சனி, 20 ஜூலை, 2013

வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார்.

அகவை எழுபத்தி ஐந்து எனக்கு!
கர்வமுடன் சொல்வேன் எழுபத்தி ஐந்தை தொட்டு விட்ட இளைஞன் நான் என்று.!
வயதும் இளமையும் முன்நோக்கி செல்பவை.பின் நோக்காது. 
..எண்ணங்களுக்கு வயது கிடையாது மூப்பு கிடையாது.அந்த சாதியை சேர்ந்த எழுத்தாளன் நான்.!
எண்ணங்கள் இளமையாக இருப்பதால் நானும் இளைஞனே!
பத்திரிகையாளன் மெத்த படித்த மேதாவிகளிடமும் பேசுவான்.ஆட்சியாளனிடமும் வினவுவான்.பாமரனிடமும் பேசுவான்.அவனுக்கு ஏற்ற தாழ்வு என்பது எதுவும் இல்லை.
நான் அரசியல் பத்திரிகையாளனாக இருந்த போது கர்ம வீரர் காமராஜர் ,மூதறிஞர் ராஜாஜி,முரட்டு முதல்வர் பக்தவச்சலம்,கலைஞர் கருணாநிதி ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ,செல்வி ஜெயலலிதா ,தோழர்கள் பி.ராமமூர்த்தி ,கே.டி.கே.தங்கமணி , மோகன் குமாரமங்கலம் என இன்ன பிற தலைவர்களுடன் வாதாடி இருக்கிறேன்.உரையாடி இருக்கிறேன்.
திரை உலகில் நடிகர் திலகம் முதல் இன்றைய இளம் நாயகர்கள் வரை எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.ஜூலை 21 -தான் எனது பிறந்த நாள் என்றாலும் முந்தைய நாள் சனிக்கிழமையன்றே என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
எனது நினைவில் இன்றும் நிழலாடி கொண்டிருப்பது மதுரை மண்டையனாசாரி தெரு.அங்குதான் தோழர் பி.ராமமூர்த்தி,கே.பி.ஜானகி அம்மாள் ஆகியோரிடம் விவாதித்திருக்கிறேன்.இதனால்தானோ என்னவோ கடுமையான கேள்விகளை கேட்கும் வழக்கம் என்னுள் இருக்கிறது.
மதுரை அரசினர் விடுதியில் தங்கி இருந்த அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்களிடம் அரிசி பிரச்னையை பற்றி கேட்ட போது “நீ என்ன வக்கீலா,போ..போ “என பதில் சொல்ல மறுத்து விட்டார்.அன்றைய கால கட்டத்தில் நான் ‘தமிழ்நாடுநாளிதழில் செய்தியாளன்
அந்த நாளிதழ் தனது பதிப்பை நிறுத்திய பின்னர் “மாலைமுரசுநாளிதழ் என்னை ஏற்றுக் கொண்டது.
தினத் தந்தி,மாலைமுரசு ஆகிய நாளிதழ்களின் செய்தியாளர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அனுமதிப்பதில்லை என்கிற நிலைபாட்டில் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்த கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
மதுரை பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
அண்ணன் மதுரை முத்து கூட்டி இருந்தார்.திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த பின்னர் அவர்  முதன்  முதலாக நடத்துகிற  பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
எனக்கு சொல்லப்படாவிட்டாலும் சென்று விட்டேன்
தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் செய்தியாளர்கள்!
.மற்றவர்கள்  என்ன நடக்கப் போகிறதோ என எதிர்பார்த்திருந்த நிலை.
“நான் மணி.!மாலை முரசு.!
அறிமுகம் செய்து கொண்டேன்.
முத்தண்ணன் பக்கமாக திரும்பிய எம்.ஜி.ஆர். சட்டென என்னைப்பார்த்து “உங்களை கூப்பிட்டிருக்க மாட்டாங்களே...என்னுடைய செய்திகளை தப்பா போடுவீங்களே?என்றார்.
என்ன சொல்லப் போகிறானோ என எதிர்பார்த்து சக நண்பர்கள்.பாலகுருவா ரெட்டியார்,அண்ணன் காளிமுத்து ,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் முகத்தில் குழப்பக் குறி.
“தலைவர் எம்.ஜி.ஆர் .பாண்டியன் ஹோட்டலில் நிருபர்களை சந்திக்கிறார் என கேள்விப்பட்டுதான்  வந்திருக்கிறேன்.என் டியூட்டி நியூஸ் கேதர் பண்ணுவது.அனுமதித்தால் பார்த்தது கேட்டதை எழுதுவேன்.இல்லாவிட்டால் கேள்விப்பட்டதை எழுதுவேன்.
எம்.ஜி.ஆரும்,முத்தண்ணனும் அவர்களுக்குள் பேசுகிறார்கள்.அவருக்கே உரிய கவர்ச்சியான அந்த மென்சிரிப்புடன்உக்காருங்கஎன்றார்.
அந்த நிகழ்வுக்கு பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரை வந்தால் “எங்கே மணி ?என கேட்காமல் இருக்கமாட்டார்.அந்த அளவுக்கு நான் அவரின் அன்புக்கு ஆளாகி விட்டேன்.அப்படி ஒரு சம்பவத்தில்தான் தினமலர் புகைப்படக்காரர் நண்பர் ராமகிருஷ்ணன் எடுத்த புகைப்படம்தான் இங்கிருப்பது. அண்ணன் நடிகர் திலகத்தின் பரம ரசிகன் நான்  என்பது தெரிந்த பின்னரும் என் மீது மிக அன்புடன் இருந்தார் மக்கள் திலகம்.அதற்கு இன்னொரு நிகழ்வும் சான்று.
சுற்றுப்பயணத்தின் போது என்னை நட்டாற்றில் விட்டு சென்ற கட்சி பத்திரிகையாளர்  கார்க்கியை தற்காலிக நீக்கம் செய்த  கண்டிப்பு நிறைந்த எம்.ஜி.ஆரை பார்த்து விக்கித்துப் போன  அந்த நிகழ்வையும் இனி சொல்வேன்.ஞாயிறு, 14 ஜூலை, 2013

லைலா-மஜ்னு.

லைலா-மஜ்னு.
பெர்சிய இலக்கியத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிற காதல் காவியம்.
பணம் இருந்தும் மனம் இல்லாத பெற்றோரால் புதை குழியில் தள்ளப்பட்ட இரு உயிர்களின் காதல் ஓவியம்.
எல்லாம் இருந்தது அந்த பெரும் தனவானுக்கு.
அவன் சார்ந்த பழங்குடி மக்களுக்கு  அவனே தலைவன்.
அரேபியாவில் சுல்தான்களுக்கு நிகராக மதிக்கப்பட்டான்.
காலிப்களுக்கு என்ன மரியாதையோ ,அவனுக்கும் இருந்தது,
சயீத் என்பது அந்த பணக்காரனின் பெயர்.
பழங்குடிமக்களுக்கு வள்ளல்.வாரி வாரி வழங்குவான்.
கையேந்தி நின்றவர்களின் குறை களைவான்.
அவனது மக்களால் கொண்டாடப்பட்டவன் சயீத்.
ஆனாலும் அவனுக்கு ஓர் குறை.
அத்தனை செல்வங்கள் இருந்தும் அதை அடுத்து ஆள்வதற்கும் ,ஈகை  என வருவோர்க்கு அள்ளிக் கொடுப்பதற்கும்  வாரிசு இல்லையே என்கிற  கவலை.
அழகிய தோட்டம்  இருந்தும் அதில் ஒற்றை ரோஜா கூடபூக்க வில்லை.என்றால் அவன் யாரை நோவான் இறைவனைத் தவிர !
அப்படியே கடந்து விடுமா?
பரந்து விரிந்த கண்ணுக்கு தெரிகிற பூமியில் அவனது கவலைக்கு மருந்து எதுவும் இல்லையா?
கடவுளை நம்பு.விடை கிடைக்கும்.நம்பினான்.
கஜானாவை திறந்து வைத்தான்.கைகள் வலிக்க வழங்கினான்.நோன்பிருந்தான்.
பிரார்த்தனைகள்.எத்தனையோ அத்தனையும் செய்தான்.
பலன் கிடைத்தது..அன்றலர்ந்த மலராக மகன் பிறந்தான்.
அவனின் பிறப்பு இரவை பகலாக்கியதைபோல ஒளிர்ந்தது சயீத்துக்கு.!
அவன் பிறந்த பதினைந்தாவது நாளில் பெயர் வைத்தனர் 'கயஸ் 'என்பதாக.!
இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் எல்லாமே இரகசியம் காக்கப்பட்டது என்பதுதான்!
தீய சக்திகளின் பார்வையில் அரும்பு பட்டுவிடக்கூடாது .பட்டால் கெட்டுவிடும் குடி என்கிற அச்சம் சயீத்துக்கு.!
 ஓராண்டு முடிந்தது.
கடவுளின் பிள்ளையாகவே கயசை கொண்டாடினார்கள்.
ஞானக்குழந்தையைப் போல அவனும் வளர்ந்தான்.
பள்ளியில் சேர்த்தனர்.சீமான் வீட்டுப்பிள்ளைகள் பயிலும் அந்த பள்ளிக்கு ஒரு நாள் புதிய மாணவி வந்து சேர்ந்தாள்
அவள் பெயர் லைலா!
லைல் என்றால் இருள் என்பது பொருள்.அவளின் அழகிய கூந்தல் காரிருளைப் போல கருமையாக இருந்தது .அவளின்  முகமோ ஒளி  வீசியது.மானின் கண்கள்.
அவள் அதிகம் பேசுவதில்லை.பேசினால் புன்சிரிப்பும் சேர்ந்திருக்கும்.நாணமுறும் போது அவளது பட்டுப்போன்ற கன்னங்கள் மேலும் சிவக்கும்.
காதல் என்றால் என்னவென தெரியாத பருவம் கயசுக்கு.!
லைலா என்றால் அவனது உயிர் என கருதினான்.
அவளும் அப்படியே நினைத்தாள் ,கயசை பார்க்காத நேரம் அவளுக்கு நெருப்பாய் கனன்றது.
காதல் என்பது திராட்சை ரசம் போன்றது.
அவர்கள் குழந்தைகள்.அவர்களுக்கு திராட்சை ரசம் பற்றி என்ன தெரியும்?
கோப்பை வழிய வழிய அருந்தினார்கள்.
நாளுக்கு நாள் அவர்களும் வளர்ந்தார்கள்.
மாந்தி மாந்தி அருந்திய அந்த காதல் ரசத்துக்கு அடிமையாகிப் போனார்கள்.
அவர்களுக்குள் அவர்கள் தொலைந்தும் போனார்கள்.
அடுத்து என்ன நடக்கும்?காத்திருங்கள் சொல்கிறேன்!சனி, 13 ஜூலை, 2013

என்னை அடிக்க வந்த டைரக்டர்.!

"விமர்சனம் எழுதுவதில்லையா ?"என நண்பர் கேட்டார்.
"இல்லை.எழுதியதால் ஏற்பட்ட விவகாரங்களை இப்போது அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்"என்றேன்.
"சுகமாக இருக்குமே?"
"சுவையாகவும் இருக்கிறது! என்னால் மறக்கமுடியாத ஒரு விவகாரம் சாதியைப் பற்றியதுதான் !"
"விமர்சனத்தில் சாதியைப் பற்றி குசும்பாக எழுதி இருந்தீர்களா"
"நான் சாதியைப் பற்றி எழுதுவதே இல்லை. என்னை பிராமணராக நினைத்துக் கொண்டு அடிப்பதற்கு ஒரு டைரக்டர் ஆபிசுக்கு வந்து விட்டார்."
"அது யாரயா அந்த டைரக்டர்.?"
"இப்பவும் இருக்கிறார்.ஒரு காலத்தில் ஓகோ என இருந்தவர்.நடிகர் திலகத்தை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.அவர் பெயரை சொல்லவேணாமே!புண் படக்கூடும்.!ஒருதலைராகம் படத்தில் நடித்த ரவீந்தர் நடித்த ஒரு படம் பற்றிய விமர்சனம்.வாகை சந்திரசேகரும் நடித்திருந்தார்......இரவை குறிப்பிடும் வகையில் படத்தின் டைட்டில்.அப்போது பிரபலமாக வளர்ந்துவந்த 'தேவி'வார இதழில் நான் பணியாற்றிவந்தேன்.விமர்சனத்தின் முடிவில் ஒரு படம் வைப்பது உண்டு.அது விமர்சனத்தை எதிரொலிப்பதாக இருக்கும்.
தன்னுடைய தலையிலிருந்து மழித்த முடியை இரு கைகளிலும் ஏந்தியபடி மொட்டைத்தலையுடன் ஒருவன் இருக்கும் படம்அது.
எம்.ஜி.ஆர்.நடித்த படத்தையே வெட்கக்கேடு என அந்த காலத்தில் விமர்சித்து வந்திருந்ததால் அந்த தைரியத்தில் நானும் அந்த'மொட்டை' படத்தை வைத்தேன்.
புதன்  அன்று தேவி வெளியாகியது.
அண்ணா சாலையில் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.
வேகமும் கோபமுமாக அந்த டைரக்டர் வந்தார்,என்னைப் பார்த்தார்.என்ன நினைத்தாரோ எதிரில் இருந்த 'மாலைமுரசு'அலுவலகம் சென்று துணை ஆசிரியராக இருந்த இளங்கோவை பார்த்து பேசி இருக்கிறார்.'அந்த பார்ப்பானுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி விமர்சனம் எழுதி படத்தை வச்சிருப்பான்.உங்க முதலாளி பி.ஆர்.ஆதித்தன் எப்ப வருவார்?அவரை நான் பார்க்கணும்.அவனை தூக்காம விடப்போறதில்லை 'என கோபமுடன் குமுற துணை ஆசிரியர் இளங்கோ 'என்ன நீங்க அவரைப் போயி  பார்ப்பான்னு  சொல்றீங்க.அவரு மதுரைக்காரர் .கம்பம் எம்.பி.ராஜாங்கத்துக்கு சொந்தம் ல! "என சொல்ல அப்படியே அமைதியாகிவிட்டாராம் .டைரக்டர்.
உண்மையில் நான் அந்த எம்.பி.யின் சொந்தக்காரன் இல்லை.அவரின் ஆவேசத்தை தணிப்பதற்காக இளங்கோ சொன்ன பொய்.இதை இளங்கோ சொன்ன பிறகு நான் அந்த டைரக்டரை பார்ப்பதில்லை .அவரும் என்னிடம் பேசுவதில்லை.என்னை தன்னுடைய சாதியாளாக எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டார்,
ஒரு பத்திரிகையாளனுடன் புகழ் பெற்ற டைரக்டர் பேசாமல் இருக்கமுடியுமா?
அவரின் பி.ஆர்.ஒ.மதி ஒளி செல்வத்தின் வழியாக என்னை வரவழைத்துப் பேசினார்.நாங்கள் சமாதானமாகி விட்டோம்.நடிகர் திலகம் நடித்து அவர் இயக்கிய ஒரு படத்தில் என்னையும் ஒரு காட்சியில்  நடிக்க வைத்து விட்டார்."என சொல்லி முடித்தேன்.
இப்போது நாங்கள் சந்திக்க நேர்ந்தால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என சிரித்துக் கொள்வோம். ..சாதனைதானே!

வெள்ளி, 12 ஜூலை, 2013

ஆரியர்கள் யார்?

ஆரியர்கள் யார்?
இவர்களைப் பற்றி சொல்வதற்கு புதிதாக ஒன்றுமில்லை.
பலர் பலவிதமாக சொல்கிறார்கள்
.இவர்கள் அன்னியர்கள் என்றாலும்,வந்தேறிகள் என்றாலும் இன்று நம்மிடையே வாழ்கிறார்கள் .நம்மில் கலந்தும் விட்டனர்.ஆக ஆரியர்கள் இவர்கள்தான் என எவர்க்கும் ஐ,எஸ்.ஐ.முத்திரை குத்திவிட முடியாது.ஆரியர்களின் வேர் பற்றி ஆய்வு செய்த ருசிய நாட்டை சேர்ந்த  அந்தோனவா-பொன்காரத் லெவின் என்பவர்கள் "இந்தியாவின் வரலாறு"
என்கிற புத்தகத்தில் பின்வருவனவாறு சொல்லியிருக்கிறார்கள்.
"ஆரிய மக்கள் என கருதப்படக்கூடியவர்கள் பண்டைய ஈரானியர்களும்,பண்டைய இந்தியர்கள் இந்தோ-ஆரியர்களும் தான்.அவர்களே தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்டார்கள் வாழ்ந்த இடங்களை ஆரிய வர்த்தம் அல்லது ஆரிய பூமி சொல்லிக் கொண்டார்கள்.
ஆரிய என்கிற சொல் ,அரி என்ற சொல்லுடன் தொடர்புடையது.

வேத காலத்தில் இந்த சொல்லுக்கு 'வெளி நாட்டான்'வேற்றான்'என்று பொருள்.

'ஆரியன்'என்ற சொல் 'வேற்றாருடன் இணைந்தவன்,அவர்களுக்கு இணக்கமானவன்'என்று பொருள் பட்டது.
பிற்காலத்தில் 'நல்குடிப்பிறந்தவன்'என்ற பொருள் இந்த சொல்லுக்கு ஏற்பட்டது.";என கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

காதலித்துப்பார்.

காதலித்துப்பார்.

சுலபமாக சொல்லி விடுகிறார்கள் கவிஞர்கள்.எழுதிவிடுகிறார்கள் எழுத்தாளர்கள்.
புனிதம் ,அற்புதம் , என சொல்லிவிடுகிறார்கள்.
ஆனால் எந்த அப்பனாவது தனது மகனையோ,மகளையோ 'காதலித்துப் பார்"என சொல்வானா?காதலை புனிதமாக ஏற்கும் அப்பன் சினிமாவில் இருப்பான்.அல்லது சூழ்நிலை அவனை ஏற்க வைக்கும்.எந்த பயமகனும் காதல் புனிதமானது என சொல்வதில்லை.
பாடத்தில் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வந்தால் அப்பனும் ஆத்தாளும் அடுப்படியில் நின்று கொண்டு "ஏண்டி ரெண்டு பேருக்கும் கனெக்ஷன் கினக்ஷன் இருக்குமோ"என அவர்களே சந்தேகம் வளர்த்துக் கொள்வார்கள்.
அதன் பிறகு அவர்களின் பார்வையே தவறான நோக்குடன்தான் இருக்கும்.அப்புறம் கண்காணிப்பு,மறைமுகமாக சாடை பேசுவது என அந்த பிள்ளையை படுத்தி எடுத்து விடுவார்கள்.
இந்த எழவுக்கு பேசாமல் காதலித்து தொலைவோமே என அவனோ ,அவளோ  வந்து விடுவார்கள்.இது ஒரு பக்கம்.
ஆனால் சமுதாயம் காதலை ஏற்கிறதா?
மறுக்கிறது.சாதி குறுக்கே நிற்கிறது.உயிர்ப்பலி வாங்குகிறது.கலப்புத்திருமணம் செல்லும் என சட்டம் இருக்கிறது.
என்ன பயன்?கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆதரவாக இருக்கிறதா?
எத்தனை போலீஸ் ஸ் டேஷன்களில் பஞ்சாயத்து நடத்தி பிரித்து அனுப்பி வைக்கிறார்கள்.கொலை செய்யப்பட்டு விட்டால் அதோ கதிதான்.
நீதி விசாரணை என்கிற பெயரில் நாடகம் நடத்துவதற்கு துணை நிற்கிறது.
சட்டம் ஒழுங்கு என்கிற போர்வையில் கலப்பு திருமணத்தை வதைக்கிறது.
எந்த நாதாரி சாதியை கண்டு பிடித்தானோ,அமர காவிய காதலர்கள் எல்லோருமே ஓன்று சேர்ந்து வாழ்ந்ததாக இல்லை.எல்லோருமே மண்டையை போட்டு விடுகிறார்கள்.

layla scattered the seeds  of love,.majnun waterd them with his tears"

என நிசாமி லைலா -மஜ்னு காதலைப் பற்றி சொல்கிறான்.கண்ணீரால் வளர்த்த காதல் என்னவாயிற்று?
மரணம் தானே?
மஜ்னுவை மறக்க இயலாமல் அவள் மாண்ட கதையைத் தானே சொல்கிறோம்.
ஜெயித்த காதலை சொல்கிறோமா?காதலின் பெருமை மரணத்தில் தான் இருக்கிறதா?அதனால்தான் காதலித்துப்பார் என்கிறோமா?

இனி சூர்யா சூப்பர் ஸ்டார்தான்...!

சிங்கம் 2 அமோக வசூலை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆந்திரா ,கேரளா,கன்னடம் என மூன்று மாநிலங்களிலும் மகசூல் அமோகம்  என மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் .
அதனை சென்னையில் சக்சஸ் மீட்டாக கொண்டாடினார்கள்.அனைவரின் பேச்சிலும் அடக்கம்  இருந்தது .
வேறு சில சக்சஸ் மீட்களையும் நான் பார்த்திருக்கிறேன்.சிலர் அந்த வெற்றிக்கு நாயகனையோ,இயக்குனரையோ காரணகர்த்தர்களாக்கி தங்களின் அடுத்த படத்துக்கு அங்கேயே அச்சாரம் போட்டுக் கொள்வர்.
ஆனால் இங்கே பயம் கலந்த மகிழ்ச்சி தெரிந்தது
சூர்யா பேசுகையில் மனம் திறந்து பேசினார்."எனக்கு தேவைப்பட்ட வெற்றி இது.அதற்காக காத்துக் கொண்டிருந்தேன்..இந்த மகத்தான வெற்றியை கொடுத்தவர்களை கரம் குவித்து வணங்குகிறேன்"என சொல்லி கை குவித்தார்.
தனது முந்திய தோல்விகளை மறக்காமல் சொல்கிற மனம் எல்லோருக்கும் இருப்பதில்லை.
"எனக்கு கல்யாணம் நடந்த பிறகு எனது படங்களை ஜோ பார்ப்பதில்லை.இந்த படத்தை பார்த்தபோது கைதட்டினார் .என்னுடைய அம்மா சிரித்தார்.என்னுடைய அப்பா எனக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.சிங்கம் 2 வில் என்னத்தை கழற்றப் போகிறார்கள் .தொழில் நுட்பத்தால்
ஓ ட்ட ப்பார்க்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்."என இண்டஸ்ட்ரியில் இருக்கிற சில நல்லவர்களின் மன ஓட்டத்தையும் சூர்யா நினைவு கூர்ந்தார்.
"கமல் சாரின் சில அப்ஸ் அண்ட் டவுனை படப்பிடிப்பு நேரத்தில் நாசர் சார் எனக்கு சொன்னார்.அவ்வளவு பெரிய நடிகருக்கு எத்தகைய வலிகள் என்பதை உணர்ந்து கொண்டேன்."என்றார்.
இயக்குனர் ஹரி தனக்கு சிங்கம் 2  பனிரெண்டாவது படம் .இந்த படத்தின் வெற்றியினால் இன்னும் கொஞ்ச காலம் சினிமாவில் இருக்கலாம் என சொன்னார்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.புதியவர்களின் வெற்றி ஹரி போன்றவர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"படம் வெற்றி பெற்று விட்டது என்று சூர்யாவிடம் சொன்னதும் அவர் என்னிடம் கேட்ட கேள்வி எல்லோருக்கும் லாபம் வருமா என்பதுதான்"என இசை அமைப்பாளர் தேவி பிரசாத் சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.

"சிங்கம்  படத்துக்குப்பிறகு சூர்யாதான் சூப்பர் ஸ்டார் என அடித்து சொல் கிறேன் "என ஓங்கி சொன்னவர் விஜயகுமார்..

இதைப்போல வேறு நடிகரின் விழாவில் சொல்லாமல் இருந்தால் சரி.


சனி, 6 ஜூலை, 2013

சாதியை ஒழிக்க இயலாது..

சாதியை ஒழிக்க இயலாது..

சாதி இரண்டு தான் அது ஆண்  சாதி பெண் சாதி என சொல்லும் போதே அது வெறும் காற்றுக் குமிழிகள் தான் என புரிந்து விடுகிறது.எப்படி இந்த சமூகத்தில் ஆணாதிக்கம் நிலை பெற்றுவிட்டதோ அதைப் போலவே தான் இந்த சாதியும் !
சாதி மறுப்பாளர்கள் என கட்சி நடத்துகிறவர்களில் எத்தனை பேர் உண்மையாக நடப்பவர்கள் என நினைக்கிறீர்கள்?
சொந்தங்களில் உறவு வைத்துக் கொள்வதில் அவர்கள் தீயாய் வேலை செய்வார்கள் ஒரு சிலர் விதி விலக்கு.உண்மையாய் இருப்பார்கள்.!

கடவுள் மறுப்பாளர்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி நடக்கிறார்கள்?

மனைவியர் கோவில்களுக்குப் போவதை தடுக்க இயலாத அவர்களுக்கு அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்கிற தகுதி இருக்கிறதா?

கேட்டால் தனிப்பட்டவர் விருப்பத்தில் தலையிடுவது தவ றானது என்பார்கள்.அப்படியானால் பொதுமக்களைப் பார்த்து கடவுளை மற என சொல்வது தவறில்லையா ?
ஒழிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.சாதி.அரசுக்கும் ஆண்மை இல்லை சாதியை தொடுவதற்கு.!
விண்ணப்பங்களில் சாதியை ஒழிக்க முடிந்ததா?
கலப்பு திருமணம் செல்லும் என சட்டம் இருந்தும் தருமபுரி கொள்ளி வைப்பு தவிர்க்க முடிந்ததா,தடுக்க முடிந்ததா?
சாதி வெறி இரயிலில் வந்ததால்தான் தண்டவாள கொலைகள் நடக்கின்றன போலும்!

நீராவியால் இயங்கும் இரயில் இந்தியாவுக்கு வந்த போது  அதற்கு உயர் சாதியினர் என சொல்லப்படுகிறவர்கள் அதற்கு வைத்த பெயர் 'கொள்ளிவாய்ப்பிசாசு.'

