புதன், 2 ஜூலை, 2014

சினிமாக்காரர்களின் காதல் !

''படங்களில் காதலை உயர்வா சொல்றாங்களே ,ஆனா அவங்களின் சொந்த காதல் வாழ்க்கையில் உலக மகா சோகம் இருக்கும்னு சொல்றாங்களே ,நெஜமா?" என்று கேட்டான் ஆபீஸ் பையன்.
"பத்திரிக்கை ஆபீஸ் பையனாச்சே வெவரமாத்தான் இருக்கான்."என்றவாறே அவனை உற்று பார்த்தேன்.
"என்ன சார் அப்பிடி பாக்கிறீங்க?நான் கேட்டது நெசம்தானே ?"
'''பாதி நெஜம்டா தம்பி! சில பேர் காதல்தான் கவிந்திருக்கு.!நம்ம காதல் மன்னன் ஜெமினியின் மகள் ரேகாவின் வாழ்க்கையையே எடுத்துக்க. என்னாச்சு?பாவம்டா! இவ்வளவுக்கும் புத்திசாலி பொண்ணு.திறமையான நடிகை.எத்தனை பேரு லவ் பண்ணுனாங்க? 1973-ல்  வினோத் மெஹ்ராவுடன் கலியாணம்னு சொன்னாங்க.'இல்ல அவர் என்னோட வெல் விஷர்னு .ரேகா அந்த கலியாண செய்தியை காலி பண்ணிட்டாங்க,அப்புறம் சஞ்சய்தத் !அதையும் மறுத்தாங்க.அமிதாப் பச்சனுடன் நெருக்கம்.கலியாணம் பண்ணிட்டாங்கன்னு பரபரன்னு பேசுனாங்க.!நீது சிங் கலியாணத்தின் போது  ரேகா கழுத்தில் தாலியும்,நெத்தி வகிட்டில் செந்தூரமுமா வந்து நின்னாங்க..உண்மைதான்னு பாலிவுட்டே பத்தி எரிஞ்சிது.! அதையும் மறுத்தாங்க.ரேகாவை அமிதாப் குடும்பம் வெறுக்க ஆரம்பிச்சது.1990-ல் முகேஷ் அகர்வால் என்கிற தொழிலதிபரை கலியாணம் பண்ணிட்டாங்க ரேகா.!
ஒரு வருசம்தாண்டா சேர்ந்து வாழ்ந்தாங்க.1991-ல் அந்தாளு தற்கொலை பண்ணிட்டார்.அந்த நேரத்தில ரேகா அமெரிக்காவில் இருந்தாங்க.ரெண்டு கலியாணம் தோல்வியில் முடிந்ததாக அந்த பொண்ணு சொன்னது.!ரெண்டு கலியாண மான்னு  பத்திரிகைகளில் அலச ஆரம்பிச்சாங்க.முகேஷ் கலியாணம் இரண்டாவது கலியாணம்னா முதல் கலியாணம் யாருடன் நடந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சாங்க,அதுக்கு ஆன்சர் இது வரை கிடைக்கல.அக்டோபர் பத்தாம் தேதி வந்தா ரேகாவுக்கு 61 வயசு.!"
''தமன்னா காதலிக்கிறதா சொல்றாங்களே,யாரோட சார்?"
"அது  தமாஷ்டா  தம்பி! கிரிக்கெட் வீரர் விராத் கோக்லி யு டன் டேட்டிங் போனதா எழுதினாங்க.பிறகு அனுஷ்கா சர்மாவுடன் லவனு எழுதினாங்க. இந்த ரெண்டு பேரும் கோவாவில் ஒண்ணா சுத்துனதாகவும் சொல்றாங்க.
'தப்பிசன்டா சாமின்னு தமன்னா நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கு."
''அப்படின்னா இதெல்லாம் காதல்னு சொல்லமுடியாதே?"
"கரெக்ட்.! சிம்பு மேட்டர்லே உனக்கு புரிஞ்சிருக்குமே! பிரபு தேவாவின் பேரை பச்சை குத்திக்கொண்ட நயன்தாரா அதை அழிக்கமுடியாமல் பரிதவிக்கிறது  உனக்கு தெரியும் ல.!ஆனா நயனை இப்ப சிம்பு நிஜமாவே நேசிக்கிறதா ஒரு பேச்சு இருக்கு.!கை கூடுதான்னு பாக்கலாம்.! சரி.உன் வேலையை பாரு.!"
  

செவ்வாய், 1 ஜூலை, 2014

மறக்க முடியாத ராம.நாராயணன் !

தமிழ்த்திரை உலகில் ராம.நாராயணன் அரசியலுக்கு அப்பாற்பட்ட அற்புத மனிதர்!
கடிந்து  பேசத்தெரியாதவர்..அவர் காலத்தில் படப்பிடிப்பு நடக்கிற இடங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச்செல்வார்கள்..கமல்,ரஜினி ஆகியோரின் அவுட்டோர் ஷூட்டிங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.தற்போது படபிடிப்பு தளங்களுக்குள் பத்திரிகையாளர்கள்  செல்ல முடிவதில்லை.அனுமதி பெற வேண்டும்..அதற்கு பி.ஆர்.ஒ.களின்  உதவி வேண்டும்..ம்ம்!இது பற்றி பேசி பயனில்லை.
கார்வார் தீவில் படப்பிடிப்பு.எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்" படத்துக்குப்பின்னர் ராம.நாராயணன் தான் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்.தற்போது அந்த தீவு கடற்படை வசம்.!
இயக்குநர் ராம.நாராயணன்,பட அதிபர் முரசொலி செல்வம்,ராதாரவி,எஸ்.எஸ்.சந்திரன்,சந்திர சேகர், இன்னும் பலர் அங்கு சென்றோம்..எங்களை அழைத்து சென்றவர் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி..ராம.நாராயணனின் ஆஸ்தான பி.ஆர்.ஒ..முருக பக்தர். அதிர்ந்து பேச மாட்டார்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் இவர் பி ஆர்.ஒ.வாக இருந்திருக்கிறார்.
கார்வார் தீவில் இறங்கியாகிவிட்டது.அந்த சின்ன தீவில் எலந்த பழ மரங்கள் அதிகம்.கடும் வெயிலில் படப்பிடிப்பு தொடங்கியது.
பத்திரிகையாளர்களில் சிலர் படப்பிடிப்பை கவனிக்க இன்னும் சிலர் தீவை சுற்றிப்பார்த்தனர்.
மதிய உணவுக்கு பின்னர் நடந்த படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே முடிந்து விட்டது.
குழுவினர் மூட்டை முடிச்சுகளை கட்டத்தொடங்கினர்.
அதுவரை நடிகர்களும் பத்திரிகையாளர்களும் வெயிலில் காய முடியுமா?
'சடு குடு விளையாடுங்க' என்றார் இயக்குநர்.
நடிகர்கள் ஒரு பக்கமும் பத்திரிகையாளர்கள் எதிர் அணியாகவும் களத்தில் இறங்கினர்.
பிரச்னை அதற்கு பின்னர்தான் ஆரம்பமாகியது.
விளையாட்டாக ஒரு பத்திரிகையாளர் ஒரு கருத்தை சொல்ல அது எஸ்.எஸ்.சந்திரனுக்கு பிடிக்கவில்லை.
வார்த்தைகள் கடுமையாகின.முரசொலி செல்வம் மிக மிக மென்மையானவர். அவர் சொன்னால் சந்திரன் கட்டுப்படுவார் என சிலர் அவரை தேடி சென்றனர்..நானும் ராதாரவியும் சமாதான புறாக்களாக மாறினோம்... ஆனால் சந்திரன் மிகவும் ஆவேசமாகிவிட்டார்
''மாமா..சும்மா இருக்க மாட்டியா?"-இது ராதாரவி.
"மாப்ள, நீ கம்முன்னு இரு !"
''நல்லதில்ல மாமா.! செல்வம் சாருக்கும் டைரக்டருக்கும் தெரிஞ்சா ரொம்பவும் வருத்தப்படுவாங்க!"
இப்படி அவர்கள் இருவருக்கும் வாக்கு வாதம் நடக்க நல்ல வேளையாக அங்கு டைரக்டர் வந்து விட்டார்...
''எஸ்.எஸ் !என்ன இது !பேசாம போட்டுக்கு போங்க.இருட்டுறதுக்குள்ள  தீவை விட்டு வெளியேறிடனும்.!" என்றதும் பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டார்.அது மட்டுமல்ல  முரசொலி செல்வம் சொன்ன படி பத்திரிகையாளரிடம் 'சாரி" கேட்டுக் கொண்டார்.
பண்பு ,அன்பு நிறைந்த அவரின் மறைவு பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்புதான்.!