ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சந்தனக்காட்டு வீரப்பன்.

பொட்டுப் பொட்டாக மழை இறங்கியது. இராத்திரி மழை என்பதால் கனக்குமோ ,வெறிக்குமோ என்பது தெரியாமல் பலர் குடிசைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

கல்யாணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது.இதுவரை சாராயத்தை  மறந்திருந்த மாயனுக்கு இரண்டு கிளாஸ் போனால்தான் தூக்கம் வரும் போலிருந்தது.சின்னக் குடிசைக்குள் விலகிப் படுத்திருந்தாள் பஞ்சவர்ணம் . மூன்று நாளோ,ஐந்து நாளோ !இருவருக்கும் கஷ்டம்தான்.

மனைவியின் நெருக்கத்தினால் சத்தியத்தைக் காப்பாற்றி வந்த அவனை அன்று காலை ஏற்படுத்தியிருந்த  இரண்டு அடி அகல இடைவெளி கவிழ்த்திவிடும் போலிருந்தது.

எப்படி வெளியில் செல்வது என்பது புரியாமல் நெளிந்து கொண்டிருந்தவனை  பஞ்சவர்ணம் பார்வையால் கட்டி வைத்திருந்தாள் .இன்னும் எவ்வளவு நேரம்தான் தூங்காமல் அவனை கண்காணிக்கமுடியும்?தன் மீதே அவளுக்கு எரிச்சல் வந்தது!

"சனியன்!...பொம்பளையா பொறந்துட்டா மாசந்தோறும் ஒதுங்கி உக்காரணுமா?...என்ன கருமாயம் பண்ணினேனோ.....!தாலிக்கயத்து மஞ்ச கூட நெறம் மாறல !புருசனை விட்டு ஒதுங்கி உக்காந்துட்டேனே.."என்று புலம்பி தவித்தாள்.

புலம்பல் மாயனுக்கும் கேட்டது. முதலிரவன்றே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் .."இனிமே பீடி  சாராயத்த தொடவே போவதில்லை" என்று,! ஆனால் அந்த சத்தியத்தை தனிமையும்,மழையும் கெடுத்து விடும் போலிருந்தது.

அவள் வேண்டும்.ஆனால் 'அது' முடியாது.பஞ்சவர்ணம் அனுமதிக்க மாட்டாள்.சாராயம் கிடைக்கும்.வெளியே போக விட மாட்டாள்.

அவனைத் தனிமையும் குளிரும் வாட்டி வதைத்தது..விருட்டென எழுந்தவன்  துண்டை உதறினான்.தலையில் சுற்றிக் கொண்டு அவளைப் பார்த்தான்.

"இன்னிக்கி மட்டும் பஞ்சு.!என்னால் சும்மா இருக்க முடியல.ஒரே ஒரு கிளாஸ் மட்டும் ஊத்திக்கிட்டு  ஓடியாந்திடறேன் இல்லேன்னா...என்னால தூங்க முடியாதுடி..,பஞ்சு...பஞ்சு ....!"என்று கெஞ்சினான்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட பஞ்சு "வேணாம்யா! சாமிய மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு தூங்கு.."என்றாள்.

சாமிய கும்பிடுற நேரமாடி இது!ஏற விட்டு ஏணிய எடுத்த கதையாகிப் போச்சே..!நேத்து வரை சந்தோசமா இருந்திட்டு இன்னிக்கி தனியாப் படுடான்னா எப்படிடி படுப்பேன்.படுத்தாலும் ஒறக்கம் வருமாடி,,!ஒரு கிளாஸ் அடிச்சிட்டு வந்திட்டேனா உனக்கும் தொந்தரவு இல்ல.எனக்கும் இம்சை இல்ல.ஒரங்கிடுவேன்."

சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கே....மீறுனா சாமி குத்தம் ஆயிடும்"

"ஆமா...பொல்லாத சாமி குத்தம்.!சத்தியம் சக்கரைப் பொங்கலு..விடிஞ்சா வெம்பொங்கல்னு சும்மாவா சொல்லிருக்கானுங்க!வீணா மனச போட்டு ஒலப்பாதே!நிம்மதியா படு.நான் ஒரு எட்டு போயிட்டு வந்திடறேன்."

அடி எடுத்து வைத்தவனை எட்டிப் பிடிக்கிறாள் .தலையில் சிக்கி இருந்த துண்டு தான் சிக்கியது.அவனும் ஒரே தாவலில் வெளியில் போய் நின்றான்.

இன்னும் இருக்கிறது.அடுத்த வாரம்.

கருத்துகள் இல்லை: