சனி, 20 செப்டம்பர், 2014

பெருச்சாழி.

பெருச்சாழி.
அண்மையில் நான் பார்த்த படம்..கேரளத்து உச்ச நடிகர் மோகன்லால் நடித்திருக்கிற படம்.அருண் வைத்யநாதன் எழுதி இயக்கியிருந்தார்.படம் காமடி இனம் சார்ந்தது. அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளை அள்ளிவிடுகிற மோகன்லாலை கலிபோர்னிய மாகாணத்து கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற ஒருவர் அழைத்து வெற்றிக்கு வழிகளை வகுத்துக் கொடுக்குமாறு கேட்கிறார்.கைக்கு அருகில் வருகிற வெற்றி கடைசி நிமிடத்தில்  திசை மாறிவிடுகிறது.அது ஏன்,எதனால் என்பது ஒரு சின்ன டிவிஸ்ட்..முன்னதாகவே சொல்லியிருக்கிறேன் இது காமடி இனத்தை சார்ந்தது என்பதை,!
பொதுவாக நமது திரைப்படங்களில் தேடினாலும் கிடைக்காத அரிய வஸ்து லாஜிக் என்பது.!
பொழுது போக்குவதில் லாஜிக் என்ன வேண்டிக்கிடக்கிறது என்பது எனது கருத்து.
அறிவுஜீவிகள் மட்டுமே கேட்கிற வஸ்து லாஜிக்.நான் அறிவு ஜீவி அல்லன்.ஒரு பாமர ன் .ரசிகன். நெற்றிக்கண் ,நான்கு கைகள்,பத்துத்தலைகள் பற்றி எல்லாம் அறிவு ஜீவிகள்  லாஜிக் பார்ப்பதில்லை.
நம்மை அறியாமலேயே மனம் ஒன்றி சிரிக்கிற காட்சிகளில்  லாஜிக் இல்லையே என கவலைப் படுவார்கள்.
இலவசங்களை நையாண்டி செய்தால் இதெல்லாம் அமெரிக்காவில் நடக்குமா என்பார்கள்..அவர்களை அறியாமலேயே நம்மை தாழ்த்துகிறோமே  என நினைப்பதில்லை.
இப்படி எல்லாம் குற்றம் சொல்வதால் அவர்களை எல்லாம் தெரிந்தவர்கள் என மற்றவர்கள் நம்புகிறார்கள்.
குற்றம் சொல்பவர்கள் குப்புற விழும்போதுதான் சுய ரூபம் வெளிப்படுகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
பெருச்சாழியில்  மோகன்லால் செய்த கேரக்டரை நமது முன்னணி நடிகர்கள் செய்வார்களா? கமலை தவிர!
மாட்டார்கள்.இமேஜ் போய்விடும் என்பார்கள்.
அப்படி என்ன இமேஜ் இருக்கிறது?
பத்துப் பேரை தன்னந்தனியாக நின்று சாய்ப்பதுதான் இமேஜ்!
100 நாட்கள் ஓடிய காலம் மறைந்து  ஒரு வாரமாக மாறிவிட்ட நிலையில் இமேஜ் என்ன வேண்டிக்கிடக்கிறது?
கதாநாயக வழிபாடு என்கிற குழிக்குள் விழுந்துகிடப்பவர்கள் உண்மையான ரசிகர்களாக மாறும்வரை ரசனை என்பது இங்கு கேள்விக்குரியதுதான்!

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

விஜய் அரசியலுக்கு வரலாமா?

என்னுடைய நண்பர் கேட்டார்," விஜய் அரசியலுக்கு வரக்கூடாதுன்னு ஏன்  சொல்றீங்க?"
"ஆத்துல இருக்கிற மீனை கடலில் விட்டா என்னாகும்? அரசியல் கடல் மாதிரி.! அங்கேதான் மிக மோசமான திமிங்கலங்கள் வாழுது.காட்டாற்றில் எதிர் நீச்சல் போடுவது மீனுக்கு சுலபம்.அந்த மீனை தூக்கி ஏன் கடலில் போட  ஆசைப்படுறீங்க?" என்று பதில் சொன்னேன்..
"ஆத்துல நீந்துன மீன்தானே விஜயகாந்த்.அவர் அரசியலில் செயிக்கலியா?"
"நல்ல கேள்விதான் ! ஒரு கட்சியோடு கூட்டு சேர்ந்து அதிக இடங்களை பிடிக்கிறதுதான் அரசியலா? அவரால் ஆட்சியை பிடிக்க முடியுமா? ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் பண்ணனும்.அதாவது அதிகாரத்தை தப்பா பயன்படுத்துற கட்சிகளை எதிர்க்கணும்.போராடனும்..விஜயகாந்தால் இதெல்லாம் செய்ய முடியாது..திமுக ஆட்சியில் இருந்த போது அவ்வளவா அடக்குமுறையை கையாளல.அவங்க நோக்கமெல்லாம் அதிகாரத்தை பயன்படுத்தி ஆதாயம் பெறுவதிலேயே இருந்தது.முக்கியமா எதிர்கட்சிகளையும் மதிச்சாங்க.அவங்கள மாதிரி மத்த கட்சிகளும் இருப்பாங்கன்னு எதிர்பார்க்க கூடாது.கலைஞரை அரசியல் வித்தகர்னு சொல்வாங்க.அவராலேயே இப்ப போராட முடியல"
"அதுக்கு உள்கட்சி விவகாரம்தான் காரணம்..அண்ணன்,தம்பி பிரச்னை!"
"கரெக்ட்.! அதை எப்படி சமாளிக்கிறாங்க .தலைவர் மேல நம்பிக்கை  இருக்கு தொண்டர்களுக்கு.அவர் கை காட்டுறதுக்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்காங்க..விஜயகாந்த் கட்சியில யார் இருக்கா? விஜய் கட்சி ஆரம்பிச்சா அவருக்கு அடுத்த மட்டத்தில யார் இருப்பா? விஜயினால் அராஜகத்தை தாங்க முடியுமா? எதிர்க்க முடியுமா? "
"கட்சி உருவான பிறகு தானாகவே அடுத்த மட்ட தலைவர்கள் வந்திருவாங்க.இது வரலாறு."
''அப்படின்னா தேமுதிக கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள்னு  யார் யார்னு  சொல்லு?"
"அவரின் மனைவி,மச்சானை சொல்லலாம்.!"
"அவங்க இருந்தும் எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க முடியல.ஏன்? யோசி!"
இந்த மாதிரியெல்லாம் நடக்கும்கிறதாலதான்  விஜய் அரசியலுக்கு
வரக்கூடாதுன்றியா?"
"அவருடைய திரைப்பட செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்குன்றது உனக்கு தெரியும்.அப்படி இருந்தும் அவருடைய திரைப்படங்களை ரிலீஸ் பண்ண விடாம எவ்வளவு முட்டுக்கட்டைகள்,மனுஷன் நிம்மதியா தூங்கி இருப்பாரா?சூப்பர் ஸ்டாரே கைவிட்ட யோசனையை விஜய் நினைச்சு பார்க்க மாட்டார்னு நினைக்கிறேன்..அரசியலுக்கு வந்தா திமுக,அதிமுக இந்த இரண்டு பெரிய கட்சிகளை சமாளிக்கணும்.வன்முறைகள்,ஜாதிகள்.இதெல்லாம் அரசியல் கட்சிகளின் முதலீடுகள். இதெல்லாம் விஜய்க்கு தெரியுமா?அதனாலதான் விஜய் அரசியலுக்கு வர வேணாம்னு நான்  நினைக்கிறேன்" என்று நண்பருக்கு விளக்கினேன் .
      

