திங்கள், 31 ஆகஸ்ட், 2015

கடலோரம் வாங்கிய...........?

முழு நிலவு.,கடலோரம். உப்புக்காத்துன்னாலும்  ஜிலு ஜிலுன்னு உடம்பை  தழுவுது. சிவாஜி சாரை பாத்திட்டு அப்படியே  காரை  வலது பக்கமா திருப்ப சொன்னேன் .வாடகை கார்தான்.. நண்பன் கண்ணதாசன் மகனின் கல்யாண வரவேற்பு  சாந்தோம்  சமுக நலக்கூடத்தில்! ராதிகாவின்  ரடானில்  கண்ணதாசனுக்கு  பி.ஆர்.ஓ.உத்தியோகம்.

டிராபிக் நெருக்கடின்னு  போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தாங்க.
கடலோரமாக  வரிசையாக மீன் கடைகள்.கடலிலிருந்து  திரும்பியவர்கள்  பிடித்து  வந்திருந்த பிரஷ் மீன்கள்.நண்டுகளை பார்த்ததுமே வாங்கிட்டு போகலாம்னு தோனுச்சு!

'விலையும் கம்மிதான் சார்! நல்ல அயிட்டங்களா இருக்கும்."னார் டிரைவர். அவர் அயிட்டம்னு சொன்னது மீனை! தப்பா நினைச்சிடாதிங்க.,

'ரிசப்ஷனுக்கு  போறோம்பா! கார்லயும் வைக்க முடியாது. இன்னொரு  நாளைக்கு  ஆட்டோவ்ல வந்து  வாங்கிக்கிறேன்' னு சொல்லிட்டேன். இருந்தாலும் கண்ணுக்குள்ள நண்டுகள்  டான்ஸ் !

சமுக நலகூடத்தின் வாசலிலேயே  எஸ்.வி.சேகரை  ஒரு குடிமகன்  வழி  மறித்து '' இன்னா  சார். ஒன்ன  பாத்து  எவ்ளோ நாள் ஆச்சு! குடு சார்  ஒரு  குவாட்டருக்கு! அப்படியே  ஊத்திக்கினு  வந்திர்றேன். ரிசப்சன்ல  பிரியாணி  போடுறாங்க.."என்று  வசூலில்  இறங்கியிருந்தார்.  எக்ஸ் எம்.எல் .ஏ. எப்படி என்ன  சொல்லி தப்பிச்சாரோ! மந்திரியே  வந்திருந்தாலும்  மாட்டத்தான்  செஞ்சிருப்பார்.அவங்களுக்கு அது புதுசும் இல்லியே! குவாட்டரும் பிரியாணியும்  வாங்கிக் கொடுத்தவங்கதானே! அவங்களின் பதவியின்  வேருக்கு  ஊத்தி  வளத்திருப்பது   எதுன்னு தெரியாதா என்ன?


 நான்  நிழல்கள் ரவியுடன்  ரிசப்ஷன்  ஹாலுக்கு போயிட்டேன்...

என்னமோ தெரியல. அங்கு போயி  நண்டு  வாங்குற வரைக்கும் எனக்கு  கண்ணுல  நண்டு டான்ஸ்தான்!  

புதன், 26 ஆகஸ்ட், 2015

காமனுக்கு ஆண்டாள் விடுத்த கோரிக்கை!


ஒருவனை ஒருத்தி  காதலிப்பது  தவறில்லை.அது தண்டனைக்குரியதும்  அல்ல.! அந்த  ஒருத்தி அவனை காதலித்தால்!

ஆனால்  ஒருத்தி  கடவுளாக  கருதப்படுவனை  காதலிக்கலாமா?

'அடைந்தால்  மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி " என்று  நடிகர் பி.எஸ் .வீரப்பா  ரேஞ்சுக்கு  ஒரு மனுஷி  'அவனுக்கில்லாமல்  இந்த உடலை  மானுடனுக்கு  தர மாட்டேன்" என சொல்லலாமா?

'என் சாதி  பையனை வேறொரு  சாதி பெண் காதலிப்பதா,கல்யாணம் செய்வதா, வெட்டி வீசு " என்று  கூறு  போடுகிறவர்கள் ஆண்டாள்  வாழ்ந்த   காலத்தில் வாழ்ந்திருந்தால்  என்ன  நடந்திருக்கும்?

ஒன்றும் நடந்திருக்காது.! தற்காலத்தையே  எடுத்துக் கொள்வோம். உயர் சாதி பெண் " நான். அந்த பெருமாளைத்தான்  கல்யாணம் செய்வேன். அவனுக்கின்றி  இந்த உடலை வேறு ஒருவனுக்கு  சொந்தமாக்கமாட்டேன் " என  உண்ணாவிரதம் இருந்தால்  என்ன நடக்கும்?

''ஊனிடை ஆழி  சங்கு  உத்தமர்க்கு என்று
      உன்னித்து  எழுந்த  என் தட முலைகள்
மானிடர்க்கு  என்று பேச்சுப்படில்
    வாழ்கிலேன்  கண்டாய், மன்மதனே"  என்கிறாள்  நாச்சியார்  திருமொழியில்!

"சங்கு சக்கரங்களைத்  திருமேனியில் தாங்கிக்கொண்டிருக்கும் உத்தமனான திருமாலுக்கென்றே உருவான  என் முலைகளை  மனிதர் கை பட  ஒருக்காலும்  சம்மதியேன் " என்கிறாள். ஆண்டாள்.

ஆண்டாளை  வணங்குகிறவர்களின் வீடுகளில்  இப்படியொரு நிலை  எழுமேயானால்  என்ன நடக்கும்?

அந்த பெண்ணை  மன நோய் மருத்துவரிடம்தானே  அழைத்துப் போவார்கள்?
நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம்.

எதிர்பார்த்திராத செய்தி.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெ. இப்படியொரு அறிவிப்பை வெளியிடுவார் என எவரும்  எதிர்பார்க்கவில்லை.அனைவரின் கவனமும் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு  வருமா என்பதிலேயே இருந்தது.
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டியிருக்க வேண்டிய நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் மணிமண்டபத்தை  அரசே கட்டப்போகிறது என்கிற அறிவிப்பு நடிகர் சங்கத்துக்கு அதிர்ச்சி யை கொடுத்திருக்கும்.

நடிகர் சங்கத்தினர் பந்தாவாக  அடிக்கல் நாட்டும் பூஜையை  நடத்தி பத்திரிகைகளுக்கு படமெல்லாம் கொடுத்தனர்.ஆனால் ஒரு செங்கலை கூட அவர்கள் வைத்ததில்லை. வருடங்கள் கடந்தும் மணிமண்டபத்தை பற்றிய நினைவே அவர்களுக்கு இல்லை.தமிழக அரசு நிலத்தை ஒதுக்கித் தந்தும்  ஊறுகாய்ப் பானையில் சிவாஜியை போட்டு மூடிவிட்டனர்.

நாம் கேள்விப்பட்டவரை யில் சிவாஜிக்கு சிலை ஒன்றே போதாதா இதில் மணிமண்டபம் எதற்கு என்று அவர்களில் சிலர் கருதினார்களாம்... எதிர்த்துப்  பேச நடிகர்கள்  பயப்பட்ட நிலையில் சிவாஜியின் ரசிகர்கள் மணிமண்டபம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை கவர்ந்தனர்.

அதன் வெளிப்பாடே  அம்மாவின் அறிவிப்பு.

கவலைவேண்டாம்  "நானிருக்கிறேன், மண்டபத்தை கட்டித்தருகிறேன்"  .என்று சட்டப்பேரவையிலே அறிவித்து அவர்களின் கவலையை நீக்கிவிட்டார்..அறிவிப்பு வந்ததுமே சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாருக்கு  ஆனந்த கண்ணீர்..எங்கள் குடும்பமே அம்மாவுக்கு கடமை பட்டிருக்கிறது. என்றார்..பிரபுவும் கல்யாணி நகைக்கடை விளம்பரத்துக்காக படப்பிடிப்பிலிருந்தாலும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள தவறவில்லை..உலகம் முழுவதும் உள்ள அப்பாவின் ரசிகர்களுக்கு அம்மா பரிசளித்திருக்கிறார். சென்னைக்கு வருகிற ரசிகர்களுக்கு அம்மா அமைக்கும் மணிமண்டபம் ஓர் ஆலயமாக திகழும்" என்றார்  இளையதிலகம்.

