பசும்பொன் தேவர் அவர்கள் இயற்கை எய்திய பிறகு 1964 ல் அருப்புக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.தேவரின் மரணத்துக்கு முன்னர் இலை மறை காய் மறையாக இருந்து வந்த உட்கட்சி பூசல் பகிரங்கமாக வெளிப்பட்டது.
நான் இருவருக்கும் பொதுவான பத்திரிகையாளனாக இருந்தேன்.இதனால் இருவருமே என்னை வெகுவாக விரும்பினார்கள்.

அந்த காலத்தில் பார்வர்டு பிளாக் கட்சியின் பத்திரிகையாக 'கண்ணகி' இருந்தது.டேபிலாய்டு சைஸ்.அதன் ஆசிரியர் சக்திமோகன்.
நேதாஜி என்கிற பெயரில் சசிவர்ணத் தேவரும் ஒரு பத்திரிக்கை நடத்தினார்.பசும்பொன் தேவர் மறைந்ததும் 1964 -ல் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது.
யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் கட்சிக்குள் சிக்கல்
ஏ.ஆர்.பெருமாள் தேவருக்கு ஆசை.ஆனால் அவர் சசியின் ஆதரவாளர் என்பதாக சிலர் சொல்லவே வழக்கறிஞர் பி.கே.வேலாயுதன் நாயரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இவர் பா.பி.கட்சியினருக்காக நிறைய வழக்குகளில் வாதாடியவர் .தேவருக்கும் தெரிந்தவர். இவரை சுதந்திரா ,திமுக ஆதரித்தது.
சுதந்திரா கட்சியின் நிறுவனர் மூதறிஞர் ராஜாஜி, கோவை தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம் ஆகிய இருவரும் பிரசாரத்திற்காக மதுரை வந்தனர்.
டி வி.எஸ்.நிறுவனம் கார் அனுப்பியது.
அந்த காரில் ராஜாஜி,சுந்தரம் இருவரும் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
நானும் வேட்பாளரும் முன் ஆசனத்தில் டிரைவர் பக்கமாக அமர்ந்தோம்.
தொகுதி நிலவரம் பற்றி வேட்பாளர் வேலாயுதன் நாயரிடம் மூதறிஞர் பல கேள்விகளை கேட்க அதற்கு நாயரும் நம்பிக்கையான பதில்களை சொல்லி வந்தார்.
சசியின் ஆதரவு இல்லாத நிலை பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
முக்குலத்தோர் அதிகமாக வாழ்கின்ற தொகுதியில் நாயர் வேட்பாளருக்கு ஆதரவு கிடைக்குமா என்கிற சந்தேகம் அந்த இரு தலைவர்களுக்கும் இருந்தது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த ராமநாதபுரம் ராஜாவின் சகோதரரை நிறுத்தி இருந்ததுமுடிவில் காங்கிரஸ் வேட்பாளர் காசி நாத துரை வெற்றி பெற்றார்.எட்டாயிரம் வாக்குகளில் தோற்றதாக நினைவு.
பார்வர்டு பிளாக்கின் கோட்டையாக திகழ்ந்த அருப்புக்கோட்டையை காங்கிரஸ் கைப் பற்றியது.
பா.பி.கட்சியில் அன்று தொடங்கிய பிளவு இன்று வளர்ந்திருக்கிறதே தவிர ஒற்றுமை என்பது கானல் நீராகவே இருக்கிறது.