
"ஆமாம்மா!நம்ம வழிதான் .பையன் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கான்.கவருமெண்ட் வேலை.பயபிள்ளை கவலையில்லாம காலம் கடத்துமே....நம்மள மாதிரி நொம்பலப்பட வேணாம்ல.!"
"அது சரிண்ணே ,அவள ஒரு வார்த்தை கேட்டிகளா?"
"நம்ம முத்துக்கிட்டயா?...அவ என்னம்மா பச்சபுள்ள .நல்லது கெட்டது தெரிஞ்சிக்கிற வயசு இல்லம்மா.!பெரியவங்க நாங்க பாத்து செய்றப்ப கெட்டுப் போறதுக்கா செய்வோம்?....உங்கப்பன் ஆத்தா உனக்கு கெட்டதய்யா பண்ணிப்புட்டாக?"
அய்யன் இப்படி கேட்டதும் பஞ்சு ஒரு மாதிரியாகிவிட்டாள் ..முத்துக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்பதை அவர்களிடம் எப்படி சொல்வது?
அறைக்குள் இருந்த முத்துவின் மனமோ துடித்தது. "பஞ்சு ..சொல்லு....எங்கப்பன் ஆத்தாகிட்ட என் ஆசையை சொல்லு ..சொல்லு..."என்று அலறியது.
பஞ்சுவின் முகத்தைப் பார்த்த பாப்பம்மா அவள் ஏதோ ஒரு விஷயத்தை சொல்லமுடியாமல் தவிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள்.
"பஞ்சு ...என்னத்தையோ சொல்ல வர்றே....சொல்ல முடியாம சங்கடப்படுரே... நீ யாரயாவது மாப்ள பாத்து வச்சிருக்கியா என்ன?"
"நான் பாக்கல மதினி!"
"பின்ன வேறு யாரு பாத்திருக்கா?"
"முத்துதான்!"
அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி.அறைக்குள் இருந்த முத்துவோ அப்போதுதான் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள் .இனி என்ன நடந்தாலும் சரி என்கிற மாதிரி மனதில் இருந்த பாரம் குறைந்திருந்தது.
"என்னடி சொல்றே....முத்து மாப்ள பாத்திருக்காளா ?"
"சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுண்ணே ..முத்துதான் வூட்டுக்கு வந்து நீங்க மாப்ள பாத்திருக்கிற சங்கதிய சொன்னா...அவளுக்கு வீரப்பன் மேல ஆசை.அவருக்கும் நம்ம முத்து மேல ஆசை.ரெண்டு பேரும்ஒருத்தர ஒருத்தர் பாத்து பேசி இருக்காங்க.ஆனா தப்புத்தண்டா எதுவும் நடக்கல!"என்றதும் தரையில் ஓங்கி மிதித்தபடி பட்டியல் கல்லை விட்டு எழுந்தார்.
"எங்கே இருக்கிறா?"என ஆவேசமுடன் வீட்டுக்குள் பாய்ந்தபோது யாருமே எதிர்பார்க்கவில்லை அங்கு வீரப்பன் வந்து நிற்பான் என்பதை.!
"அய்யா கோவமா இருக்காக போலிருக்கு..."உள்ளே வந்த வீரப்பன் பட்டியக்கல்லில் ஒரு ஓரமாக உட்கார்ந்தான். ஆத்திரம் எங்கே போனதோ தெரியவில்லை.பாப்பம்மாளும் பஞ்சவர்ணமும் படக்கென்று முத்து இருந்த அறைக்குள் போய் விட்டனர்.
என்ன நடக்கபோகுதோ என்கிற அச்சத்துடன் பாப்பம்மா கதவோரமாக நின்று கொண்டாள்.
"அய்யா கும்புடுறேன்.நாந்தான் வீரப்பன்"உட்கார்ந்தபடியே கை குவித்தான்.
கருகருவென அடர்த்தியான கர்லிங் முடி.பொசு பொசுவென வளர்ந்திருந்த மீசை.இலை பச்சை நிறத்தில் யூனிபார்ம் .இடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரிவால்வார்.காட்டு இலாகா அதிகாரி மாதிரியான தோற்றம்.
நேருக்கு நேராக பார்க்க தயங்கிய அய்யனும் பதில் வணக்கம் போட்டுவிட்டு " என்ன விசயமா வந்திருக்கீக ?"என்றார்.
"நல்ல விசயந்தான் பேச வந்திருக்கேன்.நீட்டி,நெளிச்சி பேச விரும்பல.கட்டன்ரைட்டா பேசிப்பிடறதுதான் இந்த வீரப்பனோட பழக்கம்
உங்க மக முத்துவ நா விரும்பறேன்.அந்த பிள்ளயும் என்னை விரும்புது.கண்ணாலம் கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம் உங்க சம்மதம் தேவை.!"
அய்யன் தயங்கியபடியே "எங்க சொந்தத்தில முத்துக்கு மாப்ள முடிச்சிருக்கேன்.இப்படி திடுதிப்புன்னு வந்து பொண்ண கேட்டா என்ன பண்றது?வாக்கு தவறாதவன் இந்த அய்யன்கிறது ஊருக்கே தெரியும்.நாலும் தெரிஞ்சவர் நீங்க"என பேச்சை இழுத்தார்.
அருகில் வந்த வீரப்பன் அவர் தோள் மீது கை போட்டுக்கொண்டான்.
"உங்க முடிவ நீங்க சொல்லிட்டீக.என் முடிவ....இல்ல உங்க மகளுக்கும் சேத்து சொல்றேன்.எங்க முடிவ இப்பவே சொல்லிடறோம்.நாங்க ரெண்டு பெரும் புருசன் பொஞ்சாதியா வருவோம்.உங்க ஆசிர்வாதம் தேவை.சந்தேகமிருந்தா முத்துகிட்ட ஒரு வார்த்த கேட்டுக்குங்க..வர்றன்யா ,வர்றம்மா !!"
எல்லோருக்கும் பொதுவாக ஒரு கும்பிட்டு போட்டுவிட்டு ராஜ நடை நடந்து போனான்.!
-----இன்னும் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக