வெள்ளி, 25 அக்டோபர், 2013

வீரப்பன்.[5]

நெடிதுயர்ந்து, நெருங்கி,நெருங்கி நின்ற பருமனான மரங்கள்.தேக்கு,சந்தனம் ,தோதகத்தி ,மூங்கில் இப்படி விதம் விதமாக செழித்து  வளர்ந்து நின்றன.அவைகளின் அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்த புதர்ச் செடிகள்.மேடும் ,பள்ளமுமாய் ,சீரான வழி  இல்லாத காடுகளாய்.....

       மாதேஸ்வரன் மலை உச்சியில் இருந்து பார்த்தால்  கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை வெ ண் போர்வையாய் படர்ந்த மேகமும் ,பச்சை நிற மேனி யான மழையும்தான்.!சில்லென்று தழுவிச் செல்கிற காற்று....எப்போது வானம் கண் திறக்கும் ,மழை பொழியும் என்பது தெரியாது.ஆதவனின் சுடு கதிர்கள் பெரும்பாலான பகுதிகளைத் தொடுவதில்லை.வழுக்கலான ,பாசி படர்ந்த பாறை ,கசகசவென ஈரம்.

   ஆள் அண்டாகாடு என்பார்களே.....

   அதுதான் இது.

   மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையான ,அழகான பகுதிகள் என்றால் இந்தப் பகுதிகளைச்  சொல்லலாம்.கிட்டத்தட்ட 18 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  இயற்கையின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துகிடக்கிறது.

    அருவிகளின் அருகில் மந்தை மந்தையாய் யானைகள் மேயும் அழகே அழகு.

     வெள்ளைக் காலுறைகள் அணிந்திருக்கின்றன என்று சொல்லக்கூடிய காட்டெருமைகளின் அழகும் அழகுதான்.!

      உண்ட மயக்கத்தில் மரத்தின் வசமான கிளைகளில் கால்களை தொங்க விட்டுக் கொண்டு உறங்கிக் கிடக்கும் சிறுத்தைகளை சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

     அதோ பாருங்கள் அந்த புலியை!மானின் கழுத்தை கவ்வியபடி போய்க் கொண்டிருக்கிறது. வசதியான இடம் வந்ததும் மானை கீழே போட்டுவிடும்.வயிறை கிழித்து குடலையும் மாமிசத்தையும் இரத்தச்சுவை  மாறுவதற்குள் தின்று விட்டு மிச்சத்தைப் போட்டுவிடும்.

       தப்பித் தவறி மனிதன் இந்த சாம்ராஜ்யத்தில் நுழைந்து விட்டால் வழி புரியாது நிச்சயம் மாட்டிக் கொள்வான் திசையும் தெரியாது.வழியும் கிடைக்காது.வண்டுகளின் பின்னணி இசையில் அவ்வப்போது பிளிறல்,உறுமல் வேறு.பயத்தில் செத்தாலும் வியப்பில்லை.

      மனிதன் தனக்கென கூடு கட்டி வாழமுடியாத அந்த வனாந்திரத்தில் தான்  வீரப்பன் கொடிபறக்க வாழ்கிறான். அவனுக்கு காட்டு மிருகங்களிடம் பயமில்லை. அவனின் பயமே நாட்டு மனிதர்கள்தான்.

     சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் சின்ன நீரோடைக்கு அருகே ஒரு குகை.கொட்டாவி விட்ட மாதிரி.அதன் மறைவிடத்தில் வீரப்பன் படுத்திருந்தான் பள்ளிகொண்ட பெருமாளைப் போல,தலையை இடது கை தாங்கி இருந்தது.சற்றுத் தள்ளி சேத்துக்குளி கோவிந்தன்.அருகே தானியங்கி  துப்பாக்கிகள்,
.
    "இனியும் எதுக்கு ரோசனை? பேசாம முத்துவ்  க ண்ணாலம் கட்டிக்கிட்டு கூட்டியாந்திரு.மனச பறி  கொடுத்திட்டு எதுக்கு மருகிட்டு கிடக்கிறே?" என்றான் சேத்துக்குளி.

      எழுந்து உட்கார்ந்த வீரப்பன் மீசையை வழக்கம் போல திருகிக்கொண்டான். சேத்துக்குளியனை கூர்ந்துபார்த்தான்.

      "என்னத்த அப்படி பாக்கிற? எம்மனசில வஞ்சகம் எதுவுமில்ல.உனக்கு கண்ணால ஆசை  வந்திருச்சி.ஏத்த பொண்ணையும் .பாத்து தீர்மானிச்சிட்ட. அப்பறம் எதுக்கு தயங்குரே?"

      "அதுக்கில்லடா.நா மட்டும் காட்டுக்குள்ள குடும்பம் நடத்துனா நல்லா  இருக்குமா?நாளைக்கு நீயே நெனைக்கமாட்டியா? .....நாம்பல்லாம் உயிரை கையில பிடிச்சிக்கிட்டு திரியிற போது இவன் மட்டும் பொஞ்சாதி குடும்பம்னு இருக்கானேன்னு நெனைக்க மாட்டியா....?"ஆழம் பார்க்கும் வகையில் வார்த்தைகளை விட  சேத்துக்குளி கோவிந்தன் துடித்துப் போனான்.

     "என்ன மனுசன்யா நீ...?"என்று கோபத்துடன் எழுந்தவனின் தோள்  தொட்டு  சமாதானப்படுத்த முயன்றான் வீரப்பன்.கைகளை விலக்கி விட்ட  சேத்துக்குளி , "கேட்டியே ஒரு வார்த்த ,நாண்டுக்கிட்டுப் போற மாதிரி!எங்கப்பன் ஆத்தாவுக்குப் பெறகு எல்லாமே நீதான்னு நெனச்சு உங்கூடவே  கிடக்கிறேன் பாரு...அதுக்கு பரிசு  கொடுக்கிறியா?"

      "அதுக்கில்லடா ..உன்னயப் பத்தி எனக்குத் தெரியும் .மத்த பயலுக நெனக்க மாட்டனுகளா?அப்படி நெனச்சுட்டா நம்மகிட்ட  ஒத்துமை இருக்காதே!அழிஞ்சு போயிருவோம்..அதுக்காகத்தான்யா அப்படி கேட்டேன்!"

       "எந்தப்பயலும் அப்படி நெனக்கமாட்டான்.எல்லோருக்கும் நீதான் அப்பன்னு நெனச்சு வாழ்ந்திட்டிருக்கானுக.ஆத்தா வந்திட்டா இன்னும் சந்தோசப் படுவாய்ங்க. முத்து வந்தா பொங்கிப் போட்டுக்கிட்டு இருக்கும் .அது கையால சோறு வாங்கி சாப்பிடறவனுக்கு ஆத்தா இல்லையேங்கிற கவலை இருக்காது..வேற மாதிரி எவனும் நெ னைக்கமாட்டான்.  "

   "நெனச்சுட்டா....?" மனதில் கிடந்த சந்தேகத்தை எடுத்துப்போட்டான் வீரப்பன்,

    ""அவன் உசிரோட இருக்கமாட்டான்.!"

     அந்த நொடியே கட்டித்தழுவிய வீரப்பன் " நீ இருக்கிற வரை எமன் என்ன நெருங்கமாட்டான்டா !"என்று உணர்ச்சி வசப்பட்டான்.

       தம்பி அர்ச்சுனனை விட சேத்துக்குளியிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தவன்  வீரப்பன்.இவனின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும்  எடுப்பதில்லை.

      "கண்ணாலத்த எங்க வச்சுக்கலாம்னு நெனக்கிறே ?"

      "முத்துவோட அப்பாருக்கு என்ன பிடிக்கல .மகள கட்டித்தரமாட்டாருன்னுதான்நெனக்கிறேன்.அதனால மதுரவீரசாமி மாதிரி கடத்திட்டு வந்துதான் கண்ணாலம் பண்ணிக்கணும்.அதுக்கு நேரம் காலம் பாத்தா நடக்காது.அந்த புள்ள மனசு உடஞ்சி போகாம பாத்துக்கணும்.அது ஏதாவது பண்ணிக்கிட்டா  அ ந்தப் பாவமும் வந்து சேரும்.என்ன சொல்றே?"

   கடத்தல் திட்டம் சே த்துக்குளிக்கு பிடிக்கவில்லை போலும் .பதில் சொல்லவில்லை!

------இன்னும் வரும்.

கருத்துகள் இல்லை: