சனி, 29 ஜூன், 2013

விஜயகாந்த் கட்சி ஆட்சிக்கு வருமா?

விஜயகாந்த் கட்சி ஆட்சி ஆட்சியை பிடிக்குமா என்பதை விட ஆட்சிக்கு வருமா என சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தே .மு.தி.க கட்சியினர்.இப்போது பேஸ்புக் மற்றும் இதர வலைத்தளங்களிலும் திமுக-அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்து கடுமையாக சொல்லப்படுகின்றன.அவை எல்லையை தாண்டியும் இருக்கின்றன.
இது சரிதானா,நியாயம்தானா என அலசுவதைவிட அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக எந்த கட்சி இருக்கிறது என எவருமே நினைப்பதில்லையோ என தோன்றுகிறது.
தனி மனித விமர்சனம் தான் மேலோங்கி இருக்கிறது
"ஊழல் மலிந்த கட்சி திமுக. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தின் கையில் சிக்கி இருக்கிறது.அதிகாரப்பகிர்வுகள் அவர்களுக்குள்ளேயே நடக்கிறது."என அதிமுகவினர் சொல்கிறார்கள்.
இதைப்போல "புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் சர்வாதிகார பிடிக்குள் சிக்கியிருக்கிறது அரசு .நிர்வாகத்தில் ஊழல் மலிந்திருக்கிறது.சொத்துக்குவிப்பு  வழக்கினை இழுத்தடிப்பதின் காரணமே மாட்டிக்கொள்வோமோ என்கிற பயம்தான்"என திமுகவினர் சொல்கிறார்கள்.
இவர்கள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டாலும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழலை ஒழிப்பதற்கு எந்த வித முனைப்பும் காட்டுவதில்லை.சோதனை,வழக்கு பதிவு என செய்திகளுக்குள் முடக்கி விடுகிறார்கள்.
உன்னை நான் இப்படிதான் பாவிப்பேன் ,நீ ஆட்சிக்கு வந்துவிட்டால் இதைப்போலவே என்னை பாவிக்க வேண்டும் என எழுதப்படாத ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பார்களோ என்றுதான் சாமான்யன் நினைக்கிறான்
இந்த இரு கழகங்களுக்கு மாற்றாக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எந்த கட்சி வலிமையாக இருக்கிறது?
யோசியுங்கள்?
காங்கிரஸ் வருமா?செல்வாக்கு இருக்கிறதா?திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்வதே வசதி என நினைத்து தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கவில்லை.கோஷ்டியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கட்சிக் கூட்டம் என்றால் எவனுடைய  வேட்டி உருவப்படும் யாருடைய சட்டை கிழிக்கப்படும் என்பது தெரியாது.இந்த கட்சி ஆட்சியை பிடிக்குமா?
பிடிக்காது.எந்த கழகத்துடன் இந்த கட்சி கூட்டணி வைக்குமோ அந்த கட்சிக்கு இவர்களின் தோழமை அவசியப்படுகிற பட்சத்தில் பதவி கிடைக்கலாம்.அந்தளவில் ஆட்சிக்கு வரலாம்.வரப்போகிற தேர்தலில் இதை நிபந்தனையாக வைப்பார்கள் என தோன்றுகிறது.
அடுத்து பா.ஜ.க.!அகில இந்திய கட்சி என்றாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அளவுக்கு கூட வளர்ச்சி இல்லை.மேலும் இதை மதவாத கட்சியாக பார்க்கிறார்கள்.
அடுத்து தே .மு.தி.க.!
அணிக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை !
கழகங்களால் கூட்டு மறுக்கப்பட்டு தனிமைப்படும் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அந்த உதிரிகளுக்கு தலைமை தாங்கலாம்.இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்குமா?
மதிமுக,பா.ம.க.,இடது வலது கம்யூ.கட்சிகள் ,இசுலாமிய அமைப்புகள் ,தொல்.திருமா. இவை எல்லாம் ஒன்றிணைந்து வந்தாலும் அந்த அமைப்பில் தே .மு.தி.க.அமைப்பு சேருமா?
யார் தலைமை என்பதில் சண்டை வரும்.வைகோவா,விஜயகாந்தா,டாக்டர் ராமதாசா யார் அணிக்கு தலைவர் என்பதில் சிக்கல் வரும்.
எல்லாம் சரி இந்த கட்சிகள் ஒன்று சேருமா?சேரவே சேராது.!
தனித்து ஆட்சியை பிடிப்போம் என பா.ம.க.சொல்கிறது/.
பாடம் கற்பிப்போம் என விஜயகாந்த் சொல்கிறார்.
மொத்தத்தில் 'தமிழின நலம்'மறக்கப்பட்டு சுயநல கழகம் ஏதாவது ஒன்றே ஆட்சியில் அமரும் வாய்ப்பு ஏற்படலாம்.






புதன், 26 ஜூன், 2013

கண்ணதாசா...சாபமிடு !

கண்ணதாச மன்னா.,வணங்குகிறேன்.
"சாதியைப் புலமாய்க் கொண்டு
தலைவர்கள் அமைந்தால் ,ஆங்கு
நீதியே அமைவதில்லை.
சாதியே.!பேயே!சாவின்
தளத்திலே கிடந்த உன்னைத்
தேர்தலால் மீண்டும் கொண்டு திணித்தவர் அழத்தான் வேண்டும்."
என நொந்து பாடியவன் நீ!
இன்று சாதித் தலைவர்கள்
உனது வெண்கலமேனிக்கு
மாலைகள் சாத்துகிறார்கள்..
 உனக்கு மணக்காது
அந்த சாதிய தலைகள் தொட்டு
கைகள் பட்ட மாலையால்!
அவைகெட்டுப்போனவை!



உள்ளத்தில் கள்ளம் வைத்தவர்கள்
பள்ளம் கண்டு பாயும் மனம் படைத்தவர்கள்,
தமிழினத் தலைவர்களாக
பவனி வருகிறார்கள்.
இதை யெல்லாம் நீ அன்றே உணர்ந்ததால் தான்,
"இன்னுமொரு  புது வாழ்வு தமிழுக்கில்லை,
இன்றோடு தமிழழியும் ! வருங்காலத்தில்
மன்னுபுகழ்த் தமிழ்க்  குலமும் மாண்டு போகும் !" என
பாடி வைத்தாயோ!
இனம் வாழ  பிரபாகரன் என
மாவீரன்  வந்தான்.மானம் காத்தான்.
கூற்றும் நெருங்காமல் கொடு நோயும் அண்டாது
வீரம் காத்த அவனை புறமிருந்து
கொன்றனர் .அய்யகோ
அவர்கள் தமிழினத் தலைவர்களாம்.!
கண்ணதாசா!சாபமிட்டு அவர்களை.
சாய்த்து விடு.நீ தெய்வம்.
கண்ணதாசா...சாபமிடு !

திங்கள், 24 ஜூன், 2013

காதலில் ஏமாந்த நடிகைகள்.

ஒரே துறையில் இருப்பவர்கள் காதல் வயப்படுவது கலியாணம் செய்து கொள்வது இயல்புதான்.
தமிழ்ச்சினிமாவுக்கு காதல் அந்நியப்பட்டதல்ல.ஊமைப்படமாக இருந்த காலத்தில் உள்ளத்துக்குள்ளேயே காதலை வளர்த்துக் கொண்டார்கள்.பேசும் படமாக அடுத்த பரிணாமத்தை தொட்டபோது காதலும் பேசத்தொடங்கியது ஆனால் .எல்லோருடைய காதலும் வெற்றி பெற்றதில்லை.
காரணம் ?
அனுசரித்து போதல் என்பதற்கு தமிழ்ச் சினிமாவில் மற்றொரு அருத்தமும் உண்டு.அந்த அனுசரித்தலை விரும்பாத நடிகையர் அதிலிருந்து விடுபடுவதற்காக காதலில் வீழ்வார்கள்.அதை சிலர் பயன் படுத்திக் கொள்வார்கள்.நடிகையரும் அதை உண்மையென நம்பி தன்னை இழப்பது வழக்கம்.சமீபத்திய சான்று ஜியா கான்.
இந்திப்பட உலகில் குருதத் .இவர் சிறந்த நடிகர்.இன்றும் பேசப்படுகிறவர்.காதலில் தோல்வி.தாங்கமுடியவில்லை.இன்னுயிரை இழந்தார்.
பர்வீன் பாபி செத்து 3 நாட்களுக்கு பிறகுதான் அவரது சாவு உலகத்திற்கு தெரிந்தது.இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரை நேசித்து தோற்று முகம் மாறி இறந்து கிடந்தார்.
திவ்ய பாரதி ,சிலுக்கு சுமிதா இவர்களின் தற்கொலைக்கும் காதல் தோல்விதான் காரணம்.
படாபட் ஜெயலட்சுமி தமிழ்ச்சினிமாவின் முடிசூடா மன்னர்களில் ஒருவரின் உறவினரை காதலித்தார்.கை கூட வில்லை.தற்கொலை !
ஷோபா 17 வயதிலேயே தூக்கில் தொங்கிவிட்டார்.
திவ்யபாரதி தற்கொலை செய்த போது 19 வயது.
22 வயதில் மயூரி மாண்டார்.அவ்வளவு சிறிய பருவத்தில் சாவதற்கு துணிந்தார்கள் என்றால் ஏமாற்றம் எந்த அளவுக்கு அவர்களை அறுத்திருக்க வேண்டும்?
பிரத்யுஷா காருக்குள் நச்சருந்தி செத்தார்,சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்டதற்கும் காதல் தோல்விதான் காரணம்.கோழி கூவுது விஜி உதவி டைரக்டர் ஒருவரை காதலித்து ஏமாற்றம் அடைந்து உயிர் இழந்தார்.
இத்தனையும் எதற்காக சொல்கிறேன் என்றால் காதலித்து பின்னர் ஏமாற்றுகிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை .அரசியல் ,பணம் ,செல்வாக்கு அவர்களை காப்பாற்றி விடுகிறது.




ஞாயிறு, 23 ஜூன், 2013

நரகத்தில் பயணித்தேன் --நடிகர் விஷால்.

ஞாயிறு விடுமுறை நாள் என்றாலும் திரைப்பட விழாக்கள் செய்தியாளர்களை விடுவதில்லை.
."மனதில் இடம் பிடித்தவர் சமந்தா "என்பதை சித்தார்த் மதியம் சொல்லி விருந்து கொடுத்தார்.இனி பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்திப்பேன் என வாக்குறுதியும் கொடுத்தார்.
"உங்களுக்கு சித்தார்த் என புத்தரின் பெயரை வைத்திருக்கிறார்கள் ,ஆனால் உங்களை சுத்தி நடிகைகளை பத்திய கிசு கிசு நிறைய அடிபடுதே ?"என் தினமலர்  மீனாட்சிசுந்தரம் கேட்க அதற்கு சித்தார்த் சாமர்த்தியமாக "துறவு பூண்ட பின்னர்தான் புத்தர்"என பதில் சொன்னது ரசிக்கும்படியாக இருந்தது.
அன்று மாலையே 'பட்டத்து யானை "ஒலித்தட்டு வெளியீடு..
தேமுதிக விலிருந்து அம்மா பக்கம் ஒதுங்கி இருக்கும் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள படம்..முதன் முதலாக அம்மாவிடம் சரண்டர் ஆன மதுரை தேமுதிக எம்.எல்.ஏ.விழாவுக்கு வந்திருந்தார்.
"நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் தெரியுமா?'என அதிர்ச்சியை கொடுத்தவர் அதற்கான விளக்கமும் சொன்னார் ,"பல படங்களை விநியோகம் செய்திருப்பதாக "சொன்னார்..விநியோகஸ்தரை நடிகர் சங்கத்தில் சேர்த்து கொள்வார்கள் அவர் நடிகராக இருந்தால்!
இவர் நடிகரா என்பதை விஜயகாந்திடம்தான் கேட்க வேண்டும்.
நா.முத்துகுமார் பேசும்போது "பூபதி பாண்டியன் பாட்டெழுத சொன்னபோது ஹார்ட்டுக்கு குளுகோஸ் ஏத்தின மாதிரி இருந்தது "என்றார்.எப்படித்தான் யோசிப்பார்களோ தெரியவில்லை..நீரிழிவு நோயாளிகளுக்கு சில முத்தின கேஸ் களுக்குதான் ஹார்ட்டில் குளுகோஸ் போகும்..
சரி விடுங்கள்.அடுத்து விஷால்.
"கடந்த வருஷம் நான் நரகத்திற்குள் பயணித்தேன்."என பட்ட அவஸ்தைகளை  சொல்லாமல் பொதுவாக சொன்னார். அந்த நரக பயணத்தையும் சொல்லியிருந்தால் மறுநாள்  அதுதான் பரபரப்பு செய்தி,
நண்பேன் டா ஆர்யாவும் வந்திருந்தார்.ஏனோ தெரியவில்லை நடிகர் விஷால்.மெலிந்திருந்தார்.


சனி, 22 ஜூன், 2013

மக்கள் திலகத்தை இழிவுபடுத்தலாமா?

மிமிக்ரி பண்ணுகிறவர்கள் காமடிக்காக யாரையும் பயன்படுத்தலாம் என்கிற மனநிலையில் உள்ளவர்கள்தான்.
ஆனால் அந்த காமடி சிரிக்க வைக்கிறதா ,அல்லது நோகடிக்கிறதா என்பதை கவனிப்பதில்லை.அதில் அக்கறை கொள்வதுமில்லை.
அதுவே அவர்களின் கறையாகிவிடுகிறது.
தொலைக்காட்சிகளில் அவர்கள் படுத்துகிற பாடு தாங்க முடியவில்லை.அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறவர்கள் மட்டுமே சிரித்து தொலைகிறார்கள் .நம்மால் கொஞ்சம் கூட சிரிக்க இயலவில்லை.
இன்று [ஜூன் 22 ]விஜய் தொலைக்காட்சியில் அது இது எது என்கிற நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மூவரை சிரிக்கவைக்க வேண்டும் என்பதற்காக மூவர் வந்தனர்.
அவர்களில் ஒருவர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரைப் போல் வேடமிட்டிருந்தார்,வாயைக் கோணிக் கொண்டு எம் .ஜி.ஆரைப் போல் பேசியபடி சிரிக்கவைக்க முயன்றார்.அதற்காக அவர் மக்கள் திலகத்தை இமிடேட் பண்ணி  இழிவு படுத்தியதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
 மக்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்துள்ள மாபெரும் தலைவர்களை மிமிக்ரி பண்ணுவது தவிர்க்கப்படவேண்டும். .இவர்களால் 'அம்மா'வை இமிடேட் பண்ணமுடியுமா?சொல்லுங்கள் !
சிலர் சிலரை போல் பேசி மிமிக்ரி பண்ணுவது அசலுடன்  ஒட்டுவதுமில்லை.அவர்களாக நினைத்துக் கொள்வார் கள் போலும்

டி.வி.களும்  எப்படியாவது நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருப்பதால் வரட்சியான நிகழ்ச்சிகளை அந்த மாதிரியான ஆட்களை வைத்து நடத்துகின்றன.
அவர்களுக்கு கற்பனை எந்த அளவுக்கு வரண்டு போயிருக்கிறது என்பது நமது கையில் இருக்கிற  'ரிமோட் கண்ட்ரோலுக்கு'தான் தெரியும்.
மிமிக்ரி என்கிற பெயரில் நடக்கிற இழிவான் நிகச்சிகளை தவிர்க்க முடியாதா?

உண்மை விளம்பியா காம விரும்பியா?

இந்த படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் லிசி டர்னர் இவருக்கு பனிரெண்டு வயது மகள் இருக்கிறாள் .
என்ன நினைத்தாரோ தெரியவில்லை.தன்னுடைய பனிரெண்டாவது வயதில் கற்றுக் கொண்ட காமத்தை இப்போது பகிரங்கப் படுத்தி இருக்கிறார்.தன்னுடைய மகளும் அப்படி போய் விடக்கூடாது என்கிற தொனியை விட அன்று கற்றுக்கொண்ட போது அடைந்த பேரின்பம் பற்றிய சுகம்தான் இருக்கிறது
அவருக்கு பனிரெண்டு வயதில் காமத்தைக் கற்று கொடுத்த கேரியை சமீபத்தில் சந்தித்த அந்த நிகழ்வு கூடபகிரங்க வாக்குமூலத்துக்கு  காரணமாக இருக்கலாம்.
 " தனக்கு கிதார் கற்றுக்கொள்வதற்காக அம்மா கொடுத்த பணத்தில் செக்சை கற்றுக்கொண்டேன்,முதலில் முத்தம் என தொடங்கி படிப்படியாக முன்னேறி பதினாலாவது வயதில் செக்சை முழுமையாக கற்றுக் கொண்டேன் கேரியிடம்.அப்போது அடைந்தது பேரின்பம்."என்கிறார் லிசி.
இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெருமையா,சிறுமையா என்பதெல்லாம் அந்தந்த நாட்டின் கலாசாரம் சார்ந்தது.
கவியரசின் வனவாசம் படித்தவர்களுக்கு அவர் சிற்றின்பம் நாடி சென்றதெல்லாம் தெரியும்.
அவர் ஆணாக இருந்ததால் அவர் அரசியலிலும் சினிமாவிலும் ஆளுமையு டன் திகழ்ந்ததால் அவரை விமர்சிக்க அரசியல் எதிரிகளால்  மட்டுமே முடிந்தது.இலக்கிய உலகம் அமைதி காத்தது.
இதை ஒரு பெண்ணால் சொல்லமுடியுமா ?
சொன்னால் ஒரு விபசாரியின் கதை என  புத்தகம் போட்டிருப்போம்.
ஆக ஆண்  ஆதிக்கம் என்பது  நமது பண்பாட்டில் ஒன்றாகி விட்டது.
நாகரீகம் வளர்ச்சி பெற்று வருகிற நாட்டில் ஒரு பெண்ணால் தனது இளமைக்கால நிகழ்வுகளை சொல்வது குற்றமென கொள்ளப்படவில்லை.'
அங்கே செக்ஸ் என்பது மனித அவசியங்களில் ஒன்றாகிவிட்டது.பல் தேய்ப் பதை போல தனது காமத்தையும் ஒன்றென நினைக்கிறார்கள்.
அது தற்போது நமது நகரங்களிலும் நிகழ்கிறது.பகிரங்கமாக சொல்வதில்லை
சொன்னால் படுகொலைகள் நிச்சயம்.
ஆனால் பண்பாடு பற்றி உயர்வாக பேசிக்கொண்டிருக்கிறோம்.

செவ்வாய், 18 ஜூன், 2013

பென்ஸ் காரும்,நடிகர் திலகமும்.!

ஜூலை 21.நடிகர் திலகம் மறைந்த நாள்.
ஜூலை 21 நான் பிறந்த நாள்.
மனச்சுமைகளுடன் அவரது இல்லத்துக்கு விக்ரம் பிரபுவை பார்க்க சென்றேன்.
நடிகர் திலகம்  பயன்படுத்திய 'இம்பாலா' கார் ஒரு பக்கம் மூடி வைக்கப்பட்டிருந்தது.
நினைவுகள் பின்நோக்கிப் பயணித்தது.
ஒரு நாள்------
காரோட்டியின் பக்கமாக நான்.
பின்பக்க ஆசனத்தில் நடிகர்திலகமும்,மேஜர் சுந்தர ராஜனும் !
அன்றைய நிகழ்வுகள்,அரசியல்கள் என பல அலசப்பட்டன.
பேச்சின் இடையே "சுந்தராஜா...!பென்ஸ் கார்ல போகனும்டா!எல்லோரும் பெருசா பேசுறாங்க.பிளைட்ல போற மாதிரியே இருக்குமாமே..நீ போயிருக்கியா?"என்று கேட்டார் சிவாஜி.
"நீங்க வாங்கினா நானும் அதில வருவேன்.ராமு கிட்ட சொல்லுங்க."என பதில் சொன்னார் மேஜர்.
பென்ஸ் கார் புனேயில் இருந்து வரவழைக்கப்பட்டது.
 அண்ணன் சிவாஜி கணேசன் ஆசைப்பட்ட பென்ஸ் கார்.
அவர் பயணம் செய்த கார் அங்கு இல்லை.இம்பாலா கார் இருக்கும் பொது அந்த பென்ஸ் காரை காணவில்லை என்றால்.....
வேறு எங்கும் நிறுத்தப்பட்டிருக்குமோ?
அங்கு நீண்ட காலமாக பணியில் இருக்கும் நண்பரிடம் கேட்டேன்.
"அந்த காரைப் பார்க்கிற போதெல்லாம் கமலாம்மாள் அழ ஆரம்பித்து விட்டார்கள்..மாமா ..மாமா என கதறுவதை பார்க்க இயலாமல் விற்று விட்டார்கள்" என சொன்னார்,
வருகிற ஜூலை 21 நடிகர்திலகத்தின் நினைவு நாள்.


