சனி, 8 நவம்பர், 2014

கத்தி யாருடைய கதை?

கத்தி யாருடைய கதை?
இன்னிக்கு கோலிவுட்டில் இதுதான் ஹைலைட் சண்டை!
மீஞ்சூர் கோபி என்பவர் தனது கதை என்கிறார்.
இல்லை என மறுக்கிறார் முருகதாஸ்.
இருவரும் மீடியாக்களில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்!
அசிங்கமாக் இருக்கிறது.
பஞ்சாயத்தார்கள் பேசியதில் செலவுதான் அதிகம் தின்றது.!
கதைகளில் சொல்லப்படும் கட்டை பஞ்சாயத்து தாதாக்களை விட சினிமா தாதாக்கள் காந்தி நோட்டுகளிலேயே கவனமாக இருந்தார்களாம்.
ஒரு படம் வந்தால் அது காசு கறக்கும் காமதேனுவாக இருநதுவிட்டால் தன்னுடைய கதை என வக்கீல் நோட்டிஸ் விடுவது நோயாக பரவி வருகிறது.
யார் சொல்வது உண்மை என கண்டறிவதற்கு ஒரு கமிட்டியை போட்டு குற்றவாளியை கண்டு பிடிக்கும் கடமை தயாரிப்பு சங்கத்துக்கு உண்டு !
ஆனால் அங்கேயும் பல பிரிவுகள்!
தணிக்கை குழு அனுமதித்த பிறகும் தங்களுக்கு காட்டியபிறகே வெளியிட வேண்டும் என்கிற பயங்கர வாதம் குரல் வளையில்  கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறது.
இதை கண்டிக்க வேண்டிய -தண்டிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருந்தும் அக்கறை காட்டுவதில்லை.இப்படி ஒரு பயங்கரம் ஒரு முனையிலும் திருட்டு கதை என்கிற தீவிரவாதம் மறுமுனையிலும் தமிழ்சினிமாவை அச்சுறுத்தி வருகிறது.
எழுத்தாளர்களுக்கான சங்கம் கத்தி விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை..
அந்த சங்கத்திலும் பிளவு என்கிறார்கள்.
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் அங்கு நடக்கவில்லையாம்!
அப்பா யார் என்பது குழந்தைக்கு தெரிவதே அம்மா சொல்லி  மட்டும்தான்!
இதை வாதாடி பெறுவதில் உண்மை இருக்குமா?

செவ்வாய், 28 அக்டோபர், 2014

மக்கள் முதல்வரா? ஊழல் முதல்வரா?

தமிழக அரசியலில் எப்படியாவது முன்னாள் முதல்வர் 'ஜெ'வை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதில் திமுகவை விட தேமுதிகவும் விஜயகாந்தும் முனைப்புடன் இருக்கிறார்கள்.
திமுகழகம் ஜெயலலிதாவை எதிர்ப்பதில் பின்தங்கியே இருக்கிறது.இன்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தால் நாளை திமுகவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டும் என்கிற பட்டாகத்தி தலைக்கு மேல் தொங்குவதே காரணம்.
2 ஜி  இமாலாய ஊழல் இந்திய அளவில் அவர்களின் கவுரவத்தையே சுத்தமாக துடைத்தெறியும் ஆபத்து இருக்கிறது.
இதனால் ஜெயலலிதாவை கேப்டனின் தொலைக்காட்சி குற்றவாளி என்பதாகவே சொல்லி செய்தி வாசிக்கிறது.
இந்த தைரியம் திமுகவின் ஆதரவு சன்  தொலைக்காட்சிக்கும் இல்லை.கலைஞர் தொலைக்காட்சிக்கும் இல்லை.
அவர் மக்கள் முதல்வர் அல்ல.ஊழல் முதல்வர் என பகிரங்கமாக் விஜயகாந்த்  பேசுகிறார்.
இதற்கெல்லாம் பதில் சொல்ல அதிமுகவினர் கொதித்து எழ  நினைத்தாலும் அது அவர்களின் தலைவிக்குதான் தீங்கு என்பதால் தணிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதை திமுகவினால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதால் புதிய கூட்டணி பற்றி பேச வேண்டியதாகி இருக்கிறது.
இதைதான் கையறு நிலை என்பார்களோ! வலிமையான் ஒரு கட்சி சரிவிலிருந்து  மீண்டெழ வாய்ப்பு இருந்தும் அதை பயன் படுத்தமுடியவில்லை என்பது அதிமுகவுக்கு சாதகம் .
தேமுதிகவுக்கு ஆதாயம்.!

என் நலனும் மென்முலையும்...!

மார்கழி நெருங்குகிறது.
பேராசிரியர் சாயபு மரைக்காயரின் ஆண்டாளின் இலக்கியத்திறனை  நாடி,தேடி வாசித்தேன்.,அவரின் என்னுரையை அடிக்கடி வாசிப்பேன்.'இற்றை  நாளில் நாகரீகம் என்கிற பெயரால் நம்மனோர் பலர் சீரிய நெறிமுறையை ,பண்பாட்டை மறந்து வருகிறார்கள்..பக்தி நெறி அழியுமானால் மனித சமுதாயத்தில் எஞ்சியுள்ள பண்பாடுகளும் அழியும்' என அவர் அச்சில் வார்த்திருப்பது ,அஞ்சியது எங்கே நிகழ்ந்து விடுமோ ஈகிற அச்சம் என்னுள்ளே!
முன்னெல்லாம் மார்கழி மாதத்தில் ஆதித்தன் கண் விழிக்கும் முன்னதாகவே மகளிர் கண் மலர்ந்து நீராடி வாசலில்  கோலமிட்டிருப்பர் .பசுஞ் சாணத்தை கோலத்தின் மத்தியில் வைத்து பூசணிப் பூவை வைத்திருப்பர.
இப்போதெல்லாம் தமிழர்கள் மறந்து விட்டனரோ என நினைக்கத் தோன்றுகிறது.
ஆன்மீக நூல்களெல்லாம் அதிசயமாக பார்க்கப்பட்டன.
மாணிக்க வாசகர் தன்னை தலைவியாக பாவித்துப் பாடினார் .'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் "என அப்பர் நெக்குருகினார்.நம்மாழ்வார் புள்ளினங்களை தூது விட்டார் காதலை சொல்ல.! நாயகி நானிருக்கிறேன் என நெக்குருகி பாடவில்லையா?
"என்னுடைய பெண்மையும்
என் நலனும் மென்முலையும் 
மன்னுமலர்மங்கை மைந்தன் கணபுரத்துப் 
பொன்மலைபோல் நின்றவன் 
போன்கைத்தளம் தேயாவேல் 
என்னிலைதான்?வாளா  எனக்கே பொறை யாகி!"
எப்படியெல்லாம் திருமங்கையாழ்வார் ஏங்கியிருக்கிறார்
ஆண்டாள் கண்ணனையே மணாளனாக மனதினில் வரித்துக் கொண்டு  மாலை சூடி  மகிழ்ந்தவள்..கறபனையில் அவனுடன் கூடி கலந்தாள் '
"கொங்கை மேல் குங்குமத்தின் 
குழம்பழியப் புகுந்து ஒருநாள் 
தங்குமே லென்னாவி 
தங்குமென் ருரையீரெ" .
என முகிலை தூது விடுகிறாள்.
ஒரு கட்டத்தில் அவளுக்கு கோபம் வந்து விடுகிறது..கண்ணனின் கரமும் செவ்வாயும் படாத கொங்கைகள் இருந்தென்ன இல்லாமல் போனாலென்ன பிய்த்து எரிந்து விடுவேன் என எச்சரிக்கிறாள் கண்ணனை!
அவள் காமம் மிகுந்தவளோ?
இப்படியெல்லாம் பாடியிருக்கிறாள் என பலர் என்னலாம்.கண்ணனை கடவுளாக நாம் பார்த்தால் அவளோ காதலனாக ,கணவனாக பார்த்திருக்கிறாள்.
இன்றைய திரைப்பட நடிகர்கள் பலரை பல பெண்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள்?
அன்றைய ஆணழகன் தியாகராஜ  பாகவதரை மனதிற்குள் மணந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை அன்றைய ஆண்கள் அறியாதவர்களா?
இதையெல்லாம் தற்கால நாகரிகத்தில் கடந்து போகிற சலனங்கள் என்கிறபோது  ஆன்மிகம் உச்சத்தில் இருந்து,இலக்கியம் உயர்வாக மதிக்கப்பட்டபோது ஆண்டாள் பாடியது ம் மகிழ்ந்ததும் பிழையாகுமா?



புதன், 15 அக்டோபர், 2014

வக்கிர மனிதர்கள்.

வக்கிர மனிதர்கள்.!
காலை மாலை நாளிதழ்களில் அடிபடுவது அந்த மனிதனை பற்றிதான்!
கடன் வாங்க வந்த பெண்களை தனது காமத்தின் வடிகாலாக மாற்றிக் கொண்டான் என்கிற செய்தியை விலாவரியாக படிக்கநேர்ந்தது..
மறைமுகமாக அவனின் 'ஆண்மையை" பெருமைப்படுத்துவது மாதிரி இருந்தது.20க்கும் அதிகமான பெண்களை அவன் கற்பழித்து விட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.
அவன் செய்தது கடுமையான தண்டனைக்குரியதுதான் என்றாலும் மரண தண்டனையா கொடுக்கப்போகிறார்கள்.?
கர்ப்பகிரகத்தில் உடலுறவு வைத்துக்கொண்ட அர்ச்சகருக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்?
பெண்களை போகப் பொருளாக மாற்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் வறுமையும் ஒன்று தானே! அதை வக்கிர மனிதர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இதில் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்,
அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
சமுக சேவகர்களும் இருக்கிறார்கள்.அவர்களின் வக்கிரம் கண்டுகொள்வதில்லை..
வட்டிக்கு கடன் கொடுத்தவன் பெண்மையை பலி கொண்டது இன்றுதானே கண்டு கொள்ளப்பட்டிருக்கிறது? இது நாள் வரை அவனை அனுமதித்தது இந்த  சமுகமதானே?
யாரையோ அவன் பகைத்துக் கொண்டதால் அவனை பொறி வைத்து பிடித்திருக்கிறார்கள்.
தொடக்கத்திலேயே அவனை கண்காணித்திருந்தால்  எத்தனையோ பெண்கள் காப்பாற்றப்ப ட்டிருப்பார்களே!
வக்கிரமனிதர்களை  வளர்ப்பது ஒரும் வகையில் நாம்தான்.
சினிமா வக்கிரங்களை கிசு கிசு என்கிற பெயரால் மறைப்பது நியாயமா?

சனி, 20 செப்டம்பர், 2014

பெருச்சாழி.

பெருச்சாழி.
அண்மையில் நான் பார்த்த படம்..கேரளத்து உச்ச நடிகர் மோகன்லால் நடித்திருக்கிற படம்.அருண் வைத்யநாதன் எழுதி இயக்கியிருந்தார்.படம் காமடி இனம் சார்ந்தது. அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளை அள்ளிவிடுகிற மோகன்லாலை கலிபோர்னிய மாகாணத்து கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற ஒருவர் அழைத்து வெற்றிக்கு வழிகளை வகுத்துக் கொடுக்குமாறு கேட்கிறார்.கைக்கு அருகில் வருகிற வெற்றி கடைசி நிமிடத்தில்  திசை மாறிவிடுகிறது.அது ஏன்,எதனால் என்பது ஒரு சின்ன டிவிஸ்ட்..முன்னதாகவே சொல்லியிருக்கிறேன் இது காமடி இனத்தை சார்ந்தது என்பதை,!
பொதுவாக நமது திரைப்படங்களில் தேடினாலும் கிடைக்காத அரிய வஸ்து லாஜிக் என்பது.!
பொழுது போக்குவதில் லாஜிக் என்ன வேண்டிக்கிடக்கிறது என்பது எனது கருத்து.
அறிவுஜீவிகள் மட்டுமே கேட்கிற வஸ்து லாஜிக்.நான் அறிவு ஜீவி அல்லன்.ஒரு பாமர ன் .ரசிகன். நெற்றிக்கண் ,நான்கு கைகள்,பத்துத்தலைகள் பற்றி எல்லாம் அறிவு ஜீவிகள்  லாஜிக் பார்ப்பதில்லை.
நம்மை அறியாமலேயே மனம் ஒன்றி சிரிக்கிற காட்சிகளில்  லாஜிக் இல்லையே என கவலைப் படுவார்கள்.
இலவசங்களை நையாண்டி செய்தால் இதெல்லாம் அமெரிக்காவில் நடக்குமா என்பார்கள்..அவர்களை அறியாமலேயே நம்மை தாழ்த்துகிறோமே  என நினைப்பதில்லை.
இப்படி எல்லாம் குற்றம் சொல்வதால் அவர்களை எல்லாம் தெரிந்தவர்கள் என மற்றவர்கள் நம்புகிறார்கள்.
குற்றம் சொல்பவர்கள் குப்புற விழும்போதுதான் சுய ரூபம் வெளிப்படுகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
பெருச்சாழியில்  மோகன்லால் செய்த கேரக்டரை நமது முன்னணி நடிகர்கள் செய்வார்களா? கமலை தவிர!
மாட்டார்கள்.இமேஜ் போய்விடும் என்பார்கள்.
அப்படி என்ன இமேஜ் இருக்கிறது?
பத்துப் பேரை தன்னந்தனியாக நின்று சாய்ப்பதுதான் இமேஜ்!
100 நாட்கள் ஓடிய காலம் மறைந்து  ஒரு வாரமாக மாறிவிட்ட நிலையில் இமேஜ் என்ன வேண்டிக்கிடக்கிறது?
கதாநாயக வழிபாடு என்கிற குழிக்குள் விழுந்துகிடப்பவர்கள் உண்மையான ரசிகர்களாக மாறும்வரை ரசனை என்பது இங்கு கேள்விக்குரியதுதான்!

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

விஜய் அரசியலுக்கு வரலாமா?

என்னுடைய நண்பர் கேட்டார்," விஜய் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு ஏன்  சொல்றீங்க?"
"ஆத்துல இருக்கிற மீனை கடலில் விட்டா என்னாகும்? அரசியல் கடல் மாதிரி.! அங்கேதான் மிக மோசமான திமிங்கலங்கள் வாழுது.காட்டாற்றில் எதிர் நீச்சல் போடுவது மீனுக்கு சுலபம்.அந்த மீனை தூக்கி ஏன் கடலில் போட  ஆசைப்படுறீங்க?" என்று பதில் சொன்னேன்..
"ஆத்துல நீந்துன மீன்தானே விஜயகாந்த்.அவர் அரசியலில் செயிக்கலியா?"
"நல்ல கேள்விதான் ! ஒரு கட்சியோடு கூட்டு சேர்ந்து அதிக இடங்களை பிடிக்கிறதுதான் அரசியலா? அவரால் ஆட்சியை பிடிக்க முடியுமா? ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் பண்ணனும்.அதாவது அதிகாரத்தை தப்பா பயன்படுத்துற கட்சிகளை எதிர்க்கணும்.போராடனும்..விஜயகாந்தால் இதெல்லாம் செய்ய முடியாது..திமுக ஆட்சியில் இருந்த போது அவ்வளவா அடக்குமுறையை கையாளல.அவங்க நோக்கமெல்லாம் அதிகாரத்தை பயன்படுத்தி ஆதாயம் பெறுவதிலேயே இருந்தது.முக்கியமா எதிர்கட்சிகளையும் மதிச்சாங்க.அவங்கள மாதிரி மத்த கட்சிகளும் இருப்பாங்கன்னு எதிர்பார்க்க கூடாது.கலைஞரை அரசியல் வித்தகர்னு சொல்வாங்க.அவராலேயே இப்ப போராட முடியல"
"அதுக்கு உள்கட்சி விவகாரம்தான் காரணம்..அண்ணன்,தம்பி பிரச்னை!"
"கரெக்ட்.! அதை எப்படி சமாளிக்கிறாங்க .தலைவர் மேல நம்பிக்கை  இருக்கு தொண்டர்களுக்கு.அவர் கை காட்டுறதுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்காங்க..விஜயகாந்த் கட்சியில யார் இருக்கா? விஜய் கட்சி ஆரம்பிச்சா அவருக்கு அடுத்த மட்டத்தில யார் இருப்பா? விஜயினால் அராஜகத்தை தாங்க முடியுமா? எதிர்க்க முடியுமா? "
"கட்சி உருவான பிறகு தானாகவே அடுத்த மட்ட தலைவர்கள் வந்திருவாங்க.இது வரலாறு."
''அப்படின்னா தேமுதிக கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள்னு  யார் யார்னு  சொல்லு?"
"அவரின் மனைவி,மச்சானை சொல்லலாம்.!"
"அவங்க இருந்தும் எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க முடியல.ஏன்? யோசி!"
இந்த மாதிரியெல்லாம் நடக்கும்கிறதாலதான்  விஜய் அரசியலுக்கு
வரக்கூடாதுன்றியா?"
"அவருடைய திரைப்பட செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்குன்றது உனக்கு தெரியும்.அப்படி இருந்தும் அவருடைய திரைப்படங்களை ரிலீஸ் பண்ண விடாம எவ்வளவு முட்டுக்கட்டைகள்,மனுஷன் நிம்மதியா தூங்கி இருப்பாரா?சூப்பர் ஸ்டாரே கைவிட்ட யோசனையை விஜய் நினைச்சு பார்க்க மாட்டார்னு நினைக்கிறேன்..அரசியலுக்கு வந்தா திமுக,அதிமுக இந்த இரண்டு பெரிய கட்சிகளை சமாளிக்கணும்.வன்முறைகள்,ஜாதிகள்.இதெல்லாம் அரசியல் கட்சிகளின் முதலீடுகள். இதெல்லாம் விஜய்க்கு தெரியுமா?அதனாலதான் விஜய் அரசியலுக்கு வர வேணாம்னு நான்  நினைக்கிறேன்" என்று நண்பருக்கு விளக்கினேன் .
      

திங்கள், 8 செப்டம்பர், 2014

பெண்ணை இழிவு படுத்தும் கொடுமை தொலையாதா

மூடத்தனத்துக்கும் முட்டாள் தனத்துக்கும் அதிகமாக இரையாவது ஏழைகள்தான்,!
வறுமைக்கு பலியாகிவிட்டதால் அவர்களை மேல்தட்டு வாசிகள் தங்களின்  அடிமைகளாக வரித்துக் கொள்ள முடிகிறது..
அறியாமையின் செல்லப்பிள்ளைகளாக மாற்றப்படுகிறார்கள்.
சமூகக் கட்டுப்பாடுகள் என்கிற சிறைக்குள் அவர்களை சுலபமாக அடைத்து விடமுடிகிறது.
பேய்க்கும் பிசாசுக்கும் அஞ்சுகிறார்கள். கல் தடுக்கி விழுந்தால் கூட அது சாபம் என பயப்படுகிறவர்களை இன்றும் காணலாம்.கொஞ்சம் படித்த அறிவிலிகள்  அதை சகுனத்தடை என சொல்வார்கள்.
இல்லாத ஒன்றை வணங்குவதும் அஞ்சுவதும் போதுவாகிப்போனது..
அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிழக்குப் பகுதியில் ஒரு கேவலமான சம்பவம் நடந்திருக்கிறது.
படத்தில் இருக்கும் அந்த பெண்ணைப் பாருங்கள்.அழகான  முகம்..அதில் நிறைதிருக்கிறது  அப்பாவித்தனம்..அவளின் பெயர் மங்கிலி முண்டா.
அந்த பெண்ணை கெ ட்ட ஆவி பிடித்திருக்கிறதாம்.அந்த சமூகத்தையும் ஆக்கிரமித்திருக்கிறதாம்.
அதிலிருந்து மீள வேண்டுமானால் அவளை ஒரு நாய்க்கு மணமுடித்து வைக்க வேண்டுமாம்.
கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
நாயை காரில் அழைத்து வந்திருக்கிறார்கள்.ஆடம்பரமாக!
மங்கள நீர் தெளித்து வரவேற்பு..அவர்களது சம்பிரதாயப்படி திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். 
இந்த கொடுமைக்கு அந்த பெண்ணின் தாய்தான் முக்கிய காரணம்..நாயை அவளுக்கு கட்டி வைத்தால்தான்  குடும்பம் வாழும் என்று அடம் பிடித்து நடத்தியிருக்கிறாள்.
மணப்பெண்  சொல்வதென்ன ?
'நாயை கலியாணம் செய்து கொண்டால்தான் எனக்குள் இருக்கிற கெட்ட ஆவி அந்த நாய்க்குள் போய் விடும்.அதன் பிறகு நான் ஒரு ஆணை கலியாணம் செய்து கொள்வேன்" என்று வினயம் இல்லாமல் சொல்லியிருக்கிறாள்.
இப்படி கலியாணம் செய்தவர்கள் நாய்க்கும் பெண்ணுக்கும் முதலிரவு நடத்தாமல் விட்டார்களே.. அந்த அளவு க்கு புத்திசாலியாக இருப்பவர்கள் எப்படி ஒரு மிருகத்தை மருமகனாக ஏற்றுக் கொண்டார்கள்?
ஓ ...மனிதனுக்குள் மிருகம் இருக்கிறது.அது பெற்ற மகளைக்கூட பெண்டாளும்.என்கிற போது நாங்கள் செய்து வைத்ததில் தவறில்லை என்கிறார்களோ!

சனி, 30 ஆகஸ்ட், 2014

சந்தி சிரிக்கும் பிள்ளையார்கள்.

நான் ஒன்னும் நாத்தீகன் இல்ல..கடவுளே இல்லேன்னு  சொல்லல.மனிதனுக்கும் மீறிய சக்தி ஒன்னு இருக்கு.அது நாமமும் போட்டிருக்கலாம்..விபூதியும் பூசியிருக்கலாம்..பூசாமலும் இருக்கலாம்.
நான் எந்த கோவிலுக்கும் போவேன்.சிவன்,விஷ்ணு,எனக்கு எப்படியோ அதைப்போல வேளாங்கண்ணி மாதா வையும் கும்பிடுவேன்.ரமலான் மாதம் நோன்பு கஞ்சி குடிப்பவன்.இப்படியான இறை பக்தி உள்ளவன்தான்.
ஆனால் ஒரு இடத்தில சாமிய வைக்கிறதுக்கு முன்னாடி  ஆயிரத்தெட்டு  சாஸ்திரம் பாக்கிறாங்க.வாஸ்து பார்க்கிறாங்க.கிழக்கே பார்த்து சாமி இருக்கணும்னு சொல்றாங்க.யாகம் நடத்தி பிறகு பிரதிஷ்டை பண்றாங்க.ஆனால் விநாயகரை மட்டும் எந்தவித சடங்கு சாஸ்திரம்,சம்பிரதாயம் பார்க்காம தெருவில வச்சு கும்பிடுறோமே அது தெய்வ நிந்தை இல்லையா?
தெரு ஓரமா 'அசிங்கமான' இடமா மாறிப்போன இடத்தில கூட பிள்ளையார் சிலையை வைக்கிறது கடவுள் பக்தியா?யோசித்து பாருங்க. வீட்டில கும்பிட்டுக்கிட்டு இருந்த நாம்ப எந்த காலத்தில இருந்து இப்படி மாறி இருக்கிறோம்?
ஐம்பதுகளில் இப்படிப்பட்ட தெரு பிள்ளையார்களை  பார்த்திருக்க முடியாது..சின்ன களிமண் பிள்ளையார்களை வீட்டில் வைத்து கும்பிட்டு விட்டு மூணு நாள் கழிச்சு ஆத்திலோ கிணத்திலோ போட்டுவிடுவோம்.பிள்ளையார் வீட்டில இருக்கிற அந்த மூணு நாளும் புருஷன் பொண்டாட்டி சேர மாட்டாங்க.அப்படியெல்லாம் பயந்து பக்தியா இருந்தாங்க.
அந்த கலாச்சாரம் இப்ப இருக்கா? தண்ணி அடிச்சிட்டு வந்து குத்தாட்டம் போட்டு பிள்ளையாரை தூக்கிட்டு போய் கடலில் போடுறோம்.
இதுதான் பக்தியா?
ஒரு வகையில் நாம்ப வேஷம் போடுறோம்னுதான் சொல்லுவேன்..வீட்டுக்கு எதிரா சந்து இருந்தா ஆகாதுன்னு சொல்லி அதுக்காக பிள்ளையாரை வைக்கிறோமே.!
சுவத்தில ஒன்னுக்கு அடிக்கிறானுகளேன்னு அத தடுக்கிறதுக்கு அங்க பிள்ளையாரை வைக்கிறாங்களே.அதை தப்புன்னு யாராவது நினைச்சாங்களா?மாடர்ன் டிரஸ்களை போட்டு பிள்ளையாரை வைக்கிறோம்.
கோபப்படாம யோசிங்க.!  

சனி, 23 ஆகஸ்ட், 2014

இப்படியும் மனிதர்கள்.

இப்படியும் மனிதர்கள்.
ஞாயி ற்றுக்  கிழமை.. பொதுவாக நான்-வெஜ் பிரியர்களுக்கு உகந்த நாள்.வீட்டிலேயே மது குடிப்பவர்களுக்கு ஞானம் பிறக்கும் நாள்.சற்று சுதி ஏறியதும் பாவமன்னிப்பு கேட்பதும், தனது பலப்பிரயோகத்தை காட்டுவதும் அன்றுதான்.
இதனால் சில பெண்களுக்கு ஏன்தான் ஞாயிறு  வருகிறதோ என பயம் வரும்..அனுபவப்பட்டவர்களுக்கு கூட  நாலு சாத்து சாத்தலாம் என்கிற தைரியம் இருக்கும்.
எனக்கு இப்போது அப்படியெல்லாம் கிடையாது.
'மட்டன் சாப்பிடக்கூடாது..கோழிக்கறி யும் அட்வைசபில் இல்லை.மீன் சாப்பிடலாம்' என டாக்டர்கள் சொல்லியிருப்பதால் மீன் வாங்குவதற்காக வடபழனிக்கு சென்றேன்.ராமேஸ்வரம் மீன் என்றால் ருசி அதிகம்.நான் மதுரைக்காரன்..அதனால் ராமேஸ்வரம் மீன் எங்கே கிடைக்கும் என்பதை உறவினர் மூலம் தெரிந்திருந்தேன்.
முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் அதாவது தற்போது சரவணபவன் இருக்கிற பக்கத்து சந்தில் ஒரு பாய் கடையில் கிடைக்கிறது.நேர்மையானவர்.அதிக விலை இல்லாமல் நல்ல பொருளாக கொடுப்பார்.
வடபழனி காவல் நிலையம் முன்பாக சிக்னலில் பச்சைக்காக காத்திருந்தேன்.
பக்கத்தில் இருந்த பைக் காரன் 'கொரங்கு மாதிரி இருக்கான்..அட்டர் பிளாக். அவனுக்கு பாரேன்.லக்கை.!வொய்ப் இன்னா செவப்பு. கொடுத்து வச்சவன்டா மச்சான்' என்று பில்லியனில் இருந்த நண்பனிடம் சொல்கிறான். அவனுக்கு சற்று தள்ளி நிற்கிற பைக்கில் அமர்ந்திருந்த ஜோடியை பற்றிய கமெண்ட்தான் இது.!
அந்த ஜோடியே அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.அவர்கள் ஜாலியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களைப் பார்க்கிற இவனுக்கு மட்டும் கவலை.!
இது ஒரு வகையில் சொந்த பாதிப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.அவனை விட அவனின் மனைவி  ரதியாக இருந்து யாரோ அடித்த கமெண்ட் அவனின் அடி மனதில் தங்கி இருக்கக் கூடும்.
இப்படிப்பட்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்..நல்லவர்கள் என்று நம்புகிறவர்களுக்கும் அத்தகைய வக்கிரம் இருக்கிறது.
இதைப்போல பெண்களுக்கும் நினைப்பு இருக்குமோ?
அதன் வெளிப்பாடுதான் கள்ளக்காதலுக்கான உந்துதலா?
ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் சரி இத்தகைய நினைப்பு வராமல் இருப்பதற்கு தியானம் செய்வதுதான் சரியான வழி !

