டு தாக்கியது.நெஞ்சை குறி பார்த்து தட்டியவன் வீரப்பன்.ஒரே புல்லட்.!

                  வேர் அறுந்த மரம் மாதிரி பாலத்தில் சாய்ந்தார் .

                 முக்கல்,முனகல் ,கதறல் எதுவுமில்லை.நொடிப்பொழுதில் உயிர் பறந்து விட்டது.நீண்ட நேரம் மரத்தின் மறைவில் பதுங்கி இருந்து நேரம் பார்த்து சுட்டுத் தள்ளிவிட்டான்.

                தனது டிரைவர் பொன்னய்யனை  கைது செய்து சந்தனக்கட்டை 'லோடை'கைப்பற்றியதற்காக மோகனய்யாவுக்கு மரணதண்டனை.

               சுந்தர்,சுவாமிநாதன்,ஆண்டியப்பன்,மாரியப்பன்,குருநாதன்,ஆத்தூர் கொளந்தை ,பெருமாள்,கோபாலன் இத்தனை பேரும்  சேத்துக்குளியுடன் கை  கலக்காத குறை.!கத்திக் கொண்டிருந்தார்கள்.

              "அவனுங்கள விடக்கூடாது.இப்பவே தீர்த்துப் புடனும்.எச்சக்காசுக்காக  துப்பு சொல்றானுவ.பொஞ்சாதியையும் வித்துப் புடுவாணுக.ஈனப்பயளுவ.!" என்று கொதிக்கிறான் ஆத்தூர் கொளந்தை .

             " நா  மட்டும் அவனுகள சும்மா விட்ரனும்னா சொல்றேன்.அண்ணன்  வரட்டும் ஒரு வார்த்த சொல்லிட்டு பொங்க  வச்சிரலாம்."என்று ஆத்திரத்தை அடக்க பார்க்கிறான் சேத்துக்குளி.

               பொங்கல் விழாவுக்கு பத்து பத்து நாட்கள் இருந்தது.கோட்டையூர் அய்யணன்,குணசேகரன்,முத்துக்குமரன்,தனபாலன்,அய்யன்தொரை என்கிற ஐந்து பேரும்  போலீசுக்கு துப்பு சொல்லும் 'இன்பார்மர்கள்'கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை பொங்கல்  நாளில் வீரப்பன்  கடத்த இருப்பதாக இவர்கள் போலீசுக்கு சொல்லி  விட்டதால்  முக்கிய வழிகளை  மறித்து 'ரிசர்வ் போலீஸ்' முகாம்கள் அமைத்து விட்டது.

                    இதனால்தான் வீரப்பன் கோஷ்டிக்கு அப்படி ஒரு வெறி.!

-----இன்னும் வரும்.


           

           

செவ்வாய், 5 நவம்பர், 2013

வீரப்பன்.7..கஞ்சா வேணுமா சார்?

                            போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான் பொன்னையன்.கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த ரூட்டில் லாரி ஒட்டிக் கொண்டிருக்கிறான்.எந்த இடத்தில் நிறுத்த வேண்டும்,நிறுத்தக்கூடாது,போலீஸ் எதிர்வந்தால்  எப்படி தப்பிச் செல்வது,எந்தெந்த அதிகாரிகளை எப்படி கையாளுவது என்பதெல்லாம் பொன்னையனுக்கு அத்துபடி.

                     இடுப்பில் கட்டி  இருந்த பச்சைநிறப் பெல்ட்டில் இருந்த பர்சில் இருந்து 5 நோட்டுகளை உருவினான்.ஐந்தும் 100 ரூபாய் நோட்டுகள்.உள்ளங்கைக்குள் சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டவன் எதுவுமே இல்லாதது போல கையை வீசியபடி செக் போஸ்ட்டை நோக்கி நடந்தான்.

                      செக்போஸ்ட்டில் இருந்தஹொன்னப்பாவுக்கு அவனைப் பார்த்ததும் என்ன நடக்கப் போகிறதோ என்கிற பயம் !.வயிற்றுக்குள் இருக்கும் வாய்வு வெளியேறமுடியாமல் இம்சிப்பதைப் போன்ற அவஸ்தை.ஆபத்து மறைந்திருக்கிறது என்பதை ஜாடையாகக்கூட சொல்ல முடியாது.சொன்னால் வேலைக்கு ஆபத்து.சொல்லாவிட்டால் நாளையோ மறுநாளோ வீரப்பனிடம் சிக்க வேண்டியதாக இருக்கும்.அவன் கையை எடுப்பானோ,காலை எடுப்பானோ...!

             இவனுடைய சிக்கல் எதுவும் தெரியாமல் பொன்னையன் வழக்கம் போல "கஞ்சா வேணுமா சார்?"என்றபடியே நெருங்கினான்.

               மருண்டுபோன ஹொன்னப்பா "யாருடா நீ?எவனுக்குடா வேணும் கஞ்சா....லாரியில் கஞ்சா கடத்துறியா?"என்று அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு "சார்..சார்.!" என்று கூச்சல் போட--

மறைந்திருந்த கார்டு மோகனய்யாவும் மற்றவர்களும் நொடிகளில் பொன்னையன் மீது பாய்ந்து விட்டனர்,மோகனய்யா துப்பாக்கியில் குறி பார்க்க மற்றவர்கள் பொன்னையனை புரட்டி எடுத்து விட்டனர்.ராஜ விசுவாசம்.

                  சந்தனக்கட்டைகள் லாரியுடன்கைப்பற்றப்பட்டன.பொன்னையன் கைது செய்யப்பட்டான்.

                 பொன்னையன் கவலைப்படவில்லை.பயப்படவும் இல்லை

                  வீரப்பனுக்கு தகவல் போனது.

                விட்டான் ஒரு உதை .!தகரப்போணி மரத்தில் மோதி நசுங்கி விழுந்தது.

                  "எந்த நாய்டா நம்ம ஆள கவ்விட்டுப் போனது?எங்கேருக்கு அந்த சொறிநாய்?எனக்கு லோடு போனத பத்தி கவலையில்லை.மசுருக்கு சமம்.நம்ம ஆளு மேலேயே கையை வச்சிருக்கான்னா அது எம்மேல கை வச்சதுக்கு சமம்.விட மாட்டேன்.சங்க கடிச்சு துப்பிடுவேன்.இன்னும் பத்துமணி நேரத்தில அந்த நாய
பத்தின அம்புட்டு விவரமும் எனக்கு வந்தாகணும்."என்று குமுறிய வீரப்பன் அப்படியே பாறை மீது மல்லாந்து படுத்து விட்டான்.

         அடக்க முடியாத கோபம் வந்தாலும் சரி ,ஆட்களையோ யானைகளையோ போட்டுவிட்டு வந்தாலும் சரி இப்படி மட்ட மல்லாக் க படுத்து விடுவான்.வானத்தை வெறித்துப்பார்த்தபடி கிடப்பான்.யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.அவனாக கூப்பிடும் வரை எதுவும் சொல்ல மாட்டார்கள்.எழுந்து முகம் கழுவிவிட்டால் கோபம் போய்விட்டது என்று புரிந்து கொள்வார்கள்.

------இன்னும் வரும்.

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நட்புடன் எழுதுவது ....

மதுரை மாநகரில் மையப்  பகுதி.
வைகை ஆற்றுக் கரை யோரம்.முனிச்சாலை என்று சாலையை வைத்து அடையாளம் காட்டுவார்கள்.
ஆற்றில் வெள்ளம் வந்தால் ஒபுளா படித்துறையில் மக்கள் கூடிவிடுவார்கள் வேடிக்கை பார்க்க.!
சவுராஷ்டிர சமுதாய மக்களின் மண்டபம் கரையோரமாக இருந்ததால் அப்படி அழைக்கப் படுகிறது.
மண்டபத்தை ஒட்டி சின்னஞ்சிறு குடிசைகள். வாசலையொட்டியே கழிவு நீர் வாய்க்கால் வளைந்து வளைந்து சென்று ஆற்றில் கலந்துவிடும்.பன்னிகள் குட்டிகளுடன் அந்த குடிசைகளின் பக்கமாக திரியும்.சுத்தம் என்பதே அந்தப் பகுதியில் இருக்காது.அந்த குடிசைவாசிகள் தான் ஊரை சுத்தம் செய்கிறவர்கள்  நகர சுத்தி தொழிலாளர்கள் என முனிசிபாலிடி சொல்லும்.இப்போது மாநகராட்சியாகிவிட்டதால் எப்படி அழைக்கப்படுகிறார்களோ தெரியாது.அந்த பகுதிக்கு சங்கிலி தோப்பு என்று பெயர்.கம்யூனிஸ் ட் கட்சியின் கோட்டையாக அந்த  பகுதி இருந்தது அந்த காலத்தில்!
அவன் அந்த பகுதியை கடந்துதான் அவனுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும். இருட்டிவிட்டால் அந்த வழியில் தட்டுத்தடுமாறி நடக்கவேண்டும் .சிம்னி விளக்கை விட முனிசிபாலிட்டி தெரு விளக்குகள் படு மந்தம்.
இருட்டிலும் அவர்களுக்கு எப்படித்தான் கண் ...தெரிகிறதோ.!
 ஆற்று மணலில் அமர்ந்து கொண்டு கச்சிதமாக ஊற்றிக் குடிப்பார்கள்.
"மாப்ள. ஜிஞ்சரு ....அடிக்கிறியா?"
"அது எப்படி இருக்குன்னு இன்னிக்கி பாத்துருவமே?"
"பிராந்தி மாதிரி வச்சு வச்சு குடிக்ககூடாது.ஒரே தம்ல உள்ள ஏறக்கிரு .கொஞ்சம் காரமா இருக்கும்.அயித்தான் ,இவனுக்கு ஒரு பீடிய குடு .எனக்கு பாசிங் ஷோ "என்று நண்பன் சொல்ல அவனுக்கு கரீம் பீடி கிடைத்தது.
நண்பன் சொன்ன மாதிரியே கிளாசை எடுத்ததும் தெரியாமல் குடித்ததும் தெரியாமல் காலி கிளாசை மண்ணில் வைத்தான் அவன்.
வயிறில் அக்னி !
அதை தணிக்க நாட்டுப்பழம்.மதுரையில் நாட்டுப் பழம்  பேமஸ்.
இரண்டே அவுன்சில் அவனுக்கு சரியான போதை.
காசும் கம்மி.ஆனால் நிறைவான போதை.இந்த ஜிஞ்சரை சில மெடிக்கல் ஷாப்களில் தெரியாமல் விற்பார்கள்.எர்ஸ்கின் மருத்துவமனையில் சில கம்பவுண்டர்களை கணக்கு  பண்ணி விட்டால் போதும்.அந்த ஆஸ்பத்திரிக்கு இப்போது ராஜாஜி மருத்துவமனைஎன பெயர். .அவனுக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கு அது இன்றும் பெரியாஸ்பத்திரிதான்.யாரும் பெயர் சொல்லி அவன் கேட்டதில்ல.
அண்மையில் அவன் அந்தப்பகுதிக்கு சென்றான்.பெரிய மாற்றம் எதுவும் இல்லை.குடிசைகளுக்கு பதிலாககுட்டி குட்டியான வீடுகள்.
நெல்பேட்டையை ஒட்டிய பகுதி என்பதால் இப்போது டெர்ரரிஸ்ட் ஏரியாவாம்.
ஆறு மொத்தமாக மாறி கிடந்தது. மணலை காணவில்லை.கட்டா ந்தரையாக ஆறு இருக்குமா?
மனிதர்களும் மாறி இருந்தனர்.
டாஸ்மாக்கில் நகரசுத்தி தொழிலாளர்களை பார்க்க முடிந்தது.

திங்கள், 28 அக்டோபர், 2013

சிறை எடுத்தான் சின்னப் பெண்ணை,![வீரப்பன்.6]

"அ டியே.....பஞ்சு..!"

வாசலில் கால் வைத்ததும் பெருங்குரல் எடுத்த பாப்பம்மா ஓட்டமும்,நடையுமாக உள்ளே பாய்ந்தாள்.!

        ஆட்டுக்கல்லில் பருத்திக்கொட்டையை போட்டு ஆட்டி பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்ச வர்ணம் கொஞ்சம் கூட அவளை எதிர்பார்கவில்லை.பதறிப் போனாள்!

         "என்ன மதினி.....ஏன் இப்படி அரக்கப் பரக்க ஓடியாறி...க !என்ன நடந்து போச்சு?" என கலவரப்பட்டு கேட்க,

       பாப்பம்மாவுடன் வந்த செங்கோடன் அங்கு கிடந்த முக்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு சவுகரியமாக உட்கார்ந்து கொண்டான்.

       "என்னத்தடி சொல்ல ....."என்று ராகம் போட்டு இழுத்த பாப்பம்மா "விடிஞ்சதிலிருந்து  முத்துவ காணலடி ....காணாம போயிட்டாடி,,பாதகத்தி,!" என்று ஒப்பாரி வைக்க,நிலைகுலைந்து போனாள் பஞ்சவர்ணம்.

      உடம்பு ஜில்லிட்டது.இதயத் துடிப்பு அதிகமாகியது.கண்களில் பூச்சி பறந்தது.முந்தாநாள் தன்னையும் முத்துவையும் கூட்டுக் களவாணிகள் என்று  அய்யன் சொன்னதிலிருந்து அந்தப் பக்கம் பஞ்சு எட்டிப் பார்க்காமல் இருக்கிறாள்.

      இப்போது முத்து காணாமல் போய்விட்டாள்  என சொல்லி தன் வீட்டுக்கே  வந்து  பாப்பம்மாள் அழுது புலம்புகிறாள் என்றால்.........

     பஞ்சவர்ணத்துக்கு வாய் வரவில்லை...பாப்பம்மா இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ ....!

      "ரெண்டு சிறுக்கிகளும் ஒண்ணுமண்ணாதானே ..திரிஞ்சீக....உங்கிட்ட கூட
ஒன்னும் சொல்லாமலா போயிருப்பா?   களவாணி சிறுக்கிகளா....கூத்தாடி கட்டுறீக..?"

       மகளைக் காணவில்லை என்கிற கவலை ,துயரம்,துக்கம்,பாப்பம்மாவை  பைத்தியம் போலாக்கியிருந்தது.நிலை குலைந்து போயிருந்தாள்

     புருஷன் ஆசைப்பட்டானே என்பதற்காக பருத்திப்பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்சுவுக்கு இப்படி  ஒரு கொடுமை விடிந்தும் விடியாததுமாக   வந்து சேர வேண்டுமா...?காட்டுப்பக்கம் காலாறப் போய்விட்டு    வருவதாக சொன்ன மாயன் எந்த நேரத்திலும் திரும்பிவிடலாம்.அவன் வருவதற்குள் இந்த புயல்  கடந்து விட்டால் நல்லது.

       "ஏண்டி.....நான் கேட்கிறேனில்ல...தேவாங்கு  மாதிரி கவுந்துகெடந்தா  விட்ருவனா?என்னடி  நெனச்சிட்டிருக்கே முத்து எங்கடி இருக்கா?"என்று உலுக்க ,பஞ்சு அப்படியே அவள் காலில் ஒடுங்கி விழுந்தாள் .

     "சத்யமா சொல்றன் மதினி...எந்தாலி மேல சத்யம் முத்துவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது"என்று இவள் சொல்லிக்   கொண்டிருந்த நேரத்தில்  மாதேஸ்வரன் மலையில் உள்ள வனதேவதை கோவிலில் வீரப்பனின் கல்யாணம் நடந்து முடிகிறது.

அடுத்து கார்டு மோகனய்யாவின் அத்தியாயம் ஆரம்பம்.!

              ர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருந்த வன பாதுகாப்பு காவல்காரர்கள் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் ஓடினார்கள் .அய்யாவுக்கு அவ்வளவு பயம். குடகு மாவட்டம் சோமவாரப்பே ட்டையை சேர்ந்த அந்த அய்யாவின் பெயர் மோகனய்யா.இளைஞர்.துடிப்பானவர்.கண்டிப்பானவர் .இளம் ரத்தம் என்பதால் பயமறியாதவர் என்றால் அது பேத்தலாகிவிடும்.அவர் வளர்ப்பு அப்படி.!புதிதாக வந்திருக்கும் அதிகாரி  மோகனய்யா.

         "பாலார் செக் போஸ்ட் , இன்னிக்கி டியூட்டி யாரு?"என்று கேட்டார் மோகனய்யா.

          "நான்தான் சார் "என்றான் ஹொன்னப்பா.

       
       "நீ  மட்டுந்தானா?"

        "எஸ் சார்."!

       "வெரி   வெரி இம்பார்ட்டன்ட் செக் போஸ்ட்டுக்கு நீ மட்டுந்தானா?"

       " மென்  பத்தாதுங்கய்யா.!"

        "வேற செக் போஸ்ட் னா போறதுக்கு தயங்குறீங்க ,பாலார் செக் போஸ்ட்னா  மட்டும் டைம் டேபிள் போட்டுக்கிட்டு நிக்கிறீங்களேப்பா ..என்ன   காரணம்?"

        "........................!"

       "  வாய மூடிட்டிருந்தா விட்ருவனா மேன் ?இன்னிக்கி நானும் வரேன்.நாலு பேர் ரெடியா இருங்க.வெப்பன்ஸ லோடு  பண்ணிக்க!" என்று  உத்திரவு போட்டதும்  நாலு பெரும் கோரஸாக எஸ்    சார்" என்று சல்யூட் அடித்தனர்.
"
      ஜீப் பக்கமாக அவர் போனதும் பக்கத்திலிருந்தவனின்  வாயைக் கிண்டினான் ஹொன்னப்பா.   "எதுக்குப்பா அய்யா வெப்பன்ஸ லோட்
 பண்ண ச்   சொல்றார்?இன்பார்மெண்டு பயலுக எவனாவது வந்தானுகளா? இன்பர்மேசன்ஸ் எதுவும் வந்திருக்குமா?" என்று கேட்டான்.

      "தெரியலியே...இன்பர்மேசன் இல்லாமலா நம்மள  அலர்ட் பண்ணுவாங்க?எதுக்கும் நாம்ப சேப்டியாஇருக்கனும்பா....இவங்க கொடுக்கிற சம்பளத்தில குடும்பத்தை  கொண்டு செலுத்துறது கெடாவ்ல பால் கறக்கிற வேல!ஏதோ  கூப்பு வெட்டிட்டுப் போறவனும்,சந்தனக்கட்ட கொண்டு போறவனும் கொடுக்கிற காசுலதான் நிம்மதியா பொழப்பு ஓடிட்டிருக்கு...அதுலயும் இந்தாளு மண்ணள்ளிப் போட் ரு வான் போலிருக்கே?"

அரசாங்க விசுவாசம் தெரிந்தது.

       "சரி ..சத்தம் போட்டு சொல்லாதே!"

----------------இன்னும் வரும்.



வெள்ளி, 25 அக்டோபர், 2013

வீரப்பன்.[5]

நெடிதுயர்ந்து, நெருங்கி,நெருங்கி நின்ற பருமனான மரங்கள்.தேக்கு,சந்தனம் ,தோதகத்தி ,மூங்கில் இப்படி விதம் விதமாக செழித்து  வளர்ந்து நின்றன.அவைகளின் அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்த புதர்ச் செடிகள்.மேடும் ,பள்ளமுமாய் ,சீரான வழி  இல்லாத காடுகளாய்.....

       மாதேஸ்வரன் மலை உச்சியில் இருந்து பார்த்தால்  கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெ ண் போர்வையாய் படர்ந்த மேகமும் ,பச்சை நிற மேனி யான மழையும்தான்.!சில்லென்று தழுவிச் செல்கிற காற்று....எப்போது வானம் கண் திறக்கும் ,மழை பொழியும் என்பது தெரியாது.ஆதவனின் சுடு கதிர்கள் பெரும்பாலான பகுதிகளைத் தொடுவதில்லை.வழுக்கலான ,பாசி படர்ந்த பாறை ,கசகசவென ஈரம்.

   ஆள் அண்டாகாடு என்பார்களே.....

   அதுதான் இது.

   மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையான ,அழகான பகுதிகள் என்றால் இந்தப் பகுதிகளைச்  சொல்லலாம்.கிட்டத்தட்ட 18 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  இயற்கையின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துகிடக்கிறது.

    அருவிகளின் அருகில் மந்தை மந்தையாய் யானைகள் மேயும் அழகே அழகு.

     வெள்ளைக் காலுறைகள் அணிந்திருக்கின்றன என்று சொல்லக்கூடிய காட்டெருமைகளின் அழகும் அழகுதான்.!

      உண்ட மயக்கத்தில் மரத்தின் வசமான கிளைகளில் கால்களை தொங்க விட்டுக் கொண்டு உறங்கிக் கிடக்கும் சிறுத்தைகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

     அதோ பாருங்கள் அந்த புலியை!மானின் கழுத்தை கவ்வியபடி போய்க் கொண்டிருக்கிறது. வசதியான இடம் வந்ததும் மானை கீழே போட்டுவிடும்.வயிறை கிழித்து குடலையும் மாமிசத்தையும் இரத்தச்சுவை  மாறுவதற்குள் தின்று விட்டு மிச்சத்தைப் போட்டுவிடும்.

       தப்பித் தவறி மனிதன் இந்த சாம்ராஜ்யத்தில் நுழைந்து விட்டால் வழி புரியாது நிச்சயம் மாட்டிக் கொள்வான் திசையும் தெரியாது.வழியும் கிடைக்காது.வண்டுகளின் பின்னணி இசையில் அவ்வப்போது பிளிறல்,உறுமல் வேறு.பயத்தில் செத்தாலும் வியப்பில்லை.

      மனிதன் தனக்கென கூடு கட்டி வாழமுடியாத அந்த வனாந்திரத்தில் தான்  வீரப்பன் கொடிபறக்க வாழ்கிறான். அவனுக்கு காட்டு மிருகங்களிடம் பயமில்லை. அவனின் பயமே நாட்டு மனிதர்கள்தான்.

     சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் சின்ன நீரோடைக்கு அருகே ஒரு குகை.கொட்டாவி விட்ட மாதிரி.அதன் மறைவிடத்தில் வீரப்பன் படுத்திருந்தான் பள்ளிகொண்ட பெருமாளைப் போல,தலையை இடது கை தாங்கி இருந்தது.சற்றுத் தள்ளி சேத்துக்குளி கோவிந்தன்.அருகே தானியங்கி  துப்பாக்கிகள்,
.
    "இனியும் எதுக்கு ரோசனை? பேசாம முத்துவ்  க ண்ணாலம் கட்டிக்கிட்டு கூட்டியாந்திரு.மனச பறி  கொடுத்திட்டு எதுக்கு மருகிட்டு கிடக்கிறே?" என்றான் சேத்துக்குளி.

      எழுந்து உட்கார்ந்த வீரப்பன் மீசையை வழக்கம் போல திருகிக்கொண்டான். சேத்துக்குளியனை கூர்ந்துபார்த்தான்.

      "என்னத்த அப்படி பாக்கிற? எம்மனசில வஞ்சகம் எதுவுமில்ல.உனக்கு கண்ணால ஆசை  வந்திருச்சி.ஏத்த பொண்ணையும் .பாத்து தீர்மானிச்சிட்ட. அப்பறம் எதுக்கு தயங்குரே?"

      "அதுக்கில்லடா.நா மட்டும் காட்டுக்குள்ள குடும்பம் நடத்துனா நல்லா  இருக்குமா?நாளைக்கு நீயே நெனைக்கமாட்டியா? .....நாம்பல்லாம் உயிரை கையில பிடிச்சிக்கிட்டு திரியிற போது இவன் மட்டும் பொஞ்சாதி குடும்பம்னு இருக்கானேன்னு நெனைக்க மாட்டியா....?"ஆழம் பார்க்கும் வகையில் வார்த்தைகளை விட  சேத்துக்குளி கோவிந்தன் துடித்துப் போனான்.

     "என்ன மனுசன்யா நீ...?"என்று கோபத்துடன் எழுந்தவனின் தோள்  தொட்டு  சமாதானப்படுத்த முயன்றான் வீரப்பன்.கைகளை விலக்கி விட்ட  சேத்துக்குளி , "கேட்டியே ஒரு வார்த்த ,நாண்டுக்கிட்டுப் போற மாதிரி!எங்கப்பன் ஆத்தாவுக்குப் பெறகு எல்லாமே நீதான்னு நெனச்சு உங்கூடவே  கிடக்கிறேன் பாரு...அதுக்கு பரிசு  கொடுக்கிறியா?"

      "அதுக்கில்லடா ..உன்னயப் பத்தி எனக்குத் தெரியும் .மத்த பயலுக நெனக்க மாட்டனுகளா?அப்படி நெனச்சுட்டா நம்மகிட்ட  ஒத்துமை இருக்காதே!அழிஞ்சு போயிருவோம்..அதுக்காகத்தான்யா அப்படி கேட்டேன்!"

       "எந்தப்பயலும் அப்படி நெனக்கமாட்டான்.எல்லோருக்கும் நீதான் அப்பன்னு நெனச்சு வாழ்ந்திட்டிருக்கானுக.ஆத்தா வந்திட்டா இன்னும் சந்தோசப் படுவாய்ங்க. முத்து வந்தா பொங்கிப் போட்டுக்கிட்டு இருக்கும் .அது கையால சோறு வாங்கி சாப்பிடறவனுக்கு ஆத்தா இல்லையேங்கிற கவலை இருக்காது..வேற மாதிரி எவனும் நெ னைக்கமாட்டான்.  "

   "நெனச்சுட்டா....?" மனதில் கிடந்த சந்தேகத்தை எடுத்துப்போட்டான் வீரப்பன்,

    ""அவன் உசிரோட இருக்கமாட்டான்.!"

     அந்த நொடியே கட்டித்தழுவிய வீரப்பன் " நீ இருக்கிற வரை எமன் என்ன நெருங்கமாட்டான்டா !"என்று உணர்ச்சி வசப்பட்டான்.

       தம்பி அர்ச்சுனனை விட சேத்துக்குளியிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தவன்  வீரப்பன்.இவனின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும்  எடுப்பதில்லை.

      "கண்ணாலத்த எங்க வச்சுக்கலாம்னு நெனக்கிறே ?"

      "முத்துவோட அப்பாருக்கு என்ன பிடிக்கல .மகள கட்டித்தரமாட்டாருன்னுதான்நெனக்கிறேன்.அதனால மதுரவீரசாமி மாதிரி கடத்திட்டு வந்துதான் கண்ணாலம் பண்ணிக்கணும்.அதுக்கு நேரம் காலம் பாத்தா நடக்காது.அந்த புள்ள மனசு உடஞ்சி போகாம பாத்துக்கணும்.அது ஏதாவது பண்ணிக்கிட்டா  அ ந்தப் பாவமும் வந்து சேரும்.என்ன சொல்றே?"

   கடத்தல் திட்டம் சே த்துக்குளிக்கு பிடிக்கவில்லை போலும் .பதில் சொல்லவில்லை!

------இன்னும் வரும்.

திங்கள், 21 அக்டோபர், 2013

நான்தான் ..வீரப்பன்![4]

           "அண்ணே,முத்துக்கு மாப்ள பாக்கிறிகளாமே ..நெசந்தானா ? " சிரிப்பலை களுக்கு மத்தியில் கேட்டாள் ,பஞ்சவர்ணம். அவள் எந்த நோக்கத்துடன் அங்கு  வந்திருந்தாளோ ....அதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள் .எப்போது இதை கேட்பாள் என்ற ஆசையுடன் எதிர்பார்த்து அறைக்குள் காத்திருந்த முத்துலட்சுமி சன்னல் கதவை லேசாக திறந்து வைத்திருந்தாள் .அங்கிருந்து  அவர்களை நன்றாக பார்க்கமுடியும்.

          "ஆமாம்மா!நம்ம வழிதான் .பையன் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கான்.கவருமெண்ட் வேலை.பயபிள்ளை கவலையில்லாம காலம் கடத்துமே....நம்மள மாதிரி நொம்பலப்பட வேணாம்ல.!"

         "அது சரிண்ணே ,அவள  ஒரு வார்த்தை கேட்டிகளா?"

         "நம்ம முத்துக்கிட்டயா?...அவ என்னம்மா பச்சபுள்ள .நல்லது கெட்டது  தெரிஞ்சிக்கிற வயசு இல்லம்மா.!பெரியவங்க நாங்க பாத்து செய்றப்ப கெட்டுப் போறதுக்கா செய்வோம்?....உங்கப்பன் ஆத்தா உனக்கு கெட்டதய்யா  பண்ணிப்புட்டாக?"

            அய்யன் இப்படி கேட்டதும் பஞ்சு ஒரு மாதிரியாகிவிட்டாள் ..முத்துக்கு  மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்பதை அவர்களிடம்  எப்படி சொல்வது?

           அறைக்குள் இருந்த முத்துவின் மனமோ துடித்தது.  "பஞ்சு ..சொல்லு....எங்கப்பன் ஆத்தாகிட்ட என்  ஆசையை சொல்லு ..சொல்லு..."என்று அலறியது.

           பஞ்சுவின் முகத்தைப் பார்த்த பாப்பம்மா அவள் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லமுடியாமல் தவிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள்.

           "பஞ்சு ...என்னத்தையோ சொல்ல வர்றே....சொல்ல முடியாம சங்கடப்படுரே... நீ யாரயாவது மாப்ள பாத்து வச்சிருக்கியா என்ன?"

           "நான் பாக்கல  மதினி!"

          "பின்ன வேறு யாரு பாத்திருக்கா?"

         "முத்துதான்!"

       அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி.அறைக்குள் இருந்த முத்துவோ அப்போதுதான் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள் .இனி என்ன நடந்தாலும் சரி என்கிற மாதிரி மனதில் இருந்த பாரம் குறைந்திருந்தது.

      "என்னடி சொல்றே....முத்து  மாப்ள பாத்திருக்காளா ?"

      "சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுண்ணே ..முத்துதான் வூட்டுக்கு வந்து நீங்க மாப்ள பாத்திருக்கிற சங்கதிய சொன்னா...அவளுக்கு வீரப்பன் மேல ஆசை.அவருக்கும் நம்ம முத்து மேல ஆசை.ரெண்டு பேரும்ஒருத்தர ஒருத்தர் பாத்து பேசி இருக்காங்க.ஆனா தப்புத்தண்டா எதுவும் நடக்கல!"என்றதும் தரையில் ஓங்கி மிதித்தபடி பட்டியல் கல்லை விட்டு எழுந்தார்.

      "எங்கே இருக்கிறா?"என ஆவேசமுடன் வீட்டுக்குள் பாய்ந்தபோது யாருமே எதிர்பார்க்கவில்லை அங்கு வீரப்பன் வந்து நிற்பான் என்பதை.!

      "அய்யா கோவமா இருக்காக போலிருக்கு..."உள்ளே வந்த வீரப்பன் பட்டியக்கல்லில் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். ஆத்திரம் எங்கே போனதோ தெரியவில்லை.பாப்பம்மாளும் பஞ்சவர்ணமும் படக்கென்று முத்து இருந்த அறைக்குள் போய் விட்டனர்.

    என்ன நடக்கபோகுதோ என்கிற அச்சத்துடன் பாப்பம்மா கதவோரமாக நின்று  கொண்டாள்.

      "அய்யா கும்புடுறேன்.நாந்தான் வீரப்பன்"உட்கார்ந்தபடியே கை குவித்தான்.

       கருகருவென அடர்த்தியான கர்லிங்  முடி.பொசு  பொசுவென வளர்ந்திருந்த மீசை.இலை பச்சை நிறத்தில் யூனிபார்ம்   .இடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரிவால்வார்.காட்டு இலாகா அதிகாரி மாதிரியான தோற்றம்.

      நேருக்கு நேராக பார்க்க தயங்கிய அய்யனும் பதில் வணக்கம் போட்டுவிட்டு " என்ன விசயமா வந்திருக்கீக ?"என்றார்.

     "நல்ல விசயந்தான் பேச வந்திருக்கேன்.நீட்டி,நெளிச்சி பேச விரும்பல.கட்டன்ரைட்டா பேசிப்பிடறதுதான் இந்த வீரப்பனோட பழக்கம்
உங்க மக முத்துவ நா விரும்பறேன்.அந்த பிள்ளயும் என்னை விரும்புது.கண்ணாலம் கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம் உங்க சம்மதம் தேவை.!"

     அய்யன் தயங்கியபடியே  "எங்க சொந்தத்தில முத்துக்கு மாப்ள முடிச்சிருக்கேன்.இப்படி திடுதிப்புன்னு வந்து பொண்ண கேட்டா என்ன பண்றது?வாக்கு தவறாதவன் இந்த அய்யன்கிறது ஊருக்கே தெரியும்.நாலும் தெரிஞ்சவர் நீங்க"என பேச்சை இழுத்தார்.

    அருகில் வந்த வீரப்பன் அவர் தோள் மீது கை போட்டுக்கொண்டான்.

      "உங்க முடிவ நீங்க சொல்லிட்டீக.என் முடிவ....இல்ல உங்க மகளுக்கும் சேத்து சொல்றேன்.எங்க முடிவ இப்பவே சொல்லிடறோம்.நாங்க ரெண்டு பெரும் புருசன் பொஞ்சாதியா வருவோம்.உங்க ஆசிர்வாதம் தேவை.சந்தேகமிருந்தா முத்துகிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க..வர்றன்யா ,வர்றம்மா !!"

எல்லோருக்கும் பொதுவாக ஒரு கும்பிட்டு போட்டுவிட்டு ராஜ நடை நடந்து போனான்.!

-----இன்னும் வரும்.


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வீரப்பன்.3."பொண்ணை கொடு "!

பசுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருந்த மண் தரை.சொளகில் அரிசி பரப்பி கல் தேடிக்கொண்டிருந்தாள் பாப்பம்மா.பக்கத்தில் அய்யன்.வெங்கல கும்பா நிறைய பழைய சோறு.!நீரும் மோரும் கலந்திருந்த பழைய சோற்றில் இரண்டு வெங்காயமும் ஒரு பச்சை மிளகாயும் கிடந்தன. கும்பாவிலிருந்ததை 'விர்ர்...விர்ர்'என்ற ஓசையுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தார்.அவ்வப்போது வெங்காயம் கொஞ்சம் ,பச்சை மிளகாய் கொஞ்சம் என செல்லமாக ஒரு கடி .பழைய சோறு தேவாமிர்தமாக இரைப்பைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.!

         "பாப்பு....நெத்திலிக் கருவாடு சுட்டு வச்சிருக்கலாம்ல?"

அய்யன் கடும் உ ழைப்பாளி.வாய்க்கு வஞ்சகம் செய்யமாட்டார்.ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது மாதிரி,காலையிலும் மத்தியானமும் கஞ்சியோ ,கூழோ எதுவானாலும் சரி கவலை இல்லை.ஆனால் தொட்டுக் கொள்ளமட்டும் 'சுள்'னு உப்புக்கண்டமோ, கருவாடோ இருக்க வேண்டும்

        "ஆயிப் போயிருச்சி.வீட்ல எதுவும் இல்ல. கடைப்பக்கமா  போனிங்கன்னா  வாங்கியாந்திருங்க" சொளகில் கிடந்த அரிசியை அப்படியும் இப்படியுமாக தள்ளிவிட்டு ஒரு புடை புடைத்தாள் பாப்பு.

      "தீந்து போச்சுங்கிறத நேத்தே சொல்லிருக்கலாம்ல.?"

     "மறந்து போயிட்டேன்.மாயன் பொண்டாட்டி பஞ்சவர்ணம் நேத்து தலை குளிச்சான்னு  இருந்த கருவாட்டையும் ,உப்புக் கண்டத்தையும் கொடுத்துவுட்டுட்டேன்.அவளுக்கு யாரு இருக்கா நம்மள விட்டா?"

     "அதுவும் சரிதான்."

காலியான கும்பாவை ஓரமாக தள்ளி வைத்தார்.மீசையிலிருந்த பருக்கையை துடைத்துக் கொண்ட பெரிசு கொல்லை பக்கமாக ஒதுங்கியது.அங்கு கிடந்த பட்டியல் கல்லில்  உட்கார்ந்து கொண்டு வெத்திலை செல்லத்தை மெள்ளவில்லை என்றால் அன்றைய 'போஜனம்'முழுமை அடையாது.அய்யனின் சிம்மாசனம் அந்த பட்டியல் கல்தான்.கோடை காலத்தில் அந்த பட்டியல் கல்தான் அம்சதுளிகா மஞ்சம்.!

     "கும்பிடறேண்... ண்...ணே  !"என்றபடி உள்ளே வந்தாள்  பஞ்சவர்ணம்.அய்யனின் பக்கமாக உட்கார்ந்தாள் .அவளைத் தொடர்ந்து வந்த பாப்பம்மாள்  அரிசியில் பொறுக்கிய கற்களை சுரைக்காய் கோடி பக்கமாக கொட்டினாள் !

       "இப்பதான் வழி தெரிஞ்ச்சிதாக்கும்.அண்ணன்காரனை மறந்திட்டியோன்னு மருகிப் போயிட்டேன் தாயி."என்றார் அய்யன்.

       "அட நீங்க ஒண்ணு !புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டவ புருஷனை விட்டு வர்றதுக்கு மனசு வேணும்ல!ஊட்டுக்குள்ளேயே புருசனை பொத்தி வச்சு அழகு பாக்குராலாக்கும் உம்மோட தங்காச்சி!"

அடுத்தவர்களை கேலி செய்வது என்றால் பாப்பமாவுக்கு அவ்வளவு இஷ்டம்.அதிலும் பஞ்சு என்றால் அவளுக்கு தொக்குதான்.!

பஞ்சவர்ணம் விடுவாளா என்ன!அய்யனின் கையைப் பிடித்துக் கொண்டாள் ."ஏண்ணே ,மதினி மனசுக்குள்ள எதோ வெசனத்த வச்சுக்கிட்டு சடச்சிக்கிற மாதிரி இருக்கு.உங்கிட்ட நேரா சொல்றதுக்கு வெக்கம் போல.அதான் என்ன சாக்கா வச்சுக்கிட்டு  சாடை  பேசுறாக"!என்றவள் பாப்பம்மாவை பார்த்து "மதினி நான் வேணும்னா முத்துலட்சுமியை கூட்டிக்கிட்டு எம் ஊட்டுக்குபோயிடுறேன்.எங்கண்ணனை நல்லா கவனிச்சு வுடு .பொத்தி பொத்தி அழகு பாத்து வுடு மதினி!"என்று கேலி பேச மூவருக்கும் ஒரே சிரிப்பு.பாப்பு பொய்க்கோபத்துடன் அவளை எட்டிப் பிடித்தாள் ,"வாயப்பாரேன் சிறுக்கிக்கி வானம் வரை நீளுது"!

          அங்கே ஒரே கலகலப்பு.அடைவதற்கு முன்னர் சிட்டுக்குருவிகள் கீச்சிடுமே அது மாதிரி!

இன்னும் வருகிறது,


திங்கள், 14 அக்டோபர், 2013

வீரப்பன் .2

குடிசையின் கதவுப் பக்கமாக போன பஞ்சவர்ணம் வெளியே நனைந்தவனைப்  பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்!

"வந்திருய்யா!"

"போ....டீ.....!"

"சுபுத்திதான் இல்ல.சொல்புத்தியாவது கேக்கணும் எதையுமே கேக்க மாட்டேன்னா ,போ!...பட்டுதான் திருந்துவேன்னா போ..எங்கிட்டு சுத்தினாலும் கடேசில  அம்மன கும்பிட இங்கதானே வரணும்.வருவேல்ல...அப்ப வச்சுக்கிறேன் மாப்ள கச்சேரிய..!"

கதவை இழுத்து சாத்தினாள்!

நிறை போதையில் நேரம் சென்று திரும்பிய மாயன் நல்ல பிள்ளையாக வெளித் திண்ணையில் முடங்கிப்போனான்

எவ்வளவு நேரம் பஞ்சு அழுதாலோ தெரியாது.அவளும் தூங்கிப் போனாள்.

விடிந்தது.

இருவரும் இனி முகம் கொடுத்துப் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை.!வெருகும், பெருச்சாளியும் மாதிரி கர்..புர்...என்று திரிந்தார்கள்.முக்கல்,முனங்கல்,சாடைப் பேச்சுகள்,...நேரம் செல்ல ...செல்ல .!ஏதாவது முன்னேற்றம் தெரியுமா ?

ஒரு சின்ன பித்தளைப் போணி சட்டி நிறைய இட்லியும்,ஈயத் தூக்குவாளியில்  சட்னியுமாக ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்தாள்......உரிமையுடன் உள்ளே வந்தவள் ஓரமாக,சுவரைப்பார்த்து உட்கார்ந்திருந்த மாயனைப் பார்த்தாள்.அவளை அறியாமலேயே சிரிப்பு!.அடக்கிக் கொண்டாள்.

கொல்லைப் புறத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சவர்ணத்துக்கு இட்லி .சட்னி வைத்தவள் நைசாக வாயைப் பிடுங்கினாள்.

"ஏத்தே ...மாமா கடு கடுன்னு இருக்காக...ஒரே நாள்ல ஓஞ்சு போயிட்டாகளே,ஆடி மாசம் வந்தா எப்படித் தாங்கப் போறாகளோ,தெரியலியே....இந்த வெசனம் அவுகளுக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இருக்கா..."என்று கேட்க பஞ்சவர்ணம் முறைத்த முறைப்பை பார்க்கணுமே...!

"வாயை நல்லா வளத்து வச்சிருக்கே முத்து...நாளைக்கு நீயும் கல்யாணம் கட்டிக்கிட்டு புருசனோட வாழப்போறவதான்....மனசுல வச்சுக்க..ஆடி மாசம் உனக்கும் வரும்.இப்ப நான் படுற அவதி உம்புருசன் வந்த பிறகுதான்டி தெரியும்."

பஞ்சவர்ணம் கேலியுடன் சொன்னதைக் கேட்டதும் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு வகையான சிலிர்ப்பு.

அவள் யாரையாவது மனதில் வைத்திருப்பாளோ...இருக்கலாம்.இந்த காலத்துப் பெண்களை நம்பமுடியாது.முத்து என்கிற முத்துலட்சுமிக்கு நெருப்பூர்தான்.சொந்த ஊர்,ஹொகனேக்கல் பக்கம். தருமபுரி மாவட்டம்.செல்லப் பொண்ணு . இவர்களின் வீட்டுக்கு நாலைந்து வீடு தள்ளிதான் மாயனின் வீடும் இருந்தது.

உறவுக்காரகள்தான்.

"அத்தே..?"

ஒருவித தயக்கம் அவளைப் பிடித்து இழுத்தது.ஆனாலும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை போலும்.!

"என்னடி முத்து...என்னவோ சொல்ல வந்தவ மாதிரி தெரியிது.!நெளியாம  மனத்தில உள்ளத எறக்கி வச்சிரு.."என்றாள் பஞ்சவர்ணம்.

"அப்பனும் அம்மாவும் மாப்ள பாக்கிறாக.அவுக பாக்கிற மாப்ள எனக்கு வேணாம்தே!"

"ஏன் வேணாங்கிறே...நல்ல குணவானா இருந்தா வாக்கப்பட்டு போகவேண்டியதுதானே..அப்பனும் ஆத்தாளும் நமக்கு கெட்டதா நினைக்கப் போறாக?"

"அதுக்கில்லத்தே...நா  மனசில ஒருத்தர நெனச்சிருக்கேன்.அவுக மீசைய பாத்ததுமே மனச பறி கொடுத்திட்டேன்....அடிக்கடி சந்தனக் கட்டைகளை விக்க வருவாகளே ,அந்த மீசைக்காரகதான்!"

காட்டுராஜா வீரப்பனைதான் முத்துலட்சுமி சொல்கிறாள் என்பது புரிந்தது.

"சிறுக்கி பெரிய எடமாப் பார்த்துதான் பிடிச்சிருக்கா.நல்லா இருப்படி " என மனசுக்குள் வாழ்த்திக் கொண்ட பஞ்சவர்ணம் "அப்பன் இதுக்கு சம்மதிக்காதேடி "என்று தன்னுடைய சந்தேகத்தையும் சொன்னாள்.

"அதுக்குதான் உங்கிட்ட யோசனை கேட்டு வந்திருக்கேன்"

இருவரும் குசுகுசுவென பலவித ஐடியாக்களை பரிமாறிக் கொண்டு அந்த காலைப் பொழுதை ஒரு வழியாக ஒப்பேற்றினார்கள்.!

இன்னும் வரும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சந்தனக்காட்டு வீரப்பன்.

பொட்டுப் பொட்டாக மழை இறங்கியது. இராத்திரி மழை என்பதால் கனக்குமோ ,வெறிக்குமோ என்பது தெரியாமல் பலர் குடிசைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

கல்யாணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது.இதுவரை சாராயத்தை  மறந்திருந்த மாயனுக்கு இரண்டு கிளாஸ் போனால்தான் தூக்கம் வரும் போலிருந்தது.சின்னக் குடிசைக்குள் விலகிப் படுத்திருந்தாள் பஞ்சவர்ணம் . மூன்று நாளோ,ஐந்து நாளோ !இருவருக்கும் கஷ்டம்தான்.

மனைவியின் நெருக்கத்தினால் சத்தியத்தைக் காப்பாற்றி வந்த அவனை அன்று காலை ஏற்படுத்தியிருந்த  இரண்டு அடி அகல இடைவெளி கவிழ்த்திவிடும் போலிருந்தது.

எப்படி வெளியில் செல்வது என்பது புரியாமல் நெளிந்து கொண்டிருந்தவனை  பஞ்சவர்ணம் பார்வையால் கட்டி வைத்திருந்தாள் .இன்னும் எவ்வளவு நேரம்தான் தூங்காமல் அவனை கண்காணிக்கமுடியும்?தன் மீதே அவளுக்கு எரிச்சல் வந்தது!

"சனியன்!...பொம்பளையா பொறந்துட்டா மாசந்தோறும் ஒதுங்கி உக்காரணுமா?...என்ன கருமாயம் பண்ணினேனோ.....!தாலிக்கயத்து மஞ்ச கூட நெறம் மாறல !புருசனை விட்டு ஒதுங்கி உக்காந்துட்டேனே.."என்று புலம்பி தவித்தாள்.

புலம்பல் மாயனுக்கும் கேட்டது. முதலிரவன்றே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் .."இனிமே பீடி  சாராயத்த தொடவே போவதில்லை" என்று,! ஆனால் அந்த சத்தியத்தை தனிமையும்,மழையும் கெடுத்து விடும் போலிருந்தது.

அவள் வேண்டும்.ஆனால் 'அது' முடியாது.பஞ்சவர்ணம் அனுமதிக்க மாட்டாள்.சாராயம் கிடைக்கும்.வெளியே போக விட மாட்டாள்.

அவனைத் தனிமையும் குளிரும் வாட்டி வதைத்தது..விருட்டென எழுந்தவன்  துண்டை உதறினான்.தலையில் சுற்றிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

"இன்னிக்கி மட்டும் பஞ்சு.!என்னால் சும்மா இருக்க முடியல.ஒரே ஒரு கிளாஸ் மட்டும் ஊத்திக்கிட்டு  ஓடியாந்திடறேன் இல்லேன்னா...என்னால தூங்க முடியாதுடி..,பஞ்சு...பஞ்சு ....!"என்று கெஞ்சினான்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட பஞ்சு "வேணாம்யா! சாமிய மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு தூங்கு.."என்றாள்.

சாமிய கும்பிடுற நேரமாடி இது!ஏற விட்டு ஏணிய எடுத்த கதையாகிப் போச்சே..!நேத்து வரை சந்தோசமா இருந்திட்டு இன்னிக்கி தனியாப் படுடான்னா எப்படிடி படுப்பேன்.படுத்தாலும் ஒறக்கம் வருமாடி,,!ஒரு கிளாஸ் அடிச்சிட்டு வந்திட்டேனா உனக்கும் தொந்தரவு இல்ல.எனக்கும் இம்சை இல்ல.ஒரங்கிடுவேன்."

சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கே....மீறுனா சாமி குத்தம் ஆயிடும்"

"ஆமா...பொல்லாத சாமி குத்தம்.!சத்தியம் சக்கரைப் பொங்கலு..விடிஞ்சா வெம்பொங்கல்னு சும்மாவா சொல்லிருக்கானுங்க!வீணா மனச போட்டு ஒலப்பாதே!நிம்மதியா படு.நான் ஒரு எட்டு போயிட்டு வந்திடறேன்."

அடி எடுத்து வைத்தவனை எட்டிப் பிடிக்கிறாள் .தலையில் சிக்கி இருந்த துண்டு தான் சிக்கியது.அவனும் ஒரே தாவலில் வெளியில் போய் நின்றான்.

இன்னும் இருக்கிறது.அடுத்த வாரம்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நடிகர் திலகம் மறக்கப்பட்டார்,

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கமும் தமிழக அரசும் இணைந்து கொண்டாடப்பட்ட அந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அந்த விழா நடந்து முடிந்திருக்கிறது.
மகிழ்ச்சி.!
இந்திய திரையுலகின் மரியாதைக்குரிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.
அமிதாப்,ஸ்ரீதேவி,ரேகா,மம்மூட்டி,மோகன்லால்,கே.விஸ்வநாத் .ஏ.வி.எம்.சரவணன்,கே.பாலசந்தர்,இன்னும் பலர் மரியாதைக்குரிய நூற்றாண்டு விழா விருதுகளை பெற்றனர்.
மட்டற்ற மகிழ்ச்சி.
விழாவில் வரவேற்றுப் பேசிய வர்த்தக சங்கத் தலைவர் கல்யாண் சாதனையாளர்களை நினைவு கூர்ந்தவர் இரண்டு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சொல்லவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி சாதனையாளர் இல்லையா?
என்.டி ஆர்.சாதனை செய்யவில்லையா?
ஆஸ்கார் விருது வாங்கி இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரகுமான் பெருமைக்குரிய சாதனையாளர் இல்லையா?
கல்யாணை விட்டு விடுங்கள்.அவரின் பதவிக்குதான் மரியாதை.
முதல்வர் செல்வி.ஜெயலலிதா நினைவு படுத்தி தன்னுடைய உரையில் குறிப்பிட்டு இருந்தால் நிறைவு விழா இன்னும் சிறப்புற்றிருக்கும்.
அம்மையார் மறந்தது ஏன்?
நல்ல வேளை.குடியரசுத்தலைவர் சிவாஜி.என்.டி.ஆர்.இருவரையும் நினைவுபடுத்தி பெருமை சேர்த்துவிட்டார்.
விழாக்குழுவினர் சிவாஜிக்கு உரிய கவுரவத்தை கொடுக்கவில்லை.
கலைஞர் கருணாநிதியை புறக்கணித்தது போல நடிகர் திலகத்தையும் புறக்கணித்து விட்டார்கள்.
இவர்களுக்கு அரசியல் தேவை இல்லை.
ரகுமானுக்கு விருது வழங்க இவர்களுக்கு எது தடையாக இருந்தது என்பது தெரியவில்லை.
எம்.எஸ்.வி.க்கு கொடுத்து விட்டோமே பிறகெதற்கு ரகுமானும் இளைய ராஜாவும் என எண்ணி விட்டனர் போலும்.!







ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஹிட்லரின் காதல் ..

ஹிட்லர் காதலிலும் கில்லாடியாகத் தான் இருந்திருக்கிறான்.
நேசித்த,தனை நேசிக்கும் காதலியைக் கூட சுத்தலில் விட்டவன்தான் அவன்.
படித்ததில் எனக்கு பிடித்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!
1935-மார்ச் மாதம்.
 மியூனிச் நகரில்  வியர்ஜெக்ரி ஜெயடின் என்கிற ஹோட்டலில் நடந்த விருந்துக்கு வந்தான்.
ஹிட்லரின் அந்தரங்க ஆலோசகர்கள் உள்பட அத்தனை பிரமுகர்களும் அங்கு  அமர்ந்திருந்தனர் .
அவர்களில் ஒரு ஆரணங்கு .அவள் ஹிட்லரின் .அன்புக்குரியவள்.ஆருயிர்க் காதலி .பெயர் ஈவாபிரான்
உன்னை ஒரு வினாடிகூட பிரியமாட்டேன் என நெக்குருகி அவளை பஞ்சணையில் நெஞ்சணைத்து பந்தாடியவன் ஹிட்லர்.
என்னவோ தெரியவில்லை.ஈவாவை பார்ப்பதையே தவிர்த்து வருகிறான்.
'அவனை எப்படியும் சந்தித்து பேசிவிட வேண்டும் 'என்கிற முடிவுடன்தான்  ஈவா அந்த விருந்துக்கு வந்தாள் !
ஹிட்லரின் ஆசைக்குரியவள் அவள் என்பதால் அவளுக்கு மரியாதை கிடைத்தது..
அவனருகில் அமரவும் செய்து விட்டாள்!
பக்கத்தில் அமர்ந்தும் பலன் இல்லாமல் போகுமா?
அவள் இப்படிதான் நினைத்தாள் .ஹிட்லரோ திரும்பிக் கூட பார்க்கவில்லை.
பேசுவதற்கு முயற்சிக்கும் போது அவன் வேறு பக்கம் திரும்பி அவர்களுடன் பேசினான்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பக்கம் பக்கம் அமர்ந்திருந்தும் .அவளை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை .
விருந்து முடிந்ததும் எழுந்த முதல் ஆள் ஹிட்லர்தான்.அவசரமுடன் ஈவாவின் கையில்  கத்தை நோட்டுகள் அடங்கிய கவரை திணித்து விட்டு கிளம்பி விட்டான்.
 தன்னை எப்படி எல்லாம் கவனித்தான் என்கிற நினைவுகளில் மூழ்கினாள்
'சப்லிஸ்' என்கிற மது வகையை அவளுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.
'செட்டர்னே'என்கிற பிரஞ்சு வகை பானத்தை வற்புறுத்திக் குடிக்க வைத்து
வித்தைகள் காட்டிய காமவிளையாட்டுகளை மறந்து விட்டானா ?
மனம் நொந்து போனாள் ஈவா.
முடிவு ?
தூக்க மாத்திரைகள்..ஆனால் சாகவில்லை.காப்பாற்றப்பட்டாள் .

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

காமம் உச்சம் போனால் பேச்சு எதற்கு?

நாளை விநாயகர் சதுர்த்தி..இன்றே வீடு தயாராகியது,விக்னேஸ்வரனை வரவேற்க.!
வில்லங்கம் எதையும் துணைவி கொண்டு வராதிருந்தால் போதும் என நினைத்து வள்ளுவனை கையில் எடுத்தேன்.
கண்களில் பட்ட குறள் ,
"கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின்   வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல."
எதை நினைத்து,அல்லது உணர்ந்து வள்ளுவன் எழுதியிருப்பான்?
உணராமல் ,அறிந்து உணராமல் எழுத இயலாது என்பது எனது கருத்து.
கற்ற வித்தையைத்தான் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள் !
அந்த கோணத்தில் வள்ளுவனின் இந்த  குறளை பார்க்கிறேன்.
இரவு வருகிறது.கணவன் -மனைவி இருவரும் ஒட்டி உரசிப் படுத்திருக்கிறார்கள்.
அவன் புரண்டு படுத்து அவளைப் பார்க்கிறான்.
என்ன சொல்ல வருகிறான் என எதிர்பார்த்து அவளும் புரண்டு படுத்து அவனை பார்க்கிறாள்.
இரவு விளக்கு வெளிச்சத்தில் அவளின் உதடுகள் மின்மினியாக ஒளிர்கின்றது.
சட்டென இறுக்கி  வாயுடன் வாய் பொருத்துகிறான்.இந்த திடீர் தாக்குதலை அவள் எதிர்பார்த்திருந்தாளோ , என்னவோ மறுப்பேதும் காட்டவில்லை
இணங்கிப் போனாள்.இறுக்கி முத்திடுகிறாள்.
கச்சுகளும் அவிழ்கின்றன.கணவன் என்ன நினைக்கிறானோ என அவளும் நினைக்கவில்லை.மனைவி என்ன எண்ணுவாளோஎன அவனும் நினைக்கவில்லை.
இருவரும் நினைப்பது  அவர்கள் அறியாமலேயே அரங்கேறுகின்றன.
பேச்சின்றி எல்லாமே இன்பமாய் முடிந்தன.
இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருப்பான் .காமம் விஞ்சும  போ து பேச்சு எதற்கு?

சனி, 7 செப்டம்பர், 2013

'விதி'க்கப்பட்டிருந்தால் மட்டுமே பிரம்மன் கோவில்...

முதல்வர் கூட இந்த கோவிலுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் போகமுடியவில்லை..இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்கிற விதி இருந்தால் மட்டுமே போக முடியும் என திருச்சியில் நான் சந்தித்த எல்லோருமே சொன்னார்கள்.
அது உண்மையாகக் கூட இருக்கலாம்.ஆனால் ஜெயலலிதா நினைத்தும் பிரம்மனின் கோவிலுக்கு செல்ல இயல வில்லை என்பது உண்மையாக இருக்க இயலாது.அது இட்டுக் கட்டிய கதையாகவே எனக்குத் தோன்றியது.
திருச்சியிலிருந்து சில மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில்தான் திரு பட்டூர் இருக்கிறது.
அங்குதான் பிரம்மனுக்கு என சந்நிதி தனியாக இருக்கிறது.
மிகவும் பழைமையான ஆலயம்.தல புராணம் கேட்டேன் .விற்று விட்டது என சொன்னார்கள்.
சிவன் கோவிலில் பிரம்மனுக்கு தனி சந்நிதி.
பிரம்மனை தொழுது அர்ச்சனை செய்பவர்களுக்கு அரைத்த மஞ்சள் தருகிறார்கள்.பிளாஸ்டிக் பையில்.
அதை வாங்கிய சிலர் அவர்கள் கொண்டு வந்த ஜாதகத்தில் தடவிக் கொள்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
நான் அங்கு சென்றபோது அவ்வளவாக கூட்டம் இல்லை.ஆனாலும் பழமையின் முதுமை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது.இந்து அறநிலையத் துறையின் 'ஐ.சி.யூ 'பிரிவில் சேர்க்கப்படவேண்டிய ஆலயம்.கைலாசநாதர் ஆலயத்தின் விமானம் மட்டுமின்றி கர்ப்பகிரகத்தின் நிலை கூட சிதிலம் அடைந்திருக்கிறது.
தற்போது அவசரமுடன் பாதுகாக்கப்படவேண்டியவர் நந்தி.
உண்மையான பசுவைத் தடவுவது போன்ற உணர்வு இருப்பதாக சொல்லி அந்த சிலையை தடவி ,தடவி ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.சிறுவர் சிறுமியர் முதல் பெரிசுகள் வரை நந்தியை சவாரி செய்யாமல் விடுவதில்லை.
படைப்புக் கடவுளின் ஆலயம் அரசினால் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழ்  பட்டுக் கொண்டிருக்கிறது.பிரம்மா தீர்த்தம் உள்பட!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

நாகார்ஜுனாவை அமலா காதலித்த போது ...

