செவ்வாய், 24 நவம்பர், 2015

அதிதி கவர்ச்சி நடிகையாக மாறியது....ஏன்?

பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றம்.

குடும்பக் குத்துவிளக்காக நடிக்க ஆசைப்பட்டார் அதிதிராவ். ஆனால் குத்தாட்டம் போடும் அளவுக்கு அவரை இறக்கிவிட்டிருக்கிறது  தெலுகு சினிமா!

அவரை இந்த அளவுக்கு மாற்றியது எது?

தயாரிப்பாளர்களின் ஒட்டுமொத்த முடிவு!

காரத்தை மட்டுமல்ல ,கவர்ச்சியையும் அதே அளவுக்கு விரும்புகிறவர்கள்.

பிற மொழிகளில் கட்டுப்பெட்டியாக நடிக்கும் நடிகைகளையும் அதிக பணம்  கொடுத்து கவர்ச்சிப் பெட்டிக்குள்  அடக்கி விடுகிறார்கள்..

பணத்தின் எடை அதிகரிக்க அதிகரிக்க நடிகையின் உடம்பில் இருக்கும் ஆடைகளும் குறைகிறது. அளவும் குறைகிறது.

கவர்ச்சியின் உச்சம் எது என தீர்மானிக்கும் தணிக்கைக்குழுவின் கண்களுக்கும் கண்புரை வந்துவிடுகிறது..

என்ன செய்வது? ரசிகர்களுக்கு விருந்து என்பதாக சொல்லமுடியுமா?

நடிகைகளின் கட்டுடல் ரகசியம்.

கட்டான உடல் அமைப்புக் கொண்ட நடிகைகளைப் பார்த்ததுமே கண்களில்  காமம் சுரக்கிறது. ஆனால் வெளியில் சொல்வதற்கு வெட்கம்..

அதனால் அடிக்கடி நடிகைகளின் படத்தை பார்க்க மனது ஏங்குகிறது. தூண்டுகிறது. துவண்டு போகிறது.மஞ்சத்தில்  மயக்கம் !

"இதெல்லாம் கூடாதய்யா"- அறிவுரை சொல்கிறார் அனுஷ்கா. ஆண்களுக்கு  மட்டுமல்ல. பெண்களுக்கும்தான்!

'கட்டுடல் இல்லை என கலங்குகிறாயா பெண்ணே! அதற்கு அழகு நிலையம் செல்லத் தேவையில்லை.மன ரீதியான அணுகுமுறைதான் சிறந்த சிகிச்சை!

குண்டாகிவிட்டோமே என நினைத்து கடுமையான உணவுக் கட்டுப்பாடு. இது நல்லதல்ல.

முதலில் உன் உடலைக் காதலிக்கத் தொடங்கு! உடலின் தேவைகளை தெரிந்து கொள்! அதற்கேற்ற பயிற்சிகளைத் தொடங்கு!

ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகளை இஞ்சி இடுப்பழகி படத்தின் வழியாக  சொல்லியிருக்கிறார் ஆர்யா. மனைவிகளின் கனவுக் கதாநாயகனாக இருக்கவேண்டும் எப்படி என்பதை அவரின் கேரக்டர் வழியாக காட்டியிருக்கிறார்.

இருபது கிலோ எடை அதிகரித்திருந்தேன்.அதை குறைப்பதற்கு  அறுவை சிகிச்சையை நாடப்போவதிலை. எனக்கு எப்படி குறைக்கவேண்டும் என்பது தெரியும் .எடை கூடியதால் கால்களில் வலி . தற்போது எட்டு கிலோ குறைந்திருக்கிறது"

இப்படி சொல்கிறார் அனுஷ்கா.

திங்கள், 23 நவம்பர், 2015

சென்னையில் அரக்கத்தனமான மழை.

தீபாவளியை கொண்டாடிய மகிழ்ச்சி நீடிக்கக்கூடாது என்று இயற்கை எண்ணியதோ என்னவோ! ஊழிக்கூத்து ஆடிவிட்டது.

அழிப்பதற்கு இனி ஒன்றுமில்லை என ஓய்வு பெறுமா,இல்லை தண்டித்தது  போதாது என பொழியுமா என்பது அந்த ரமணனுக்கே வெளிச்சம்.!

'சந்து வழியா போகாதிங்க சார்"----எதிரில் வந்த ஆட்டோ டிரைவர் சொன்னார்.

சரி என்று நன்றி சொல்லிவிட்டு வடபழநி என்.எஸ்.கே.சாலையை நோக்கி பயணம். அருணாசலம் சாலையிலேயே பல பள்ளங்களை முட்டி எழுந்து விட்டு எனது ஸ்கூட்டர் காமராஜர் சிலையை கடந்து விட்டது.எப்படியோ நான் விழ வில்லை .வடபழநி பஸ்  நிலையம் செல்வதற்கே இருபது நிமிடம் ஆகிவிட்டது. பஸ்கள் கடந்து செல்லும் போதெல்லாம் அலையின் வீச்சு வண்டியை அசைத்ததுடன் பேண்ட்டையும் நனைத்தது.

சரி இதையெல்லாம் பார்த்தால் முடியுமா எப்படியாவது எழும்பூர் ஆபிஸ் போயாகவேண்டும்.

படகு இருந்தால்தான் கடந்து செல்ல முடியும் என்கிற நிலையில் பஸ்நிலையம் மிதக்கிறது.கழிவு நீர் கலந்து கருப்பு நிறமுடன் இருந்தது.ஆனால் விஜயா மருத்துவமனையை கடப்பதற்குள் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்ததைப் போன்ற வலி. அத்தனை பள்ளங்களை மழைவெள்ளம் மறைத்து வைத்திருக்கிறது.

சத்தியமுடன் சொல்கிறேன். செத்த பிணத்தைக் கூட கொண்டு செல்ல முடியாது.போக்குவரத்து நெரிசல் ரத்த அழுத்த நோயாளிகளை  ஒரு கை பார்க்காமல் விடாது.அரசும் மா நரகாட்சியும் லட்சக்கணக்கான மக்களின் வாயில் அரைபடாமல் தப்பவே முடியாது. ஜல்லிக்கல்லில் தாரை தொட்டு சாலைகளை போட்டிருக்கிறார்கள். ஜல்லிக்கல்லில் சக்கரம் செல்லும்போதெல்லாம் தடம் தடுமாறுகிறது.  நூறு அடி சாலையை அடைந்ததும் இடது பக்கம் திரும்பமுடியவில்லை.வெள்ளம்.!

ஆபீஸ் செல்வதா வீடு திரும்புவதா?

ஆட்டோக்காரர் 'அவ்ளோவ்  தூரம்லாம் போவாதே சார்.ரிஸ்க்" என்று எச்சரிக்கவே ஆபிசுக்கு லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு  திரும்ப முயற்சித்தால்  முடியவில்லை.

போக்குவரத்து நெரிசல். காலை எட்டு நாற்பத்தைந்துக்கு  கிளம்பியவன் ஒரு கிலோமீட்டரை க் கூட கடக்கமுடியவில்லை என்றால்?

சென்னை மாநகரம் எவ்வளவு சிதைந்திருக்கிறது !

ஞாயிறு, 8 நவம்பர், 2015

தீபாவளியை கொண்டாடினால் இழுக்கா?

மதிவாணன் வந்தான். மனதில் எதோ கவலை  இருப்பதை முகம் காட்டியது,

'என்னப்பா ,டாஸ்மாக் கடையை மூடிட்டானா?'-அவனின் கவலை  அதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்!

'இல்லை நண்பா! தீபாவளி நம்முடைய பண்டிகை இல்லையாமே? உண்மையா?"

'ஆமா,அதனால உனக்கு என்ன பிரச்னை? டிரஸ் எடுக்காம விட்டுட்டியா? கொண்டாடவேணாம்னு வீட்டில சொல்லிட்டியா?"