விஜய்யும் பிறந்த நாளும்...!

ஒரு நடிகன் தனது பிறந்த நாளை நற்பணிகளுடன் பெரிய அளவில் கொண்டாட நினைப்பது தமிழகத்தில் தவறாக கணிக்கப்படுகிறது.!கலைஞர்  கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்கு நீதிமன்ற உத்திரவு தேவைப்படுகிறது.இது இன்றைய நிலை!
இது சரியானதுதானா?
நடிகர் விஜய் அரசியல் சக்தியாக உருவெடுக்கக் கூடும் என அச்சப்படுகிறார்களா?
புரியவில்லை!
.நிகழ்ச்சியை  நடத்தலாம் என ஒப்புக்கொண்ட கல்லூரி நிர்வாகம் எவர் சொன்னதால் தந்த அனுமதியை திரும்பப்பெற்றது?
தமிழநாட்டில் நடிகர்களின் ஆளுமை என்பது  புதிது அல்ல.புதுமையும் அல்ல.
எம்.ஜி.ஆருக்குப் பின்னர் எந்த நடிகரும் அவரைப்போல் பின்பலம் உள்ளவராக இல்லை என்பது உண்மை.
ரஜினியை சொல்லலாம் ஆனால்  .அவரது ரசிகர்கள் அரசியல் ரீதியாக வளரவில்லை.வளர்க்கப்படவும் இல்லை..அனைத்துக் கட்சி களிலும் இருக்கிறார்கள்.அவர் அரசியலுக்கு வரப்போவதுமில்லை.
தேமுதிக மிகுந்த எதிர்பார்ப்புடன் வளர்க்கப்பட்ட கட்சி
.நிர்ணயம் செய்யக்கூடிய வாக்கு வங்கி  இக்கட்சிக்கு  பரவலாக இருந்ததால் பலம் மிக்க அதிமுக அக்கட்சியை கூட்டணியாக  அணைத்துக் கொண்டது.
அதன் சட்டமன்ற உறுப்பினர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு வருகிறது.
ஆக  வளர்ந்த கட்சிகளையே வளைத்து வீழ்த்தும் வல்லமை  மிக்கதாக ஒரு கட்சி இருக்கிறபோது ஒரு நடிகரின் பிறந்த நாள் விழா வைக்கண்டு அச்சம்  கொள்ளலாமா?
போதிய பாதுகாப்பு கொடுக்க இயலாது என சொன்னால் நீதிமன்ற உத்திரவுக்குப் பின்னர் கொண்டாடப்பட்ட திமுக விழாவுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டது?
எங்கேயோ தவறு இருக்கிறது.விஜய்யை இன்னும் வலிமை மிக்கவராக மாற்றக்கூடும்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

எம்.ஆர்.ராதா என்னை பெத்தது ஊருக்கு சேவை செய்யவாடா?

வருச நாடு இசைத்தட்டு வெளியீட்டு விழா ரொம்ப சூடாகவே நடந்து முடிந்தது..கெண்டை மீனாவது மாட்டாதா என்று காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு அன்று  விரால் மீனே மாட்டியது!செம ரைடு சினிமாக்காரகளுக்கு !
பொதுவாக ராதாரவி கலந்து கொண்டால் குறைந்தது  டபிள் கால மேட்டர் மாட்டும்.
அன்று பேசியவர்களில் சிலர் வம்படி யாக சொல்லி வசமாக மாட்டிக்கொள்ள  டவுசரை கிழித்து விட்டார் ராதாரவி
.நாயை அடிப்பானேன் அதன் கழிவை சொமப்பானேன் என்கிற அளவுக்கு பரிதாபிகளாகிவிட்டனர் சில காமடி நடிகர்கள்
வாசு பாஸ்கர் என்கிற டைரக்டர்அவருடைய  மறுபடியும் ஒரு காதல் படத்தின் போது நடந்த சம்பவத்தை சொல்லி நீதி கேட்டார்.
நடிகரின் பெயரை சொல்லாமலேயே குற்றம் சாட்டினார்.
பிரபலமாக இருக்கிற ஒரு காமடிப்புயலை படத்தின் புரமோஷனுக்காக கூப்பிட்டேன்.பிரபல தொலைக்காட்சியில் அவரின் பெயருடன் ஸ்க்ரோலும் போட்டார்கள் பிரஸ் மீட் நடக்கிறது வாங்கன்னு கூப்பிட்டேன்.இருபத்தி அஞ்சு லட்ச ரூபாயை வச்சா வருவேன்னுட்டார்,பத்திரிகையாளர் கூட்டத்துக்கு வருவதற்கு பணம் கேட்ட நடிகர் இவர்தாங்க,அந்த நடிகர் வராததால் எனக்கு நஷ்டம்.அந்தடி வி.இடமும் கெட்ட பெயர் வாங்கிட்டேன் என்று பேசினார்.
பதில் சொல்ல வந்தார் ராதாரவி முதல் அடி சில காமடி நடிகர்களுக்கு.!
"முதலில் சங்கத்தில மெம்பராகுங்க,நடிகர்களின் குறைகளை களைவதற்காகவே சங்கம் இருக்கு.பிரச்னைன்னா ஓடி வர்றீங்க.காரியம் முடிஞ்சதும் அவ்வளவுதான்.அதனால முதலில் சங்கத்தில் மெம்பராகுங்க. எங்கப்பன்எம்.ஆர். ராதா என்னை பெத்துப்போட்டது ஊருக்கு சேவை செய்யிறதுக்கா?
வாசுபாஸ்கர் ஒரு சிரிப்பு நடிகரை பத்தி சொன்னார்?அடப்பாவி! படத்தின் புர மோசனுக்கு கூப்பிட்டா அதுக்கு இருபத்தி அஞ்சு லடசமா?அந்த நடிகரின் பேரை தலைவர் கேட்கிறார் சொல்லு "என்று காரசாரமாக பேசி அமர்ந்துவிட்டார்.
அந்த காமடி நடிகர் இப்பவும் திருந்தின மாதிரி இல்லை,


செவ்வாய், 4 ஜூன், 2013

தமிழ்ப்பட விழாக்களை வெளி நாட்டில் நடத்தலாமா?

ரொம்ப நாளாவே மனசை அரிக்கிற கேள்வி இது?
வடக்கு வாழுது தெற்கு தேயுதுன்னு சொல்லி அரசியல் வளர்த்ததினாலேயோ என்னவோ எத்தனையோ சூப்பர் படங்களின் விழாக்களை சென்னையில் நடத்திய தமிழ்ச சினிமா தயாரிப்பாளர்கள் இப்ப வெளிநாடுகளுக்கு ஓடுறதின் காரணம் என்ன?புரியலிங்க.சத்தியமா புரியலிங்க.!
எல்லா மீடியாக்களையும் கூப்பிட்டு ஆடியோ வெளியிடுவாங்க.பிறகு சில டிவி.களின் ஆதிக்கம் தயாரிப்பாளர்களை அழுத்த ,அந்தந்த டி.வி.ஆபிஸ்களில்  நடத்தி விட்டு பிறகு பத்திரிகைகள் கோபத்துக்கு ஆளாவானேன்னு அவங்க முன்னாலும் ஒப்புக்கு விழா நடத்தினாங்க.இப்பவும் தொடருது.
ஆனா ரஜினியின் படவிழாவை  வெளிநாட்டில நடத்தியதும் அந்த 'கேந்தி' இப்ப
மத்த தயாரிப்பாளர்களையும் தொத்திக் கொண்டிருக்கிறது.சமீபத்தில் நாலு பட விழாவை  ஒட்டு மொத்தமாக வெளிநாட்டில் நடத்திஇருக்கிறார்கள்.
சென்னையில் விழா நடந்த காலத்தில் மதுரை,திருநெல்வேலி திருச்சி,கோவை ஆகிய இடங்களில் நடத்துவோமே என்கிற எண்ணம் இல்லாதவர்கள் இப்போது வெளிநாடுகளுக்குப் போவது ஏன்?
மதுரையை அடுத்த தேனியில் பாரதிராஜா நடத்தினார்.டிக்கெட் இல்ல.கோவையிலும் விழா நடந்தது .டிக்கட் இல்ல.ஆனா டி .வி.யில் நடத்தினா துட்டு.வெளிநாட்டில நடத்தினா பெருமளவில் துட்டு.அங்குள்ள தமிழர்களின் காசு கிடைக்கும்.சினிமாக்காரர்களை ரொம்பவும் லவ் பண்றவங்க அவங்க .அதிகமா துட்டு வச்சிருக்கிறதும் அவங்கதான் .
தமிழ் நாட்டில் ரசிகனுங்க பைத்தியமா இருக்கிறவனுக.ஆனா ஆயிரக்கணக்கில டிக்கெட் கொடுத்து நிகழ்ச்சிக்கு வரமாட்டானுக,ஆனா நடிகனுக்காக உயிரையும் கொடுப்பாணுக. அவனுக ஏழைகள்.அதனால ஆடியோ விழாக்களிலும் காசு பார்க்கணும்னா வெளிநாடுத்தமிழர்கள்தான்  சரிப்படுவாங்க.
அதனால டேராவை தூக்கு.
எப்படி யுக்தி?இதானே உண்மை.!

திங்கள், 3 ஜூன், 2013

இந்த ஒரு நாளிலாவது விட்டு வைக்கக் கூடாதா?

முக நூலை திறந்தால்  ஒரு பக்கம் வாழ்த்துகளும் இன்னொரு பக்கம் வசவுகளுமாக கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்கள் .
வாழ்த்துவது உடன்பிறப்புகளின் கடமை.
இழித்துரைப்பது எவரின் கடமை?
அவன் மலர்மாலை அணிவிக்கிறான் என்றால்அவன்  கட்சிக்காரன்.பதவிகளை எதிர் பார்த்துக் காத்துக் கிடக்கிறவன்.
சாணம் எடுப்பவன் யார்?
எதிரியாக இருக்கலாம்.அவன் சாணத்தை கையில் எடுக்கும் போது முதலில் அசிங்கப்படுவது அவன்தான்.பின்னர்தான் எதிரி அசிங்கப்படுகிறான்.
கருணாநிதியும் அவரது கழகமும் தமிழர்க்கு எரிக்கும்  அமிலம் .இதில் மாறுபடவில்லை.ஈழத் தமிழரின் நான்காம் விடுதலைப் போரினை நசுக்கியதில் அவரும் அவரது கழகமும் முன்னிலையில் இருந்தன.மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சியாக இருந்ததாலும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சுகம் அனுபவித்ததாலும் இனப்படுகொலையை நடத்தி முடித்தார்கள்.
அவர்கள் மீண்டும் அரியணையில் அமரமுடியாது என்று இன்று சாணம் வீசுவோரால் உறுதி அளிக்க முடியுமா?
தமிழர் தமிழர் என குரல் விடுப்போர் ஓரணியில் நிற்பார்களா?அவர்களுடன் கூட்டணி வைக்காமல் இருப்பார்களா?
மாட்டார்கள் .அவர்களின் நோக்கம் பதவி சார்ந்தே இருக்கிறது.அதற்காக தமிழர் பெயரில் அறுவடை செய்யப் பார்க்கிறார்கள்..
பழ .நெடுமாறன்,வைகோ,திருமா,விஜயகாந்த் இவர்கள் ஓரணியில் நின்றால் தமிழ் விரோதிகளை ஒழிக்க முடியும். ராமதாஸ் தனது ஜாதி பற்றை மறக்க முடியாது. இவர்களுடன் சேர மாட்டார்.
ஆக தமிழர் இன அழித்தலுக்கு காரணமாக இருந்த திராவிட கட்சிகளை வீழ்த்த முடியாது. .இன உணர்வு உள்ள ஒவ்வொரு தமிழனும் கையில் சாணம் எடுப்பதைவிட ஓட்டு சீட்டினை எப்படி பயன் படுத்துவது என்பதில் ஓர் முடிவுக்கு வர வேண்டும்.
ஒருவரின் பிறந்த நாளன்று இழித்துரைத்தல் என்பதை கைவிட வேண்டும்.
அந்த ஒரு நாளா வது....?