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சென்னைக்கு 'ரெட் லைட் ஏரியா வேணும்....

சென்னைக்கு 'ரெட் லைட் ஏரியா வேணும்....
தலைப்பை பார்த்ததுமே அதிர்ச்சியா இருந்திருக்குமே..!படமே எடுத்திருக்காங்க. டைட்டில் ' சிவப்பு  எனக்கு பிடிக்கும்.'
தண்ணீர் தொட்டிலில் படுத்த  ஆர்க்கிமிடீஸ் 'யுரேகா..யுரேகா 'என கத்திக்கொண்டே  அவன் கண்டுபிடித்த தத்துவத்தை சொன்னான்.அவன் தண்ணீரின் அடர்த்தியை கண்டுபிடித்தான்.
இயக்குநர் யுரேகாவோ பாலியல் வன்புணர்வுக்கு காரணம் காமத்துக்கான வடிகால் இல்லாததுதான் என்கிறார்,
சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அனுமதிக்க வேண்டும். விபசாரம் செய்வது ஒரு தொழில்தான்.அதை ஏன் தடுக்கிறாய் என கேட்கிறார்.
ஒரு விலைமாதுவின் வீட்டுக்கு எழுத்தாளர் யுரேகா சென்று தனது நாவலுக்கான அடிப்படை ஆதாரங்களுக்காக பெட்டி எடுக்கிறார்..விலைமாது மகிமா சொல்கிற அனுபவங்கள்தான் மொத்தப்படமே.!
மாராப்புகளை விலக்கி இளமைத்திமிரை மெத்தென காட்டும் காட்சிகளோ,கசக்கிப் பிழியும் அணைப்புகளோ,உதட்டு முத்தமோ இல்லாமல் ஒரு விலைமாதுவின்  கதையை எடுக்கமுடியுமா?
எடுத்திருக்கிறார் யுரேகா.
பள்ளி மாணவன் தினவெடுத்து வருகிறான், மாணவன் என தெரியாமல் அவனுடன் படுக்கிறாள் மகிமா.ஆபாசம் இல்லை காட்சியில்.
இப்படி வீட்டுக்கு வருகிற கஸ்டமர்களை திருப்தி செய்து அனுப்பும் அந்த விலைமாதுகளை ஆபாசமாக காட்டவில்லை.இவர்களிடம் மாமுல் வாங்கும் காவல் துறை அதிகாரிகளை கண்டிக்கவும் இயக்குநர் தவறவில்லை.
காமத்துக்கான .வடிகாலை தடுக்காதே.தடுப்பதினால்தான் சிறுமிகளை கூட காமாந்தகர்கள் விட்டு வைப்பதில்லை .என பல காரணங்களை இயக்குநர் அடுக்குகிறார்.
மும்பை,கொல்கத்தா பெருநகரங்களில் ரெட்லைட் ஏரியாக்கள் இருக்கும்போது சென்னையில் அனுமதித்தால் என்ன என்று கேட்கிறார் இயக்குநர் யுரேகா.
மிகவும் விவகாரமான சப்ஜெக்ட் படத்தில் சான்ட்ராஆமி நடித்திருப்பது மிக மிக துணிச்சலானது..பாராட்டுக்குரியது.
தனது கனத்த உடலை தூக்க முடியாமல் தூக்கி நடித்திருக்கும் யுரேகாவுக்கு போட்ட முதல் வருமோ வராதோ பாராட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது.
காலம் மாறி வருகிறது..

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சுயசரிதையும் பிரமுகர்களும்.

சுயசரிதை என்பது பொய் கலவாமல் எழுதப்படவேண்டியது..கசப்புணர்வை வெளிப்படுத்துவதல்ல சுய சரிதை.
விலை மாது வீட்டுக்கு போனே னா ,தைரியமாக எழுதவேண்டும்.. திருடினேனா எழுது.!அடுத்தவனை கெடுத்தேனா மறைக்காமல் எழுது.
சுய சரிதை எழுதுவதற்கும் ஆண்மை வேண்டும்.
தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது அருகாமையில் இருக்கவேண்டியவர்  அந்த  துயரமான கட்டத்தில் சிற்றின்ப வெறிக்கு உள்ளாகி மனைவியுடன் சுகித்ததை எழுதியிருக்கிறார்.
குற்ற உணர்வுடன் !
அப்படி எழுதுவதற்கு ஆண்மை வேண்டும்..நேர்மை வேண்டும்...எத்தனை பேர்  தன்னை இழிவாக நினைப்பார்கள் என்பதை மறந்து அவர் எழுதவில்லை.உண்மையை எழுதவேண்டும் என்கிற திண்மை அவரை எழுத வைத்தது.
மகளுக்கு எழுதிய பண்டித நேருவின் கடிதங்கள் உலக சரிதமாகியது.
கண்ணதாசனின் வனவாசம்-மனவாசம் சுயசரிதைதான்.!
அவர் எதையும் மறைக்கவில்லை என்பதை உணர முடிகிறது..யாருமே மறுப்பு சொல்லாததால்.! வீணான விமர்சனங்களுக்கு இடம் தர வேண்டாம் என்கிற பெரிய மனித தன்மை கூட மறுப்பு சொல்லாததற்கு காரணமாக இருக்கலாம்.எதுவாக இருந்தால் என்ன? ஒரு இயக்கம் உடைந்ததற்கு எவையெல்லாம் காரணமாக இருந்தன என்பதை அவர் கதை போல எழுதியிருந்தார்,' குழப்பமே அண்ணாவின் மனோதர்மம்' என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.."கட்சிக்கு நெருக்கடி வரும்போது கட்சியை விட்டு ஓடிவிடக்கூடிய நடிகர்கள்  தங்கள் தொழிலுக்கு கட்சியை பயன்படுத்தியதாக" கண்ணதாசன் வனவாசத்தில் எழுதியிருக்கிறார்.
தற்போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் சுய சரிதம் எழுதுகிறார்களாம்..
மீள இயலுமா என்கிற நிலையில் கட்சி பலவீனமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் கிடக்கிற போது சுயசரிதைகள் வெளிவரப்போகின்றன. .விவகாரங்களை மையப்படுத்திய கதைகளாக இருக்கவோ,உண்மையின் பதிவாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மாபெரும் தேசிய இயக்கம் நேருவினால் உயர்வு பெற்றது..
நேருவின் சகாப்தம் என சொல்லலாம்.
அந்த சகாப்தத்தின் முடிவுரையை அவரது குடும்பத்தாரே எழுதிவிடுவார்களோ என்கிற அச்சம் தற்போது எழுந்திருக்கிறது.
எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவார்களா ,மண்ணைப் போட்டு அணைப்பார்களா?
நட்வர்சிங்கும் சோனியாவும்தான் சொல்லவேண்டும்.



புதன், 2 ஜூலை, 2014

சினிமாக்காரர்களின் காதல் !