'அப்படியெல்லாம் இல்ல. தமிழர் பண்டிகை இல்லைங்கிறத இப்பத்தான்  ஒருத்தன் என்கிட்டே சொன்னான்.எனக்கு என்னவோ மாதிரி ஆயிருச்சு!நெஞ்சில நெருஞ்சி முள்ளை போட்டு அதுக்கு மேல பனியனை போட்டுக்கிட்ட மாதிரி ஆயிருச்சு!" என்றவனை மேலும் கீழுமாக  பார்த்தேன்..
உண்மையாகவே வருத்தப்படுகிறானா அல்லது நடிக்கிறானா என்பது தெரியவில்லை.

பிறகெதுக்கு இப்படி ஒரு கவலை? தீபாவளி  தமிழர் விழா இல்லை என்று மேடைகளில் கிழிய கிழிய பேசியவர்களெல்லாம்  மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருக்கிறபோது  மதிவாணனுக்கு மட்டும் என்ன வந்தது..

'நம்ம விழாவாக  இல்லேன்னா அது எப்படி இங்கே வந்தது? என்னால நம்ப முடியல நண்பா!எத்தனை வருஷமா கொண்டாடிட்டு வர்றோம்.அப்ப நம்ம  மூதாதையரெல்லாம்  முட்டாள்களா?'

'ஆமா! பதினாறாம் நூற்றாண்டிலிருந்து  முட்டாள்களாக அடிமைகளாக  வாழ்ந்திட்டிருக்கிறோம்..அதனாலென்ன அந்த வாழ்க்கையிலும் ஒரு சுகம் இருக்குல்ல. புது துணிகள்,வகை வகையான பலகாரங்கள்.பட்டாசுகள். புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க மாமனார் வீட்டில போய் அவங்க தலையில  செலவை கட்டலாம்.இப்படி இருக்குல்ல.அதெல்லாம் கிளுகிளுப்பா இருக்கிறதாலதான் காலம் காலமா கொண்டாடுறோம். துணிக்கடைகளில்  கோடிக்கணக்கில் விற்பனையாகுதுள்ள.பரம ஏழையிலிருந்து பணக்காரன் வரை அவனவன் தகுதிக்கு கொண்டாடிறோம்ல!நமக்கு வசதியா இருக்கிற எதையும் எடுத்து முதுகை சொறிஞ்சிக்கலாம்.அது கக்கூஸ் கழுவுறதா இருந்தாலும் கவலைப்படுறதில்ல..பழகிப்போச்சுப்பா! கலர் கலரா வெடிக்கிற மத்தாப்புல தமிழன் அவன் மானத்தை சேர்த்து கொளுத்திட்டான்."

'இந்த தீபாவளி எப்படி இங்க வந்தது?'

'முத முதலாக மதுரைக்குத்தான் வந்தது.விஜயநகரத்திலிருந்து  மதுரைக்கு  குடியேறிய சவுராஷ்டிரர்களால் மதுரையை ஆண்ட நாயக்கர்களாலும் ,தஞ்சை ,செஞ்சி நாயக்கர்களாலும்  தீபாவளி புகுத்தப்பட்டது. தீபாவளி பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடவேயில்லை.சென்னை,காஞ்சி,திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தீபாவளியன்று புதுத்துணிகள் போடும் பழக்கம்  அண்மைக்காலம் வரை இருந்ததில்லை என்கிறார் தமிழ் அறிஞர் அ.கி.பரந்தாமனார்  பதிவு செய்திருக்கிறார்..அது சரி உன் கவலை என்ன? அத சொல்லு!"

'வெள்ளைப்பாண்டியிடம் தீபாவளி நம்ம பண்டிகைதான்னு பந்தயம் கட்டினேன். அதுக்குதான் " என்றான் மதிவாணன்.

இப்படித்தான் நாம் உருப்படமுடியாம போயிட்டோம்.