திங்கள், 23 நவம்பர், 2015

சென்னையில் அரக்கத்தனமான மழை.

தீபாவளியை கொண்டாடிய மகிழ்ச்சி நீடிக்கக்கூடாது என்று இயற்கை எண்ணியதோ என்னவோ! ஊழிக்கூத்து ஆடிவிட்டது.

அழிப்பதற்கு இனி ஒன்றுமில்லை என ஓய்வு பெறுமா,இல்லை தண்டித்தது  போதாது என பொழியுமா என்பது அந்த ரமணனுக்கே வெளிச்சம்.!

'சந்து வழியா போகாதிங்க சார்"----எதிரில் வந்த ஆட்டோ டிரைவர் சொன்னார்.

சரி என்று நன்றி சொல்லிவிட்டு வடபழநி என்.எஸ்.கே.சாலையை நோக்கி பயணம். அருணாசலம் சாலையிலேயே பல பள்ளங்களை முட்டி எழுந்து விட்டு எனது ஸ்கூட்டர் காமராஜர் சிலையை கடந்து விட்டது.எப்படியோ நான் விழ வில்லை .வடபழநி பஸ்  நிலையம் செல்வதற்கே இருபது நிமிடம் ஆகிவிட்டது. பஸ்கள் கடந்து செல்லும் போதெல்லாம் அலையின் வீச்சு வண்டியை அசைத்ததுடன் பேண்ட்டையும் நனைத்தது.

சரி இதையெல்லாம் பார்த்தால் முடியுமா எப்படியாவது எழும்பூர் ஆபிஸ் போயாகவேண்டும்.

படகு இருந்தால்தான் கடந்து செல்ல முடியும் என்கிற நிலையில் பஸ்நிலையம் மிதக்கிறது.கழிவு நீர் கலந்து கருப்பு நிறமுடன் இருந்தது.ஆனால் விஜயா மருத்துவமனையை கடப்பதற்குள் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்ததைப் போன்ற வலி. அத்தனை பள்ளங்களை மழைவெள்ளம் மறைத்து வைத்திருக்கிறது.

சத்தியமுடன் சொல்கிறேன். செத்த பிணத்தைக் கூட கொண்டு செல்ல முடியாது.போக்குவரத்து நெரிசல் ரத்த அழுத்த நோயாளிகளை  ஒரு கை பார்க்காமல் விடாது.அரசும் மா நரகாட்சியும் லட்சக்கணக்கான மக்களின் வாயில் அரைபடாமல் தப்பவே முடியாது. ஜல்லிக்கல்லில் தாரை தொட்டு சாலைகளை போட்டிருக்கிறார்கள். ஜல்லிக்கல்லில் சக்கரம் செல்லும்போதெல்லாம் தடம் தடுமாறுகிறது.  நூறு அடி சாலையை அடைந்ததும் இடது பக்கம் திரும்பமுடியவில்லை.வெள்ளம்.!

ஆபீஸ் செல்வதா வீடு திரும்புவதா?

ஆட்டோக்காரர் 'அவ்ளோவ்  தூரம்லாம் போவாதே சார்.ரிஸ்க்" என்று எச்சரிக்கவே ஆபிசுக்கு லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு  திரும்ப முயற்சித்தால்  முடியவில்லை.

போக்குவரத்து நெரிசல். காலை எட்டு நாற்பத்தைந்துக்கு  கிளம்பியவன் ஒரு கிலோமீட்டரை க் கூட கடக்கமுடியவில்லை என்றால்?

சென்னை மாநகரம் எவ்வளவு சிதைந்திருக்கிறது !

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...