வியாழன், 31 டிசம்பர், 2015

புது வருச உறுதிமொழி என்னங்க?

எல்லா மக்களுக்கும்  வணக்கம்.

புது வருசம் பொறந்தாச்சு! நீங்க என்ன உறுதி மொழி எடுத்திங்கன்னு  ஆளாளுக்கு கேட்டு தொலச்சிருப்பாங்க, ஆனா யாருமே  உண்மையை சொல்லப்போறதில்ல.எவனாவது இந்த வருசத்திலிருந்து  நான் சரக்கடிக்க  மாட்டேன்,தம் அடிக்கமாட்டேன்னா நம்ப முடியும்கிறிங்களா? அடுத்த நாளே யாருக்கும் தெரியாம வேற ஏரியாவ்ல போய் போட்டுட்டு வந்திருவான்.

எந்த கவர்மெண்டு ஆபிசராவது லஞ்சம் வாங்க மாட்டேன்னு பெத்த பிள்ளையை போட்டு தாண்டுவானா?

எந்த அரசியல்வாதியாவது  போய் சொல்லப்போறதில்ல. மக்கள் பணத்தை  மூட்டை அடிக்கமாட்டேன்னு சொல்வானுகளா? நான் கொள்ளை அடிச்ச பணத்தை  ஜனங்க முன்னாடி  ஒப்படைக்கபோறேன்னு வாய் வார்த்தையாவது சொல்வானுகளா?

ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டேன்னு பொதுஜனம் சொல்லத்தயாரா? கொடுக்கமாட்டேன்னு அவுக அவுக ஆத்தா மேல, பொண்டாட்டி பிள்ளை மேல சத்தியம் பண்ண வேட்பாளர்கள் ரெடியா?

மாட்டானுக.

இந்த வருசத்திலேர்ந்து சர்க்காருக்கு ஒழுங்கா கணக்கு காட்டுவேன்னு மைக்  போட்டு யாராவது சொல்வானுகளா?

மீடியாவ்ல பிரபலங்கள் சினிமா புள்ளிகள் சொல்ற உறுதி மொழி எல்லாம்  அப்படியே நடக்கிதா? என்கதையை  திருடிட்டான் கொரியாவ்லயிருந்து சுட்டுட்டான்னு தானே சொல்றானுக.

அரசியல்வாதிகள் தனக்கு இத்தனை சின்னவீடு இருக்குன்னு கட்டுன பொண்டாட்டிகிட்ட சொன்னதுண்டா? தாலி கட்டுனவளுக்கே விசுவாசமில்லாதவன் நாட்டு மக்களுக்கா விசுவாசமாக இருப்பான்?

அப்புறம் எதுக்கு உறுதிமொழி புண்ணாக்குன்னு  பந்த   உருட்டிப் பாக்கிறீங்க?
சாதி மதத்தை வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கிறவங்க  திருந்துனாதான்  சிலது சாத்தியம் ஆகும். எல்லாமே உருப்படியா நடக்கணும்னா அது நம்ம காலத்தில நடக்காது.அதுனால நீங்க புது வருச உறுதிமொழி எடுக்கப்போறேன்னு சொல்லி வாயை விட்டுட்டு பிறகு மனசாட்சியிடம்  மன்னிப்பு கேட்டு தலை குனியவேண்டியிருக்கும்.

நான் சொன்னது சரின்னா  நாலு வார்த்தை  எழுதுங்க. இல்லேன்னா திட்டுங்க. ரெண்டுல ஒன்னு செய்யுங்க.நானாவது  திருந்தப்பார்க்கிறேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பீப் சாங் ...பீப் சாங்....பீப் சாங்...!

பேய் மழை  பேஞ்சதும் தெரியல.அது எத்தனை பேரை கொன்னுட்டு போனதும்கிறதும்  தெரியல. வெள்ளம்  வடிஞ்சதா, வஞ்சம் பண்ணிட்டு போயிருச்சாங்கிறதும் புரியல. ஆனா  ஆணு பொண்ணு குஞ்சு குளுவானுகளுக்கெல்லாம்  பீப் சாங் என்னன்னு  தெரியிது.அத புரிய வச்ச  பெரும நம்ம மீடியாக்களுக்கு  மட்டுமே  உரிமை.

கொந்தளிக்க வச்சிட்டானுங்களே மவராசனுங்க!

நானா வெளியிட்டேன்னு கேட்கிறார்  சிம்பு. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே  இல்லேன்கிறார்  அனிருத்து. அப்பா டி.ஆரும்,அம்மா  உஷாவும்  நாட்டை விட்டே கிளம்பிடுறோம்னு கண்ணீர்  விடுறாங்க.கோலம் போடக்கூட  முடியாம வாசல்ல கேமராவை வச்சிக்கிட்டு இந்த கொட்டுற பனியில நிக்கிறிங்களே  சாமிகளானு வருத்தப்படுறாங்க.

என்ன வருத்தப்பட்டு என்னாகப்போகுது. வழக்குக வரிசை கட்டி நின்னு  இப்ப வந்த வழியே தெரியாமல் போச்சு! எலக்சன் வருதுல்ல.

எனக்கென்ன கவலைன்னா இந்த  பீப்பை விட பெரிய  பீப்பாய் சைசுக்கு  ஒரு வார்த்தையை  சென்சார் புண்ணியவானுக  அனுமதிச்சிருந்தாங்களே  அது  சரிதானுங்களா?

என்னன்னு  தெரியாம மண்டையை  உடைச்சிக்கிட்டு  கிடங்க!

டாப்சியின் சீக்ரெட்!

எட்டுறவரை  தவ்விப்  பாரு.எட்டலைன்னா எவன் தோளிலாவது  ஏறி உக்காந்து பழத்தை பறிச்சிட்டு எறங்கிடு. இது எவன் சொன்ன புத்திமதியோ  இன்னிக்கி அரசியல் தலைவர்களில் இருந்து  ஆன்மீகப் பழங்கள் வரை  கடைப் பிடிக்கிறது  இதைத்தான். எவனுக்கும் கூச்ச நாசம் கிடையாது. தலைவர் பதவிங்கிறதுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு!

அது மாதிரித்தான்  சினிமாவ்லேயும்!

இழுத்துப் போத்திக்கிட்டு நடிப்பாங்க. கூட கொஞ்சம் துட்டு கிடைக்கிதுன்னா  ஆந்திராவ்ல எப்படி வேணும்னாலும்  நடிப்பாங்க. அதை பாத்து நம்மளவங்க இன்னும் அதிகமா துட்டு வெட்டி சென்சாருக்கு  சிக்காம காரியத்தை  காட்டிடுவாங்க.இப்படி பல நடிகைகள் உண்டு! ஆரம்பத்தில சான்ஸ் கேட்டுவந்தப்ப  எந்தெந்த ஆளுங்க இடைஞ்சலா  இருந்தாங்களோ  அவங்களையெல்லாம் ரெண்டே படம் நடிச்சு முடிச்சு ஹிட் அடிச்சதும் இடைஞ்சல் பண்ணின ஆளுங்கெல்லாம் சரணம் பாட ஆரம்பிச்சிடுவாங்க.இப்படி கொஞ்ச காலம் ஓடும்.

ஆனா நம்ம டாப்சி கதை வேற மாதிரி. தெலுங்கிலும் தமிழிலும் நல்ல கேரக்டர்கள் பண்ணினாலும் அளவோடுதான் கிளாமர் இருந்தது. அதுவும் போதல. தமிழுக்கு புது ஆளுங்க தாராள மனசோடு வந்ததால் இங்க சப்போர்ட்டுக்கும் ஆள் இல்லாமல் போச்சு. ஆந்திரக்கரையோரம் ஒதுங்கி  பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிருக்கு.

அதுக்காக அட்வான்ஸ் படம்தான் இது!

பாப்பா பொழச்சுக்கும்!

திங்கள், 28 டிசம்பர், 2015

ரஜினி உயிர் தப்பிய அதிசயம்.!

முட்டாள்த்தனமான  நம்பிக்கைகளுக்கு இன்றும் அடிமையாகி கிடக்கிறது  தமிழ்ச்சினிமா! பெயர் வைப்பதற்கும்  இயக்குநரை நியமிப்பதற்கும் ஜாதகம்  பார்க்கிற கேவலம் இங்கு உண்டு.

ஒரு காலத்தில் கற்புக்கரசி கண்ணகி பெயரில் ஒரு படம் வந்தது. பி.யூ.சின்னப்பாவும் பி.கண்ணாம்பாவும் நடித்திருந்தது. மதுரையில் அந்த படத்தை திரையிட்டபோது  தியேட்டரில் பெருந் தீ. கொட்டகை முழுவதும்  நாசமாகியது.மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் இன்னும் தணியாததால் அந்த தியேட்டர் எரிந்து நாசமாகியதாக  ஊரே பேசியது. தமிழகமும் நம்பியது.

உக்கிரமான கடவுளர்களின் பெயரில் படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் என்பதைவிட அச்சப்பட்டனர் என்று சொல்வதே சரியாகும்.
 கண்ணகி பட நிகழ்வுக்கு பின்னர் நெடுங்காலம் கடந்து  பத்ரகாளி என்கிற பெயரில் ஒருவர் படம் தயாரித்தார். சிவகுமாரும் ராணி சந்திராவும் நடித்திருந்தனர். படம் முழுமை பெறுவதற்குள்  ராணி சந்திரா விமான விபத்தில் சிக்கி மாண்டு போனார்.

முன்னை  விட கோடம்பாக்கத்துக்கு  நம்பிக்கை அதிகமாகியது. காளி  என்றாலே கதறி சிதறினார்கள் தயாரிப்பாளர்கள்..ஆனாலும் சிலர் விதி விளக்காக இருப்பார்கள் அல்லவா!

அவர்களில் ஒருவர்தான்  மலையாள இயக்குநர் ஐ.வி.சசி.! நடிகை சீமாவை  நேசித்து கரம் பற்றியவர்,

அவருக்கே உரிய தைரியம்.' காளி" என்கிற பெயரில்  படம் எடுக்க வைத்தது. நாயகனாக நடித்தவர் ரஜினிகாந்த். அன்றைய  நிலையில் அவர் அத்தகைய நம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்ததில்லை.சற்று  முரட்டுத்தனமாகவும்  இருப்பார்.

சென்னையை ஒட்டிய பகுதியில் குதிரைகளுடன் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கினார் சசி.! திடீரென தீ பற்றியது. பற்றிய தீயில் குதிரைகள் சில கருகின. கரும் புகை சூழ்ந்ததில் ரஜினி என்ன ஆனார் என்பதே  தெரியவில்லை.மயக்கமுற்ற அவரை ஸ்டண்ட் வீரர்கள்  தூக்கிகொண்டு  வந்தனர். பலருக்கு நெருப்புக்காயம். கோடம்பாக்கமே கலங்கிப் போனது.

எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் காளி  பட  தீ விபத்தை  கோலிவுட்டும்  மறக்கவில்லை.வளரும் இன்றைய நடிகர்களும்  மறக்கவில்லை..கபாலிக்கு  முன்னதாக பரிசீலிக்கப்பட்ட பெயர் காளிதான். கார்த்தி  நடிப்பதாக இருந்த இன்னொரு படத்தின் பெயரும் காளி தான்.  உக்கிர காளியின் பெயரை வைத்தால்  என்ன நடக்குமோ என்கிற அச்சம் அவர்களை  பெயர் மாற்ற வைத்துவிட்டது..

