சனி, 13 ஜூலை, 2013

என்னை அடிக்க வந்த டைரக்டர்.!

"விமர்சனம் எழுதுவதில்லையா ?"என நண்பர் கேட்டார்.
"இல்லை.எழுதியதால் ஏற்பட்ட விவகாரங்களை இப்போது அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்"என்றேன்.
"சுகமாக இருக்குமே?"
"சுவையாகவும் இருக்கிறது! என்னால் மறக்கமுடியாத ஒரு விவகாரம் சாதியைப் பற்றியதுதான் !"
"விமர்சனத்தில் சாதியைப் பற்றி குசும்பாக எழுதி இருந்தீர்களா"
"நான் சாதியைப் பற்றி எழுதுவதே இல்லை. என்னை பிராமணராக நினைத்துக் கொண்டு அடிப்பதற்கு ஒரு டைரக்டர் ஆபிசுக்கு வந்து விட்டார்."
"அது யாரயா அந்த டைரக்டர்.?"
"இப்பவும் இருக்கிறார்.ஒரு காலத்தில் ஓகோ என இருந்தவர்.நடிகர் திலகத்தை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.அவர் பெயரை சொல்லவேணாமே!புண் படக்கூடும்.!ஒருதலைராகம் படத்தில் நடித்த ரவீந்தர் நடித்த ஒரு படம் பற்றிய விமர்சனம்.வாகை சந்திரசேகரும் நடித்திருந்தார்......இரவை குறிப்பிடும் வகையில் படத்தின் டைட்டில்.அப்போது பிரபலமாக வளர்ந்துவந்த 'தேவி'வார இதழில் நான் பணியாற்றிவந்தேன்.விமர்சனத்தின் முடிவில் ஒரு படம் வைப்பது உண்டு.அது விமர்சனத்தை எதிரொலிப்பதாக இருக்கும்.
தன்னுடைய தலையிலிருந்து மழித்த முடியை இரு கைகளிலும் ஏந்தியபடி மொட்டைத்தலையுடன் ஒருவன் இருக்கும் படம்அது.
எம்.ஜி.ஆர்.நடித்த படத்தையே வெட்கக்கேடு என அந்த காலத்தில் விமர்சித்து வந்திருந்ததால் அந்த தைரியத்தில் நானும் அந்த'மொட்டை' படத்தை வைத்தேன்.
புதன்  அன்று தேவி வெளியாகியது.
அண்ணா சாலையில் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.
வேகமும் கோபமுமாக அந்த டைரக்டர் வந்தார்,என்னைப் பார்த்தார்.என்ன நினைத்தாரோ எதிரில் இருந்த 'மாலைமுரசு'அலுவலகம் சென்று துணை ஆசிரியராக இருந்த இளங்கோவை பார்த்து பேசி இருக்கிறார்.'அந்த பார்ப்பானுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி விமர்சனம் எழுதி படத்தை வச்சிருப்பான்.உங்க முதலாளி பி.ஆர்.ஆதித்தன் எப்ப வருவார்?அவரை நான் பார்க்கணும்.அவனை தூக்காம விடப்போறதில்லை 'என கோபமுடன் குமுற துணை ஆசிரியர் இளங்கோ 'என்ன நீங்க அவரைப் போயி  பார்ப்பான்னு  சொல்றீங்க.அவரு மதுரைக்காரர் .கம்பம் எம்.பி.ராஜாங்கத்துக்கு சொந்தம் ல! "என சொல்ல அப்படியே அமைதியாகிவிட்டாராம் .டைரக்டர்.
உண்மையில் நான் அந்த எம்.பி.யின் சொந்தக்காரன் இல்லை.அவரின் ஆவேசத்தை தணிப்பதற்காக இளங்கோ சொன்ன பொய்.இதை இளங்கோ சொன்ன பிறகு நான் அந்த டைரக்டரை பார்ப்பதில்லை .அவரும் என்னிடம் பேசுவதில்லை.என்னை தன்னுடைய சாதியாளாக எண்ணிக் கொண்டு அமைதியாகி விட்டார்,
ஒரு பத்திரிகையாளனுடன் புகழ் பெற்ற டைரக்டர் பேசாமல் இருக்கமுடியுமா?
அவரின் பி.ஆர்.ஒ.மதி ஒளி செல்வத்தின் வழியாக என்னை வரவழைத்துப் பேசினார்.நாங்கள் சமாதானமாகி விட்டோம்.நடிகர் திலகம் நடித்து அவர் இயக்கிய ஒரு படத்தில் என்னையும் ஒரு காட்சியில்  நடிக்க வைத்து விட்டார்."என சொல்லி முடித்தேன்.
இப்போது நாங்கள் சந்திக்க நேர்ந்தால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என சிரித்துக் கொள்வோம். ..சாதனைதானே!

கருத்துகள் இல்லை: