ஞாயிறு, 14 ஜூலை, 2013

லைலா-மஜ்னு.

லைலா-மஜ்னு.
பெர்சிய இலக்கியத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிற காதல் காவியம்.
பணம் இருந்தும் மனம் இல்லாத பெற்றோரால் புதை குழியில் தள்ளப்பட்ட இரு உயிர்களின் காதல் ஓவியம்.
எல்லாம் இருந்தது அந்த பெரும் தனவானுக்கு.
அவன் சார்ந்த பழங்குடி மக்களுக்கு  அவனே தலைவன்.
அரேபியாவில் சுல்தான்களுக்கு நிகராக மதிக்கப்பட்டான்.
காலிப்களுக்கு என்ன மரியாதையோ ,அவனுக்கும் இருந்தது,
சயீத் என்பது அந்த பணக்காரனின் பெயர்.
பழங்குடிமக்களுக்கு வள்ளல்.வாரி வாரி வழங்குவான்.
கையேந்தி நின்றவர்களின் குறை களைவான்.
அவனது மக்களால் கொண்டாடப்பட்டவன் சயீத்.
ஆனாலும் அவனுக்கு ஓர் குறை.
அத்தனை செல்வங்கள் இருந்தும் அதை அடுத்து ஆள்வதற்கும் ,ஈகை  என வருவோர்க்கு அள்ளிக் கொடுப்பதற்கும்  வாரிசு இல்லையே என்கிற  கவலை.
அழகிய தோட்டம்  இருந்தும் அதில் ஒற்றை ரோஜா கூடபூக்க வில்லை.என்றால் அவன் யாரை நோவான் இறைவனைத் தவிர !
அப்படியே கடந்து விடுமா?
பரந்து விரிந்த கண்ணுக்கு தெரிகிற பூமியில் அவனது கவலைக்கு மருந்து எதுவும் இல்லையா?
கடவுளை நம்பு.விடை கிடைக்கும்.நம்பினான்.
கஜானாவை திறந்து வைத்தான்.கைகள் வலிக்க வழங்கினான்.நோன்பிருந்தான்.
பிரார்த்தனைகள்.எத்தனையோ அத்தனையும் செய்தான்.
பலன் கிடைத்தது..அன்றலர்ந்த மலராக மகன் பிறந்தான்.
அவனின் பிறப்பு இரவை பகலாக்கியதைபோல ஒளிர்ந்தது சயீத்துக்கு.!
அவன் பிறந்த பதினைந்தாவது நாளில் பெயர் வைத்தனர் 'கயஸ் 'என்பதாக.!
இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் எல்லாமே இரகசியம் காக்கப்பட்டது என்பதுதான்!
தீய சக்திகளின் பார்வையில் அரும்பு பட்டுவிடக்கூடாது .பட்டால் கெட்டுவிடும் குடி என்கிற அச்சம் சயீத்துக்கு.!
 ஓராண்டு முடிந்தது.
கடவுளின் பிள்ளையாகவே கயசை கொண்டாடினார்கள்.
ஞானக்குழந்தையைப் போல அவனும் வளர்ந்தான்.
பள்ளியில் சேர்த்தனர்.சீமான் வீட்டுப்பிள்ளைகள் பயிலும் அந்த பள்ளிக்கு ஒரு நாள் புதிய மாணவி வந்து சேர்ந்தாள்
அவள் பெயர் லைலா!
லைல் என்றால் இருள் என்பது பொருள்.அவளின் அழகிய கூந்தல் காரிருளைப் போல கருமையாக இருந்தது .அவளின்  முகமோ ஒளி  வீசியது.மானின் கண்கள்.
அவள் அதிகம் பேசுவதில்லை.பேசினால் புன்சிரிப்பும் சேர்ந்திருக்கும்.நாணமுறும் போது அவளது பட்டுப்போன்ற கன்னங்கள் மேலும் சிவக்கும்.
காதல் என்றால் என்னவென தெரியாத பருவம் கயசுக்கு.!
லைலா என்றால் அவனது உயிர் என கருதினான்.
அவளும் அப்படியே நினைத்தாள் ,கயசை பார்க்காத நேரம் அவளுக்கு நெருப்பாய் கனன்றது.
காதல் என்பது திராட்சை ரசம் போன்றது.
அவர்கள் குழந்தைகள்.அவர்களுக்கு திராட்சை ரசம் பற்றி என்ன தெரியும்?
கோப்பை வழிய வழிய அருந்தினார்கள்.
நாளுக்கு நாள் அவர்களும் வளர்ந்தார்கள்.
மாந்தி மாந்தி அருந்திய அந்த காதல் ரசத்துக்கு அடிமையாகிப் போனார்கள்.
அவர்களுக்குள் அவர்கள் தொலைந்தும் போனார்கள்.
அடுத்து என்ன நடக்கும்?காத்திருங்கள் சொல்கிறேன்!கருத்துகள் இல்லை: