திங்கள், 14 அக்டோபர், 2013

வீரப்பன் .2

குடிசையின் கதவுப் பக்கமாக போன பஞ்சவர்ணம் வெளியே நனைந்தவனைப்  பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள்!

"வந்திருய்யா!"

"போ....டீ.....!"

"சுபுத்திதான் இல்ல.சொல்புத்தியாவது கேக்கணும் எதையுமே கேக்க மாட்டேன்னா ,போ!...பட்டுதான் திருந்துவேன்னா போ..எங்கிட்டு சுத்தினாலும் கடேசில  அம்மன கும்பிட இங்கதானே வரணும்.வருவேல்ல...அப்ப வச்சுக்கிறேன் மாப்ள கச்சேரிய..!"

கதவை இழுத்து சாத்தினாள்!

நிறை போதையில் நேரம் சென்று திரும்பிய மாயன் நல்ல பிள்ளையாக வெளித் திண்ணையில் முடங்கிப்போனான்

எவ்வளவு நேரம் பஞ்சு அழுதாலோ தெரியாது.அவளும் தூங்கிப் போனாள்.

விடிந்தது.

இருவரும் இனி முகம் கொடுத்துப் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை.!வெருகும், பெருச்சாளியும் மாதிரி கர்..புர்...என்று திரிந்தார்கள்.முக்கல்,முனங்கல்,சாடைப் பேச்சுகள்,...நேரம் செல்ல ...செல்ல .!ஏதாவது முன்னேற்றம் தெரியுமா ?

ஒரு சின்ன பித்தளைப் போணி சட்டி நிறைய இட்லியும்,ஈயத் தூக்குவாளியில்  சட்னியுமாக ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்தாள்......உரிமையுடன் உள்ளே வந்தவள் ஓரமாக,சுவரைப்பார்த்து உட்கார்ந்திருந்த மாயனைப் பார்த்தாள்.அவளை அறியாமலேயே சிரிப்பு!.அடக்கிக் கொண்டாள்.

கொல்லைப் புறத்தில் உட்கார்ந்திருந்த பஞ்சவர்ணத்துக்கு இட்லி .சட்னி வைத்தவள் நைசாக வாயைப் பிடுங்கினாள்.

"ஏத்தே ...மாமா கடு கடுன்னு இருக்காக...ஒரே நாள்ல ஓஞ்சு போயிட்டாகளே,ஆடி மாசம் வந்தா எப்படித் தாங்கப் போறாகளோ,தெரியலியே....இந்த வெசனம் அவுகளுக்கு மட்டும்தானா இல்ல உங்களுக்கும் இருக்கா..."என்று கேட்க பஞ்சவர்ணம் முறைத்த முறைப்பை பார்க்கணுமே...!

"வாயை நல்லா வளத்து வச்சிருக்கே முத்து...நாளைக்கு நீயும் கல்யாணம் கட்டிக்கிட்டு புருசனோட வாழப்போறவதான்....மனசுல வச்சுக்க..ஆடி மாசம் உனக்கும் வரும்.இப்ப நான் படுற அவதி உம்புருசன் வந்த பிறகுதான்டி தெரியும்."

பஞ்சவர்ணம் கேலியுடன் சொன்னதைக் கேட்டதும் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு வகையான சிலிர்ப்பு.

அவள் யாரையாவது மனதில் வைத்திருப்பாளோ...இருக்கலாம்.இந்த காலத்துப் பெண்களை நம்பமுடியாது.முத்து என்கிற முத்துலட்சுமிக்கு நெருப்பூர்தான்.சொந்த ஊர்,ஹொகனேக்கல் பக்கம். தருமபுரி மாவட்டம்.செல்லப் பொண்ணு . இவர்களின் வீட்டுக்கு நாலைந்து வீடு தள்ளிதான் மாயனின் வீடும் இருந்தது.

உறவுக்காரகள்தான்.

"அத்தே..?"

ஒருவித தயக்கம் அவளைப் பிடித்து இழுத்தது.ஆனாலும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை போலும்.!

"என்னடி முத்து...என்னவோ சொல்ல வந்தவ மாதிரி தெரியிது.!நெளியாம  மனத்தில உள்ளத எறக்கி வச்சிரு.."என்றாள் பஞ்சவர்ணம்.

"அப்பனும் அம்மாவும் மாப்ள பாக்கிறாக.அவுக பாக்கிற மாப்ள எனக்கு வேணாம்தே!"

"ஏன் வேணாங்கிறே...நல்ல குணவானா இருந்தா வாக்கப்பட்டு போகவேண்டியதுதானே..அப்பனும் ஆத்தாளும் நமக்கு கெட்டதா நினைக்கப் போறாக?"

"அதுக்கில்லத்தே...நா  மனசில ஒருத்தர நெனச்சிருக்கேன்.அவுக மீசைய பாத்ததுமே மனச பறி கொடுத்திட்டேன்....அடிக்கடி சந்தனக் கட்டைகளை விக்க வருவாகளே ,அந்த மீசைக்காரகதான்!"

காட்டுராஜா வீரப்பனைதான் முத்துலட்சுமி சொல்கிறாள் என்பது புரிந்தது.

"சிறுக்கி பெரிய எடமாப் பார்த்துதான் பிடிச்சிருக்கா.நல்லா இருப்படி " என மனசுக்குள் வாழ்த்திக் கொண்ட பஞ்சவர்ணம் "அப்பன் இதுக்கு சம்மதிக்காதேடி "என்று தன்னுடைய சந்தேகத்தையும் சொன்னாள்.

"அதுக்குதான் உங்கிட்ட யோசனை கேட்டு வந்திருக்கேன்"

இருவரும் குசுகுசுவென பலவித ஐடியாக்களை பரிமாறிக் கொண்டு அந்த காலைப் பொழுதை ஒரு வழியாக ஒப்பேற்றினார்கள்.!

இன்னும் வரும்.

கருத்துகள் இல்லை: