சனி, 31 அக்டோபர், 2015

நடிகைகள் பலவிதம்....!

என்னத்த சொல்றது போங்க. நடிககைகளை  பத்தி பலவிதமான கிசுகிசுக்களை  சினிமா நிருபர்கள் போட்டு கிழிக்கிறார்கள். .அதுக்கேத்தமாதிரிதான்  நடிகைகளும் இருக்காங்களான்னு  சில அப்பாவி அணில்கள் கிடைத்த பழக் கொட்டைகளை கொறிப்பது எல்லா காலங்களிலும் நடப்பதுதான். நடிகை ரேணு தேசாய் தெரியுமா?

ஆந்திர சூப்பர்ஸ்டார்களில் ஒருத்தரான பவனின் முன்னாள் மனைவி. கணவனை கை கழுவினாலும் சினிமாவை விட்டு விலகல.இவரு எந்த  மரத்துக்கு அடியில உக்காந்தார்னு தெரியல. ஞான ஒளி ஏணி போட்டு இறங்கி தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் போட்டிருக்கு.

''என்னமோ தெரியல. எனக்கு காலம்பற  எந்திரிச்சி கோவிலுக்கு போயி சாமியை கும்பிட்டாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.நான் தீவிர பக்தை  இல்லைன்னாலும்  கடவுள் சந்நிதானத்துக்கு போனதும் எதோ ஒரு சக்தி எனக்குள்ள  வந்திருது. திருமலை கோவிலுக்கு போகணும்" என்கிறார்  ரேணு.

அதென்னமோ தெரியல. கருப்பசாமி,பத்திரகாளி கோவிலுக்கு எந்த சினிமாக்காரரும் போனதா தெரியல. ஏழுமலையானை கும்பிடறுதுன்னா கோடிகளை கொட்டிக் கொடுக்கிறாங்க.அது கருப்பா வெள்ளையான்னு அந்த எழுமலையானுக்கு தெரியுமாங்கிறதும் டவுட்டுதான்!

இது இப்படின்னா இன்னொரு நடிகை ராகுல் பிரித் சிங்னு ஒரு நடிகை. இவங்கதான் இப்ப ஆந்திர ரசிகர்களுக்கு லட்டு.மத்த நடிகைகளுக்கு வேட்டு. முன்னணி நடிகைகள் எல்லோருக்கும் ஒவ்வாமை.தயாரிப்பாளர்கள் எல்லாரும்  கால்ஷீட் கிடைக்காதான்னு பசியாவரம் வாங்கி வச்சிருக்காங்க.  ஐம்பது லட்சம் வாங்கிக்கிட்டிருந்த ராகுல் இப்ப ஒன்னரை கோடி கேட்கிறார். கவர்ச்சிக்கு எல்லை இல்லை என்பதால் நடிகர்களும் இவரையே  சிபாரிசு  செய்கிறார்கள்..

நடிகைகள் பலவிதமுங்க.!

செவ்வாய், 13 அக்டோபர், 2015

ராஜ்கிரண் அரசியல் வாதியா?

சிவப்பு படத்தின் பத்திரிகையாளருக்கான தனிப்பட்ட காட்சி!

சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் நடந்தது. உணர்வலைகள் முட்டி மோதிய நிலையில் படம் முடிந்தது. நாயகனான ராஜ்கிரண் பேச வந்தார் .

அந்த மனிதரின் மனதில் அத்தனை ஆவேசம் இருப்பதை அன்றுதான் பார்க்க முடிந்தது..அவர் அரசியல் வாதி அல்லர்.ஆவேசப்பட்டுப் பேசி வாக்காளர்களை அள்ளிக்கொண்டு போகவேண்டிய அவசியமும் இல்லை.கண்ணீர் விட்டு கதறி தாய் குலத்தின் ஆதரவை பெறவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லாதவர்.

ஆனால் அவர் தமிழர் . நடிகர் என்பதையும் தாண்டி இன,மான உணர்வு மிகுந்தவர் என்பதை அன்று காண  முடிந்தது. இயக்குநர் மணிவண்ணன் இல்லாது போய்விட்டாரே  வருத்தமும் இல்லாது போகவில்லை.படமும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கதையாகவே இருக்கிறது.  உணர்வற்ற தமிழர்களை நினைத்து அவர் கண்ணீர் விட்டபோது சட்டம் நம் கையில் இல்லாது போயிற்றே என்கிற கோபம் வராமல் இல்லை.

என்ன செய்வது ....கையறுநிலை!

"லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள்.  பல்லாயிரக் கணக்கான போராளிகளை கொல்லப்பட்டனர்.தர்மம், சோசலிசம் என பேசிவருகிற இந்தியாவும் மேலைநாடுகளுடன் சேர்ந்துகொண்டு இனப் படுகொலையை நடத்தியது.நமது ஊடகங்களால் உண்மையை சொல்ல முடியவில்லை.பிரச்னைகளை சொல்லி அழக்கூட முடியவில்லை.இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை காரணமாக சினிமாவிலும் சொல்லமுடியவில்லை.ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்  என்று சொல்லிவிட்டு அதை விசாரிக்கும் உரிமையை அந்த திருடர்களிடமே விட்டிருக்கிறார்கள்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்களை உடைத்து நொறுக்கிய ,பவுத்தமே தெரியாத ராஜபக்சேவுக்கு திருப்பதி பெருமாளை தரிசிக்க சிவப்பு கம்பள வரவேற்பு .இதை சினிமாவில் சொல்ல முடியவில்லை.தமிழ் இனம் முற்றிலும் இற்றுப்போகவேண்டும் என்பதற்காக விதவைகளாகவும் ஆதரவு இல்லாமல் வாழ்கிற தமிழ்ப்பெண்களை சிங்கள வெறியர்கள் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.தட்டிக் கேட்பதற்கு விடுதலைப்புலிகளும் இல்லை. பிரபாகரனும் இல்லை.இந்திய எல்லையோரங்களில் இருந்து வருகிற அகதிகளுக்கு தமிழகத்தின் குளிர்ப் பிரதேசங்களில் வாழ வலி செய்கிற அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறது.யாரை திருப்தி படுத்த!? தமிழர்களை வாழவிடுங்கள்.அல்லது முடியாது என சொல்லிவிடுங்கள். தயவு செய்து அவர்களை வைத்து அரசியல் பண்ணாதீர்கள்" என்று ராஜ்கிரண் சொன்னபோது...

விட்டு வைப்பார்களா அரசியல்வாதிகள் என்றுதான் நினைக்க முடிந்தது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ஆச்சியின் மறைவு...
-----------------------------
ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட கோபி சாந்தா என்கிற மனோரமா இன்று நம்மிடையே இல்லை.வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள். அவைகளில் ஒன்றாக நம்முடைய ஆச்சியும்.

தொடர்ந்து படங்களில் அவரை பார்க்க இயலாவிட்டாலும் நம்மிடையே இருந்தார் என்பது ஆறுதலாக இருந்தது.பத்திரிகையாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் அவரை பார்த்து ' ஆச்சி...நான்  தேவிமணி " என அறிமுகம் செய்துகொண்டபோது "என்ன தம்பி,வெளையாடுறியா.இல்ல  நெனவு தப்பிப்போச்சான்னு பார்க்கிறியா?" என என்னை செல்லமாக கடிந்து கொண்டார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக நான் அழைக்கப்பட்டபோது  அவரை  வணங்கிவிட்டுத்தான் கலைஞானி கமல்ஹாசன் அருகிலும் மார்க்கண்டேயன் சிவகுமார் பக்கத்திலும் நின்று கொண்டு விருது பெற்றேன்.

அன்றைய விழாவில் உணர்ச்சி வயப்பட்டு 'இது கலைஞரின்' என்று  தொடங்கியவர் உடனே கலைஞர் கருணாநிதியின் வசனம் என சொல்லிவிட்டு புறநானூற்று வசனத்தை  சொன்ன போது கண்களில் கசிவு. அடுத்து அதே வேகத்தில் சென்னை வழக்கு மொழியில் ஒரு கதையை சொன்னவர்  சபையின் ஆரவாரத்தை கேட்டதாலோ என்னவோ கண்களில் நீர் கோர்த்துவிட்டது. "இப்படியே செத்துப் போனாலும் சந்தோஷம்தான்."என்றதும்  கமலும் சிவகுமாரும் பதறிப்போனார்கள். 'இப்படியெல்லாம் சொல்லகூடாது" என சிவகுமார் கடிந்து கொண்டதும் மேடையில் இருந்த மற்றவர்களும் பதறிப்போனார்கள்..ஆனால் அந்நிகழ்வுக்கு பின்னர் ஒரு வாரம்தான் உயிர் வாழ்ந்தார்..

ஆச்சிக்கு என் மீது அன்பு அதிகம். அவரை சந்திக்கிற போதெல்லாம் 'கழுத்து வலி எப்படி இருக்கு தம்பி' என கேட்க தவறுவதில்லை. இவரைப்போலவே  கேட்கும் இன்னொருவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்!

எனக்கு ஸ்பாண்டலைட்டிஸ் என்கிற கழுத்து வலி இருக்கிறது. கழுத்தில் பட்டை அணிந்தபடி ஆச்சியை சந்தித்த ஒரு நாள் பதறிப்போனார்.

'இதெல்லாம் வேணாம் தம்பி! அப்போலோவில் ஒரு டாக்டர் இருக்கார். அவரைப் போயி நான் சொன்னேன்னு பாரு." என்று சொல்லி பார்க்க வைத்தார். அவரை பார்த்ததின் விளைவு சில பயிற்சிகளை கற்றுக் கொண்டிருக்கிறேன்.உதவுகிற மனப்பான்மை ஆச்சிக்கு நிறைய உண்டு. சொந்த வாழ்க்கையில் காயங்கள் பட்டிருந்தாலும் காலப்போக்கில் அவைகளை மறந்து வாழத் தொடங்கினார்.முன்னிலும் அதிகமாக மனவலிமையை பெற்றிருந்தவர் இன்று இந்துக்களின் நம்பிக்கையின்படி இறைவனடி சேர்ந்திருக்கிறார்.