கண்ணகி என்கிற பெயர் மட்டுமல்ல அவரது சிலை கூட சில காலம் சென்னையில்  இருட்டறையில் வைக்கப்பட்ட வரலாறையும் மறக்க இயலாது.

இனி அடுத்து  விஜயகாந்த் சுடப்பட்ட  நிகழ்வை  பார்க்கலாம்.

---நன்றி. ராணி  வார இதழ்.


   

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

விபத்துகளில் சிக்கிய வி.ஐ.பி .நடிகர்கள்.

ஜாலங்கள் நிறைந்தது சினிமா. நாயக நடிகர்களும் சரி. வில்லன் நடிகர்களும் சரி விபத்துகளை சந்திக்காதவர்களே  இருக்க முடியாது.. இவ்வளவுக்கும்  அவர்களுக்கு  டூப்  இருக்கவே  செய்வார்கள். அதிகம் காயப்ப்படுபவர்களும்  அவர்கள்தான்.

உயிருக்கு உத்திரவாதம்  என்பது இல்லை.

ஆனால் பெயரும் புகழும்  நடிகர்களுக்குதான்!

சில நடிகர்கள் விதிவிலக்கு.

வரம் கிரம் வாங்கி வந்திருப்பாரோ என்னவோ,! தல அஜித்துக்கு  ஆஸ்பத்திரி  ராசி!  அவர் உடம்பில் கத்தி வைக்காத இடமே இல்லை.சீறி சென்ற காரில்  பாய்ந்து , பிடி நழுவி  சாலையில் இழுத்து செல்லப்பட்டு  முட்டி கிழிந்தது.
சிகிச்சையில் பிளேட் வைக்கப்பட்டது. அந்த பிளேட் தான் நடனம் ஆடும்போது முறிந்து  வீட்டில்  படுக்கவைத்திருக்கிறது.

குறைந்தது ஆறு மாதமாவது  ஓய்வு வேண்டும்.

இன்பக்கனவு  நாடகத்தில்  குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி சுற்றுவது மக்கள் திலகத்தின் இயல்பு.அப்படி ஒரு நாள் தூக்கி சுற்றியபோது  மழுக்கென சப்தம். பாலன்ஸ் தவறிவிட்டது. எம்.ஜி.ஆர் .கீழே கிடக்கிறார். அவர் மீது குண்டுமணி! எம்.ஜி.ஆரின்  காலில் எலும்பு முறிவு. மாதக்கணக்கில் ஓய்வு!

கேரளாவில்  தச்சோளியம்பு  என்கிற படத்தின் படப்பிடிப்பு. நடிகர்திலகம் சிவாஜி கணேசன்  கையில் கேடயமும் மற்றொரு கையில் வாளுமாக  மோதுகிறார்.  பாறை தடுக்கி விழ  கையில் எலும்பு  முறிவு. பிளேட் வைத்துவிட்டார்கள். வீட்டில் ஓய்வில் இருந்த அவரை பார்க்க வந்தார்   எம்.ஜி.ஆர்.

'தம்பி ! ஸ்டுடியோவில்  கிளாப்ஸ் தட்டி நடிப்பதை விட மக்களிடம் கிளாப்ஸ் வாங்குவதுதான் கஷ்டம். ஆனால் அதுதான் உனக்கு சுலபம். அதுக்காக ரிஸ்க்  எடுக்கக்கூடாது" என்று அட்வைஸ் பண்ணினார்.

"அது சரிண்ணே...கையில் போட்டிருக்கிற கட்டு கூட  எனக்கு பெரிசா தெரியல. ஆனால் உள்ளே அரிக்கிதுண்ணே! எப்படி  சொரியிறதுன்னு தெரியல!"

 'கோழி  இறகை உள்ளே விட்டு லேசா தடவி விடு சுகமா இருக்கும்" என்று  ஐடியா கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இந்த சம்பவத்தை பலதடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்  நடிகர்திலகம்.

எலும்பு முறிவுக்கு பின்னர் வீட்டுக்கு  வந்த  சிவாஜியிடம்  செய்தி போடும்  நோக்கத்துடன்  போனேன்.

''எப்படிண்ணே இந்த ஆக்சிடென்ட்  நடந்துச்சு?" என்று கேட்டேன்.

மேலும் கீழும் பார்த்தார். '' வேணும்னா விழுந்து காட்டவா? இதுவரை  வர்றவனெல்லாம்  இப்படித்தாண்டா  கேக்கிறானுக. நீ நூத்தி சொச்சமாவது  ஆளு! என்னால  முடியலடா ராசா! " சிரிக்காமல்  சொல்கிறார்  திலகம்.

"அதுக்கில்லேண்ணே! இதுவரை என்கிட்டே  எவ்வளவோ பேர் கேட்டுட்டாய்ங்க!"

'' அத்தனைபேரையும் எங்கிட்ட அனுப்பி வையி!  டே.. நீ அப்படி  எழுதுனாலும் எழுதிடுவே  படுவா! அண்ணன்  வேலை வெட்டி இல்லாம  இருக்கிறதா  நெனச்சிடப் போறாங்க." என்றார்  சிரித்தபடியே!

இப்படி  எத்தனையோ  இருக்கின்றன.

அடுத்து  சூப்பர் ஸ்டார்  உயிர் தப்பிய  சம்பவம்....   நன்றி. ராணி  வார இதழ்.

சனி, 26 டிசம்பர், 2015

நடிகையை விரட்டிய இயக்குநர்....

சினிமா என்பது சூதாட்டமாக இருக்கலாம்.வெற்றி என்பது எவர்க்குமே  உறுதி  இல்லை. சூப்பர்ஸ்டார்  ரஜினி நடித்த படமே நட்டம் என்று சொல்லி இழப்பீடு  கேட்பதற்கும் தயாராகவே  இருக்கிறார்கள். மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் வந்த பிறகு ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டுவதற்கே பீம புஷ்டி அல்வா  சாப்பிடவேண்டியதாக இருக்கிறது.

இப்படியெல்லாம் உண்மை நிலைமை இருந்தாலும் உல்லாச வாழ்க்கை என்பது சினிமாக்காரர்களுக்கு  மட்டுமே உரியதாக இருக்கிறது. அவர்கள்  மது மாது சுகம் என மகிழ்ச்சியாகவே  வாழ்கிறார்கள். சேர்த்த பணத்தை சேமிப்புகளில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.சிலர்  அதீத நம்பிக்கை  காரணமாக  சினிமாவில் முதலீடு செய்து ஜெயிக்கிறார்கள். பலர் தோற்கிறார்கள்.இதெல்லாம் சினிமாவில் சாதாரணம் என்றாகிவிட்டது.

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்தவர்கள் லட்சாதிபதியாக  வாழ்வதற்கும் தயாராக இருப்பதில்லை.அவர்களால் ஏழையாக கண்ணீர் விட்டு நடிக்க இயலுமே தவிர வாழ முடியாது.ஏழையாகிவிட்டோமே என்கிற நினைப்பே  அவர்களை நோயாளியாக்கிவிடும். இப்படி பாயில் படுத்து போய்ச்சேர்ந்தவர்கள் அதிகம் .

உதாரணமாக  ஸ்ரீதேவியை  எடுத்துக்கொள்ளலாம். வயதுக்கு வந்த இரண்டு  பெண்கள்..இந்த நிலையிலும்  கவர்ச்சியாக போஸ் கொடுத்து விளம்பரம்  தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி. வாய்ப்புகளுக்கு வழி வகுத்துக் கொடுத்து  இருக்கிறார். எல்லாமே  பணத்தேவைக்காகத்தானே! இங்கிலிஸ் -விங்கிலிஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு  சிலர் அவரை தேடிவந்தனர். கோடிகளில் பேசியதால் பலர் ஓடிவிட்டார்கள். புலி தயாரிப்பாளர்கள்  ஸ்ரீதேவியின் வக்கீல்  நோட்டிசுக்கு ரகசியமாக  வழி  தேடிக்கொண்டுவிட்டனர்

முதிர்ந்தாலும்  கனவுக்கன்னி  என்கிற  பட்டத்தை துறக்க மனமில்லை.

அது அவரின்  உறுதியை மட்டுமே  காட்டுகிறது. தோற்றமோ?

சரி அது  ஸ்ரீதேவி மேட்டர்.

நம்ம  ஆந்திரா பக்கம் வந்தால்  பளிச்சென கண்ணில்  மின்னல் வெட்டுகிறது.

பூரி ஜெகநாத் ..ஆந்திராவின்  பெரிய இயக்குநர். இவரும்  நடிகை சார்மியும்  நல்ல நட்புடன்  இருந்து வந்தார்கள். திடீரென நட்பு  புட்டுக்கொண்டுவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக மனைவி லாவண்யாவுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு போகாத பூரி தற்போது தனது அடுத்த படத்துக்காக மனைவியை அழைத்துக்கொண்டு  பாரின் பறக்கிறாராம். தன ஆபிஸ் பக்கமே தலை காட்டக்கூடாது என்று சார்மியை எச்சரித்து  அனுப்பிவிட்டாராம்.

இப்படியும்  வாழத்தானே செய்கிறார்கள்.
.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நினைத்துப் பார்க்கிறேன்........

ஒவ்வொரு நாள் விடியலும் அவன் உயிர்ப்பித்திருப்பதை உறுதி செய்கிற நாள் தானே!

இன்றைய விடியலும் என்னை உறுதி செய்தது.

தனுஷ்கோடி புண்ணிய பூமி என்பார்கள்.அது என்ன பாவம் செய்திருந்ததோ  இயற்கை காவு வாங்கிவிட்டது. கடும் புயலின் சீற்றத்துக்கு இறையாகி விட்டது.தடம் தெரியாமல் போனது அந்த புண்ணியபூமி..நான் செய்தியாளனாக உருவு கொண்டது அந்த 1962. ம் ஆண்டில்தான்.2015- முடியப்போகிறது.நான் பத்திரிகையாளனாக பணிசெய்துகொண்டிருப்பது இன்னமும் தொடர்கிறது.52 ஆண்டுகளாக !

இந்த துறையை விட்டு வேறு துறையில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதால் போகாமல் இருந்துவிட்டேனா .....?

தெரியவில்லை.இடையில் பல ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக வாழ்ந்ததால் நேர்ந்த விபத்தா?

அல்லது மனைவி மதுரையிலும் நான் சென்னையிலும் வாழ்ந்த அந்த கொடிய இடைவேளை காரணமாக?

சொல்லத்தெரியவில்லை. இன்று சொந்தமாக எதுவும் இல்லை.வீடு இல்லை.மனைவியும் இறந்துவிட்டார்.பிள்ளைகளும் தனித்தனியாக!

நான் இந்த வயதிலும் வேலைக்கு செல்வது எனது இறுதிப் பயண செலவுக்கும் அதுவரை நான் உயிர் வாழ்வதற்கும் தான்! வீடு கார் மனை போன்றவைக்காக அல்ல. இன்றுவரை  என்னுடன்  இணைந்து பயணிப்பது ஐந்து ஆண்டுகளுக்கு  முன்னர்  வாங்கிய ஆக்சஸ்  ஸ்கூட்டர் தான்!

நான் மகிழ்ச்சியாக இருப்பது எனது பிள்ளைகள்  நல்லவர்களாக  இருப்பதால்தான்! நான் தனியாக வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை என்றாலும் எனது  விருப்பம் அதுவல்லவே...!

திரை உலகிலும் அரசியல் உலகிலும்  முன்னணியாக இருந்தவர்களுடன்  எனது பத்திரிக்கை பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர்  ராஜாஜி,பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியவர் பக்தவத்சலம், இன்றைய முதல்வர்  ஜெயலலிதா  எம்.ஜி.ஆர்,, சிவாஜி, கமல்,ரஜினி, சிவகுமார் ,பாரதிராஜா பாலுமகேந்திரா உள்பட இன்றைய முன்னணி நடிகர்கள் நடிகைகள், கவிப்பேரரசு வைரமுத்து  ஆகியோருடன்  பழகி பகிர்ந்ததே  பெருமை. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று மாவீரன் தமிழின காவலன் பிரபாகருடன்  ஓராண்டு காலம் பழகியிருக்கிறேன்.நான் பெற்ற விருதுகளில் இதுவே உயர்ந்த விருது..

எனது நினைவுகளில் எவ்வளவோ பொதிந்து உள்ளன.

எழுதும் எண்ணமும் இருக்கிறது.

மூலதனம் கிடைக்கும் வரை காத்திருப்பேன்

நல்லதே நடக்கும்.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

வெளுத்து வாங்கிய மழை.....

நாலு நாட்களாக  ஆபிசுக்கு செல்லவே இல்லை..வீட்டைச்சுற்றி மழை வெள்ளம் ! சிற்றாறாக ஓடுகிறது!. என்னுடைய ஸ்கூட்டரும் மக்கர் பண்ணுகிறது.பாவம்....  அதுவும் ஐம்பதாயிரம் கிலோ மீட்டர் வரை  ஓடி களைத்து இருக்கிறது ..அடித்து உதைத்து  கிளப்பினால் அது   என்னை வஞ்சித்து விடலாம் .பாதியிலேயே இந்த  படுபாவியை கடும் மழையில் தள்ளவைத்துவிடலாம்.

பயமாக இருந்தது.

மழையும் விடுவதாக இல்லை.வீட்டை பூட்டிவிட்டு வாசலில் நின்றபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

''என்ன சார் .மழைக்கு பயந்து வீட்டிலேயே செட்டில் ஆகப் போறிங்களா? ஒய்பும் வீட்டில  இல்லையே! லஞ்சுக்கு இன்னிக்கி  லங்கனம்தானா?'

அடுத்த வீட்டு சுவாமிநாதன் காரை விட்டு இறங்காமலேயே  வாசலில்  காரை நிறுத்திக்கொண்டு   கேட்டார். ஜாலியானவர்.வருமானம் அவ்வளாக  இல்லாவிட்டாலும் சொந்தக் கார்,வீடு என வாழ்கிறவர். அடிக்கடி மனைவியுடன் சண்டை .மாமி இப்போதும்  வீட்டில் இல்லை.மதுரைக்குப் போய் இருக்கிறாள்...பிறந்தாத்து பைத்தியம். மாமி ஊரில் இல்லாத நேரங்களில் அவருக்கு  ரெமி மார்ட்டின் தான் உதவி. இரண்டே இரண்டு பெக்.லிமிட்  தாண்ட மாட்டார்.

'பைக் கிளம்பலே. .போராடிப் பார்த்தேன் .ஸ்ட்ரைக் பண்ணுது.  அதான்  லீவு  போடலாமான்னு பார்க்கிறேன்"  என்றேன்.

''எதுக்கு மிஸ்டர் ராமநாதன் ....வீட்டில எவ்வளவு நேரம்தான்  தனியா   இருப்பிங்க. ஆபீசுக்கு போனாலும் அரட்டை அடிச்சிட்டு நேரத்தை போக்கலாமே.வாங்க வந்து கார்ல ஏறுங்க.வழியில டிராப் பண்றேன் " என்றபடியே காரின் கதவை திறந்தார்.

அமர்ந்ததும் மெதுவாக கார் நகர்ந்தது. 'மாமி போன் பண்ணலியா?"

நேரம் போகணுமே! அதான் பேச்சுக் கொடுத்தேன் .

'பேசி என்ன ஆகப் போறது?' சலித்துக் கொண்டவர் 'நேத்திக்கி நைட்ல பேசுனா!
மழை பெய்யறதேன்னு பெக்கை ஏத்திடாதிங்கோன்னு அட்வைஸ்  பண்ணினா....சாப்பாடு பத்தி ஒரு வார்த்தை கூட  கேட்கலே சார்...... ராட்சசி சார் அவ.!'என்றார் வெறுப்புடன்,

'விடுங்க சார்.நாமல்லாம் சினிமா  ஸ்கிரீன் மாதிரி.சோகப்படமும் ஓடும் காதல் பட மும் ஓடும்.ஆக்ஷன் பட மும் ஓடும்!' என்றேன். எதோ தத்துவம் சொன்னமாதிரி .சிரிப்பு..

ஆபிசில் இறக்கிவிட்டு போனார்.

மாலை ஐந்து மணி இருக்கலாம். கை பேசியில்
 'டண்டணக்கா" அதுதான் என்னுடைய ரிங் டோன்.

''ராமநாதன்....நாந்தான் சுவாமிநாதன்.ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கேன்." என்றார். குரல் மிகவும் பலவீனமாக இருந்தது..

எனக்கோ கன்னா பின்னாவென ஆக்சிடென்ட்  சீன்கள் கற்பனையில்.!

பதறினேன்... 'என்ன சார் ஆச்சு? ஒய்புக்கு சொல்லியாச்சா?"

'அவ கெடக்கிறா நான்-சென்ஸ்.! என்ன பண்றது  உதவிக்கு ஆள் வேணுமே.அதான்   சொல்லித் தொலைச்சிட்டேன்.ஆபீஸ்ல  லிப்ட் ஒர்க் பண்ணலே.... மாடி ஏறிப் போறபோது  கால் சிலிப் ஆகி உருண்டுட்டேன். ரைட் லெக் பிராக்சர்.......ஆ வலிக்கிதே..."

'சார் ..ஸ்ட்ரஸ் பண்ணிக்காதிங்க. இன்னும் அரை மணி நேரத்தில அங்கிருப்பேன்"------பெர்மிஷன் போட்டுவிட்டுப போனேன்.

வலது காலில் பெரிய கட்டு.தூளி ஆடியது மாதிரி!

'சோதனைதான் சார்! அதுவும் உங்கள மாதிரி நல்லவங்களுக்கு இப்படி நடக்ககூடாது சார். டாக்டர் என்ன சொன்னார்?"

'இன்னும் ஒரு மாதத்தில நடக்க வைக்கிறதா பிராமிஸ் பண்றார். நம்பித்தானே ஆகணும்! நல்லா கவனிக்கிறார். சிடு மூஞ்சித்தனமான நர்சை போடாம  நல்ல நர்சாகத்தான் போட்டிருக்கார்.ஆறுதலா இருக்கு ராமநாதன்."என்று லேசாக  சிரித்தார்.

மனித இயல்புதானே!

டாக்டர் சொன்னபடியே அவரை ஒரே மாதத்தில்  நடக்கவைத்துவிட்டார்.

சுவாமிநாதனிடம் இப்போது  கார் இல்லை.! என் ஸ்கூட்டரின்  பில்லியன் ரைடர்  அவர்தான்!  

செவ்வாய், 24 நவம்பர், 2015

அதிதி கவர்ச்சி நடிகையாக மாறியது....ஏன்?

பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றம்.

குடும்பக் குத்துவிளக்காக நடிக்க ஆசைப்பட்டார் அதிதிராவ். ஆனால் குத்தாட்டம் போடும் அளவுக்கு அவரை இறக்கிவிட்டிருக்கிறது  தெலுகு சினிமா!

அவரை இந்த அளவுக்கு மாற்றியது எது?

தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு!

காரத்தை மட்டுமல்ல ,கவர்ச்சியையும் அதே அளவுக்கு விரும்புகிறவர்கள்.

பிற மொழிகளில் கட்டுப்பெட்டியாக நடிக்கும் நடிகைகளையும் அதிக பணம்  கொடுத்து கவர்ச்சிப் பெட்டிக்குள்  அடக்கி விடுகிறார்கள்..

பணத்தின் எடை அதிகரிக்க அதிகரிக்க நடிகையின் உடம்பில் இருக்கும் ஆடைகளும் குறைகிறது. அளவும் குறைகிறது.

கவர்ச்சியின் உச்சம் எது என தீர்மானிக்கும் தணிக்கைக்குழுவின் கண்களுக்கும் கண்புரை வந்துவிடுகிறது..

என்ன செய்வது? ரசிகர்களுக்கு விருந்து என்பதாக சொல்லமுடியுமா?

நடிகைகளின் கட்டுடல் ரகசியம்.

கட்டான உடல் அமைப்புக் கொண்ட நடிகைகளைப் பார்த்ததுமே கண்களில்  காமம் சுரக்கிறது. ஆனால் வெளியில் சொல்வதற்கு வெட்கம்..

அதனால் அடிக்கடி நடிகைகளின் படத்தை பார்க்க மனது ஏங்குகிறது. தூண்டுகிறது. துவண்டு போகிறது.மஞ்சத்தில்  மயக்கம் !

"இதெல்லாம் கூடாதய்யா"- அறிவுரை சொல்கிறார் அனுஷ்கா. ஆண்களுக்கு  மட்டுமல்ல. பெண்களுக்கும்தான்!

'கட்டுடல் இல்லை என கலங்குகிறாயா பெண்ணே! அதற்கு அழகு நிலையம் செல்லத் தேவையில்லை.மன ரீதியான அணுகுமுறைதான் சிறந்த சிகிச்சை!

குண்டாகிவிட்டோமே என நினைத்து கடுமையான உணவுக் கட்டுப்பாடு. இது நல்லதல்ல.

முதலில் உன் உடலைக் காதலிக்கத் தொடங்கு! உடலின் தேவைகளை தெரிந்து கொள்! அதற்கேற்ற பயிற்சிகளைத் தொடங்கு!

ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகளை இஞ்சி இடுப்பழகி படத்தின் வழியாக  சொல்லியிருக்கிறார் ஆர்யா. மனைவிகளின் கனவுக் கதாநாயகனாக இருக்கவேண்டும் எப்படி என்பதை அவரின் கேரக்டர் வழியாக காட்டியிருக்கிறார்.

இருபது கிலோ எடை அதிகரித்திருந்தேன்.அதை குறைப்பதற்கு  அறுவை சிகிச்சையை நாடப்போவதிலை. எனக்கு எப்படி குறைக்கவேண்டும் என்பது தெரியும் .எடை கூடியதால் கால்களில் வலி . தற்போது எட்டு கிலோ குறைந்திருக்கிறது"

இப்படி சொல்கிறார் அனுஷ்கா.

திங்கள், 23 நவம்பர், 2015

சென்னையில் அரக்கத்தனமான மழை.

தீபாவளியை கொண்டாடிய மகிழ்ச்சி நீடிக்கக்கூடாது என்று இயற்கை எண்ணியதோ என்னவோ! ஊழிக்கூத்து ஆடிவிட்டது.

அழிப்பதற்கு இனி ஒன்றுமில்லை என ஓய்வு பெறுமா,இல்லை தண்டித்தது  போதாது என பொழியுமா என்பது அந்த ரமணனுக்கே வெளிச்சம்.!

'சந்து வழியா போகாதிங்க சார்"----எதிரில் வந்த ஆட்டோ டிரைவர் சொன்னார்.

சரி என்று நன்றி சொல்லிவிட்டு வடபழநி என்.எஸ்.கே.சாலையை நோக்கி பயணம். அருணாசலம் சாலையிலேயே பல பள்ளங்களை முட்டி எழுந்து விட்டு எனது ஸ்கூட்டர் காமராஜர் சிலையை கடந்து விட்டது.எப்படியோ நான் விழ வில்லை .வடபழநி பஸ்  நிலையம் செல்வதற்கே இருபது நிமிடம் ஆகிவிட்டது. பஸ்கள் கடந்து செல்லும் போதெல்லாம் அலையின் வீச்சு வண்டியை அசைத்ததுடன் பேண்ட்டையும் நனைத்தது.

சரி இதையெல்லாம் பார்த்தால் முடியுமா எப்படியாவது எழும்பூர் ஆபிஸ் போயாகவேண்டும்.

படகு இருந்தால்தான் கடந்து செல்ல முடியும் என்கிற நிலையில் பஸ்நிலையம் மிதக்கிறது.கழிவு நீர் கலந்து கருப்பு நிறமுடன் இருந்தது.ஆனால் விஜயா மருத்துவமனையை கடப்பதற்குள் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்ததைப் போன்ற வலி. அத்தனை பள்ளங்களை மழைவெள்ளம் மறைத்து வைத்திருக்கிறது.

சத்தியமுடன் சொல்கிறேன். செத்த பிணத்தைக் கூட கொண்டு செல்ல முடியாது.போக்குவரத்து நெரிசல் ரத்த அழுத்த நோயாளிகளை  ஒரு கை பார்க்காமல் விடாது.அரசும் மா நரகாட்சியும் லட்சக்கணக்கான மக்களின் வாயில் அரைபடாமல் தப்பவே முடியாது. ஜல்லிக்கல்லில் தாரை தொட்டு சாலைகளை போட்டிருக்கிறார்கள். ஜல்லிக்கல்லில் சக்கரம் செல்லும்போதெல்லாம் தடம் தடுமாறுகிறது.  நூறு அடி சாலையை அடைந்ததும் இடது பக்கம் திரும்பமுடியவில்லை.வெள்ளம்.!

ஆபீஸ் செல்வதா வீடு திரும்புவதா?

ஆட்டோக்காரர் 'அவ்ளோவ்  தூரம்லாம் போவாதே சார்.ரிஸ்க்" என்று எச்சரிக்கவே ஆபிசுக்கு லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு  திரும்ப முயற்சித்தால்  முடியவில்லை.

போக்குவரத்து நெரிசல். காலை எட்டு நாற்பத்தைந்துக்கு  கிளம்பியவன் ஒரு கிலோமீட்டரை க் கூட கடக்கமுடியவில்லை என்றால்?

சென்னை மாநகரம் எவ்வளவு சிதைந்திருக்கிறது !

ஞாயிறு, 8 நவம்பர், 2015

தீபாவளியை கொண்டாடினால் இழுக்கா?

மதிவாணன் வந்தான். மனதில் எதோ கவலை  இருப்பதை முகம் காட்டியது,

'என்னப்பா ,டாஸ்மாக் கடையை மூடிட்டானா?'-அவனின் கவலை  அதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்!

'இல்லை நண்பா! தீபாவளி நம்முடைய பண்டிகை இல்லையாமே? உண்மையா?"

'ஆமா,அதனால உனக்கு என்ன பிரச்னை? டிரஸ் எடுக்காம விட்டுட்டியா? கொண்டாடவேணாம்னு வீட்டில சொல்லிட்டியா?"

'அப்படியெல்லாம் இல்ல. தமிழர் பண்டிகை இல்லைங்கிறத இப்பத்தான்  ஒருத்தன் என்கிட்டே சொன்னான்.எனக்கு என்னவோ மாதிரி ஆயிருச்சு!நெஞ்சில நெருஞ்சி முள்ளை போட்டு அதுக்கு மேல பனியனை போட்டுக்கிட்ட மாதிரி ஆயிருச்சு!" என்றவனை மேலும் கீழுமாக  பார்த்தேன்..
உண்மையாகவே வருத்தப்படுகிறானா அல்லது நடிக்கிறானா என்பது தெரியவில்லை.

பிறகெதுக்கு இப்படி ஒரு கவலை? தீபாவளி  தமிழர் விழா இல்லை என்று மேடைகளில் கிழிய கிழிய பேசியவர்களெல்லாம்  மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருக்கிறபோது  மதிவாணனுக்கு மட்டும் என்ன வந்தது..

'நம்ம விழாவாக  இல்லேன்னா அது எப்படி இங்கே வந்தது? என்னால நம்ப முடியல நண்பா!எத்தனை வருஷமா கொண்டாடிட்டு வர்றோம்.அப்ப நம்ம  மூதாதையரெல்லாம்  முட்டாள்களா?'

'ஆமா! பதினாறாம் நூற்றாண்டிலிருந்து  முட்டாள்களாக அடிமைகளாக  வாழ்ந்திட்டிருக்கிறோம்..அதனாலென்ன அந்த வாழ்க்கையிலும் ஒரு சுகம் இருக்குல்ல. புது துணிகள்,வகை வகையான பலகாரங்கள்.பட்டாசுகள். புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க மாமனார் வீட்டில போய் அவங்க தலையில  செலவை கட்டலாம்.இப்படி இருக்குல்ல.அதெல்லாம் கிளுகிளுப்பா இருக்கிறதாலதான் காலம் காலமா கொண்டாடுறோம். துணிக்கடைகளில்  கோடிக்கணக்கில் விற்பனையாகுதுள்ள.பரம ஏழையிலிருந்து பணக்காரன் வரை அவனவன் தகுதிக்கு கொண்டாடிறோம்ல!நமக்கு வசதியா இருக்கிற எதையும் எடுத்து முதுகை சொறிஞ்சிக்கலாம்.அது கக்கூஸ் கழுவுறதா இருந்தாலும் கவலைப்படுறதில்ல..பழகிப்போச்சுப்பா! கலர் கலரா வெடிக்கிற மத்தாப்புல தமிழன் அவன் மானத்தை சேர்த்து கொளுத்திட்டான்."

'இந்த தீபாவளி எப்படி இங்க வந்தது?'

'முத முதலாக மதுரைக்குத்தான் வந்தது.விஜயநகரத்திலிருந்து  மதுரைக்கு  குடியேறிய சவுராஷ்டிரர்களால் மதுரையை ஆண்ட நாயக்கர்களாலும் ,தஞ்சை ,செஞ்சி நாயக்கர்களாலும்  தீபாவளி புகுத்தப்பட்டது. தீபாவளி பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடவேயில்லை.சென்னை,காஞ்சி,திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தீபாவளியன்று புதுத்துணிகள் போடும் பழக்கம்  அண்மைக்காலம் வரை இருந்ததில்லை என்கிறார் தமிழ் அறிஞர் அ.கி.பரந்தாமனார்  பதிவு செய்திருக்கிறார்..அது சரி உன் கவலை என்ன? அத சொல்லு!"

'வெள்ளைப்பாண்டியிடம் தீபாவளி நம்ம பண்டிகைதான்னு பந்தயம் கட்டினேன். அதுக்குதான் " என்றான் மதிவாணன்.

இப்படித்தான் நாம் உருப்படமுடியாம போயிட்டோம்.

சனி, 31 அக்டோபர், 2015

நடிகைகள் பலவிதம்....!

என்னத்த சொல்றது போங்க. நடிககைகளை  பத்தி பலவிதமான கிசுகிசுக்களை  சினிமா நிருபர்கள் போட்டு கிழிக்கிறார்கள். .அதுக்கேத்தமாதிரிதான்  நடிகைகளும் இருக்காங்களான்னு  சில அப்பாவி அணில்கள் கிடைத்த பழக் கொட்டைகளை கொறிப்பது எல்லா காலங்களிலும் நடப்பதுதான். நடிகை ரேணு தேசாய் தெரியுமா?

ஆந்திர சூப்பர்ஸ்டார்களில் ஒருத்தரான பவனின் முன்னாள் மனைவி. கணவனை கை கழுவினாலும் சினிமாவை விட்டு விலகல.இவரு எந்த  மரத்துக்கு அடியில உக்காந்தார்னு தெரியல. ஞான ஒளி ஏணி போட்டு இறங்கி தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் போட்டிருக்கு.

''என்னமோ தெரியல. எனக்கு காலம்பற  எந்திரிச்சி கோவிலுக்கு போயி சாமியை கும்பிட்டாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.நான் தீவிர பக்தை  இல்லைன்னாலும்  கடவுள் சந்நிதானத்துக்கு போனதும் எதோ ஒரு சக்தி எனக்குள்ள  வந்திருது. திருமலை கோவிலுக்கு போகணும்" என்கிறார்  ரேணு.

அதென்னமோ தெரியல. கருப்பசாமி,பத்திரகாளி கோவிலுக்கு எந்த சினிமாக்காரரும் போனதா தெரியல. ஏழுமலையானை கும்பிடறுதுன்னா கோடிகளை கொட்டிக் கொடுக்கிறாங்க.அது கருப்பா வெள்ளையான்னு அந்த எழுமலையானுக்கு தெரியுமாங்கிறதும் டவுட்டுதான்!

இது இப்படின்னா இன்னொரு நடிகை ராகுல் பிரித் சிங்னு ஒரு நடிகை. இவங்கதான் இப்ப ஆந்திர ரசிகர்களுக்கு லட்டு.மத்த நடிகைகளுக்கு வேட்டு. முன்னணி நடிகைகள் எல்லோருக்கும் ஒவ்வாமை.தயாரிப்பாளர்கள் எல்லாரும்  கால்ஷீட் கிடைக்காதான்னு பசியாவரம் வாங்கி வச்சிருக்காங்க.  ஐம்பது லட்சம் வாங்கிக்கிட்டிருந்த ராகுல் இப்ப ஒன்னரை கோடி கேட்கிறார். கவர்ச்சிக்கு எல்லை இல்லை என்பதால் நடிகர்களும் இவரையே  சிபாரிசு  செய்கிறார்கள்..

நடிகைகள் பலவிதமுங்க.!

செவ்வாய், 13 அக்டோபர், 2015

ராஜ்கிரண் அரசியல் வாதியா?

சிவப்பு படத்தின் பத்திரிகையாளருக்கான தனிப்பட்ட காட்சி!

சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் நடந்தது. உணர்வலைகள் முட்டி மோதிய நிலையில் படம் முடிந்தது. நாயகனான ராஜ்கிரண் பேச வந்தார் .

அந்த மனிதரின் மனதில் அத்தனை ஆவேசம் இருப்பதை அன்றுதான் பார்க்க முடிந்தது..அவர் அரசியல் வாதி அல்லர்.ஆவேசப்பட்டுப் பேசி வாக்காளர்களை அள்ளிக்கொண்டு போகவேண்டிய அவசியமும் இல்லை.கண்ணீர் விட்டு கதறி தாய் குலத்தின் ஆதரவை பெறவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லாதவர்.

ஆனால் அவர் தமிழர் . நடிகர் என்பதையும் தாண்டி இன,மான உணர்வு மிகுந்தவர் என்பதை அன்று காண  முடிந்தது. இயக்குநர் மணிவண்ணன் இல்லாது போய்விட்டாரே  வருத்தமும் இல்லாது போகவில்லை.படமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கதையாகவே இருக்கிறது.  உணர்வற்ற தமிழர்களை நினைத்து அவர் கண்ணீர் விட்டபோது சட்டம் நம் கையில் இல்லாது போயிற்றே என்கிற கோபம் வராமல் இல்லை.

என்ன செய்வது ....கையறுநிலை!

"லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள்.  பல்லாயிரக் கணக்கான போராளிகளை கொல்லப்பட்டனர்.தர்மம், சோசலிசம் என பேசிவருகிற இந்தியாவும் மேலைநாடுகளுடன் சேர்ந்துகொண்டு இனப் படுகொலையை நடத்தியது.நமது ஊடகங்களால் உண்மையை சொல்ல முடியவில்லை.பிரச்னைகளை சொல்லி அழக்கூட முடியவில்லை.இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை காரணமாக சினிமாவிலும் சொல்லமுடியவில்லை.ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்  என்று சொல்லிவிட்டு அதை விசாரிக்கும் உரிமையை அந்த திருடர்களிடமே விட்டிருக்கிறார்கள்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்களை உடைத்து நொறுக்கிய ,பவுத்தமே தெரியாத ராஜபக்சேவுக்கு திருப்பதி பெருமாளை தரிசிக்க சிவப்பு கம்பள வரவேற்பு .இதை சினிமாவில் சொல்ல முடியவில்லை.தமிழ் இனம் முற்றிலும் இற்றுப்போகவேண்டும் என்பதற்காக விதவைகளாகவும் ஆதரவு இல்லாமல் வாழ்கிற தமிழ்ப்பெண்களை சிங்கள வெறியர்கள் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.தட்டிக் கேட்பதற்கு விடுதலைப்புலிகளும் இல்லை. பிரபாகரனும் இல்லை.இந்திய எல்லையோரங்களில் இருந்து வருகிற அகதிகளுக்கு தமிழகத்தின் குளிர்ப் பிரதேசங்களில் வாழ வலி செய்கிற அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறது.யாரை திருப்தி படுத்த!? தமிழர்களை வாழவிடுங்கள்.அல்லது முடியாது என சொல்லிவிடுங்கள். தயவு செய்து அவர்களை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்" என்று ராஜ்கிரண் சொன்னபோது...

விட்டு வைப்பார்களா அரசியல்வாதிகள் என்றுதான் நினைக்க முடிந்தது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ஆச்சியின் மறைவு...
-----------------------------
ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கோபி சாந்தா என்கிற மனோரமா இன்று நம்மிடையே இல்லை.வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள். அவைகளில் ஒன்றாக நம்முடைய ஆச்சியும்.

தொடர்ந்து படங்களில் அவரை பார்க்க இயலாவிட்டாலும் நம்மிடையே இருந்தார் என்பது ஆறுதலாக இருந்தது.பத்திரிகையாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் அவரை பார்த்து ' ஆச்சி...நான்  தேவிமணி " என அறிமுகம் செய்துகொண்டபோது "என்ன தம்பி,வெளையாடுறியா.இல்ல  நெனவு தப்பிப்போச்சான்னு பார்க்கிறியா?" என என்னை செல்லமாக கடிந்து கொண்டார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக நான் அழைக்கப்பட்டபோது  அவரை  வணங்கிவிட்டுத்தான் கலைஞானி கமல்ஹாசன் அருகிலும் மார்க்கண்டேயன் சிவகுமார் பக்கத்திலும் நின்று கொண்டு விருது பெற்றேன்.

அன்றைய விழாவில் உணர்ச்சி வயப்பட்டு 'இது கலைஞரின்' என்று  தொடங்கியவர் உடனே கலைஞர் கருணாநிதியின் வசனம் என சொல்லிவிட்டு புறநானூற்று வசனத்தை  சொன்ன போது கண்களில் கசிவு. அடுத்து அதே வேகத்தில் சென்னை வழக்கு மொழியில் ஒரு கதையை சொன்னவர்  சபையின் ஆரவாரத்தை கேட்டதாலோ என்னவோ கண்களில் நீர் கோர்த்துவிட்டது. "இப்படியே செத்துப் போனாலும் சந்தோஷம்தான்."என்றதும்  கமலும் சிவகுமாரும் பதறிப்போனார்கள். 'இப்படியெல்லாம் சொல்லகூடாது" என சிவகுமார் கடிந்து கொண்டதும் மேடையில் இருந்த மற்றவர்களும் பதறிப்போனார்கள்..ஆனால் அந்நிகழ்வுக்கு பின்னர் ஒரு வாரம்தான் உயிர் வாழ்ந்தார்..

ஆச்சிக்கு என் மீது அன்பு அதிகம். அவரை சந்திக்கிற போதெல்லாம் 'கழுத்து வலி எப்படி இருக்கு தம்பி' என கேட்க தவறுவதில்லை. இவரைப்போலவே  கேட்கும் இன்னொருவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்!

எனக்கு ஸ்பாண்டலைட்டிஸ் என்கிற கழுத்து வலி இருக்கிறது. கழுத்தில் பட்டை அணிந்தபடி ஆச்சியை சந்தித்த ஒரு நாள் பதறிப்போனார்.

'இதெல்லாம் வேணாம் தம்பி! அப்போலோவில் ஒரு டாக்டர் இருக்கார். அவரைப் போயி நான் சொன்னேன்னு பாரு." என்று சொல்லி பார்க்க வைத்தார். அவரை பார்த்ததின் விளைவு சில பயிற்சிகளை கற்றுக் கொண்டிருக்கிறேன்.உதவுகிற மனப்பான்மை ஆச்சிக்கு நிறைய உண்டு. சொந்த வாழ்க்கையில் காயங்கள் பட்டிருந்தாலும் காலப்போக்கில் அவைகளை மறந்து வாழத் தொடங்கினார்.முன்னிலும் அதிகமாக மனவலிமையை பெற்றிருந்தவர் இன்று இந்துக்களின் நம்பிக்கையின்படி இறைவனடி சேர்ந்திருக்கிறார்.

வியாழன், 17 செப்டம்பர், 2015

தந்தை பெரியாருடன்.....!

மதுரையில் தமிழ்நாடு  நாளிதழில்  செய்தியாளர் பணி!

1970 என நினைவு. செய்தி ஆசிரியர்  எஸ்.டி,ராய்  அழைத்தார்.

'பெரியார்  மதுரை டி.பி.யில் தங்கியிருக்காராம் ..போய் ஒரு பேட்டி  எடுத்திட்டு வாங்க" என்றார்.

பேருந்து  நிலையத்திலிருந்து  அரசரடி செல்லும் வழியில் மதுரை நகராட்சி  கட்டியிருந்த  ட்ராவலர்ஸ் பங்களாவில்தான்  அய்யா தங்கியிருந்தார்.

காலை பதினோரு மணி இருக்கும்..அறைக்கு  வெளியில்  கருஞ்சட்டை தொண்டரிடம்  நான்  இன்னார்  என்பதை சொன்னேன்..உள்ளே  சென்றவர்  உடனே திரும்பிவிட்டார் .அய்யா வரச்சொன்னதாக சொன்னார்.

ஒரு வித அச்சத்துடன்தான்  சென்றேன்.அந்த காலத்தில் கருப்புச்சட்டைக்காரர்கள்  என்றால் பயங்கரவாதிகள் என்கிற அளவுக்கு  காங்கிரஸ்காரர்கள் அச்சுறுத்தி வைத்திருந்தனர்.'கரிமேட்டில் காங்கிரஸ்காரனை குத்திவிட்டார்கள்.வடக்கு மாசி வீதியில்  வெட்டிவிட்டார்கள்' என்பது போன்ற பல செய்திகள்!.  அந்த காலத்தில்  காங். கட்சியினருக்கும்  கருப்புச்சட்டையினருக்கும்  அடிக்கடி மோதல் வரும்.. கம்யூனிஸ்ட் கட்சியினரும்  அவ்வப்போது  மோதிக்கொள்வார்கள். இரண்டு கட்சியினருக்கும்  காங். கட்சி  ஈடு கொடுத்து வந்த காலம்.

அய்யா  என்னை  சிறியவன் என்று  நினைக்காமல் '' வாங்க. தம்பி! நீங்க  பாப்பாரப் பிள்ளையா?" என்று  மரியாதையுடன்  கேட்டார். அருகில்  போடப்பட்டிருந்த  மர நாற்காலியில்  அமர்ந்தேன்.

''அய்யா ,நான் 'நான்-பிராமின்"

''நல்லாருங்க!  நல்லாருங்க. மட்டன்லாம்  சாப்பிடுவிங்களா ?.என் கிட்ட என்ன கேட்கப் போறிங்க?'

  ஏன் அப்படி  கேட்டார்  என்பது  உடனடியாக புரியவில்லை..நான்  நெத்தியில்  பூசியிருந்த  திருநீறு  அவரது  சந்தேகத்துக்கு  காரணமாக  இருக்கலாம்  என  பின்னர்  அறிந்து கொண்டேன்..ஆனாலும்  நான்  கேட்ட எல்லா கேள்விகளுக்கும் தயங்காமல்  பதில் சொன்னார்.

அந்த  நாளினை  என்னால்  மறக்க  இயலாது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

சிக்கலில் சிவாஜி சிலை.

எதிர்பார்த்ததுதான்! ஆனாலும் ஒரு நம்பிக்கை! சிவாஜிக்கு  மணிமண்டபம்  அரசே அமைக்கும் என  முதல்வர்  அறிவித்தபோது  அதன் விதி  சிவாஜி  சிலையின் தலையில் விடியும் என எதிர்பார்க்கவில்லை.

கலைஞர்   தொடங்கிய  பெயர் சொல்லும் திட்டங்கள்  எதையும் புரட்சி தலைவி செயல்பட விட்டதில்லை என்பது  உலகம்  அறிந்தவைதான். வள்ளுவர் கோட்டம்  அழகும்  எழிலும்  இழந்து  நிற்பதன் காரணம்  தெரியாதா?
அற்புதமான  அண்ணா நூலகம் ,ஓமந்தூரார்  கட்டிடம்  இவையெல்லாம்  என்ன நிலையில்  இருக்கிறது  என்பது  தெரியாதா?
இதைப் போலதான் நடிகர் திலகத்தின் சிலையின் நிலையும்!

முன்னொரு தடவை  கண்ணகியின்  சிலை  அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர்  அதே இடத்துக்கு வந்து  சேர்ந்தது. அதைப் போல  சிவாஜியின்  சிலைக்கும் நடக்கலாம்..நடக்காமலும் போகலாம்.

சிவாஜி சிலை மணி மண்டபத்தில்  வைக்கப்படலாம் என்பதே  பெருத்த சந்தேகத்தை  எழுப்பியிருக்கிறது.

மணி மண்டபமாவது வருமா என்பதுதான்!

மணிமண்டப  அறிக்கை  வந்த போது  இருந்த  மகிழ்ச்சி  தற்போது இல்லை.
ஆதரித்து  அறிக்கை  வாசித்தவர்களால் முதல்வரை  கண்டித்து  வாய் திறக்க முடியாது..திறந்தால் எத்தகைய  சிக்கலுக்கு  ஆளாக வேண்டியதிருக்கும் என்பதற்கு  ஈ.வி.கே .எஸ்.இளங்கோவனே  சாட்சியாக இருக்கிறார்.!

அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களே  நிலுவையில் கிடப்பதாக  எதிர்க்கட்சியினர்  சொல்கிறபோது  மணிமண்டபம் மட்டும் எழுந்துவிடுமா?

சந்தேகம்  வரத்தான்  செய்கிறது.

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

கடலோரம் வாங்கிய...........?

முழு நிலவு.,கடலோரம். உப்புக்காத்துன்னாலும்  ஜிலு ஜிலுன்னு உடம்பை  தழுவுது. சிவாஜி சாரை பாத்திட்டு அப்படியே  காரை  வலது பக்கமா திருப்ப சொன்னேன் .வாடகை கார்தான்.. நண்பன் கண்ணதாசன் மகனின் கல்யாண வரவேற்பு  சாந்தோம்  சமுக நலக்கூடத்தில்! ராதிகாவின்  ரடானில்  கண்ணதாசனுக்கு  பி.ஆர்.ஓ.உத்தியோகம்.

டிராபிக் நெருக்கடின்னு  போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தாங்க.
கடலோரமாக  வரிசையாக மீன் கடைகள்.கடலிலிருந்து  திரும்பியவர்கள்  பிடித்து  வந்திருந்த பிரஷ் மீன்கள்.நண்டுகளை பார்த்ததுமே வாங்கிட்டு போகலாம்னு தோனுச்சு!

'விலையும் கம்மிதான் சார்! நல்ல அயிட்டங்களா இருக்கும்."னார் டிரைவர். அவர் அயிட்டம்னு சொன்னது மீனை! தப்பா நினைச்சிடாதிங்க.,

'ரிசப்ஷனுக்கு  போறோம்பா! கார்லயும் வைக்க முடியாது. இன்னொரு  நாளைக்கு  ஆட்டோவ்ல வந்து  வாங்கிக்கிறேன்' னு சொல்லிட்டேன். இருந்தாலும் கண்ணுக்குள்ள நண்டுகள்  டான்ஸ் !

சமுக நலகூடத்தின் வாசலிலேயே  எஸ்.வி.சேகரை  ஒரு குடிமகன்  வழி  மறித்து '' இன்னா  சார். ஒன்ன  பாத்து  எவ்ளோ நாள் ஆச்சு! குடு சார்  ஒரு  குவாட்டருக்கு! அப்படியே  ஊத்திக்கினு  வந்திர்றேன். ரிசப்சன்ல  பிரியாணி  போடுறாங்க.."என்று  வசூலில்  இறங்கியிருந்தார்.  எக்ஸ் எம்.எல் .ஏ. எப்படி என்ன  சொல்லி தப்பிச்சாரோ! மந்திரியே  வந்திருந்தாலும்  மாட்டத்தான்  செஞ்சிருப்பார்.அவங்களுக்கு அது புதுசும் இல்லியே! குவாட்டரும் பிரியாணியும்  வாங்கிக் கொடுத்தவங்கதானே! அவங்களின் பதவியின்  வேருக்கு  ஊத்தி  வளத்திருப்பது   எதுன்னு தெரியாதா என்ன?


 நான்  நிழல்கள் ரவியுடன்  ரிசப்ஷன்  ஹாலுக்கு போயிட்டேன்...

என்னமோ தெரியல. அங்கு போயி  நண்டு  வாங்குற வரைக்கும் எனக்கு  கண்ணுல  நண்டு டான்ஸ்தான்!  

புதன், 26 ஆகஸ்ட், 2015

காமனுக்கு ஆண்டாள் விடுத்த கோரிக்கை!


ஒருவனை ஒருத்தி  காதலிப்பது  தவறில்லை.அது தண்டனைக்குரியதும்  அல்ல.! அந்த  ஒருத்தி அவனை காதலித்தால்!

ஆனால்  ஒருத்தி  கடவுளாக  கருதப்படுவனை  காதலிக்கலாமா?

'அடைந்தால்  மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி " என்று  நடிகர் பி.எஸ் .வீரப்பா  ரேஞ்சுக்கு  ஒரு மனுஷி  'அவனுக்கில்லாமல்  இந்த உடலை  மானுடனுக்கு  தர மாட்டேன்" என சொல்லலாமா?

'என் சாதி  பையனை வேறொரு  சாதி பெண் காதலிப்பதா,கல்யாணம் செய்வதா, வெட்டி வீசு " என்று  கூறு  போடுகிறவர்கள் ஆண்டாள்  வாழ்ந்த   காலத்தில் வாழ்ந்திருந்தால்  என்ன  நடந்திருக்கும்?

ஒன்றும் நடந்திருக்காது.! தற்காலத்தையே  எடுத்துக் கொள்வோம். உயர் சாதி பெண் " நான். அந்த பெருமாளைத்தான்  கல்யாணம் செய்வேன். அவனுக்கின்றி  இந்த உடலை வேறு ஒருவனுக்கு  சொந்தமாக்கமாட்டேன் " என  உண்ணாவிரதம் இருந்தால்  என்ன நடக்கும்?

''ஊனிடை ஆழி  சங்கு  உத்தமர்க்கு என்று
      உன்னித்து  எழுந்த  என் தட முலைகள்
மானிடர்க்கு  என்று பேச்சுப்படில்
    வாழ்கிலேன்  கண்டாய், மன்மதனே"  என்கிறாள்  நாச்சியார்  திருமொழியில்!

"சங்கு சக்கரங்களைத்  திருமேனியில் தாங்கிக்கொண்டிருக்கும் உத்தமனான திருமாலுக்கென்றே உருவான  என் முலைகளை  மனிதர் கை பட  ஒருக்காலும்  சம்மதியேன் " என்கிறாள். ஆண்டாள்.

ஆண்டாளை  வணங்குகிறவர்களின் வீடுகளில்  இப்படியொரு நிலை  எழுமேயானால்  என்ன நடக்கும்?

அந்த பெண்ணை  மன நோய் மருத்துவரிடம்தானே  அழைத்துப் போவார்கள்?




நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம்.

எதிர்பார்த்திராத செய்தி.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெ. இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவார் என எவரும்  எதிர்பார்க்கவில்லை.அனைவரின் கவனமும் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு  வருமா என்பதிலேயே இருந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டியிருக்க வேண்டிய நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் மணிமண்டபத்தை  அரசே கட்டப்போகிறது என்கிற அறிவிப்பு நடிகர் சங்கத்துக்கு அதிர்ச்சி யை கொடுத்திருக்கும்.

நடிகர் சங்கத்தினர் பந்தாவாக  அடிக்கல் நாட்டும் பூஜையை  நடத்தி பத்திரிகைகளுக்கு படமெல்லாம் கொடுத்தனர்.ஆனால் ஒரு செங்கலை கூட அவர்கள் வைத்ததில்லை. வருடங்கள் கடந்தும் மணிமண்டபத்தை பற்றிய நினைவே அவர்களுக்கு இல்லை.தமிழக அரசு நிலத்தை ஒதுக்கித் தந்தும்  ஊறுகாய்ப் பானையில் சிவாஜியை போட்டு மூடிவிட்டனர்.

நாம் கேள்விப்பட்டவரை யில் சிவாஜிக்கு சிலை ஒன்றே போதாதா இதில் மணிமண்டபம் எதற்கு என்று அவர்களில் சிலர் கருதினார்களாம்... எதிர்த்துப்  பேச நடிகர்கள்  பயப்பட்ட நிலையில் சிவாஜியின் ரசிகர்கள் மணிமண்டபம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை கவர்ந்தனர்.

அதன் வெளிப்பாடே  அம்மாவின் அறிவிப்பு.

கவலைவேண்டாம்  "நானிருக்கிறேன், மண்டபத்தை கட்டித்தருகிறேன்"  .என்று சட்டப்பேரவையிலே அறிவித்து அவர்களின் கவலையை நீக்கிவிட்டார்..அறிவிப்பு வந்ததுமே சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாருக்கு  ஆனந்த கண்ணீர்..எங்கள் குடும்பமே அம்மாவுக்கு கடமை பட்டிருக்கிறது. என்றார்..பிரபுவும் கல்யாணி நகைக்கடை விளம்பரத்துக்காக படப்பிடிப்பிலிருந்தாலும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள தவறவில்லை..உலகம் முழுவதும் உள்ள அப்பாவின் ரசிகர்களுக்கு அம்மா பரிசளித்திருக்கிறார். சென்னைக்கு வருகிற ரசிகர்களுக்கு அம்மா அமைக்கும் மணிமண்டபம் ஓர் ஆலயமாக திகழும்" என்றார்  இளையதிலகம்.

நடிகர்களும் அவர்கள் சார்ந்த சங்கமும் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார்..

சிலர் சொல்லலாம்  தேர்தல் நெருங்குவதால் இத்தகைய அறிவிப்பை  அவர் வெளியிடுகிறார் என்பதாக.!

அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், மணிமண்டபம்  வருகிறதல்லவா!

பலன் கிடைக்கிறபோது  அதில் போய்  வாஸ்து பார்ப்பது  அறிவுடைமை ஆகாது!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கிரீடம் இறங்கிவிட்டதா ,என்ன?

அலுவலகத்திலிருந்து  திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல பெரியார்  நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.
ஈகா தியேட்டரை அடுத்த சிக்னலில் நின்றபோது  என்னை ஒட்டி இன்னொரு பைக் வந்து நின்றது.அதில் இருந்தவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். ஏளன சிரிப்பு..நான் கண்டு கொள்ளவில்லை.அண்ணா ஆர்ச் வரை தொடர்ந்தே  வந்தார்.
அவரது பார்வையில் நான் கிறுக்கன் மாதிரி தெரிந்திருக்கலாம்.நான் ஹெல்மெட் அணிந்திருந்தேன். அவருக்கு அது இல்லை. வாங்குவதற்கு  வசதி இல்லையோ என்னவோ! அவரது பைக்கின் பின்புற மட்கார்டில் வக்கீல் என்பதன் அடையாளம் ஒட்டப்பட்டிருந்தது.
பார்த்தியா என்னை சட்டம் ஒன்னும் செய்யவில்லை.என்பதை எனக்கு உணர்த்துவதற்குத்தான்  அந்த ஏளன சிரிப்பும் எக்காளப் பார்வையும் என்பதை புரிந்து கொண்டேன்.அவர் ஹெல்மெட் போடாமல் இருந்தது அவரது தைரியம். தன்னை போலீஸ் ஒன்னும் செய்துவிட முடியாது என்கிற  நம்பிக்கை.அதனால் நானும் அவரைப் போல ஹெல்மெட் அணியாமல் போகமாட்டேன்.அதனால் என் கிரீடம் ஒன்றும் இறங்கி விடப்போவதில்லை. முதலில் அந்த பைக் அவருடையதா என்பதும் தெரியாது.
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.போலீசும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை..இதுதான் ஜனநாயகம்.
இன்னொரு நிகழ்வையும்  சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பார்த்தேன். டாஸ்மாக்கில்  சரக்கு வாங்கி வந்த பெண்ணை ஒருவர் கெஞ்சியபடியே பின் தொடர்ந்து சென்றார்..
நேர்மாறாக இருந்தது. ஆண்களைத்தான் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் பின் தொடர்ந்து போகாதே போகாதே என்கணவா ,பொல்லாத டாஸ்மாக் வேணாம் கணவா என்று கதறி அழுவார்கள். இதற்கு நேர்மாறாக இருந்தது  நான் பார்த்தது.
'தொந்தரவு பண்ணாம வீட்டுக்கு போயிடுங்க. நான் பத்து மணிக்கெல்லாம்  வீட்டுக்கு வந்துவிடுவேன். பச்சப்பிள்ளையை வச்சுக்கிட்டு சரக்கை அடிக்கமுடியாது "என்று சொன்னதை கேட்டு அதிர்ந்து விட்டேன்.
இப்படியெல்லாமா இருப்பார்கள்..பிள்ளை இருப்பது தெரிகிறது.அதை வைத்துக் கொண்டு சரக்கு அடிக்க முடியாது என்பதும் தெரிகிறது. ஆனால்  சரக்கடித்துவிட்டு பச்சப்பிள்ளை
க்கு தாய்ப்பால்  கொடுக்கக்கூடாது என்பது மட்டும் தெரியாமல் போய்விடுமா? ஒருவேளை புட்டிப்பால் கொடுப்பார்களோ!

சனி, 15 ஆகஸ்ட், 2015

மறக்க மனம் இல்லையே.....

என்னமோ தெரியல. நேத்து ராத்திரி தூக்கம் பிடிக்கல. புரண்டு புரண்டு  படுத்தாலும் உடம்புதான் வலிச்சது. கழுத்து வலி வேற..எலும்பு  தேஞ்சிருக்காம்..பைக் ஓட்டக்கூடாது.என்கிறார் டாக்டர். தென்னமரக்குடி  எண்ணையை  வாகா ,வலிக்காம தேச்சு விட்டவ இன்னிக்கி இல்ல.மூணு வருசமாச்சு .போயி சேந்து! எந்திருச்சு உக்காந்து  கழுத்தை வட, இட பக்கமா  திருப்பி மேலேயும் தாழ்த்தியும் நாலஞ்சு வாட்டி செஞ்சிட்டு படுத்தேன் கண்ணீர்
.துணை இல்லேன்னா ..புருஷனை  புரிஞ்சி நடந்துகிட்ட  ஒரு உயிர்  போன பிறகுதான் அருமை தெரியிது. என் மனைவி போன பிறகு எத்தனையோ இரவுகள் இப்படி அழுதே ...! நனைஞ்சு போயிருக்கேன்.
விதின்னு சொல்றாங்க. ஒரு வேளை நான் பணக்காரனா  இருந்திருந்தா  இந்த  வெறுமை இருந்திருக்காதோ? மறந்திருப்பேனோ? ஆனா  அது  வேஷமாத்தானே இருக்கும்? மனசாட்சியை  கொன்னுட்டுத்தானே ...சே! .இதுதான் ஆம்பளைத்தனமா?
எல்லா தனி மனுசங்களுக்கும்  இப்படித்தான்  தோணுமா?
தாம்பத்யம் மட்டுமே சுகமா? அதுக்கு மட்டுமே மனைவியா?
இப்படி நினைக்கலேன்னாலும்  மண்டையில் யாரோ சுத்தியலால்  அடிக்கிற மாதிரி  இருந்துச்சு.எத்தனை இரவு  மனைவி  மறுத்தும்  மதுவின் வெறியால்..!
விடிஞ்சது.
ராத்திரியின் தாக்கம் போகல! மனச  அறுக்குது.! என்னிக்குமே  இப்படி  இருந்ததில்ல. இன்னிக்கி மட்டும் ஏன் பொண்டாட்டியின் அழுத்தமான  நினைப்பு?
ஒரு வேளை அவளும் நினைக்கிறாளோ?
படத்தை பாத்துக்கிட்டே இருந்தேன். 'என்னங்க, ஷேவ் பண்ணலியா?"ன்னு  கேக்கிற மாதிரி உணர்வு!
அவளுக்கு நான் ஷேவ் பண்ணாம  இருப்பது பிடிக்காது.
கெட்டவனுக்கு நல்ல மனைவியாக  இருந்த மகராசி.

நடிகர்கள் கதை கேட்டுதான் நடிக்கிறார்களா?

'கதை கேட்டிங்களா சார்?"- ஒரு சினிமா நிருபனின் நிரந்தரமான சந்தேகம்.
'கேட்டேன். மூணுமணி நேரம் சொன்னார். இன்டர்வெல் கேப் செம இன்ட்ரஸ்டிங்.! பிரமாதமான டுவிஸ்ட் அங்கதான் ! ஆடியன்ஸ் ஒன்னுக்குக்கூட போகமாட்டாங்க. எப்படா ஆரம்பிப்பாங்கன்னு சீட்ல தவியாய் தவிப்பாங்க.அப்படி ஒரு மந்திரத்தை டைரக்டர் வச்சிருக்கார்"
"அதை கொஞ்சம் சொல்லுங்களேன்?"
"சொன்னா புல் கதையும் அவுட் ஆயிடுமே?"
"ஓ..அவ்வளவு டக்கரா?"
"ஷ்யூர் .இப்படி ஒரு கற்பனையை யாருமே எதிர்பாக்க முடியாது..நானே  அசந்திட்டேன் சார்! ஆடிப்போயிட்டேன்."----நடிகரின் எக்ஸ்பிரசன்  நம்மளையே கவுத்துப்புடும். அப்படி ஒரு பெர்பாமன்ஸ் !படத்தில கூட  பார்த்திருக்க முடியாது.
ஆனா படம் வெளியான பிறகு இந்த மக்கிப்போன குப்பை கதையைத்தானா அப்படி தூக்கி வைத்து சொன்னார் என்கிற எரிச்சல்தான் படம் பார்க்கிறபோது  வருகிறது.
அப்படியானால் அவர்களுக்கு கதை கேட்கும் அறிவு எவ்வளவு மட்டமாக இருக்கிறது என்றுதானே எண்ணத் தோன்றும்?
உண்மையில் பலர் கதை கேட்பதில்லை.
அதனால்தான் அண்மையில் வந்த பல படங்கள் தூக்கில் தொங்கிய பிணமாக  இருந்தன..
சிலர் கதை கேட்கிறார்கள். திருத்தம் சொல்கிறார்கள். தெரிந்தவர்களிடம் கதையை சொல்லி கருத்து கேட்கிறார்கள்..அதனால் தப்பித்துக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் மண்டை காய்வானேன் என்று பிற மொழியில் வந்த வெற்றி படங்களை  ரீமேக் பண்ணச்சொல்லி முடிவை விதியிடம் விட்டு விடுகிறார்கள்.
தமிழ்ச்சினிமாவில் கதாசிரியர்கள் என்கிற இனம் இல்லாமல் போனதின் விளைவுதான் இன்றைய தோல்விகள்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஆனந்த சுதந்திரமே....

இறுமாப்புடன் சொல்கிறேன் அனைவர்க்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
பெருமையாக இருக்கிறது.அறுபத்தி எட்டு ஆண்டுகளை முடித்து அடுத்த  ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். ஊழலும் அதர்மமும் தலைவிரித்தாடும்  நிலையிலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகிறது.அரசியல்வாதிகள்  அளப்பரிய உரிமையுடன் அதிகாரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்துவது  நாம் கொடுத்த உரிமைதானே!அவர்கள் கோடீஸ்வரர்களாகவும் நாம் தெருக்கோடியில் நிற்பதும் நாம் கொடுத்திருக்கும் அனுமதிச்சீட்டால்தானே! இலவசங்களில் இன்பம். சரக்கடிப்பதில் இன்பம்.மாநாடுகளுக்கு அடிமாடுகளைப்போல சென்று குவார்ட்டரும் பிரியாணியும் அடித்துவிட்டு அனுபவிப்பதிலும் இன்பம்.நான் முதல்வராகவேண்டும் .என் சாதிக்காரன் பதவியை அனுபவிக்கவேண்டும்.என்றாலும் நம்புகிறோம். தமிழனை அழிப்பதற்கு நாமே கருவியாகிறோம் என்பதிலும் மகிழ்ச்சிதான்.காமராஜர் ஆட்சியை நான்தான் கொண்டுவருவேன் என்று சொன்னாலும் நம்புகிறோம்..இதை விட சுதந்திரம் வேறென்ன வேண்டும்?
இவைகள்தானய்யா சுதந்திரத்தின் அடையாளமாக இருந்துவருகிறது.இவைகளை மீறி முன்னேற்றம் என்பது இல்லாமல் இல்லை.வான்வெளியில் சாதனை. அந்நிய சக்திகளை  அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்பதில் நெஞ்சு நிமிர்த்த முடிகிறது.இந்தியா வல்லரசாக முடியும் என்பதில் பெருமை. சாதனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் இவைகளுக்கெல்லாம் நாம் கொடுத்த
 விலைக்கு நாம் அனுபவிப்பது என்ன? கல்லூரி படிப்புகளுக்கு லஞ்சமாக லட்சங்களை கொடுக்கிறோம்,கல்வி கற்பதற்கு கூட காசு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
அநீதிகளை விலை கொடுத்து வாங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் நாம் நமது வாக்குகளை விற்பதுதான். நாம் பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பது அரசியல்கட்சிகளும் அவைகளின் தலைவர்களும்தான்,
வாழ்க விடுதலை நாள்!

எல்லாமே பொய்தான்!

டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால் கள்ளச்சாராயம் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள்னு ஒரு அபிப்ராயம் இருக்கு..இந்த கருத்தை ஒரு நீதிபதி கூட சொல்லி இருக்காரு. உண்மைதான். கள்ளச்சாராயம் குடிக்கத்தான் போவானுங்க..ஆனா இப்ப டாஸ்மாக் கடைகளுக்கு கூட்டம் கூட்டமா போறாய்ங்களே அந்த மாதிரி போகமாட்டாய்ங்க..பயந்து ,பம்மி பம்மிதான் போவாய்ங்க. போலீஸ் பிடிச்சிக்கும்கிற பயம் இருக்கும்..அந்த பயம் இருக்கிறது நல்லது தானுங்களே! போலீஸ் ஸ்டேசன் இருக்கிறதால திருட்டுத்தனம் இல்லேன்னு   சொல்ல முடியுமா? கொலை கொள்ளை நடக்கலேன்னு சொல்ல முடியுமா? போலீஸ் அதிகாரி வீட்லேயே  திருட்டு நடக்குது..கொலைகாரன் கொள்ளையடிக்கிறவனுக்கு போலீசே பயப்படுதுங்கிறதுதான் உண்மை.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  போலீஸ் இருந்தும் எல்லா அக்கிரமும் நடக்கத்தான் செய்யிது. இப்படி இரண்டும் கெட்டான் நிலைமையில்தான் தமிழ்நாடு இருக்கு..
பொம்பள புள்ளைங்க தைரியமா டாஸ்மாக் போறது நல்லதா? தண்ணி அடிக்கிற தைரியத்தை கொடுத்தது சீரியல்கள்தான்..வீட்டிலேயே உட்கார்ந்து பாக்கிறவங்களுக்கு  ஒரு கிக்கை கொடுத்து தூண்டி விட்டது..
சினிமாவும்  நல்லா குடிங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கு.கவலையை மறக்க பீர் பிராந்தி மாதிரி பெஸ்ட் சரக்கு எதுவும் இல்லீன்னு சொல்றாங்க..இப்படி  எல்லாருமே குடியை ஆதரிச்சால்  குடும்பங்களின் கதி என்னாகும்?
குடி குடியை கெடுக்கும்னு எழுதிக்காட்டிவிட்டு பாட்டு பாடி குடிக்கிறதை கவர்ச்சியா காட்டும்போது மனசு கெட்டுப்போகாதா?
பார் சீன வந்தாலே வரிவிலக்கு கட் னு சொல்றதுக்கு சென்சாருக்கு துப்பில்ல. துணிச்சல் இல்ல.அரசியல் வாதிகளும் வாயில பிளாஸ்திரியை போட்டு ஒட்டிக்கிறாங்க..எப்படிங்க உருப்படும்? இப்படி டி.வி.சினிமான்னு சக்தி வாய்ந்த மீடியம்லாம்  குடியை ஊக்குவிக்கும்போது  டாஸ்மாக்கை மூடுறதுதான் நல்லது. எல்லாமே பொய்னு போயிடக்கூடாதுங்கிற பயத்தில்தான் சொல்றேன். வாழ்க சுதந்திரம்.!

சனி, 4 ஏப்ரல், 2015

கேப்டனுடன் பழகிய நாட்கள்.....

அந்த நாட்களை என்னால் மட்டுமின்றி கேப்டன் விஜயகாந்தாலும் மறக்க இயலாது.நடிகராக அவர் வலம் வந்த அந்த காலம் ஒரு பொற்காலம்தான். நடிகர் திலகம் கோலோச்சினாலும் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கியிருந்தார் விஜி.நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு உச்ச நட்சத்திரங்களான கமல்,ரஜினி ஆகியோரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு..அவர் அரசியல் தலைவரான பின்னர் திரை உலகத் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதை போன்ற உணர்வு..அரசியல் அவரை முழுமையாக ஆட்கொண்டது.இன்றும் அவரது முழுக்கவனமும் அதில்தான்.இருக்கிறது.பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவராக செயல் பட்டாலும் சினிமாவில் நடப்பதை தனது நண்பர்கள் மூலம் அறிந்து கொள்கிறார்.அவருடன் எத்தனையோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருந்தாலும் சொக்கத்தங்கம் படப்பிடிப்பை மறக்க இயலாது. இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களை அவுட்டோருக்கு அழைத்து செல்லவே தயாரிப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்,சக பத்திரிகையாளரான தேவராஜ்,[தற்போது நடிகன்.கயல் தேவராஜ்,] பல குரலில் பேசுவதில் கில்லாடி.தாமரை மணாளனும் நடிகர் திலகமும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை பேசிக்காட்டும் போது சிரிப்பு பொத்துக் கொண்டு ஓடும்..அன்று .
கேப்டனை சந்தித்தபோது வழக்கமாக கேட்கிற கேள்விகளை கேட்டு முடிந்த பிறகு அரசியல் பிரவேசம் பற்றியும் கேட்டேன். அன்றுதான் சிக்கினார்,ஆண்டவன் கையில் இருக்கிறது  என்று சொல்லாம

ல் 'வருவேன்.ஆனால் எப்போது என்பதை சொல்லமுடியாது என எனக்கு சொன்னதை அன்றைய 'தேவி"வார இதழில் ஸ்கூப் செய்தியாக எழுதினேன்..நண்பன் தேவராஜ் சில கேள்விகளை கேட்டு நடிகை சவுந்தரியாவை கிளிசரின் போடாமலேயே கலங்க வைத்ததும் அங்குதான் நடந்தது. கேப்டனுடனுடன் பழகிய அந்த நாட்களை தனியாக புத்தகமே எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.

ஞாயிறு, 29 மார்ச், 2015

லட்சுமிராய்க்கும் திரிஷாவுக்கும் அப்படி என்ன சண்டை?..

சவுகார்பேட்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக ஸ்ரீகாந்த் லட்சுமிராய் இவங்கள்லாம் பிரசாத் லேப் வந்திருந்தாங்க.ஒரு குரூப்பா போய் சந்திச்சு பேசுனோம்.நண்பர் ஒருத்தர் ''நீங்களும் திரிஷாவும் பார்ட்டிக்கு ஒண்ணாத்தானே போவிங்க! அவங்க கல்யாணத்தைப் பத்தி சொல்லுங்க"ன்னு   கேட்டார்.
படக்குன்னு "அவங்களைப் பத்தி எதுக்கு இங்கு கொண்டு வர்றிங்க"ன்னு முகத்தில வெறுப்பை காட்டிட்டார் ராய்.
"ஏம்மா??"
"எனக்கு  எப்படி பிரண்ட்சா இருந்தாங்க என்பதே ஆச்சரியமா இருக்கு. என்ன நடந்தது  எப்படிங்கறதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் .எனக்கு பொய் பேசறவங்களை பிடிக்காது! பிடிக்காது ! விட்ருங்க"
திரிஷாவை பத்தி பேசுவதை ராய் விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
சிலர் அதற்கான காரணங்களை யூகமாக சொன்னார்கள்.
தனது பொருளை மற்றவர்கள் அபகரித்துக் கொள்ளும்போது வருகிற கோபம்தான் அது என்றார்கள். 
வருண் மணியனை முதலில் காதலித்தவர் ராய் என்றும் அது தெரிந்திருந்தும்  திரிஷா  சொல்லாமல்  மறைத்து  வ.ம.வை கைப்பற்றிவிட்டார் என்பதும் திரை உலகில் பரவி வருகிறது.
அடுத்து டாப்சி என்ன சொல்வாரோ என்பது தெரியவில்லை.
பல விதமான கதவடைப்புகள் நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்தே தீரும் .

திங்கள், 16 மார்ச், 2015

சின்னத்திரை நடிகர்கள் என ஒதுக்காதீர்கள்.

புளியங்கொம்பை பிடித்திருக்கிறோம் என்கிற தெம்பில் சில பெரிய திரை தம்பிகள் சின்னத்திரை நடிகர்களை மதிப்பதில்லை.தப்பித் தவறி செட்டுக்குள் வந்துவிட்டாலும் கால் மேல் கால் போட்டபடி தெனாவட்டாக பார்ப்பார்கள்."எப்படி போகிறது லைப் ?" என  நக்கலாக கேட்பார்கள் .பலதடவை  நேரில்  பார்த்தவன் நான்..
ஆனால் 'ஆயா வட சுட்ட கதை 'யை பார்த்த எனக்கு தெனாவட்டு தம்பிகளுக்கு  ஆப்பு ரெடியாக இருப்பதாகவே ...அதுவும் அத்திமரத்து ஆப்பாகவே தெரிகிறது.
சிறப்பாக சின்னத்திரை நடிகர் நடித்திருக்கிறார்கள்.அதிலும் அந்த பரட்டை சரியான காமடியனாக வரலாம். வாய்ப்புகள் கிடைக்குமானால் இன்னொரு சூரி ரெடி.மணியாக வருகிற நடிகரும் செம போடு போடுகிறார்.
இப்படியொரு போட்டி இருந்தால்தான் வளருகிறபோதே வாலாட்டுகிறவர்களுக்கு பயம் இருக்கும்.அகந்தை அகலும்.என்னை விஞ்சுகிறவர் எவருமில்லை என்கிற மனப்பான்மை ஒழியும்.இதே நேரத்தில்  முன்னேறி வருகிற சின்னத்திரை நடிகர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.சின்னத்தரை நடிகர்களாக மாறி விடக்கூடாது .
எதோ தோன்றியது .சொல்லிவிட்டேன்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

என்ன மனிதர்கள் இவர்கள்?

என்ன மனிதர்கள் இவர்கள்?
இனத்தையும் ,மொழியையும் வைத்து  பிழைப்பு நடத்துகிறவர்கள் நமக்கு எப்படி வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள்?
நம்மை வைத்து அவர்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.பதவிகளை அடைவதற்கு மொழியும் இனமும் பயனாகிறது..அந்த மொழிக்காக இனத்துக்காக  எதுவும் செய்வதில்லை. எழுத்து வியாபாரிகள் என தெரிந்தும்  அவர்களின் வசீகர வார்த்தைகளிலும் ,கழுத்து நரம்பு புடைக்க கர்ஜிக்கும் பொய்மையிலும்  முட்டாளாகிப் போகிறோம்.நாம் உண்மையை உணர  மறுக்கிறோமா? அல்லது அடிமாடுகளாகிப் போனதால் ஆற்றாமையில் அமிழ்ந்து போனோமா?
நாம் திருந்த மறுக்கிறோம்.
அடிமை வாழ்வின் சுகமே இறுதி என நினைக்கிறோம்.
நாம் உயரவேண்டும் என்றால் 'உணர்ச்சி வயப்படுதலை" விட்டு வெளியேற வேண்டும்.
எனது மொழியை காக்க இன்னொருவனின் துணை தேவையில்லை.
எனது இனத்தை காக்க என்னுடைய கரமே போதும்.
வாளை சுழற்றுவதற்கு எனது கரம் வலிமையாகவே இருக்கிறது .
எனது நிதியை உனக்கு தரவேண்டியதில்லை என்கிற உறுதி வேண்டும்..
அரசியல் என்பது லாபகரமான தொழிலாகிவிட்டது..பேசத்தெரிந்தவன் தலைவன்.,குனிந்து கொடுப்பவன் தொண்டன்.
ஊழல் என்பது அரசியலில் கிரிக்கெட் மாதிரி.!
மாறி மாறி திறமைசாலிகளின் கைகளில் ஊழல் கொழிக்கிறது..
நீதியால் ஊழலை ஒழிக்கமுடியாது..
ஆகவே நாம் திருந்த வேண்டும் .என்ன மனிதர்கள் இவர்கள் என ஊழல் சுதாடிகளை ஒதுக்க வேண்டும்.இல்லையா?
நாமும் ஊழலை கற்றுக்கொள்ளவேண்டும்,
...