வியாழன், 31 டிசம்பர், 2015

புது வருச உறுதிமொழி என்னங்க?

எல்லா மக்களுக்கும்  வணக்கம்.

புது வருசம் பொறந்தாச்சு! நீங்க என்ன உறுதி மொழி எடுத்திங்கன்னு  ஆளாளுக்கு கேட்டு தொலச்சிருப்பாங்க, ஆனா யாருமே  உண்மையை சொல்லப்போறதில்ல.எவனாவது இந்த வருசத்திலிருந்து  நான் சரக்கடிக்க  மாட்டேன்,தம் அடிக்கமாட்டேன்னா நம்ப முடியும்கிறிங்களா? அடுத்த நாளே யாருக்கும் தெரியாம வேற ஏரியாவ்ல போய் போட்டுட்டு வந்திருவான்.

எந்த கவர்மெண்டு ஆபிசராவது லஞ்சம் வாங்க மாட்டேன்னு பெத்த பிள்ளையை போட்டு தாண்டுவானா?

எந்த அரசியல்வாதியாவது  போய் சொல்லப்போறதில்ல. மக்கள் பணத்தை  மூட்டை அடிக்கமாட்டேன்னு சொல்வானுகளா? நான் கொள்ளை அடிச்ச பணத்தை  ஜனங்க முன்னாடி  ஒப்படைக்கபோறேன்னு வாய் வார்த்தையாவது சொல்வானுகளா?

ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டேன்னு பொதுஜனம் சொல்லத்தயாரா? கொடுக்கமாட்டேன்னு அவுக அவுக ஆத்தா மேல, பொண்டாட்டி பிள்ளை மேல சத்தியம் பண்ண வேட்பாளர்கள் ரெடியா?

மாட்டானுக.

இந்த வருசத்திலேர்ந்து சர்க்காருக்கு ஒழுங்கா கணக்கு காட்டுவேன்னு மைக்  போட்டு யாராவது சொல்வானுகளா?

மீடியாவ்ல பிரபலங்கள் சினிமா புள்ளிகள் சொல்ற உறுதி மொழி எல்லாம்  அப்படியே நடக்கிதா? என்கதையை  திருடிட்டான் கொரியாவ்லயிருந்து சுட்டுட்டான்னு தானே சொல்றானுக.

அரசியல்வாதிகள் தனக்கு இத்தனை சின்னவீடு இருக்குன்னு கட்டுன பொண்டாட்டிகிட்ட சொன்னதுண்டா? தாலி கட்டுனவளுக்கே விசுவாசமில்லாதவன் நாட்டு மக்களுக்கா விசுவாசமாக இருப்பான்?

அப்புறம் எதுக்கு உறுதிமொழி புண்ணாக்குன்னு  பந்த   உருட்டிப் பாக்கிறீங்க?
சாதி மதத்தை வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கிறவங்க  திருந்துனாதான்  சிலது சாத்தியம் ஆகும். எல்லாமே உருப்படியா நடக்கணும்னா அது நம்ம காலத்தில நடக்காது.அதுனால நீங்க புது வருச உறுதிமொழி எடுக்கப்போறேன்னு சொல்லி வாயை விட்டுட்டு பிறகு மனசாட்சியிடம்  மன்னிப்பு கேட்டு தலை குனியவேண்டியிருக்கும்.

நான் சொன்னது சரின்னா  நாலு வார்த்தை  எழுதுங்க. இல்லேன்னா திட்டுங்க. ரெண்டுல ஒன்னு செய்யுங்க.நானாவது  திருந்தப்பார்க்கிறேன்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பீப் சாங் ...பீப் சாங்....பீப் சாங்...!

பேய் மழை  பேஞ்சதும் தெரியல.அது எத்தனை பேரை கொன்னுட்டு போனதும்கிறதும்  தெரியல. வெள்ளம்  வடிஞ்சதா, வஞ்சம் பண்ணிட்டு போயிருச்சாங்கிறதும் புரியல. ஆனா  ஆணு பொண்ணு குஞ்சு குளுவானுகளுக்கெல்லாம்  பீப் சாங் என்னன்னு  தெரியிது.அத புரிய வச்ச  பெரும நம்ம மீடியாக்களுக்கு  மட்டுமே  உரிமை.

கொந்தளிக்க வச்சிட்டானுங்களே மவராசனுங்க!

நானா வெளியிட்டேன்னு கேட்கிறார்  சிம்பு. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே  இல்லேன்கிறார்  அனிருத்து. அப்பா டி.ஆரும்,அம்மா  உஷாவும்  நாட்டை விட்டே கிளம்பிடுறோம்னு கண்ணீர்  விடுறாங்க.கோலம் போடக்கூட  முடியாம வாசல்ல கேமராவை வச்சிக்கிட்டு இந்த கொட்டுற பனியில நிக்கிறிங்களே  சாமிகளானு வருத்தப்படுறாங்க.

என்ன வருத்தப்பட்டு என்னாகப்போகுது. வழக்குக வரிசை கட்டி நின்னு  இப்ப வந்த வழியே தெரியாமல் போச்சு! எலக்சன் வருதுல்ல.

எனக்கென்ன கவலைன்னா இந்த  பீப்பை விட பெரிய  பீப்பாய் சைசுக்கு  ஒரு வார்த்தையை  சென்சார் புண்ணியவானுக  அனுமதிச்சிருந்தாங்களே  அது  சரிதானுங்களா?

என்னன்னு  தெரியாம மண்டையை  உடைச்சிக்கிட்டு  கிடங்க!

டாப்சியின் சீக்ரெட்!

எட்டுறவரை  தவ்விப்  பாரு.எட்டலைன்னா எவன் தோளிலாவது  ஏறி உக்காந்து பழத்தை பறிச்சிட்டு எறங்கிடு. இது எவன் சொன்ன புத்திமதியோ  இன்னிக்கி அரசியல் தலைவர்களில் இருந்து  ஆன்மீகப் பழங்கள் வரை  கடைப் பிடிக்கிறது  இதைத்தான். எவனுக்கும் கூச்ச நாசம் கிடையாது. தலைவர் பதவிங்கிறதுக்கு மரியாதையே இல்லாமப் போச்சு!

அது மாதிரித்தான்  சினிமாவ்லேயும்!

இழுத்துப் போத்திக்கிட்டு நடிப்பாங்க. கூட கொஞ்சம் துட்டு கிடைக்கிதுன்னா  ஆந்திராவ்ல எப்படி வேணும்னாலும்  நடிப்பாங்க. அதை பாத்து நம்மளவங்க இன்னும் அதிகமா துட்டு வெட்டி சென்சாருக்கு  சிக்காம காரியத்தை  காட்டிடுவாங்க.இப்படி பல நடிகைகள் உண்டு! ஆரம்பத்தில சான்ஸ் கேட்டுவந்தப்ப  எந்தெந்த ஆளுங்க இடைஞ்சலா  இருந்தாங்களோ  அவங்களையெல்லாம் ரெண்டே படம் நடிச்சு முடிச்சு ஹிட் அடிச்சதும் இடைஞ்சல் பண்ணின ஆளுங்கெல்லாம் சரணம் பாட ஆரம்பிச்சிடுவாங்க.இப்படி கொஞ்ச காலம் ஓடும்.

ஆனா நம்ம டாப்சி கதை வேற மாதிரி. தெலுங்கிலும் தமிழிலும் நல்ல கேரக்டர்கள் பண்ணினாலும் அளவோடுதான் கிளாமர் இருந்தது. அதுவும் போதல. தமிழுக்கு புது ஆளுங்க தாராள மனசோடு வந்ததால் இங்க சப்போர்ட்டுக்கும் ஆள் இல்லாமல் போச்சு. ஆந்திரக்கரையோரம் ஒதுங்கி  பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிருக்கு.

அதுக்காக அட்வான்ஸ் படம்தான் இது!

பாப்பா பொழச்சுக்கும்!

திங்கள், 28 டிசம்பர், 2015

ரஜினி உயிர் தப்பிய அதிசயம்.!

முட்டாள்த்தனமான  நம்பிக்கைகளுக்கு இன்றும் அடிமையாகி கிடக்கிறது  தமிழ்ச்சினிமா! பெயர் வைப்பதற்கும்  இயக்குநரை நியமிப்பதற்கும் ஜாதகம்  பார்க்கிற கேவலம் இங்கு உண்டு.

ஒரு காலத்தில் கற்புக்கரசி கண்ணகி பெயரில் ஒரு படம் வந்தது. பி.யூ.சின்னப்பாவும் பி.கண்ணாம்பாவும் நடித்திருந்தது. மதுரையில் அந்த படத்தை திரையிட்டபோது  தியேட்டரில் பெருந் தீ. கொட்டகை முழுவதும்  நாசமாகியது.மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் இன்னும் தணியாததால் அந்த தியேட்டர் எரிந்து நாசமாகியதாக  ஊரே பேசியது. தமிழகமும் நம்பியது.

உக்கிரமான கடவுளர்களின் பெயரில் படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் என்பதைவிட அச்சப்பட்டனர் என்று சொல்வதே சரியாகும்.
 கண்ணகி பட நிகழ்வுக்கு பின்னர் நெடுங்காலம் கடந்து  பத்ரகாளி என்கிற பெயரில் ஒருவர் படம் தயாரித்தார். சிவகுமாரும் ராணி சந்திராவும் நடித்திருந்தனர். படம் முழுமை பெறுவதற்குள்  ராணி சந்திரா விமான விபத்தில் சிக்கி மாண்டு போனார்.

முன்னை  விட கோடம்பாக்கத்துக்கு  நம்பிக்கை அதிகமாகியது. காளி  என்றாலே கதறி சிதறினார்கள் தயாரிப்பாளர்கள்..ஆனாலும் சிலர் விதி விளக்காக இருப்பார்கள் அல்லவா!

அவர்களில் ஒருவர்தான்  மலையாள இயக்குநர் ஐ.வி.சசி.! நடிகை சீமாவை  நேசித்து கரம் பற்றியவர்,

அவருக்கே உரிய தைரியம்.' காளி" என்கிற பெயரில்  படம் எடுக்க வைத்தது. நாயகனாக நடித்தவர் ரஜினிகாந்த். அன்றைய  நிலையில் அவர் அத்தகைய நம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்ததில்லை.சற்று  முரட்டுத்தனமாகவும்  இருப்பார்.

சென்னையை ஒட்டிய பகுதியில் குதிரைகளுடன் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கினார் சசி.! திடீரென தீ பற்றியது. பற்றிய தீயில் குதிரைகள் சில கருகின. கரும் புகை சூழ்ந்ததில் ரஜினி என்ன ஆனார் என்பதே  தெரியவில்லை.மயக்கமுற்ற அவரை ஸ்டண்ட் வீரர்கள்  தூக்கிகொண்டு  வந்தனர். பலருக்கு நெருப்புக்காயம். கோடம்பாக்கமே கலங்கிப் போனது.

எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் காளி  பட  தீ விபத்தை  கோலிவுட்டும்  மறக்கவில்லை.வளரும் இன்றைய நடிகர்களும்  மறக்கவில்லை..கபாலிக்கு  முன்னதாக பரிசீலிக்கப்பட்ட பெயர் காளிதான். கார்த்தி  நடிப்பதாக இருந்த இன்னொரு படத்தின் பெயரும் காளி தான்.  உக்கிர காளியின் பெயரை வைத்தால்  என்ன நடக்குமோ என்கிற அச்சம் அவர்களை  பெயர் மாற்ற வைத்துவிட்டது..

கண்ணகி என்கிற பெயர் மட்டுமல்ல அவரது சிலை கூட சில காலம் சென்னையில்  இருட்டறையில் வைக்கப்பட்ட வரலாறையும் மறக்க இயலாது.

இனி அடுத்து  விஜயகாந்த் சுடப்பட்ட  நிகழ்வை  பார்க்கலாம்.

---நன்றி. ராணி  வார இதழ்.


   

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

விபத்துகளில் சிக்கிய வி.ஐ.பி .நடிகர்கள்.

ஜாலங்கள் நிறைந்தது சினிமா. நாயக நடிகர்களும் சரி. வில்லன் நடிகர்களும் சரி விபத்துகளை சந்திக்காதவர்களே  இருக்க முடியாது.. இவ்வளவுக்கும்  அவர்களுக்கு  டூப்  இருக்கவே  செய்வார்கள். அதிகம் காயப்ப்படுபவர்களும்  அவர்கள்தான்.

உயிருக்கு உத்திரவாதம்  என்பது இல்லை.

ஆனால் பெயரும் புகழும்  நடிகர்களுக்குதான்!

சில நடிகர்கள் விதிவிலக்கு.

வரம் கிரம் வாங்கி வந்திருப்பாரோ என்னவோ,! தல அஜித்துக்கு  ஆஸ்பத்திரி  ராசி!  அவர் உடம்பில் கத்தி வைக்காத இடமே இல்லை.சீறி சென்ற காரில்  பாய்ந்து , பிடி நழுவி  சாலையில் இழுத்து செல்லப்பட்டு  முட்டி கிழிந்தது.
சிகிச்சையில் பிளேட் வைக்கப்பட்டது. அந்த பிளேட் தான் நடனம் ஆடும்போது முறிந்து  வீட்டில்  படுக்கவைத்திருக்கிறது.

குறைந்தது ஆறு மாதமாவது  ஓய்வு வேண்டும்.

இன்பக்கனவு  நாடகத்தில்  குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி சுற்றுவது மக்கள் திலகத்தின் இயல்பு.அப்படி ஒரு நாள் தூக்கி சுற்றியபோது  மழுக்கென சப்தம். பாலன்ஸ் தவறிவிட்டது. எம்.ஜி.ஆர் .கீழே கிடக்கிறார். அவர் மீது குண்டுமணி! எம்.ஜி.ஆரின்  காலில் எலும்பு முறிவு. மாதக்கணக்கில் ஓய்வு!

கேரளாவில்  தச்சோளியம்பு  என்கிற படத்தின் படப்பிடிப்பு. நடிகர்திலகம் சிவாஜி கணேசன்  கையில் கேடயமும் மற்றொரு கையில் வாளுமாக  மோதுகிறார்.  பாறை தடுக்கி விழ  கையில் எலும்பு  முறிவு. பிளேட் வைத்துவிட்டார்கள். வீட்டில் ஓய்வில் இருந்த அவரை பார்க்க வந்தார்   எம்.ஜி.ஆர்.

'தம்பி ! ஸ்டுடியோவில்  கிளாப்ஸ் தட்டி நடிப்பதை விட மக்களிடம் கிளாப்ஸ் வாங்குவதுதான் கஷ்டம். ஆனால் அதுதான் உனக்கு சுலபம். அதுக்காக ரிஸ்க்  எடுக்கக்கூடாது" என்று அட்வைஸ் பண்ணினார்.

"அது சரிண்ணே...கையில் போட்டிருக்கிற கட்டு கூட  எனக்கு பெரிசா தெரியல. ஆனால் உள்ளே அரிக்கிதுண்ணே! எப்படி  சொரியிறதுன்னு தெரியல!"

 'கோழி  இறகை உள்ளே விட்டு லேசா தடவி விடு சுகமா இருக்கும்" என்று  ஐடியா கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இந்த சம்பவத்தை பலதடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்  நடிகர்திலகம்.

எலும்பு முறிவுக்கு பின்னர் வீட்டுக்கு  வந்த  சிவாஜியிடம்  செய்தி போடும்  நோக்கத்துடன்  போனேன்.

''எப்படிண்ணே இந்த ஆக்சிடென்ட்  நடந்துச்சு?" என்று கேட்டேன்.

மேலும் கீழும் பார்த்தார். '' வேணும்னா விழுந்து காட்டவா? இதுவரை  வர்றவனெல்லாம்  இப்படித்தாண்டா  கேக்கிறானுக. நீ நூத்தி சொச்சமாவது  ஆளு! என்னால  முடியலடா ராசா! " சிரிக்காமல்  சொல்கிறார்  திலகம்.

"அதுக்கில்லேண்ணே! இதுவரை என்கிட்டே  எவ்வளவோ பேர் கேட்டுட்டாய்ங்க!"

'' அத்தனைபேரையும் எங்கிட்ட அனுப்பி வையி!  டே.. நீ அப்படி  எழுதுனாலும் எழுதிடுவே  படுவா! அண்ணன்  வேலை வெட்டி இல்லாம  இருக்கிறதா  நெனச்சிடப் போறாங்க." என்றார்  சிரித்தபடியே!

இப்படி  எத்தனையோ  இருக்கின்றன.

அடுத்து  சூப்பர் ஸ்டார்  உயிர் தப்பிய  சம்பவம்....   நன்றி. ராணி  வார இதழ்.

சனி, 26 டிசம்பர், 2015

நடிகையை விரட்டிய இயக்குநர்....

சினிமா என்பது சூதாட்டமாக இருக்கலாம்.வெற்றி என்பது எவர்க்குமே  உறுதி  இல்லை. சூப்பர்ஸ்டார்  ரஜினி நடித்த படமே நட்டம் என்று சொல்லி இழப்பீடு  கேட்பதற்கும் தயாராகவே  இருக்கிறார்கள். மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் வந்த பிறகு ஒரு படம் ஒரு வாரத்தை தாண்டுவதற்கே பீம புஷ்டி அல்வா  சாப்பிடவேண்டியதாக இருக்கிறது.

இப்படியெல்லாம் உண்மை நிலைமை இருந்தாலும் உல்லாச வாழ்க்கை என்பது சினிமாக்காரர்களுக்கு  மட்டுமே உரியதாக இருக்கிறது. அவர்கள்  மது மாது சுகம் என மகிழ்ச்சியாகவே  வாழ்கிறார்கள். சேர்த்த பணத்தை சேமிப்புகளில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.சிலர்  அதீத நம்பிக்கை  காரணமாக  சினிமாவில் முதலீடு செய்து ஜெயிக்கிறார்கள். பலர் தோற்கிறார்கள்.இதெல்லாம் சினிமாவில் சாதாரணம் என்றாகிவிட்டது.

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்தவர்கள் லட்சாதிபதியாக  வாழ்வதற்கும் தயாராக இருப்பதில்லை.அவர்களால் ஏழையாக கண்ணீர் விட்டு நடிக்க இயலுமே தவிர வாழ முடியாது.ஏழையாகிவிட்டோமே என்கிற நினைப்பே  அவர்களை நோயாளியாக்கிவிடும். இப்படி பாயில் படுத்து போய்ச்சேர்ந்தவர்கள் அதிகம் .

உதாரணமாக  ஸ்ரீதேவியை  எடுத்துக்கொள்ளலாம். வயதுக்கு வந்த இரண்டு  பெண்கள்..இந்த நிலையிலும்  கவர்ச்சியாக போஸ் கொடுத்து விளம்பரம்  தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி. வாய்ப்புகளுக்கு வழி வகுத்துக் கொடுத்து  இருக்கிறார். எல்லாமே  பணத்தேவைக்காகத்தானே! இங்கிலிஸ் -விங்கிலிஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு  சிலர் அவரை தேடிவந்தனர். கோடிகளில் பேசியதால் பலர் ஓடிவிட்டார்கள். புலி தயாரிப்பாளர்கள்  ஸ்ரீதேவியின் வக்கீல்  நோட்டிசுக்கு ரகசியமாக  வழி  தேடிக்கொண்டுவிட்டனர்

முதிர்ந்தாலும்  கனவுக்கன்னி  என்கிற  பட்டத்தை துறக்க மனமில்லை.

அது அவரின்  உறுதியை மட்டுமே  காட்டுகிறது. தோற்றமோ?

சரி அது  ஸ்ரீதேவி மேட்டர்.

நம்ம  ஆந்திரா பக்கம் வந்தால்  பளிச்சென கண்ணில்  மின்னல் வெட்டுகிறது.

பூரி ஜெகநாத் ..ஆந்திராவின்  பெரிய இயக்குநர். இவரும்  நடிகை சார்மியும்  நல்ல நட்புடன்  இருந்து வந்தார்கள். திடீரென நட்பு  புட்டுக்கொண்டுவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக மனைவி லாவண்யாவுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு போகாத பூரி தற்போது தனது அடுத்த படத்துக்காக மனைவியை அழைத்துக்கொண்டு  பாரின் பறக்கிறாராம். தன ஆபிஸ் பக்கமே தலை காட்டக்கூடாது என்று சார்மியை எச்சரித்து  அனுப்பிவிட்டாராம்.

இப்படியும்  வாழத்தானே செய்கிறார்கள்.
.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நினைத்துப் பார்க்கிறேன்........

ஒவ்வொரு நாள் விடியலும் அவன் உயிர்ப்பித்திருப்பதை உறுதி செய்கிற நாள் தானே!

இன்றைய விடியலும் என்னை உறுதி செய்தது.

தனுஷ்கோடி புண்ணிய பூமி என்பார்கள்.அது என்ன பாவம் செய்திருந்ததோ  இயற்கை காவு வாங்கிவிட்டது. கடும் புயலின் சீற்றத்துக்கு இறையாகி விட்டது.தடம் தெரியாமல் போனது அந்த புண்ணியபூமி..நான் செய்தியாளனாக உருவு கொண்டது அந்த 1962. ம் ஆண்டில்தான்.2015- முடியப்போகிறது.நான் பத்திரிகையாளனாக பணிசெய்துகொண்டிருப்பது இன்னமும் தொடர்கிறது.52 ஆண்டுகளாக !

இந்த துறையை விட்டு வேறு துறையில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதால் போகாமல் இருந்துவிட்டேனா .....?

தெரியவில்லை.இடையில் பல ஆண்டுகள் மதுவுக்கு அடிமையாக வாழ்ந்ததால் நேர்ந்த விபத்தா?

அல்லது மனைவி மதுரையிலும் நான் சென்னையிலும் வாழ்ந்த அந்த கொடிய இடைவேளை காரணமாக?

சொல்லத்தெரியவில்லை. இன்று சொந்தமாக எதுவும் இல்லை.வீடு இல்லை.மனைவியும் இறந்துவிட்டார்.பிள்ளைகளும் தனித்தனியாக!

நான் இந்த வயதிலும் வேலைக்கு செல்வது எனது இறுதிப் பயண செலவுக்கும் அதுவரை நான் உயிர் வாழ்வதற்கும் தான்! வீடு கார் மனை போன்றவைக்காக அல்ல. இன்றுவரை  என்னுடன்  இணைந்து பயணிப்பது ஐந்து ஆண்டுகளுக்கு  முன்னர்  வாங்கிய ஆக்சஸ்  ஸ்கூட்டர் தான்!

நான் மகிழ்ச்சியாக இருப்பது எனது பிள்ளைகள்  நல்லவர்களாக  இருப்பதால்தான்! நான் தனியாக வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை என்றாலும் எனது  விருப்பம் அதுவல்லவே...!

திரை உலகிலும் அரசியல் உலகிலும்  முன்னணியாக இருந்தவர்களுடன்  எனது பத்திரிக்கை பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர்  ராஜாஜி,பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியவர் பக்தவத்சலம், இன்றைய முதல்வர்  ஜெயலலிதா  எம்.ஜி.ஆர்,, சிவாஜி, கமல்,ரஜினி, சிவகுமார் ,பாரதிராஜா பாலுமகேந்திரா உள்பட இன்றைய முன்னணி நடிகர்கள் நடிகைகள், கவிப்பேரரசு வைரமுத்து  ஆகியோருடன்  பழகி பகிர்ந்ததே  பெருமை. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று மாவீரன் தமிழின காவலன் பிரபாகருடன்  ஓராண்டு காலம் பழகியிருக்கிறேன்.நான் பெற்ற விருதுகளில் இதுவே உயர்ந்த விருது..

எனது நினைவுகளில் எவ்வளவோ பொதிந்து உள்ளன.

எழுதும் எண்ணமும் இருக்கிறது.

மூலதனம் கிடைக்கும் வரை காத்திருப்பேன்

நல்லதே நடக்கும்.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

வெளுத்து வாங்கிய மழை.....

நாலு நாட்களாக  ஆபிசுக்கு செல்லவே இல்லை..வீட்டைச்சுற்றி மழை வெள்ளம் ! சிற்றாறாக ஓடுகிறது!. என்னுடைய ஸ்கூட்டரும் மக்கர் பண்ணுகிறது.பாவம்....  அதுவும் ஐம்பதாயிரம் கிலோ மீட்டர் வரை  ஓடி களைத்து இருக்கிறது ..அடித்து உதைத்து  கிளப்பினால் அது   என்னை வஞ்சித்து விடலாம் .பாதியிலேயே இந்த  படுபாவியை கடும் மழையில் தள்ளவைத்துவிடலாம்.

பயமாக இருந்தது.

மழையும் விடுவதாக இல்லை.வீட்டை பூட்டிவிட்டு வாசலில் நின்றபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

''என்ன சார் .மழைக்கு பயந்து வீட்டிலேயே செட்டில் ஆகப் போறிங்களா? ஒய்பும் வீட்டில  இல்லையே! லஞ்சுக்கு இன்னிக்கி  லங்கனம்தானா?'

அடுத்த வீட்டு சுவாமிநாதன் காரை விட்டு இறங்காமலேயே  வாசலில்  காரை நிறுத்திக்கொண்டு   கேட்டார். ஜாலியானவர்.வருமானம் அவ்வளாக  இல்லாவிட்டாலும் சொந்தக் கார்,வீடு என வாழ்கிறவர். அடிக்கடி மனைவியுடன் சண்டை .மாமி இப்போதும்  வீட்டில் இல்லை.மதுரைக்குப் போய் இருக்கிறாள்...பிறந்தாத்து பைத்தியம். மாமி ஊரில் இல்லாத நேரங்களில் அவருக்கு  ரெமி மார்ட்டின் தான் உதவி. இரண்டே இரண்டு பெக்.லிமிட்  தாண்ட மாட்டார்.

'பைக் கிளம்பலே. .போராடிப் பார்த்தேன் .ஸ்ட்ரைக் பண்ணுது.  அதான்  லீவு  போடலாமான்னு பார்க்கிறேன்"  என்றேன்.

''எதுக்கு மிஸ்டர் ராமநாதன் ....வீட்டில எவ்வளவு நேரம்தான்  தனியா   இருப்பிங்க. ஆபீசுக்கு போனாலும் அரட்டை அடிச்சிட்டு நேரத்தை போக்கலாமே.வாங்க வந்து கார்ல ஏறுங்க.வழியில டிராப் பண்றேன் " என்றபடியே காரின் கதவை திறந்தார்.

அமர்ந்ததும் மெதுவாக கார் நகர்ந்தது. 'மாமி போன் பண்ணலியா?"

நேரம் போகணுமே! அதான் பேச்சுக் கொடுத்தேன் .

'பேசி என்ன ஆகப் போறது?' சலித்துக் கொண்டவர் 'நேத்திக்கி நைட்ல பேசுனா!
மழை பெய்யறதேன்னு பெக்கை ஏத்திடாதிங்கோன்னு அட்வைஸ்  பண்ணினா....சாப்பாடு பத்தி ஒரு வார்த்தை கூட  கேட்கலே சார்...... ராட்சசி சார் அவ.!'என்றார் வெறுப்புடன்,

'விடுங்க சார்.நாமல்லாம் சினிமா  ஸ்கிரீன் மாதிரி.சோகப்படமும் ஓடும் காதல் பட மும் ஓடும்.ஆக்ஷன் பட மும் ஓடும்!' என்றேன். எதோ தத்துவம் சொன்னமாதிரி .சிரிப்பு..

ஆபிசில் இறக்கிவிட்டு போனார்.

மாலை ஐந்து மணி இருக்கலாம். கை பேசியில்
 'டண்டணக்கா" அதுதான் என்னுடைய ரிங் டோன்.

''ராமநாதன்....நாந்தான் சுவாமிநாதன்.ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கேன்." என்றார். குரல் மிகவும் பலவீனமாக இருந்தது..

எனக்கோ கன்னா பின்னாவென ஆக்சிடென்ட்  சீன்கள் கற்பனையில்.!

பதறினேன்... 'என்ன சார் ஆச்சு? ஒய்புக்கு சொல்லியாச்சா?"

'அவ கெடக்கிறா நான்-சென்ஸ்.! என்ன பண்றது  உதவிக்கு ஆள் வேணுமே.அதான்   சொல்லித் தொலைச்சிட்டேன்.ஆபீஸ்ல  லிப்ட் ஒர்க் பண்ணலே.... மாடி ஏறிப் போறபோது  கால் சிலிப் ஆகி உருண்டுட்டேன். ரைட் லெக் பிராக்சர்.......ஆ வலிக்கிதே..."

'சார் ..ஸ்ட்ரஸ் பண்ணிக்காதிங்க. இன்னும் அரை மணி நேரத்தில அங்கிருப்பேன்"------பெர்மிஷன் போட்டுவிட்டுப போனேன்.

வலது காலில் பெரிய கட்டு.தூளி ஆடியது மாதிரி!

'சோதனைதான் சார்! அதுவும் உங்கள மாதிரி நல்லவங்களுக்கு இப்படி நடக்ககூடாது சார். டாக்டர் என்ன சொன்னார்?"

'இன்னும் ஒரு மாதத்தில நடக்க வைக்கிறதா பிராமிஸ் பண்றார். நம்பித்தானே ஆகணும்! நல்லா கவனிக்கிறார். சிடு மூஞ்சித்தனமான நர்சை போடாம  நல்ல நர்சாகத்தான் போட்டிருக்கார்.ஆறுதலா இருக்கு ராமநாதன்."என்று லேசாக  சிரித்தார்.

மனித இயல்புதானே!

டாக்டர் சொன்னபடியே அவரை ஒரே மாதத்தில்  நடக்கவைத்துவிட்டார்.

சுவாமிநாதனிடம் இப்போது  கார் இல்லை.! என் ஸ்கூட்டரின்  பில்லியன் ரைடர்  அவர்தான்!