அந்த இரயில் வந்ததால்தான் கொடூரப் பஞ்சம் வந்தது என்றார்கள் தாது வருட பஞ்சம் எனப் பெயர்.
அந்த பஞ்சம் வந்தற்கான காரணமாக என்ன சொன்னார்கள் தெரியுமா?
"அந்த ரயிலில் உயர்ந்த சாதி,தாழ்ந்த சாதி என்கிற பேதம் பார்க்காமல் அருகருகே அமரலாம் "என வெள்ளையர் நிர்வாகம் அறிவித்ததே காரணம். கடவுள் பஞ்சத்தை ஏவி விட்டான் என்றார்கள்.
இப்படி சாதியை வளர்த்தவர்கள் மாறி வந்த கால மாறுதலினால் வெறியை குறைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர முற்றிலும் மறந்துவிடவில்லை.மாறவில்லை.
அரசாங்கம் ஆண்மையுடன் இருக்கவேண்டுமானால் சாதியக் கட்சிகள் காயடிக்கப்பட வேண்டும்.


ஷாருக் கான் செய்தது நியாயமா

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான்.
யாரும் மறுக்க இயலாது.
வசூல் சக்கரவர்த்தியாகவும் இருக்கிறார்.ஆமிர்கான்.சல்மான் கான் ஷாருக்கான் என்கிற கான்களின் வரிசையில் இவரைத்தான் KING OF KHANS என்கிறார்கள் 
இவரின் வயது நாற்பத்தி ஏழு.ஆர்யன் என்கிற மகனும் சுஹானா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
தற்போது மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.வாடகைத் தாய் வழியாக!
இதை மனைவி கவுரியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
மே  பதினேழாம் தேதி அந்த குழந்தை பிறந்ததாக மருத்துவ மனை பதிவேடுகள் தெரிவிக்கின்றன.
முழுக்க முழுக்க இது ஷாருக்கின் தனிப்பட்ட விஷயம்.இரகசியமானதும் கூட.!
தற்போது பிரச்னை ஆகி இருக்கிறது.
அந்த குழந்தை வாடகைத்  தாயின் வயிறில் வாழ்ந்த போது அது ஆணா ,பெண்ணா என்பதை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்பதே அந்த பிரச்னை..
பெண் சிசுக்கள் கருவிலேயே கண்டறியப்பட்டு அழிக்கப்படுவதை தடுப்பதற்காக அத்தகைய சோதனை நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் எந்த மருத்துவமனையிலும் அத்தகைய சோதனைகள் நடப்பதில்லை.
ஆனால்......?
செல்வாக்கு,அரசியல் பலம்,அதிகாரம் என வாழ்கிறவர்கள் இரகசியமாக அத்தகைய சோதனைகள் செய்து கொள்கிறார்கள்.
அப்படிதான் ஷாருக்கும் செய்திருக்கலாம்.இது யூகம்தான்,அவரின் வசதிக்கு இன்னொரு பெண் குழந்தை என்பது சுமை இல்லை.
பிறகேன் அப்படி ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது?
சோதனை நடக்காமலேயே அவர் மீது களங்கம் சுமத்துவதற்காக இப்படி ஒரு பழியா ?
"உங்களுக்கு குழந்தை பிறந்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?"என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு வழக்கமான அவரது பாணியிலேயே "ASK YOUR HEALTH  REPORTER?"என சொல்லி  சிரித்திருக்கிறார்.
"எனது பெர்சனல் ,இரகசிய மேட்டர் .மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த நிலை.நான் என்ன சொல்ல முடியும்?அதிகாரிகள் கண்டு பிடித்துக் கொள்ளட்டும் "என சொல்லி இருக்கிறார்.
லண்டன் குடியுரிமை பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டுப் பெண்ணை வாடகை தாயாக்கி இருக்கிறார் என மீடியாக்கள் சொல்கின்றன.
அவரை  முன்னரே பாகிஸ்தான் பிரபலங்கள் 'தங்கள் நாட்டுக்கு வந்து விடுமாறு"அழைப்பு விட்டிருந்ததை சிலர் இப்போது நினைவூட்டியிருக்கிறார்கள்.
ஷாருக் செய்திருப்பது நியாயமா?