திங்கள், 28 அக்டோபர், 2013

சிறை எடுத்தான் சின்னப் பெண்ணை,![வீரப்பன்.6]

"அ டியே.....பஞ்சு..!"

வாசலில் கால் வைத்ததும் பெருங்குரல் எடுத்த பாப்பம்மா ஓட்டமும்,நடையுமாக உள்ளே பாய்ந்தாள்.!

        ஆட்டுக்கல்லில் பருத்திக்கொட்டையை போட்டு ஆட்டி பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்ச வர்ணம் கொஞ்சம் கூட அவளை எதிர்பார்கவில்லை.பதறிப் போனாள்!

         "என்ன மதினி.....ஏன் இப்படி அரக்கப் பரக்க ஓடியாறி...க !என்ன நடந்து போச்சு?" என கலவரப்பட்டு கேட்க,

       பாப்பம்மாவுடன் வந்த செங்கோடன் அங்கு கிடந்த முக்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு சவுகரியமாக உட்கார்ந்து கொண்டான்.

       "என்னத்தடி சொல்ல ....."என்று ராகம் போட்டு இழுத்த பாப்பம்மா "விடிஞ்சதிலிருந்து  முத்துவ காணலடி ....காணாம போயிட்டாடி,,பாதகத்தி,!" என்று ஒப்பாரி வைக்க,நிலைகுலைந்து போனாள் பஞ்சவர்ணம்.

      உடம்பு ஜில்லிட்டது.இதயத் துடிப்பு அதிகமாகியது.கண்களில் பூச்சி பறந்தது.முந்தாநாள் தன்னையும் முத்துவையும் கூட்டுக் களவாணிகள் என்று  அய்யன் சொன்னதிலிருந்து அந்தப் பக்கம் பஞ்சு எட்டிப் பார்க்காமல் இருக்கிறாள்.

      இப்போது முத்து காணாமல் போய்விட்டாள்  என சொல்லி தன் வீட்டுக்கே  வந்து  பாப்பம்மாள் அழுது புலம்புகிறாள் என்றால்.........

     பஞ்சவர்ணத்துக்கு வாய் வரவில்லை...பாப்பம்மா இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ ....!

      "ரெண்டு சிறுக்கிகளும் ஒண்ணுமண்ணாதானே ..திரிஞ்சீக....உங்கிட்ட கூட
ஒன்னும் சொல்லாமலா போயிருப்பா?   களவாணி சிறுக்கிகளா....கூத்தாடி கட்டுறீக..?"

       மகளைக் காணவில்லை என்கிற கவலை ,துயரம்,துக்கம்,பாப்பம்மாவை  பைத்தியம் போலாக்கியிருந்தது.நிலை குலைந்து போயிருந்தாள்

     புருஷன் ஆசைப்பட்டானே என்பதற்காக பருத்திப்பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்சுவுக்கு இப்படி  ஒரு கொடுமை விடிந்தும் விடியாததுமாக   வந்து சேர வேண்டுமா...?காட்டுப்பக்கம் காலாறப் போய்விட்டு    வருவதாக சொன்ன மாயன் எந்த நேரத்திலும் திரும்பிவிடலாம்.அவன் வருவதற்குள் இந்த புயல்  கடந்து விட்டால் நல்லது.

       "ஏண்டி.....நான் கேட்கிறேனில்ல...தேவாங்கு  மாதிரி கவுந்துகெடந்தா  விட்ருவனா?என்னடி  நெனச்சிட்டிருக்கே முத்து எங்கடி இருக்கா?"என்று உலுக்க ,பஞ்சு அப்படியே அவள் காலில் ஒடுங்கி விழுந்தாள் .

     "சத்யமா சொல்றன் மதினி...எந்தாலி மேல சத்யம் முத்துவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது"என்று இவள் சொல்லிக்   கொண்டிருந்த நேரத்தில்  மாதேஸ்வரன் மலையில் உள்ள வனதேவதை கோவிலில் வீரப்பனின் கல்யாணம் நடந்து முடிகிறது.

அடுத்து கார்டு மோகனய்யாவின் அத்தியாயம் ஆரம்பம்.!

              ர்நாடக மாநில எல்லைப் பகுதியில் இருந்த வன பாதுகாப்பு காவல்காரர்கள் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திற்குள் ஓடினார்கள் .அய்யாவுக்கு அவ்வளவு பயம். குடகு மாவட்டம் சோமவாரப்பே ட்டையை சேர்ந்த அந்த அய்யாவின் பெயர் மோகனய்யா.இளைஞர்.துடிப்பானவர்.கண்டிப்பானவர் .இளம் ரத்தம் என்பதால் பயமறியாதவர் என்றால் அது பேத்தலாகிவிடும்.அவர் வளர்ப்பு அப்படி.!புதிதாக வந்திருக்கும் அதிகாரி  மோகனய்யா.

         "பாலார் செக் போஸ்ட் , இன்னிக்கி டியூட்டி யாரு?"என்று கேட்டார் மோகனய்யா.

          "நான்தான் சார் "என்றான் ஹொன்னப்பா.

       
       "நீ  மட்டுந்தானா?"

        "எஸ் சார்."!

       "வெரி   வெரி இம்பார்ட்டன்ட் செக் போஸ்ட்டுக்கு நீ மட்டுந்தானா?"

       " மென்  பத்தாதுங்கய்யா.!"

        "வேற செக் போஸ்ட் னா போறதுக்கு தயங்குறீங்க ,பாலார் செக் போஸ்ட்னா  மட்டும் டைம் டேபிள் போட்டுக்கிட்டு நிக்கிறீங்களேப்பா ..என்ன   காரணம்?"

        "........................!"

       "  வாய மூடிட்டிருந்தா விட்ருவனா மேன் ?இன்னிக்கி நானும் வரேன்.நாலு பேர் ரெடியா இருங்க.வெப்பன்ஸ லோடு  பண்ணிக்க!" என்று  உத்திரவு போட்டதும்  நாலு பெரும் கோரஸாக எஸ்    சார்" என்று சல்யூட் அடித்தனர்.
"
      ஜீப் பக்கமாக அவர் போனதும் பக்கத்திலிருந்தவனின்  வாயைக் கிண்டினான் ஹொன்னப்பா.   "எதுக்குப்பா அய்யா வெப்பன்ஸ லோட்
 பண்ண ச்   சொல்றார்?இன்பார்மெண்டு பயலுக எவனாவது வந்தானுகளா? இன்பர்மேசன்ஸ் எதுவும் வந்திருக்குமா?" என்று கேட்டான்.

      "தெரியலியே...இன்பர்மேசன் இல்லாமலா நம்மள  அலர்ட் பண்ணுவாங்க?எதுக்கும் நாம்ப சேப்டியாஇருக்கனும்பா....இவங்க கொடுக்கிற சம்பளத்தில குடும்பத்தை  கொண்டு செலுத்துறது கெடாவ்ல பால் கறக்கிற வேல!ஏதோ  கூப்பு வெட்டிட்டுப் போறவனும்,சந்தனக்கட்ட கொண்டு போறவனும் கொடுக்கிற காசுலதான் நிம்மதியா பொழப்பு ஓடிட்டிருக்கு...அதுலயும் இந்தாளு மண்ணள்ளிப் போட் ரு வான் போலிருக்கே?"

அரசாங்க விசுவாசம் தெரிந்தது.

       "சரி ..சத்தம் போட்டு சொல்லாதே!"

----------------இன்னும் வரும்.கருத்துகள் இல்லை: