செவ்வாய், 29 அக்டோபர், 2013

நட்புடன் எழுதுவது ....

மதுரை மாநகரில் மையப்  பகுதி.
வைகை ஆற்றுக் கரை யோரம்.முனிச்சாலை என்று சாலையை வைத்து அடையாளம் காட்டுவார்கள்.
ஆற்றில் வெள்ளம் வந்தால் ஒபுளா படித்துறையில் மக்கள் கூடிவிடுவார்கள் வேடிக்கை பார்க்க.!
சவுராஷ்டிர சமுதாய மக்களின் மண்டபம் கரையோரமாக இருந்ததால் அப்படி அழைக்கப் படுகிறது.
மண்டபத்தை ஒட்டி சின்னஞ்சிறு குடிசைகள். வாசலையொட்டியே கழிவு நீர் வாய்க்கால் வளைந்து வளைந்து சென்று ஆற்றில் கலந்துவிடும்.பன்னிகள் குட்டிகளுடன் அந்த குடிசைகளின் பக்கமாக திரியும்.சுத்தம் என்பதே அந்தப் பகுதியில் இருக்காது.அந்த குடிசைவாசிகள் தான் ஊரை சுத்தம் செய்கிறவர்கள்  நகர சுத்தி தொழிலாளர்கள் என முனிசிபாலிடி சொல்லும்.இப்போது மாநகராட்சியாகிவிட்டதால் எப்படி அழைக்கப்படுகிறார்களோ தெரியாது.அந்த பகுதிக்கு சங்கிலி தோப்பு என்று பெயர்.கம்யூனிஸ் ட் கட்சியின் கோட்டையாக அந்த  பகுதி இருந்தது அந்த காலத்தில்!
அவன் அந்த பகுதியை கடந்துதான் அவனுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும். இருட்டிவிட்டால் அந்த வழியில் தட்டுத்தடுமாறி நடக்கவேண்டும் .சிம்னி விளக்கை விட முனிசிபாலிட்டி தெரு விளக்குகள் படு மந்தம்.
இருட்டிலும் அவர்களுக்கு எப்படித்தான் கண் ...தெரிகிறதோ.!
 ஆற்று மணலில் அமர்ந்து கொண்டு கச்சிதமாக ஊற்றிக் குடிப்பார்கள்.
"மாப்ள. ஜிஞ்சரு ....அடிக்கிறியா?"
"அது எப்படி இருக்குன்னு இன்னிக்கி பாத்துருவமே?"
"பிராந்தி மாதிரி வச்சு வச்சு குடிக்ககூடாது.ஒரே தம்ல உள்ள ஏறக்கிரு .கொஞ்சம் காரமா இருக்கும்.அயித்தான் ,இவனுக்கு ஒரு பீடிய குடு .எனக்கு பாசிங் ஷோ "என்று நண்பன் சொல்ல அவனுக்கு கரீம் பீடி கிடைத்தது.
நண்பன் சொன்ன மாதிரியே கிளாசை எடுத்ததும் தெரியாமல் குடித்ததும் தெரியாமல் காலி கிளாசை மண்ணில் வைத்தான் அவன்.
வயிறில் அக்னி !
அதை தணிக்க நாட்டுப்பழம்.மதுரையில் நாட்டுப் பழம்  பேமஸ்.
இரண்டே அவுன்சில் அவனுக்கு சரியான போதை.
காசும் கம்மி.ஆனால் நிறைவான போதை.இந்த ஜிஞ்சரை சில மெடிக்கல் ஷாப்களில் தெரியாமல் விற்பார்கள்.எர்ஸ்கின் மருத்துவமனையில் சில கம்பவுண்டர்களை கணக்கு  பண்ணி விட்டால் போதும்.அந்த ஆஸ்பத்திரிக்கு இப்போது ராஜாஜி மருத்துவமனைஎன பெயர். .அவனுக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கு அது இன்றும் பெரியாஸ்பத்திரிதான்.யாரும் பெயர் சொல்லி அவன் கேட்டதில்ல.
அண்மையில் அவன் அந்தப்பகுதிக்கு சென்றான்.பெரிய மாற்றம் எதுவும் இல்லை.குடிசைகளுக்கு பதிலாககுட்டி குட்டியான வீடுகள்.
நெல்பேட்டையை ஒட்டிய பகுதி என்பதால் இப்போது டெர்ரரிஸ்ட் ஏரியாவாம்.
ஆறு மொத்தமாக மாறி கிடந்தது. மணலை காணவில்லை.கட்டா ந்தரையாக ஆறு இருக்குமா?
மனிதர்களும் மாறி இருந்தனர்.
டாஸ்மாக்கில் நகரசுத்தி தொழிலாளர்களை பார்க்க முடிந்தது.

திங்கள், 28 அக்டோபர், 2013

சிறை எடுத்தான் சின்னப் பெண்ணை,![வீரப்பன்.6]

"அ டியே.....பஞ்சு..!"

வாசலில் கால் வைத்ததும் பெருங்குரல் எடுத்த பாப்பம்மா ஓட்டமும்,நடையுமாக உள்ளே பாய்ந்தாள்.!

        ஆட்டுக்கல்லில் பருத்திக்கொட்டையை போட்டு ஆட்டி பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்ச வர்ணம் கொஞ்சம் கூட அவளை எதிர்பார்கவில்லை.பதறிப் போனாள்!

         "என்ன மதினி.....ஏன் இப்படி அரக்கப் பரக்க ஓடியாறி...க !என்ன நடந்து போச்சு?" என கலவரப்பட்டு கேட்க,

       பாப்பம்மாவுடன் வந்த செங்கோடன் அங்கு கிடந்த முக்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு சவுகரியமாக உட்கார்ந்து கொண்டான்.

       "என்னத்தடி சொல்ல ....."என்று ராகம் போட்டு இழுத்த பாப்பம்மா "விடிஞ்சதிலிருந்து  முத்துவ காணலடி ....காணாம போயிட்டாடி,,பாதகத்தி,!" என்று ஒப்பாரி வைக்க,நிலைகுலைந்து போனாள் பஞ்சவர்ணம்.

      உடம்பு ஜில்லிட்டது.இதயத் துடிப்பு அதிகமாகியது.கண்களில் பூச்சி பறந்தது.முந்தாநாள் தன்னையும் முத்துவையும் கூட்டுக் களவாணிகள் என்று  அய்யன் சொன்னதிலிருந்து அந்தப் பக்கம் பஞ்சு எட்டிப் பார்க்காமல் இருக்கிறாள்.

      இப்போது முத்து காணாமல் போய்விட்டாள்  என சொல்லி தன் வீட்டுக்கே  வந்து  பாப்பம்மாள் அழுது புலம்புகிறாள் என்றால்.........

     பஞ்சவர்ணத்துக்கு வாய் வரவில்லை...பாப்பம்மா இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ ....!

      "ரெண்டு சிறுக்கிகளும் ஒண்ணுமண்ணாதானே ..திரிஞ்சீக....உங்கிட்ட கூட
ஒன்னும் சொல்லாமலா போயிருப்பா?   களவாணி சிறுக்கிகளா....கூத்தாடி கட்டுறீக..?"

       மகளைக் காணவில்லை என்கிற கவலை ,துயரம்,துக்கம்,பாப்பம்மாவை  பைத்தியம் போலாக்கியிருந்தது.நிலை குலைந்து போயிருந்தாள்

     புருஷன் ஆசைப்பட்டானே என்பதற்காக பருத்திப்பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்சுவுக்கு இப்படி  ஒரு கொடுமை விடிந்தும் விடியாததுமாக   வந்து சேர வேண்டுமா...?காட்டுப்பக்கம் காலாறப் போய்விட்டு    வருவதாக சொன்ன மாயன் எந்த நேரத்திலும் திரும்பிவிடலாம்.அவன் வருவதற்குள் இந்த புயல்  கடந்து விட்டால் நல்லது.

       "ஏண்டி.....நான் கேட்கிறேனில்ல...தேவாங்கு  மாதிரி கவுந்துகெடந்தா  விட்ருவனா?என்னடி  நெனச்சிட்டிருக்கே முத்து எங்கடி இருக்கா?"என்று உலுக்க ,பஞ்சு அப்படியே அவள் காலில் ஒடுங்கி விழுந்தாள் .

     "சத்யமா சொல்றன் மதினி...எந்தாலி மேல சத்யம் முத்துவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது"என்று இவள் சொல்லிக்   கொண்டிருந்த நேரத்தில்  மாதேஸ்வரன் மலையில் உள்ள வனதேவதை கோவிலில் வீரப்பனின் கல்யாணம் நடந்து முடிகிறது.

அடுத்து கார்டு மோகனய்யாவின் அத்தியாயம் ஆரம்பம்.!

              ர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருந்த வன பாதுகாப்பு காவல்காரர்கள் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் ஓடினார்கள் .அய்யாவுக்கு அவ்வளவு பயம். குடகு மாவட்டம் சோமவாரப்பே ட்டையை சேர்ந்த அந்த அய்யாவின் பெயர் மோகனய்யா.இளைஞர்.துடிப்பானவர்.கண்டிப்பானவர் .இளம் ரத்தம் என்பதால் பயமறியாதவர் என்றால் அது பேத்தலாகிவிடும்.அவர் வளர்ப்பு அப்படி.!புதிதாக வந்திருக்கும் அதிகாரி  மோகனய்யா.

         "பாலார் செக் போஸ்ட் , இன்னிக்கி டியூட்டி யாரு?"என்று கேட்டார் மோகனய்யா.

          "நான்தான் சார் "என்றான் ஹொன்னப்பா.

       
       "நீ  மட்டுந்தானா?"

        "எஸ் சார்."!

       "வெரி   வெரி இம்பார்ட்டன்ட் செக் போஸ்ட்டுக்கு நீ மட்டுந்தானா?"

       " மென்  பத்தாதுங்கய்யா.!"

        "வேற செக் போஸ்ட் னா போறதுக்கு தயங்குறீங்க ,பாலார் செக் போஸ்ட்னா  மட்டும் டைம் டேபிள் போட்டுக்கிட்டு நிக்கிறீங்களேப்பா ..என்ன   காரணம்?"

        "........................!"

       "  வாய மூடிட்டிருந்தா விட்ருவனா மேன் ?இன்னிக்கி நானும் வரேன்.நாலு பேர் ரெடியா இருங்க.வெப்பன்ஸ லோடு  பண்ணிக்க!" என்று  உத்திரவு போட்டதும்  நாலு பெரும் கோரஸாக எஸ்    சார்" என்று சல்யூட் அடித்தனர்.
"
      ஜீப் பக்கமாக அவர் போனதும் பக்கத்திலிருந்தவனின்  வாயைக் கிண்டினான் ஹொன்னப்பா.   "எதுக்குப்பா அய்யா வெப்பன்ஸ லோட்
 பண்ண ச்   சொல்றார்?இன்பார்மெண்டு பயலுக எவனாவது வந்தானுகளா? இன்பர்மேசன்ஸ் எதுவும் வந்திருக்குமா?" என்று கேட்டான்.

      "தெரியலியே...இன்பர்மேசன் இல்லாமலா நம்மள  அலர்ட் பண்ணுவாங்க?எதுக்கும் நாம்ப சேப்டியாஇருக்கனும்பா....இவங்க கொடுக்கிற சம்பளத்தில குடும்பத்தை  கொண்டு செலுத்துறது கெடாவ்ல பால் கறக்கிற வேல!ஏதோ  கூப்பு வெட்டிட்டுப் போறவனும்,சந்தனக்கட்ட கொண்டு போறவனும் கொடுக்கிற காசுலதான் நிம்மதியா பொழப்பு ஓடிட்டிருக்கு...அதுலயும் இந்தாளு மண்ணள்ளிப் போட் ரு வான் போலிருக்கே?"

அரசாங்க விசுவாசம் தெரிந்தது.

       "சரி ..சத்தம் போட்டு சொல்லாதே!"

----------------இன்னும் வரும்.



வெள்ளி, 25 அக்டோபர், 2013

வீரப்பன்.[5]

நெடிதுயர்ந்து, நெருங்கி,நெருங்கி நின்ற பருமனான மரங்கள்.தேக்கு,சந்தனம் ,தோதகத்தி ,மூங்கில் இப்படி விதம் விதமாக செழித்து  வளர்ந்து நின்றன.அவைகளின் அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்த புதர்ச் செடிகள்.மேடும் ,பள்ளமுமாய் ,சீரான வழி  இல்லாத காடுகளாய்.....

       மாதேஸ்வரன் மலை உச்சியில் இருந்து பார்த்தால்  கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெ ண் போர்வையாய் படர்ந்த மேகமும் ,பச்சை நிற மேனி யான மழையும்தான்.!சில்லென்று தழுவிச் செல்கிற காற்று....எப்போது வானம் கண் திறக்கும் ,மழை பொழியும் என்பது தெரியாது.ஆதவனின் சுடு கதிர்கள் பெரும்பாலான பகுதிகளைத் தொடுவதில்லை.வழுக்கலான ,பாசி படர்ந்த பாறை ,கசகசவென ஈரம்.

   ஆள் அண்டாகாடு என்பார்களே.....

   அதுதான் இது.

   மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையான ,அழகான பகுதிகள் என்றால் இந்தப் பகுதிகளைச்  சொல்லலாம்.கிட்டத்தட்ட 18 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  இயற்கையின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துகிடக்கிறது.

    அருவிகளின் அருகில் மந்தை மந்தையாய் யானைகள் மேயும் அழகே அழகு.

     வெள்ளைக் காலுறைகள் அணிந்திருக்கின்றன என்று சொல்லக்கூடிய காட்டெருமைகளின் அழகும் அழகுதான்.!

      உண்ட மயக்கத்தில் மரத்தின் வசமான கிளைகளில் கால்களை தொங்க விட்டுக் கொண்டு உறங்கிக் கிடக்கும் சிறுத்தைகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

     அதோ பாருங்கள் அந்த புலியை!மானின் கழுத்தை கவ்வியபடி போய்க் கொண்டிருக்கிறது. வசதியான இடம் வந்ததும் மானை கீழே போட்டுவிடும்.வயிறை கிழித்து குடலையும் மாமிசத்தையும் இரத்தச்சுவை  மாறுவதற்குள் தின்று விட்டு மிச்சத்தைப் போட்டுவிடும்.

       தப்பித் தவறி மனிதன் இந்த சாம்ராஜ்யத்தில் நுழைந்து விட்டால் வழி புரியாது நிச்சயம் மாட்டிக் கொள்வான் திசையும் தெரியாது.வழியும் கிடைக்காது.வண்டுகளின் பின்னணி இசையில் அவ்வப்போது பிளிறல்,உறுமல் வேறு.பயத்தில் செத்தாலும் வியப்பில்லை.

      மனிதன் தனக்கென கூடு கட்டி வாழமுடியாத அந்த வனாந்திரத்தில் தான்  வீரப்பன் கொடிபறக்க வாழ்கிறான். அவனுக்கு காட்டு மிருகங்களிடம் பயமில்லை. அவனின் பயமே நாட்டு மனிதர்கள்தான்.

     சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் சின்ன நீரோடைக்கு அருகே ஒரு குகை.கொட்டாவி விட்ட மாதிரி.அதன் மறைவிடத்தில் வீரப்பன் படுத்திருந்தான் பள்ளிகொண்ட பெருமாளைப் போல,தலையை இடது கை தாங்கி இருந்தது.சற்றுத் தள்ளி சேத்துக்குளி கோவிந்தன்.அருகே தானியங்கி  துப்பாக்கிகள்,
.
    "இனியும் எதுக்கு ரோசனை? பேசாம முத்துவ்  க ண்ணாலம் கட்டிக்கிட்டு கூட்டியாந்திரு.மனச பறி  கொடுத்திட்டு எதுக்கு மருகிட்டு கிடக்கிறே?" என்றான் சேத்துக்குளி.

      எழுந்து உட்கார்ந்த வீரப்பன் மீசையை வழக்கம் போல திருகிக்கொண்டான். சேத்துக்குளியனை கூர்ந்துபார்த்தான்.

      "என்னத்த அப்படி பாக்கிற? எம்மனசில வஞ்சகம் எதுவுமில்ல.உனக்கு கண்ணால ஆசை  வந்திருச்சி.ஏத்த பொண்ணையும் .பாத்து தீர்மானிச்சிட்ட. அப்பறம் எதுக்கு தயங்குரே?"

      "அதுக்கில்லடா.நா மட்டும் காட்டுக்குள்ள குடும்பம் நடத்துனா நல்லா  இருக்குமா?நாளைக்கு நீயே நெனைக்கமாட்டியா? .....நாம்பல்லாம் உயிரை கையில பிடிச்சிக்கிட்டு திரியிற போது இவன் மட்டும் பொஞ்சாதி குடும்பம்னு இருக்கானேன்னு நெனைக்க மாட்டியா....?"ஆழம் பார்க்கும் வகையில் வார்த்தைகளை விட  சேத்துக்குளி கோவிந்தன் துடித்துப் போனான்.

     "என்ன மனுசன்யா நீ...?"என்று கோபத்துடன் எழுந்தவனின் தோள்  தொட்டு  சமாதானப்படுத்த முயன்றான் வீரப்பன்.கைகளை விலக்கி விட்ட  சேத்துக்குளி , "கேட்டியே ஒரு வார்த்த ,நாண்டுக்கிட்டுப் போற மாதிரி!எங்கப்பன் ஆத்தாவுக்குப் பெறகு எல்லாமே நீதான்னு நெனச்சு உங்கூடவே  கிடக்கிறேன் பாரு...அதுக்கு பரிசு  கொடுக்கிறியா?"

      "அதுக்கில்லடா ..உன்னயப் பத்தி எனக்குத் தெரியும் .மத்த பயலுக நெனக்க மாட்டனுகளா?அப்படி நெனச்சுட்டா நம்மகிட்ட  ஒத்துமை இருக்காதே!அழிஞ்சு போயிருவோம்..அதுக்காகத்தான்யா அப்படி கேட்டேன்!"

       "எந்தப்பயலும் அப்படி நெனக்கமாட்டான்.எல்லோருக்கும் நீதான் அப்பன்னு நெனச்சு வாழ்ந்திட்டிருக்கானுக.ஆத்தா வந்திட்டா இன்னும் சந்தோசப் படுவாய்ங்க. முத்து வந்தா பொங்கிப் போட்டுக்கிட்டு இருக்கும் .அது கையால சோறு வாங்கி சாப்பிடறவனுக்கு ஆத்தா இல்லையேங்கிற கவலை இருக்காது..வேற மாதிரி எவனும் நெ னைக்கமாட்டான்.  "

   "நெனச்சுட்டா....?" மனதில் கிடந்த சந்தேகத்தை எடுத்துப்போட்டான் வீரப்பன்,

    ""அவன் உசிரோட இருக்கமாட்டான்.!"

     அந்த நொடியே கட்டித்தழுவிய வீரப்பன் " நீ இருக்கிற வரை எமன் என்ன நெருங்கமாட்டான்டா !"என்று உணர்ச்சி வசப்பட்டான்.

       தம்பி அர்ச்சுனனை விட சேத்துக்குளியிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தவன்  வீரப்பன்.இவனின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும்  எடுப்பதில்லை.

      "கண்ணாலத்த எங்க வச்சுக்கலாம்னு நெனக்கிறே ?"

      "முத்துவோட அப்பாருக்கு என்ன பிடிக்கல .மகள கட்டித்தரமாட்டாருன்னுதான்நெனக்கிறேன்.அதனால மதுரவீரசாமி மாதிரி கடத்திட்டு வந்துதான் கண்ணாலம் பண்ணிக்கணும்.அதுக்கு நேரம் காலம் பாத்தா நடக்காது.அந்த புள்ள மனசு உடஞ்சி போகாம பாத்துக்கணும்.அது ஏதாவது பண்ணிக்கிட்டா  அ ந்தப் பாவமும் வந்து சேரும்.என்ன சொல்றே?"

   கடத்தல் திட்டம் சே த்துக்குளிக்கு பிடிக்கவில்லை போலும் .பதில் சொல்லவில்லை!

------இன்னும் வரும்.

திங்கள், 21 அக்டோபர், 2013

நான்தான் ..வீரப்பன்![4]

           "அண்ணே,முத்துக்கு மாப்ள பாக்கிறிகளாமே ..நெசந்தானா ? " சிரிப்பலை களுக்கு மத்தியில் கேட்டாள் ,பஞ்சவர்ணம். அவள் எந்த நோக்கத்துடன் அங்கு  வந்திருந்தாளோ ....அதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள் .எப்போது இதை கேட்பாள் என்ற ஆசையுடன் எதிர்பார்த்து அறைக்குள் காத்திருந்த முத்துலட்சுமி சன்னல் கதவை லேசாக திறந்து வைத்திருந்தாள் .அங்கிருந்து  அவர்களை நன்றாக பார்க்கமுடியும்.

          "ஆமாம்மா!நம்ம வழிதான் .பையன் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கான்.கவருமெண்ட் வேலை.பயபிள்ளை கவலையில்லாம காலம் கடத்துமே....நம்மள மாதிரி நொம்பலப்பட வேணாம்ல.!"

         "அது சரிண்ணே ,அவள  ஒரு வார்த்தை கேட்டிகளா?"

         "நம்ம முத்துக்கிட்டயா?...அவ என்னம்மா பச்சபுள்ள .நல்லது கெட்டது  தெரிஞ்சிக்கிற வயசு இல்லம்மா.!பெரியவங்க நாங்க பாத்து செய்றப்ப கெட்டுப் போறதுக்கா செய்வோம்?....உங்கப்பன் ஆத்தா உனக்கு கெட்டதய்யா  பண்ணிப்புட்டாக?"

            அய்யன் இப்படி கேட்டதும் பஞ்சு ஒரு மாதிரியாகிவிட்டாள் ..முத்துக்கு  மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்பதை அவர்களிடம்  எப்படி சொல்வது?

           அறைக்குள் இருந்த முத்துவின் மனமோ துடித்தது.  "பஞ்சு ..சொல்லு....எங்கப்பன் ஆத்தாகிட்ட என்  ஆசையை சொல்லு ..சொல்லு..."என்று அலறியது.

           பஞ்சுவின் முகத்தைப் பார்த்த பாப்பம்மா அவள் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லமுடியாமல் தவிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள்.

           "பஞ்சு ...என்னத்தையோ சொல்ல வர்றே....சொல்ல முடியாம சங்கடப்படுரே... நீ யாரயாவது மாப்ள பாத்து வச்சிருக்கியா என்ன?"

           "நான் பாக்கல  மதினி!"

          "பின்ன வேறு யாரு பாத்திருக்கா?"

         "முத்துதான்!"

       அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி.அறைக்குள் இருந்த முத்துவோ அப்போதுதான் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள் .இனி என்ன நடந்தாலும் சரி என்கிற மாதிரி மனதில் இருந்த பாரம் குறைந்திருந்தது.

      "என்னடி சொல்றே....முத்து  மாப்ள பாத்திருக்காளா ?"

      "சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுண்ணே ..முத்துதான் வூட்டுக்கு வந்து நீங்க மாப்ள பாத்திருக்கிற சங்கதிய சொன்னா...அவளுக்கு வீரப்பன் மேல ஆசை.அவருக்கும் நம்ம முத்து மேல ஆசை.ரெண்டு பேரும்ஒருத்தர ஒருத்தர் பாத்து பேசி இருக்காங்க.ஆனா தப்புத்தண்டா எதுவும் நடக்கல!"என்றதும் தரையில் ஓங்கி மிதித்தபடி பட்டியல் கல்லை விட்டு எழுந்தார்.

      "எங்கே இருக்கிறா?"என ஆவேசமுடன் வீட்டுக்குள் பாய்ந்தபோது யாருமே எதிர்பார்க்கவில்லை அங்கு வீரப்பன் வந்து நிற்பான் என்பதை.!

      "அய்யா கோவமா இருக்காக போலிருக்கு..."உள்ளே வந்த வீரப்பன் பட்டியக்கல்லில் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். ஆத்திரம் எங்கே போனதோ தெரியவில்லை.பாப்பம்மாளும் பஞ்சவர்ணமும் படக்கென்று முத்து இருந்த அறைக்குள் போய் விட்டனர்.

    என்ன நடக்கபோகுதோ என்கிற அச்சத்துடன் பாப்பம்மா கதவோரமாக நின்று  கொண்டாள்.

      "அய்யா கும்புடுறேன்.நாந்தான் வீரப்பன்"உட்கார்ந்தபடியே கை குவித்தான்.

       கருகருவென அடர்த்தியான கர்லிங்  முடி.பொசு  பொசுவென வளர்ந்திருந்த மீசை.இலை பச்சை நிறத்தில் யூனிபார்ம்   .இடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரிவால்வார்.காட்டு இலாகா அதிகாரி மாதிரியான தோற்றம்.

      நேருக்கு நேராக பார்க்க தயங்கிய அய்யனும் பதில் வணக்கம் போட்டுவிட்டு " என்ன விசயமா வந்திருக்கீக ?"என்றார்.

     "நல்ல விசயந்தான் பேச வந்திருக்கேன்.நீட்டி,நெளிச்சி பேச விரும்பல.கட்டன்ரைட்டா பேசிப்பிடறதுதான் இந்த வீரப்பனோட பழக்கம்
உங்க மக முத்துவ நா விரும்பறேன்.அந்த பிள்ளயும் என்னை விரும்புது.கண்ணாலம் கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம் உங்க சம்மதம் தேவை.!"

     அய்யன் தயங்கியபடியே  "எங்க சொந்தத்தில முத்துக்கு மாப்ள முடிச்சிருக்கேன்.இப்படி திடுதிப்புன்னு வந்து பொண்ண கேட்டா என்ன பண்றது?வாக்கு தவறாதவன் இந்த அய்யன்கிறது ஊருக்கே தெரியும்.நாலும் தெரிஞ்சவர் நீங்க"என பேச்சை இழுத்தார்.

    அருகில் வந்த வீரப்பன் அவர் தோள் மீது கை போட்டுக்கொண்டான்.

      "உங்க முடிவ நீங்க சொல்லிட்டீக.என் முடிவ....இல்ல உங்க மகளுக்கும் சேத்து சொல்றேன்.எங்க முடிவ இப்பவே சொல்லிடறோம்.நாங்க ரெண்டு பெரும் புருசன் பொஞ்சாதியா வருவோம்.உங்க ஆசிர்வாதம் தேவை.சந்தேகமிருந்தா முத்துகிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க..வர்றன்யா ,வர்றம்மா !!"

எல்லோருக்கும் பொதுவாக ஒரு கும்பிட்டு போட்டுவிட்டு ராஜ நடை நடந்து போனான்.!

-----இன்னும் வரும்.


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வீரப்பன்.3."பொண்ணை கொடு "!

பசுச் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருந்த மண் தரை.சொளகில் அரிசி பரப்பி கல் தேடிக்கொண்டிருந்தாள் பாப்பம்மா.பக்கத்தில் அய்யன்.வெங்கல கும்பா நிறைய பழைய சோறு.!நீரும் மோரும் கலந்திருந்த பழைய சோற்றில் இரண்டு வெங்காயமும் ஒரு பச்சை மிளகாயும் கிடந்தன. கும்பாவிலிருந்ததை 'விர்ர்...விர்ர்'என்ற ஓசையுடன் உறிஞ்சிக் கொண்டிருந்தார்.அவ்வப்போது வெங்காயம் கொஞ்சம் ,பச்சை மிளகாய் கொஞ்சம் என செல்லமாக ஒரு கடி .பழைய சோறு தேவாமிர்தமாக இரைப்பைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.!

         "பாப்பு....நெத்திலிக் கருவாடு சுட்டு வச்சிருக்கலாம்ல?"

அய்யன் கடும் உ ழைப்பாளி.வாய்க்கு வஞ்சகம் செய்யமாட்டார்.ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது மாதிரி,காலையிலும் மத்தியானமும் கஞ்சியோ ,கூழோ எதுவானாலும் சரி கவலை இல்லை.ஆனால் தொட்டுக் கொள்ளமட்டும் 'சுள்'னு உப்புக்கண்டமோ, கருவாடோ இருக்க வேண்டும்

        "ஆயிப் போயிருச்சி.வீட்ல எதுவும் இல்ல. கடைப்பக்கமா  போனிங்கன்னா  வாங்கியாந்திருங்க" சொளகில் கிடந்த அரிசியை அப்படியும் இப்படியுமாக தள்ளிவிட்டு ஒரு புடை புடைத்தாள் பாப்பு.

      "தீந்து போச்சுங்கிறத நேத்தே சொல்லிருக்கலாம்ல.?"

     "மறந்து போயிட்டேன்.மாயன் பொண்டாட்டி பஞ்சவர்ணம் நேத்து தலை குளிச்சான்னு  இருந்த கருவாட்டையும் ,உப்புக் கண்டத்தையும் கொடுத்துவுட்டுட்டேன்.அவளுக்கு யாரு இருக்கா நம்மள விட்டா?"

     "அதுவும் சரிதான்."

காலியான கும்பாவை ஓரமாக தள்ளி வைத்தார்.மீசையிலிருந்த பருக்கையை துடைத்துக் கொண்ட பெரிசு கொல்லை பக்கமாக ஒதுங்கியது.அங்கு கிடந்த பட்டியல் கல்லில்  உட்கார்ந்து கொண்டு வெத்திலை செல்லத்தை மெள்ளவில்லை என்றால் அன்றைய 'போஜனம்'முழுமை அடையாது.அய்யனின் சிம்மாசனம் அந்த பட்டியல் கல்தான்.கோடை காலத்தில் அந்த பட்டியல் கல்தான் அம்சதுளிகா மஞ்சம்.!

     "கும்பிடறேண்... ண்...ணே  !"என்றபடி உள்ளே வந்தாள்  பஞ்சவர்ணம்.அய்யனின் பக்கமாக உட்கார்ந்தாள் .அவளைத் தொடர்ந்து வந்த பாப்பம்மாள்  அரிசியில் பொறுக்கிய கற்களை சுரைக்காய் கோடி பக்கமாக கொட்டினாள் !

       "இப்பதான் வழி தெரிஞ்ச்சிதாக்கும்.அண்ணன்காரனை மறந்திட்டியோன்னு மருகிப் போயிட்டேன் தாயி."என்றார் அய்யன்.

       "அட நீங்க ஒண்ணு !புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டவ புருஷனை விட்டு வர்றதுக்கு மனசு வேணும்ல!ஊட்டுக்குள்ளேயே புருசனை பொத்தி வச்சு அழகு பாக்குராலாக்கும் உம்மோட தங்காச்சி!"

அடுத்தவர்களை கேலி செய்வது என்றால் பாப்பமாவுக்கு அவ்வளவு இஷ்டம்.அதிலும் பஞ்சு என்றால் அவளுக்கு தொக்குதான்.!

பஞ்சவர்ணம் விடுவாளா என்ன!அய்யனின் கையைப் பிடித்துக் கொண்டாள் ."ஏண்ணே ,மதினி மனசுக்குள்ள எதோ வெசனத்த வச்சுக்கிட்டு சடச்சிக்கிற மாதிரி இருக்கு.உங்கிட்ட நேரா சொல்றதுக்கு வெக்கம் போல.அதான் என்ன சாக்கா வச்சுக்கிட்டு  சாடை  பேசுறாக"!என்றவள் பாப்பம்மாவை பார்த்து "மதினி நான் வேணும்னா முத்துலட்சுமியை கூட்டிக்கிட்டு எம் ஊட்டுக்குபோயிடுறேன்.எங்கண்ணனை நல்லா கவனிச்சு வுடு .பொத்தி பொத்தி அழகு பாத்து வுடு மதினி!"என்று கேலி பேச மூவருக்கும் ஒரே சிரிப்பு.பாப்பு பொய்க்கோபத்துடன் அவளை எட்டிப் பிடித்தாள் ,"வாயப்பாரேன் சிறுக்கிக்கி வானம் வரை நீளுது"!