.
அவர்கள் காதலிப்பது யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு பத்திரிகையாள ர்களிடம் சினிமா நடிகர்கள்- நடிகையர் பேசுவது வழக்கம்தான்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சத்தியம் செய்தார் அமலா! தனக்கும் நாகார்ஜுனாவுக்கும் காதலே இல்லை என சத்யா ஸ்டுடியோவில் வைத்து சத்தியம் செய்தார் !
நான் அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது போனில் அழைப்பு.
"மேடம், சத்யா ஸ்டுடியோவில் இருக்காங்க.கூப்பிட்டாங்க .கொஞ்சம் வந்திட்டுப் போங்க" என்று சொன்னவர் சுரேஷ் .இப்போது சென்னையில் இல்லை.தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி என்கிற பெயரில் ஆஸ்திரேலியாவில் இருக்கிறாராம்.இவர்தான் அன்று அமலாவுக்கு மானேஜர்.
எதற்காக கூப்பிடுகிறார்,காதலை கன்பர்ம் பண்றதுக்காக இருக்குமோ...எக்ஸ்குளூசிவ் மேட்டராக  தட்டலாம் என்கிற நினைப்புடன் சென்றேன்
என்னுடன் சகஜமாக பழகக் கூடியவர் அமலா.செய்திகளை கொடுப்பதில் எனக்கு முன்னுரிமை கொடுப்பார்.அந்த நினைப்புதான் எனக்கு,!
"ஷாட்டை முடிச்சிட்டு வந்திடறேன்.வெயிட் பண்ணுங்க பிளீஸ் "என்றதும் நிச்சயம் லவ் மேட்டர்தான் என்பது புரிந்துவிட்டது.
அந்த ஷாட் முடிய 15 நிமிடங்கள் ஆகியிருக்கும்.
பரபரப்புடன் வந்தவர் "வாங்க மேக்-அப் ரூமுக்கு போகலாம் "என அழைத்துச் சென்றார்.அந்த காலத்தில் கேரவன் வசதி கிடையாது.
"எல்லா பிரஸ்லயும் ராங் நியூஸ் போட்டுருக்காங்க,எனக்கும் நாகார்ஜுனாவுக்கும் எதுவும் இல்ல.நீங்க என்னுடைய பேட்டியாகவே இதப் போடுங்க"என்று அழுத்தம் கொடுத்து சொன்னார் அமலா.
அரை மணி நேரம் பேசியிருப்போம்.
எனக்கு ஒரே குழப்பம்.இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இண்டஸ்ட்ரிக்கு தெரிந்த விஷயம்.ஆனால் எதுவும் இல்லை என சத்தியம் பண்றாரே உண்மையாக இருக்குமோ நம்மிடம் அமலா  பொய் சொல்ல மாட்டாரே என்று நினைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தேன்.
எனக்கு நன்கு தெரிந்த கேமரா அசிஸ்டென்ட்சிரித்தபடியே "எப்பவாம் கல்யாணம் ,டேட் சொல்லிட்டாங்களா மன்னாரு?" எனக் கேட்டதும் அதிர்ந்து போனேன்.
மன்னாரு என்கிற புனை பெயரில் அப்போது சினிமாடைரி எழுதி வந்தேன் என்பதால் இண்டஸ்ட்ரி யில் சிலருக்கு மன்னாரு.பலருக்கு தேவிமணி.
சுதாரித்துக் கொண்டு "தேதி தள்ளிப் போகும் போலிருக்கே" என்றேன்.

'இருக்காது.இன்னிக்கி நாகார்ஜுனா மேரேஜ் பத்தி பேசுறதுக்காக வந்திருக்கார் /அடையாரில் தங்கி இருக்கார்"என தகவலை சொல்லிவிட்டு செட்டுக்குள் போய்விட்டார்.
விடுவனா?
அடையாறு போய்விட்டேன்.
கரெக்டா 7.20க்கு ரிசப்சனில் வைத்து பிடித்து விட்டேன்.
"கங்கிராட்ஸ் நாக் எங்களுக்கு எப்ப டிரீட் ?"என்றபடி கையைக் குலுக்க வந்தது வினை.
கையை நசுக்கியபடி "இதெல்லாம் உனக்கெதுக்கு.உன் வேலையைப் பார்"என ஆங்கிலத்தில் சொல்ல ,கை வலியையும் பொறுத்துக் கொண்டு
'" இதுவும் எனது வேலைதான்."என்று முகத்தில் கடுமையை காட்டினேன்.
ரசாபாசமாகி விடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ கையை விட்டு விட்டார்.எந்த பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

இராஜாஜி-அருப்புக்கோட்டை இடைத் தேர்தல்

பசும்பொன் தேவர் அவர்கள் இயற்கை எய்திய பிறகு 1964 ல் அருப்புக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.தேவரின் மரணத்துக்கு முன்னர் இலை மறை காய் மறையாக இருந்து வந்த உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெளிப்பட்டது.
டி .எல்.சசிவர்ணத்தேவரும் ,பி.கே.மூக்கையாத் தேவரும் எதிர் எதிராக செயல் படத்தொடங்கினார்கள்
நான் இருவருக்கும் பொதுவான பத்திரிகையாளனாக இருந்தேன்.இதனால் இருவருமே என்னை வெகுவாக விரும்பினார்கள்.
பசும்பொன் தேவர் இருந்த போதுகோஷ்டிகள் இருந்தாலும் அதை காட்டிக் கொண்டதில்லை.தேவருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள்.தேவர் என்ன சொன்னாலும் அதை தெய்வத்தின் வாக்கு என்பதாகவே தென்பாண்டி சீமை மக்கள் கருதினார்கள்.அதனால் சசிவர்ணத்தேவரும் மூக்கையாத் தேவரும் இணைந்து கட்சிப் பணி யாற்றினார்கள் .
அந்த காலத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் பத்திரிகையாக 'கண்ணகி' இருந்தது.டேபிலாய்டு சைஸ்.அதன் ஆசிரியர் சக்திமோகன்.
நேதாஜி என்கிற பெயரில் சசிவர்ணத் தேவரும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.பசும்பொன் தேவர் மறைந்ததும் 1964 -ல் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது.
யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கட்சிக்குள் சிக்கல்
ஏ.ஆர்.பெருமாள் தேவருக்கு  ஆசை.ஆனால் அவர் சசியின் ஆதரவாளர் என்பதாக சிலர் சொல்லவே வழக்கறிஞர் பி.கே.வேலாயுதன் நாயரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இவர் பா.பி.கட்சியினருக்காக நிறைய வழக்குகளில் வாதாடியவர் .தேவருக்கும் தெரிந்தவர். இவரை சுதந்திரா  ,திமுக ஆதரித்தது.
சுதந்திரா கட்சியின் நிறுவனர் மூதறிஞர் ராஜாஜி, கோவை தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம்  ஆகிய இருவரும் பிரசாரத்திற்காக மதுரை வந்தனர்.
டி வி.எஸ்.நிறுவனம் கார் அனுப்பியது.
அந்த காரில் ராஜாஜி,சுந்தரம் இருவரும் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
நானும் வேட்பாளரும் முன் ஆசனத்தில் டிரைவர் பக்கமாக அமர்ந்தோம்.
தொகுதி நிலவரம் பற்றி வேட்பாளர் வேலாயுதன் நாயரிடம் மூதறிஞர் பல கேள்விகளை கேட்க அதற்கு நாயரும் நம்பிக்கையான பதில்களை சொல்லி வந்தார்.
சசியின் ஆதரவு இல்லாத நிலை பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
முக்குலத்தோர் அதிகமாக வாழ்கின்ற தொகுதியில் நாயர் வேட்பாளருக்கு  ஆதரவு கிடைக்குமா என்கிற சந்தேகம் அந்த இரு தலைவர்களுக்கும் இருந்தது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த ராமநாதபுரம் ராஜாவின் சகோதரரை நிறுத்தி இருந்ததுமுடிவில் காங்கிரஸ் வேட்பாளர் காசி நாத துரை வெற்றி பெற்றார்.எட்டாயிரம் வாக்குகளில் தோற்றதாக நினைவு. 
பார்வர்டு பிளாக்கின் கோட்டையாக திகழ்ந்த அருப்புக்கோட்டையை காங்கிரஸ் கைப் பற்றியது.
பா.பி.கட்சியில் அன்று தொடங்கிய பிளவு இன்று வளர்ந்திருக்கிறதே தவிர ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருக்கிறது.


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

எம்.ஜி.ஆரின்.நேர்மை-கடுமை.

மதுரை.முகவை,நெல்லை என மூன்று மாவட்டங்களிலும் அதிமுக வளர்ச்சிக்காக மறுமுறையும்  பயணம் மேற்கொண்டார்.எம்.ஜி.ஆர்
.வழக்கம் போல் மதுரை பாண்டியன் ஹோட்டலில் இருந்து திக் விஜயம் தொடங்கியது .
மாவட்ட நிர்வாகிகள்,எம்.ஜி.ஆர். மன்ற பிரமுகர்கள் என பத்துக்கும் மேற்பட்ட கார்களில் தலைவரைப் பின் தொடர்ந்தனர்
எப்போதுமே தலைவரின் காரிலிருந்து நான்காவது கார் பத்திரிகையாளர்கள் இருக்கிற கார்கள்.
எப்படியும் மூன்று கார்கள் இடம் பெறும் !
அந்த மூன்றில் நானும் மதுரை தினமலர் நிருபர்,சென்னையில் இருந்து தலைவரை தொடரும் கார்க்கி,மக்கள் குரல் நிருபர் மதுரை சண்முகம் என சிலர் இருப்போம்.
அன்று ஒரு காரில்  ,கார்க்கி,தினமலர் நிருபர் என இன்னும் சிலருடன் நானும் இருந்தேன்.தினமலர் நிருபரின் பெயர் நினைவில் இல்லை.
மதுரையில் சில பகுதிகள் ,முகவையில் சில பகுதிகள்,நெல்லையில் சில.பகுதிகள் என சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தலைவர் பழனிக்கு பயணத்தை தொடங்கினார்.
வழியில் தலைவரின் காரை மக்கள் வழி  மறித்து மனுக் கொடுத்தனர்.
சில இடங்களில் நள்ளிரவு எனப் பார்க்காமல் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்துக் கொண்டு காத்திருந்தனர்
.அவர்களில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் இருந்தனர்.
ஓரிடத்தில் தலைவர் காரை விட்டு இறங்கி காத்திருந்த மக்களிடம் குறைகளை கேட்கத் தொடங்கவே நானும் தினமலர் நிருபரும் அந்த இடத்திற்கு ஓடினோம்.
"எப்படி இருக்கீங்க "-இது தலைவர்.
"அந்த கட்சிக்காரங்க[திமுக.]போலீசை வச்சு எங்க மீது பொய்க் கேசு கொடுக்குறாங்க.ஆக்கிரமிப்பு செஞ்சு குடிசை போட்டிருக்கிறதா சொல்றாங்க.."என்று சொன்னதும் "அன்பு "என அன்பழகனை கூப்பிட்டார்
பொ அன்பழகன் அப்போது முகவை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத்தின் செயலாளர்.அவர் வந்ததும் மனுக்களை அவரிடம் கொடுத்து விசாரிக்கும்படி சொன்னார். 
பிறகு காரில் ஏறியதும் கார்கள் பின் தொடர்ந்தன.
பத்திரிகையாளர்களை வந்த கார்கள்  எங்கள் இருவரையும் விட்டு விட்டு பறந்து விட்டன,
நள்ளிரவு .என்ன செய்வதெனப் புரியவில்லை.
களைந்து சென்ற மக்களில் ஒரு இளைஞர் ஆறுதல் சொன்னார்.
"கவலைப் படாதிங்க.நெல்லையிலிருந்து ஏதாவது ஒரு டாக்சி வரும் ,உங்களை ஏத்திவிட்டபிறகு நாங்க போறோம் "என  சொல்லிஎங்களுடன் இருந்தார்.அவருடன் மேலும் சிலர் இருந்தனர்.
இருட்டில் எங்களுக்கு துணை வண்டுகளின் சப்தம்.குளிர்.பயம்.செலவுக்கென பணம் எதுவும் கொண்டுவரவில்லை. 
எம்.ஜி.ஆரின் டூர் என்றால் எதற்கும் கவலை இல்லை.பத்திரிகையாளர்கள் சாப்பிட்டு விட்டார்களா,தனக்கு வைக்கப்படும் பதார்த்தங்கள் அவர்களுக்கும் வைக்கப் படுகிறதா என்பதை கேட்டறிந்த பின்னர்தான் அவர் சாப்பிட செல்வார்.
அவரே அந்த அளவுக்கு கவனிக்கும்போது மற்ற தலைகளை பற்றி சொல்லவேண்டியதில்லை.இத்தகைய கவனிப்பு இருக்கும்போது எதற்காக பணம் எடுத்து செல்லவேண்டும் என்பதால் யாரும் அவ்வளவாக எடுத்துக் கொண்டு வரமாட்டார்கள்.
எங்கள் இருவரிடமும் மொத்தம் நூற்றி இருபது ரூபாய் இருந்தது..அதை வைத்துக்கொண்டு அதிகாலை பஸ்ஸில் மதுரை சென்று விடலாம் என்கிற முடிவுடன் இருந்த போதுதான் ஒரு டாக்சி வந்தது,
மதுரை செல்லும் முடிவு மாறியது.எங்களுக்காக நள்ளிரவு என பாராமலும் உதவியாக நின்ற இளைஞர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு பழனிக்குப் பறந்தோம்.
நாங்கள் இருவரும் பழனிக்கு சென்றபோது காலை பத்து மணி.எங்களைப் பற்றி ஜேப்பியாரிடம் தலைவர் கேட்டிருக்கிறார் "பாதியிலேயே மதுரைக்கு திரும்பிவிட்டார்களோ "என கேட்டிருக்கிறார்.யாரும் பதில் சொல்லவில்லை!எங்களைப் பார்த்ததும் பதறிப்போனார் ஜேப்பியார்."என்னடா மாப்ளைகளா என்னாச்சு'?"என்றார்.அவரிடம் நடந்ததை சொன்னோம்.
அவர் எங்களை தலைவரிடம் அழைத்து சென்றார்.
நாங்கள் பயணித்த காரின் டிரைவரை அழைத்து வரச் சொன்னார்.தலைவர்.!
அவரிடம் விசாரணை நடத்தினார்,
"கார்க்கிதான் அவங்க எப்படியும் வந்திருவாங்க.லோக்கல் பேப்பர் என்பதால் கட்சிக்காரங்க காரில் வந்திருவாங்க "ன்னு சொல்லி என்னை காரை எடுக்கச் சொன்னார்" என சொல்லவே..தலைவர் சில

நிமிடம் பேசவில்லை
,பாலகுருவா ரெட்டியார் அந்த டிரைவரை வெளியில் அனுப்பிவிட்டார்
.தலைவருடன் ஜேப்பியார்,பாலகுருவா ரெட்டியார் ,காளிமுத்து நாங்கள் இருவர் என ஆறு பேர் மட்டும் இருந்தோம்.நாங்கள் பயணித்த டாக்சியின் காருக்கான வாடகையை ரெட்டியார் கொடுத்துவிட்டார்.
தலைவர் சென்னைக்கு திரும்பியதும் கார்க்கி இனிமேல் தன்னுடன்வரக்கூடாது என சொல்லிவிட்டார் என்பதாக எங்களுக்கு சொல்லப்பட்டது.தலைவர் எம்.ஜி.ஆர். அடுத்து மதுரை வந்த போது  கார்க்கி வரவில்லை.

சனி, 20 ஜூலை, 2013

வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார்.

அகவை எழுபத்தி ஐந்து எனக்கு!
கர்வமுடன் சொல்வேன் எழுபத்தி ஐந்தை தொட்டு விட்ட இளைஞன் நான் என்று.!
வயதும் இளமையும் முன்நோக்கி செல்பவை.பின் நோக்காது. 
..எண்ணங்களுக்கு வயது கிடையாது மூப்பு கிடையாது.அந்த சாதியை சேர்ந்த எழுத்தாளன் நான்.!
எண்ணங்கள் இளமையாக இருப்பதால் நானும் இளைஞனே!
பத்திரிகையாளன் மெத்த படித்த மேதாவிகளிடமும் பேசுவான்.ஆட்சியாளனிடமும் வினவுவான்.பாமரனிடமும் பேசுவான்.அவனுக்கு ஏற்ற தாழ்வு என்பது எதுவும் இல்லை.
நான் அரசியல் பத்திரிகையாளனாக இருந்த போது கர்ம வீரர் காமராஜர் ,மூதறிஞர் ராஜாஜி,முரட்டு முதல்வர் பக்தவச்சலம்,கலைஞர் கருணாநிதி ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ,செல்வி ஜெயலலிதா ,தோழர்கள் பி.ராமமூர்த்தி ,கே.டி.கே.தங்கமணி , மோகன் குமாரமங்கலம் என இன்ன பிற தலைவர்களுடன் வாதாடி இருக்கிறேன்.உரையாடி இருக்கிறேன்.
திரை உலகில் நடிகர் திலகம் முதல் இன்றைய இளம் நாயகர்கள் வரை எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.ஜூலை 21 -தான் எனது பிறந்த நாள் என்றாலும் முந்தைய நாள் சனிக்கிழமையன்றே என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
எனது நினைவில் இன்றும் நிழலாடி கொண்டிருப்பது மதுரை மண்டையனாசாரி தெரு.அங்குதான் தோழர் பி.ராமமூர்த்தி,கே.பி.ஜானகி அம்மாள் ஆகியோரிடம் விவாதித்திருக்கிறேன்.இதனால்தானோ என்னவோ கடுமையான கேள்விகளை கேட்கும் வழக்கம் என்னுள் இருக்கிறது.
மதுரை அரசினர் விடுதியில் தங்கி இருந்த அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்களிடம் அரிசி பிரச்னையை பற்றி கேட்ட போது “நீ என்ன வக்கீலா,போ..போ “என பதில் சொல்ல மறுத்து விட்டார்.அன்றைய கால கட்டத்தில் நான் ‘தமிழ்நாடுநாளிதழில் செய்தியாளன்
அந்த நாளிதழ் தனது பதிப்பை நிறுத்திய பின்னர் “மாலைமுரசுநாளிதழ் என்னை ஏற்றுக் கொண்டது.
தினத் தந்தி,மாலைமுரசு ஆகிய நாளிதழ்களின் செய்தியாளர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அனுமதிப்பதில்லை என்கிற நிலைபாட்டில் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்த கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
மதுரை பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
அண்ணன் மதுரை முத்து கூட்டி இருந்தார்.திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த பின்னர் அவர்  முதன்  முதலாக நடத்துகிற  பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
எனக்கு சொல்லப்படாவிட்டாலும் சென்று விட்டேன்
தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் செய்தியாளர்கள்!
.மற்றவர்கள்  என்ன நடக்கப் போகிறதோ என எதிர்பார்த்திருந்த நிலை.
“நான் மணி.!மாலை முரசு.!
அறிமுகம் செய்து கொண்டேன்.
முத்தண்ணன் பக்கமாக திரும்பிய எம்.ஜி.ஆர். சட்டென என்னைப்பார்த்து “உங்களை கூப்பிட்டிருக்க மாட்டாங்களே...என்னுடைய செய்திகளை தப்பா போடுவீங்களே?என்றார்.
என்ன சொல்லப் போகிறானோ என எதிர்பார்த்து சக நண்பர்கள்.பாலகுருவா ரெட்டியார்,அண்ணன் காளிமுத்து ,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் முகத்தில் குழப்பக் குறி.
“தலைவர் எம்.ஜி.ஆர் .பாண்டியன் ஹோட்டலில் நிருபர்களை சந்திக்கிறார் என கேள்விப்பட்டுதான்  வந்திருக்கிறேன்.என் டியூட்டி நியூஸ் கேதர் பண்ணுவது.அனுமதித்தால் பார்த்தது கேட்டதை எழுதுவேன்.இல்லாவிட்டால் கேள்விப்பட்டதை எழுதுவேன்.
எம்.ஜி.ஆரும்,முத்தண்ணனும் அவர்களுக்குள் பேசுகிறார்கள்.அவருக்கே உரிய கவர்ச்சியான அந்த மென்சிரிப்புடன்உக்காருங்கஎன்றார்.
அந்த நிகழ்வுக்கு பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரை வந்தால் “எங்கே மணி ?என கேட்காமல் இருக்கமாட்டார்.அந்த அளவுக்கு நான் அவரின் அன்புக்கு ஆளாகி விட்டேன்.அப்படி ஒரு சம்பவத்தில்தான் தினமலர் புகைப்படக்காரர் நண்பர் ராமகிருஷ்ணன் எடுத்த புகைப்படம்தான் இங்கிருப்பது. அண்ணன் நடிகர் திலகத்தின் பரம ரசிகன் நான்  என்பது தெரிந்த பின்னரும் என் மீது மிக அன்புடன் இருந்தார் மக்கள் திலகம்.அதற்கு இன்னொரு நிகழ்வும் சான்று.
சுற்றுப்பயணத்தின் போது என்னை நட்டாற்றில் விட்டு சென்ற கட்சி பத்திரிகையாளர்  கார்க்கியை தற்காலிக நீக்கம் செய்த  கண்டிப்பு நிறைந்த எம்.ஜி.ஆரை பார்த்து விக்கித்துப் போன  அந்த நிகழ்வையும் இனி சொல்வேன்.



ஞாயிறு, 14 ஜூலை, 2013

லைலா-மஜ்னு.

லைலா-மஜ்னு.
பெர்சிய இலக்கியத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிற காதல் காவியம்.
பணம் இருந்தும் மனம் இல்லாத பெற்றோரால் புதை குழியில் தள்ளப்பட்ட இரு உயிர்களின் காதல் ஓவியம்.
எல்லாம் இருந்தது அந்த பெரும் தனவானுக்கு.
அவன் சார்ந்த பழங்குடி மக்களுக்கு  அவனே தலைவன்.
அரேபியாவில் சுல்தான்களுக்கு நிகராக மதிக்கப்பட்டான்.
காலிப்களுக்கு என்ன மரியாதையோ ,அவனுக்கும் இருந்தது,
சயீத் என்பது அந்த பணக்காரனின் பெயர்.
பழங்குடிமக்களுக்கு வள்ளல்.வாரி வாரி வழங்குவான்.
கையேந்தி நின்றவர்களின் குறை களைவான்.
அவனது மக்களால் கொண்டாடப்பட்டவன் சயீத்.
ஆனாலும் அவனுக்கு ஓர் குறை.
அத்தனை செல்வங்கள் இருந்தும் அதை அடுத்து ஆள்வதற்கும் ,ஈகை  என வருவோர்க்கு அள்ளிக் கொடுப்பதற்கும்  வாரிசு இல்லையே என்கிற  கவலை.
அழகிய தோட்டம்  இருந்தும் அதில் ஒற்றை ரோஜா கூடபூக்க வில்லை.என்றால் அவன் யாரை நோவான் இறைவனைத் தவிர !
அப்படியே கடந்து விடுமா?
பரந்து விரிந்த கண்ணுக்கு தெரிகிற பூமியில் அவனது கவலைக்கு மருந்து எதுவும் இல்லையா?
கடவுளை நம்பு.விடை கிடைக்கும்.நம்பினான்.
கஜானாவை திறந்து வைத்தான்.கைகள் வலிக்க வழங்கினான்.நோன்பிருந்தான்.
பிரார்த்தனைகள்.எத்தனையோ அத்தனையும் செய்தான்.
பலன் கிடைத்தது..அன்றலர்ந்த மலராக மகன் பிறந்தான்.
அவனின் பிறப்பு இரவை பகலாக்கியதைபோல ஒளிர்ந்தது சயீத்துக்கு.!
அவன் பிறந்த பதினைந்தாவது நாளில் பெயர் வைத்தனர் 'கயஸ் 'என்பதாக.!
இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் எல்லாமே இரகசியம் காக்கப்பட்டது என்பதுதான்!
தீய சக்திகளின் பார்வையில் அரும்பு பட்டுவிடக்கூடாது .பட்டால் கெட்டுவிடும் குடி என்கிற அச்சம் சயீத்துக்கு.!
 ஓராண்டு முடிந்தது.
கடவுளின் பிள்ளையாகவே கயசை கொண்டாடினார்கள்.
ஞானக்குழந்தையைப் போல அவனும் வளர்ந்தான்.
பள்ளியில் சேர்த்தனர்.சீமான் வீட்டுப்பிள்ளைகள் பயிலும் அந்த பள்ளிக்கு ஒரு நாள் புதிய மாணவி வந்து சேர்ந்தாள்
அவள் பெயர் லைலா!
லைல் என்றால் இருள் என்பது பொருள்.அவளின் அழகிய கூந்தல் காரிருளைப் போல கருமையாக இருந்தது .அவளின்  முகமோ ஒளி  வீசியது.மானின் கண்கள்.
அவள் அதிகம் பேசுவதில்லை.பேசினால் புன்சிரிப்பும் சேர்ந்திருக்கும்.நாணமுறும் போது அவளது பட்டுப்போன்ற கன்னங்கள் மேலும் சிவக்கும்.
காதல் என்றால் என்னவென தெரியாத பருவம் கயசுக்கு.!
லைலா என்றால் அவனது உயிர் என கருதினான்.
அவளும் அப்படியே நினைத்தாள் ,கயசை பார்க்காத நேரம் அவளுக்கு நெருப்பாய் கனன்றது.
காதல் என்பது திராட்சை ரசம் போன்றது.
அவர்கள் குழந்தைகள்.அவர்களுக்கு திராட்சை ரசம் பற்றி என்ன தெரியும்?
கோப்பை வழிய வழிய அருந்தினார்கள்.
நாளுக்கு நாள் அவர்களும் வளர்ந்தார்கள்.
மாந்தி மாந்தி அருந்திய அந்த காதல் ரசத்துக்கு அடிமையாகிப் போனார்கள்.
அவர்களுக்குள் அவர்கள் தொலைந்தும் போனார்கள்.
அடுத்து என்ன நடக்கும்?காத்திருங்கள் சொல்கிறேன்!



சனி, 13 ஜூலை, 2013

என்னை அடிக்க வந்த டைரக்டர்.!

"விமர்சனம் எழுதுவதில்லையா ?"என நண்பர் கேட்டார்.
"இல்லை.எழுதியதால் ஏற்பட்ட விவகாரங்களை இப்போது அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்"என்றேன்.
"சுகமாக இருக்குமே?"
"சுவையாகவும் இருக்கிறது! என்னால் மறக்கமுடியாத ஒரு விவகாரம் சாதியைப் பற்றியதுதான் !"
"விமர்சனத்தில் சாதியைப் பற்றி குசும்பாக எழுதி இருந்தீர்களா"
"நான் சாதியைப் பற்றி எழுதுவதே இல்லை. என்னை பிராமணராக நினைத்துக் கொண்டு அடிப்பதற்கு ஒரு டைரக்டர் ஆபிசுக்கு வந்து விட்டார்."
"அது யாரயா அந்த டைரக்டர்.?"
"இப்பவும் இருக்கிறார்.ஒரு காலத்தில் ஓகோ என இருந்தவர்.நடிகர் திலகத்தை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.அவர் பெயரை சொல்லவேணாமே!புண் படக்கூடும்.!ஒருதலைராகம் படத்தில் நடித்த ரவீந்தர் நடித்த ஒரு படம் பற்றிய விமர்சனம்.வாகை சந்திரசேகரும் நடித்திருந்தார்......இரவை குறிப்பிடும் வகையில் படத்தின் டைட்டில்.அப்போது பிரபலமாக வளர்ந்துவந்த 'தேவி'வார இதழில் நான் பணியாற்றிவந்தேன்.விமர்சனத்தின் முடிவில் ஒரு படம் வைப்பது உண்டு.அது விமர்சனத்தை எதிரொலிப்பதாக இருக்கும்.
தன்னுடைய தலையிலிருந்து மழித்த முடியை இரு கைகளிலும் ஏந்தியபடி மொட்டைத்தலையுடன் ஒருவன் இருக்கும் படம்அது.
எம்.ஜி.ஆர்.நடித்த படத்தையே வெட்கக்கேடு என அந்த காலத்தில் விமர்சித்து வந்திருந்ததால் அந்த தைரியத்தில் நானும் அந்த'மொட்டை' படத்தை வைத்தேன்.
புதன்  அன்று தேவி வெளியாகியது.
அண்ணா சாலையில் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.
வேகமும் கோபமுமாக அந்த டைரக்டர் வந்தார்,என்னைப் பார்த்தார்.என்ன நினைத்தாரோ எதிரில் இருந்த 'மாலைமுரசு'அலுவலகம் சென்று துணை ஆசிரியராக இருந்த இளங்கோவை பார்த்து பேசி இருக்கிறார்.'அந்த பார்ப்பானுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி விமர்சனம் எழுதி படத்தை வச்சிருப்பான்.உங்க முதலாளி பி.ஆர்.ஆதித்தன் எப்ப வருவார்?அவரை நான் பார்க்கணும்.அவனை தூக்காம விடப்போறதில்லை 'என கோபமுடன் குமுற துணை ஆசிரியர் இளங்கோ 'என்ன நீங்க அவரைப் போயி  பார்ப்பான்னு  சொல்றீங்க.அவரு மதுரைக்காரர் .கம்பம் எம்.பி.ராஜாங்கத்துக்கு சொந்தம் ல! "என சொல்ல அப்படியே அமைதியாகிவிட்டாராம் .டைரக்டர்.
உண்மையில் நான் அந்த எம்.பி.யின் சொந்தக்காரன் இல்லை.அவரின் ஆவேசத்தை தணிப்பதற்காக இளங்கோ சொன்ன பொய்.இதை இளங்கோ சொன்ன பிறகு நான் அந்த டைரக்டரை பார்ப்பதில்லை .அவரும் என்னிடம் பேசுவதில்லை.என்னை தன்னுடைய சாதியாளாக எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டார்,
ஒரு பத்திரிகையாளனுடன் புகழ் பெற்ற டைரக்டர் பேசாமல் இருக்கமுடியுமா?
அவரின் பி.ஆர்.ஒ.மதி ஒளி செல்வத்தின் வழியாக என்னை வரவழைத்துப் பேசினார்.நாங்கள் சமாதானமாகி விட்டோம்.நடிகர் திலகம் நடித்து அவர் இயக்கிய ஒரு படத்தில் என்னையும் ஒரு காட்சியில்  நடிக்க வைத்து விட்டார்."என சொல்லி முடித்தேன்.
இப்போது நாங்கள் சந்திக்க நேர்ந்தால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என சிரித்துக் கொள்வோம். ..சாதனைதானே!

வெள்ளி, 12 ஜூலை, 2013

ஆரியர்கள் யார்?

ஆரியர்கள் யார்?
இவர்களைப் பற்றி சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை.
பலர் பலவிதமாக சொல்கிறார்கள்
.இவர்கள் அன்னியர்கள் என்றாலும்,வந்தேறிகள் என்றாலும் இன்று நம்மிடையே வாழ்கிறார்கள் .நம்மில் கலந்தும் விட்டனர்.ஆக ஆரியர்கள் இவர்கள்தான் என எவர்க்கும் ஐ,எஸ்.ஐ.முத்திரை குத்திவிட முடியாது.ஆரியர்களின் வேர் பற்றி ஆய்வு செய்த ருசிய நாட்டை சேர்ந்த  அந்தோனவா-பொன்காரத் லெவின் என்பவர்கள் "இந்தியாவின் வரலாறு"
என்கிற புத்தகத்தில் பின்வருவனவாறு சொல்லியிருக்கிறார்கள்.
"ஆரிய மக்கள் என கருதப்படக்கூடியவர்கள் பண்டைய ஈரானியர்களும்,பண்டைய இந்தியர்கள் இந்தோ-ஆரியர்களும் தான்.அவர்களே தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள் வாழ்ந்த இடங்களை ஆரிய வர்த்தம் அல்லது ஆரிய பூமி சொல்லிக் கொண்டார்கள்.
ஆரிய என்கிற சொல் ,அரி என்ற சொல்லுடன் தொடர்புடையது.

வேத காலத்தில் இந்த சொல்லுக்கு 'வெளி நாட்டான்'வேற்றான்'என்று பொருள்.

'ஆரியன்'என்ற சொல் 'வேற்றாருடன் இணைந்தவன்,அவர்களுக்கு இணக்கமானவன்'என்று பொருள் பட்டது.
பிற்காலத்தில் 'நல்குடிப்பிறந்தவன்'என்ற பொருள் இந்த சொல்லுக்கு ஏற்பட்டது.";என கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

காதலித்துப்பார்.

காதலித்துப்பார்.

சுலபமாக சொல்லி விடுகிறார்கள் கவிஞர்கள்.எழுதிவிடுகிறார்கள் எழுத்தாளர்கள்.
புனிதம் ,அற்புதம் , என சொல்லிவிடுகிறார்கள்.
ஆனால் எந்த அப்பனாவது தனது மகனையோ,மகளையோ 'காதலித்துப் பார்"என சொல்வானா?காதலை புனிதமாக ஏற்கும் அப்பன் சினிமாவில் இருப்பான்.அல்லது சூழ்நிலை அவனை ஏற்க வைக்கும்.எந்த பயமகனும் காதல் புனிதமானது என சொல்வதில்லை.
பாடத்தில் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வந்தால் அப்பனும் ஆத்தாளும் அடுப்படியில் நின்று கொண்டு "ஏண்டி ரெண்டு பேருக்கும் கனெக்ஷன் கினக்ஷன் இருக்குமோ"என அவர்களே சந்தேகம் வளர்த்துக் கொள்வார்கள்.
அதன் பிறகு அவர்களின் பார்வையே தவறான நோக்குடன்தான் இருக்கும்.அப்புறம் கண்காணிப்பு,மறைமுகமாக சாடை பேசுவது என அந்த பிள்ளையை படுத்தி எடுத்து விடுவார்கள்.
இந்த எழவுக்கு பேசாமல் காதலித்து தொலைவோமே என அவனோ ,அவளோ  வந்து விடுவார்கள்.இது ஒரு பக்கம்.
ஆனால் சமுதாயம் காதலை ஏற்கிறதா?
மறுக்கிறது.சாதி குறுக்கே நிற்கிறது.உயிர்ப்பலி வாங்குகிறது.கலப்புத்திருமணம் செல்லும் என சட்டம் இருக்கிறது.
என்ன பயன்?கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆதரவாக இருக்கிறதா?
எத்தனை போலீஸ் ஸ் டேஷன்களில் பஞ்சாயத்து நடத்தி பிரித்து அனுப்பி வைக்கிறார்கள்.கொலை செய்யப்பட்டு விட்டால் அதோ கதிதான்.
நீதி விசாரணை என்கிற பெயரில் நாடகம் நடத்துவதற்கு துணை நிற்கிறது.
சட்டம் ஒழுங்கு என்கிற போர்வையில் கலப்பு திருமணத்தை வதைக்கிறது.
எந்த நாதாரி சாதியை கண்டு பிடித்தானோ,அமர காவிய காதலர்கள் எல்லோருமே ஓன்று சேர்ந்து வாழ்ந்ததாக இல்லை.எல்லோருமே மண்டையை போட்டு விடுகிறார்கள்.

layla scattered the seeds  of love,.majnun waterd them with his tears"

என நிசாமி லைலா -மஜ்னு காதலைப் பற்றி சொல்கிறான்.கண்ணீரால் வளர்த்த காதல் என்னவாயிற்று?
மரணம் தானே?
மஜ்னுவை மறக்க இயலாமல் அவள் மாண்ட கதையைத் தானே சொல்கிறோம்.
ஜெயித்த காதலை சொல்கிறோமா?காதலின் பெருமை மரணத்தில் தான் இருக்கிறதா?அதனால்தான் காதலித்துப்பார் என்கிறோமா?

இனி சூர்யா சூப்பர் ஸ்டார்தான்...!

சிங்கம் 2 அமோக வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆந்திரா ,கேரளா,கன்னடம் என மூன்று மாநிலங்களிலும் மகசூல் அமோகம்  என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் .
அதனை சென்னையில் சக்சஸ் மீட்டாக கொண்டாடினார்கள்.அனைவரின் பேச்சிலும் அடக்கம்  இருந்தது .
வேறு சில சக்சஸ் மீட்களையும் நான் பார்த்திருக்கிறேன்.சிலர் அந்த வெற்றிக்கு நாயகனையோ,இயக்குனரையோ காரணகர்த்தர்களாக்கி தங்களின் அடுத்த படத்துக்கு அங்கேயே அச்சாரம் போட்டுக் கொள்வர்.
ஆனால் இங்கே பயம் கலந்த மகிழ்ச்சி தெரிந்தது
சூர்யா பேசுகையில் மனம் திறந்து பேசினார்."எனக்கு தேவைப்பட்ட வெற்றி இது.அதற்காக காத்துக் கொண்டிருந்தேன்..இந்த மகத்தான வெற்றியை கொடுத்தவர்களை கரம் குவித்து வணங்குகிறேன்"என சொல்லி கை குவித்தார்.
தனது முந்திய தோல்விகளை மறக்காமல் சொல்கிற மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை.
"எனக்கு கல்யாணம் நடந்த பிறகு எனது படங்களை ஜோ பார்ப்பதில்லை.இந்த படத்தை பார்த்தபோது கைதட்டினார் .என்னுடைய அம்மா சிரித்தார்.என்னுடைய அப்பா எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.சிங்கம் 2 வில் என்னத்தை கழற்றப் போகிறார்கள் .தொழில் நுட்பத்தால்
ஓ ட்ட ப்பார்க்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்."என இண்டஸ்ட்ரியில் இருக்கிற சில நல்லவர்களின் மன ஓட்டத்தையும் சூர்யா நினைவு கூர்ந்தார்.
"கமல் சாரின் சில அப்ஸ் அண்ட் டவுனை படப்பிடிப்பு நேரத்தில் நாசர் சார் எனக்கு சொன்னார்.அவ்வளவு பெரிய நடிகருக்கு எத்தகைய வலிகள் என்பதை உணர்ந்து கொண்டேன்."என்றார்.
இயக்குனர் ஹரி தனக்கு சிங்கம் 2  பனிரெண்டாவது படம் .இந்த படத்தின் வெற்றியினால் இன்னும் கொஞ்ச காலம் சினிமாவில் இருக்கலாம் என சொன்னார்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.புதியவர்களின் வெற்றி ஹரி போன்றவர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"படம் வெற்றி பெற்று விட்டது என்று சூர்யாவிடம் சொன்னதும் அவர் என்னிடம் கேட்ட கேள்வி எல்லோருக்கும் லாபம் வருமா என்பதுதான்"என இசை அமைப்பாளர் தேவி பிரசாத் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

"சிங்கம்  படத்துக்குப்பிறகு சூர்யாதான் சூப்பர் ஸ்டார் என அடித்து சொல் கிறேன் "என ஓங்கி சொன்னவர் விஜயகுமார்..

இதைப்போல வேறு நடிகரின் விழாவில் சொல்லாமல் இருந்தால் சரி.


சனி, 6 ஜூலை, 2013

சாதியை ஒழிக்க இயலாது..

சாதியை ஒழிக்க இயலாது..

சாதி இரண்டு தான் அது ஆண்  சாதி பெண் சாதி என சொல்லும் போதே அது வெறும் காற்றுக் குமிழிகள் தான் என புரிந்து விடுகிறது.எப்படி இந்த சமூகத்தில் ஆணாதிக்கம் நிலை பெற்றுவிட்டதோ அதைப் போலவே தான் இந்த சாதியும் !
சாதி மறுப்பாளர்கள் என கட்சி நடத்துகிறவர்களில் எத்தனை பேர் உண்மையாக நடப்பவர்கள் என நினைக்கிறீர்கள்?
சொந்தங்களில் உறவு வைத்துக் கொள்வதில் அவர்கள் தீயாய் வேலை செய்வார்கள் ஒரு சிலர் விதி விலக்கு.உண்மையாய் இருப்பார்கள்.!

கடவுள் மறுப்பாளர்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி நடக்கிறார்கள்?

மனைவியர் கோவில்களுக்குப் போவதை தடுக்க இயலாத அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்கிற தகுதி இருக்கிறதா?

கேட்டால் தனிப்பட்டவர் விருப்பத்தில் தலையிடுவது தவ றானது என்பார்கள்.அப்படியானால் பொதுமக்களைப் பார்த்து கடவுளை மற என சொல்வது தவறில்லையா ?
ஒழிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.சாதி.அரசுக்கும் ஆண்மை இல்லை சாதியை தொடுவதற்கு.!
விண்ணப்பங்களில் சாதியை ஒழிக்க முடிந்ததா?
கலப்பு திருமணம் செல்லும் என சட்டம் இருந்தும் தருமபுரி கொள்ளி வைப்பு தவிர்க்க முடிந்ததா,தடுக்க முடிந்ததா?
சாதி வெறி இரயிலில் வந்ததால்தான் தண்டவாள கொலைகள் நடக்கின்றன போலும்!

நீராவியால் இயங்கும் இரயில் இந்தியாவுக்கு வந்த போது  அதற்கு உயர் சாதியினர் என சொல்லப்படுகிறவர்கள் அதற்கு வைத்த பெயர் 'கொள்ளிவாய்ப்பிசாசு.'

அந்த இரயில் வந்ததால்தான் கொடூரப் பஞ்சம் வந்தது என்றார்கள் தாது வருட பஞ்சம் எனப் பெயர்.
அந்த பஞ்சம் வந்தற்கான காரணமாக என்ன சொன்னார்கள் தெரியுமா?
"அந்த ரயிலில் உயர்ந்த சாதி,தாழ்ந்த சாதி என்கிற பேதம் பார்க்காமல் அருகருகே அமரலாம் "என வெள்ளையர் நிர்வாகம் அறிவித்ததே காரணம். கடவுள் பஞ்சத்தை ஏவி விட்டான் என்றார்கள்.
இப்படி சாதியை வளர்த்தவர்கள் மாறி வந்த கால மாறுதலினால் வெறியை குறைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர முற்றிலும் மறந்துவிடவில்லை.மாறவில்லை.
அரசாங்கம் ஆண்மையுடன் இருக்கவேண்டுமானால் சாதியக் கட்சிகள் காயடிக்கப்பட வேண்டும்.


ஷாருக் கான் செய்தது நியாயமா

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான்.
யாரும் மறுக்க இயலாது.
வசூல் சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார்.ஆமிர்கான்.சல்மான் கான் ஷாருக்கான் என்கிற கான்களின் வரிசையில் இவரைத்தான் KING OF KHANS என்கிறார்கள் 
இவரின் வயது நாற்பத்தி ஏழு.ஆர்யன் என்கிற மகனும் சுஹானா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
தற்போது மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.வாடகைத் தாய் வழியாக!
இதை மனைவி கவுரியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
மே  பதினேழாம் தேதி அந்த குழந்தை பிறந்ததாக மருத்துவ மனை பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க இது ஷாருக்கின் தனிப்பட்ட விஷயம்.இரகசியமானதும் கூட.!
தற்போது பிரச்னை ஆகி இருக்கிறது.
அந்த குழந்தை வாடகைத்  தாயின் வயிறில் வாழ்ந்த போது அது ஆணா ,பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பதே அந்த பிரச்னை..
பெண் சிசுக்கள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதை தடுப்பதற்காக அத்தகைய சோதனை நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் எந்த மருத்துவமனையிலும் அத்தகைய சோதனைகள் நடப்பதில்லை.
ஆனால்......?
செல்வாக்கு,அரசியல் பலம்,அதிகாரம் என வாழ்கிறவர்கள் இரகசியமாக அத்தகைய சோதனைகள் செய்து கொள்கிறார்கள்.
அப்படிதான் ஷாருக்கும் செய்திருக்கலாம்.இது யூகம்தான்,அவரின் வசதிக்கு இன்னொரு பெண் குழந்தை என்பது சுமை இல்லை.
பிறகேன் அப்படி ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது?
சோதனை நடக்காமலேயே அவர் மீது களங்கம் சுமத்துவதற்காக இப்படி ஒரு பழியா ?
"உங்களுக்கு குழந்தை பிறந்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?"என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு வழக்கமான அவரது பாணியிலேயே "ASK YOUR HEALTH  REPORTER?"என சொல்லி  சிரித்திருக்கிறார்.
"எனது பெர்சனல் ,இரகசிய மேட்டர் .மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த நிலை.நான் என்ன சொல்ல முடியும்?அதிகாரிகள் கண்டு பிடித்துக் கொள்ளட்டும் "என சொல்லி இருக்கிறார்.
லண்டன் குடியுரிமை பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டுப் பெண்ணை வாடகை தாயாக்கி இருக்கிறார் என மீடியாக்கள் சொல்கின்றன.
அவரை  முன்னரே பாகிஸ்தான் பிரபலங்கள் 'தங்கள் நாட்டுக்கு வந்து விடுமாறு"அழைப்பு விட்டிருந்ததை சிலர் இப்போது நினைவூட்டியிருக்கிறார்கள்.
ஷாருக் செய்திருப்பது நியாயமா?


சனி, 29 ஜூன், 2013

விஜயகாந்த் கட்சி ஆட்சிக்கு வருமா?

விஜயகாந்த் கட்சி ஆட்சி ஆட்சியை பிடிக்குமா என்பதை விட ஆட்சிக்கு வருமா என சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தே .மு.தி.க கட்சியினர்.இப்போது பேஸ்புக் மற்றும் இதர வலைத்தளங்களிலும் திமுக-அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்து கடுமையாக சொல்லப்படுகின்றன.அவை எல்லையை தாண்டியும் இருக்கின்றன.
இது சரிதானா,நியாயம்தானா என அலசுவதைவிட அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக எந்த கட்சி இருக்கிறது என எவருமே நினைப்பதில்லையோ என தோன்றுகிறது.
தனி மனித விமர்சனம் தான் மேலோங்கி இருக்கிறது
"ஊழல் மலிந்த கட்சி திமுக. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தின் கையில் சிக்கி இருக்கிறது.அதிகாரப்பகிர்வுகள் அவர்களுக்குள்ளேயே நடக்கிறது."என அதிமுகவினர் சொல்கிறார்கள்.
இதைப்போல "புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் சர்வாதிகார பிடிக்குள் சிக்கியிருக்கிறது அரசு .நிர்வாகத்தில் ஊழல் மலிந்திருக்கிறது.சொத்துக்குவிப்பு  வழக்கினை இழுத்தடிப்பதின் காரணமே மாட்டிக்கொள்வோமோ என்கிற பயம்தான்"என திமுகவினர் சொல்கிறார்கள்.
இவர்கள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டாலும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழலை ஒழிப்பதற்கு எந்த வித முனைப்பும் காட்டுவதில்லை.சோதனை,வழக்கு பதிவு என செய்திகளுக்குள் முடக்கி விடுகிறார்கள்.
உன்னை நான் இப்படிதான் பாவிப்பேன் ,நீ ஆட்சிக்கு வந்துவிட்டால் இதைப்போலவே என்னை பாவிக்க வேண்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பார்களோ என்றுதான் சாமான்யன் நினைக்கிறான்
இந்த இரு கழகங்களுக்கு மாற்றாக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எந்த கட்சி வலிமையாக இருக்கிறது?
யோசியுங்கள்?
காங்கிரஸ் வருமா?செல்வாக்கு இருக்கிறதா?திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்வதே வசதி என நினைத்து தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கவில்லை.கோஷ்டியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கட்சிக் கூட்டம் என்றால் எவனுடைய  வேட்டி உருவப்படும் யாருடைய சட்டை கிழிக்கப்படும் என்பது தெரியாது.இந்த கட்சி ஆட்சியை பிடிக்குமா?
பிடிக்காது.எந்த கழகத்துடன் இந்த கட்சி கூட்டணி வைக்குமோ அந்த கட்சிக்கு இவர்களின் தோழமை அவசியப்படுகிற பட்சத்தில் பதவி கிடைக்கலாம்.அந்தளவில் ஆட்சிக்கு வரலாம்.வரப்போகிற தேர்தலில் இதை நிபந்தனையாக வைப்பார்கள் என தோன்றுகிறது.
அடுத்து பா.ஜ.க.!அகில இந்திய கட்சி என்றாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அளவுக்கு கூட வளர்ச்சி இல்லை.மேலும் இதை மதவாத கட்சியாக பார்க்கிறார்கள்.
அடுத்து தே .மு.தி.க.!
அணிக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை !
கழகங்களால் கூட்டு மறுக்கப்பட்டு தனிமைப்படும் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அந்த உதிரிகளுக்கு தலைமை தாங்கலாம்.இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்குமா?
மதிமுக,பா.ம.க.,இடது வலது கம்யூ.கட்சிகள் ,இசுலாமிய அமைப்புகள் ,தொல்.திருமா. இவை எல்லாம் ஒன்றிணைந்து வந்தாலும் அந்த அமைப்பில் தே .மு.தி.க.அமைப்பு சேருமா?
யார் தலைமை என்பதில் சண்டை வரும்.வைகோவா,விஜயகாந்தா,டாக்டர் ராமதாசா யார் அணிக்கு தலைவர் என்பதில் சிக்கல் வரும்.
எல்லாம் சரி இந்த கட்சிகள் ஒன்று சேருமா?சேரவே சேராது.!
தனித்து ஆட்சியை பிடிப்போம் என பா.ம.க.சொல்கிறது/.
பாடம் கற்பிப்போம் என விஜயகாந்த் சொல்கிறார்.
மொத்தத்தில் 'தமிழின நலம்'மறக்கப்பட்டு சுயநல கழகம் ஏதாவது ஒன்றே ஆட்சியில் அமரும் வாய்ப்பு ஏற்படலாம்.






புதன், 26 ஜூன், 2013

கண்ணதாசா...சாபமிடு !

கண்ணதாச மன்னா.,வணங்குகிறேன்.
"சாதியைப் புலமாய்க் கொண்டு
தலைவர்கள் அமைந்தால் ,ஆங்கு
நீதியே அமைவதில்லை.
சாதியே.!பேயே!சாவின்
தளத்திலே கிடந்த உன்னைத்
தேர்தலால் மீண்டும் கொண்டு திணித்தவர் அழத்தான் வேண்டும்."
என நொந்து பாடியவன் நீ!
இன்று சாதித் தலைவர்கள்
உனது வெண்கலமேனிக்கு
மாலைகள் சாத்துகிறார்கள்..
 உனக்கு மணக்காது
அந்த சாதிய தலைகள் தொட்டு
கைகள் பட்ட மாலையால்!
அவைகெட்டுப்போனவை!



உள்ளத்தில் கள்ளம் வைத்தவர்கள்
பள்ளம் கண்டு பாயும் மனம் படைத்தவர்கள்,
தமிழினத் தலைவர்களாக
பவனி வருகிறார்கள்.
இதை யெல்லாம் நீ அன்றே உணர்ந்ததால் தான்,
"இன்னுமொரு  புது வாழ்வு தமிழுக்கில்லை,
இன்றோடு தமிழழியும் ! வருங்காலத்தில்
மன்னுபுகழ்த் தமிழ்க்  குலமும் மாண்டு போகும் !" என
பாடி வைத்தாயோ!
இனம் வாழ  பிரபாகரன் என
மாவீரன்  வந்தான்.மானம் காத்தான்.
கூற்றும் நெருங்காமல் கொடு நோயும் அண்டாது
வீரம் காத்த அவனை புறமிருந்து
கொன்றனர் .அய்யகோ
அவர்கள் தமிழினத் தலைவர்களாம்.!
கண்ணதாசா!சாபமிட்டு அவர்களை.
சாய்த்து விடு.நீ தெய்வம்.
கண்ணதாசா...சாபமிடு !

திங்கள், 24 ஜூன், 2013

காதலில் ஏமாந்த நடிகைகள்.

ஒரே துறையில் இருப்பவர்கள் காதல் வயப்படுவது கலியாணம் செய்து கொள்வது இயல்புதான்.
தமிழ்ச்சினிமாவுக்கு காதல் அந்நியப்பட்டதல்ல.ஊமைப்படமாக இருந்த காலத்தில் உள்ளத்துக்குள்ளேயே காதலை வளர்த்துக் கொண்டார்கள்.பேசும் படமாக அடுத்த பரிணாமத்தை தொட்டபோது காதலும் பேசத்தொடங்கியது ஆனால் .எல்லோருடைய காதலும் வெற்றி பெற்றதில்லை.
காரணம் ?
அனுசரித்து போதல் என்பதற்கு தமிழ்ச் சினிமாவில் மற்றொரு அருத்தமும் உண்டு.அந்த அனுசரித்தலை விரும்பாத நடிகையர் அதிலிருந்து விடுபடுவதற்காக காதலில் வீழ்வார்கள்.அதை சிலர் பயன் படுத்திக் கொள்வார்கள்.நடிகையரும் அதை உண்மையென நம்பி தன்னை இழப்பது வழக்கம்.சமீபத்திய சான்று ஜியா கான்.
இந்திப்பட உலகில் குருதத் .இவர் சிறந்த நடிகர்.இன்றும் பேசப்படுகிறவர்.காதலில் தோல்வி.தாங்கமுடியவில்லை.இன்னுயிரை இழந்தார்.
பர்வீன் பாபி செத்து 3 நாட்களுக்கு பிறகுதான் அவரது சாவு உலகத்திற்கு தெரிந்தது.இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரை நேசித்து தோற்று முகம் மாறி இறந்து கிடந்தார்.
திவ்ய பாரதி ,சிலுக்கு சுமிதா இவர்களின் தற்கொலைக்கும் காதல் தோல்விதான் காரணம்.
படாபட் ஜெயலட்சுமி தமிழ்ச்சினிமாவின் முடிசூடா மன்னர்களில் ஒருவரின் உறவினரை காதலித்தார்.கை கூட வில்லை.தற்கொலை !
ஷோபா 17 வயதிலேயே தூக்கில் தொங்கிவிட்டார்.
திவ்யபாரதி தற்கொலை செய்த போது 19 வயது.
22 வயதில் மயூரி மாண்டார்.அவ்வளவு சிறிய பருவத்தில் சாவதற்கு துணிந்தார்கள் என்றால் ஏமாற்றம் எந்த அளவுக்கு அவர்களை அறுத்திருக்க வேண்டும்?
பிரத்யுஷா காருக்குள் நச்சருந்தி செத்தார்,சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்டதற்கும் காதல் தோல்விதான் காரணம்.கோழி கூவுது விஜி உதவி டைரக்டர் ஒருவரை காதலித்து ஏமாற்றம் அடைந்து உயிர் இழந்தார்.
இத்தனையும் எதற்காக சொல்கிறேன் என்றால் காதலித்து பின்னர் ஏமாற்றுகிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை .அரசியல் ,பணம் ,செல்வாக்கு அவர்களை காப்பாற்றி விடுகிறது.




ஞாயிறு, 23 ஜூன், 2013

நரகத்தில் பயணித்தேன் --நடிகர் விஷால்.

ஞாயிறு விடுமுறை நாள் என்றாலும் திரைப்பட விழாக்கள் செய்தியாளர்களை விடுவதில்லை.
."மனதில் இடம் பிடித்தவர் சமந்தா "என்பதை சித்தார்த் மதியம் சொல்லி விருந்து கொடுத்தார்.இனி பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார்.
"உங்களுக்கு சித்தார்த் என புத்தரின் பெயரை வைத்திருக்கிறார்கள் ,ஆனால் உங்களை சுத்தி நடிகைகளை பத்திய கிசு கிசு நிறைய அடிபடுதே ?"என் தினமலர்  மீனாட்சிசுந்தரம் கேட்க அதற்கு சித்தார்த் சாமர்த்தியமாக "துறவு பூண்ட பின்னர்தான் புத்தர்"என பதில் சொன்னது ரசிக்கும்படியாக இருந்தது.
அன்று மாலையே 'பட்டத்து யானை "ஒலித்தட்டு வெளியீடு..
தேமுதிக விலிருந்து அம்மா பக்கம் ஒதுங்கி இருக்கும் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படம்..முதன் முதலாக அம்மாவிடம் சரண்டர் ஆன மதுரை தேமுதிக எம்.எல்.ஏ.விழாவுக்கு வந்திருந்தார்.
"நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் தெரியுமா?'என அதிர்ச்சியை கொடுத்தவர் அதற்கான விளக்கமும் சொன்னார் ,"பல படங்களை விநியோகம் செய்திருப்பதாக "சொன்னார்..விநியோகஸ்தரை நடிகர் சங்கத்தில் சேர்த்து கொள்வார்கள் அவர் நடிகராக இருந்தால்!
இவர் நடிகரா என்பதை விஜயகாந்திடம்தான் கேட்க வேண்டும்.
நா.முத்துகுமார் பேசும்போது "பூபதி பாண்டியன் பாட்டெழுத சொன்னபோது ஹார்ட்டுக்கு குளுகோஸ் ஏத்தின மாதிரி இருந்தது "என்றார்.எப்படித்தான் யோசிப்பார்களோ தெரியவில்லை..நீரிழிவு நோயாளிகளுக்கு சில முத்தின கேஸ் களுக்குதான் ஹார்ட்டில் குளுகோஸ் போகும்..
சரி விடுங்கள்.அடுத்து விஷால்.
"கடந்த வருஷம் நான் நரகத்திற்குள் பயணித்தேன்."என பட்ட அவஸ்தைகளை  சொல்லாமல் பொதுவாக சொன்னார். அந்த நரக பயணத்தையும் சொல்லியிருந்தால் மறுநாள்  அதுதான் பரபரப்பு செய்தி,
நண்பேன் டா ஆர்யாவும் வந்திருந்தார்.ஏனோ தெரியவில்லை நடிகர் விஷால்.மெலிந்திருந்தார்.