Sunday, December 27, 2015

விபத்துகளில் சிக்கிய வி.ஐ.பி .நடிகர்கள்.

ஜாலங்கள் நிறைந்தது சினிமா. நாயக நடிகர்களும் சரி. வில்லன் நடிகர்களும் சரி விபத்துகளை சந்திக்காதவர்களே  இருக்க முடியாது.. இவ்வளவுக்கும்  அவர்களுக்கு  டூப்  இருக்கவே  செய்வார்கள். அதிகம் காயப்ப்படுபவர்களும்  அவர்கள்தான்.

உயிருக்கு உத்திரவாதம்  என்பது இல்லை.

ஆனால் பெயரும் புகழும்  நடிகர்களுக்குதான்!

சில நடிகர்கள் விதிவிலக்கு.

வரம் கிரம் வாங்கி வந்திருப்பாரோ என்னவோ,! தல அஜித்துக்கு  ஆஸ்பத்திரி  ராசி!  அவர் உடம்பில் கத்தி வைக்காத இடமே இல்லை.சீறி சென்ற காரில்  பாய்ந்து , பிடி நழுவி  சாலையில் இழுத்து செல்லப்பட்டு  முட்டி கிழிந்தது.
சிகிச்சையில் பிளேட் வைக்கப்பட்டது. அந்த பிளேட் தான் நடனம் ஆடும்போது முறிந்து  வீட்டில்  படுக்கவைத்திருக்கிறது.

குறைந்தது ஆறு மாதமாவது  ஓய்வு வேண்டும்.

இன்பக்கனவு  நாடகத்தில்  குண்டுமணியை தலைக்கு மேலே தூக்கி சுற்றுவது மக்கள் திலகத்தின் இயல்பு.அப்படி ஒரு நாள் தூக்கி சுற்றியபோது  மழுக்கென சப்தம். பாலன்ஸ் தவறிவிட்டது. எம்.ஜி.ஆர் .கீழே கிடக்கிறார். அவர் மீது குண்டுமணி! எம்.ஜி.ஆரின்  காலில் எலும்பு முறிவு. மாதக்கணக்கில் ஓய்வு!

கேரளாவில்  தச்சோளியம்பு  என்கிற படத்தின் படப்பிடிப்பு. நடிகர்திலகம் சிவாஜி கணேசன்  கையில் கேடயமும் மற்றொரு கையில் வாளுமாக  மோதுகிறார்.  பாறை தடுக்கி விழ  கையில் எலும்பு  முறிவு. பிளேட் வைத்துவிட்டார்கள். வீட்டில் ஓய்வில் இருந்த அவரை பார்க்க வந்தார்   எம்.ஜி.ஆர்.

'தம்பி ! ஸ்டுடியோவில்  கிளாப்ஸ் தட்டி நடிப்பதை விட மக்களிடம் கிளாப்ஸ் வாங்குவதுதான் கஷ்டம். ஆனால் அதுதான் உனக்கு சுலபம். அதுக்காக ரிஸ்க்  எடுக்கக்கூடாது" என்று அட்வைஸ் பண்ணினார்.

"அது சரிண்ணே...கையில் போட்டிருக்கிற கட்டு கூட  எனக்கு பெரிசா தெரியல. ஆனால் உள்ளே அரிக்கிதுண்ணே! எப்படி  சொரியிறதுன்னு தெரியல!"

 'கோழி  இறகை உள்ளே விட்டு லேசா தடவி விடு சுகமா இருக்கும்" என்று  ஐடியா கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இந்த சம்பவத்தை பலதடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்  நடிகர்திலகம்.

எலும்பு முறிவுக்கு பின்னர் வீட்டுக்கு  வந்த  சிவாஜியிடம்  செய்தி போடும்  நோக்கத்துடன்  போனேன்.

''எப்படிண்ணே இந்த ஆக்சிடென்ட்  நடந்துச்சு?" என்று கேட்டேன்.

மேலும் கீழும் பார்த்தார். '' வேணும்னா விழுந்து காட்டவா? இதுவரை  வர்றவனெல்லாம்  இப்படித்தாண்டா  கேக்கிறானுக. நீ நூத்தி சொச்சமாவது  ஆளு! என்னால  முடியலடா ராசா! " சிரிக்காமல்  சொல்கிறார்  திலகம்.

"அதுக்கில்லேண்ணே! இதுவரை என்கிட்டே  எவ்வளவோ பேர் கேட்டுட்டாய்ங்க!"

'' அத்தனைபேரையும் எங்கிட்ட அனுப்பி வையி!  டே.. நீ அப்படி  எழுதுனாலும் எழுதிடுவே  படுவா! அண்ணன்  வேலை வெட்டி இல்லாம  இருக்கிறதா  நெனச்சிடப் போறாங்க." என்றார்  சிரித்தபடியே!

இப்படி  எத்தனையோ  இருக்கின்றன.

அடுத்து  சூப்பர் ஸ்டார்  உயிர் தப்பிய  சம்பவம்....   நன்றி. ராணி  வார இதழ்.

No comments:

விவசாயம் இல்லாத மந்திரக்கிணறு...!

கிணறு வெட்டினாலே அது விவசாயம் பண்ணுவதற்காக இருக்கும் அல்லது  குடிக்க மற்ற அன்றாட வீட்டு வேலைகளுக்காக இருக்கும். கிணறு என்றால் கட்டாயம் ...