          அங்கே ஒரே கலகலப்பு.அடைவதற்கு முன்னர் சிட்டுக்குருவிகள் கீச்சிடுமே அது மாதிரி!

இன்னும் வருகிறது,


திங்கள், 14 அக்டோபர், 2013

வீரப்பன் .2

குடிசையின் கதவுப் பக்கமாக போன பஞ்சவர்ணம் வெளியே நனைந்தவனைப்  பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்!

"வந்திருய்யா!"

"போ....டீ.....!"

"சுபுத்திதான் இல்ல.சொல்புத்தியாவது கேக்கணும் எதையுமே கேக்க மாட்டேன்னா ,போ!...பட்டுதான் திருந்துவேன்னா போ..எங்கிட்டு சுத்தினாலும் கடேசில  அம்மன கும்பிட இங்கதானே வரணும்.வருவேல்ல...அப்ப வச்சுக்கிறேன் மாப்ள கச்சேரிய..!"

கதவை இழுத்து சாத்தினாள்!

நிறை போதையில் நேரம் சென்று திரும்பிய மாயன் நல்ல பிள்ளையாக வெளித் திண்ணையில் முடங்கிப்போனான்

எவ்வளவு நேரம் பஞ்சு அழுதாலோ தெரியாது.அவளும் தூங்கிப் போனாள்.

விடிந்தது.

இருவரும் இனி முகம் கொடுத்துப் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை.!வெருகும், பெருச்சாளியும் மாதிரி கர்..புர்...என்று திரிந்தார்கள்.முக்கல்,முனங்கல்,சாடைப் பேச்சுகள்,...நேரம் செல்ல ...செல்ல .!ஏதாவது முன்னேற்றம் தெரியுமா ?

ஒரு சின்ன பித்தளைப் போணி சட்டி நிறைய இட்லியும்,ஈயத் தூக்குவாளியில்  சட்னியுமாக ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்தாள்......உரிமையுடன் உள்ளே வந்தவள் ஓரமாக,சுவரைப்பார்த்து உட்கார்ந்திருந்த மாயனைப் பார்த்தாள்.அவளை அறியாமலேயே சிரிப்பு!.அடக்கிக் கொண்டாள்.

கொல்லைப் புறத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சவர்ணத்துக்கு இட்லி .சட்னி வைத்தவள் நைசாக வாயைப் பிடுங்கினாள்.

"ஏத்தே ...மாமா கடு கடுன்னு இருக்காக...ஒரே நாள்ல ஓஞ்சு போயிட்டாகளே,ஆடி மாசம் வந்தா எப்படித் தாங்கப் போறாகளோ,தெரியலியே....இந்த வெசனம் அவுகளுக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இருக்கா..."என்று கேட்க பஞ்சவர்ணம் முறைத்த முறைப்பை பார்க்கணுமே...!

"வாயை நல்லா வளத்து வச்சிருக்கே முத்து...நாளைக்கு நீயும் கல்யாணம் கட்டிக்கிட்டு புருசனோட வாழப்போறவதான்....மனசுல வச்சுக்க..ஆடி மாசம் உனக்கும் வரும்.இப்ப நான் படுற அவதி உம்புருசன் வந்த பிறகுதான்டி தெரியும்."

பஞ்சவர்ணம் கேலியுடன் சொன்னதைக் கேட்டதும் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு வகையான சிலிர்ப்பு.

அவள் யாரையாவது மனதில் வைத்திருப்பாளோ...இருக்கலாம்.இந்த காலத்துப் பெண்களை நம்பமுடியாது.முத்து என்கிற முத்துலட்சுமிக்கு நெருப்பூர்தான்.சொந்த ஊர்,ஹொகனேக்கல் பக்கம். தருமபுரி மாவட்டம்.செல்லப் பொண்ணு . இவர்களின் வீட்டுக்கு நாலைந்து வீடு தள்ளிதான் மாயனின் வீடும் இருந்தது.

உறவுக்காரகள்தான்.

"அத்தே..?"

ஒருவித தயக்கம் அவளைப் பிடித்து இழுத்தது.ஆனாலும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை போலும்.!

"என்னடி முத்து...என்னவோ சொல்ல வந்தவ மாதிரி தெரியிது.!நெளியாம  மனத்தில உள்ளத எறக்கி வச்சிரு.."என்றாள் பஞ்சவர்ணம்.

"அப்பனும் அம்மாவும் மாப்ள பாக்கிறாக.அவுக பாக்கிற மாப்ள எனக்கு வேணாம்தே!"

"ஏன் வேணாங்கிறே...நல்ல குணவானா இருந்தா வாக்கப்பட்டு போகவேண்டியதுதானே..அப்பனும் ஆத்தாளும் நமக்கு கெட்டதா நினைக்கப் போறாக?"

"அதுக்கில்லத்தே...நா  மனசில ஒருத்தர நெனச்சிருக்கேன்.அவுக மீசைய பாத்ததுமே மனச பறி கொடுத்திட்டேன்....அடிக்கடி சந்தனக் கட்டைகளை விக்க வருவாகளே ,அந்த மீசைக்காரகதான்!"

காட்டுராஜா வீரப்பனைதான் முத்துலட்சுமி சொல்கிறாள் என்பது புரிந்தது.

"சிறுக்கி பெரிய எடமாப் பார்த்துதான் பிடிச்சிருக்கா.நல்லா இருப்படி " என மனசுக்குள் வாழ்த்திக் கொண்ட பஞ்சவர்ணம் "அப்பன் இதுக்கு சம்மதிக்காதேடி "என்று தன்னுடைய சந்தேகத்தையும் சொன்னாள்.

"அதுக்குதான் உங்கிட்ட யோசனை கேட்டு வந்திருக்கேன்"

இருவரும் குசுகுசுவென பலவித ஐடியாக்களை பரிமாறிக் கொண்டு அந்த காலைப் பொழுதை ஒரு வழியாக ஒப்பேற்றினார்கள்.!

இன்னும் வரும்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சந்தனக்காட்டு வீரப்பன்.

பொட்டுப் பொட்டாக மழை இறங்கியது. இராத்திரி மழை என்பதால் கனக்குமோ ,வெறிக்குமோ என்பது தெரியாமல் பலர் குடிசைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

கல்யாணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது.இதுவரை சாராயத்தை  மறந்திருந்த மாயனுக்கு இரண்டு கிளாஸ் போனால்தான் தூக்கம் வரும் போலிருந்தது.சின்னக் குடிசைக்குள் விலகிப் படுத்திருந்தாள் பஞ்சவர்ணம் . மூன்று நாளோ,ஐந்து நாளோ !இருவருக்கும் கஷ்டம்தான்.

மனைவியின் நெருக்கத்தினால் சத்தியத்தைக் காப்பாற்றி வந்த அவனை அன்று காலை ஏற்படுத்தியிருந்த  இரண்டு அடி அகல இடைவெளி கவிழ்த்திவிடும் போலிருந்தது.

எப்படி வெளியில் செல்வது என்பது புரியாமல் நெளிந்து கொண்டிருந்தவனை  பஞ்சவர்ணம் பார்வையால் கட்டி வைத்திருந்தாள் .இன்னும் எவ்வளவு நேரம்தான் தூங்காமல் அவனை கண்காணிக்கமுடியும்?தன் மீதே அவளுக்கு எரிச்சல் வந்தது!

"சனியன்!...பொம்பளையா பொறந்துட்டா மாசந்தோறும் ஒதுங்கி உக்காரணுமா?...என்ன கருமாயம் பண்ணினேனோ.....!தாலிக்கயத்து மஞ்ச கூட நெறம் மாறல !புருசனை விட்டு ஒதுங்கி உக்காந்துட்டேனே.."என்று புலம்பி தவித்தாள்.

புலம்பல் மாயனுக்கும் கேட்டது. முதலிரவன்றே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் .."இனிமே பீடி  சாராயத்த தொடவே போவதில்லை" என்று,! ஆனால் அந்த சத்தியத்தை தனிமையும்,மழையும் கெடுத்து விடும் போலிருந்தது.

அவள் வேண்டும்.ஆனால் 'அது' முடியாது.பஞ்சவர்ணம் அனுமதிக்க மாட்டாள்.சாராயம் கிடைக்கும்.வெளியே போக விட மாட்டாள்.

அவனைத் தனிமையும் குளிரும் வாட்டி வதைத்தது..விருட்டென எழுந்தவன்  துண்டை உதறினான்.தலையில் சுற்றிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

"இன்னிக்கி மட்டும் பஞ்சு.!என்னால் சும்மா இருக்க முடியல.ஒரே ஒரு கிளாஸ் மட்டும் ஊத்திக்கிட்டு  ஓடியாந்திடறேன் இல்லேன்னா...என்னால தூங்க முடியாதுடி..,பஞ்சு...பஞ்சு ....!"என்று கெஞ்சினான்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட பஞ்சு "வேணாம்யா! சாமிய மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு தூங்கு.."என்றாள்.

சாமிய கும்பிடுற நேரமாடி இது!ஏற விட்டு ஏணிய எடுத்த கதையாகிப் போச்சே..!நேத்து வரை சந்தோசமா இருந்திட்டு இன்னிக்கி தனியாப் படுடான்னா எப்படிடி படுப்பேன்.படுத்தாலும் ஒறக்கம் வருமாடி,,!ஒரு கிளாஸ் அடிச்சிட்டு வந்திட்டேனா உனக்கும் தொந்தரவு இல்ல.எனக்கும் இம்சை இல்ல.ஒரங்கிடுவேன்."

சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கே....மீறுனா சாமி குத்தம் ஆயிடும்"

"ஆமா...பொல்லாத சாமி குத்தம்.!சத்தியம் சக்கரைப் பொங்கலு..விடிஞ்சா வெம்பொங்கல்னு சும்மாவா சொல்லிருக்கானுங்க!வீணா மனச போட்டு ஒலப்பாதே!நிம்மதியா படு.நான் ஒரு எட்டு போயிட்டு வந்திடறேன்."

அடி எடுத்து வைத்தவனை எட்டிப் பிடிக்கிறாள் .தலையில் சிக்கி இருந்த துண்டு தான் சிக்கியது.அவனும் ஒரே தாவலில் வெளியில் போய் நின்றான்.

இன்னும் இருக்கிறது.அடுத்த வாரம்.