திங்கள், 28 டிசம்பர், 2015

ரஜினி உயிர் தப்பிய அதிசயம்.!

முட்டாள்த்தனமான  நம்பிக்கைகளுக்கு இன்றும் அடிமையாகி கிடக்கிறது  தமிழ்ச்சினிமா! பெயர் வைப்பதற்கும்  இயக்குநரை நியமிப்பதற்கும் ஜாதகம்  பார்க்கிற கேவலம் இங்கு உண்டு.

ஒரு காலத்தில் கற்புக்கரசி கண்ணகி பெயரில் ஒரு படம் வந்தது. பி.யூ.சின்னப்பாவும் பி.கண்ணாம்பாவும் நடித்திருந்தது. மதுரையில் அந்த படத்தை திரையிட்டபோது  தியேட்டரில் பெருந் தீ. கொட்டகை முழுவதும்  நாசமாகியது.மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் இன்னும் தணியாததால் அந்த தியேட்டர் எரிந்து நாசமாகியதாக  ஊரே பேசியது. தமிழகமும் நம்பியது.

உக்கிரமான கடவுளர்களின் பெயரில் படம் எடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள் என்பதைவிட அச்சப்பட்டனர் என்று சொல்வதே சரியாகும்.
 கண்ணகி பட நிகழ்வுக்கு பின்னர் நெடுங்காலம் கடந்து  பத்ரகாளி என்கிற பெயரில் ஒருவர் படம் தயாரித்தார். சிவகுமாரும் ராணி சந்திராவும் நடித்திருந்தனர். படம் முழுமை பெறுவதற்குள்  ராணி சந்திரா விமான விபத்தில் சிக்கி மாண்டு போனார்.

முன்னை  விட கோடம்பாக்கத்துக்கு  நம்பிக்கை அதிகமாகியது. காளி  என்றாலே கதறி சிதறினார்கள் தயாரிப்பாளர்கள்..ஆனாலும் சிலர் விதி விளக்காக இருப்பார்கள் அல்லவா!

அவர்களில் ஒருவர்தான்  மலையாள இயக்குநர் ஐ.வி.சசி.! நடிகை சீமாவை  நேசித்து கரம் பற்றியவர்,

அவருக்கே உரிய தைரியம்.' காளி" என்கிற பெயரில்  படம் எடுக்க வைத்தது. நாயகனாக நடித்தவர் ரஜினிகாந்த். அன்றைய  நிலையில் அவர் அத்தகைய நம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்ததில்லை.சற்று  முரட்டுத்தனமாகவும்  இருப்பார்.

சென்னையை ஒட்டிய பகுதியில் குதிரைகளுடன் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கினார் சசி.! திடீரென தீ பற்றியது. பற்றிய தீயில் குதிரைகள் சில கருகின. கரும் புகை சூழ்ந்ததில் ரஜினி என்ன ஆனார் என்பதே  தெரியவில்லை.மயக்கமுற்ற அவரை ஸ்டண்ட் வீரர்கள்  தூக்கிகொண்டு  வந்தனர். பலருக்கு நெருப்புக்காயம். கோடம்பாக்கமே கலங்கிப் போனது.

எத்தனையோ ஆண்டுகள் கடந்த நிலையிலும் காளி  பட  தீ விபத்தை  கோலிவுட்டும்  மறக்கவில்லை.வளரும் இன்றைய நடிகர்களும்  மறக்கவில்லை..கபாலிக்கு  முன்னதாக பரிசீலிக்கப்பட்ட பெயர் காளிதான். கார்த்தி  நடிப்பதாக இருந்த இன்னொரு படத்தின் பெயரும் காளி தான்.  உக்கிர காளியின் பெயரை வைத்தால்  என்ன நடக்குமோ என்கிற அச்சம் அவர்களை  பெயர் மாற்ற வைத்துவிட்டது..

கண்ணகி என்கிற பெயர் மட்டுமல்ல அவரது சிலை கூட சில காலம் சென்னையில்  இருட்டறையில் வைக்கப்பட்ட வரலாறையும் மறக்க இயலாது.

இனி அடுத்து  விஜயகாந்த் சுடப்பட்ட  நிகழ்வை  பார்க்கலாம்.

---நன்றி. ராணி  வார இதழ்.


   

கருத்துகள் இல்லை:

"நாசமா போவீங்க!" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி!

முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. "நீ நாசமா போவே!" ...