''படங்களில் காதலை உயர்வா சொல்றாங்களே ,ஆனா அவங்களின் சொந்த காதல் வாழ்க்கையில் உலக மகா சோகம் இருக்கும்னு சொல்றாங்களே ,நெஜமா?" என்று கேட்டான் ஆபீஸ் பையன்.
"பத்திரிக்கை ஆபீஸ் பையனாச்சே வெவரமாத்தான் இருக்கான்."என்றவாறே அவனை உற்று பார்த்தேன்.
"என்ன சார் அப்பிடி பாக்கிறீங்க?நான் கேட்டது நெசம்தானே ?"
'''பாதி நெஜம்டா தம்பி! சில பேர் காதல்தான் கவிந்திருக்கு.!நம்ம காதல் மன்னன் ஜெமினியின் மகள் ரேகாவின் வாழ்க்கையையே எடுத்துக்க. என்னாச்சு?பாவம்டா! இவ்வளவுக்கும் புத்திசாலி பொண்ணு.திறமையான நடிகை.எத்தனை பேரு லவ் பண்ணுனாங்க? 1973-ல்  வினோத் மெஹ்ராவுடன் கலியாணம்னு சொன்னாங்க.'இல்ல அவர் என்னோட வெல் விஷர்னு .ரேகா அந்த கலியாண செய்தியை காலி பண்ணிட்டாங்க,அப்புறம் சஞ்சய்தத் !அதையும் மறுத்தாங்க.அமிதாப் பச்சனுடன் நெருக்கம்.கலியாணம் பண்ணிட்டாங்கன்னு பரபரன்னு பேசுனாங்க.!நீது சிங் கலியாணத்தின் போது  ரேகா கழுத்தில் தாலியும்,நெத்தி வகிட்டில் செந்தூரமுமா வந்து நின்னாங்க..உண்மைதான்னு பாலிவுட்டே பத்தி எரிஞ்சிது.! அதையும் மறுத்தாங்க.ரேகாவை அமிதாப் குடும்பம் வெறுக்க ஆரம்பிச்சது.1990-ல் முகேஷ் அகர்வால் என்கிற தொழிலதிபரை கலியாணம் பண்ணிட்டாங்க ரேகா.!
ஒரு வருசம்தாண்டா சேர்ந்து வாழ்ந்தாங்க.1991-ல் அந்தாளு தற்கொலை பண்ணிட்டார்.அந்த நேரத்தில ரேகா அமெரிக்காவில் இருந்தாங்க.ரெண்டு கலியாணம் தோல்வியில் முடிந்ததாக அந்த பொண்ணு சொன்னது.!ரெண்டு கலியாண மான்னு  பத்திரிகைகளில் அலச ஆரம்பிச்சாங்க.முகேஷ் கலியாணம் இரண்டாவது கலியாணம்னா முதல் கலியாணம் யாருடன் நடந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சாங்க,அதுக்கு ஆன்சர் இது வரை கிடைக்கல.அக்டோபர் பத்தாம் தேதி வந்தா ரேகாவுக்கு 61 வயசு.!"
''தமன்னா காதலிக்கிறதா சொல்றாங்களே,யாரோட சார்?"
"அது  தமாஷ்டா  தம்பி! கிரிக்கெட் வீரர் விராத் கோக்லி யு டன் டேட்டிங் போனதா எழுதினாங்க.பிறகு அனுஷ்கா சர்மாவுடன் லவனு எழுதினாங்க. இந்த ரெண்டு பேரும் கோவாவில் ஒண்ணா சுத்துனதாகவும் சொல்றாங்க.
'தப்பிசன்டா சாமின்னு தமன்னா நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கு."
''அப்படின்னா இதெல்லாம் காதல்னு சொல்லமுடியாதே?"
"கரெக்ட்.! சிம்பு மேட்டர்லே உனக்கு புரிஞ்சிருக்குமே! பிரபு தேவாவின் பேரை பச்சை குத்திக்கொண்ட நயன்தாரா அதை அழிக்கமுடியாமல் பரிதவிக்கிறது  உனக்கு தெரியும் ல.!ஆனா நயனை இப்ப சிம்பு நிஜமாவே நேசிக்கிறதா ஒரு பேச்சு இருக்கு.!கை கூடுதான்னு பாக்கலாம்.! சரி.உன் வேலையை பாரு.!"
  

செவ்வாய், 1 ஜூலை, 2014

மறக்க முடியாத ராம.நாராயணன் !

தமிழ்த்திரை உலகில் ராம.நாராயணன் அரசியலுக்கு அப்பாற்பட்ட அற்புத மனிதர்!
கடிந்து  பேசத்தெரியாதவர்..அவர் காலத்தில் படப்பிடிப்பு நடக்கிற இடங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச்செல்வார்கள்..கமல்,ரஜினி ஆகியோரின் அவுட்டோர் ஷூட்டிங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.தற்போது படபிடிப்பு தளங்களுக்குள் பத்திரிகையாளர்கள்  செல்ல முடிவதில்லை.அனுமதி பெற வேண்டும்..அதற்கு பி.ஆர்.ஒ.களின்  உதவி வேண்டும்..ம்ம்!இது பற்றி பேசி பயனில்லை.
கார்வார் தீவில் படப்பிடிப்பு.எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்குப்பின்னர் ராம.நாராயணன் தான் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்.தற்போது அந்த தீவு கடற்படை வசம்.!
இயக்குநர் ராம.நாராயணன்,பட அதிபர் முரசொலி செல்வம்,ராதாரவி,எஸ்.எஸ்.சந்திரன்,சந்திர சேகர், இன்னும் பலர் அங்கு சென்றோம்..எங்களை அழைத்து சென்றவர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி..ராம.நாராயணனின் ஆஸ்தான பி.ஆர்.ஒ..முருக பக்தர். அதிர்ந்து பேச மாட்டார்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் இவர் பி ஆர்.ஒ.வாக இருந்திருக்கிறார்.
கார்வார் தீவில் இறங்கியாகிவிட்டது.அந்த சின்ன தீவில் எலந்த பழ மரங்கள் அதிகம்.கடும் வெயிலில் படப்பிடிப்பு தொடங்கியது.
பத்திரிகையாளர்களில் சிலர் படப்பிடிப்பை கவனிக்க இன்னும் சிலர் தீவை சுற்றிப்பார்த்தனர்.
மதிய உணவுக்கு பின்னர் நடந்த படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே முடிந்து விட்டது.
குழுவினர் மூட்டை முடிச்சுகளை கட்டத்தொடங்கினர்.
அதுவரை நடிகர்களும் பத்திரிகையாளர்களும் வெயிலில் காய முடியுமா?
'சடு குடு விளையாடுங்க' என்றார் இயக்குநர்.
நடிகர்கள் ஒரு பக்கமும் பத்திரிகையாளர்கள் எதிர் அணியாகவும் களத்தில் இறங்கினர்.
பிரச்னை அதற்கு பின்னர்தான் ஆரம்பமாகியது.
விளையாட்டாக ஒரு பத்திரிகையாளர் ஒரு கருத்தை சொல்ல அது எஸ்.எஸ்.சந்திரனுக்கு பிடிக்கவில்லை.
வார்த்தைகள் கடுமையாகின.முரசொலி செல்வம் மிக மிக மென்மையானவர். அவர் சொன்னால் சந்திரன் கட்டுப்படுவார் என சிலர் அவரை தேடி சென்றனர்..நானும் ராதாரவியும் சமாதான புறாக்களாக மாறினோம்... ஆனால் சந்திரன் மிகவும் ஆவேசமாகிவிட்டார்
''மாமா..சும்மா இருக்க மாட்டியா?"-இது ராதாரவி.
"மாப்ள, நீ கம்முன்னு இரு !"
''நல்லதில்ல மாமா.! செல்வம் சாருக்கும் டைரக்டருக்கும் தெரிஞ்சா ரொம்பவும் வருத்தப்படுவாங்க!"
இப்படி அவர்கள் இருவருக்கும் வாக்கு வாதம் நடக்க நல்ல வேளையாக அங்கு டைரக்டர் வந்து விட்டார்...
''எஸ்.எஸ் !என்ன இது !பேசாம போட்டுக்கு போங்க.இருட்டுறதுக்குள்ள  தீவை விட்டு வெளியேறிடனும்.!" என்றதும் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டார்.அது மட்டுமல்ல  முரசொலி செல்வம் சொன்ன படி பத்திரிகையாளரிடம் 'சாரி" கேட்டுக் கொண்டார்.
பண்பு ,அன்பு நிறைந்த அவரின் மறைவு பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்புதான்.!

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

உங்க ஓட்டு யாருக்கு?

எல்லா வீடுகளிலும் இருப்பதைப் போல எனது வீட்டிலும் எலக்சன் ஜூரம் !
கடந்த தேர்தலின் போது எனது மனைவி கேட்டதற்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை .அவளும் உயிருடன் இல்லை.!
''ஓட்டு   போட்டா நம்ப வாழ்க்கை நெலமை ஒசந்திருமா? "
இது அவளின் அறிவுக்கு எட்டிய கேள்வியாக இருந்தாலும் நியாயம் இல்லை என ஒதுக்கமுடியாது.
நாம் ஓட்டுப்போட்டு  ஜெயித்தவர்களின் வாழ்க்கை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடுகிறது.சொத்து நிலவரம் ,அந்தஸ்து கூடிவிடு கிறது.எம்.பி.நம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
குறையை சொன்னால் அதை எம்.எல்.ஏ.விடம் சொல்லுங்க.நாங்க டெல்லி மேட்டரை பார்க்கிறவங்க என சொல்லிவிடுகிறார்கள்.
நமது நிலைதான் என்ன?
அரசு ஊழியராக இருந்தால் சம்பள உயர்வுடன் கிம்பளமும் கிடைக்கிறது.அவர் நம்மில் ஒருவராக இருந்தாலும் அரசு ஊழியர் என்கிற தகுதி பிரித்து வைத்து விடுகிறது.
நம்மை புழுவாகவே பார்க்கிறார்.அவருடைய அலுவலில் பிரச்னை என்றால் கொடி பிடித்து போராட சங்கம் இருக்கிறது.
தனியாரிடம் வேலை பார்க்கிறவனுக்கு வேலை உத்திரவாதம் இருக்கிறதா? எம்.பி,.எம்.எல்.ஏ..இவர்களால் அவனுக்கு என்ன உதவி கிடைக்கிறது?அவர்கள் அந்த பதவியில் அமர்ந்ததுமே முதலாளிகளின் 'நண்பர்கள்'ஆகி விடுகிறார்கள்.
அரசு அறிவித்தாலும் ஆட்டோ வாடகையில் மாற்றம் இருப்பதில்லை.கூடுதலாக கொடுத்தால்  ஏறு.இல்லாவிட்டால் நடையை கட்டு என்கிறார்கள்.
போலீஸ் சான்றிதழ் என்கிற ஏமாற்று அட்டையை ஒட்டிக்கொண்டு நடக்கிற அராஜகங்களை யாரும் கேட்பதில்லை.தொழில் சங்கங்கள் மக்களுக்காக பேசுவதில்லை.ஆனால் ஓட்டு கேட்டு வருவது மக்களிடம்தான்.!
ஆட்டோ விவகாரத்தை ஒரு உதாரணமாகதான் சொன்னேன்.
வணிகர்களுக்கு இருக்கிற சங்கம் அவர்களிடம் வேலை பார்க்கிறவர்களுக்கு நல்லவை செய்வதில்லை.கசக்கி பிழிவதை அங்காடி சினிமா அழுத்தமாக சொல்லியும் என்ன மாற்றம் வந்தது?
சொல்லுங்கள் பார்க்கலாம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் நிலையை உயர்த்த  நம் பெயரில்   திட்டங்களை போட்டுக்கொள்கிறார்கள்.
நாம் உயர வழி  இல்லை.ஓட்டுப் போட்டும் மாற்றம் இல்லை.
ஆம் ஆத்மி என்று டெல்லியில் மாற்றம் வந்தும் மக்களுக்கு பயன் இல்லை.
இதற்கு தீர்வுதான் என்ன?
 அரசியல் வியாபாரிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிப்பதுதான் ஒரே வழி !
கட்சி ரீதியாக பார்க்காமல் நல்லவனுக்கு மட்டுமே ஓட்டு என முடிவு எடுப்போம்.
கட்சிகளை மறந்து நல்லவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கட்டும் !

வடபழனி கோவிலில் ஒரு மணி நேரம்.....

நான் பக்திப் பழம் இல்லை.
நாத்திகனும் இல்லை.நாத்திகம் பேசலாம்.அது எதிராளியைப் பொருத்து.!
பேசவேண்டுமே என்பதற்காக வீம்புக்கு பேசுகிறவன் என சொல்லிக்கொள்ளலாம்.
எனக்கு குல தெய்வம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன் சுவாமி.
சோழவந்தான் சு.சாமி இல்லை.அந்த மனிதனை எனக்குப் பிடிக்காது !மனதில் துயரம் படர்ந்தால்  நான் யாரிடமும் சொல்வதில்லை .அதனால் எந்த பயனும்  இல்லை என்பதால் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன்.
பலவிதமான மனிதர்களைப் பார்ப்பதால் துயரம் திசை மாறி சென்று விடுகிறது.
அன்று திருமண நாள் என்பதால் வடபழநி  கோவிலில் கூட்டம் அதிகம்.
மணமகனுக்கு எப்படியும் 45 வயது இருக்கும்.மணமகள் பெருத்த உடம்பு.  காமடி நடிகை ஆர்த்தி மாதிரி.சற்றே மாறு கண்.வயது 40 ஐ கடந்து இருக்கலாம்.நரை அதிகம்.
இருவருக்கும் அதிகமான உறவினர்கள் இல்லை போலும்.புகைப்படக்காரர் விதம் விதமாக படம் எடுத்தார் .தொழில் நேர்த்தி.காசு வாங்கிவிட்டதால் கடமை.
இத்தனை வயது கடந்து கலியாணம் செய்கிறோமே ,பார்ப்பவர்கள் கேலி செய்யமாட்டார்களா என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை.இருவரும் நாணமுடன் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் சிலர் அவர்களை கேலியாக பார்த்தனர்.முணுமுணுத்தனர்.
வயதாகிவிட்டது என தெரிந்தும் கேலி செய்வர் என அறிந்திருந்தும் கடவுள் சந்நிதியில் கலியாணம் செய்துகொண்ட அவர்கள் மனிதம் நிறைந்தவர்கள்.
உடல் சுகத்துக்காகவோ,குழந்தை வேண்டும் என்பதற்காகவோ கலியாணம் செய்து கொள்ளவில்லை.
அவரிடம் கேட்டேன் பத்திரிகையாளன் புத்தியாச்சே.!
''நான் கூலி வேலை செய்பவன்.ஒரு நாளைக்கு 400 வரை கிடைக்கும்.கட்டிடத் தொழிலாளி.அவளும் அதே வேலைதான்.வெளியில் சாப்பிட்டால் அதிக செலவாகிறது.அதனால்தான் கலியாணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு இருக்கிற சுகமே போதும்.யாருக்காக சம்பாதிக்கிறோம்.அதை அனுபவிக்கலாமே ,அதை விட வேற என்ன வேண்டும்..மேஸ்திரிதான் எல்லா செலவும்.எங்களை மாதிரி வயசு போனவங்க நிறைய இருப்பாங்க.கூச்சப்பட்டுகொண்டு அப்படியே தனியாக வாழ்கிறார்கள்.தப்பான வழியில் போகிறார்கள்.டாஸ்மாக்கில் காசை கொடுத்து உடம்பை கெடுத்துக் கொள்கிறார்கள்..நான் அப்பட்ப்பட்டவன் இல்லை" என்றார்.
கரெக்ட்.அடுத்தவனை  பற்றி ஏன் நினைக்கவேண்டும்?
நமக்காக வாழ்வோம் நல்லவிதமாக்! ஆடி காரில் போகிறவனுக்கு கூட இத்தகைய மன நிம்மதி இருக்காது.
முருகா..!காப்பாற்று !
என்னையும்தான்.!



வீரப்பனுக்கே அல்வாவா? [வீரப்பன்.10.]

இடுப்பில் ரிவால்வாரை சொருகிக்கொண்டு கிளம்பிய வீரப்பனை தடுத்து நிறுத்தினான் அருச்சுனன்.
       ''அண்ணே...கொஞ்சம் நில்லு.! உங்கிட்ட முக்கியமான சங்கதி பேசணும்.!"
சேத்துகுளிக்கு பயம். வீரப்பனை யாரும் இப்படி தடுத்து நிறுத்துவதில்லை.!வீரப்பன் வெளியில் புறப்படுவதாக இருந்தால் அருச்சுனன் தான் சகுனம் பார்த்து சொல்வான். வேறு வேலையாக எங்கேயாவது போவதாக இருந்தால்  வீரப்பனே சகுனம் பார்த்து கிளம்பி விடுவான்.

      இன்று அருச்சுனனே சகுனத்தடை மாதிரி...!
      சேத்துக்குளிக்கு இறுக்கமாக இருந்தது.அருச்சுனனுக்கு அந்த கிளைமேட்டிலும் வியர்ப்பது மாதிரியான உணர்வு...அவன் கொண்டு வந்த செய்தியே அப்படித்தான்.!
       வீரப்பன் கோபத்தை வெளிக்காட்டவில்லை.கரகரப்பான குரலில் "அம்மா...வனதேவதை!எல்லாம் உஞ்செயல்!" என்று மேலே பார்த்து விட்டு பாறையில் 'நச்'சென்று உட்கார்ந்தான்.
       ''ம்...சொல்லு..என்ன சங்கதி?"
      "நம்ம லோடை அய்யனும் ...அய்யந்தொரை  ஆளுங்களும் கடத்திட்டுப் போயிட்டானுக.!"
       "என்னடா ...சொ ...ல்...ற ?"
       "கொள்ளேகால் பார்ட்டிக்கு நாம்ப அனுப்பிய சந்தனக்கட்டை லோடை வண்ணாத்திப் பாறைக்கு பக்கத்தில வச்சு கடத்திட்டாணுக,!"
ஏறிட்டுப்பார்த்த வீரப்பன் கோபத்துடன் ''நம்ம ஆளுங்க அபப  என்ன பண்ணிட்டிருந்தாணுக.மந்திக்கு மசுரு புடுங்குனானுங்க்களா?"
         பதில் இல்லை.
        "கேக்கிறனில்ல. மசுரு புடுங்குனானுங்களா?....என்னடா நடந்திருக்கு..சொல்லுடா?"
         "கிட்டக்க செக் போஸ்ட்டு இருந்துச்சு.அதனால் நம்ம ஆளுங்க துப்பாக்கியை  சும்மா வச்சிட்டாணுக.அருவாள வச்சு புரட்டிருக்காணுக.சேதம் நமக்கு இல்ல,"
         "சேதம் நமக்கில்லையா?லோடை லாவிட்டுப் போயிட்டானுகளே!"
         '' நா ..உசிர பத்தி சொன்னேன்.அவனுங்கள்ள ரெண்டு பேர  போட்டாச்சு..அவனுங்க தலைய சாக்குல சுத்தி கொண்டாந்திருக்கானுங்க.!"
        ''எதுக்கு? தீயில வாட்டி திங்கிறதுக்கா......லோடை  லாவிட்டு போயிட்டானுகளே?அதுக்கு எவன்டா  ஜவாப்பு?"
         "எம்மேல ஏன்ணே  காயுரே?பாலவனத்தான் சொல்லியனுப்பிச்ச சேதி இம்புட்டுதான்.!தலையோடு ரெண்டு பேரு வந்தாச்சு.மத்த பேரு அந்த ஊர்ல மறஞ்சு கிடக்குராணுங்க.அய்யன போட்டுத்தள்ளமா  இங்க வரமாட்டணுங்க.இம்புட்டுதான் சேதி."! என அருச்சுனன் சொல்லி முடித்தான்.
      ''தலைவரே!இப்ப நேத்திள்ள.அஞ்சாறு மாசமா அவனுங்க நம்மோட தான்  மோதிட்டிருக்காணுக.புன்னாச்சிக்கு பக்கத்தில இருக்கிற ஊர்க்காணுக அவனுகளுக்கு புல்  சப்போர்ட்டு.!ஊர்க்கார பயலுகளுக்கு டெய்லி சாராயமும்  கறியும் சப்ளை பண்ணி  வசியம் பண்ணிருக்கானுக ."என்றான் சேத்துக்குளி .
       "அவனுங்க எந்த ஏரியாவ்ள டேரா அடிப்பானுங்க?"
       "மேக்காடு,முத்தட்டி இங்கிட்டுதான் சந்தனக்கட்டை வெட்டுவானுகண்ணே "!
         ''சரி...நா பாத்துக்கிறேன்"!
சேத்துக்குளியை கூட்டிக்கொண்டு வடக்கு பக்கமாக இருந்த குகைக்குள் புகுந்தான் வீரப்பன்.

அடுத்து என்ன நடக்குமோ?


  

வியாழன், 10 ஏப்ரல், 2014

பாஞ்சாலியா,வா மகளே வா!

திருத்தி எழுதிய தீர்ப்புகள்  கவிதை தொகுப்பு .
நான் அவ்வப்போது வாசிப்பது பழக்கம்.வழக்கம் .
மது அருந்திய போதை யை வரிகள் தரும்.
வலி இருக்கும்.சமுதாயச் சாடல் நெரி கட்டும்.
பொய்மை சுடப்படும்.போலிகள் தோலுரியும் !
விலக்கி வைக்கப்பட்டவர்கள் என்பது தலைப்பு
எத்தனை முறை வாசித்தாலும்
சுவாசம் சூடாகிவிடும்.நீங்களும் படியுங்கள்.
''பாஞ்சாலியா?
வா  மகளே வா!

துச்சாதனன் உன்னைத்
தொட்டிழுக்க வரும்போது --
மாதவிலக்காதனால் ...

ஓராடை கட்டி நீ
உள்ளே இருந்தாயாம்?
இங்கே--
நான் வாழும் தேசத்தின்
நடைபாதை ஓரத்தில்
உடுத்தத் துணியில்லா
ஒரு கோடி சோதரியர் ....
ஓராடை மட்டும்தான்
உடுத்திருகின்றாரே!
மாதமெலாம்  அவர்களுக்கு
மாதவிலக்கா மகளே?

சகோதரிகாள்!
நீங்கள் ஜவுளிக்கடைப் பொம்மைகளாய்
ஜனித்திருக்கக் கூடாதா?"

கவிப்பேரரசு வைரமுத்து  எழுதியதில்
இன்றும் உயிர் வாழும் உண்மை.
கொலுபொம்மைக்கு  கூட
புதுத் துணி கிடைக்கிறது.
குடிசை வாழ் பெண்ணுக்கு
அதற்கும் வழி இல்லை.


தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்கள் .

பக்கா ரவுடி,கொலைகாரன்,அவன் மீது டஜன் கணக்கில் கிரிமினல் வழக்கு இருக்கு.கைக்கு விலங்கு போட்டு வீதி,வீதியா இழுத்துக் கொண்டுபோய் ஜனங்களிடம் காட்டப்படவேண்டியவன் .அப்படிப்பட்ட கிரிமினல் எலக்சனில் ஜெயிச்சிட்டான்,மந்திரியும் ஆகிட்டான் என்பதற்காக அவனுக்கு மாலை,மரியாதை போடலாமா?கைது செய்யவேண்டிய காவல்துறை அவனுக்கு சலாம் வைக்கலாமா?
      இதுதான் ஜனநாயகம்னா அந்த வெங்காயம் வேணவே வேணாம்.!
     சட்டங்கள் செய்யப்பட வேண்டிய பார்லிமெண்டுக்கு நடக்கிற தேர்தலில் போட்டியிடுகிறவர்களில் 557 பேர் கிரிமினல்கள்.சீரியஸ் கிரிமினல்கள் 328 பேர். எல்லா கட்சிகளும்  கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றன என்பதுதான் உலக மகா கேவலம்,
     கோடீஸ்வரன்கள் 921.
    பட்டதாரிகள்.1664.
    பெண்கள்.241.
    'பான் 'கார்டு இல்லாதவன் 922.
    வருமானவரி கணக்கு காட்டாதவன் 1527.
இவர்களில் எத்தனை பேர் ஜெயிப்பார்கள் என்பதல்ல எனது கேள்வி .இத்தகையவர்களுக்கு அரசியல் கட்சிகள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பது ஏன்?
     ஏன் அவர்கள் திருந்தமாட்டார்களா என கேட்கலாம்.
நல்லா திருந்தட்டும்.திருந்த வேண்டும் என்பதுதானே ஆசை.
திருந்துவான் என நம்பி ஒரு நாள் அவனை உனது வீட்டில் தங்க வைப்பாயா?
உத்தமனாகிவிடுவான் என உனது மகளுடன் பழக விட்டுப்பாரேன்?
அரசியல் காரணங்களுக்காக யாரையாவது போட்டுத்தள்ளவோ .கை காலை முறித்து எச்சரிப்பதற்காகவோ வைத்திருக்கும் அவர்களை தேர்தலில் நிறுத்தி 
அந்தஸ்து வாங்கிகொடுப்பது அயோக்கியத்தனம்.
சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு இத்தகைய கிரிமினல்கள்தான் காரணம்.
ஜனநாயகம் என்கிற பெயரில் அவர்களை அனுமதிப்பதும்,அரசியலைப் பயன்படுத்தி மக்களின் சொத்தை கொள்ளை அடித்தவர்களை கொண்டாடுவதும் இழிவானது.
நீதிமான்களே பயப்படுவார்கள் கிரிமினல்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு.!
பதவியை பயன்படுத்தி பழி வாங்கலாம்.அல்லது கிரிமினல்களை அனுப்பி போட்டுத்தள்ளலாம் என அஞ்சுவார்கள்.
       கிரிமினல்களை அரசியல்கட்சிகள் ஊக்கப் படுத்துகின்றன.
       இதை தடுக்கவோ,எதிர்க்கவோ வழி தெரியவில்லை.
       பெருந்தலைவர் சொன்னதைப் போல 'நாடு கெட்டுப் போச்சு.!'
 

புதன், 9 ஏப்ரல், 2014

தேர்தல் பிரசாரத்தில் ஏடாகூட செயல்கள்.

தேர்தல் பிரசாரத்தில் அடிப்பது ,பிராண்டுவது,தவறாக நடப்பது இவையெல்லாம் புதியவை இல்லை என்றாலும் அவை நடக்காமல் தடுப்பது என்பது அவசியமாகும்.
மக்கள் திலகம் ,நடிகர் திலகம் இவர்களுடன் தேர்தல் பயணம் சென்ற அனுபவம் எனக்கு !
வழியெல்லாம்  கை கொடுக்க முயலுவோரை தவிர்க்க இயலாது .
அவர்களுக்கு கை கொடுத்தபடியே கார் செல்கிறபோது நகக்கீறல்கள் பட்டு விடும்.இதனால் இரு திலகமும் சாமர்த்தியமாக கையை முழுமையாக கொடுத்து மாட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமலும் விரல்களால் தொட்டபடி சென்று விடுவார்கள்.
ஆனால் தற்போது பிரசார வேன்களில்  செல்கிறவர்களை யாரும் தொட முயற்சிப்பது இல்லை.அவர்களை வேடிக்கை பார்ப்பதுடன் சரி,
இருந்தாலும் நடந்து செல்லும்போது மாட்டிக்கொள்ளாமல் இருக்க முடியாது. மீரட் தொகுதியில் நடிகை  நக்மாவை காங்.கட்சி எம்.எல்.ஏ.முத்தமிட்டிருக்கிறார்.தொண்டர்கள்[?] தவறாக தொட்டிருக்கிறார்கள்.இவைகளை சகஜம் என கருதுவது அவர்களின் மனதை பொருத்த விசயமாகும். ஆனால் அநாகரீகம் என்பது எனது கருத்து.
தொண்டனை அடித்துவிட்டு 'அவன் என் கட்சிக்காரன்.அவனை நான் அடிப்பேன் 'என்று விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தலின் போது சொன்னது ஒரு தலைவனுக்கு அழகல்ல.அடிப்பதை  உள் கட்சி ஜனநாயகம் என நினைத்துவிடக்கூடாது .
சொன்னதை செய்யவில்லை என்று கேஜ்ரிவாலை ஒரு ஆட்டோ டிரைவர் அறைந்தது அநாகரீகம்.அடிக்கும்படி தூண்டுவது காட்டுமிராண்டித்தனம்.இவை எல்லாம் தவிர்க்கமுடியாது ஒன்றிரண்டு சம்பவங்கள் நடக்கலாம் என  அலட்சியமாக இருப்பது எதிர்மறைவு நிகழ்வுகளுக்கு காரணமாகிவிடும்.வன்முறைகள் தலை தூக்கலாம்.
அதிமுக,தி .மு.க,பா.ம.க. ஆகிய கட்சிகளின் சில பேச்சாளர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கமுடியவில்லை.ஆபாசமாக இருக்கிறது.
காமடியாக பேசலாம் விஜயகாந்தைப்போல.ஆனால் யாரும் அப்படி பேசுவதில்லை.அவர் மட்டும்தான் அப்படி பேசுகிறார்.
'நான் போன தேர்தலில் பேசியதைதானே அவர்கள் இப்போது பேசுகிறார்கள்" என வடிவேலு யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் எல்லா மேடைகளிலும் காமடிதான் நடக்கிறது.
கலை நிகழ்ச்சி என்கிற பெயரால் வசை பாடுவதும் அசிங்கமாக ஆடுவதும் அதிகமாகிவிட்டது.கூட்டத்தை சேர்ப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள்.
 .

சனி, 5 ஏப்ரல், 2014

இழிவான அரசியல் தேவையா?

மலத்தில் புழுத்தவைகளை எடுத்து அது பட்டுப் புழு என சொன்னாலும் நம்பித் தொலைக்கிற மக்கள் வாழ்கிற புண்ணிய பூமி.!
அவர்களுக்கு மயக்கமே வாழ்க்கை.கன்னத்தில் நாலு அப்பு அப்பிவிட்டு 'இந்தா காசு.குவாட்டரை அடிச்சிட்டு ,குஸ்காவை தின்னிட்டு மல்லாந்து படுத்துக்கோ 'என சொன்னாலும் கவலைப்படுவதில்லை.'தலைவா நீ வாழ்க' என அடிமையாகிவிடுவார்கள்.
அடிமை வாழ்வு பழகிப்போனது.சுரணை இல்லாமல் வாழ்கிறோமே என்கிற  உணர்வினை  தொலைத்து விட்டார்கள்.
கொத்துக் கொத்தாக சொந்தங்களை கொல்வதற்கு நம்மவர்களே கத்தி அருவாள் கொடுத்தார்கள் என்று சொன்னால் 'அப்படியா,ஒழிக ஒழிக 'என சொல்லிவிட்டு  மறுநாளே மண்டியிட்டு கிடப்பார்கள்.
'என் குடும்பமோ உறவுகளோ யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் 'என சத்தியம் பண்ணிவிட்டு மகனுக்கும் மச்சானுக்கும் மனைவிக்கும் பதவிகளை ரிசர்வ் பண்ணுகிறவர்களை பற்றி கவலைப்படுவதில்லை.
பிள்ளையா குட்டியா எனக்கெதுக்கு சொத்து என சுருட்டுகிரவர்களைப் பற்றி கோபப்படுவதில்லை.
இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் வியாபாரம் செய்பவர்களை புனிதர்கள் என நம்புவார்கள்.
இத்தகைய அருங்குணத்தார் வாழ்கிற மண்ணில்தான் தமக்குரிய மன்னர்களை தேர்ந்தெடுப்பதற்காக போட்டி நடக்கப்போகிறது.
நல்லவர் யார்,வல்லவர் யார் என யாருக்கும் தெரியாது.
பணத்தில் வலுவானவன் ஜெயிக்கப்போகிறான்.
நாமும் கோஷம் போடப்போகிறோம்.

த்து...இதென்ன கேவலம்.வெட்கம்.!

தொலைக்காட்சிகளில் கேவலமான விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டு தொடர்பானது.
ஏற்கனவே சூதாட்ட ஊழலில் மாட்டிக்கொண்டு பெரிய பெரிய தலைகளெல்லாம் தரையில் உருண்டு கொண்டு இருக்கின்றன.உலகம் முழுவதும் ரசிக்கப்படுகிற விளையாட்டுக்காக செய்யப்படுகிற விளம்பரங்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பது நியாயம்தான்.
அதற்காக சாணியில் சிலை செய்து சந்தியில் நிறுத்தலாமா?
ஒரு தாய் படுத்த படுக்கையில் கிடக்கிறாள்.
அருகில் மகன்.கவலையுடன் பார்க்கிறான்.சுவரில் மாட்டியிருக்கும் ஒருவரின் படத்தைக்காட்டி 'அவர் உன் அப்பா இல்லை 'என சொல்கிறாள்.
அவனின் ரியாக்ஷன் என்னவாக இருக்கவேண்டும்?
அது தெரிவதற்கு முன்னதாகவே அம்மா[?] ஜர்தா பாக்குப்பொட்டல சரம் மாதிரி போட்டோ சரத்தை காட்டி 'இதில யாரோ ஒருத்தர்தான் உன்னோட அப்பா 'என சொல்ல கிரிக்கெட் விளையாட்டுக்கான இசை கேட்கிறது..
மகனின் முகத்தில் மலர்ச்சி .ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது.
'நீயே யார்னு முடிவு பண்ணு' என சொல்லிவிட்டு வெளியில் ஓடி விடுகிறான்.
 புருஷன் யார் என்பது அம்மாவுக்கு டவுட்டு.சாகும் நிலையில் வந்து தொலைக்கிறது.
அப்பன் எவன் என்கிற கவலை மகனுக்கும் இல்லை.எவனா இருந்தா எனக்கென்ன அவனை முடிவு பண்ணி நீயே சொல்லு என ஓடுகிறான்.
இப்படி ஒரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஓடுகிறது.
இது தான்யா தற்போதைய 'இந்திய'கலாசாரம் என்கிறார்களா?
சத்தியமாக சொல்வேன் அது தமிழர் கலாசாரம் இல்லை.

கண்டம் துண்டமாக ஐவரை வெட்டி வீசு! [9]

வீரப்பன் வந்தான்.
அவனுக்காகவே காத்திருந்தவர்கள் ஆவேசத்தை கொட்டி தீர்த்தார்கள்.
''எதிரிகளை விட துப்பு சொல்றவனுங்களைதான் ஈவு இரக்கம் பாக்காம போடனும்.தேங்கா கொம்பு பள்ளத்தில கூடுறானுகலாம்.குளோஸ் பண்ணிடவேண்டியதுதான்.யோசனையே பண்ணாதே.!''
வீரப்பனின் கூட்டாளிகள் ஒரே குரலில் சொல்ல...
இரு பிரிவாக வியூகம் அமைகிறது.
ஒரு பிரிவுக்கு வீரப்பன் தலைமை.!
அடுத்த பிரிவுக்கு சேத்துக்குளி தலைமை.!
காவேரியில் நெஞ்சளவு வெள்ளம்.பள்ளமான பகுதி என்பதால் இழுவை அதிகம் .
அடர்ந்த புதர் ஓரமாக அய்யன்தொரை காலைக்கடனுக்காக உட்கார்ந்திருக்கிறான்.வாயில் சுருட்டு..குணசேகரன்,முத்துக்குமரன் இருவரும் கரை ஓரமாக குளிக்கிறார்கள்.கோட்டையூர் அய்யணனும் தனபாலனும் கருங்குரங்கை நெருப்பில் வாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.ஐந்து பேருக்கும் அன்றைய காலை நாஸ்டா கருங்குரங்கு ப்ரை
குணசேகரன்,முத்துக்குமரன் இருவரும் தலையை துவட்டியபடி கரை ஏற ...
அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தத்துடன் 'ஐயோ' என்ற அலறலும் எதிரொலித்தது.
பயந்து அலறிய அய்யன்தொரை எழுந்து காலை தூக்கி வைத்து ஓடுவதற்குள் தலை சிதறி விழுகிறான்.குறி வைத்து அடிப்பதில் சேத்துக்குளியான் கில்லாடி.!
கோட்டையூர் அய்யணன்,தனபாலன் இருவரும் வெவ்வேறு திசையில் பாய மறு நொடியே அலறி விழுந்தார்கள்.
இரண்டு நிமிடங்களில் ஐந்து பேர் காலி.!
''என்னப்பா இப்ப சந்தோசமா?" சகாக்களை பார்த்துக் கேட்கிறான் வீரப்பன்.
"இவனுங்களை இப்படி கொன்னதால எதிரிகளும் போலிசும் பயந்திடப்போறதில்ல.நம்மள பத்தி நினைச்சுப் பார்க்கிறதுக்கே அவனுங்க பயப்படனும்னா அஞ்சு பயலுகளையும் கண்ட துண்டமா வெட்டி காவேரியில் வீசிப்புடனும்.எந்த எடத்தில,எந்த ஊர்ல,எவனோட காலு கை ஒதுங்குமோ தெரியாது.போலீசுக்காரங்க மண்டைய பிச்சுக்கணும்.இதுதான் அவனுகளுக்கு பாடம்." என்று வீரப்பன் சொல்ல  மறு நிமிடமே ஆளுக்காள் ஆயுதங்களுடன் செத்துக்கிடந்தவர்களை சூழ்ந்து கொண்டார்கள்.
ஒருவன் கைய துண்டாக்கினான்.இன்னொருவன் கரகரவென கழுத்தை அறுத்தான்.அவர்களுக்கு அருவருப்போ சங்கடமா ஏற்பட்டதாக தெரியவில்லை.ஆடு வதை செய்யும் இடத்தில் எப்படி தோல் உரித்து தொங்க விடுவார்களோ ,அதைப்போல வீரப்பனின் ஆட்களும் கூறு போட்டார்கள்.
அரை மணி நேரத்தில் துண்டு போடும் வேலை முடிந்தது.
காவேரியில் அவைகளை வீசி எறிந்து விட்டு ஆவேசம் அடங்கும்வரை குளியல் போட்டார்கள்.
வெந்தும்,வேகாமலும் கிடந்த கருங்குரங்கை மீண்டும் நெருப்பில் வாட்டி ஆளுக்கு கொஞ்சமாக பிய்த்துக்கொண்டு கிளம்பினார்கள்..