Tuesday, December 1, 2015

வெளுத்து வாங்கிய மழை.....

நாலு நாட்களாக  ஆபிசுக்கு செல்லவே இல்லை..வீட்டைச்சுற்றி மழை வெள்ளம் ! சிற்றாறாக ஓடுகிறது!. என்னுடைய ஸ்கூட்டரும் மக்கர் பண்ணுகிறது.பாவம்....  அதுவும் ஐம்பதாயிரம் கிலோ மீட்டர் வரை  ஓடி களைத்து இருக்கிறது ..அடித்து உதைத்து  கிளப்பினால் அது   என்னை வஞ்சித்து விடலாம் .பாதியிலேயே இந்த  படுபாவியை கடும் மழையில் தள்ளவைத்துவிடலாம்.

பயமாக இருந்தது.

மழையும் விடுவதாக இல்லை.வீட்டை பூட்டிவிட்டு வாசலில் நின்றபடி மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

''என்ன சார் .மழைக்கு பயந்து வீட்டிலேயே செட்டில் ஆகப் போறிங்களா? ஒய்பும் வீட்டில  இல்லையே! லஞ்சுக்கு இன்னிக்கி  லங்கனம்தானா?'

அடுத்த வீட்டு சுவாமிநாதன் காரை விட்டு இறங்காமலேயே  வாசலில்  காரை நிறுத்திக்கொண்டு   கேட்டார். ஜாலியானவர்.வருமானம் அவ்வளாக  இல்லாவிட்டாலும் சொந்தக் கார்,வீடு என வாழ்கிறவர். அடிக்கடி மனைவியுடன் சண்டை .மாமி இப்போதும்  வீட்டில் இல்லை.மதுரைக்குப் போய் இருக்கிறாள்...பிறந்தாத்து பைத்தியம். மாமி ஊரில் இல்லாத நேரங்களில் அவருக்கு  ரெமி மார்ட்டின் தான் உதவி. இரண்டே இரண்டு பெக்.லிமிட்  தாண்ட மாட்டார்.

'பைக் கிளம்பலே. .போராடிப் பார்த்தேன் .ஸ்ட்ரைக் பண்ணுது.  அதான்  லீவு  போடலாமான்னு பார்க்கிறேன்"  என்றேன்.

''எதுக்கு மிஸ்டர் ராமநாதன் ....வீட்டில எவ்வளவு நேரம்தான்  தனியா   இருப்பிங்க. ஆபீசுக்கு போனாலும் அரட்டை அடிச்சிட்டு நேரத்தை போக்கலாமே.வாங்க வந்து கார்ல ஏறுங்க.வழியில டிராப் பண்றேன் " என்றபடியே காரின் கதவை திறந்தார்.

அமர்ந்ததும் மெதுவாக கார் நகர்ந்தது. 'மாமி போன் பண்ணலியா?"

நேரம் போகணுமே! அதான் பேச்சுக் கொடுத்தேன் .

'பேசி என்ன ஆகப் போறது?' சலித்துக் கொண்டவர் 'நேத்திக்கி நைட்ல பேசுனா!
மழை பெய்யறதேன்னு பெக்கை ஏத்திடாதிங்கோன்னு அட்வைஸ்  பண்ணினா....சாப்பாடு பத்தி ஒரு வார்த்தை கூட  கேட்கலே சார்...... ராட்சசி சார் அவ.!'என்றார் வெறுப்புடன்,

'விடுங்க சார்.நாமல்லாம் சினிமா  ஸ்கிரீன் மாதிரி.சோகப்படமும் ஓடும் காதல் பட மும் ஓடும்.ஆக்ஷன் பட மும் ஓடும்!' என்றேன். எதோ தத்துவம் சொன்னமாதிரி .சிரிப்பு..

ஆபிசில் இறக்கிவிட்டு போனார்.

மாலை ஐந்து மணி இருக்கலாம். கை பேசியில்
 'டண்டணக்கா" அதுதான் என்னுடைய ரிங் டோன்.

''ராமநாதன்....நாந்தான் சுவாமிநாதன்.ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கேன்." என்றார். குரல் மிகவும் பலவீனமாக இருந்தது..

எனக்கோ கன்னா பின்னாவென ஆக்சிடென்ட்  சீன்கள் கற்பனையில்.!

பதறினேன்... 'என்ன சார் ஆச்சு? ஒய்புக்கு சொல்லியாச்சா?"

'அவ கெடக்கிறா நான்-சென்ஸ்.! என்ன பண்றது  உதவிக்கு ஆள் வேணுமே.அதான்   சொல்லித் தொலைச்சிட்டேன்.ஆபீஸ்ல  லிப்ட் ஒர்க் பண்ணலே.... மாடி ஏறிப் போறபோது  கால் சிலிப் ஆகி உருண்டுட்டேன். ரைட் லெக் பிராக்சர்.......ஆ வலிக்கிதே..."

'சார் ..ஸ்ட்ரஸ் பண்ணிக்காதிங்க. இன்னும் அரை மணி நேரத்தில அங்கிருப்பேன்"------பெர்மிஷன் போட்டுவிட்டுப போனேன்.

வலது காலில் பெரிய கட்டு.தூளி ஆடியது மாதிரி!

'சோதனைதான் சார்! அதுவும் உங்கள மாதிரி நல்லவங்களுக்கு இப்படி நடக்ககூடாது சார். டாக்டர் என்ன சொன்னார்?"

'இன்னும் ஒரு மாதத்தில நடக்க வைக்கிறதா பிராமிஸ் பண்றார். நம்பித்தானே ஆகணும்! நல்லா கவனிக்கிறார். சிடு மூஞ்சித்தனமான நர்சை போடாம  நல்ல நர்சாகத்தான் போட்டிருக்கார்.ஆறுதலா இருக்கு ராமநாதன்."என்று லேசாக  சிரித்தார்.

மனித இயல்புதானே!

டாக்டர் சொன்னபடியே அவரை ஒரே மாதத்தில்  நடக்கவைத்துவிட்டார்.

சுவாமிநாதனிடம் இப்போது  கார் இல்லை.! என் ஸ்கூட்டரின்  பில்லியன் ரைடர்  அவர்தான்!  

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...