சனி, 30 ஆகஸ்ட், 2014

சந்தி சிரிக்கும் பிள்ளையார்கள்.

நான் ஒன்னும் நாத்தீகன் இல்ல..கடவுளே இல்லேன்னு  சொல்லல.மனிதனுக்கும் மீறிய சக்தி ஒன்னு இருக்கு.அது நாமமும் போட்டிருக்கலாம்..விபூதியும் பூசியிருக்கலாம்..பூசாமலும் இருக்கலாம்.
நான் எந்த கோவிலுக்கும் போவேன்.சிவன்,விஷ்ணு,எனக்கு எப்படியோ அதைப்போல வேளாங்கண்ணி மாதா வையும் கும்பிடுவேன்.ரமலான் மாதம் நோன்பு கஞ்சி குடிப்பவன்.இப்படியான இறை பக்தி உள்ளவன்தான்.
ஆனால் ஒரு இடத்தில சாமிய வைக்கிறதுக்கு முன்னாடி  ஆயிரத்தெட்டு  சாஸ்திரம் பாக்கிறாங்க.வாஸ்து பார்க்கிறாங்க.கிழக்கே பார்த்து சாமி இருக்கணும்னு சொல்றாங்க.யாகம் நடத்தி பிறகு பிரதிஷ்டை பண்றாங்க.ஆனால் விநாயகரை மட்டும் எந்தவித சடங்கு சாஸ்திரம்,சம்பிரதாயம் பார்க்காம தெருவில வச்சு கும்பிடுறோமே அது தெய்வ நிந்தை இல்லையா?
தெரு ஓரமா 'அசிங்கமான' இடமா மாறிப்போன இடத்தில கூட பிள்ளையார் சிலையை வைக்கிறது கடவுள் பக்தியா?யோசித்து பாருங்க. வீட்டில கும்பிட்டுக்கிட்டு இருந்த நாம்ப எந்த காலத்தில இருந்து இப்படி மாறி இருக்கிறோம்?
ஐம்பதுகளில் இப்படிப்பட்ட தெரு பிள்ளையார்களை  பார்த்திருக்க முடியாது..சின்ன களிமண் பிள்ளையார்களை வீட்டில் வைத்து கும்பிட்டு விட்டு மூணு நாள் கழிச்சு ஆத்திலோ கிணத்திலோ போட்டுவிடுவோம்.பிள்ளையார் வீட்டில இருக்கிற அந்த மூணு நாளும் புருஷன் பொண்டாட்டி சேர மாட்டாங்க.அப்படியெல்லாம் பயந்து பக்தியா இருந்தாங்க.
அந்த கலாச்சாரம் இப்ப இருக்கா? தண்ணி அடிச்சிட்டு வந்து குத்தாட்டம் போட்டு பிள்ளையாரை தூக்கிட்டு போய் கடலில் போடுறோம்.
இதுதான் பக்தியா?
ஒரு வகையில் நாம்ப வேஷம் போடுறோம்னுதான் சொல்லுவேன்..வீட்டுக்கு எதிரா சந்து இருந்தா ஆகாதுன்னு சொல்லி அதுக்காக பிள்ளையாரை வைக்கிறோமே.!
சுவத்தில ஒன்னுக்கு அடிக்கிறானுகளேன்னு அத தடுக்கிறதுக்கு அங்க பிள்ளையாரை வைக்கிறாங்களே.அதை தப்புன்னு யாராவது நினைச்சாங்களா?மாடர்ன் டிரஸ்களை போட்டு பிள்ளையாரை வைக்கிறோம்.
கோபப்படாம யோசிங்க.!  

சனி, 23 ஆகஸ்ட், 2014

இப்படியும் மனிதர்கள்.

இப்படியும் மனிதர்கள்.
ஞாயி ற்றுக்  கிழமை.. பொதுவாக நான்-வெஜ் பிரியர்களுக்கு உகந்த நாள்.வீட்டிலேயே மது குடிப்பவர்களுக்கு ஞானம் பிறக்கும் நாள்.சற்று சுதி ஏறியதும் பாவமன்னிப்பு கேட்பதும், தனது பலப்பிரயோகத்தை காட்டுவதும் அன்றுதான்.
இதனால் சில பெண்களுக்கு ஏன்தான் ஞாயிறு  வருகிறதோ என பயம் வரும்..அனுபவப்பட்டவர்களுக்கு கூட  நாலு சாத்து சாத்தலாம் என்கிற தைரியம் இருக்கும்.
எனக்கு இப்போது அப்படியெல்லாம் கிடையாது.
'மட்டன் சாப்பிடக்கூடாது..கோழிக்கறி யும் அட்வைசபில் இல்லை.மீன் சாப்பிடலாம்' என டாக்டர்கள் சொல்லியிருப்பதால் மீன் வாங்குவதற்காக வடபழனிக்கு சென்றேன்.ராமேஸ்வரம் மீன் என்றால் ருசி அதிகம்.நான் மதுரைக்காரன்..அதனால் ராமேஸ்வரம் மீன் எங்கே கிடைக்கும் என்பதை உறவினர் மூலம் தெரிந்திருந்தேன்.
முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் அதாவது தற்போது சரவணபவன் இருக்கிற பக்கத்து சந்தில் ஒரு பாய் கடையில் கிடைக்கிறது.நேர்மையானவர்.அதிக விலை இல்லாமல் நல்ல பொருளாக கொடுப்பார்.
வடபழனி காவல் நிலையம் முன்பாக சிக்னலில் பச்சைக்காக காத்திருந்தேன்.
பக்கத்தில் இருந்த பைக் காரன் 'கொரங்கு மாதிரி இருக்கான்..அட்டர் பிளாக். அவனுக்கு பாரேன்.லக்கை.!வொய்ப் இன்னா செவப்பு. கொடுத்து வச்சவன்டா மச்சான்' என்று பில்லியனில் இருந்த நண்பனிடம் சொல்கிறான். அவனுக்கு சற்று தள்ளி நிற்கிற பைக்கில் அமர்ந்திருந்த ஜோடியை பற்றிய கமெண்ட்தான் இது.!
அந்த ஜோடியே அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.அவர்கள் ஜாலியாகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களைப் பார்க்கிற இவனுக்கு மட்டும் கவலை.!
இது ஒரு வகையில் சொந்த பாதிப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.அவனை விட அவனின் மனைவி  ரதியாக இருந்து யாரோ அடித்த கமெண்ட் அவனின் அடி மனதில் தங்கி இருக்கக் கூடும்.
இப்படிப்பட்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்..நல்லவர்கள் என்று நம்புகிறவர்களுக்கும் அத்தகைய வக்கிரம் இருக்கிறது.
இதைப்போல பெண்களுக்கும் நினைப்பு இருக்குமோ?
அதன் வெளிப்பாடுதான் கள்ளக்காதலுக்கான உந்துதலா?
ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் சரி இத்தகைய நினைப்பு வராமல் இருப்பதற்கு தியானம் செய்வதுதான் சரியான வழி !

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சென்னைக்கு 'ரெட் லைட் ஏரியா வேணும்....

சென்னைக்கு 'ரெட் லைட் ஏரியா வேணும்....
தலைப்பை பார்த்ததுமே அதிர்ச்சியா இருந்திருக்குமே..!படமே எடுத்திருக்காங்க. டைட்டில் ' சிவப்பு  எனக்கு பிடிக்கும்.'
தண்ணீர் தொட்டிலில் படுத்த  ஆர்க்கிமிடீஸ் 'யுரேகா..யுரேகா 'என கத்திக்கொண்டே  அவன் கண்டுபிடித்த தத்துவத்தை சொன்னான்.அவன் தண்ணீரின் அடர்த்தியை கண்டுபிடித்தான்.
இயக்குநர் யுரேகாவோ பாலியல் வன்புணர்வுக்கு காரணம் காமத்துக்கான வடிகால் இல்லாததுதான் என்கிறார்,
சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அனுமதிக்க வேண்டும். விபசாரம் செய்வது ஒரு தொழில்தான்.அதை ஏன் தடுக்கிறாய் என கேட்கிறார்.
ஒரு விலைமாதுவின் வீட்டுக்கு எழுத்தாளர் யுரேகா சென்று தனது நாவலுக்கான அடிப்படை ஆதாரங்களுக்காக பெட்டி எடுக்கிறார்..விலைமாது மகிமா சொல்கிற அனுபவங்கள்தான் மொத்தப்படமே.!
மாராப்புகளை விலக்கி இளமைத்திமிரை மெத்தென காட்டும் காட்சிகளோ,கசக்கிப் பிழியும் அணைப்புகளோ,உதட்டு முத்தமோ இல்லாமல் ஒரு விலைமாதுவின்  கதையை எடுக்கமுடியுமா?
எடுத்திருக்கிறார் யுரேகா.
பள்ளி மாணவன் தினவெடுத்து வருகிறான், மாணவன் என தெரியாமல் அவனுடன் படுக்கிறாள் மகிமா.ஆபாசம் இல்லை காட்சியில்.
இப்படி வீட்டுக்கு வருகிற கஸ்டமர்களை திருப்தி செய்து அனுப்பும் அந்த விலைமாதுகளை ஆபாசமாக காட்டவில்லை.இவர்களிடம் மாமுல் வாங்கும் காவல் துறை அதிகாரிகளை கண்டிக்கவும் இயக்குநர் தவறவில்லை.
காமத்துக்கான .வடிகாலை தடுக்காதே.தடுப்பதினால்தான் சிறுமிகளை கூட காமாந்தகர்கள் விட்டு வைப்பதில்லை .என பல காரணங்களை இயக்குநர் அடுக்குகிறார்.
மும்பை,கொல்கத்தா பெருநகரங்களில் ரெட்லைட் ஏரியாக்கள் இருக்கும்போது சென்னையில் அனுமதித்தால் என்ன என்று கேட்கிறார் இயக்குநர் யுரேகா.
மிகவும் விவகாரமான சப்ஜெக்ட் படத்தில் சான்ட்ராஆமி நடித்திருப்பது மிக மிக துணிச்சலானது..பாராட்டுக்குரியது.
தனது கனத்த உடலை தூக்க முடியாமல் தூக்கி நடித்திருக்கும் யுரேகாவுக்கு போட்ட முதல் வருமோ வராதோ பாராட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது.
காலம் மாறி வருகிறது..

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சுயசரிதையும் பிரமுகர்களும்.

சுயசரிதை என்பது பொய் கலவாமல் எழுதப்படவேண்டியது..கசப்புணர்வை வெளிப்படுத்துவதல்ல சுய சரிதை.
விலை மாது வீட்டுக்கு போனே னா ,தைரியமாக எழுதவேண்டும்.. திருடினேனா எழுது.!அடுத்தவனை கெடுத்தேனா மறைக்காமல் எழுது.
சுய சரிதை எழுதுவதற்கும் ஆண்மை வேண்டும்.
தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது அருகாமையில் இருக்கவேண்டியவர்  அந்த  துயரமான கட்டத்தில் சிற்றின்ப வெறிக்கு உள்ளாகி மனைவியுடன் சுகித்ததை எழுதியிருக்கிறார்.
குற்ற உணர்வுடன் !
அப்படி எழுதுவதற்கு ஆண்மை வேண்டும்..நேர்மை வேண்டும்...எத்தனை பேர்  தன்னை இழிவாக நினைப்பார்கள் என்பதை மறந்து அவர் எழுதவில்லை.உண்மையை எழுதவேண்டும் என்கிற திண்மை அவரை எழுத வைத்தது.
மகளுக்கு எழுதிய பண்டித நேருவின் கடிதங்கள் உலக சரிதமாகியது.
கண்ணதாசனின் வனவாசம்-மனவாசம் சுயசரிதைதான்.!
அவர் எதையும் மறைக்கவில்லை என்பதை உணர முடிகிறது..யாருமே மறுப்பு சொல்லாததால்.! வீணான விமர்சனங்களுக்கு இடம் தர வேண்டாம் என்கிற பெரிய மனித தன்மை கூட மறுப்பு சொல்லாததற்கு காரணமாக இருக்கலாம்.எதுவாக இருந்தால் என்ன? ஒரு இயக்கம் உடைந்ததற்கு எவையெல்லாம் காரணமாக இருந்தன என்பதை அவர் கதை போல எழுதியிருந்தார்,' குழப்பமே அண்ணாவின் மனோதர்மம்' என ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.."கட்சிக்கு நெருக்கடி வரும்போது கட்சியை விட்டு ஓடிவிடக்கூடிய நடிகர்கள்  தங்கள் தொழிலுக்கு கட்சியை பயன்படுத்தியதாக" கண்ணதாசன் வனவாசத்தில் எழுதியிருக்கிறார்.
தற்போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் சுய சரிதம் எழுதுகிறார்களாம்..
மீள இயலுமா என்கிற நிலையில் கட்சி பலவீனமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் கிடக்கிற போது சுயசரிதைகள் வெளிவரப்போகின்றன. .விவகாரங்களை மையப்படுத்திய கதைகளாக இருக்கவோ,உண்மையின் பதிவாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மாபெரும் தேசிய இயக்கம் நேருவினால் உயர்வு பெற்றது..
நேருவின் சகாப்தம் என சொல்லலாம்.
அந்த சகாப்தத்தின் முடிவுரையை அவரது குடும்பத்தாரே எழுதிவிடுவார்களோ என்கிற அச்சம் தற்போது எழுந்திருக்கிறது.
எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவார்களா ,மண்ணைப் போட்டு அணைப்பார்களா?
நட்வர்சிங்கும் சோனியாவும்தான் சொல்லவேண்டும்.