திங்கள், 8 செப்டம்பர், 2014

பெண்ணை இழிவு படுத்தும் கொடுமை தொலையாதா

மூடத்தனத்துக்கும் முட்டாள் தனத்துக்கும் அதிகமாக இரையாவது ஏழைகள்தான்,!
வறுமைக்கு பலியாகிவிட்டதால் அவர்களை மேல்தட்டு வாசிகள் தங்களின்  அடிமைகளாக வரித்துக் கொள்ள முடிகிறது..
அறியாமையின் செல்லப்பிள்ளைகளாக மாற்றப்படுகிறார்கள்.
சமூகக் கட்டுப்பாடுகள் என்கிற சிறைக்குள் அவர்களை சுலபமாக அடைத்து விடமுடிகிறது.
பேய்க்கும் பிசாசுக்கும் அஞ்சுகிறார்கள். கல் தடுக்கி விழுந்தால் கூட அது சாபம் என பயப்படுகிறவர்களை இன்றும் காணலாம்.கொஞ்சம் படித்த அறிவிலிகள்  அதை சகுனத்தடை என சொல்வார்கள்.
இல்லாத ஒன்றை வணங்குவதும் அஞ்சுவதும் போதுவாகிப்போனது..
அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிழக்குப் பகுதியில் ஒரு கேவலமான சம்பவம் நடந்திருக்கிறது.
படத்தில் இருக்கும் அந்த பெண்ணைப் பாருங்கள்.அழகான  முகம்..அதில் நிறைதிருக்கிறது  அப்பாவித்தனம்..அவளின் பெயர் மங்கிலி முண்டா.
அந்த பெண்ணை கெ ட்ட ஆவி பிடித்திருக்கிறதாம்.அந்த சமூகத்தையும் ஆக்கிரமித்திருக்கிறதாம்.
அதிலிருந்து மீள வேண்டுமானால் அவளை ஒரு நாய்க்கு மணமுடித்து வைக்க வேண்டுமாம்.
கற்பனை செய்யக்கூட முடியவில்லை.
நாயை காரில் அழைத்து வந்திருக்கிறார்கள்.ஆடம்பரமாக!
மங்கள நீர் தெளித்து வரவேற்பு..அவர்களது சம்பிரதாயப்படி திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். 
இந்த கொடுமைக்கு அந்த பெண்ணின் தாய்தான் முக்கிய காரணம்..நாயை அவளுக்கு கட்டி வைத்தால்தான்  குடும்பம் வாழும் என்று அடம் பிடித்து நடத்தியிருக்கிறாள்.
மணப்பெண்  சொல்வதென்ன ?
'நாயை கலியாணம் செய்து கொண்டால்தான் எனக்குள் இருக்கிற கெட்ட ஆவி அந்த நாய்க்குள் போய் விடும்.அதன் பிறகு நான் ஒரு ஆணை கலியாணம் செய்து கொள்வேன்" என்று வினயம் இல்லாமல் சொல்லியிருக்கிறாள்.
இப்படி கலியாணம் செய்தவர்கள் நாய்க்கும் பெண்ணுக்கும் முதலிரவு நடத்தாமல் விட்டார்களே.. அந்த அளவு க்கு புத்திசாலியாக இருப்பவர்கள் எப்படி ஒரு மிருகத்தை மருமகனாக ஏற்றுக் கொண்டார்கள்?
ஓ ...மனிதனுக்குள் மிருகம் இருக்கிறது.அது பெற்ற மகளைக்கூட பெண்டாளும்.என்கிற போது நாங்கள் செய்து வைத்ததில் தவறில்லை என்கிறார்களோ!