வெள்ளி, 15 நவம்பர், 2013

வீரப்பன் கதை .8,மோகனய்யா காலி.!

                         டிரான்சிஸ்டரை வலது காது பக்கமாக வைத்துக் கொண்டு மானிலச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தான் வீரப்பன்.எவ்வளவு கடுமையான வேலைகள்  இருந்தாலும் செய்திகள்  மட்டும் கேட்கத் தவறுவதில்ல.அன்றாட நாட்டு நடப்புகளை கேட்டுவிட்டு அதை தன்னுடைய  தோழர்களுடன் பகிர்ந்து கொள்வான்.சில நேரங்களில்     கடுமையான  விவாதங்கள் நடப்பதும் உண்டு,

                    பக்கமாக வந்து நின்ற சேத்துக்குளி கோவிந்தன் செய்தி முடியும் வரை எதுவும் பேசவில்லை. வீரப்பனுக்குப் புரிந்தது.!

                       " பய ஏதோ முக்கியமான சங்கதி கொண்டாந்திருக்கான்.!"

                    செய்திகள் முடிந்ததும் டிரான்சிஸ்டரை 'ஆப்' செய்த வீரப்பனின் காது வரை குனிந்த சேத்துக்குளி திரட்டிக் கொண்டு வந்திருந்த சங்கதிகளை சொல்லிவிட்டு நிமிர்ந்தான்.

                        வீரப்பனின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.!

                       பழுப்பான பச்சை நிற 'புஷ் கோட்டு' முழுக்கால் டவுசர் .'புஷ் கோட்டில்'பெரிய பெரிய பைகள்.வகை வகையான வெடி குண்டுகள்.குறுக்கு வாரில் வரிசையாக ' .புல்லட்டுகள்' 'அல்ட்ரா மாடர்ன் பிரஞ்சு துப்பாக்கி.!

                   மூன்று பேரை மட்டும் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் மறைந்தான்.!

                  பாலாறு,!கழிவுகள் எதுவும் கலக்காததால் தெளிவான நீரோட்டம். கூட்டம் கூட்டமாக கெண்டை மீன்கள்.நீரோட்டத்தை எதிர்த்தபடி அலைவதை  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.ரம்மியமாக இருக்கும்.பாறைகள் தட்டுப்படும்  இடங்களில் துள்ளிக் குதித்து முன்னேறும் போது மாலை நேர வெயிலில் மீன்கள் தகதகக்கும்.

                 இந்த அழகை  ரசிப்பதற்காக  அவ்வப்போது  பாலாறு பாலத்துக்கு பொரியுடன் வந்து  விடுவார்,கார்டு மோகனய்யா.பொரியை தூவி விடுவார்.வாய்களை திறந்து 'மளக்  ...மளக்கென்று பொரியை விழுங்கும் மீன்களை பார்க்கும்போது அன்றாட  கவலைகள் மறந்துவிடும் அவருக்கு.!

                  கொண்டு சென்றிருந்த பொரி தீரவே மன நிறைவுடன் வீடு நோக்கி  நடக்கத் தொடங்கினார்.

               நீரைத் தழுவி வரும் குளிர்ந்த காற்று.   வனப்பகுதிகளுக்கு உரிய தனித்   . தன்மை .

            கன்னட சினிமாப் பாடலை 'ஹம்' செய்தபடி அனுபவித்து நடந்தவரை  'டப்' என்று குண்டு தாக்கியது.நெஞ்சை குறி பார்த்து தட்டியவன் வீரப்பன்.ஒரே புல்லட்.!

                  வேர் அறுந்த மரம் மாதிரி பாலத்தில் சாய்ந்தார் .

                 முக்கல்,முனகல் ,கதறல் எதுவுமில்லை.நொடிப்பொழுதில் உயிர் பறந்து விட்டது.நீண்ட நேரம் மரத்தின் மறைவில் பதுங்கி இருந்து நேரம் பார்த்து சுட்டுத் தள்ளிவிட்டான்.

                தனது டிரைவர் பொன்னய்யனை  கைது செய்து சந்தனக்கட்டை 'லோடை'கைப்பற்றியதற்காக மோகனய்யாவுக்கு மரணதண்டனை.

               சுந்தர்,சுவாமிநாதன்,ஆண்டியப்பன்,மாரியப்பன்,குருநாதன்,ஆத்தூர் கொளந்தை ,பெருமாள்,கோபாலன் இத்தனை பேரும்  சேத்துக்குளியுடன் கை  கலக்காத குறை.!கத்திக் கொண்டிருந்தார்கள்.

              "அவனுங்கள விடக்கூடாது.இப்பவே தீர்த்துப் புடனும்.எச்சக்காசுக்காக  துப்பு சொல்றானுவ.பொஞ்சாதியையும் வித்துப் புடுவாணுக.ஈனப்பயளுவ.!" என்று கொதிக்கிறான் ஆத்தூர் கொளந்தை .

             " நா  மட்டும் அவனுகள சும்மா விட்ரனும்னா சொல்றேன்.அண்ணன்  வரட்டும் ஒரு வார்த்த சொல்லிட்டு பொங்க  வச்சிரலாம்."என்று ஆத்திரத்தை அடக்க பார்க்கிறான் சேத்துக்குளி.

               பொங்கல் விழாவுக்கு பத்து பத்து நாட்கள் இருந்தது.கோட்டையூர் அய்யணன்,குணசேகரன்,முத்துக்குமரன்,தனபாலன்,அய்யன்தொரை என்கிற ஐந்து பேரும்  போலீசுக்கு துப்பு சொல்லும் 'இன்பார்மர்கள்'கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை பொங்கல்  நாளில் வீரப்பன்  கடத்த இருப்பதாக இவர்கள் போலீசுக்கு சொல்லி  விட்டதால்  முக்கிய வழிகளை  மறித்து 'ரிசர்வ் போலீஸ்' முகாம்கள் அமைத்து விட்டது.

                    இதனால்தான் வீரப்பன் கோஷ்டிக்கு அப்படி ஒரு வெறி.!

-----இன்னும் வரும்.


           

           

செவ்வாய், 5 நவம்பர், 2013

வீரப்பன்.7..கஞ்சா வேணுமா சார்?

                            போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான் பொன்னையன்.கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த ரூட்டில் லாரி ஒட்டிக் கொண்டிருக்கிறான்.எந்த இடத்தில் நிறுத்த வேண்டும்,நிறுத்தக்கூடாது,போலீஸ் எதிர்வந்தால்  எப்படி தப்பிச் செல்வது,எந்தெந்த அதிகாரிகளை எப்படி கையாளுவது என்பதெல்லாம் பொன்னையனுக்கு அத்துபடி.

                     இடுப்பில் கட்டி  இருந்த பச்சைநிறப் பெல்ட்டில் இருந்த பர்சில் இருந்து 5 நோட்டுகளை உருவினான்.ஐந்தும் 100 ரூபாய் நோட்டுகள்.உள்ளங்கைக்குள் சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டவன் எதுவுமே இல்லாதது போல கையை வீசியபடி செக் போஸ்ட்டை நோக்கி நடந்தான்.

                      செக்போஸ்ட்டில் இருந்தஹொன்னப்பாவுக்கு அவனைப் பார்த்ததும் என்ன நடக்கப் போகிறதோ என்கிற பயம் !.வயிற்றுக்குள் இருக்கும் வாய்வு வெளியேறமுடியாமல் இம்சிப்பதைப் போன்ற அவஸ்தை.ஆபத்து மறைந்திருக்கிறது என்பதை ஜாடையாகக்கூட சொல்ல முடியாது.சொன்னால் வேலைக்கு ஆபத்து.சொல்லாவிட்டால் நாளையோ மறுநாளோ வீரப்பனிடம் சிக்க வேண்டியதாக இருக்கும்.அவன் கையை எடுப்பானோ,காலை எடுப்பானோ...!

             இவனுடைய சிக்கல் எதுவும் தெரியாமல் பொன்னையன் வழக்கம் போல "கஞ்சா வேணுமா சார்?"என்றபடியே நெருங்கினான்.

               மருண்டுபோன ஹொன்னப்பா "யாருடா நீ?எவனுக்குடா வேணும் கஞ்சா....லாரியில் கஞ்சா கடத்துறியா?"என்று அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு "சார்..சார்.!" என்று கூச்சல் போட--

மறைந்திருந்த கார்டு மோகனய்யாவும் மற்றவர்களும் நொடிகளில் பொன்னையன் மீது பாய்ந்து விட்டனர்,மோகனய்யா துப்பாக்கியில் குறி பார்க்க மற்றவர்கள் பொன்னையனை புரட்டி எடுத்து விட்டனர்.ராஜ விசுவாசம்.

                  சந்தனக்கட்டைகள் லாரியுடன்கைப்பற்றப்பட்டன.பொன்னையன் கைது செய்யப்பட்டான்.

                 பொன்னையன் கவலைப்படவில்லை.பயப்படவும் இல்லை

                  வீரப்பனுக்கு தகவல் போனது.

                விட்டான் ஒரு உதை .!தகரப்போணி மரத்தில் மோதி நசுங்கி விழுந்தது.

                  "எந்த நாய்டா நம்ம ஆள கவ்விட்டுப் போனது?எங்கேருக்கு அந்த சொறிநாய்?எனக்கு லோடு போனத பத்தி கவலையில்லை.மசுருக்கு சமம்.நம்ம ஆளு மேலேயே கையை வச்சிருக்கான்னா அது எம்மேல கை வச்சதுக்கு சமம்.விட மாட்டேன்.சங்க கடிச்சு துப்பிடுவேன்.இன்னும் பத்துமணி நேரத்தில அந்த நாய
பத்தின அம்புட்டு விவரமும் எனக்கு வந்தாகணும்."என்று குமுறிய வீரப்பன் அப்படியே பாறை மீது மல்லாந்து படுத்து விட்டான்.

         அடக்க முடியாத கோபம் வந்தாலும் சரி ,ஆட்களையோ யானைகளையோ போட்டுவிட்டு வந்தாலும் சரி இப்படி மட்ட மல்லாக் க படுத்து விடுவான்.வானத்தை வெறித்துப்பார்த்தபடி கிடப்பான்.யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.அவனாக கூப்பிடும் வரை எதுவும் சொல்ல மாட்டார்கள்.எழுந்து முகம் கழுவிவிட்டால் கோபம் போய்விட்டது என்று புரிந்து கொள்வார்கள்.

------இன்னும் வரும்.