நடிகர்களும் அவர்கள் சார்ந்த சங்கமும் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார்..

சிலர் சொல்லலாம்  தேர்தல் நெருங்குவதால் இத்தகைய அறிவிப்பை  அவர் வெளியிடுகிறார் என்பதாக.!

அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், மணிமண்டபம்  வருகிறதல்லவா!

பலன் கிடைக்கிறபோது  அதில் போய்  வாஸ்து பார்ப்பது  அறிவுடைமை ஆகாது!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

கிரீடம் இறங்கிவிட்டதா ,என்ன?

அலுவலகத்திலிருந்து  திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல பெரியார்  நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்.
ஈகா தியேட்டரை அடுத்த சிக்னலில் நின்றபோது  என்னை ஒட்டி இன்னொரு பைக் வந்து நின்றது.அதில் இருந்தவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். ஏளன சிரிப்பு..நான் கண்டு கொள்ளவில்லை.அண்ணா ஆர்ச் வரை தொடர்ந்தே  வந்தார்.
அவரது பார்வையில் நான் கிறுக்கன் மாதிரி தெரிந்திருக்கலாம்.நான் ஹெல்மெட் அணிந்திருந்தேன். அவருக்கு அது இல்லை. வாங்குவதற்கு  வசதி இல்லையோ என்னவோ! அவரது பைக்கின் பின்புற மட்கார்டில் வக்கீல் என்பதன் அடையாளம் ஒட்டப்பட்டிருந்தது.
பார்த்தியா என்னை சட்டம் ஒன்னும் செய்யவில்லை.என்பதை எனக்கு உணர்த்துவதற்குத்தான்  அந்த ஏளன சிரிப்பும் எக்காளப் பார்வையும் என்பதை புரிந்து கொண்டேன்.அவர் ஹெல்மெட் போடாமல் இருந்தது அவரது தைரியம். தன்னை போலீஸ் ஒன்னும் செய்துவிட முடியாது என்கிற  நம்பிக்கை.அதனால் நானும் அவரைப் போல ஹெல்மெட் அணியாமல் போகமாட்டேன்.அதனால் என் கிரீடம் ஒன்றும் இறங்கி விடப்போவதில்லை. முதலில் அந்த பைக் அவருடையதா என்பதும் தெரியாது.
இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.போலீசும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை..இதுதான் ஜனநாயகம்.
இன்னொரு நிகழ்வையும்  சாலிகிராமம் அருணாசலம் சாலையில் பார்த்தேன். டாஸ்மாக்கில்  சரக்கு வாங்கி வந்த பெண்ணை ஒருவர் கெஞ்சியபடியே பின் தொடர்ந்து சென்றார்..
நேர்மாறாக இருந்தது. ஆண்களைத்தான் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள் பின் தொடர்ந்து போகாதே போகாதே என்கணவா ,பொல்லாத டாஸ்மாக் வேணாம் கணவா என்று கதறி அழுவார்கள். இதற்கு நேர்மாறாக இருந்தது  நான் பார்த்தது.
'தொந்தரவு பண்ணாம வீட்டுக்கு போயிடுங்க. நான் பத்து மணிக்கெல்லாம்  வீட்டுக்கு வந்துவிடுவேன். பச்சப்பிள்ளையை வச்சுக்கிட்டு சரக்கை அடிக்கமுடியாது "என்று சொன்னதை கேட்டு அதிர்ந்து விட்டேன்.
இப்படியெல்லாமா இருப்பார்கள்..பிள்ளை இருப்பது தெரிகிறது.அதை வைத்துக் கொண்டு சரக்கு அடிக்க முடியாது என்பதும் தெரிகிறது. ஆனால்  சரக்கடித்துவிட்டு பச்சப்பிள்ளை
க்கு தாய்ப்பால்  கொடுக்கக்கூடாது என்பது மட்டும் தெரியாமல் போய்விடுமா? ஒருவேளை புட்டிப்பால் கொடுப்பார்களோ!

சனி, 15 ஆகஸ்ட், 2015

மறக்க மனம் இல்லையே.....

என்னமோ தெரியல. நேத்து ராத்திரி தூக்கம் பிடிக்கல. புரண்டு புரண்டு  படுத்தாலும் உடம்புதான் வலிச்சது. கழுத்து வலி வேற..எலும்பு  தேஞ்சிருக்காம்..பைக் ஓட்டக்கூடாது.என்கிறார் டாக்டர். தென்னமரக்குடி  எண்ணையை  வாகா ,வலிக்காம தேச்சு விட்டவ இன்னிக்கி இல்ல.மூணு வருசமாச்சு .போயி சேந்து! எந்திருச்சு உக்காந்து  கழுத்தை வட, இட பக்கமா  திருப்பி மேலேயும் தாழ்த்தியும் நாலஞ்சு வாட்டி செஞ்சிட்டு படுத்தேன் கண்ணீர்
.துணை இல்லேன்னா ..புருஷனை  புரிஞ்சி நடந்துகிட்ட  ஒரு உயிர்  போன பிறகுதான் அருமை தெரியிது. என் மனைவி போன பிறகு எத்தனையோ இரவுகள் இப்படி அழுதே ...! நனைஞ்சு போயிருக்கேன்.
விதின்னு சொல்றாங்க. ஒரு வேளை நான் பணக்காரனா  இருந்திருந்தா  இந்த  வெறுமை இருந்திருக்காதோ? மறந்திருப்பேனோ? ஆனா  அது  வேஷமாத்தானே இருக்கும்? மனசாட்சியை  கொன்னுட்டுத்தானே ...சே! .இதுதான் ஆம்பளைத்தனமா?
எல்லா தனி மனுசங்களுக்கும்  இப்படித்தான்  தோணுமா?
தாம்பத்யம் மட்டுமே சுகமா? அதுக்கு மட்டுமே மனைவியா?
இப்படி நினைக்கலேன்னாலும்  மண்டையில் யாரோ சுத்தியலால்  அடிக்கிற மாதிரி  இருந்துச்சு.எத்தனை இரவு  மனைவி  மறுத்தும்  மதுவின் வெறியால்..!
விடிஞ்சது.
ராத்திரியின் தாக்கம் போகல! மனச  அறுக்குது.! என்னிக்குமே  இப்படி  இருந்ததில்ல. இன்னிக்கி மட்டும் ஏன் பொண்டாட்டியின் அழுத்தமான  நினைப்பு?
ஒரு வேளை அவளும் நினைக்கிறாளோ?
படத்தை பாத்துக்கிட்டே இருந்தேன். 'என்னங்க, ஷேவ் பண்ணலியா?"ன்னு  கேக்கிற மாதிரி உணர்வு!
அவளுக்கு நான் ஷேவ் பண்ணாம  இருப்பது பிடிக்காது.
கெட்டவனுக்கு நல்ல மனைவியாக  இருந்த மகராசி.

நடிகர்கள் கதை கேட்டுதான் நடிக்கிறார்களா?

'கதை கேட்டிங்களா சார்?"- ஒரு சினிமா நிருபனின் நிரந்தரமான சந்தேகம்.
'கேட்டேன். மூணுமணி நேரம் சொன்னார். இன்டர்வெல் கேப் செம இன்ட்ரஸ்டிங்.! பிரமாதமான டுவிஸ்ட் அங்கதான் ! ஆடியன்ஸ் ஒன்னுக்குக்கூட போகமாட்டாங்க. எப்படா ஆரம்பிப்பாங்கன்னு சீட்ல தவியாய் தவிப்பாங்க.அப்படி ஒரு மந்திரத்தை டைரக்டர் வச்சிருக்கார்"
"அதை கொஞ்சம் சொல்லுங்களேன்?"
"சொன்னா புல் கதையும் அவுட் ஆயிடுமே?"
"ஓ..அவ்வளவு டக்கரா?"
"ஷ்யூர் .இப்படி ஒரு கற்பனையை யாருமே எதிர்பாக்க முடியாது..நானே  அசந்திட்டேன் சார்! ஆடிப்போயிட்டேன்."----நடிகரின் எக்ஸ்பிரசன்  நம்மளையே கவுத்துப்புடும். அப்படி ஒரு பெர்பாமன்ஸ் !படத்தில கூட  பார்த்திருக்க முடியாது.
ஆனா படம் வெளியான பிறகு இந்த மக்கிப்போன குப்பை கதையைத்தானா அப்படி தூக்கி வைத்து சொன்னார் என்கிற எரிச்சல்தான் படம் பார்க்கிறபோது  வருகிறது.
அப்படியானால் அவர்களுக்கு கதை கேட்கும் அறிவு எவ்வளவு மட்டமாக இருக்கிறது என்றுதானே எண்ணத் தோன்றும்?
உண்மையில் பலர் கதை கேட்பதில்லை.
அதனால்தான் அண்மையில் வந்த பல படங்கள் தூக்கில் தொங்கிய பிணமாக  இருந்தன..
சிலர் கதை கேட்கிறார்கள். திருத்தம் சொல்கிறார்கள். தெரிந்தவர்களிடம் கதையை சொல்லி கருத்து கேட்கிறார்கள்..அதனால் தப்பித்துக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் மண்டை காய்வானேன் என்று பிற மொழியில் வந்த வெற்றி படங்களை  ரீமேக் பண்ணச்சொல்லி முடிவை விதியிடம் விட்டு விடுகிறார்கள்.
தமிழ்ச்சினிமாவில் கதாசிரியர்கள் என்கிற இனம் இல்லாமல் போனதின் விளைவுதான் இன்றைய தோல்விகள்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஆனந்த சுதந்திரமே....

இறுமாப்புடன் சொல்கிறேன் அனைவர்க்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
பெருமையாக இருக்கிறது.அறுபத்தி எட்டு ஆண்டுகளை முடித்து அடுத்த  ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். ஊழலும் அதர்மமும் தலைவிரித்தாடும்  நிலையிலும் சுதந்திரத்தை அனுபவிக்க முடிகிறது.அரசியல்வாதிகள்  அளப்பரிய உரிமையுடன் அதிகாரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்துவது  நாம் கொடுத்த உரிமைதானே!அவர்கள் கோடீஸ்வரர்களாகவும் நாம் தெருக்கோடியில் நிற்பதும் நாம் கொடுத்திருக்கும் அனுமதிச்சீட்டால்தானே! இலவசங்களில் இன்பம். சரக்கடிப்பதில் இன்பம்.மாநாடுகளுக்கு அடிமாடுகளைப்போல சென்று குவார்ட்டரும் பிரியாணியும் அடித்துவிட்டு அனுபவிப்பதிலும் இன்பம்.நான் முதல்வராகவேண்டும் .என் சாதிக்காரன் பதவியை அனுபவிக்கவேண்டும்.என்றாலும் நம்புகிறோம். தமிழனை அழிப்பதற்கு நாமே கருவியாகிறோம் என்பதிலும் மகிழ்ச்சிதான்.காமராஜர் ஆட்சியை நான்தான் கொண்டுவருவேன் என்று சொன்னாலும் நம்புகிறோம்..இதை விட சுதந்திரம் வேறென்ன வேண்டும்?
இவைகள்தானய்யா சுதந்திரத்தின் அடையாளமாக இருந்துவருகிறது.இவைகளை மீறி முன்னேற்றம் என்பது இல்லாமல் இல்லை.வான்வெளியில் சாதனை. அந்நிய சக்திகளை  அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்பதில் நெஞ்சு நிமிர்த்த முடிகிறது.இந்தியா வல்லரசாக முடியும் என்பதில் பெருமை. சாதனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் இவைகளுக்கெல்லாம் நாம் கொடுத்த
 விலைக்கு நாம் அனுபவிப்பது என்ன? கல்லூரி படிப்புகளுக்கு லஞ்சமாக லட்சங்களை கொடுக்கிறோம்,கல்வி கற்பதற்கு கூட காசு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
அநீதிகளை விலை கொடுத்து வாங்குகிறோம் என்றால் அதற்கு காரணம் நாம் நமது வாக்குகளை விற்பதுதான். நாம் பெற்ற சுதந்திரத்தை அனுபவிப்பது அரசியல்கட்சிகளும் அவைகளின் தலைவர்களும்தான்,
வாழ்க விடுதலை நாள்!

எல்லாமே பொய்தான்!

டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால் கள்ளச்சாராயம் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள்னு ஒரு அபிப்ராயம் இருக்கு..இந்த கருத்தை ஒரு நீதிபதி கூட சொல்லி இருக்காரு. உண்மைதான். கள்ளச்சாராயம் குடிக்கத்தான் போவானுங்க..ஆனா இப்ப டாஸ்மாக் கடைகளுக்கு கூட்டம் கூட்டமா போறாய்ங்களே அந்த மாதிரி போகமாட்டாய்ங்க..பயந்து ,பம்மி பம்மிதான் போவாய்ங்க. போலீஸ் பிடிச்சிக்கும்கிற பயம் இருக்கும்..அந்த பயம் இருக்கிறது நல்லது தானுங்களே! போலீஸ் ஸ்டேசன் இருக்கிறதால திருட்டுத்தனம் இல்லேன்னு   சொல்ல முடியுமா? கொலை கொள்ளை நடக்கலேன்னு சொல்ல முடியுமா? போலீஸ் அதிகாரி வீட்லேயே  திருட்டு நடக்குது..கொலைகாரன் கொள்ளையடிக்கிறவனுக்கு போலீசே பயப்படுதுங்கிறதுதான் உண்மை.சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  போலீஸ் இருந்தும் எல்லா அக்கிரமும் நடக்கத்தான் செய்யிது. இப்படி இரண்டும் கெட்டான் நிலைமையில்தான் தமிழ்நாடு இருக்கு..
பொம்பள புள்ளைங்க தைரியமா டாஸ்மாக் போறது நல்லதா? தண்ணி அடிக்கிற தைரியத்தை கொடுத்தது சீரியல்கள்தான்..வீட்டிலேயே உட்கார்ந்து பாக்கிறவங்களுக்கு  ஒரு கிக்கை கொடுத்து தூண்டி விட்டது..
சினிமாவும்  நல்லா குடிங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கு.கவலையை மறக்க பீர் பிராந்தி மாதிரி பெஸ்ட் சரக்கு எதுவும் இல்லீன்னு சொல்றாங்க..இப்படி  எல்லாருமே குடியை ஆதரிச்சால்  குடும்பங்களின் கதி என்னாகும்?
குடி குடியை கெடுக்கும்னு எழுதிக்காட்டிவிட்டு பாட்டு பாடி குடிக்கிறதை கவர்ச்சியா காட்டும்போது மனசு கெட்டுப்போகாதா?
பார் சீன வந்தாலே வரிவிலக்கு கட் னு சொல்றதுக்கு சென்சாருக்கு துப்பில்ல. துணிச்சல் இல்ல.அரசியல் வாதிகளும் வாயில பிளாஸ்திரியை போட்டு ஒட்டிக்கிறாங்க..எப்படிங்க உருப்படும்? இப்படி டி.வி.சினிமான்னு சக்தி வாய்ந்த மீடியம்லாம்  குடியை ஊக்குவிக்கும்போது  டாஸ்மாக்கை மூடுறதுதான் நல்லது. எல்லாமே பொய்னு போயிடக்கூடாதுங்கிற பயத்தில்தான் சொல்றேன். வாழ்க சுதந்திரம்.!